Wednesday, December 26, 2012

இந்தியாவின் மானத்தைப் பறித்த பஸ்! ஓர் இரவு... ஆறு கயவர்கள்...


ல்லூரி மாணவிக்கு நிகழ்ந்த கொடூரத்தை அறிந்து...  ஒட்டுமொத்த இந்தியாவும் அதிர்ந்துள்ளது. 'குற்றவாளிகளை பொது மக்கள் முன்னிலையில் தூக்கிலிட வேண்டும்’ என்று நாடெங்கும் போராட்டம் நடக்கின்றன! 
தெற்கு டெல்லியில் உள்ள ஒரு மருத்துவக் கல்லுரியில் பிசியோதெரபி படித்த 23 வயது மாணவி அவர். பொறியாளரான தனது நண்பருடன் கடந்த 16-ம் தேதி சினிமா பார்த்து விட்டு, இரவு 9.30 மணிக்கு முனிர்கா பேருந்து நிலையத்தில் நின்றார். ஒரு பேருந்து வந்து நிற்கவே, இருவரும் அதில் ஏறினர். உள்ளே இருந்தது மொத்தமே ஆறு பேர். அவர்கள் அந்த மாணவியின் நண்பரிடம், 'இந்த நேரத்தில் ஒரு பொண்ணுகூட என்னடா பண்ற?’ என்று மிரட்டி இருக்கிறார்கள். உடனே, அந்தப் பெண் குறுக்கிட்டு, 'நாங்கள் நண்பர்கள். படம் பார்த்துவிட்டு வருகிறோம்’ என்று சொல்லவும் 'நீ பேசாதடி’ என்று இரும்புக் கம்பியால் தாக்கி இருக்கிறார்கள். அந்த ஆண் நண்பரையும் தாக்கி பேருந்தில் இருந்து அவரை வெளியே தள்ளினர்.
அடுத்து அவர்கள் செய்த காரியங்கள் கொடூரத்தின் உச்சம். அந்த மாணவியை இரும்புக் கம்பியால் பல இடங்களிலும் தாக்கவே, ரத்தம் சொட்டச் சொட்ட விழுந்தார். வலியால் துடித்த பெண்ணை அந்தப் பேருந்துக்கு உள்ளேயே வைத்து பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர், மஹில்பூர் என்ற இடத்தில் உள்ள மேம் பாலத்தில் பேருந்தை நிறுத்தி, அலங்கோலமாக்கி விட்டு அந்த மாணவியை வெளியே வீசி இருக்கிறார்கள். இப்போது, அந்த மாணவி டெல்லி சப்தர்ஜங் மருத்து​வ​மனையில் உயிருக்குப் போராடிக்​கொண்டிருக்கிறார். இந்தியாவின் தலைநகரத்தில் நடந்த இந்தச் சம் பவத்தைக் கண்​டித்து மொத்த நாடும் கனன்று கொண்டு இருக் கிறது.
இதுதொடர்பாக  வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ், ராம் சிங் ஆகிய நான்கு பேரை கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தியது டெல்லி போலீஸ்,  அக்ஷய் குமார் மற்றும் ராஜு என்ற இரு​வரைத் தேடி​ வருவதாகக் கூறும் டெல்லி போலீஸார், வெளியிட்ட உண் மைகள் பகீர் ரகம்.
மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 'யாதவ் டிராவல்ஸ்’ நிறுவனத்தின் பேருந்து, டெல் லியில் உள்ள பள்ளி ஒன்றின் ஆசிரியர்களையும் மாணவர்​களை​யும் ஏற்றிச்செல்லும் கான்ட்ராக்ட் பேருந்து. ராம் சிங் என்பவர்தான் கடந்த 10 மாதங்களாக அந்தப் பேருந்தின் ஓட்டுனராக இருந் தார். 16-ம் தேதி மாலை தன் நண்பர்கள் நால்வர் மற்றும் தனது தம்பி முகேஷ§டன் சேர்ந்து மது அருந்தியவர், பேருந்தை எடுத்துக் கொண்டு ஜாலியாக ஒரு ரவுண்ட் போகலாம் என்று கிளம்பி இருக்கிறார். பேருந்துக்காக மாணவி தன் நண்பருடன் காத்திருப்பதைக் கண்டதும், பயணிகள் பேருந்தைப்போல் நிறுத்தி, அவர்களை ஏற்றிக் கொண்டனர். நண்பரை அடித்து வெளியே எறிந்து விட்டு, மாணவியைப் பலாத்காரம் செய்துள்ளனர். மாணவியை ஓட்டுனர் ராம் சிங் பலாத்காரம் செய்த போது, அவனுடைய தம்பி முகேஷ் பேருந்தை ஓட்டி இருக்கிறார். அந்த பஸ் கறுப்புக் கண்ணாடியுடன் இருந்ததால், உள்ளே நடந்த எதுவுமே வெளியில் யாருக்கும் தெரியவில்லை. மாணவியை வெளியே வீசிய பிறகு, பேருந்தை ஷெட்டுக்கு எடுத்துச்சென்று ரத்தக் கறைகளைத் துடைத்து சுத்தம் செய்துவிட்டு, தலைமறைவாகி இருக்கிறார்கள்.
மாணவி சேர்க்கப்பட்டுள்ள டெல்லி சப்தர்ஜிங் மருத்துவ மனையின் டாக்டர் பி.டி.அதானி, ''அந்த மாணவியின் உடலில் பல முக்கிய உறுப்புகள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இன்னமும் செயற்கை சுவாசம்தான் அளித்து வருகிறோம். இதுவரை நான்கு அறுவைச் சிகிச்சைகள் செய்து இருக்கிறோம்.. இன்னும் சில அறுவைச் சிகிச்சைகள் செய்ய வேண்டி இருந்தாலும், அதை ஏற்றுக்கொள்ளும் நிலையில் அவர் உடல்நிலை இல்லை. அந்த ஆறு பேரும் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கி இருக்கிறார்கள். அவரது அடிவயிறு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இன்னமும் ஐ.சி.யு-வில்தான் இருக்கிறார். இப்படி ஒரு மோசமான கேஸை இதுவரை நாங்கள் பார்த்ததே இல்லை'' எனக் கவலை தெரிவித்து இருக்கிறார்.
இந்த வழக்கை சூ-மோட்டாவாக விசாரணைக்கு எடுத்துக் கொண்ட டெல்லி உயர் நீதிமன்றம், ''மக்கள் உங்கள் மீது வைத் திருக்கும் நம்பிக்கையை இழந்து விட்டனர். சம்பந்தப்பட்ட பேருந்து டெல்லியில் அனுமதி இல்லாத கறுப்பு நிற ஸ்டிக்கர், ஜன்னல் துணிகளுடன் சென்று இருக்கிறது. இந்தச் சம்பவம் நடக்கும்போது ஐந்து போலீஸ் செக் பாயின்ட்களை பேருந்து கடந்துள்ளது. நீங்கள் எல்லோரும் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்?'' என்று, டெல்லி போலீஸாரைப் பார்த்துக் கேள்வி எழுப்பியுள்ளது.
அனைத்துத் திசைகளில் இருந்தும் சரமாரியாகப் புகார்கள் குவியவே, ''கறுப்புக் கண்ணாடி, திரைகள் போட்டுள்ள பேருந் துகளை உடனே கண்காணித்து உரிமத்தை ரத்து செய்யுங்கள். இரவு ரோந்து போலீஸாரின் எண்ணிக்கையை பலப்படுத்துங்கள். புதிதாக ரோந்து வாகனங்களை வாங்குங்கள். பெண்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் போலீஸாரை நியமியுங்கள்'' என்று அடுக்கடுக்கான சட்டங்களை உள்துறை விதித்துள்ளது.
2012-ல் மட்டும் டெல்லியில் பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பாக 635 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. ஆனால், இதுவரை தண்டனை பெற்றதோ ஒரே ஒருவர்தான்.
எங்கே போகிறது இந்தியா... அதுவும் தலைநகர்?

பெங்களூருவில் புது சசிகலா! புதிய நீதிபதியின் அதிரடிப் பாய்ச்சல்.



16 ஆண்டுகளுக்கும் மேலாக நீண்டு​கொண்டே போகும் சொத்துக் குவிப்பு வழக்கு, புதிய நீதிபதி பாலகிருஷ்ணா​வின் அதிரடிப் பாய்ச்சலால் மீண்டும் சூடு பிடித்து விட்டது. 
பெங்களூரு கோர்ட்டில் கடந்த ஆண்டு ஆஜராகி 1,384 கேள்விகளுக்குப் பதில் அளித்தார் ஜெயலலிதா. அவரைத் தொடர்ந்து இரண்டாவது குற்றவாளியான சசிகலாவிடம் கேள்வி கேட்டு முடிப்ப​தற்குள் நீதிபதி மல்லிகார்ஜுனைய்யாவின் ஓய்வு, அரசுத் தரப்பு வக்கீல் ஆச்சார்யாவின் திடீர் ராஜி​னாமா, ஆவணங்களைப் பார்வையிட மனு போன்ற காட்சிகள் அரங்கேறின. புதிய நீதிபதி நியமனம் நடந்தது. ஏழு மாதங்களுக்கும் மேலாகத் தாமதித்து வந்த சசிகலா, இப்போது பெங்களூரு கோர்ட்டில் 'பவ்யமாக’ பதில் சொல்கிறார். கடந்த புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் அரங்கேறிய‌ காட்சிகள் இங்கே...
பெங்களூரு குளிர் பிடிச்சிருக்கு!
18-ம் தேதி இரவே பெங்களூரு வந்து இறங்கினார் சசிகலா. அவருக்கு முன்பே பெங்களூரு வந்த வக்கீல் படை கேபிடல் ஹோட்டலில் காத்திருந்தனர். கடந்த முறை, தனியாக வந்த சசிகலா இந்த முறை சுரேஷ் என்பவரை உதவிக்கு அழைத்து வந்திருந்தார். சுதாகரனும் இளவரசியும் ஏனோ வரவில்லை. பெங்களூருவில் நிலவும் அதிகப்படியான குளிரை ரசித்துக்கொண்டே, 'பெங்களூரு குளிர் நல்லா இருக் குல்ல’ என அதிகாலையிலே உற்சாகமாக வாக்கிங் போனாராம். அதன்பிறகு, தன்னுடைய வக்கீல் மணி சங்கரிடமும் செந்திலிடமும் ஸ்பெஷல் கோச்சிங் எடுத்து விட்டு, சரியாக 10.35 மணிக்கு தமிழ்நாடு பதிவு எண் கொண்ட வெள்ளைக் காரில் உற்சாகமாக வந்து இறங்கினார். கடந்த முறை வாக்குமூலம் அளிக்க பெங்களூரு வந்தபோது, ஜெயலலிதாவுடன் பிரிவு என்பதால் சுணக்கமாகக் காணப்பட்ட சசி, இந்த முறை வைரக் கம்மல், புது டிசைன் நெக்லஸ், சிவப்பு ரத்தினக் கல் மோதிரம் எனப் புதுப் பொலிவோடு வந்திருந்தார். சசிகலாவை வரவேற்பதற்காக ஏராளமான வக்கீல்களும் கரை வேட்டி கட்டாத ரத்தத்தின் ரத்தங்களும் வந்திருந்தனர்.
நீதிபதியின் திடீர் கேள்வி!
கோர்ட் ஹாலுக்குள் நுழைந்த சசிகலா சிறிது நேரம் வக்கீல்களிடம் பேசிவிட்டு, சரியாக காலை 11 மணிக்கு குற்றவாளிக் கூண்டில் அமர்ந்து கொண்டார். நீதிபதி 11.20-க்கு வந்ததும், 'ஏன் அங்கு அமர்ந்திருக்கிறீர்கள். முன்னாடி வாங்க’ என அழைத்ததும், நீதிபதியின் முன்பு போடப்பட்ட நாற்காலியில் வந்து அமர்ந்தார். வழக்கமாக தன் னோடு கொண்டுவரும் கைக்குட்டை, சின்ன கைப்பை, கறுப்புக் கண்ணாடி, பிளாஸ்க், ஒரு ஃபைல், அதில் கட்டாக வெள்ளைத் தாள்களுடன் ஆஜராகி இருந்தார். இதுவரை 632 கேள்விகளுக்குப் பதில் சொல்லி இருந்த சசிகலாவிடம், 'எவ்வளவு படித்தி ருக்கிறீர்கள்?’ என நீதிபதி திடீரென ஒரு கேள்வி கேட்கவே ஷாக்காகி, பதில் சொல்ல முடியாமல் திணறினார். உடனே அவரது வக்கீல் மணிசங்கர், 'எஸ்.எஸ்.எல்.சி.’ என்று எடுத்துக்கொடுத்ததும் சசிகலாவும் அப்படியே பதில் சொன்னார். 'அப்போ உங்களுக்கு ஆங்கிலம் தெரியாது...
ஓகே.?’ என்றபடி சந்தேகக் கண்ணோடு சசிகலாவைப் பார்த்துவிட்டு, மொழிபெயர்ப்பாளர் ஹாரீஸை அழைத்தார் நீதிபதி.
மீண்டும் பிட்!
கோர்ட்டுக்கு உற்சாகமாக வந்த சசிகலா, நீதிபதி கேள்விகளைக் கேட்க ஆரம்பித்ததும் செம அப்செட். முதல்நாள் முழுக்கவே ஜெ.ஜெ. பிரின்டர்ஸ், ஜெயா பப்ளிகேஷன்ஸ், ஜெயா ஃபார்ம் ஹவுஸ், நமது எம்.ஜி.ஆர்., சசி என்டர்பிரைசஸ், வினோத் வீடியோ விஷன், ஆஞ்சநேயா என்டர்பிரைசஸ் ஆகிய நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள் தொடர்பான கேள்வி​கள் என்பதால், கேள்வியை ஒரு முறைக்கு இரண்டு முறை தெளிவாகக் கேட்ட பின்னரே பதில் அளித்தார். பெரும்பாலான கேள்விகளுக்கு 'தெரியாது’ என்றும் 'உண்மை’ என்றும் பதில் சொன்ன சசிகலா, சில கேள்விகளுக்கு மட்டும் தன்னுடைய ஃபைலில் இருந்த வெள்ளைத் தாளின் ஒரு புறத்தில் மெலிதாக பென்சிலில் எழுதிக்கொண்டு வந்திருந்ததை லாகவமாகப்‌ பார்த்துப் பதில் சொன்னார் 'சசிகலா காப்பி அடிக்கிறார்’ என்று சொல்லி கோர்ட்டையே கலக்கிய அரசுத் தரப்பு மூத்த வக்கீல் ஆச்சார்யா அன்று இல்லை.  
'சுதாகரன்... இளவரசியா? ஐ டோன்ட் நோ!’
சொத்துக் குவிப்பு வழக்கில் மூன்றாவது குற்றவாளி​யான சுதாகரன், நான்காவது குற்றவாளியான இளவரசி தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு கண்களை மூடிக்​கொண்டு, 'தெரியாது’ என்ற பதிலையே சொன்னார். ஆனாலும் நீதிபதி விடாமல் சுதாகரன், இளவரசி தொடர்பான கேள்விகளையே 20-க்கும் மேல் கேட்க, 'ஜெயா பப்ளிகேஷன்ஸ், சசி என்டர்பிரைசஸ், நெக்ஸ்ட் பிராப்பர்ட்டிஸ், ஆஞ்சநேயா பிரின்டர்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களில் சுதாகரனும் இளவரசியும் பங்குதாரர்கள். ஆனால் அவர்கள் செக் கொடுத்தது, டி.டி. கொடுத்தது, பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டது தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது’ என்றார் சசிகலா. இதைக் கேட்ட கன்னட மீடியாவினர், 'ஜெயலலிதாவிடம் நீதிபதி மல்லிகார்ஜுனைய்யா கேள்வி கேட்டபோது, 'எனக்குத் தெரியாது. நான் சைலன்ட் பார்ட்னர் மட்டும்தான். சசிகலாவுக்குத்தான் எல்லாம் தெரியும்’ என்று சொல்லித் தப்பித்தார். இவரோ, 'எனக்கு எதுவும் தெரியாது’ என்று சொல்கிறாரே’ என்று சந்தேகம் கிளப்பினர்.
மேலிடத்து உத்தரவு?
மதிய இடைவேளைக்குப் பிறகு, கேள்விகள் இன்னும் வேகமெடுத்தது. மதியம் 3 மணிக்குப் பிறகு ஜெயலலிதா சம்பந்தப்பட்ட கேள்விகளே கேட்கப்பட்டன. ஆனால், அத்தனை கேள்விகளுக்கும் 'எனக்குத் தெரியாது’ என்ற பதிலை மட்டுமே மீண்டும் மீண்டும் சொன்னார் சசிகலா. ஒரு சில கேள்விகளுக்கு மட்டும், 'முதல்வர் ஜெயலலிதாவும் நானும் பல நிறுவனங்களுக்குப் பங்குதாரர்களாக இருந்ததால், எங்கள் சொந்த வங்கிக் கணக்கு மட்டுமின்றி, நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளிலும் வியாபாரத்துக்குத் தேவைப்படும் பணம் அடிக்கடி பரிமாற்றம் செய்யப்பட்டது. ஆனால், அவரது தனிப்பட்ட வங்கிக் கணக்கு குறித்த எந்த விவரமும் எனக்குத் தெரியாது’ என்று தெளிவாகச் சொன்னார். அடுத்து நீதிபதி, 'நமது எம்ஜிஆர் நிறுவன வங்கிக் கணக்கில் இருந்து உங்களுடைய தனிப்பட்ட வங்கிக் கணக்குக்குப் பணப் பரிமாற்றம் நடந்திருக்கிறதே?’ என்று கேட்டதும், 'அ.இ.அ.தி.மு.க. கட்சியின் பொதுச் செயலாளரின் அறிக்கைகள், செய்திகள் தொண்டர்களைச் சென்றடைய வேண்டும் என்பதற்காக 'நமது எம்ஜிஆர்’ பத்திரிகை 1990-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அது ஜெயா பப்ளிகேஷனின் துணை நிறுவனம். 'நமது எம்ஜிஆர்’ நாளிதழைப் பெற தொண்டர்களிடம் 12 ஆயிரம் ரூபாய் சந்தாவாகப் பெறப்பட்டு, அதை வங்கியில் டெபாசிட் செய்தோம். மேலும் ஜெயா பப்ளிகேஷன், சசி என்டர்பிரைசஸ் போன்ற நிறுவனங்களில் கிடைத்த லாபமும் 'நமது எம்ஜிஆர்’ நாளிதழுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது’ என்றார். முதல் நாள் முடிவில் சசி கலாவிடம் 110 கேள்விகளுக்கான பதில்களைப் பெற்றார் நீதிபதி பாலகிருஷ்ணா.
அசமந்த வியாழன்!
இரண்டாவது நாளும் முழுக்க முழுக்க ஜெயா பப்ளிகேஷன், ஜெயா பிரிண்டர்ஸ், சசி என்டர்பிரைசஸ், நமது எம்ஜிஆர் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் நடந்த பணப் பரிவர்த்தனைகள் பற்றிய கேள்விகளே கேட்கப்​பட்டன. தயாரித்து வந்திருந்த 'மறைப்பு’ குறிப்புகளைப் பார்த்து அலட்டிக் கொள்ளாமலே பதில் அளித்தார் சசிகலா. நீதிபதி பாலகிருஷ்ணா 1993 - 94 காலகட்டத்தில் நடந்த அத்தனை வங்கிக் கணக்குகளையும் சல்லடை போட்டு இரண்டரை பக்க அளவுக்குக் கேள்விகள் தயாரித்திருந்தார். ஆனால் சசிகலா கொஞ்சமும் மெனக்கெடாமல், 'தெரி யாது’, 'உண்மை’, 'உண்மையாக இருக்கலாம்’ என சர்வ சாதாரணமாகப் பதில் அளித்தார். நீதிபதியின் நீண்ட கேள்விகளை எல்லாம் மொழிபெயர்ப்பாளர் ஹாரீஸ் தமிழில் சசிகலாவிடம் தெளிவாகச் சொல்லி, அதை அவர் சின்சியராகக் குறிப்பெடுத்துக் கொண்டார். ஆனால், ஒற்றை வார்த்தையில் கேசுவலாகப் பதில் சொன்னதுதான் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. ஒரு கட்டத்தில் சசிகலாவின் மனநிலையை முழுதாகப் புரிந்து கொண்ட நீதிபதி, 'என்ன.. இந்த கேள்விக்கும் பதில், தெரியாதுதானே?’ என்று சொல்லி சசிகலாவுக்கு ஷாக் கொடுத்தார்.
இரண்டாவது நாள் முழுக்க ஆமை வேகத்தில் பயணித்ததால் 83 கேள்விகள் மட்டுமே கேட்கப்பட்டன. ஆக மொத்தம் வியாழன் வரை சசிகலாவிடம் இருந்து 825 கேள்விகளுக்கான பதில்கள் பெறப்பட்டுள்ளன. இன்னும் 500-க்கும் மேற்பட்ட கேள்விகள் இருப்பதால் வெள்ளியன்றும் விசாரணை தொடர்கிறது.
பகல் முழுவதும் கோர்ட்டில் இருக்கும் சசிகலா, மாலை நேரங்களில் வெளியே கிளம்பி விடுகிறார். கலர் கலராக சுடிதார், தொப்பி அணிந்து கொண்டு எம்.ஜி.ரோடு, பிரிகேட் ரோடு, கருடா மால் ஆகிய இடங்​களுக்கு ஹாயாக ஷாப்பிங் போகிறார். அதனால், கோர்ட்டுக்கு வரும்போது விதவித​மான வாட்சுகள், வளையல்கள், மோதிரங்கள் பளபளக்கின்றன.
இப்படியே போனால் வழக்கு இன்னும் மூன்றே மாதங்களில் முடிந்துவிடும் என்ற குரல் கோர்ட் வட்டாரத்தில் பலமாகக் கேட்கிறது. வேறு முட்டுக்கட்டை வராமல் இருக்குமா?

வீட்டையும் காரையும் திருப்பிக் கொடுங்கள்! நாஞ்சில் சம்பத்தை விரட்டும் மறுமலர்ச்சி பஞ்சாயத்து!


புதுக் கட்சி, புதுப் பதவி, புது காரு, கலக்குற சம்பத்!’ என்று சொந்தங்கள் தட்டிக்​கொடுக்க, அ.தி.மு.க. சாதனை விளக்கக் கூட் டங்களில் பங்கேற்க தமிழகம் முழுவதும் பயணிக்​கிறார் அ.தி.மு.க-வின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத்! 
இந்த நிலையில், நாகர்கோவிலில் நடந்த மாவட்ட ம.தி.மு.க. ஆலோசனைக் கூட்டத்தில், நாஞ்சில் சம்பத்துக்கு ஒரு செக் வைத்துள்ளனர் அந்தக் கட் சியினர். இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய குமரி மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் தில்லை செல்வம், ''ம.தி.மு.க-வை வீதி எல்லாம் சென்று விதைத்ததாக நாஞ்சில் சம்பத் மீடியாக்களில் பேட்டி கொடுக்கிறார். இவருக்காகக் கூட்டம் கூடியது உண்மையாகவே இருக்கட்டும். ஆனால், ஒரு பேச்சாளர் என்ற முறை​யில் கறாராகப் பணம் வாங்கிக்கொண்டுதான் கூட்டங்​களுக்கு வருவார். கட்சியை வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில், எங்காவது இலவசமாகப் பேசி இருக்கிறாரா? ஒரு பேச்சாளர் என்ற தளத்தையும் தாண்டி, மேடை அமைப்பு மற்றும் கூட்டம் நடத்தும் இடம் என்றெல்லாம் சகல விஷயங்களிலும் மூக்கை நுழைப்பார். கட்சிக்கு உழைத்ததால் இவர் மீது 48 வழக்குகள் இருப்பதாக அனுதாபம் தேடுகிறார். ஆனால், அத்தனையும் இவரது அவதூறுப் பேச்சுக்குக் கிடைத்த பரிசுதான். குருவாயூர் கோயி​லுக்கு யானை கொடுத்த சமயத்தில் ஜெயலலிதாவையும் சசிகலா​வையும் பற்றி இவர் கேலியாகப் பேசியதும், கனிமொழி, ஸ்டாலின் போன்றவர்​களைத் தரக்குறைவாக விமர்சித்ததும் வைகோ சொல்லிக்கொடுத்தா பேசினார்?
கடந்த நாடாளுமன்றத் தேர்தல் நேரம். அப்போதைய தி.மு.க. அரசு தேசியப் பாது​காப்புச் சட்டத்தில் சம்பத்தைக் கைது செய்தது. துடித்துப்​போன வைகோ, விருதுநகரில் சில கிராமங்களுக்கு ஓட்டு கேட்டுக்கூட போகாமல், சென்னை உயர் நீதிமன்றத்தில் போராடி சம்பத்தை வெளியே கொண்டு வந்தார். அதனால், சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தேர்தலில் வைகோ தோல்வி அடைந் தார். அந்த அளவுக்கு நாஞ்சில் சம்பத்துக்காகத் துடித் தவர் எங்கள் பொதுச் செயலாளர்.
ஆரம்பத்திலேயே எங்கள் இயக்கத்தின் சார்பில் சம்பத்துக்கு டெம்போ ட்ராக்ஸ் கார் வாங்கிக் கொடுத்தோம். ஆனால், நாஞ்சில் சம்பத் அதைக் கட்சி செயல்பாடுகளுக்காகப் பயன்படுத்தியதே கிடையாது. கீரிப்பாறையில் உள்ள அவரது எஸ் டேட் பணியாளர்களை அழைத்துச் செல்வதற்கு மட்டும்தான் அந்த வண்டியைப் பயன்படுத்தினார். இரண்டு மாதங்களுக்கு முன் இவருக்கு ம.தி.மு.க. சார்பில் இரண்டு தவணைகளாகப் பணம் கொடுத்து புது இனோவா கார் வாங்கிக் கொடுத்தோம். அப்போதுகூட பழைய டெம்போ ட்ராக்ஸ் காரை நான்கரை லட்ச ரூபாய்க்கு விற்றுவிட்டு, நான்கு லட்ச ரூபாய்க்கு விற்றதாகக் கட்சிக்குக் கணக்குக் காட்டியவர்தான் நாஞ்சில் சம்பத். அந்த இனோவா காரையும் இன்னமும் சம்பத் திருப்பிக் கொடுக்க வில்லை.
மணக்காவிளையில் உள்ள இவரது வீட்டின் முன் பகுதி புறம்போக்கு நிலத்தில் இருந்தது. அப்போதைய அ.தி.மு.க. அரசு, சாலையை விரிவுபடுத்துவதாகச் சொல்லி இவரது வீட்டின் முன்பகுதியை இடித்து விட்டது. கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான 'சங் கொலி’யில் வந்த அறிவிப்பைத் தொடர்ந்து, தலைநகர் சென்னையில் தொடங்கி கடைக்கோடி குமரி வரையுள்ள ம.தி.மு.க. தொண்டர்கள் அவர்களால் முடிந்த அளவுக்குப் பணமாக அனுப்பினர். அதன் முழு விவரமும் சங்கொலியில் வந்தது. அந்த வகையில் மட்டும் 48 லட்ச ரூபாய் வசூலானது. இதுபோக, வெளியில் தெரியாமல் கிடைத்த சலுகைகளும் ஏராளம். அந்தப் பணத்தில்தான் சொந்தமாக நிலம் வாங்கி, புது வீடும் கட்டினார். மீதிப் பணத்தில் கீரிப்பாறையில் எஸ்டேட்​டும் வாங்கிப் போட்டார்.
மணக்காவிளையில் சாதாரண பெட்டிக் கடை நடத்தி வந்த சம்பத்தின் குடும்பம் இன்று வளமாக இருப்பதற்குக் காரணமே ம.தி.மு.க-தான். வளர்த்த இயக்கத்தை விட்டுவிட்டு வேறு இயக்கத்துக்குச் சென் றவர், எங்களது காரையும் வீட்டையும் திருப்பிக் கொடுப்பதுதானே முறை? அப்படிக் கொடுக்கா​விட்டால், பொதுச் செயலாளரிடம் முறையிட்டு அடுத்தக் கட்ட நடவடிக்கையில் இறங்குவோம்'' என்றார் ஆவேசமாக.
இந்த விவகாரம் குறித்து நாஞ்சில் சம்பத்திடம் கேட்டோம். ''அது ம.தி.மு.க. கட்டிக் கொடுத்த வீடு என்பதே தவறு. என்னிடம் அன்புகொண்ட என் தம்பிமார்கள் கட்டிக்கொடுத்த வீடு. இனோவா காரும் அப்படித்தான். நான் எதையாவது திருப்பித் தர வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்த்தால், நான் அந்த இயக்கத்துக்காக உழைத்து இழந்த என்னுடைய 19 ஆண்டு கால வாழ்க்கையைத் திருப்பித் தரட்டும். அதன்பிறகு பார்க்கலாம். டெம்போ ட்ரக்ஸை நான் விற்று விட்டேன் என்று சொல்வதே தவறு. அதை வைகோவின் டிரைவர் துரையின் மூலமாக, வைகோ வீட்டிலேயே ஒப்படைத்து விட்டேன்'' என்றார்.
குமரி ம.தி.மு.க-வினர் கொந்தளிப்பில் இருக்கிறார்​கள்!

சோனியா காந்தி, மன்மோகன்சிங் நினைத்தது நடந்தது! மோடி மேஜிக்


சோனியா காந்தி, மன்மோகன் சிங் உட்பட எல்லோரும் எதிர்​பார்த்ததுதான். நரேந்திர மோடி மீண்டும் ஜெயித்து விட்டார். அரசியல் நோக்கர்கள் பலருமே கணித்தபடிதான் இருந்தது மக்கள் அளித்த முடிவும். 
தொடர்ந்து நான்காவது முறையாக ஆட்சி அமைப்பதும் அதிலும் ஏறுமுகமாகவே இருப்பதும் அவருடைய மறுக்க முடியாத சாதனை. இந்த  வெற்றி பி.ஜே.பி-க்கு மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்கும் ஆசையை அதிகரித்து இருக்கிறது. அத்வானி, கட்கரி, சுஷ்மா சுவராஜ் போன்ற அந்தக் கட்சியின் தலைவர்கள் எல்லோரும் ஒதுங்கிக் கொள்ள, நம்பிக்கை நட்சத்திரமாகிவிட்டார் நரேந்திர மோடி.
எப்படி நடந்தது இந்த மாற்றம்?
இந்தியாவில் இருக்கும் ஒரு மாநிலத்தை, தன்னிறைவு பெற்றதாக மாற்றியதுதான் அவருடைய சாதனை. குஜராத்தில் சாராயக் கடைகள் இல்லை. மக்களை போதையில் ஆழ்த்தி வழிப்பறி செய்ய வில்லை. மின்சாரத் தட்டுப்பாடு கிடையாது. மாறாக, உபரி மின்சக்தி மாநிலமாக மாற்றி இருக்கி​றார். தண்ணீர்த் தட்டுப்பாடும் அறவே இல்லை.
அப்படி என்ன மோடி மஸ்தான் வேலைகளைச் செய்தார் மோடி?
2001-ல் அவர் முதலில் ஆட்சிப் பொறுப்பு ஏற்ற போதுதான், குஜராத்தில் பூகம்பம் ஏற்பட்டு பெரும் பாதிப்பு நிகழ்ந்து இருந்தது. 2002-ல் அயோத்தியில் இருந்து திரும்பிக்கொண்டு இருந்த கரசேவகர்கள் வந்த ரயில் பெட்டி தீக்கிரையானது. முஸ்லிம் தீவிரவாதிகள்தான் தீ வைத்ததாகப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார் மோடி. இந்து அமைப்பினர், முஸ்லிம் குடும்பங்களைக் குறி வைத்துத் தாக்கினர். வகுப்பு மோதலில் ஏறத்தாழ 800 முஸ்லிம்களும் 250 இந்துக்களும் கொல்லப்பட்டனர். 2,500 பேர் காயமடைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டது. உண்மையில் பாதிப்பு இன்னும் அதிகம் இருக்கும் என்றனர் சமூக ஆய்வாளர்கள். பூகம்பமும் மதக் கலவரமும் குஜராத்தைச் சீர்குலைத்து விடும் என நாடே நினைத்தது. ஆனால், மோடி நிலைமையை சமாளித்தார். முஸ்லிம் மக்களை முரட்டுத்தனமாக ஒடுக்குவதாகக் குற்றச்சாட்டு ஒரு பக்கம் இருந்தாலும், வேகமான சீரமைப்புப் பணி களில் கவனம் செலுத்தினார். மோடியின் சாதுர்யம் அதுதான்.
அரசின் நிதி நிலைமையைப் பெருக்கும் திட் டங்களில் கவனம் செலுத்தினார். நர்மதை என்ற ஜீவ நதி இருந்தாலும் மாநிலத்தில் இருக்கும் 30-க்கும் மேற்பட்ட ஆறுகளில் தடுப்பணைகளைக் கட்டி நீர் ஆதாரங்களைப் பெருக்கி, விவசாயிகளின் தண்ணீர்த் தட்டுப்பாட்டைத் தீர்த்தார். வேளாண்மையில் அரசு எந்திரத்தை முழுமையாகத் திருப்பினார். பஞ்சு, கரும்பு, வேர்க்கடலை போன்றவை விளைச்சலில் சாதனை படைத்தன.
கூடவே, தொழில் துறையிலும் கவனம் செலுத்தி​னார். மேற்கு வங்கத்தில் டாடா நிறுவனம் தொடங்க முடியாமல் தத்தளித்த கார் தொழிற்சாலையை, இவர் குஜராத்துக்குக் கொண்டு வந்தது ஓர் உதாரணம். ஜிப்சம், மாங்கனீஸ், லிக்னைட், பாக்ஸைட், குவார்ட்ஸ் மணல் போன்ற கனிம வளங்களில் ஊழல் நடக்காமல் முறைப்படுத்தினார். பூரண மது விலக்கு உள்ள குஜராத் மாநிலத்தில் வரியில்லா பட் ஜெட்டை நிலைநாட்டினார். மதவெறி அரசு என்ற பெயரை, மது வெறியில் இருந்து மீட்டதன் மூலம் திசை திருப்பினார்.
2007 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றி​பெற்று ஆட்சி அமைத்தார். 2,063 நாட்கள் தொடர்ந்து ஆட்சி செய்தவர் என்ற சாதனையோடு இப்போது மூன்றாவது முறையாக அரியணை ஏறுகிறார் மோடி.
கடந்த வியாழக்கிழமை குஜராத் தேர்தல் முடி வுகள் வெளியானது. ஆரம்பம் முதலே மோடி​யின் பி.ஜே.பி. கட்சியே முன்னிலை வகித்தது. மணிநகர் தொகுதியில் போட்டியிட்ட மோடி  ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஓட்டுகள் பெற்று வென்று இருக்கிறார். குஜராத்தின் மொத்த சட்டசபை தொகுதிகள் 182-ல் 115 இடங்களில் பி.ஜே.பி. வென்று தனிப் பெரும் பான்மை பெற்று இருக்கிறது.
ஆர்.எஸ்.எஸ். கோட்பாடுகளின்படி திருமணம் செய்து கொள்ளாமல் தன்னை ஆட்படுத்திக் கொண்டவர் மோடி. வாரிசு இல்லை, ஊழல் இல்லை என்பதுடன் இந்து ஓட்டுக்கள்தான் மோடி யின் இலக்கு.
90 சதவிகித இந்துக்களின் ஓட்டுகளுக்காக அவர் மதரீதியாகச் செயல்படுவதால், முஸ்லிம்களின் அச்சத்தைத் தீர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்க​வில்லை என்ற குற்றச்சாட்டு இன்னமும் அப்படியே இருக்கிறது. மோடி இந்தியப் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்ற நிலையில் இந்த மதவாதச் சாயத்தைத் துடைத்தால் முன்னேறலாம்!

வைகுண்ட ஏகாதேசி வழிபாட்டிற்காக பார்த்தசாரதி கோவிலில் ஜெயலலிதா.


www.thedipaar.com
''கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸுக்கு முன்புதான் சசிகலாவை அவரது குடும்பத்தினரோடு சேர்த்து கல்தா கொடுத்தார் ஜெயலலிதா. இந்த டிசம்பர் கிறிஸ்துமஸுக்கு முந்தைய நாள் பார்த்த​சாரதி கோயிலுக்குப் பவ்யமாக அழைத்து வந்திருக்கிறார் அதே ஜெயலலிதா. அதுதான் பலரையும் ஆச்சர்யப்பட வைத்தது. இரண்டு மாத இடைவெளியில் கார்டனுக்குள் சசிகலா வந்துவிட்டாலும், அவரை பொது இடங்களுக்கு ஜெயலலிதா அழைத்துச்செல்வது இல்லை. இப்போது அதுவும் மறுபடி தொடங்கி விட்டது.''
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் வைகுண்ட ஏகாதசி வழிபாட்டில் முதலமைச்சர் ஜெயலலிதா கலந்து கொள்வது பற்றிய தகவல் போலீஸாருக்கே தாமதமாகத்தான் சொல்லப்​பட்டதாம். முதல் நாள் இரவு 11 மணி வரை முதல்வரின் வருகை பற்றி காவல் துறைக்கும் தெரிய​வில்லை. தரிசனம் செய்யவரும் வி.ஐ.பி-க்கள் பட்டியலில் உயர் நீதிமன்றப் பெண் நீதிபதிகள், அமைச்சர்களின் குடும்பத்தினர், போலீஸ் உயர் அதிகாரிகளின் குடும்பத்தினர் என்று சிலரின் பெயர்கள்தான் இருந்தன. அதன்பிறகு, இரவு 11.30 மணிக்கு மேல்தான் முதலமைச்சரின் வருகை பற்றி கோயில் நிர்வாகத்துக்கும், போலீஸுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. முன்னதாக அறிவித்​தால், ஏராளமான கட்சிக்காரர்கள் கோயிலில் கூடி​விடுவார்கள், அது பக்தர்களுக்கும் போலீஸுக்கும் பெரிய தொந்தரவாகிவிடும் என்று முதல்வர் நினைத் தாராம். அதனால்தான் ரகசிய ஏற்பாடு. இதன் காரணமாக,
அவசர அவசரமாகப் பந்தோபஸ்து வேலைகளைக் கவனித்த போலீஸ்காரர்கள், கோயிலுக்குள் இருந்த பக்தர்கள் வெளியே செல்லும் பாதைகள் அனைத்தையும்  மூடிவிட்டனர். இதனால், இரவு 1 மணிக்கு சுவாமியின் விஸ்வரூபத் தரிசனத்தை மட்டும் பார்த்துவிட்டு வீட்டுக்குச் செல்லலாம் என்று நினைத்திருந்த பக்தர்களால் வெளியில் செல்ல முடியவில்லை. வேறுவழி இல்லாமல் அவர்களும் அதிகாலை 5 மணி வரை இருந்து சொர்க்க வாசல் திறப்பையும் பார்த்துவிட்டுச் செல்​லும் கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டனர்.''
''அதிகாலை 3.30 மணிக்கு வந்த ஜெயலலிதா கிழக்கு வாசல் வழியே கோயிலுக்குள் நுழைந்தார். அங்கிருந்த கொடி மரத்தை வணங்கிவிட்டு சுவாமி சன்னிதிக்கு வந்த அவருக்காக, சிறப்பு தீப ஆராதனை செய்யப்பட்டுப் பிரசாதம் வழங்கப்பட்டது. அதன் பிறகு அரை மணி நேரம் கழித்துப் பரமபத வாசல் திறக்கப்பட்டது. அதுவரை கோயிலில் காத்திருந்து சுவாமி தரிசனம் முடித்துவிட்டு அதிகாலை 4 மணிக்கு கோயிலில் இருந்து கிளம்பிச் சென்றார். இனி அடுத்தடுத்த விசிட்களிலும் சசிகலாவைப் பார்க்க முடியும் என்றே யூகிக்க வேண்டி உள்ளது.

கருணாநிதி என்னை மிரட்டினார்! கோர்ட்டில் வெடித்த சசிகலா


ப்பாடி...’ என்று பெங்களூரு கோர்ட் வளாகத்தில் எல்லோரு​மே பெரு​​மூச்சு​​விட்டனர். ஏனென்​றால், 1,032 கேள்விகளுக்கும் சசிகலா பதில் சொல்லி​விட்டார்.
 ஜெட் வேக வெள்ளி!
வியாழக்கிழமை மாலை வரை 825 கேள்விகளுக்குப் பதில் சொல்லியிருந்த சசிகலா, வெள்ளிக்கிழமை காலை இஸ்கான் கோயிலுக்குப் போகத் திட்டமிட்டு இருந்தாராம். ஆனால், போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்​கொண்டால் வரத் தாமதமாக வாய்ப்பு உண்டு என்று சொல்லப்பட்டதால், ஆசையைத் தவிர்த்து​விட்டு புதிய உதவியாளர் சுரேஷ் சகிதம் கோர்ட்டுக்கு சீக்கிரமே வந்து காத்திருந்​தார். நீதிபதி பாலகிருஷ்ணா 11.20 மணிக்குத்தான் கோர்ட் ஹாலுக்கு வந்தார்.
ஜெ.ஜெ. பிரின்​டர்ஸ், ஜெயா பப்ளி​கேஷன்ஸ், ஜெயா ஃபார்ம் ஹவுஸ், நமது எம்.ஜி.ஆர்., உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் நடந்த பங்குப் பரிவர்த்தனை, கணக்கு வழக்குகள், வங்கிக் கணக்குகள், வரி தொடர்பாகவே கேள்விகள் மீண்டும் கேட்கப்பட்டன. அத்தனை கேள்விகளுக்கும்  மிகவும் தெளிவாக அழுத்தம்திருத்தமாக, 'தெரியாது’ என்றார்.
www.thedipaar.com
ஆஞ்சநேயா என்டர்பிரைசஸ் நிறுவனக் கட்டடம் கட்டியது, பராமரித்தது, நாதெள்ளா நகைக் கடையில் வைர நகைகள் வாங்கியது தொடர்பான நீண்ட நெடிய கேள்விகளை நீதிபதி மூச்சுவாங்க வாசித்து, அதனை ஹாரீஸ் கஷ்டப்பட்டு நான்கு பக்க அளவுக்கு மொழிபெயர்த்து விளக்கியதும், 'எழுத்துப்பூர்வமாகப் பதில் தருகிறேன்’ என்று ஒற்றை வரியில் சொன்னார் சசிகலா. அதனால், வெள்ளிக்கிழமை வழக்கத்தைவிட கேள்விகள் ஜெட் வேகத்தில் பறந்தன.
'பங்களா’ பதில்கள்?
வெள்ளிக்கிழமை மாலை வரை வங்கிக் கணக்குப் புள்ளிவிவரங்களாகப் பயணித்த கேள்விகளின் திசையை நீதிபதி பாலகிருஷ்ணா திடீரென மாற்ற ஆரம்பித்தார். சிறுதாவூர் பங்களா, பையனூர் பங்களா, கொடநாடு எஸ்டேட், அரசுக்குச் சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்தது, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ் அதிகாரி தொடர்பான கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார். ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்வதற்கு முன், சசிகலாவின் வக்கீல்கள் மணி​சங்கரும் செந்திலும் கைகளை அசைப்பதும், துண்டுச் சீட்டைக் காட்டுவதுமாக உதவி செய்தனர். அதேபோல ஏற்கெனவே கொண்டு வந்திருந்த ஃபைலைப் பார்த்தும் பதில் சொன்னார். பங்களாக்​களைக் கட்டியது, பராமரித்தது, வரி செலுத்தி​யதுபோன்ற அத்தனை கேள்வி​களுக்கும் தெரியாது என்றே பதில் சொன்னார். ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்லி​விட்டு சரியாகச்சொன்​​னேனா என்று வக்கீல்களைப் பார்த்து தலையசைத்து உறுதி செய்துகொண்டார்.  
விசாரணை அதிகாரிகளை விளாசிய சசி!
சனிக்கிழமை காலை உண​வை சீக்கிரமாக முடித்துக்​கொண்டு, கோர்ட் பக்கத்​திலே இருக்கும் ஆஞ்சநேயர் கோயிலுக்குப் போய் பிரார்த்தனை செய்த சசி, 11 மணிக்கு கோர்ட்டுக்குள் நுழைந்தார். கோர்ட் நடவடிக்கை தொடங்கியதும், சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்த தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளைப் பற்றிக் கேட்க ஆரம்பித்தார் நீதிபதி. 'நல்லம நாயுடு தலைமையிலான அதிகாரிகள் சசி என்டர்பிரைசஸ் அலுவலகத்தில் சோதனை நடத்தியபோது, 81 முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றி இருக்கிறார்களே?’ என்று கேட்டார்.
'விசாரணை அதிகாரிகள் சில பொருட்களைக் கைப்பற்றி இருந்தாலும், எங்களுடைய சொத்துக் கணக்கை அதிகமாகக் காண்பிக்க வேண்டும் என்பதற்காக வீட்டில் இருந்த பரிசுப் பொருட்களை எல்லாம் திட்டமிட்டு கணக்கில் சேர்த்தனர்’ என்றார். 'அப்படியென்றால் ஜெயலலிதா, நீங்கள், சுதாகரன், இளவரசி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த​தாக விசாரணை அதிகாரி நல்லம நாயுடு கூறி இருப்பது பற்றி என்ன சொல்கிறீர்கள்?’ என்று கேட்டார். 'நான், சுதாகரன், இளவரசி மூவரும் தனித்தனியாக தொழில்  நடத்துகிறோம். அதில் ஜெயலலிதாவுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை. அவர்மீது கொண்டுள்ள அரசியல் காழ்ப்பு உணர்ச்சியிலே வழக்கை ஜோடித்து உள்ளனர். அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த என்னிடம் விசாரிக்க வந்த அதிகாரிகள், விசாரணை நடத்தாமல் ஹாயாக டி.வி-தான் பார்த்தனர். ஆனால் அப்போது சொத்துக்குவிப்பு வழக்குத் தொடர்பாக என்னிடம் விசாரணை நடைபெறுவதாக டி.வி-யில் தலைப்புச் செய்தி ஓடியதைப் பார்த்து அதிர்ந்தேன். அதன்பிறகுதான் இதெல்லாம் விசாரணை அதிகாரியின் நாடகம் என்பது தெரிந்தது. பல்வேறு காலகட்​டங்களில் விசாரணை அதிகாரிகள் வரம்பை மீறி சோதனை நடத்தியது, எங்களுடைய வீட்டில் கைப்பற்றப்பட்டதாகச் சொல்லப்​படும் கைக்கடிகாரங்கள், நகைகள், பொருட்கள் தொடர் பாகச் சொன்ன அத்தனையுமே பொய்யானவை. வேண்டும் என்றே அவற்​றின் மதிப்பை அதிகமாகக் காட்டி இருக்கின்றனர்’ என்று விளாசினார்.
சுதாகரன் திருமணச் செலவு!
சுதாகரனின் திருமணச் செலவுகள் தொடர்பான கேள்விகளுக்கு, ஜெய​லலிதா என்ன பதில் சொன்னா​ரோ, அதே பதிலையே சசிகலாவும் சொன்​னார்.
'சுதாகரனின் திருமணத்துக்கு நானோ, ஜெயலலிதாவோ, ஒரு ரூபாய்​கூட பணம் செலவழிக்கவில்லை. தமிழகப் பண்பாட்டின்​படி திருமணச் செலவை மணப்பெண் வீட்டாரே முழுவதுமாக ஏற்றுக்​கொண்டனர். அதுதான் வழக்கம். இதுதொடர்பாக பெண்ணின் தாய்மாமன் ராம்குமார் சாட்சியம் அளித்து இருக்கிறார்’ என்று உறுதியான குரலில் சொன்னார் சசிகலா.
இது பொய் வழக்குதான்!
'ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் அசையும் மற்றும் அசையா சொத்துக்​களின் விவரங்கள் தர முடியுமா?’ என நீதிபதி கேட்ட போது நீண்ட நேரம் யோசித்துவிட்டு, 'எழுத்து மூலமாகப் பதில் சொல்​கிறேன்’ என்றார் சசிகலா. அவரிடம், 'வழக்கின் முதல் குற்ற​வாளியான ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக 62.27 கோடி ரூபாய் சொத்துச் சேர்த்ததாகக் கூறப்படுவது குறித்து என்ன சொல்கிறீர்கள்?’ என்று நீதிபதி கேட்டார்.
'ஜெயலலிதாவின் சொத்து வேறு. எங்களுடைய சொத்து வேறு. அவர் மீது பொய் வழக்குத் தொடர வேண்டும் என்பதற்காகவே 'எங்களுடைய சொத்துக்களை எல்லாம் அவருடைய சொத்தாகக் கணக்கில் சேர்த்துள்ளனர். எங்களு​டைய சொத்துகள் அனைத்துக்கும் முறைப்படி வரி செலுத்தி இருக்கிறோம். அதே போல வங்கியில் கடன் வாங்கியே எங்களுடைய நிறுவனங்களை ஆரம்பித்துப் பராமரித்தோம். அதற்கான ஆதாரங்​களை எல்லாம் கோர்ட்டில் சமர்ப்பிக்கத் தயாராக இருக்கிறோம். ஜெய​லலிதாவை அரசியல் ரீதியாகப் பழிவாங்க வேண்டும் என்பதற்காகப் போடப்பட்ட பொய் வழக்கு’ என்ற சசிகலாவின் முகத்தில் புன்னகை வழிந்தது.
கருணாநிதி என்னை மிரட்டினார்!
கடைசியாக, 'இந்த வழக்கு குறித்து ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா?’ என்று கேட்கத் தொடங்கிய‌ நீதிபதி, 'போன கேள்விக்கு நீங்கள் சொன்ன பதிலையே உங்கள் கருத்தாகஎடுத்துக்​கொள்கிறேன்’ என முடிக்க முயற்சிக்க, 'இல்லை... இல்லை... ஒரு சில வார்த்தைகள் மட்டும்’ என்று இழுத்தார் சசிகலா.
இதுவரை 1,031 கேள்விகளுக்கும் சசிகலா சொன்ன பதில், அவர் பக்கத்தில் இருக்கும் மொழிபெயர்ப்பாளருக்குக்கூட தெளிவாகக் கேட்காத வகையில் மெள்ளப் பேசினார். ஆனால், கடைசிக் கேள்விக்கு மட்டும் அனல் தெறிக்கும் வகையில் அரசியல் வசனம் பேசி அனைவரையும் மிரள வைத்தார்.
'தமிழ்நாட்டில் ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்கும் அரசியல் பகை இருக்கிறது. அதனால், அரசியலில் இருந்து ஜெய லலிதாவை எப்படியாவது ஒழிக்க வேண்டும் என்பதற்காக, வரு மானத்துக்கு அதிகமாக 66 கோடி ரூபாய் சொத்துச் சேர்த்ததாகப் பொய்யாக இந்த வழக்கைத் தொடர்ந்தார். இந்த வழக்கு ஆரம்பிக்கப்பட்டபோது அவரால் 66 கோடி ரூபாய்க்கான கணக்கைக் காட்ட முடியாததால், வழக்கு ஆரம்பித்து இரண்டு மாதங்கள் கழித்து என்னையும், சுதாகரன், இளவரசியையும் இதில் சேர்த்தார். எங்களுடைய சொத்துகளை எல்லாம் ஜெய லலிதாவின் சொத்தாகக் கணக்குக் காட்டியுள்ளார். இந்த வழக்குத் தொடர்ந்த இரண்டு மாதங்களில், ஜெயலலிதாவுக்கு எதிராகச் சாட்சியம் சொல்லும்படி கருணாநிதி என்னை மிரட்டினார். மறுத்து விட்டேன். அதனாலே, என்னை வழக்கில் இரண்டாவது குற்றவாளியாகச் சேர்த்தனர். அது மட்டுமில்லாமல் ஊழல் தடுப்புத் துறை அதிகாரிகள் விசாரணையை நேர்மையாக நடத்தவில்லை. எங்களை அவமானப்படுத்தும் நோக்கிலும், ஜெயலலிதாவின் அரசியல் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் எங்கள் வீட்டில் சோதனை நடத்திய வீடியோ காட்சிகளை கருணாநிதியின் குடும்பத் தொலைக்காட்சியான சன் டி.வி-யில் அடிக்கடி போட்டுக்காட்டினர். ஜெயலலிதாவை அரசியலில் இருந்தே அப்புறப்படுத்த வேண்டும் என்ற கருணாநிதியின் பேச்சை விசாரணை செய்த அதிகாரிகளும் கடைப்பிடித்தனர். என்னுடைய விரிவான விளக்கத்தை எழுத்து மூலமாகவும் சொல்கிறேன்’ என்றபோது சசிகலாவின் முகத்தில் கோபம் கொப்பளித்தது.
அடுத்து சுதாகரன் வருகை!
ஜெயலலிதா 1,384 கேள்விகளுக்கும், சசிகலா 1,032 கேள்விகளுக்கும் பதில் சொல்லி இருப்பதால், அடுத்து சுதாகரன் பதில் சொல்ல இருக்கிறார். சுதாகரன் வக்கீல் அன்புக்கரசு, 'நாடு முழுவதும் ஒரு வாரம் கோர்ட் விடுமுறை என்பதால், ஜனவரி 3-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைக்க வேண்டும்’ என்று கேட்டார்.
உடனே குறுக்கிட்ட நீதிபதி, 'இது ஸ்பெஷல் கோர்ட். ஸ்பெஷல் கேஸ். அதனால் அந்த விடுமுறை நமக்குப் பொருந்​தாது. அதனால் 26-ம் தேதி சுதாகரனிடம் கேள்விகள் கேட்கப்படும்’ என்று கறாராகச் சொல்லி, வழக்கை ஒத்திவைத்தார். இப்போது சுதாகரனுக்கு வக்கீல்கள் கோச்சிங் கிளாஸ் நடத்திவருகிறார்களாம்.
ஆக, தீர்ப்பு நெருங்குகிறது!

ராஜீவ் காந்தியின் இறப்பு சான்றிதழை பெற்ற மர்ம பெண் யார்? மத்திய உளவுப்பிரிவு போலிஸார் அதிரடி விசாரணை.


www.thedipaar.com

வி.ஐ.பி-களின் பெயரைப் பயன்படுத்தி தனிநபர்கள் 'விளையாடுவது’ தமிழகத்துக்குப் புதிதல்ல. ஆனால், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் நடந்த சம்பவம், அத்தனையையும் சாப்பிட்டு ஏப்பம் விட்டுவிட்டது! 
கடந்த 21-ம் தேதி, உயர் ரக கார் ஒன்றில் பரபரப்பாக வந்து இறங்​கினார் ஒரு பெண். வந்தவர், 1991 மே 21-ம் தேதி இறந்துபோன தன் கணவரின் இறப்புச் சான்றிதழ் கேட்டார் என்கிறார்கள். அந்தப்பெண்ணின் நடை, உடை, பாவனை அவரை பெரியஇடத்து ஆளாக அடையாளம் காட்டியதால்,சில சம்பிர​தாயங்​களுக்குப் பிறகு, அவர் கேட்ட சான்றிதழ் தரப்பட்டது. அந்தப் பெண்ணிடம் கொடுக்கப்பட்டது முன்னாள் பிரதமர் ராஜீவ்​காந்தியின் இறப்புச் சான்றிதழ். வந்தவர் சோனியா காந்தி அல்ல; ஓர் ஆந்திரப் பெண்!
ஸ்ரீபெரும்புதூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் மூன்று தினங்களாக அந்தப் பெண்ணின் நடமாட்டம் இருந்ததாகச் சொல்கிறார்கள். சபீனா ஃபெரோஷ்கான் என்று தன்னை அறிமுகப்​படுத்திக்​கொண்ட அவர், ஆந்திர மாநிலம் ஹைதராபாத் நகர் தாதா சாஹேப் தெருவை தனது விலாசமாக மனுவில் குறிப்பிட்டு இருக்கிறார். கடந்த 19-ம் தேதியே அவர் மனு கொடுத்து இருக்கிறார். இரண்டு நாட்கள் கழித்து 21-ம் தேதி இறப்புச் சான்றிதழ் அவர் கைக்குச் சென்றுள்ளது. அந்தப்பெண் யார், என்ன நோக்கத்துக்காகச் சான்றிதழ் பெற்றார் என்று இப்போது விசாரணையை முடுக்கி இருக்​கிறார்கள் மத்திய உளவுப் பிரிவு போலீஸார்.
'ராஜீவைப்பற்றி புத்தகம் எழுதும் வெளி மாநிலப் பத்திரிகையாளர் ஒருவர்தான், இப்படி ராஜீவின் மனைவி என்று ஒருவரை நடிக்க​வைத்து சான்றிதழ் பெற்றார்’ என்றும் தகவல் சொல்லப்படுகிறது. சான்றிதழ் வழங்கிய சார்பதிவாளர் ராமலிங்கத்திடம் விளக்கம் கேட்​டுள்ளது அரசு. அவர் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்​பட்டுள்ளார். அவரைத் தொடர்புகொள்ள முயற்சித்​தும் இயலவில்லை.
இதுகுறித்து நம்மிடம் பேசிய உயர் அதிகாரி ஒருவர், ''பத்திரப்பதிவு அலுவல​கத்தில் இறப்புச் சான்றிதழ் என்பது பொது ஆவணமாகப் பராமரிக்கப்படுவதால், யாரும் யாருடைய இறப்புச் சான்றிதழையும் உரிய விவரங்​களுடன் மனுசெய்து பெறுவது சாதாரணமாகப் பின்பற்றப்படும் நடைமுறைதான். இருப்பினும், பெரிய தலைவர் ஒருவரின் பெயர் சம்பந்தப்பட்டு இருப்பதால், அதிகாரி அதை ஒன்றுக்குப் பலமுறை விசாரித்து, தேவையற்ற  சர்ச்சையைத் தவிர்த்து இருக்கலாம். சர்ச்சைக்குரிய மனுவின் எந்த இடத்திலும் தன்னை ராஜீவ் காந்தியின் மனைவி என அந்தப் பெண் குறிப்பிடவில்லை. அதிகாரியால் தரப்​பட்ட சான்றி​தழிலும் 'ராஜீவின் மனைவி’ என்ற வார்த்தை எங்கும் குறிப்பிடப்​படவில்லை. விசாரணையில் இது தெளிவாகவே உறுதிப்படுத்தப்​பட்டு உள்ளது. பர​பரப்​பைக் கிளப்ப வேண்​டும் என்றே சில விஷமிகள் பொய்​யான தகவல்​களை இட்டுக்கட்டி இதைப் பெரிது​படுத்துகின்​றனர்'' என்றார் அந்த அதிகாரி.
நம் அரசு அலுவலகங்கள் இயங்கும் லட்சணத்துக்கு, இந்தச் சம்பவம் இன்னும் ஓர் உதாரணம்!

எனது இந்தியா (தேசிய கீதம், தேசியச் சின்னம் மற்றும் தேசியக் கொடி!) - எஸ். ராமகிருஷ்ணன்....


சுதந்திர இந்தியாவின் மிக முக்கியமான மூன்று அடை​யாளங்கள், தேசிய கீதம், தேசியச் சின்னம் மற்றும் தேசியக் கொடி. இந்த மூன்​றையும் அதன் வரலாறு அறியாமலேயே பயன்படுத்திவருகிறோம். 'ஜன கண மன’ எனத் தொடங்கும் நமது தேசிய கீதத்தைப் பாடுகிறவர்களில் எத்தனை பேருக்கு அதன் தமிழ் அர்த்தம் தெரியும்?

தேசிய கீதத்தின் அர்த்தம் தெரியாமலேயே பாடுவது தவறு இல்லையா? மகாகவி ரவீந்திரநாத் தாகூரால் எழுதப்பட்ட இந்தப் பாடல், 52 வினாடிகள் ஒலிக்கக்கூடியது. நாம் பாடும் தேசிய கீதம் வெறும் முதல் பத்திதான். மொத்தம் ஐந்து பத்திகளை தாகூர் எழுதி இருக்கிறார். தேசிய கீதம் முதன்முறையாக 1911-ம் ஆண்டு கல்கத்தாவில் நடந்த இந்திய தேசியக் காங்கிரஸ் மாநாட்டில் பாடப்பட்டது. அந்த மாநாடு ஐந்தாம் ஜார்ஜ் மன்னருக்கு வரவேற்பு அளித்தது. ஆகவே, அன்று பாடப்பட்ட இந்தப் பாடல் இங்கிலாந்து மன்னரை வரவேற்றுப் பாடப்பட்டது என்ற சர்ச்சைகூட சமீபத்தில் உருவானது.

இது, அன்றைய ஆங்கில நாளேடுகள் வெளியிட்ட தவறான தகவலால் ஏற்பட்டது. உண்மை​யில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரை வரவேற்று அதே மாநாட்டில் ராம்புஜ் சவுத்திரி என்பவர் ஓர் இந்திப் பாடலைப் பாடினார். அந்தப் பாட​லையும் தாகூரின் பாடலையும் வேறுபடுத்தி அறிந்துகொள்ளாத 'ஸ்டேட்ஸ்மேன்’, 'இங்கிலிஷ்​மேன்’ போன்ற ஆங்கிலப் பத்திரிகைகள், இரண்டு பாடல்களுமே மன்னரை வாழ்த்திப் பாடியதாகத் தகவல் வெளி​யிட்டன. அந்தக் குழப்பமே இன்று சர்ச்சையாக எழுந்துள்ளது. வங்காளத்தில் எழுதப்பட்ட நமது தேசிய கீதத்தை, இந்திப் பாடல் என்று ஓர் ஆங்கிலப் பத்திரிகை செய்தி வெளியிட்டது. இதுபோன்ற பிழையான தகவல்கள், வரலாற்று உண்மைகளைத் திரித்துப் பேசுவதற்கு வழிவகுத்துவிடுகின்றன.


இரண்டு தேசங்களின் தேசிய கீதத்தை எழுதிய பெருமை தாகூருக்கு உண்டு. அவர்தான் பங்களாதேஷின் தேசிய கீதமான 'அமர் ஷோனார் பாங்க்ளா’ என்ற பாடலை எழுதினார். வங்காள மொழியில் அமைந்த 'ஜன கண மன’ பாடலை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தவரும் தாகூரே!

1911-ம் ஆண்டு 'ஜன கண மன’ பாடப்பட்டாலும் அதற்கு முறையாக இசை அமைக்கப்பட்டது 1918-ம் ஆண்டுதான். இந்தப் பாடலுக்கு, ஆந்திர மாநிலத்தின் மதனப்பள்ளியைச் சேர்ந்த ஜேம்ஸ் எச். கசின் மற்றும் அவரது துணைவியார் ஆகிய இருவரும் இசை அமைத்தனர். மதனப்​பள்ளியில் அன்னிபெசன்ட் அம்மையார் அமைத்த தியாசபிக்கல் கல்லூரியில், 1919-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தங்கி இருந்த நாட்களில்தான் தாகூர் பாடலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அப்போது, கல்லூரியின் முதல்வராக இருந்த மார்க்ரெட் கசின், தாகூரின் முன்னிலையில் இந்தப் பாடலுக்கு மெட்டு அமைத்தார். அதை, தாகூர் மிகவும் ரசித்துப் பாராட்டி இருக்கிறார். அந்த மெட்டுதான் இன்று நாம் பாடும் பாடலுக்கான அடிப்படை.  

தாகூர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பாடலின் நகல் பிரதி இன்றும் மதனப்பள்ளியில் கண்காட்சிக்கு இருக்கிறது.

'ஜன கண மன ’ பாடலை நேதாஜி தனது ஐ.என்.ஏ-வில் தேசியகீதமாகப் பயன்படுத்தி வந்தார். ஐ.என்.ஏ-வுக்காக இந்தப் பாடலை பேண்ட் வாத்திய இசைக் குழுவினர் வாசிக்கும்படி இசை அமைத்தவர் கேப்டன் ராம்சிங். இதற்காக, இவருக்கு நேதாஜி தங்கப் பதக்கம் வழங்கிக் கௌரவித்து இருக்கிறார். 'ஜன கண மன’ பாடல் இறை வணக்கமாகவும், தேச வணக்கமாகவும் எழுதப்பட்ட ஒன்று. 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதி இரவு, இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, நாடாளுமன்றத்தில் திருமதி. சுவேதா கிருபாளினி மற்றும் டாக்டர். சுசீலா நய்யார் ஆகியோர், 'ஸாரே ஜஹான் சே அச்சாஹ்’ என்ற பாடலைப் பாடினர். அந்தப் பாடல்தான், இந்தியாவின் சுதந்திரத்தைப் பிரகடனம் செய்தது. இந்தப் பாடலை எழுதியவர் மகாகவி இக்பால். இந்திய நாட்டின் சுதந்திரத்துக்குப் பின், எந்தப் பாடலை இந்தியாவின் தேசிய கீதமாகத் தேர்வுசெய்வது என்ற கேள்வி எழுந்தது. காரணம், சுதந்திரப் போராட்டக் காலத்தில் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய 'வந்தே மாதரம்’, ரவீந்திரநாத் தாகூர் எழுதிய 'ஜன கண மன’, முஹம்மது இக்பால் எழுதிய 'ஸாரே ஜஹான் சே அச்சா’ ஆகிய மூன்று பாடல்கள் மிகவும் புகழ் பெற்று இருந்தன.

இந்த மூன்றில் எதைத் தேசிய கீதமாகத் தேர்வுசெய்வது என்பதில் குழப்பம் ஏற்பட்டது. காரணம், இந்த மூன்று பாடல்களும் மக்கள் மத்தியில் புகழ்பெற்று இருந்தன. அத்துடன், பல்வேறு தேசியத் தலைவர்கள் இந்தப் பாடல்களை உணர்ச்சிப்பூர்வமாக பாடி மக்களிடம் எழுச்சியை உருவாக்கி இருந்தனர். ஆகவே, எந்தப் பாடலை தேசிய கீதம் என அறிவிப்பது என்ற முடிவை அரசியல் நிர்ணய சபையின் வசம் விடுவது என்று தீர்மானிக்கப்பட்டது. 1882-ம் ஆண்டு பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய'ஆனந்த மடம்’ நாவலில் 'வந்தே மாதரம்’ பாடல் இடம் பெற்றுள்ளது. 'வந்தே மாதரம்’ பாடல், ஜாதுனாத் பட்டாச்சார்யா என்பவரால் மெட்டு அமைக்கப்பட்டு புகழ் பெற்ற பாடலாகத் திகழ்ந்தது. இந்தப் பாடல் துர்க்கையை வாழ்த்திப் பாடுகிறது.   இஸ்லாமியர் மனம் புண்படுவார்கள் என்பதால், இந்தப் பாடலை தேசிய கீதமாக அறிவிக்கக் கூடாது என்ற எதிர்ப்புக் குரல் உருவானது.

1908-ம் ஆண்டு அமிர்தசரஸ் நகரில் நடந்த முஸ்லிம் மாநாட்டில் பேசிய சையத் அலி இமாம், 'வந்தே மாதரம்’ பாடலுக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். அதே​போல், 1923-ம் ஆண்டு காக்கி​நாடாவில் நடந்த காங்கிரஸ் கூட்​டத்தில், விஷ்ணு திகம்பர் 'வந்தே மாதரம்’ பாடலைப் பாட முயன்​றார். அப்போது, காங்கிரஸ் காரியக் கமிட்டித் தலைவராக இருந்த மௌலானா முஹம்மது அலி, இந்தப் பாடல் இஸ்லாத்துக்கு எதிரானது, அதனால் இந்தப் பாடலைப் பாட அனுமதிக்க முடியாது என்று தடுத்து நிறுத்தினார்.

ஆரம்ப காலத்தில், 'வந்தே மாதரம்’ பாடலை தாகூர் ஆதரித்தாலும், 1939-ம் ஆண்டு நேதாஜிக்கு எழுதிய கடிதத்தில் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இருக்கிறார். இவர்களைப் போலவே காந்தி, எம்.என்.ராய் மற்றும் நேதாஜி ஆகியோரும் இது இஸ்லாமியர்களின் மனதைப் புண்படுத்துகிறது என்றால், அதைத் தேசிய கீதமாக அறிவிக்க வேண்டாம் என்று கருதினர்.

'ஸாரே சஹான் சே...’ பாடல் 1904-ம் ஆண்டு ஆகஸ்ட் 16-ம் தேதி 'இத்திஹாத்’ என்ற வார இதழில் வெளியானது. இந்தப் பாடல் இந்தியாவின் அனைத்துத் தரப்பு மக்களிடமும் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. ஆனாலும், இந்தப் பாடலை தேசிய கீதமாகத் தேர்வு செய்யவில்லை. இந்த மூன்று பாடல்களையும் அரசியல் நிர்ணய சபை பரிசீலனை செய்தது. ஆனாலும், எதைத் தேர்வுசெய்வது என்ற குழப்பம் நீடித்தது. முடிவு உடனே அறிவிக்கப்படவில்லை. அரசியல் நிர்ணய சபையின் கடைசி நாளான 1950-ம் ஆண்டு ஜனவரி 24-ம் தேதி, டாக்டர் ராஜேந்திர பிரசாத் தலைமையில் கூடிய கூட்டத்தில், இந்தியாவின் தேசிய கீதம் குறித்து விவாதித்து முடிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்தக் கூட்டத்தில் தேசிய கீதம் பற்றி எந்த விவாதமும் நடக்கவில்லை. அதற்குப் பதிலாக, தேசியகீதம் எது என்பது குறித்த ஓர் அறிக்கையை ராஜேந்திர பிரசாத் வெளியிட்டார். அதில், தாகூர் எழுதிய 'ஜன கண மன’ பாடலின் சொற்களும் இசையும் இந்தியாவின் தேசிய கீதமாக இருக்கும். அதே நேரம், இந்திய விடுதலைப் போராட்டத்தில் முக்கியப் பங்களித்த 'வந்தே மாதரம்’ பாடலுக்கும் 'ஜன கண மன’-வுக்குச் சமமான அந்தஸ்து வழங்கப்படும் என்று கூறப்பட்டு இருந்தது. ஆனால், 'ஸாரே சஹான் சே’ பாடல் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. இந்தப் பாடல் இன்றும் ராணு வத்தினரிடம் எழுச்சிமிக்க பாடலாகப் பாடப்பட்டு வருகிறது.

இந்த அறிவிப்புக்குப் பிறகு, தேசிய கீதம் பற்றி விவாதம் ஏதும் நடக்கவில்லை. சுதந்திரத்துக்கு முன்பு வரை ஆங்கிலேயர்கள், 'காட் சேவ் தி க்வீன்’(God save the Queen) என்ற பாடலைத்தான் இந்தியா எங்கும் பாடிக்கொண்டு இருந்தனர். அந்தப் பாடலுக்கு மாற்றாக 'ஜன கண மன’ ஒலிக்கத் தொடங்கியது. வங்காள மொழியில் அமைந்த இந்தப் பாடலின் ஒரு பகுதிதான் தேசிய கீதமாக இன்று பாடப்படுகிறது. இந்தப் பாடலின் எளிமையான மொழியாக்கம் இதுவே.

ஜன கண மன அதிநாயக ஜய ஹே - மக்கள் பெருங்கூட்டத்தின் மனத்தில் ஆட்சி செய்பவள் நீதான். வெற்றி உனக்கே!

பாரத பாக்ய விதாதா - இந்தியத் திருநாட்டுக்குப் பெருமையும், மங்கலமும், செல்வங்களும் அருளுபவள் நீயே.

பஞ்சாப சிந்த குஜராத மராட்டா த்ராவிட உத்கல பங்கா - பஞ்சாப் மாகாணம், சிந்து நதிப் பிரதேசம், குஜராத் மாநிலம், மராட்டிய மாநிலம், திராவிட பீடபூமி, உத்கலமாகிய ஒரிஸ்ஸா மாநிலம், வங்காள (பங்கா) தேசம் உன்னுடையது.
விந்திய ஹிமாசல யமுனா கங்கா - கடக்க முடியாத இயற்கை எல்லையான விந்திய மலை உன்னுடையது. உலகின் மிகப் பெரிய சிகரத்தைக்கொண்ட இமயமலை உன்னுடையது. வற்றாத இரு நதிகளான கங்கையும் யமுனையும் உன்னுடையவை. இந்த இயற்கை அற்புதங்கள் உன் புகழை எல்லாத் திசைகளிலும் பாடிப் பரவிக்கொண்டு இருக்கின்றன.

உத்சல ஜலதி தரங்கா - மூன்று திசைகளிலும் உன்னைச் சூழ்ந்து இருக்கும் மாக்கடல்கள் உன் புகழைத் தங்கள் அலைக் கரங்களால் எப்போதும் பாடிக்கொண்டு இருக்கின்றன.

தவ சுப நாமே ஜாஹே - உனது மங்கலகரமான திருநாமத்தை எப்போதும் நாங்கள் பாடிப் போற்றிக்கொண்டு இருக்கிறோம்.

தவ சுப ஆஷிஷ மாஹே - உனது மங்கலகரமான ஆசிகளை வேண்டி நிற்கின்றோம்.

காஹே தவ ஜய காதா - உன்னுடைய மாபெரும் வெற்றியை வேண்டியே நாங்கள் பாடிக்கொண்டு இருக்கிறோம்.

ஜன கண மங்கல தாயக ஜய ஹே - இந்திய மக்களின் மங்கலங்களை அள்ளித் தருபவள் நீ. வெற்றி உனக்கே!

பாரத பாக்ய விதாதா - இந்தியத் திருநாட்டின் பாக்கியங்களைத் தருபவள் நீ.
ஜய ஹே! ஜய ஹே! ஜய ஹே! ஜய ஜய ஜய ஜய ஹே! - வெற்றி உனக்கே! வெற்றி உனக்கே! வெற்றி உனக்கே! வெற்றி! வெற்றி!! வெற்றி!!! வெற்றி உனக்கே!.

1950-ல் இருந்து இந்தியாவின் தேசிய கீதமாக 'ஜன கண மன’ பாடலும் தேசப் பாடலாக 'வந்தே மாதரம்’ பாடலும் பாடப்பட்டு வருகின்றன. இரண்டாம் உலகப் போரில் ஜப்பானைச் சேர்ந்த ஒரு லட்சத்து 50 ஆயிரம் வீரர்கள், கிழக்கு ஆசியா கடற்படை கமாண்டராக இருந்த மவுன்ட் பேட்டனிடம் 1945-ம் வருடம் ஆகஸ்ட் 15-ம் தேதி சரண் அடைந்தனர். எனவே, அந்த நாள் அவர் வாழ்நாளில் மறக்க முடியாத நாள். அதனால், ஆகஸ்ட் 15-ல் இந்தியாவுக்கும் சுதந்திரம் கொடுக்க மவுன்ட் பேட்டன் முடிவு செய்தார் என்கிறார்கள். ஆகஸ்ட் 15-ம் தேதி அஷ்டமி என்பதால் அன்று சுதந்திரம் பெறக்கூடாது. ஆகஸ்ட் 17-ம் தேதி சுதந்திரம் பெற வேண்டும் என்று ஜோதிடர்கள், நேருவைச் சந்தித்து வலியுறுத்தினர். தனக்கு அதில் நம்பிக்கை இல்லை என்று நேரு மறுத்துவிட்டார். ஆனாலும், கடைசி வரை அஷ்டமி அன்று சுதந்திரம் பெறக் கூடாது என்பதை வலியுறுத்திக் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்து இருக்கின்றன.

காரணம் - தயிர் கடைவது ஏன்?


 
பாவை நோன்பு மேற்கொண்டு, பகவானுக்கு பூமாலையோடு பாமாலையும் சூட்டியவர் ஆண்டாள் நாச்சியார். அவர் திருப்பாவையில் ‘வையத்து வாழ்வீர்காள்’ என்று தொடங்கும் இரண்டாம் பாசுரத்தில், ‘நெய்யுண்ணோம், பாலுண்ணோம்’ என்று பாடுகிறார். அடுத்த சில பாசுரங்களிலேயே, ‘ஆச்சியர் மத்தினால் ஓசைப்படுத்த தயிரரவம் கேட்டிலையோ’ என்கிறார். விரதம் இருப்போர் தயிர் கடைவது ஏன்? இது முரண்பாடு அல்லவா?
 
இப்படி ஒரு கேள்வி நம் மனத்தில் தோன்றக்கூடும். ஆனால், அதற்கு நான்கு காரணங்களைச் சொல்லியிருக்கிறார்கள் ஆசார்யார்கள்.

முதற்காரணம்: விரதம் இல்லாத குழந்தைகள், மூத்தோர்... உள்ளிட்ட பிறருக்கு நெய், பால், தயிர், வெண்ணெய் வேண்டாமா? அதனால் தயிர் கடைகிறார்கள்.

இரண்டாம் காரணம்: கண்ணன் வந்து தேடும்போது வெண்ணெய் போன்றவை இல்லையென்றால், பகவத் அபசாரமும், அவனது தோழர்களுக்கு அவை கிடைக்காவிடில், பாகவத அபசாரமும் ஏற்பட்டு விடுமே. தெய்வக் குற்றமும், அடியார் குற்றமும் ஏற்பட்டு விடக்கூடாதே என்று கடைகிறார்களாம்.

மூன்றாவது காரணம்: எவரும் எக்காரணம் கொண்டும், எந்தக் காலத்திலும், தன் கடமையிலிருந்து தவறக்கூடாதாம். யசோதை தினமும் தயிர் கடைவதில் தவறவேமாட்டாளாம்.

நான்காவது காரணம்: ஓர் உட்பொருள். பகவத் சிந்தனை என்னும் மத்தினால் வேதம், மந்திரம், பாசுரம் (என்னும் தயிர்) என்னும் சாரங்களை கடையக் கடைய, நல்ல ஞானம், மோட்சம் பற்றிய ஞானம், நற்கதி ஆகியவை கிடைக்குமாம்.

வெறும் பாசுரமாக, பொருளறியாமல் மனப்பாடம் செய்வதை விட்டுவிட்டு, இப்படி ஆழ்ந்து பார்க்கும்போது, திருப்பாவை தித்திக்கும் அமுதமாகிறது.

எனது இந்தியா (கல்விக்காக நூறு கிராமங்கள் !) - எஸ். ராமகிருஷ்ணன்....


இந்தியாவில் காஷ்மீரம், பாடலிபுத்திரம், பிரயாகை, மதுரா, அயோத்தி,  பனாரஸ், வைசாலி, கனோஜ் போன்ற முக்கிய நகரங்களில் தங்கி, பௌத்தம் குறித்து  ஆய்வு செய்தார் யுவான் சுவாங். அதன் தொடர்ச்சியாக அவர், நாளந்தா பல்கலைக்கழகத்துக்குச் சென்று தனது விருப்பத்தைத் தெரிவித்தவுடன், அங்கேயே தங்கி ஆய்வு செய்யவும் கற்றுக் கொள்ளவும் அனுமதித்​தனர்.
 யுவான் சுவாங் நாளந்​தாவில் யோக சாஸ்​திரங்​களைக் கற்றுக்​கொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டார். அந்த நாட்களில் நாளந்தா பல்கலைக்​கழகத்தில், 10 ஆயிரம் மாணவர்கள் தங்கி, கல்வி பயின்று வந்தனர். அங்கே 18 பாடப் பிரிவுகளில் மாண​வர்கள் பயிற்றுவிக்கப்பட்டனர். இதற்​காக 1,541 ஆசிரியர்கள் பணியாற்றினர். இந்தப் பல்கலைக்கழகத்துக்குத் தேவையான வருமானத்துக்காக, 100 கிராமங்கள் வழங்கப்பட்டு இருந்தன. அதோடு, 200 வீடுகளில் இருந்து தினமும் பாலும் தேவையான பட்சணங்களும் தானமாகத் தரப்பட்டன.

அங்கே தங்கியிருந்து மகாயான பௌத்த சமய சாரங்களை முழுமையாகக் கற்று அறிந்தார். அதன்பிறகு, அங்கிருந்து தெற்கு நோக்கிப் பயணம் செய்தார். தமிழகத்தில் உள்ள காஞ்சி புரத்துக்கு வந்துசேர்ந்த யுவான் சுவாங், அங்கிருந்த பௌத்தப் பல்கலைக்கழகத்தில் தங்கி சிறப்புரை ஆற்றியிருக்கிறார். பிறகு, அங்கிருந்து புறப்பட்டு இலங்கைக்குச் சென்றார் என்று சரித்திரக் குறிப்புகள் கூறுகின்றன.


இந்தியாவில், புத்தர் பிறந்த இடமான லும்பினியில் இருந்து புத்தர் மெய்ஞானம் பெற்ற கயா வரை உள்ள எல்லா பௌத்த ஸ்தலங்களையும் பார்வையிட்ட யுவான் சுவாங், அதைப்பற்றி விரிவான குறிப்புகளாகப் பதிவு செய்து இருக்கிறார்.

17 வருடங்களுக்குப் பிறகு நாடு திரும்ப அவர் முடிவுசெய்தபோது, அவரோடு 20 குதிரைகளில் 657 தொகுதிகளாக்கப்பட்ட 520 பௌத்த பிரதிகள் ஏற்றிச் செல்லப்பட்டன. அவற்றில் 224 தொகுதிகள் பௌத்த சூத்திரங்கள். 192 தொகுதிகள் தர்க்க சாஸ்த்திரங்கள்.

இந்தியாவுக்குள் வரும்போது சந்தித்த பிரச்னைகளைவிட, சீனாவுக்குத் திரும்பிச் செல்வதற்கான பயணம் மிகுந்த போராட்டமாக அமைந்தது. முடிவில் அவர், சீனா சென்று சேர்ந்து, தனது சேகரிப்புகள் அத்தனையையும் சேர்த்து அறிவாலயம் ஒன்றை உருவாக்கினார். யுவான் சுவாங்கின் பயணத்தைப் பாராட்டி, யுவான் சுவாங் கொண்டுவந்த நூல்கள் அத்தனையையும் சீன மொழியில் மொழியாக்கம் செய்தவற்காக சிறப்பு நிதி உதவியை மன்னர் அளித்தார்.

இந்த அறிவாலயத்தில் இளம் துறவிகள் பலரும் இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட பிரதிகளை சீன பாஷையில் மொழிபெயர்த்தனர். யுவான் சுவாங் தனிநபராக 74 புத்தகங்களின் 1,335 அத்தியாயங்களை மொழியாக்கம் செய்திருக்கிறார். நான்கு தொகுதிகளாக தனது நினைவுக் குறிப்புக் களையும் எழுதி இருக்கிறார். அந்த நினைவுக் குறிப்புக்களின் வழியாக பண்டைய இந்தியாவின் அறிவியல், வானவியல், கணிதம், விவசாயம், கலைகள் பற்றி நிறைய அறிய முடிகிறது.

குப்தர் கால இந்தியாவில் இருந்த சாதிய முறைகள் பற்றியும் அன்றைய பௌத்த மதப் பிரிவுகள் மற்றும் இந்து மதச்சடங்குகள், கோட் பாடுகள் பற்றியும் யுவான் சுவான் தெளிவாக விளக்கி இருக்கிறார்.

664-ம் ஆண்டு மார்ச் 10-ம் நாள், தனக்கு விருப்பமான பௌத்த சூத்திரம் ஒன்றை மொழியாக்கம் செய்துவிட்டு, கடந்துபோன தனது பயண நாட்களைப் பற்றிய கனவுகளுடன் தூங்கச் சென்ற யுவான் சுவாங், அப்படியே இறந்து போனார். இன்றும் அவரது அறிவாலயம் சீனாவில் முக்கிய பௌத்தக் காப்பகமாகத் திகழ்கிறது.

நூற்றாண்டுகளைக் கடந்து யுவான் சுவாங்கின் சாகசப் பயணம், 'நாட்டார் கதை’ போல மக்களால் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டு எண்ணிக்கையற்ற கிளைக் கதைகளைக் கொண்டதாகிவிட்டது. சமீபத்தில், அமெரிக்கத் தொலைக்காட்சித் தொடராக எடுக்கப்பட்ட யுவான் சுவாங்கின் வாழ்க்கைக் கதையில், மாயம் செய்யும் குரங்குகளும் டிராகன்களும் அவருக்கு உதவி செய்வதற்காக புத்தரால் அனுப்பப்பட்டன என்று கதை விரிகிறது. யுவான் சுவாங்கின் வாழ்வைச் சுற்றிலும் புனைவு தன் நெசவை நுட்பமாக நெய்கிறது.
யுவான் சுவாங்கின் பயணக் குறிப்புகளில் அவர் கேள்விப்பட்ட கதைகள் மாற்றுருவில் கலந்து இருக்கின்றன. அதுபோன்ற கதைகள் பௌத்த ஜாதகக் கதை மரபில் உருவானவை. குறிப்பாக, மகாசத்துவர் என்ற மன்னர் பசியால் துடித்த பெண் புலிக்கு தனது உடலை உணவாகத் தருவதற்காக பாறையில் இருந்து குதித்தார். அப்படியும் பெண் புலியால் நடந்து வந்து அவர் உடலைப் புசிக்க முடியவில்லை. அதனால், அவரே தனது காயங்களுடன் புலியை நெருங்கிச் சென்று தனது உடலைக் கிழித்து குருதியை வடிய விட்டார், அதைக்குடித்து புலி பசி தணிந்தது.

அப்படி, புலிக்காக தனது உயிரைத் தந்த மன்னரின் நினைவாக ஒரு ஸ்தூபி எழுப்பப்​பட்டது. அது தக்ஷ சீலத்தின் அருகே இருப்பதாக யுவான் சுவாங் கூறுகிறார். இது புத்த ஜாதகக் கதைகளில் ஒன்று. அதன் மாறுபட்ட வடிவம் வேறுவிதமாக கதாசாகரத்தில் கூறப்படுகிறது, ஆனால், இப்படியான ஸ்தூபிஒன்று அசோகர் காலத்தில் அமைக்கப்பட்டது என்ற உண்மை அதில் புதைந்திருக்கிறது. ஆகவே, யுவான் சுவாங்கின் தகவல்களை முழுமையாக மறுக்கவும் முடியாது. அப்படியே ஏற்றுக்கொள்ளவும் முடி யாது.

இன்றும், பௌத்த யோக சூத்திரங்களைப் பற்றி ஆராயும் அனைவரும் யுவான் சுவாங்கின் ஞானத்தையும் அவரது மொழிபெயர்ப்பில் வெளியாகி இருக்கும் புத்தகங்களையும் மிக உயர்வாகவே மதிப்பிடுகிறார்கள். என்றோ சரித்திரத்தில் படித்த யுவான் சுவாங்கும், அல்​பெரூனியும் மட்டுமே யாத்ரீகர்கள் அல்ல. அறிவைத் தேடியும் சமூக மாற்றத்துக்கான போராட்டத்தின் பொருட்டும் பயணம் செய்யும் அனைவரும் மதிக்கப்பட வேண்டிய பயணிகளே.

மண் புழுக்கள்கூட தன் உடலை இழுத்து இழுத்துக்கொண்டு ஓர் இடம்விட்டு மற்றோர் இடம் ஊர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. மனிதர்கள் மட்டும்தான், தன் இருப்பிடத்துக்கு வெளியே உலகம் இல்லை என்று நினைக்​கிறார்கள்.

இன்று, தாமஸ் வாட்டெர்ஸ் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ள யுவான் சுவாங்கின் பயணக் குறிப்புகள் தமிழிலே வாசிக்கக் கிடைக்கின்றன. யுவான் சுவாங்கின் பயணத்தை, அசோகன் முத்துசாமி ஒரு நீண்ட நாவலாக எழுதியிருக்கிறார். 'போதியின் நிழலில்’ என்ற அந்த நூல் யுவான் சுவாங்கை தமிழில் அறிந்து கொள்ள நினைப்ப​வர்களுக்கு ஓர் எளிய வழிகாட்டியாகும்.

அருள்வாக்கு - ஸ்நேகிதன் யார்?



ஜீவராசிகள் எவனுக்கு வசமாம்?
ஸத்யமும் ப்ரியமுமான வசனமுடைய வணக்கமுள்ளவனுக்கு.

தானம் என்பது எது?
கேட்காது கொடுத்தல்.

ஸ்நேகிதன் யார்?
பாவஞ் செய்யாது தடுப்பவன்.

அழகு எது?
சீலம்

வாக்கிற்கு அழகு எது?
ஸத்யம்.

வித்வான்களின் மனதைக் கவர்வது யாது?
நல்ல கவிதையும் புத்தியுள்ள ஸ்த்ரீயும்

முடவன் யார்?
முதிர்ந்த வயதில் தீர்த்த யாத்திரை போகிறவன்.

ஸகல குணங்களையும் அழிப்பது எது?
லோபம் - கருமித்தனம்

பகைவன் எவன்?
காமம்

பொய் சொல்வது எப்பொழுது பாபமல்ல?
தர்மத்தை ரக்ஷிக்கச் சொல்லப்பட்ட பொய் பாபமல்ல.

எது தர்மம்?
நமது வம்சத்தில் பிறந்த பெரியோர்களால் ஸ்நானானுஷ்டான முள்ளவர்கள் அனுஷ்டித்த தர்மமே நமக்கும் தர்மம்.

(ப்ரச்னோத்தர ரத்னமாலை - என்ற நூலிலுள்ள வடமொழி கேள்வி - பதிலை தமிழாக்கம் செய்து 27.1.33-ல் சென்னையில் மகா பெரியவர் பேசியது)
(கேள்வி - பதில் தொடரும்)

உங்கள் தட்டில் உணவா விஷமா - அரிசி

நம்முடைய உணவு முறைகளில் ஏற்பட்டுள்ள பல்வேறு மாற்றங்களை ஆராய நினைக்கும் நாம், முதலாவதாக தொட்டுப் பார்க்க வேண்டிய பெரும்பொருள்... அரிசியே!

ஆம்... உலகில் 60% மக்களின் அன்றாட உணவு அரிசிதான். உலகில் பயிரிடப்படும் தானியங்களில், மக்காச்சோளத்துக்கு அடுத்தபடியாக அதிகமாகப் பயிரிடப்படுவது நெல்தான். மக்காச்சோளத்தின் பெரும்பகுதி விளைச்சல், மனிதர்களைவிட, கால்நடைகளுக்குத்தான் தீவனமாகிறது. ஆகவே, உலகில் மனிதர்களுக்கான தலையாய விளைபொருள்... நெல்தான்!

அரிசியின் பூர்விகம்... மிகவும் சுவாரசியமான சரித்திரம். சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன், முதன் முதலாக சீனாவில்தான் நெல் பயிரிடப்பட்டதாக சரித்திர ஆராய்ச்சியாளர்கள் கருதிவந்தார்கள். சீனாவில் இருந்துதான் இந்தியா, இலங்கை மற்றும் பல நாடுகளுக்கு இது பரவியதாக நம்பிக்கை.

ஆனால், அரிசியின் உண்மையான பூர்விகம்... இந்தியாதான்- அதுவும் நம் தமிழகம்தான் என்ற உண்மை, நமக்கு எவ்வளவு பெருமையான விஷயம்?!

அரிசி என்ற வார்த்தை, ஆங்கிலத்தில் 'ரைஸ்' (rice) என்று அழைக்கப்படுகிறது. இதுவே கிரேக்க மொழியில் 'ஆரிஸா' (oryza) என்றும், அரபி மொழியில் 'அர்ஸ்' (urz) என்றும்     அழைக்கப்படுகிறது. இப்போது பாருங்கள்... அரிசி -     ஆரிஸா - அர்ஸ் - ரைஸ்! ரைஸ் என்ற வார்த்தையின் பூர்விகம் புரிகிறதா?


இது வெறும் வார்த்தை ஜாலம் மட்டும் இல்லை. சங்க காலங்களுக்கு  முந்தைய காலத்தில், முன்தோன்றிய மூத்த இலக்கியமான தொல்காப்பியத்தில், நெல்லைப் பற்றிய குறிப்புகள் ஏராளமாகக் காணப்படுகின்றன. தொல்காப்பியத்தின் காலம் சுமார் கி.மு 500 முதல் 1,400 ஆண்டுகள் வரை என்று சரித்திர ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். அப்படியானால், சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் நெல்லின் ஆதிக்கம் இருந்தது என்பது விளங்கும்.

தொல்காப்பியர் ஒரு பெரிய தமிழ்ப் புலவர் என்று மட்டுமே நாம் அறிவோம். ஆனால், இன்றைய விஞ்ஞான முறை விவசாயத்துக்கு ஈடாக மரபியல் (genetics) பற்றியெல்லாம் அப்போதே பேசிய பெரும் 'இயற்கை விஞ்ஞானி' அவர் என்பதை, மருதமலை முருகன் என்ற ஆராய்ச்சியாளரின் ஆராய்ச்சி முடிவுகள் காட்டுகின்றன.

நிலத்தை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று ஐந்து வகைகளாகப் பிரித்து, அவற்றுக்கான இலக்கணத்தையும் பிறவற்றையும் விரிவாகக் கூறும் தமிழ் இலக்கியப் பாங்கு உலகில் வேறு எங்கும் காணமுடியாத அதிசயம். தொல்காப்பியம் தவிர, சிலப்பதிகாரம், மணிமேகலை, அகநானூறு, புறநானூறு, பதிற்றுப்பத்து - இன்னும் பல சங்க இலக்கியங்களிலும் அரிசியைப் பற்றிய செய்திகள் நிறைய உள்ளன.

சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூரில் காணப் படும் கல்வெட்டுகளில், 'துவாபர யுகத்தில்... இந்திரனிடமிருந்து பாண்டிய மன்னன் அரிசியைப் பெற்றான்' என்ற செய்தி உள்ளது. கலியுகத்துக்கு முந்தையது துவாபரயுகம். இது, சுமார் 8 லட்சத்து 64 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலம் என்பார்கள். அப்படியானால், தமிழர்களின் அரிசிக்கு என்னதான் வயது?
இவற்றையெல்லாம்விட, சமீபத்தில் திருநெல்வேலிக்கு அருகேயுள்ள ஆதிச்சநல்லூரிலும், பழனி அருகே உள்ள பொருந்தல் என்ற கிராமத்திலும் நடத்திய அகழ்வாராய்ச்சியில், பேராசிரியர் ராஜன் கண்டுபிடித்த உண்மைகள் பிரமிப்பானவை. அங்கு கிடைத்த முதுமக்கள் தாழி ஒன்றின் உள்ளே, காற்றுப்புகாத மண்பாண்டம் ஒன்றில் இரண்டு கிலோ வைரவ சம்பா நெல் புத்தம் புதிதாக இருந்தது. அதை அமெரிக்காவில்  உள்ள ஓர் ஆராய்ச்சிக் கூடத்துக்கு அனுப்பிய தில், அந்த நெல் கி.மு.480-ம் வருடத்தைச் சேர்ந்தது என்று முடிவு தெரிவிக்கப்பட்டது. 2,500 வருடங்கள் பூச்சி மருந்துகளின்றி கெட்டுப்போகாமல் பாதுகாக்கும் பண்டைய தமிழனின் தொழில்நுட்பம் எத்தனை வியப் பானது?!

ஆதிச்சநல்லூர் என்ற பெயரையே சிறிது ஆராய்வோம். அதன் உண்மையான பெயர் ஆதிசெந்நெல்லூர் ஆதி + செந்நெல் + ஊர். செந்நெல் விளையும் பூமி என்றுதானே பொருள்? திருநெல்வேலி மட்டும் என்னவாம்? நெல் பயிரால் சூழப்பட்ட ஊர் என்றுதானே பொருள்? இந்த ஊரின் முக்கியக் கடவுள் நெல்லையப்பர் அல்லவா?!

பண்டைய தமிழர்களின் கலாசாரங்களும் விழாக்களும் அரிசியை மையப்படுத்தியே அமைந்தன. சிலப்பதிகாரம் கூறும் இந்திர விழாவும், தை மாத மகர சங்கராந்தியன்று இல்லந்தோறும் படைக்கப்படும் பொங்கலும் நெல் விளைச்சலைக் கொண்டாடும் பண்டிகைதான். இன்றைய திருமண விழாக்களில், மணமக்களை வாழ்த்துவதற்கு 'அட்சதை’யாகத் தெளிப்பது, அரிசியைத்தானே?!

பல்வேறு வகையான அரிசிகளைப் பற்றிய குறிப்புகள் நம் இலக்கியங்களில் நிறைய உள்ளன. மூங்கில் அரிசி முதல் யானை நின்றால்கூட மறைக்கும் அளவு உயர வளரும் மலை நெல்/யானை நெல் வரை பல பாடல்கள். கடைசியாக, உலகெங்கும் பேசப்படும் மூன்று வகை அரிசிகள் - கறுப்பு, சிவப்பு, வெள்ளை ரகங்கள் தமிழகமெங்கும் விளைந்தன.

1528-ம் வருடத்திய 'பழனி செப்பு பட்டயத்தில்’ சுமார் 12,000 வகை நெல் பயிர்கள் உண்டென்றும், அவற்றில் சுமார் 100 வகை பயிர்கள் முக்கியமானவை என்றும் குறிப்புகள் உள்ளன.

அந்தப் பயிர்கள் எல்லாம் இப்போது எங்கே? நிச்சயமாக அவற்றைக் கடல் எதுவும் கொள்ளவில்லை. 12,000 வகைகள் 100 ஆகி, அந்த நூறில் கறுப்பு, சிவப்பு, வெள்ளை என்று மூன்று ஆகி, கடைசியில் வெள்ளை - அதிலும் வெள்ளையிலும் வெள்ளை என்ற இன்றைய ஒற்றை இலக்கில் வந்து நிற்பதன் மர்மம் என்ன?!