Thursday, October 30, 2014

`பெரிய’ பலன் தரும் சின்ன வெங்காயம்

தினமும் சாப்பிடவேண்டிய காய்கறிகளில் சின்ன வெங்காயத்துக்குத்தான் முதல் இடம். ஆனால், உரிக்க சோம்பல்பட்டு பலரும் பெரிய வெங்காயத்தையே நாடுகின்றனர்.  உணவில் ருசியைக் கூட்டி, வாசனையைச் சேர்க்கும் சின்ன வெங்காயம் அதிக மருத்துவக் குணங்களைக்கொண்டது.
 சின்ன வெங்காயத்தை 15 நாட்களுக்கு ஒருமுறை நெய் அல்லது எண்ணெயில் வதக்கி உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் என்றும் இளமையுடன் இருக்கலாம்.
  உடல் சூட்டைக்  குறைக்கவல்லது வெங்காயம். பழைய சாதத்தில் மோர் விட்டு, நான்கு சின்ன வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சாப்பிடலாம்.  உடலின் வெப்பம் தணியும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.  ரத்த ஓட்டத்தை சீராக்கும்.
  கணையத்துக்கு உள்ளே இருக்கும் செதிலில் பசை அல்லது அழுக்கு சூழப்பட்டு இருந்தால், இன்சுலின் சுரக்காது. இதனை இயல்பான நிலைக்கு மாற்றி சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க சின்ன வெங்காயம் உதவுகிறது.
  கல்லீரலில் இருக்கும் பித்தத் திரவம் அதிகமாக சுரந்தால், காமாலை வரும். இந்த பித்தத் திரவத்தை இயல்பான நிலையில் சுரக்கவைப்பது சின்ன வெங்காயம்.
  வயிற்றுப்புண், வெள்ளைப்படுதல், கண் நோய் போன்ற பாதிப்பிலிருந்து விடுபட, தினமும் உணவில் சின்ன வெங்காயம் சேர்ப்பது அவசியம். 
  வடகம் கெட்டுவிடாமல் பதப்படுத்திப் பாதுகாக்க, சின்ன வெங்காயம் சேர்த்துத் தயாரித்தால் போதும்.
  அம்மை நோய் வராமல் தடுக்கவும்  வந்தால் சீக்கிரம் குணமாகவும் சின்ன வெங்காயம் உதவுகிறது. ஆண் பிள்ளைகளுக்கு அம்மை வந்தால், அதன் பிறகு இனப்பெருக்க மண்டலம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதனைத் தடுக்க அம்மை ஏற்பட்ட நாளில் இருந்து மூன்று மாதங்கள் சின்ன வெங்காயத்தை உணவில் சேர்த்துவந்தால் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம். 

‘18 வருஷ வழக்கை 18 மாசத்துல உடைக்கணும்!’ கார்டன் சேலஞ்ச்

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜாமீன் பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து  விடுதலையான ஜெயலலிதா, அக்டோபர் 18-ம் தேதி மாலை சரியாக 6 மணிக்கு போயஸ் கார்டன் வீட்டுக்குள் நுழைந்தார். 4.55 மணிக்கே, சென்னை விமான நிலையத்தை விட்டுப் புறப்பட்டுவிட்டவருக்கு வழியெங்கிலும் வரவேற்பு. சலனம் இல்லாத புன்னகையின் மூலம், வரவேற்பையும் வாகனத்தின் மீது தூவப்பட்ட மலர்களையும் ஏற்றுக்கொண்ட ஜெயலலிதாவின் மனதில், பரப்பன அக்ரஹாரா சிறைக்குள் இருந்த 21 நாட்கள் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தின என யாருக்கும் தெரியாது.
‘ஆட்சியிலும் அதிகாரத்திலும் தனக்கு நெருக்கமானவர்களாக, தனக்கு விசுவாசமானவர்களாகக் காட்டிக்கொண்ட அனைவரையும் தூக்கி எறிந்துவிட்டு, 18 வருடப் பழியை 2016 தமிழகச் சட்டமன்றத் தேர்தல் பரபரப்பு தொடங்கும் 18 மாதங்களுக்குள்  உடைக்க ஜெயலலிதா முடிவுசெய்துள்ளார்’ என்கிறார்கள்.
இத்தனை வருடங்களாகத் தன் தூக்கத்தைத் தொலைக்கச் செய்து துரத்திய வழக்கில், சட்டத்தின் அத்தனை நுணுக்கங்களையும் பரிசோதித்துப் பார்த்தும் விடுதலை பெற முடியாமல், குற்றவாளியாகி, முதலமைச்சர் நாற்காலியை இழந்து, எம்.எல்.ஏ பதவியும் பறிக்கப்பட்டு, 66 வயதில் 21 நாட்கள் சிறைக்குள் அடைபட்டுக் கிடந்தபோது சூழ்ந்த தனிமையும் வேதனையும் அவரை இந்த முடிவை எடுக்க வைத்துள்ளது.
தீர்ப்பு வெளியாவதற்கு முதல் நாள், அதாவது செப்டம்பர் 26-ம் தேதி இரவு வரை, தன்னைச் சுற்றி இருந்தவர்கள், உயர் போலீஸ் அதிகாரிகள், உளவுத் துறை அதிகாரிகள், வழக்குரைஞர்கள் என அத்தனை பேரிடமும் பல கட்ட ஆலோசனைகள் நடத்தியிருந்தார் ஜெயலலிதா. தீர்ப்பின் முடிவு நமக்குப் பாதகமாக வரும் என்றால், வேறு வழி யோசிக்கலாம் என்றும் சொல்லியுள்ளார். ஆனால், சுற்றி இருந்த அனைவரும், ஒரே குரலில் கோரஸாக, ‘நாளை வரப்போகும் தீர்ப்பு முழுக்க முழுக்க நமக்குச் சாதகமாகத்தான் இருக்கும். இந்த வழக்கில் நிச்சயம் நீங்கள் விடுதலை ஆவீர்கள். தைரியமாகச் செல்லுங்கள்’ எனச் சொன்னார்களாம்.
ஜெயலலிதாவும் அந்த நம்பிக்கையிலேயே செப்டம்பர் 27-ம் தேதி காலை, போயஸ் கார்டன் வீட்டை விட்டுக் கிளம்பினார். ‘இந்த 18 வருடத் தலைவலி இன்றோடு ஒழியப்போகிறது. இனிமேல்தான் எனக்கு நிம்மதி’ எனத் தெம்பாகவே புறப்பட்டார். வழியில் கோட்டூர்புரத்தில் இருக்கும் விநாயகரை வணங்கிவிட்டு நிம்மதியான மனநிலையோடுதான் விமானம் ஏறினார். ஆனால், ‘நீங்கள் குற்றவாளி’ என நீதிபதி குன்ஹா தீர்ப்பு சொன்னபோதுதான், சுற்றி உள்ளவர்களால் தான் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்பது புரிந்துள்ளது.

சிறையில் அடைக்கப்பட்ட நாளில், ‘பெங்களூரில் இருந்து தனக்குக் கொடுக்கப்பட்ட தகவல்கள் எப்படி வந்தன, அதில் உண்மை உள்ளதா?’ என்பதைக் கேட்டு அறிந்துள்ளார் ஜெயலலிதா. அப்போதுதான் தன்னைச் சுற்றி இருந்தவர்கள், தன்னுடைய விவகாரத்திலேயே எவ்வளவு அசட்டையாக இருந்துள்ளனர் என்பது புரிந்துள்ளது. இந்த வழக்கு பற்றி விசாரிக்க தமிழகக் காவல் துறை அதிகாரிகள் செய்த அதிகபட்ச விஷயம், பெங்களூரு உளவுத் துறை அதிகாரிகளிடம் பேசியதுதான். பெங்களூரு உளவுத் துறைக்கு, இந்த வழக்கின் விவரங்களைத் தெரிந்துகொள்ள இருந்த ஒரே சோர்ஸ் பவானி சிங் மட்டும்தான். அதைத் தாண்டி அவர்களால், நீதிபதி குன்ஹாவை நெருங்க முடியவில்லை. பவானி சிங்கிடம் இருந்தும் உருப்படியான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. கிடைத்த தகவல்களை அவர்கள் தமிழக உளவுத் துறையிடம் பகிர்ந்துள்ளனர். அவர்கள் அதையே விதவிதமாக தோட்டத்தில் ஒப்பித்துள்ளனர். அதன் விளைவு, இப்போது 30 ஐ.பி.எஸ் அதிகாரிகளை ஒட்டுமொத்தமாக இடமாற்றம் செய்யும் பட்டியல் தயார்.
வழக்குரைஞர்கள் செய்த குளறுபடிகள் தனி அத்தியாயம். செப்டம்பர் 29-ம் தேதி நீதிபதி ரத்னகலா வழக்கை விசாரணைக்கு எடுப்பதற்கு சிறிது நேரத்துக்கு முன்புதான் உயர் நீதிமன்றத்தில் வந்து மனுக்களை டிக்டேட் செய்தது ஜெயலலிதா தரப்பு. அதுவும் அரசுத் தரப்பு வழக்குரைஞர் யார் என்றே தெரியாமலும் போய் நின்றார்கள். நீதிபதி ‘அரசுத் தரப்பு வழக்குரைஞர் யார்?’ எனக் கேட்டபோது எல்லோரும் பவானி சிங்கைப் பார்க்க, அவர் தனக்கு அப்படி ஓர் உத்தரவே வரவில்லை எனச் சொன்னது, அதையடுத்து நீதிபதி அன்றைக்கு வழக்கை ஒத்திவைத்தது போன்றவற்றைக் கேட்டு, கொந்தளித்துப்போனார் ஜெயலலிதா. இந்த வழக்கு பற்றி தான் கேட்டபோது எல்லாம், ‘நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்’ எனச் சொல்லிவிட்டு, உருப்படியாக யாரும் ஒன்றும் செய்யவில்லை என்ற கோபம் ஜெயலலிதாவுக்குக் கடுமையாக உள்ளது. இந்த மனக்கசப்பை உண்டாக்கிய அனுபவங்களால், இனி தகுதியானவர்கள் மட்டுமே கட்சி மற்றும் ஆட்சிப் பொறுப்புகளில் நியமிக்கப்படுவார்கள். கட்சிக்காரர்கள், விசுவாசிகள் என்ற தகுதியை மட்டும் வைத்துக்கொண்டு இனி யாரும் அந்தப் பதவிக்கு வந்துவிட முடியாது.
போயஸ் கார்டன் வீட்டில் முடங்கிக்கொண்டு, கட்சியையும் ஆட்சியையும் பின்னால் இருந்து இயக்குவதைப் பற்றி ஜெயலலிதா யோசிக்கக்கூட இல்லை. காரணம், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாடு முழுவதும் சுழன்றடித்த மோடி அலையை எதிர்த்தே, 42 சதவிகிதம் வாக்குகளைப் பெற்று வென்றவர். அந்தத் தேர்தலில் தி.மு.க-வின் வாக்கு சதவிகிதம் 22 மட்டும்தான். கைது, தண்டனை போன்ற விவகாரங்கள், அ.தி.மு.க-வின் வாக்கு சதவிகிதத்தை சற்றே குறைத்தாலும், அதனால் பாதிப்பு இருக்காது. முன்கூட்டியே தேர்தல் வைத்தாலும் தனி மெஜாரிட்டியில் மீண்டும் அ.தி.மு.க ஜெயித்துவிடும். ஆனாலும், முதலமைச்சர் பதவி மூலம் அதிகாரம் நேரடியாக தன்னிடம் இருக்க வேண்டும் என்பதை ஜெயலலிதா திட்டவட்டமாக விரும்புகிறார். அதற்காக விரைவில் சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை பெற வேண்டும். அதற்கான வேலைகள் அனைத்திலும் கடந்த காலத்தில் நடந்ததுபோல் மீண்டும் ஏமாந்துவிடக் கூடாது என உஷாராக இருக்கிறார். உச்ச நீதிமன்ற நிபந்தனைகளைப் பின்பற்றுவதைக் கண்காணிக்க தனியாக ஓர் அணி அமைக்கப்பட உள்ளது. இவ்வளவு உள்ளே நடந்துகொண்டிருந்தாலும், ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டைச் சுற்றி,  புயலுக்குப் பின் நிலவும் கனத்த மௌனம்தான் உறைந்து நிற்கிறது.
கட்சிக்காரர்களில் ஓ.பன்னீர் செல்வம், விஜயபாஸ்கர், செந்தில் பாலாஜி என்ற மூன்று பேரைத் தவிர, மற்ற யாரையும் அவர் சந்திக்கவில்லை. அதனால் இந்தக் கனத்த மௌனத்துக்குப் பிறகு நடக்கப்போகும் பூகம்பத்தை யாராலும் கணிக்க முடியவில்லை!

ஜாமீனில் உள்ள சாதகமும் பாதகமும்…
ச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து, நீதிபதிகள் மனோஜ் பி.லோகுர், ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு ஜெயலலிதாவுக்கு ஜாமீனில் விடுதலை வழங்கி உள்ளது. ஆனால், அதில் ஜெயலலிதாவுக்கு சாதக மற்றும் பாதக அம்சங்கள் சரிசமமாகவே இருக்கின்றன.
சாதகமான அம்சங்கள்:
டிசம்பர் 18-ம் தேதி வரை தண்டனையை நிறுத்திவைத்தது. மேல்முறையீட்டுக்கு ஜெயலலிதா தரப்பு கேட்ட 6 வார கால அவகாசத்தைவிட கூடுதலாக இரண்டு வாரங்கள் கொடுத்து 8 வார கால அவகாசம் வழங்கி இருப்பது. மேல்முறையீட்டு விசாரணைக்கு ஜெயலலிதா நேரில் வரத் தேவை இல்லை. அவருடைய வழக்கறிஞர்கள் வந்தாலே போதும் எனச் சொல்லியிருப்பது.
பாதகமான அம்சங்கள்:
டிசம்பர் 17-ம் தேதிக்குள் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும். அந்தத் தேதிக்குள் வழக்கின் 35 ஆயிரம் பக்க ஆவணங்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். இதில் ஒரு நாள் தாமதம் ஏற்பட்டால்கூட ஜாமீனை ரத்து செய்வோம் எனக் கண்டிப்பு காட்டியிருப்பது.
இந்த வழக்கின் மனுதாரர்கள் சுப்ரமணியன் சுவாமி, க.அன்பழகன் உள்ளிட்டோருக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் ஏற்படுத்தக் கூடாது. அப்படி ஏற்பட்டதாக அவர்கள் நீதிமன்றத்தை அணுகினால், அதை நீதிமன்றம் பொறுத்துக்கொள்ளாது.
மேல்முறையீட்டை ஒரு நாள்கூட ஒத்திவைக்க முயற்சிக்கக் கூடாது!
நன்றி-விகடன்

வளமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும் வருமான வரிச் சலுகைகள்! இளைஞர்களுக்கான சூப்பர் வழிகாட்டி…

இந்தியாவில் வருமான வரிச் செலுத்துபவர்களில் பாதிக்கு மேலானவர்கள், வருமான வரிச் சலுகையை முறையாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என ஆன்லைன் மூலம் வரிக் கணக்கு தாக்கல் செய்ய உதவும் டாக்ஸ்ஸ்பானர் டாட் காம் (Taxspanner.com) நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதுவும், அனைவருக்கும் அதிகம் தெரிந்த 80சி பிரிவில்கூட முழுமையாக வரிச் சலுகையை பயன்படுத்திக் கொள்ளாமல் இருப்பது ஆச்சர்யமான விஷயம்தான்.
வருமான வரிச் சலுகையை அதிகமாகப் பயன்படுத்தாதவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர்கள் நம் இளைஞர்கள்தான். ஆண்டுக்கு சுமார் 10 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கும் 25-லிருந்து 30 வயது வரை உள்ள இளைஞர்கள் கடந்த நிதி ஆண்டில் சராசரியாக 12% வருமான வரி கட்டி இருக்கிறார்கள். இதுவே, 35 வயதானவர்கள் 6% மட்டுமே வரி கட்டி இருக்கிறார்கள்.
இவ்வளவுக்கும் 25-லிருந்து 30 வயது வரை உள்ள இளைஞர்கள், படித்தவர் களாக, கைநிறையச் சம்பளம் வாங்குப வர்களாக இருக்கிறார்கள். பணியில் பிஸியாக இருக்கும் இந்த இளைஞர்கள் வருமான வரியைச் சரியாக பயன்படுத்திக்கொள்ளாமல் இருக்க பல காரணங்கள்.
இன்றைய இளைஞர்களில் பலருக்கு  பணத்தின் அருமை புரிவதில்லை. லேட்டஸ்ட் செல்போன், புதுப்புது ஆடைகள், பொழுதுபோக்கு, வாகனங்கள் என ஜாலியாக இருப்பது தான் வாழ்க்கை என்று நினைக்கிறார்கள். இதனால் சேமிப்பையும் முதலீட்டைப் பற்றியும் அவர்கள் சிந்தித்துப் பார்ப்பதே இல்லை.
தவிர, வருமான வரிச் சலுகை பற்றி அவர்களுக்கு யாரும் தெளிவாகச் சொல்லித் தருவதில்லை. வருமான வரிச் சலுகைகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் நிறைய லாபம் சம்பாதிக்க முடியும் என்பதை இன்றைய இளைஞர்களுக்கு எடுத்துச் சொன்னால், அவர்கள் அதைப் பயன்படுத்திக் கொள்ள தவறமாட்டார்கள்.
இன்னும் சில இளைஞர்கள் வருமான வரிச் சலுகை பெறுவதற்காக எந்த முயற்சியும் எடுக்காமல், வரி கட்டுவதைப் பெருமையாக நினைக்கிறார்கள். வரி கட்டுவது நமது கடமைதான். ஆனால், அரசாங்கமே நமக்கு அளித்த வரிச் சலுகையைப் பயன்படுத்திக்கொண்டு, அதுபோக உள்ள வரியைக் கட்டுவதே புத்திசாலித்தனம். இனியாவது இன்றைய இளைஞர்கள் தங்களுக்கான வரிச் சலுகைகளை சிந்தாமல் சிதறாமல் பயன்படுத்திக் கொள்வது எப்படி என்று பார்ப்போம்.
பி.எஃப்!
வருமான வரிச் சேமிப்புக்கான முதலீடு ஒன்றும் கம்பசூத்திரம் இல்லை. அது இரண்டாம் வகுப்பு வாய்ப்பாடு தான். கீழே சொல்லப்போகிற விஷயங்களைத் தெரிந்துவைத்துக் கொண்டால் போதும், உங்களுக்கான வருமான வரிச் சலுகையை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஓர் இளைஞன் முதல் மாதத்தில் வாங்கும் சம்பளத்தில் இருந்தே எதிர்கால சேமிப்புக்கான தொகை  பிடிக்கப்படு கிறது. அதாவது, வாங்கும் சம்பளத்தில் (அடிப்படை மற்றும் பஞ்சப்படி) 12% பிராவிடெண்ட் ஃபண்ட் (பிஎஃப்) ஆகப் பிடிக்கப்படுகிறது. இதே அளவு தொகையை  நிறுவனமும் பணியாளரின் பிஎஃப் கணக்கில் செலுத்தும்.
அதிகச் சம்பளம் வாங்கும் சிலர், நிறுவனத்தில் பிஎஃப் பிடிக்க வேண்டாம்; நிறுவனம் தன் பங்களிப்பாகப் போடும் தொகையையும் சேர்த்துச் சம்பளமாகத் தந்துவிடுங்கள் என்று எழுதித் தந்துவிடுகிறார்கள். இது தவறான அணுகுமுறை. பிஎஃப் என்பது ஓய்வுக்காலத்துக்கான சேமிப்பு என்பதால், அந்த முதலீட்டை தவிர்ப்பது நல்லதல்ல.
பிஎஃப். முதலீட்டுக்கு வரிச் சலுகை கிடைப்பதோடு, அதில் சேரும் தொகைக்குக் கூட்டு வட்டியும் வழங்கப் படுகிறது. மேலும், பிஎஃப் பிடிக்கத் தொடங்கி ஐந்தாண்டுகளுக்குப் பிறகு திருமணம், கல்வி, வீடு வாங்க எனப் பல தேவைக்கு இதிலிருந்து பணம் எடுத்துக்கொள்ள முடியும். மேலும், பணி நிறைவுக்குப் பிறகு, கோடி ரூபாய்க் கிடைத்தாலும் அதற்கு வரி கட்டத் தேவை இல்லை. ஒரு சின்ன உதாரணம் மூலம் பார்த்தால், பிஎஃப் தொகை எப்படிப் பெருகுகிறது என்பதைப் பார்க்கலாம்.
25 வயதான ஒருவரின் அடிப்படை சம்பளம் மற்றும் பஞ்சப்படி சேர்த்து ரூ.25,000-க்கு 12% பிஎஃப் பிடிக்கப்படுகிறது. நிறுவனம் தன் பங்காக 12% தொகை போடுகிறது. ஆண்டுக்கு 10 சதவிகித சம்பள உயர்வு என்கிற அடிப்டையில் ஒருவருக்கு 58 வயது வரை பிஎஃப் பிடிக்கப்படுகிறது. இதற்கு 8.75% கூட்டு வட்டி வழங்கப்படுகிறது என்றால், பணி ஓய்வுபெறும்போது மொத்தம் ரூ.4.10 கோடி கிடைக்கும். இந்தத் தொகைக்கு நீங்கள் வரி எதுவும் கட்டத் தேவை இல்லை. இளைஞர்களே இனி பிஎஃப் முதலீடு வேண்டாம் என்று சொல்லமாட்டீர்கள்தானே?
அடுத்து, இளைஞர்கள் வருமான வரி முதலீட்டுக்கான சேமிப்பை ஆரம்பிக்கும்முன் வரிச் சலுகை கிடைக்கும் இரு செலவுகளை அவசியம் மேற்கொண்டாக வேண்டும். அவை, லைஃப் மற்றும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிக்கான செலவாகும்.
அதிக இன்ஷூரன்ஸ் பாலிசிகள் வேண்டாம்..!
இளைஞர்கள் வரிச் சேமிப்புக்காக அதிகமாக முதலீடு செய்யவில்லை என்கிற அதேநேரத்தில், தேவை இல்லாமல் அதிக எண்ணிக்கையில் ஆயுள் காப்பீடு பாலிசியை எடுத்து வைத்திருக்கிறார்கள். இளைஞர்களுக்கு அதிக நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களின் நண்பர்களில் பலர் இன்ஷூரன்ஸ் ஏஜென்ட்டுகளாக வேலை பார்க்கிறார்கள் அல்லது பகுதி நேர ஏஜென்ட்டுகளாக இருக்கிறார்கள். அவர்கள், ‘மச்சி டார்கெட் கம்ப்ளீட் பண்ணனும், ஒரு இன்ஷூரன்ஸ் பாலிசி போடேன்” என்று கேட்டதும், கொஞ்சமும் யோசிக்காமல் சரி என்று சொல்லிவிடுவார்கள். இதேபோல் பல நண்பர்கள் கேட்க ஓரிரு ஆண்டுகளில் கையில் டஜன் கணக்கில் பாலிசிகள். ஆனால், இந்த அனைத்து பாலிசிகளையும் சேர்த்தால், அவர்களின் ஆயுளுக்குப் போதிய கவரேஜ் இருக்கிறதா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
காரணம், நண்பர்களின் வற்புறுத்த லால் எடுக்கப்பட்டிருக்கும் அனைத்து பாலிசிகளும் ஆயுள் காப்பீடு கவரேஜ் மற்றும் முதிர்வு தொகை கொண்ட எண்டோவ்மென்ட் பாலிசிகள் அல்லது பங்குச் சந்தை சார்ந்த யூலிப் பாலிசி களாக இருக்கின்றன. இவற்றுக்குப் பதில் முற்றிலும் இன்ஷூரன்ஸ் கவரேஜ் அளிக்கும் (முதிர்வு தொகை எதுவும் இல்லா) டேர்ம் பிளான் எடுத்திருந்தால், பிரீமியம் மிகவும் குறைவாக இருக்கும், அதிக கவரேஜும் கிடைக்கும்.
அடுத்து முக்கியமான விஷயம், எவ்வளவு தொகைக்கு ஆயுள் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்க வேண்டும் என்கிற விவரம் பலருக்கு தெரிவதில்லை. எண்டோவ்மென்ட் பாலிசிகள் முதலீட்டுத் திட்டமாகப் பார்க்கப்படுவ தால், அதில் ஒருவரால் பிரீமியம் கட்டக் கூடிய அளவுக்குப் பாலிசிகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதற்கு வருமான ஆதாரம் எதுவும் கேட்கப்படுவதில்லை.
மேலும், மருத்துவப் பரிசோதனையும் பெரிதாகக் கிடையாது. டேர்ம் பிளான் பாலிசியில் அப்படி இல்லை. பாலிசி எடுப்பவருக்கான வருமான ஆதாரம் மற்றும் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட வேண்டும்.
வேலைக்குச் சேர்ந்து 2 ஆண்டுகள் ஆன 25 வயது இளைஞரின் மாத சம்பளம் 40,000 ரூபாய் என்றால், அவரின் ஆண்டுச் சம்பளம் ரூ.4.80 லட்சம். ஆண்டுச் சம்பளத்தைப்போல் குறைந்தபட்சம் சுமார் 10 மடங்குக்கு அதாவது, 48 லட்சம் ரூபாய்க்கு லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துக் கொள்வது நல்லது. அவர் 50 லட்சம் ரூபாய்க்கு எண்டோவ்மென்ட் பாலிசி எடுத்தால், ஆண்டு பிரீமியம் ஏறக்குறைய ரூ.2.38 லட்சம் கட்ட வேண்டியிருக்கும். இதுவே, அவர் டேர்ம் பிளான் எடுத்தால், ஆண்டு பிரீமியமாக ரூ.15,000 மட்டும் கட்டினால் போதும். அதுவே, ஆன்லைனில் டேர்ம் பிளான் எடுத்தால் பிரீமியம் ரூ.5,150 மட்டுமே.
ஆயுள் காப்பீடு குறித்து இளைஞர் களிடம் இருக்கும் தவறான கருத்து ஒன்று மாற்றப்பட வேண்டும். நான்தான் நல்ல ஆரோக்கியமாக இருக்கிறேனே, நான் சாலையில் நன்றாகக் கவனித்துதானே வாகனம் ஓட்டுகிறேன், நான் ஏன் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்கிறார்கள். சாலையில் நீங்கள் சரியாகத்தான் வாகனம் ஓட்டி செல்கிறீர்கள். பின்னால் வரும் வாகனம் அல்லது எதிரில் வரும் வாகனம் நிலைத் தடுமாறி இடித்து, உங்களுக்கு ஏதாவது ஆகிவிட்டால், உங்களை நம்பி இருக்கும் பெற்றோர், மனைவி மற்றும் தம்பி, தங்கைகளின் எதிர்காலம் என்னாவது?
ஆயுள் காப்பீடு பாலிசிக்கு கட்டும் பிரீமியத்தில் நிபந்தனைக்கு உட்பட்டு 80சி பிரிவின் கீழ் ஓராண்டில் ரூ.1.5 லட்சம் வரைக்கும் வரிச் சலுகை பெற முடியும்.
இதேபோல்தான் ஹெல்த் இன்ஷூரன்ஸ் குறித்த அவர்களின் பார்வையும் தவறானதாக இருக்கிறது. நான்தான் நல்ல திடகாத்திரமாக இருக்கிறேனே, எனக்கு எதுக்கு மருத்துவ பாலிசி என்கிறார்கள்.
இன்றைக்கு உணவுப் பழக்கம் மாற்றம் மற்றும் பாரம்பரிய காரணங் களால் 25 வயது இளைஞனுக்குக்கூட மாரடைப்பு வந்து, ஆளை சாய்த்து விடுகிறது. மேலும், சாலை விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ளவும் இந்த ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி உதவுகிறது. பொதுவாக, ஒருவரின் ஆண்டு வருமானத்தைப்போல் 1.5 மடங்குக்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துக் கொள்ள வேண்டும் என்பார்கள். இருந்தாலும் வசிக்கும் நகரம், அங்குள்ள மருத்துவச் செலவையும், ஒருவருக்குப் பாரம்பரியமாக ஏற்படக்கூடிய பாதிப்பையும் கவனித்து ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துக் கொள்வது நல்லது. உதாரணத்துக்கு, திருநெல்வேலியில் வசிப்பவர் சென்னையில் வசிப்பவரைவிடக் குறைவான தொகைக்கு பாலிசி எடுத்துக் கொண்டால் போதும்.
லைஃப் இன்ஷூரன்ஸ் என்பது வருமானம் ஈட்டும் நபர்களுக்கானது என்பதால், அந்த பாலிசியை வேலை பார்க்கும் இளைஞர்கள் மட்டும் எடுத்துக் கொண்டால் போதும். ஹெல்த் இன்ஷூரன்ஸ் என்பது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் அவசியம் எடுக்க வேண்டிய பாலிசியாகும். அம்மா, அப்பா, சகோதர சகோதரிகளுக்கு மருத்துவச் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றால் நீங்கள் கையிலிருந்து தான் செலவு செய்யவேண்டி இருக்கும். அவர்களுக்கும் சேர்த்து ஹெல்த் பாலிசி எடுக்கப்பட்டிருக்கும்பட்சத்தில் சில ஆயிரம் ரூபாய் பிரீமியத்தில் லட்சம் ரூபாய்க்கான மருத்துவச் சிகிச்சையைப் பெற்றுவிட முடியும்.
குடும்பத்தினருக்கு எடுக்கும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிக்கான பிரீமியத் தொகையை வரிதாரர் தனது சம்பளத் திலிருந்து கழித்துக்கொள்ள முடியும். தனிநபர் மற்றும் அவரின் குடும்பத்தி னருக்கு சேர்த்து ஆண்டுக்கு கட்டும் பிரீமியத்தில் 15,000 ரூபாய் வரைக்கும் வரிச் சலுகை கிடைக்கும். வரிதாரர் அவரது பெற்றோருக்கு கட்டும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பிரீமியத் தொகைக்குத் தனியாக ரூ.15,000 வரைக்கும் (மூத்த குடிமக்களாக இருந்தால் 20,000 வரை) வரிச் சலுகை பெற முடியும். குடும்ப உறுப்பினர்களுக்குச் செய்யப்படும் மருத்துவப் பரிசோதனைகளுக்கு (ஹெல்த் செக்கப்) ஓராண்டில் ரூ. 5000 வரை வரிச் சலுகை பெறலாம். இது 15,000 ரூபாய் வரம்புக்குள்ளே வரும்.
கல்விக் கடன் வட்டி..!
இளைஞர்கள் அவர்களின் மேல் படிப்புக்குக் கல்விக் கடன் வாங்கித் திரும்பக் கட்டிவந்தால், அதற்கான வட்டிக்கு வரிச் சலுகை பெற முடியும். அடுத்து, இரு பிள்ளைகளின் கல்விச் செலவுக்கு வரிச் சலுகை இருக்கிறது. இது 80சி பிரிவின் கீழ் வரும். 25 முதல் 35 வயதுக்குக்கு உட்பட்ட இளைஞர் ஒருவரின் ஆண்டு வருமானம் ஓராண்டில் 2.5 லட்சம் ரூபாயைத் தாண்டும் போது, அவர் வருமான வரி கட்ட வேண்டி இருக்கும். பிஎஃப், லைஃப் மற்றும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பிரீமியத் தொகைகள், பிள்ளைகளின் கல்விச் செலவு, கல்விக் கடன் வட்டி போன்றவைக் கழிக்கப்பட்ட பிறகும் வருமானம் ரூ.2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கும்பட்சத்தில், வரிச் சலுகைக்கான முதலீட்டின் மீது பார்வையைச் செலுத்தலாம்.
பங்குச் சந்தையில் பணம்..!
இளைஞர்கள் என்கிறபோது அவர்கள் கணிசமாக ரிஸ்க் எடுக்கலாம். அந்தவகையில் அவர்கள் பங்குச் சந்தை சேமிப்பு திட்டமான இஎல்எஸ்எஸ் என்கிற மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீட்டை மேற்கொள்ளலாம். இதில் மாதம் 500 ரூபாய்கூட முதலீடு செய்ய லாம். மூன்றாண்டுகளுக்கு முதலீட்டை எடுக்க முடியாது. இதன்மூலம் கிடைக்கும் டிவிடெண்ட் மற்றும் மூன்றாண்டு கழித்து யூனிட்களை விற்கும்போது கிடைக்கும் மூலதன ஆதாயம் எதற்கும் வரி கட்டத் தேவை இருக்காது.
இதைவிடக் கூடுதலாக ரிஸ்க் எடுக்கத் தயாராக இருக்கும், பங்குச் சந்தையில் முதல்முறையாக முதலீடு செய்யும் இளைஞர்கள் ராஜீவ் காந்தி பங்குச் சந்தை சேமிப்பு திட்டத்தின் (ராஜீவ் காந்தி ஈக்விட்டி சேவிங்ஸ் ஸ்கீம்) கீழ் வருமான வரிச் சலுகை பெற முடியும். ஆண்டு வருமானம் 12 லட்சம் ரூபாய்க்குக் கீழ் உள்ளவர்கள் ரூ. 50,000 முதலீடு செய்தால், அதில் பாதி 25,000 ரூபாய்க்கு வரிச் சலுகை பெற முடியும். பட்டியல் இடப்பட்ட நிறுவனப் பங்குகளில் (குறிப்பாக, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் இடம் பெற்றிருக்கும்) முதலீடு செய்யும்போது இந்தச் சலுகை கிடைக்கும்.
இவை தவிர, முக்கியப் பங்குகளில் முதலீடு செய்யும் மியூச்சுவல் பண்டுகள் செய்யும் முதலீட்டுக்கும் இந்தத் திட்டம் மூலம் வரிச் சலுகை பெற முடியும். இந்த முதலீட்டையும் மூன்றாண்டுகளுக்கு எடுக்க முடியாது.
ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை என்கிற வர்கள், சம்பளத்தில் பிடிக்கப்படும் பிஎஃப் போக விருப்பத்தின் அடிப்படையில் அதிகபட்சம் அதே அளவுக்கு விபிஎஃப் பிடிக்கச் சொல்ல லாம். இந்தத் தொகைக்கும் வரிச் சலுகை உண்டு.
மேலும், ஐந்தாண்டு வங்கி ஃபிக்ஸட் டெபாசிட், ஐந்தாண்டு தேசிய சேமிப்புப் பத்திரம் (என்எஸ்சி – வட்டி 8.5%), 15 ஆண்டு பப்ளிக் பிராவிடெண்ட் ஃபண்ட் (பிபிஎஃப்- வட்டி 8.70%) ஆகியவற்றிலும் முதலீடு செய்து வரிச் சலுகை பெறலாம். இதில் பிபிஎஃப் முதலீட்டில் வட்டிக்கு வரி கிடையாது. எஃப்டி மற்றும் என்எஸ்சி முதலீட்டில் வட்டி வருமானத்துக்கு வரிச் செலுத்த வேண்டும். உங்களின் முதலீடு எப்போது தேவை என்பதைப் பொறுத்து முதலீட்டு வகையைத் தேர்வு செய்யவும்.
இப்படி முதலீடு செய்து வைத்திருக்கும் பட்சத்தில் 3-லிருந்து ஐந்து ஆண்டுகள் லாக்கின் முடிந்தபிறகு உங்களின் எந்தத் தேவைக்கும் இந்தத் தொகையை எடுத்துக்கொள்ள முடியும்.
வீட்டுக் கடன்!
வாடகை வீட்டில் இருந்தால், அந்த வாடகையை நிபந்தனைக்கு உட்பட்டு வரி கட்டும்முன் வருமானத்தில் கழித்துக்கொள்ள முடியும். அதேநேரத்தில், சொந்த வீடு வேண்டும்; கணிசமான தொகை வரியாக மிச்சமாக வேண்டும் என்று நினைக்கிற இளைஞர்கள் வீட்டுக் கடன் மூலம் வீடு அல்லது அடுக்குமாடிக் குடியிருப்பு வாங்கலாம். ஏற்கெனவே இடம் இருந்தால் அதில் வீடு கட்ட வீட்டுக் கடன் வாங்கலாம்.
 
இப்படி வாங்கும் கடனில் திரும்பச் செலுத்தும் கடனில் அசல் தொகையில் நிபந்தனைக்கு உட்பட்டு 80சி பிரிவின் கீழ் ஓராண்டில் ரூ.1.5 லட்சம் வரை வரிச் சலுகை பெறலாம். திரும்பக் கட்டும் வட்டியில் ரூ.2 லட்சம் தனியாக வரிச் சலுகை (பிரிவு 24) கிடைக்கும்.
இளைஞர் ஒருவரால் தற்போது வாங்கும் சம்பளத்தில் நகரத்துக்குள் வீடு வாங்க முடியவில்லை. அவர் புறநகரில் வீட்டுக் கடன் மூலம் வீடு வாங்கி, அதனை வாடகைக்குவிட்டால், திரும்பக் கட்டும் அசலில் ரூ. 1.5 லட்சம் மற்றும் முழு வட்டிக்கும் வரிச் சலுகை பெற முடியும்.
அதேநேரத்தில், வீட்டு வாடகையை வருமானமாகக் காட்டி இருப்பது அவசியம். இந்த இளைஞர் நகருக்குள் வாடகை வீட்டில் இருக்கும்பட்சத்தில் வீட்டு வாடகைபடி  சலுகை மூலமும் வரியை மிச்சப்படுத்த முடியும்.
மேல்படிப்புக்கு!
வரிதாரர் மற்றும் அவரது துணை (கணவன்/ மனைவி) மேல்படிப்புக்கு கடன் வாங்கினால், திரும்பக் கட்டும் வட்டிக்கு எட்டு ஆண்டுகள் வரிச் சலுகை பெற முடியும். இளைஞர்கள் இப்படிச் செய்யும்போது வரிச் சலுகை கிடைப்பதோடு, மேல்படிப்பு முடித்து அலுவலகத்தில் அடுத்தகட்டத்துக்கும் போக வழி கிடைக்கும்.
இளைஞர்கள் கொஞ்சம் திட்டமிட்டால் வருமான வரியை கணிசமாக மிச்சப்படுத்த முடியும். இது வரியைச் சேமிப்பதற்கான முதலீடு என்பதோடு, எதிர்காலத் தேவைகளான சொந்த வீடு, கார் போன்றவற்றை வாங்கவும், பிள்ளைகள் கல்வி, திருமணச் செலவு மற்றும் ஓய்வுக்காலத் தேவைக்கு உதவுவதாக இருக்கும்.
எளிமையான முதலீட்டு நடைமுறைகள்..!
வருமான வரி முதலீட்டுக்காக இளைஞர்கள் எங்கும் அலையத் தேவையில்லை. இருந்த இடத்திலேயே ஆன்லைன் மூலம்  முதலீட்டை மேற்கொண்டுவிட முடியும். இன்ஷூரன்ஸ் / மியூச்சுவல் ஃபண்ட் ஏஜென்ட்டுகளை போனில் அழைத்தால் போதும் அவர்கள், உங்கள் அலுவலகம் அல்லது வீடு தேடி வந்து முதலீட்டுக்கான அனைத்து வேலைகளையும் முடித்துத் தந்துவிடுவார்கள். இசிஎஸ் கொடுத்துவிட் டால் உங்கள் வங்கிக் கணக்கிலிருந்தே முதலீட்டுக்கான பணம் சென்றுவிடும்.
ஏஜென்ட்டுகளிடம் எந்தத் திட்டம் சிறந்தது என்று கேட்பதைத் தவிர்ப்பது நல்லது. முதலீட்டுக்கான திட்டங்களை தேர்வு செய்வது நீங்களாக இருக்க வேண்டும்.

நன்றி -நாணயம் விகடன்

வாயைப் பிளக்கவைத்த வைர கம்பெனி!

வீடு இல்லாதவர்களுக்கு வீடு… வீடு வைத்திருந்தால் கார்…. வீடும் காரும் வைத்திருப்பவர்களுக்கு வைர நெக்லஸ்…. என்று தீபாவளி போனஸ் கொடுத்திருக்கிறது மும்பை நிறுவனம் ஒன்று. 50 கோடி ரூபாய் மதிப்பிலான போனஸை, வைரம் வர்த்தகம் செய்யும் அந்த நிறுவனம் வாரி வழங்கி உள்ளது!

மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அந்த நிறுவனத்தின் பெயர், ‘ஹரி கிருஷ்ணாஎக்ஸ்போர்ட்ஸ்’. தரமான வைரங்களை
உற்பத்தி செய்து பட்டை தீட்டி பல்வேறு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகின்றது. இந்த நிறுவனத்தின் முதன்மை இயக்குநர் சாவ்ஜி டோலக்கியா, குடும்பச் சூழல் காரணமாக, பள்ளிக்கூடத்தில் நான்காம் வகுப்பைக்கூட தாண்டாதவர். படிப்பைப் பாதியில் முடித்த அவர், 12 வயதில் வைரம் பட்டை தீட்டும் வேலையில் ஈடுபட்டார். அதில் நன்கு அனுபவம் பெற்ற பிறகு, தன் மூன்று சகோதரர்களுடன் இணைந்து 1992-ம் ஆண்டு ‘ஹரி கிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ்’ என்ற சொந்த நிறுவனத்தைத் தொடங்கினார். இந்த நிறுவனம் ஆண்டுக்கு 5 ஆயிரம் கோடி ரூபாய் வரை லாபம் சம்பாதிக்கிறது. இந்த தீபாவளிக்கு, கடை நிலை ஊழியர் முதல் உயர் அதிகாரிகள் வரை அனைவருக்கும் சமமான போனஸை அது வழங்கியுள்ளது. 1,198 பேர்களுக்கு இந்த லக்கி பிரைஸ் அடித்துள்ளது.
491 பேர்களுக்கு ஃபியட் கார், 500 பேர்களுக்கு ‘கிஸ்னா’ வைர நகை, 207 பேர்களுக்கு 2 படுக்கை அறைகள் கொண்ட  அடுக்குமாடி குடியிருப்பு ஆகியவை  போனஸாக வழங்கப்பட்டன. ஃபியட் காரை போனஸாகப் பெற்ற கடைநிலை ஊழியரான முகேஷ் பார்மர், ”கார் வாங்கும் அளவுக்கு சக்தி இல்லாதபோது, அதை கம்பெனி நிர்வாகமே  பரிசாகக் கொடுத்தால் எப்படி இருக்கும்? என்னைவிட என் அம்மாவுக்குத்தான் ரொம்ப சந்தோஷம். எப்போதும் நிறுவனத்துக்கு உண்மையாக இருப்பேன்” என்று நெகிழ்ச்சியோடு கூறுகிறார்.
இது எப்படி சாத்தியமாயிற்று? ”ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவிய ஊழியர்களுடன்  லாபத்தின் சிறு பகுதியைப் பிரித்துக் கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. எங்கள் நிறுவனத்தில் பணியாற்றுவோரை எங்களில் ஒருவராகவே பார்க்கிறோம். அதனால்தான், எங்கள் நிறுவனம் இன்று 9 ஆயிரம் ஊழியர்களோடு வளர்ந்து நிற்கிறது. 2008-ல் இருந்துதான் ஊழியர்களுக்குப் பெரிதாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்குத் தோன்றியது. நாங்கள், எங்கள் ஊழியர்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையும் அவர்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையும்தான், எங்கள் நிறுவனத்தின் பலம்” என்கிறார், இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கன்ஷையாம் டோலக்கியா.
9 ஆயிரம் பேர்களில் 1,198  பேர்களை எப்படி தேர்வு செய்தார்கள்? ”நாங்கள் ஒவ்வொரு ஊழியர்கள் செய்யும் வேலைகளையும் தினமும் கண்காணிக்கின்றோம். தான் செய்யும் தொழில் மீது ஒருவர் காட்டும் அக்கறை, காலத்தோடு சிறப்பாக ஒரு வேலையை செய்து முடிக்கும் திறன், இதைத்தான் நாங்கள் அளவுகோலாக வைத்திருக்கிறோம். அப்படித்தான், இந்த 1,198 பேர்களையும் தேர்வு செய்தோம். நாங்கள் கொடுத்த போனஸைப் பார்த்துவிட்டு தினமும் நூற்றுக்கணக்கில் இளைஞர்கள், எங்கள் நிறுவனத்தில் வேலை கேட்டு விண்ணப்பிக்கின்றனர்” என்றனர் நிர்வாகத்தினர்.
வைரம் பேசுது!

மிஸ்டர் கழுகு: 2ஜி வெடி… திரி ரெடி!

கடந்த இரண்டு மாத காலமாக பெங்களூருவை மையம் கொண்டு இருந்த கழுகார், இப்போது டெல்லி தகவல்களுடன் நம்முன் ஆஜரானார். 
”வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்த வழக்கின் தீர்ப்பில் ஜெயலலிதாவுக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பு, இந்தியா முழுக்க அரசியல்வாதிகள் பலரின் தூக்கத்தைக் கெடுத்துவிட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை 2ஜி வழக்கின் தீர்ப்பு முக்கியமான கட்டத்தை அடைந்துள்ளதாக டெல்லித் தகவல்கள் சொல்கின்றன. அதுபற்றிய முழுமையான தகவல்களைத் திரட்டி வந்துள்ளேன்!” என்றபடி ஆரம்பித்தார்.
”2ஜி வழக்கு, டெல்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி.ஷைனி முன் விசாரணையில் இருக்கிறது. 2ஜி சம்பந்தமாக இரண்டு வழக்குகள் ஷைனி முன்பு இருக்கின்றன. முதல் வழக்கு சி.பி.ஐ தாக்கல் செய்தது. அது, விதிமுறைகள் மீறப்பட்டு வழங்கப்பட்ட உரிமங்களின் காரணமாக அரசுக்கு இழப்பு ஏற்பட்டது என்பது. இந்த வழக்கில் இரண்டு தரப்பு வாதங்களும் முடிந்துவிட்டன. ‘நவம்பர் 10-ம் தேதி முதல் இறுதிக்கட்ட வாதம் தொடங்கலாம்’ என்று நீதிபதி ஷைனி அறிவித்துள்ளார். இதில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆ.ராசா, கனிமொழி, சரத்குமார், ஷாகித் பால்வா உள்பட 17 பேர்கள். இவர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் தங்கள் வாதங்களை வைப்பார்கள். அதன் பிறகு சி.பி.ஐ தரப்பு வழக்கறிஞர் தனது வாதத்தை வைப்பார். வாதம் முடிந்ததும் தேதி குறிப்பிடப்படாமல் நீதிமன்றம் ஒத்திவைக்கப்படும். பிறகு தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும். டெல்லி சி.பி.ஐ வட்டாரத்தை விசாரித்தால், ‘ஜனவரி 15-ம் தேதிக்குள் தீர்ப்பு வந்துவிடும்’ என்று சொல்கிறார்கள்!”
”அவ்வளவு சீக்கிரமாகவா?”
”பெங்களூரு வழக்குக்காவது மனுக்கள் மீது மனுக்களாகப் போட்டு இழுத்தடித்தார்கள். ஆனால், 2ஜி வழக்கு ஆரம்ப கட்டத்தில்தான் தடங்கலைச் சந்தித்தது. இப்போது தடங்கல் இல்லாமல் போய்க்கொண்டு இருக்கிறது. இந்த வழக்கின் தீர்ப்புதான் கருணாநிதிக்கு பெரும் பதற்றத்தை உருவாக்கி வருகிறது. ‘இந்த தீர்ப்பின் மூலம்தான் தி.மு.க-வின் எதிர்காலமே அடங்கி இருக்கிறது’ என்றும் தி.மு.க-வினர் சொல்ல ஆரம்பித்துள்ளார்கள்.”
”ம்!”
”சி.பி.ஐ நீதிமன்றத்தில் உள்ள 2ஜி சம்பந்தப்பட்ட இரண்டாவது வழக்கை அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ளது. அந்த வழக்கில் குற்றச்சாட்டுப் பதிவு செய்வது இன்னும் சில நாட்களில் நடக்க இருக்கிறது. அதாவது இந்த மாதம் 31-ம் தேதி சி.பி.ஐ நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு நடக்கும் என்று கடந்த 20-ம் தேதி ஷைனி அறிவித்துள்ளது, அடுத்த பெரிய நெருக்கடி. ‘2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு உரிமம்பெற்ற ஸ்வான் டெலிகாம் நிறுவனம், அதற்குப் பரிகாரமாக சில தனியார் நிறுவனங்கள் மூலமாக கலைஞர் டி.வி-க்கு 200 கோடி ரூபாய் அளித்துள்ளது. இதில், கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு நடந்துள்ளது’ என்று அமலாக்கத் துறை குற்றம் சாட்டுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் 25-ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் குற்றச்சாட்டுப் பதிவுக்கு தேதி குறித்துவிட்டார் நீதிபதி ஷைனி. முந்தைய சி.பி.ஐ வழக்கில் சாட்சிகளில் ஒருவராக இருந்த தயாளு அம்மாள், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் இருக்கிறார். இதிலும் ஆ.ராசா, கனிமொழி, கலைஞர் டி.வி சரத்குமார், கருணாநிதியின் அக்கா மகன் அமிர்தம் உள்ளிட்ட 10 பேர் வருகிறார்கள். முதல் வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்ட பிறகு இந்த வழக்கு வேகம் பிடிக்கும் என்கிறார்கள்!”
”அப்படியானால்?”
”டெல்லியில் இப்போதே, ‘ஷைனி சுனாமி’ என்று பெயர் சூட்ட ஆரம்பித்துவிட்டார்கள். கடந்த 20-ம் தேதியே குற்றச்சாட்டுப் பதிவு நடந்திருக்க வேண்டும். ஆனால், நீதிபதி, ‘உத்தரவு இன்னும் தயாராகவில்லை. அதனால் அக்டோபர் 31-ம் தேதிக்கு ஒத்திவைக்கிறேன்’ என்று கூறினார். மத்திய அமலாக்கத் துறை சார்பில் சிறப்பு வழக்கறிஞராக ஆனந்த் குரோவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இந்த வழக்கில் எழுத்துப்பூர்வமான ஆதாரங்களைத் தாக்கல் செய்வதற்கான அனுமதியைக் கேட்டார். அதற்கு ஷைனி அனுமதி வழங்கினார். அந்த மனுவில் வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சி ரகமாக இருக்கும் என்று சொல்கிறார்கள். இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி தயாளு அம்மாள் ஏற்கெனவே மனுத்தாக்கல் செய்திருந்தார். அதனை, சி.பி.ஐ நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. அதாவது, அவர் விசாரணையை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். இதுவும் கருணாநிதிக்குக் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன்படி பார்த்தால், நவம்பர் மாதம் முதல் கோபாலபுரத்தை ஷைனி சுனாமி வெகுவாக தாக்கலாம் என்று டெல்லி தகவல்கள் சொல்கின்றன. இந்த வழக்குக்குப் பிறகு ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கு சூடுபிடிக்கும் என்று சொல்கிறார்கள்!”
”அதனால்தான் கருணாநிதியும் அடக்கி வாசிக்கிறார்!”
”ம்! மூன்று வாரங்கள்தான் கருணாநிதி அமைதியாக இருந்தார். இதோ, ஆரம்பித்து விட்டாரே! ‘ஒய்யாரக் கொண்டையாம்; தாழம்பூவாம்’ என்ற தலைப்பில் பெங்களூரு வழக்கின் தீர்ப்பு குறித்த மினி தொடரை தொடங்கிவிட்டார் கருணாநிதி. இதுவரை தனது வழக்கமான பாணியில் அறிக்கை விடாமல் அமைதியாக இருந்தார். அவரை ராமதாஸ் கடுமையாகச் சீண்டிவிட்டார். கட்சி நிர்வாகிகளும் ‘தலைவர் இவ்வளவு மௌனமாக இருப்பது நல்லதல்ல’ என்றார்கள். இதுவே தி.மு.க-வின் மிகப்பெரிய பலவீனமாகப் பார்க்கப்பட்டது. இந்த நிலையில் கருணாநிதி இந்தத் தொடரைத் தொடங்கிவிட்டார். உடன்பிறப்புக்குக் கடிதம் பாணியில் எழுதப்படும் இந்தக் கட்டுரைகளைத் தொகுத்து தி.மு.க தலைமைக் கழகம் சார்பில் தனிப் புத்தகமாகவும் கொண்டு வரப்போகிறார்கள். குன்ஹாவின் தீர்ப்பை முழுமையாக மொழிபெயர்த்து ‘முரசொலி’யில் வெளியிட்டு வருகிறார்கள். அதுவும் புத்தகமாக வரப்போகிறது. ஏற்கெனவே, தீர்ப்புக்கு முன்னதாக இந்த வழக்கு பற்றி கருணாநிதி எழுதிய கடிதங்கள் அப்போதே புத்தகமாக வந்துவிட்டது. இந்த மூன்றையும் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல கருணாநிதி கட்டளையிட்டுள்ளாராம்!”
”ரஜினிகாந்த் அறிக்கையைப் பார்த்தீரா?”
”ம்! அரசியல், அரசியல்வாதிகள் பற்றிய சர்ச்சைகளில் சமீப காலமாக இறங்காத ரஜினி வலியப் போய் ஜெயலலிதாவுக்குக் கடிதம் எழுதி உள்ளார். ‘தாங்கள் மீண்டும் போயஸ் தோட்ட இல்லத்துக்குத் திரும்பி இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. தங்களுக்குச் சிறப்பான நேரம் அமைய பிராத்திக்கிறேன். தாங்கள் எப்பொழுதும் நல்ல உடல் நலமும் அமைதியும் பெற வேண்டுமென வாழ்த்துகிறேன். மேலும், எனது தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று ரஜினி அந்தக் கடிதத்தில் மையமாக எழுதி இருக்கிறார். ‘தாங்கள் மீண்டும் போயஸ் தோட்ட இல்லத்துக்குத் திரும்பி இருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது’ என்பது சிறையில் இருந்து ஜாமீன் வந்ததற்கான வாழ்த்தாக அமைந்துவிட்டது. இதற்குப் பதில் அளித்து ரஜினிக்கு ஜெயலலிதா ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறார். அதில், ‘தாங்கள் அனுப்பிய கடிதம் கிடைக்கப்பெற்றதில் நான் மகிழ்ச்சியடைந்தேன். நீங்கள் தெரிவித்துள்ள கனிவான, அன்பான உணர்வுகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் நீண்ட ஆயுள், நல்ல உடல்நலம், செல்வ வளம் மற்றும் அனைத்துச் செயல்பாடுகளிலும் வெற்றிபெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். பொதுவாகப் பார்த்தால் சாதாரணக் கடிதம்தான். ஆனால் எழுதிய சூழ்நிலை முக்கியமானதாக அதனை ஆக்கிவிட்டது!”
”ரஜினியின் நோக்கம் என்னவாம்?”
”பி.ஜே.பி-யில் சேரப்போகிறார், பி.ஜே.பி தன்னுடைய முதலமைச்சர் வேட்பாளராக ரஜினியை அறிவிக்கப் போகிறது, ரஜினி வீட்டுக்கு தமிழிசை தூது போகிறார், அமித்ஷா அடிக்கடி ரஜினியிடம் பேசுகிறார்…. இப்படி பரவும் தகவல்களை ரஜினியே ரசிக்கவில்லை என்கிறார்கள். ‘நம்மளோட நிலைமையை மோடி சார் வந்தப்பவே சொல்லியாச்சே! அப்புறம் ஏன் இந்த மாதிரி தகவல் பரப்புறாங்க?’ என்று ரஜினி கேட்டுள்ளார். ‘கலைஞர் சாருக்கு பிறந்தநாள் வாழ்த்துச் சொன்னேன், என்னைப் பார்க்க அழகிரி வந்துட்டுப் போனார், விஜிட்ட(விஜயகாந்த்) அப்பப்போ பேசுவேன், ராம்ஜெத்மலானி எழுதிய புக்கைக் கொடுத்துட்டு வைகோ பேசிட்டுப் போனார். இப்படி எல்லோரையும் ஒரே மாதிரித்தான் நான் நினைக்கிறேன். இதுல ஒருத்தராகத்தான் மேடத்தை நான் பார்க்கிறேன்’ என்று சொன்னாராம் ரஜினி. ‘கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு எதிராக எந்த அரசியல் முடிவுகளையும் ரஜினி எடுக்க மாட்டார்’ என்பதுதான் ரஜினியை அறிந்தவர்கள் சொல்வது!” 
”எப்படி இருக்கிறார் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்?”
”அப்படியேதான்! வழக்கமான தாடியுடன் வலம் வருகிறார். அவரை முதல்வராக அங்கீகரிக்கிறார்களா என்பதைவிட முதல்வராக அவர் தன்னை நினைக்கிறாரா என்பதே சந்தேகம்தான்! ஒவ்வொரு துறையிலும், பணிகள் என்னென்ன நடைபெற்றுள்ளன என்று அரசின் சாதனைகளை மக்களுக்கு விளக்குவதற்காகவே பொருட்காட்சி அரசு சார்பில் நடத¢தப்படுகிறது. தற்போது தஞ்சையில் பொருட்காட்சி நடக்கிறது. ஒவ்வொரு துறை சார்பில் வைக்கப்படும் விளம்பரத்தில் ஓ.பன்னீர்செல்வம் படத்தை பிரதானமாக வைத்திருக்கிறார்கள் அதிகாரிகள். அதிலும் பொதுப்பணித் துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள விளம்பரத்தில் மெகா சைஸ் படம் வைக்கப்பட்டிருக்கிறது. ‘அரசு நிகழ்ச்சிகள் எதுவாக இருந்தாலும் அதற்கான விளம்பரங்கள், ஃபிளக்ஸ் அளவுகள் எல்லாம் முதல்வரின் அலுவலகத்தில் இருந்துதான் வரும். அப்படித்தான் பொதுப்பணித் துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள விளம்பரத்துக்கும் அங்கிருந்துதான் வந்தது. அந்த அளவுப்படிதான் வைத்திருக்கிறோம்’ என்று சொல்கிறார்கள் தஞ்சை மாநகராட்சி அலுவலர்கள். ‘முதல்வராக இருந்தாலும், நான் பொதுப்பணித் துறை அமைச்சராகத்தான் இருக்கிறேன். எல்லாமே அம்மாதான்’ என்று காட்டுவதற்காகவே இப்படி ஒரு விளம்பரத்தை பொதுப்பணித் துறை சார்பில¢ விளம்பரப்படுத்தி இருக்கிறார்கள்’ என்று சொல்கிறார்கள்!”
”ஓஹோ!”
”இதில் ஒரு சர்ச்சையும் வந்துவிட்டது. தஞ்சை பொருட்காட்சியின் வரவேற்பு வளைவில் ஓ.பி.எஸ் படத்தை பெரிய அளவிலும் ஜெயலலிதா படத்தை சின்ன அளவில் எப்படி போடலாம் என்று அ.தி.மு.க-வினர் தலைமைக்குப் புகார் அனுப்ப ஆரம்பித்துவிட்டார்களாம்” என்று கழுகார் சொல்ல…
”ஜெயலலிதா படத்தை வைக்கும் பிரச்னைக்கு, ஜெயலலிதாவே ஒரு கட்டளையைப் பிறப்பித்தால் மட்டுமே கட்சிக்காரர்களும் அதிகாரிகளும் நிம்மதியாக இருப்பார்கள்!” என்று நாம் சொல்ல, தலையாட்டியபடி எழுந்த கழுகார், ”மேலிடத்தைச் சுற்றிவரும் மூன்றெழுத்து உயர் அதிகாரி, பரப்பன அக்ரஹாராவில் வீடு பிடித்து தங்கியபடி, டெல்லிக்கும் பெங்களூருக்குமாகப் பறந்தாராம். இந்த விஷயத்தை மத்திய உளவுத் துறையினர் கவனிக்கத் தவறவில்லையாம்” என்றபடி பறந்தார்!

தீர்ப்புக்கு அப்பால் -இந்தியா டுடே கவர் ஸ்டோரி


Pages from Flash12_Page_1Pages from Flash12_Page_2Pages from Flash12_Page_3Pages from Flash12_Page_4Pages from Flash12_Page_6

ப்ரீ டயாபடீஸா.. பயம் வேண்டாம்

உலக அளவில் சர்க்கரை நோயாளிகள் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு இரண்டாவது இடம். ப்ரீ டயாபட்டீஸ் என்று சொல்லப்படும் ‘சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை’யில் இருப்பவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் மட்டும்  7.72 கோடிப் பேர் என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டிருக்கிறது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில். ப்ரீ டயாபடீஸ் பற்றிய பல்வேறு சந்தேகங்களை சர்க்கரை நோய் நிபுணர் கருணாநிதியிடம் கேட்டோம்.
‘சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை என்றால் என்ன?’
‘பொதுவாக, ஒருவருக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சாப்பிடுவதற்கு முன் 100 முதல் 125 mg/dl என்ற அளவிலும், உணவு உட்கொண்ட பிறகு 140 முதல் 199 mg/dl என்ற அளவிலும் இருந்தால், அவர் ப்ரீ டயாபடீஸ் நிலையில் உள்ளார். அதாவது, எதிர்காலத்தில் சர்க் கரை நோய் வருவதற்கான சாத்தியங்கள் அவருக்கு அதிகம் என்று அர்த்தம்.’
‘ப்ரீ டயாபடீஸ் யாருக்கு எல்லாம் வர வாய்ப்புள்ளது?’
‘அதிக உடல் எடை இருப்பவர்கள், குறிப்பாக பி.எம்.ஐ மதிப்பில் 25க்கு மேல் இருப்பவர்கள், கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோய் (Gestational Diabetes) வந்தவர்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், இதய நோய் உள்ளவர்கள், உடல் உழைப்பின்றி, அதிக கலோரி உணவு உண்ணுபவர்கள் (Sedentary type) ஆகியோருக்கு ப்ரீ டயாபடீஸ் வரலாம். இவர்கள் தாங்களாகவே முன்வந்து மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சர்க்கரைப் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.’
‘ப்ரீ டயாபடீஸ் இருக்கிறது என்பதை எப்படி அறிவது?’
‘சர்க்கரை நோய்க்கான சோதனை மூலம் அறியலாம். காலையில் உணவு சாப்பிடுவதற்கு முன்பும், உணவு உட்கொண்ட பின்னர் 2 மணி நேரம் கழித்தும் செய்யப்படும் ரத்தப் பரிசோதனை மூலம் கண்டறியலாம். சிலர் ரத்தப் பரிசோதனை செய்வதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பிருந்தே, சர்க்கரை, எண்ணெய் சேர்த்த உணவுகளைத் தவிர்த்து விட்டு, பரிசோதனையின்போது, சர்க்கரையின் அளவு குறைவு எனக் காண்பிக்க விரும்புகிறார்கள். இது தவறு. இவர்களுக்காகவே, தற்போது ஹெச்.பி.ஏ.1சி (HbA1c) என்ற பரிசோதனை இருக்கிறது. கடந்த மூன்று மாதங்களில் நம் சராசரியான சர்க்கரையின் அளவு என்ன என்பதை அது தெளிவாக விளக்கிவிடும். ப்ரீ டயாபடீஸ் வந்தவர்கள் இந்தப் பரிசோதனையை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கண்டிப்பாக செய்து கொள்ளவேண்டும். இதன் மூலம் நமது உடலில் சர்க்கரையின் அளவைத் துல்லியமாகத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ப செயல்படலாம்.’
‘ப்ரீ டயாபடீஸ் வந்தவர்கள் செய்ய வேண்டியவை, தவிர்க்க வேண்டியவை என்ன?’
”ப்ரீ டயாபடீஸ் பிரச்னை உள்ளவர்களுக்கு மாத்திரைகள் தரப்படுகின்றன ஆனால் அவற்றை எடுத்துக் கொள்ளாமல், ‘உணவுக் கட்டுப்பாடு, உடல் எடைக் கட்டுப்பாடு’ போன்ற வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வதன் மூலம் சர்க்கரை நோய்க்கான வாய்ப்பைத் தவிர்க்கலாம். மருத்துவர் மற்றும், ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனை பெற்று உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். சீரான இடைவெளியில் குறைந்த கலோரி கொண்ட உணவுகளை சாப்பிட வேண்டும்.  பதப்படுத்தப்பட்ட, பாக்கெட் செய்யப்பட்ட சிப்ஸ் முதலான கொழுப்புச் சத்துள்ள பொருட்கள், சர்க்கரை மட்டுமின்றி இனிப்புப் பதார்த்தம் உண்ணுவதையும் குறைத்துக்கொள்ள வேண்டும். நார்ச் சத்து மிகுந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளவேண்டும். மாவுச்சத்துள்ள உணவுகளை குறைத்துக்கொள்ள வேண்டும். தாமதமாக உணவு உட்கொள்வது, உணவைத் தவிர்ப்பது கட்டாயம் கூடாது. இரவில் உறங்குவதற்கு  இரண்டு  மணி நேரம் முன்பே மிதமான உணவைச் சாப்பிட வேண்டும். ஒரு நாளைக்கு டீ/காபி 2 கப் அளவுக்கு மேல் அருந்தக் கூடாது. தினமும் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். வாரத்துக்கு 5 நாட்களாவது முறையான நடைப்பயிற்சி அவசியம். பயிற்சியாளர், மருத்துவர் பரிந்துரை இன்றி கடினமான பளு தூக்கும் உடற்பயிற்சிகளைத் தவிர்க்க வேண்டும்.  பொதுவாக ப்ரீ டயாபடீஸ் வந்தவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.எனவே, மனக்கவலையைத் தவிர்த்து உணவுப்பழக்கம், உடற்பயிற்சி, தூக்கம் ஆகியவற்றை முறையாகக் கடைப்பிடித்தால், ப்ரீ டயாபடீஸிலிருந்து நார்மல் நிலைக்கு வரலாம்.  இதய நோய்கள் வராமலும் தடுக்கலாம்.’

அங்கே லாலு…. இங்கே ஜெயலலிதா! தகுதி இழந்த தலைவர்கள்!

”சமோசாவில் ஆலு (உருளைக் கிழங்கு) இருக்கும் வரை பீகாரில் லாலு இருப்பான்”  – மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சிறையில் தள்ளப்பட்டு ஜாமீனில் வெளியானபோது லாலு உதிர்த்த வார்த்தைகள் இவை. ஆனால் இன்றோ, தேர்தலில் போட்டியிடும் தகுதியை அவர் இழந்து நிற்கிறார். லாலுவின் வரிசையில் இப்போது ஜெயலலிதாவும்.   
ஊழல் வழக்குகள், தண்டனை விதிப்பு, ‘மக்கள் பிரதிநிதி’ பதவி பறிப்பு, சிறை வாழ்க்கை, ஜாமீன் போராட்டம், அரசியல் பின்னடைவு என லாலுவுக்கும் ஜெயலலிதாவுக்கும் அரசியல் பொருத்தங்கள் நிறைய உண்டு. தமிழகத்தில் சொத்துக் குவிப்பு வழக்கு என்றால், பீகாரில் மாட்டுத் தீவன ஊழல் வழக்கு. கடந்த ஆண்டு லாலுவின் வாழ்வில் வீசிய புயலையும் இந்த ஆண்டு ஜெயலலிதாவின் வாழ்வில் அடித்த சுனாமியையும் முடிச்சுப் போட்டுப் பார்ப்போம்.
சுவாரஸ்யங்கள் நிறைந்தது லாலுவின் ஃப்ளாஷ் பேக். வடக்கு பீகாரின் புல்வாரியா கிராமத்தில் ஏழை விவசாயி யாதவ் குந்தன் ராய்க்கு மகனாக பிறந்தவர் லாலு. சொந்தமாக வீடுகூட இல்லாத குடும்பத்தில் லாலுதான் கடைக்குட்டி. அம்மா மர்சியா தேவியுடன் சென்று சிறுவன் லாலு, வீடு வீடாகத் தினமும் பால் ஊற்றுவது உண்டு. கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு கிளார்க் வேலையில் சேர்ந்தார். லாலுவின் பார்வை ஜெயப்பிரகாஷ் நாராயணன் இயக்கத்தின் பக்கம் திரும்பியது.
திருமணத்தின்போது லாலுவின் மனைவி ராப்ரி தேவிக்கு 14 வயது. சில மாதங்கள் கழித்துதான் முதலிரவுக்கே தேதி குறித்தார்கள். முதலிரவு அன்று கனவுகளோடு லாலு காத்திருக்க… அவர் வீட்டைத் தட்டினார்கள் காக்கிகள். மிசாவில் ‘உள்ளே’ போனார். அந்தக் காரணத்தினால்தான் லாலு, தன் முதல் பெண் குழந்தைக்கு ‘மிசா பாரதி’ என்று பெயர் சூட்டினார். ஒரு காலத்தில் பீகாரில் அசைக்க முடியாத சக்தியாக இருந்த காங்கிரஸுக்கு சமாதி கட்டினார். தந்தையைப் போலவே லாலுவுக்கும் குடும்பக் கட்டுப்பாட்டின் மீது நம்பிக்கை இல்லை. அதனால் ஏழு மகள்கள்… இரண்டு மகன்கள்.
கட்சி, ஆட்சி, குடும்பம் என சந்தோஷமாக போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில், 1997-ல் ‘பிரேக்’ விழுந்தது. கால்நடைத் தீவன வழக்கில் சிக்கி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டி வந்தது. அப்போது, திடீர் திருப்பமாக தன் மனைவி ராப்ரி தேவியை முதல்வராக்கினார் லாலு. ”முதல்வர் பதவியைச் சிறப்பாக நடத்த, ராப்ரிக்கு இரண்டுநாள் டிரெயினிங் கொடுத்து இருக்கிறேன். அவர் நன்றாக ஆட்சி செய்வார்” என்று சீரியஸாகவே சொன்னார் லாலு. சிறையில் இருந்தபடி ‘நிழல் முதல்வர்’ லாலு, ராப்ரி ரிமோட்டை இயக்கிக் கொண்டிருந்தார். 
லாலுவின் அரசியல் அஸ்தமனத்துக்கு அஸ்திவாரம் போட்ட மாட்டுத் தீவன  ஊழல் வழக்கு, ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கைப்போலவே சவ்வு மிட்டாய் ரகம்தான். லாலு முதல்வராக இருந்தபோது மாட்டுத் தீவனம் வாங்கியதில் மெகா மோசடிகள் அரங்கேற… ரூ.37.7 கோடிக்கு ஊழல் நடந்ததாக சி.பி.ஐ வழக்குப் போட்டது ராஞ்சி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தின் படிக்கட்டுகளில் ஏறி இறங்கிக்கொண்டிருந்தார் லாலு. ஒருவழியாக வழக்கு கடந்த ஆண்டு முடிவுக்கு வந்து தீர்ப்புக்குத் தேதியும் குறித்தார் நீதிபதி பிரவாஸ்குமார் சிங். அப்போதுதான் ‘கிரிமினல் வழக்குகளில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றால் எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் பதவி உடனடியாகப் பறிபோகும்’ என்ற அஸ்திரம் சுப்ரீம் கோர்ட்டில் இருந்து பாய்ந்தது. உடனே ‘நீதிபதி பிரவாஸ்குமார் சிங், ஆளும் ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் மூத்த தலைவர்களின் உறவினர். இதனால் நியாயமான தீர்ப்பு வழங்க மாட்டார். வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும்’ எனச் சொல்லி உயர் நீதிமன்றத்தில் லாலு மனுப் போட்டும் பயன் இல்லாமல் போனது.
2013 செப்டம்பர் 30-ம் தேதி தீர்ப்பு. அன்று நீதிமன்றம் வந்த லாலுவை குற்றவாளி என அறிவித்தது நீதிமன்றம். தண்டனை விவரங்கள் அக்டோபர் 3-ம் தேதி அறிவிக்கப்பட்டன. ”லாலுவுக்கு வயதாகிவிட்டது. நிறைய நோய்களோடு போராடிக்கொண்டிருக்கிறார். ரயில்வே துறையை லாபம் அடையச் செய்த பொறுப்புமிக்க குடிமகன். அதனால் குறைந்த தண்டனை கொடுங்கள்” என அவரது வழக்கறிஞர் கேட்டும் எந்தப் பயனும் ஏற்படவில்லை. லாலுவுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.25 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதைவிட ஊழல் வழக்கில் தண்டனை பெற்று எம்.பி பதவியைப் பறிகொடுத்ததைத்தான் இந்தியாவே ஆச்சர்யமாகப் பார்த்தது.
ராஞ்சியின் பிர்சா முண்டா சிறையில் அடைக்கப்பட்ட லாலு, செய்த அலம்பல்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. ‘இசட் ப்ளஸ் பாதுகாப்பில் இருந்ததால் சிறையிலும் கறுப்புப் பூனைப்படை பாதுகாப்பு வேண்டும்’ என அடம்பிடித்தார். அதற்காக நீதிமன்றத்தில் அவர் போட்ட மனு தள்ளுபடியானது. லாலுவின் கைதி எண் 3,312. பரப்பன அக்ரஹாரா சிறையைப்போலவே பிர்சா முண்டா சிறையும் பரப்பளவில் பெரியது. சுமார் 52 ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்தச் சிறையில் லாலுவுக்காக டிவி, கட்டில், பத்திரிகைகள், கொசுவலை, டைல்ஸ் போட்ட டாய்லெட், வெளியில் இருந்து உணவு என வசதிகள் செய்து தரப்பட்டன. தண்டனைக் கைதிகளுக்குச் சிறையில் வேலை கொடுக்கப்படும். அந்த வகையில் இரண்டு வேலைகளை டிக் அடித்தார் லாலு. ஒன்று ஆசிரியர் வேலை. மற்றொன்று தோட்ட வேலை. இரண்டையும் பார்த்தார் லாலு. அரசியல், நிர்வாகவியல் பற்றிச் சிறையில் சீரியஸாக பாடங்கள் நடத்தினார். ஆசிரியர் வேலைக்குத் தினசரி 25 ரூபாயும் தோட்ட வேலைக்கு 14 ரூபாயும் சம்பளம் வேறு வாங்கினார். தோட்ட வேலையை செய்வதாக ஒப்புக்கொண்டார் லாலு. பின்னர், வயதானதால் செய்ய முடியாது எனச் சொல்லி சூப்பர்வைஸர் வேலைக்கு மாறினார். சிறைக் கைதிகள் ஒழுங்காக தோட்ட வேலை செய்கிறார்களா என்று கண்காணித்ததோடு எப்படி வேலை பார்க்க வேண்டும் என அங்கேயும் கிளாஸ் எடுத்தார். சிறையில் இருந்த லாலுவை எப்படியும் வெளியே எடுத்துவிட ஜாமீன் போட்டபடியே இருந்தார்கள். ஒருவழியாக இரண்டரை மாதம் கழித்து லாலுவுக்கு ஜாமீன் வழங்கியது சுப்ரீம் கோர்ட். சிறையில் இருந்து வெளியே வந்த லாலு, ”சிறைக்குச் சென்றதோடு என் கதை முடிந்துவிட்டது என எண்ணிவிட்டார்கள். மதவாத சக்திகளைக் களையெடுப்பதே இனி என் வேலை” என முழங்கினார். ஆனால், அது பலிக்கவில்லை. உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட லாலு, இப்போது ஓய்வில் இருக்கிறார். உடலில் மட்டுமல்ல, அரசியலிலும் கிட்டத்தட்ட ஓய்வு கொடுக்கப்பட்டுவிட்டது.
ரசீத் மசூத், லாலு, செல்வகணபதி என பதவி பறிபோனவர்கள் பட்டியல் நீண்டாலும், லாலுவும் ஜெயலலிதாவும் ‘அரசியலை கலக்கிய பிரபலங்கள்’ என்பதால்தான் இந்தியாவே இவர்களைத் திரும்பிப் பார்த்தது. நல்லதுக்கு உதாரணமாகச் சொன்னால் பெருமைப்படலாம். இது பெருமைப்பட வேண்டிய விஷயம் இல்லையே!

பெயில் டு ஜெயில் நிமிடங்கள்

‘குன்ஹாவைப் பார்க்க குவிந்த கூட்டம்!’

உச்ச நீதிமன்றம் 17-ம் தேதி மதியம் 12.30 மணிக்கு ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கியது என்ற செய்தி வெளியே கசிந்ததும் உற்சாகக் கொண்டாட்டம் ஆரம்பித்தது. தண்டனை கொடுத்தவர்களே பெயில் கொடுக்க வேண்டும் என்பதால், ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு நடைபெற்ற பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ரிலீஸ் ஆர்டர் வாங்குவதற்காக அ.தி.மு.க நிர்வாகிகள் காத்திருந்தனர். ஆனால், அன்று மாலை வரை பெயில் உத்தரவு வரவில்லை. 18-ம் தேதி காலை நீதிபதி குன்ஹாவின் வருகையை எதிர்பார்த்து ஜெயலலிதாவின் வழக்கறிஞர்கள் குமார், மணிசங்கர், நவநீதகிருஷ்ணன், செந்தில், அன்புக்கரசு, செல்வக்குமார், கருப்பையா ஆகியோர் காத்திருந்தார்கள். நீதிபதி குன்ஹாவைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே அ.தி.மு.க நிர்வாகிகள் பலரும் சிறப்பு நீதிமன்றத்தில் கூடியிருந்தனர். அந்த நேரத்தில் பவானி சிங் தன் சேம்பரில் அமர்ந்திருந்தார். சரியாக 11.05-க்கு சிரித்த முகத்தோடு அனைவருக்கும் வணக்கம் சொல்லி அமர்ந்தார் நீதிபதி குன்ஹா. ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் குமார், உச்ச நீதிமன்ற பெயில் ஆர்டரை கொடுத்தார். அதைப் படித்துப் பார்த்த குன்ஹா, ”அனுமதிக்கிறேன்” என்றார். அதன் பிறகு ஷ்யூரிட்டி ஆவணங்களை சரிபார்த்தார். ஜெயலலிதாவுக்கு கர்நாடக மாநில அ.தி.மு.க செயலாளர் புகழேந்தியின் மனைவி குணஜோதியும், டாக்டர் வெங்கடேஷின் சகலை பரத்தும் ஷ்யூரிட்டி கொடுத்திருந்தார்கள். அவர்களின் குடும்ப அட்டை, ஆதார் அட்டைகளை சரிபார்த்தார். பிறகு அவர்களிடம் நடந்த விசாரணை அப்படியே இதோ…
நீதிபதி குன்ஹா: ”நீங்க பெங்களூரில் இருக்கீங்க… அவங்க சென்னையில் இருக்காங்க, அவங்களை எப்படி உங்களுக்குத் தெரியும்” என்று ஆங்கிலத்தில் கேட்டார். குணஜோதிக்கு ஆங்கிலம் தெரியாததால், புரியாமல் விழித்தார். நீதிபதி குன்ஹா அதையே திருப்பி கன்னடத்தில் கேட்டார்.
குணஜோதி: ”அவங்களை நன்றாகத் தெரியும்!”
நீதிபதி குன்ஹா: ”நாளைக்கு ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் நீங்கள் மாட்டிக்கொள்வீர்கள் என்பது தெரியுமா… தெரியாதா?”
குணஜோதி: ”தெரியும்!”
நீதிபதி குன்ஹா: ”இந்த ஆவணங்கள் அனைத்தும் உங்கள் பெயரில்தான் இருக்கிறதா?”
குணஜோதி: ”ஆமாம்!”
‘சசிகலா எனக்கு ஃபேமலி ஃபிரெண்ட்!’
அடுத்து சசிகலாவுக்கு கர்நாடக மாநில அ.தி.மு.க இணைச்செயலாளர் ராஜுவும், பெங்களூரு தொழிலதிபர் லட்சுமிபதியும் ஷ்யூரிட்டி கொடுத்திருந்தார்கள். அவர்களிடம் நீதிபதி குன்ஹா, ”ஜெயலலிதாவைக்கூட ஒருவேளை உங்களுக்குத் தெரியும் என்று சொல்லலாம். சசிகலாவை எப்படி உங்களுக்குத் தெரியும்?”
ராஜு: ”சசிகலா எங்க ஃபேமலி ஃப்ரெண்ட்!”
நீதிபதி குன்ஹா: ”பெயில் கொடுக்க ஷ்யூரிட்டிக்கான சட்ட திட்டங்கள் தெரியுமா?”
ராஜு: ”தெரியும்!”
நீதிபதி குன்ஹா: ”இந்த சொத்து வாங்கியபோது எவ்வளவு மதிப்பு, தற்போது என்ன மதிப்பு?”
ராஜு: ”வாங்கியதைவிட தற்போது 3 மடங்கு அதிகமாக இருக்கிறது.”
‘நானும் சுதாகரனும் நண்பர்கள்!’
சுதாகரனுக்காக தொழிலதிபர் லட்சுமிபதியின் மகன் லோகேஷ§ம், கர்நாடக மாநில அ.தி.மு.க இணைச்செயலாளர் ராஜுவின் மனைவி அன்பம்மாளும் வந்திருந்தனர். அவர்களிடம் குன்ஹா, ”சுதாகரனை உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்க, ”நானும் சுதாகரனும் நண்பர்கள்!” என்றார் லோகேஷ்.
இளவரசிக்கு கர்நாடக மாநில அ.தி.மு.க செயலாளர் புகழேந்தியும், ராஜேந்திரன் என்பவரும் ஷ்யூரிட்டி கொடுக்க வந்தனர். புகழேந்தியிடம் நீதிபதி, ”இளவரசியின் கணவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்?” என்று கேட்க, ”அவர் இறந்துவிட்டார்!” என்றார் புகழேந்தி. ”அவரோட பெயர் என்ன?” என்றார். ”ஜெயராமன்” என்று புகழேந்தி சொன்னார்.
அதன் பிறகு ரிலீஸ் ஆர்டர் டைப் செய்யப்பட்டது. இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு நீதிபதி குன்ஹா அதில் கையெழுத்திட்டார். கோர்ட் தபால் அலுவலகத்தில் அந்த பெயில் ஆர்டர் கொடுக்கப்பட்டது. தபால் ஊழியர் வெங்கடேஷை, அ.தி.மு.க வழக்கறிஞர்கள் தங்கள் காரில் வரச் சொன்னார்கள். ஆனால் அவரோ, ”அரசு விதிப்படி நான் என்னோட வாகனத்தில்தான் போக வேண்டும். இல்லைன்னா அரசு வாகனத்தில் போகலாம்! உங்களோடு வர முடியாது” என்று மறுத்துவிட்டார். பிறகு, போலீஸ் வாகனத்தில் பெயில் ஆர்டர் பரப்பன அக்ரஹாராவுக்குப் போக… அந்த வாகனத்தைப் பின்தொடர்ந்தனர் அ.தி.மு.க வழக்கறிஞர்கள். சரியாக 3 மணிக்கு பெயில் ஆர்டர் ஜெயிலில் கொடுக்கப்பட்டது.
‘திருப்பிக் கொடுக்கப்பட்ட வாட்ச்!’
பெயில் ஆர்டர் சிறைக்கு வருவதற்கு முன்னதாகவே ஜெயலலிதா, சசிகலா, இளவரசி ஆகிய மூவரும் புறப்படத் தயாராக இருந்தனர். ‘ஆர்டர் சீக்கிரமே வந்தாலும் நாம் மூன்று மணிக்குப் பிறகு கிளம்பலாம்!’ என்று சசிகலாவிடம் சொல்லியிருக்கிறார் ஜெயலலிதா. மதியம் ஒரு மணி அளவில் ஜெயலலிதா உட்பட மூன்று பேருக்கும் மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. சிறைக்குள் அடைக்கப்பட்டபோது, ஜெயலலிதா கையில் கட்டியிருந்த வாட்ச் மற்றும் வைர கம்மல்களை சிறை நிர்வாகம் வாங்கிக் கொண்டது. அந்த வாட்ச், வைர கம்மல்களை ஜெயலலிதாவிடம் திருப்பிக் கொடுக்கப்பட்டு, அதற்காக கையெழுத்தும் பெறப்பட்டது. அதேபோல சசிகலா, இளவரசி ஆகியோரின் நகைகளை அவர்களிடம் திருப்பிக் கொடுத்தனர் சிறை அதிகாரிகள். சரியாக 3.11-க்கு சிறையில் இருந்து வெளியே வந்தார் ஜெயலலிதா. வந்ததும் ஒருமுறை திரும்பி ஜெயிலைப் பார்த்தார். அதன் பிறகே காரை நோக்கி நடந்தார்.
காலில் விழுந்த முதல்வர்!
சிறைக் கதவுகளுக்கு வெளியே தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், அமைச்சர்களும் காத்திருந்தனர். ஜெயலலிதாவுக்கு இஸட் பிளஸ் பாதுகாப்பு இருப்பதால் அமைச்சர்களைக்கூட அருகே அனுமதிக்காமல் கயிறு கட்டப்பட்டு, அதற்குப் பின்பாகவே நிறுத்தப்பட்டனர். முதல்வர் பன்னீர்செல்வம் மட்டும் கயிறுக்கு மறுபுறம் இருந்தார். ஜெயலலிதா வெளியே வந்ததும் காரில் ஏறுவதற்கு முன்பாக, அவரது காலில் சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிட்டார். அவரைப் பார்த்து எந்த ரியாக்ஷனும் காட்டாமல் இறுகிய முகத்துடன் காரில் ஏறிக்கொண்டார் ஜெயலலிதா. அதே காரின் பின் சீட்டில் சசிகலாவும், இளவரசியும் ஏறினர். காரின் நான்கு டயர்களுக்கும் எலுமிச்சைப் பழங்கள் வைக்கப்பட்டன. பூசணிக்காயில் சூடம் ஏற்றி ஆரத்தி எடுக்கப்பட்டு காருக்கு முன்பாக உடைக்கப்பட்டது. அதன் பிறகே ஜெயலலிதா கார் அங்கிருந்து கிளம்பியது. ஜெயில் வாசலில் இருந்து செக்போஸ்ட் வரை, அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், மேயர்கள், எம்.பி-க்கள், முக்கியப் பிரமுகர்கள் என வரிசைகட்டி நின்றிருந்தனர். அவர்களைப் பார்த்தபோதும் ஜெயலலிதா அமைதியாகவே இருந்தார்.
தலைக்குப்புற விழுந்த மேயர்!
ஜெயலலிதாவைப் பார்த்ததும் அனைவரும், ‘அம்மா வாழ்க! தங்கத் தாரகையே, புரட்சித்தலைவி வாழ்க!’ என கோஷங்கள் எழுப்பி உணர்ச்சிவசப்பட்டதும், கர்நாடக போலீஸார் மொழி புரியாமல் என்னவோ, ஏதோவென பதறிவிட்டனர். பாதுகாப்புக்காக கட்டப்பட்டிருந்த கயிற்றை வேகமாக போலீஸார் பிடித்து இழுக்க… அந்தக் கயிறு மதுரை மேயர் ராஜன் செல்லப்பா காலில் மாட்டி, அவர் தலைக்குப்புற விழுந்தார். தலையில் அடிபட்டு எழு முடியாமல் கதறி அழுதார். அவரை யாரும் கண்டுகொள்ளவே இல்லை. ஜெயலலிதாவின் கார் செக்போஸ்ட்டை தாண்டிய பிறகுதான் மேயரை, மதுரை மாநகரச் செயலாளர் முத்துராமலிங்கம் தூக்கிவிட்டார்.
பரப்பன அக்ரஹாராவில் இருந்து கிளம்பிய ஜெயலலிதாவின் கார், சரியாக 3.50 மணிக்கு ஹெச்.ஏ.எல் ஏர்போர்ட்டை வந்தடைந்தது. வழி நெடுகக் கூட்டத்தைப் பார்த்த பிறகே ஜெயலலிதா முகத்தில் சின்ன உற்சாகம் தெரிந்தது. ஏர்போர்ட்டில் காத்திருந்து கையசைத்தவர்களைப் பார்த்துச் சிரித்தார். வணக்கமும் வைத்தார். ஏர்போர்ட்டில் ஜெயலலிதாவுக்காக காபி தயாராக வைத்திருந்தார் இளவரசியின் மகன் விவேக். அங்கே சற்று இளைப்பாறி காபி சாப்பிட்டுவிட்டு சென்னைக்குப் புறப்பட்டார்.
22 நாட்களாக பரபரப்பாக இருந்த பரப்பன அக்ரஹாரா இப்போது வெறிச்சோடிக் கிடக்கிறது!

Wednesday, October 15, 2014

மிஸ்டர் கழுகு: பயம் பயம் பன்னீர் பயம்!

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் ஜெயலலிதா பற்றிய தகவல்களுடன் பறந்துவந்து நம்முன் ஆஜரானார் கழுகார்.
”பெங்களூரு காட்சிகளை ஒவ்வொன்றாகச் சொல்ல ஆரம்பிக்கிறேன். சொத்துக் குவிப்பு வழக்கில் உள்ளே இருக்கும் சுதாகரனைப் பார்க்க அவரது மனைவி சத்தியலட்சுமி, மகன் விவேபார்கோ, மகள் ஹரிதா, மாமனார் நாராயணசாமி, மாமியார் சாந்தி ஆகியோர் பெங்களூரு வந்திருந்தார்கள். சாந்தி, சிவாஜி கணேசனின் மகள். இவரோடு சத்தியலட்சுமியின் உறவினர்கள் 15 பேருக்கும் மேற்பட்டோர் இரண்டு கார்களில் சுதாகரனைக் காண சிறைக்கு வந்தனர்.”
”இதுதான் முதல் தடவையா?”
”ஆமாம். சுதாகரனைப் பார்க்க அவரது மனைவி சத்தியலட்சுமி வந்திருப்பது சிறை வளாகத்தில் இருப்பவர்களுக்குத் தெரிய வந்ததும் பரபரப்பு பற்றிக்கொண்டது. ‘சிவாஜி ஃபேமிலி’ என்றும் ‘சிவாஜி மகள் இவங்கதானா?’ என்றும் பலரும் சிலாகித்துச் சொல்லிக்கொண்டனர்.
சிறைக்குள் சென்றதும் மகன் விவேபார்​கோவும் மகள் ஹரி​தாவும் தங்கள் தந்தை சுதாகரனைக் கட்டிப்பிடித்து அழுதிருக்கிறார்கள். ‘அழாதீங்க… யாரும் அழ வேண்டாம். எல்லாம் இறைவன் வகுத்த கணக்கு. இதில் இருந்து சீக்கிரத்தில் வெளியே வந்திடுவேன். நீங்க நல்லா படிக்கணும். அம்மாவைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று குழந்தைகளுக்கு ஆறுதல் சொல்லியிருக்கிறார் சுதாகரன். தன் மனைவி சத்தியலட்சுமியைக் கூப்பிட்டுக் காதில் ஏதோ சொல்லியிருக்கிறார். ‘அவுங்களையும் பார்க்கத்தானே வந்திருக்கோம்’ என்று சொல்லியிருக்கிறார் சத்தியலட்சுமி. ‘அவங்க’ என்று சொன்னது சசிகலாவையாம். ஆனால், இந்தக் குடும்பத்தினருக்குள் ஏதோ அதிருப்தி என்பதால் சசிகலாவைச் சந்திக்காமல் திரும்பிவிட்டார்களாம். இதனை அறிந்து சசிகலா அப்செட் ஆகிவிட்டார் என்று சொல்கிறார்கள்.”
”எம்.நடராசன் வந்திருந்தாரே… அவர் சசிகலாவைப் பார்த்தாரா?”
”சசிகலாவைச் சந்தித்துவிட வேண்டும் என்று ஒரு வாரமாக பெங்களூரில் தங்கியிருக்​கிறார் நடராசன். சிறையில் இருந்து எந்தத் தகவலும் வரவில்லை. ஒருமுறை நேரடியாக சிறை வளாகத்துக்கே வந்து காத்திருந்தார். ஆனால், மனுப்போட்டு பார்க்க முயற்சிக்க​​வில்லை. இந்தத் தகவல் சசிகலாவின் வழக்கறிஞர்மூலமாக தகவல் உள்ளே சொல்லப்​பட்டதாம். ‘நடராசனின் உணர்வுகளைச் சசிகலா உணர்ந்திருப்பார். ஆனால், அவரைச் சந்தித்தால் தேவையில்லாத பிரச்னைகள் உருவாகும் என்று சசிகலா நினைத்திருக்கலாம்’ என்று சுற்றி இருக்கும் வழக்கறிஞர்கள் சொல்கிறார்கள்.”
”ஓஹோ!”
”ஜெயலலி​தாவுக்கு செப்டம்பர் 27-ம் தேதி சிறைத் தண்டனை அளிக்கப்பட்டது. அன்று இரவே அவருக்குத் தேவையான ஆடைகள், அவர் பயன்படுத்தும் அனைத்துப் பொருட்களும் ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பெங்களூருக்குக் கொண்டுவரப்பட்டது. அதை சேலம் கோட்டை பாபு என்பவர் காரில் சிறை வளாகத்துக்குக் கொண்டு சென்றார். ஆனால், சிறைத் துறை அதிகாரிகள் அதை உள்ளே கொண்டு செல்ல அனுமதிக்காததால் பெண்கள் சிறை நுழைவு வாயில் எதிரே கேரவேனில் வைத்துள்ளனர். அனைத்துப் பொருட்களோடு ஆடைகளும் அங்குதான் இருக்கிறது. அதை ஜெயலலிதா கேட்கும்போது அவரது பணிப் பெண் ராணி சிறைக்குள் சென்று கொடுத்து வருகிறார். தற்போது வரை தினமும் ஜெயலலிதாவைச் சந்திக்கும் ஒரே நபர் ராணிதான். அதனால் சிறைக்கு வரும் அமைச்சர்கள் சிறைத் துறை நோட்டில் என்ட்ரீ செய்கிறார்களோ இல்லையோ, ராணியின் பார்வையில்பட காத்துக் கிடக்கிறார்கள்.”
”ஜெயலலிதாவின் பி.ஏ பூங்குன்றன் அங்குதான் இருக்கிறாரா?”
”செப்டம்பர் 27-ம் தேதியில் இருந்து சிறை வட்டாரத்திலேயே இருக்கிறார் பூங்குன்றன். அதனால் சரியாகச் சாப்பிடாமல், சரியாகத் தூங்காமல் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதால் பூங்குன்றனின் முகம் தாடியோடு பொலிவு இழந்து காணப்படுகிறது.”
”ஜெயலலிதா எப்படி இருக்கிறாராம்?”
”சிறைத் துறை விதிப்படி ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை அன்று சிறைக் கைதிகளுக்கு பணி குறிப்பிடுவதோடு, அவர்களின் ஹிஸ்டரி கார்டில் உடல் எடையும் குறிப்பிடுவது வழக்கம். இந்த இரண்டு வாரத்தில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நான்கு பேரும் சராசரியாக 3 கிலோ குறைந்திருக்கிறார்கள். ஜெயலலிதா துல்லியமாக 3.650 கிலோ கிராம் எடைக் குறைந்துள்ளதால் சிறைத் துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். அவரின் உடல் எடை சீராக இருக்க மருத்துவ டீமிடம் கடும் முயற்சி எடுத்து வருகிறார்கள்”
”அப்படியா?”
”பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலையில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை கைதிகளைப் பார்க்க அவர்களது குடும்பத்தினரும் உறவினர்களும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மனுப் போட்டு பார்க்க வருவார்கள். பல ஏக்கரில் சிறைச்சாலை இருப்பதால் ஒவ்வொரு கைதிகளிடமும் போய், ‘உங்களைப் பார்க்க உங்கள் குடும்பத்தில் இருந்து வந்திருக்கிறார்கள்’ என்று நேரில் சென்று அழைத்து வர முடியாது என்பதால் ஆடியோமூலம் அவரது பெயர், நம்பர், ஊர், விலாசத்தை மைக்-கில் கூப்பிடுவார்கள். இந்தச் சத்தம் சிறை முழுக்க எதிரொலிக்கிறது. அடிக்கடி இப்படி மைக்-கில் சத்தம் போட்டுக் கூப்பிடுவதால் எப்போதும் சப்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். இந்தச் சப்தம் ஜெயலலிதாவுக்குக் கடும் எரிச்சலை ஏற்படுத்துகிறதாம். அனைத்து இடங்களுக்கும் பொதுவாக ஒலிக்கும் குரல் என்பதால், அதனை எதுவும் செய்ய முடியாது. நாளுக்கு நாள் இதனைச் சகித்து வாழ ஆரம்பித்துவிட்டாராம் ஜெயலலிதா.”
”வெயில் தாங்கமாட்டாரே ஜெயலலிதா… பெங்களூரு க்ளைமெட் எப்படியிருக்கிறது?”
”கடந்த ஒரு வாரமாக பெங்களூரில் இரவு நேரங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் பரப்பன அக்ரஹாரா ஜில்லென்று இருக்கிறது. அதனால் ஓரளவுக்குச் சமாளித்து வருகிறார் என்றும் சொல்கிறார்கள்.”
”பெங்களூரில் ஜெயலலிதாவின் உறவினர்கள் குடும்பங்கள் உண்டே… அவர்கள் யாராவது வந்து பார்த்தார்களா?”
”ஜெயலலிதாவின் தாத்தா ரங்காசாரி​யார் ஸ்ரீரங்கத்தில் இருந்து மைசூருக்கு வந்தவர். வந்த இடத்தில் கர்நாடகாவைச் சேர்ந்த கமலம்மாவைக் திருமணம் செய்துகொண்டார். கமலம்மா உடன்பிறந்தவர்கள் செல்லம்மாள், சீதாம்மாள், கல்யாணம்மாள், சுந்தரம்மாள், ரங்கநாயகியம்மாள் என 5 சகோதரிகளும் ராஜு, கிருஷ்ண ஐயங்கார், துரைசாமி, சம்பத் என 4 சகோதரர்களும் இருக்கிறார்கள். இந்தக் குடும்பத்தில் உள்ள மூத்தவர்கள் இறந்துபோன நிலையில், அவர்களின் குடும்ப வாரிசுகள் இருக்கிறார்கள். அதேபோல ஜெயலலிதாவின் அம்மா சந்தியாவின் உடன்பிறந்த வித்யாவதி உட்பட மூன்று சகோதரிகள் இருக்கிறார்கள். இந்த மொத்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் தற்போது பெங்களூரு ஜெய்நகர் அருகே பசுவனகுடி பகுதியில்  இருக்கிறார்கள். இவர்கள் யாரும் ஜெயலலிதாவுடன் தொடர்பே இல்லாத நிலையில் இருப்பவர்கள்தான்.
கர்நாடக உயர் நீதிமன்ற வழக்கறிஞராக இருக்கும் ஜெயலலிதாவின் உறவினர் ஒருவர் வீட்டில், இவர்களில் முக்கியமானவர்கள் அனைவரும் கூடி, ஜெயலலிதாவின் கைது பற்றியும் மேற்கொண்டு என்ன செய்யலாம்  என்றும் ஆலோசித்து இருக்கிறார்கள். இதில் கலந்துகொண்ட ஜெயலலிதாவின் உறவினர்கள் பலரும் பலவிதமாகப் பேசி இருக்கிறார்கள். ‘நமக்கு எதுக்குத் தேவையில்லாத வேலை’ என்று சிலர் சொல்லியிருக்கிறார்கள். ‘இவ்வளவு நாள் இல்லாத சொந்தங்கள் இப்ப மட்டும் எதற்கு வருகிறீர்கள் என்று எடுத்தெறிந்து பேசுவார்’ என்றும் சிலர் சொல்லியிருக்கிறார்கள்.”
”சொல்லும்!”
”இன்னும் சிலர், ‘அவர் நம்மிடம் தொடர்புகொள்வது இல்லை என்பதற்காக அவருக்கு ஆபத்து வந்தாலும் அதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியுமா? ஒருவருக்கு நல்ல நிலையில் இருக்கும்போது சொந்தங்கள் தேவையில்லை. கஷ்டப்படும்போது அவர்களுக்கு உதவுவதுதான் உண்மையான சொந்தங்களின் வேலை. அவர் நம்மை ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை. அவருக்கு உதவுவதுதான் சரி. அவர் தற்போது ரொம்ப இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறார்’ என்று ஒருவர் சொல்லியிருக்கிறார். சட்ட நிபுணர்கள் ஆலோசனையைப் பெற்று அடுத்தகட்ட செயல்பாடுகளில் இறங்கலாம் என்று இந்த உறவுகள் திட்டமிட்டுள்ளதாம்!”
”சசிகலா?”
”ஜெயலலிதாவின் சொந்தங்கள் இப்படி கூடிப் பேசியதை சிலர் ரசிக்கவில்லை. இந்தத் தகவலை மோப்பம் பிடித்த தமிழக உளவுத் துறையில் இருக்கும் சசிகலாவின் விசுவாசமான அதிகாரிகள் அவருக்குத் தகவல் கொடுத்ததாகவும் சொல்கிறார்கள். ‘எப்படியாவது கூடிய சீக்கிரத்தில் கர்நாடகாவைவிட்டு காலி செய்துவிட வேண்டும் என்று சசிகலா நினைக்கிறார். உச்ச நீதிமன்றத்தில் பெயில் கிடைத்துவிட்டால் உடனே கிளம்பிவிடலாம். இல்லாவிட்டாலும் உடனே தமிழக சிறைக்கோ, இல்லை வேறு மாநில சிறைக்கோ மாற்றம் செய்ய என்ன சட்டத்தில் வழிமுறைகள் இருக்கிறதோ அதை உடனே ஆலோசித்து செய்யுங்கள். இனி கர்நாடகாவில் இருக்கும் ஒவ்வொரு நொடியும் நமக்கு ஆபத்துதான் என்று சசிகலா எச்சரிக்கை செய்திருக்கிறார்’ என்று சொல்கிறார்கள். சிறைக்குள் இருக்கும் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுகாதரன் பற்றிய அப்டேட் தகவல்களை தமிழக அரசுக்குக் கொடுப்பதற்காக வேலூர் சிறையில் இருந்து ஒரு பெண் அதிகாரியையும், புழல் சிறையில் இருந்து ஓர் ஆண் அதிகாரியையும் பரப்பன அக்ரஹாரா சிறையைக் கண்காணிக்கும் பணிக்கு மாற்றி இருக்கிறார்கள்.”
”ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும் என்று சத்தியநாராயணன் என்பவர் மனு போட்டாரே?”
”கடந்த 7-ம் தேதி ஈரோட்டைச் சேர்ந்த சத்தியநாராயணன் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இப்படி ஒரு மனு  போட்டார். அது 10-ம் தேதி கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஹெச்.வகேலா முன்னிலையில் விசாரணைக்கு வர இருந்தது. ஆனால், திடீரென்று சத்தியநாராயணன் அதனை வாபஸ் வாங்கிவிட்டார். ‘அவரை மிரட்டி வாபஸ் வாங்கச் சொன்னார்கள்’ என்றும் சொல்லப்படுகிறது. சத்தியநாராயணன் சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வக்கீல் பாலசுப்பிரமணியம் ஆஜரானார். ‘எங்களை யாரும் மிரட்டவில்லை. மிரட்டவும் முடியாது. நாங்கள் வழக்கறிஞர்கள் எங்களுக்குச் சட்டம் தெரியும். மிரட்டி இருந்தால் அதை நீதிபதியிடம் சொல்லி இருப்போம். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு மேல்முறையீட்டுக்குச் சென்றிருப்பதால், உச்ச நீதிமன்றத்தில் வழக்கை மாற்றிக் கொள்ளலாம் என்பதற்காகத்தான் இந்த மனுவை வாபஸ் பெற்றோம். வாக்களிப்பதோடு மட்டும் மக்களின் கடமை முடிந்து விடுவதில்லை. வாக்களித்த மக்களின் பிரதிநிதியை பாதுகாப்பதும் மக்களின் கடமை. ஆனால், அதைப் புரிந்துகொள்ளாமல் எங்களை விஷக் கிருமிகள் என்று விமர்சித்திருப்பது எங்களுக்கு மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தி உள்ளது’ என்று இந்த பாலசுப்பிரமணியம் சொல்லி வருகிறாராம்.”
”எப்படி இருக்கிறார் புதிய முதல்வர் பன்னீர்செல்வம்?”
”தெனாலி’ கமல் மாதிரி எல்லாம் அவருக்கு பயம் தான்! கடந்த மாதம் 29-ம் தேதி முதல்வரான ஓ.பன்னீர்செல்வம், உடனே பெங்களூரு சென்று, சிறையில் உள்ள ஜெயலலிதாவைப் பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் சென்னை திரும்பினார். தமிழக முதல்வருக்கான அறை, கோட்டையின் முதல் தளத்தில் இருக்கிறது. அங்கே செல்லாமல் ஏற்கெனவே அமைச்சராக இருந்தபோது தனக்கு ஒதுக்கப்பட்ட அறையிலேயே ‘முதல்வர்’ பன்னீர்செல்வம் உட்கார்ந்து விட்டார். அவரது அறையின் முன்பு, ‘நிதி மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்’ என்ற போர்டுதான் இன்று வரை தொங்குகிறது. அவர் குடியிருக்கும் ‘தென்பெண்ணை’ பங்களாவிலும் ‘நிதி மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர்’ என்றே போர்டு வைக்கப்பட்டுள்ளது!”
”இதைக் கூடவா மாற்றக் கூடாது?”
”பயம்தான்! பெயர் பலகை மாற்றுவதை அம்மா விரும்புவாரா, மாட்டாரா என்று தெரியாமல் எப்படி மாற்றுவது என்ற பயம்தான் அதற்குக் காரணம். பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் பெயில் பெட்டிஷன் டிஸ்மிஸ் ஆன, அக்டோபர் 7-ம் தேதிதான் தலைமைச் செயலாளர், அரசின் ஆலோசகர், போலீஸ் டி.ஜி.பி உள்ளிட்ட அதிகாரிகளை அழைத்துச் சட்டம் ஒழுங்கு பற்றி ஆய்வு நடத்தினார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். ‘பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலான எந்த ஒரு நடவடிக்கைகளையும் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் விரும்பமாட்டார்கள். எனவே, கடையடைப்பு, வேலை நிறுத்தம் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம். இது அம்மா அவர்களுக்கு நம்முடைய அன்பை, ஆதரவை, மாறாப் பற்றை, பாசத்தை வெளிப்படுத்தும் செயல்’ என்று அறிக்கைவிட்டார்.
அதன் பின்னர் ஒவ்வொரு நாளும் அதிகாரிகள் வந்து இவரைப் பார்க்கிறார்கள். அவர்கள் வரும்போது இவர் கூச்சத்தால் நெளிகிறார். பொதுவாக முதல்வர் நடத்தும் ஒவ்வொரு கூட்டத்திலும் தலைமைச் செயலாளர், அரசு ஆலோசகர், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள், துறைச் செயலாளர்கள் உடன் இருப்பது வழக்கமானது. ஆனால், தற்போது ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் ஆன பிறகு நடக்கும் ஒவ்வொரு கூட்டத்திலும்  மின் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், வீட்டு வசதித் துறை அமைச்சர் வைத்திலிங்கம், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய மூத்த மூன்று அமைச்சர்களும் தவறாமல் உடன் இருக்கிறார்கள்”
”தனியாக இருக்க பயமா?”
”தீபாவளி பண்டிகைக்கான சிறப்பு பஸ் இயக்கும் அறிவிப்பிலும், ‘மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உத்தரவின் பேரில்’ என்றுதான் முதல்வர் ஓ.பன்னீசெல்வம் சொல்லியிருந்தார். முதல்வராகிவிட்டாலும் பன்னீர் இன்னும் ‘முதல்வர்’ என்று தன்னை நினைக்கவில்லை. ‘கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிடம் பவ்யமாக, பணிவாக நடந்துகொள்வதில் தவறு இல்லை. ஆனால், ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது வழிகாட்டுதல் என்று அறிக்கை வெளியிடுவது எப்படிச் சரியாகும்?’ என்று பலரும் கேட்க ஆரம்பித்துள்ளார்கள். இதுவரை கேபினட் கூட்டம் நடக்கவில்லை. துறை ரீதியான ஆய்வுகளை இன்னும் தொடங்கவில்லை. நவம்பர் மாதம் சட்டசபை குளிர்காலக் கூட்டம் கூடியாக வேண்டும். அதற்கான ஆலோசனை நடக்கவில்லை. மாவட்ட கலெக்டர்கள், எஸ்.பி-க்கள் மாநாடு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்தது. இந்த ஆண்டு டிசம்பரில் நடத்துவதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்க வேண்டும். புதிய முதல்வரை மரியாதை நிமித்தமாக அதிகாரிகள் வந்து பார்க்க வேண்டும். யாரையும் பன்னீர் பார்க்கவில்லை!”
”ம்!”
”பன்னீர் ஆதரவாளர்களிடம் கேட்டால், ‘அண்ணன் முதல்வராகப் பதவியேற்ற பிறகு இன்னும் அம்மாவை பெங்களூருக்குச் சென்று பார்க்க வாய்ப்பு தரப்படவில்லை. அம்மாவுக்கு ஜாமீன் கிடைத்து அவரை நேரடியாகப் பார்த்து ஆசி வாங்கிவிட்டுத்தான் பணியைத் தொடங்க வேண்டும் என்று நினைக்கிறார்’ என்று சொல்கிறார்கள்!”
”அது எப்போது?”
”13-ம் தேதி, திங்கள்​​கிழமை அன்று உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் ஜாமீன் வழக்கை எடுத்துக் கொள்வார்கள் என்று நினைத்தார்கள். ஆனால் 17-ம் தேதிதான் உச்ச நீதிமன்றம் வழக்கை எடுக்க இருக்கிறது. மறுநாள் 18-ம் தேதியில் இருந்து 26 வரைக்கும் உச்ச நீதிமன்றத்துக்கு விடுமுறை. அதனால் 17-ம் தேதி ஜாமீன் கொடுத்தால்தான் உண்டு. இல்லாவிட்டால் தீபாவளியைத் தாண்டிய பிறகுதான் ஜெயலலிதா வெளியில் வரமுடியும்!” என்று சொல்லிவிட்டுப் எழுந்த கழுகார், ” ‘தீபாவளியை கட்சிக்காரங்க யாரும் பெருசா கொண்டாட வேண்டாம். அம்மா வெளியில் வரும் நாள்தான் நமக்கு தீபாவளி. இதை கட்சிக்காரங்க எல்லோருகிட்டயும் சொல்லுங்க’ என்று உடனிருக்கும் அமைச்சர்களிடம் சொல்லி வருகிறாராம் முதல்வர் பன்னீர்” என்றபடி பறந்தார்.