எத்தனையோ முறை சொன்னோம். ஆனால், பட்டால்தான் திருந்துவோம் என்ற முடிவோடு ஏமாந்தவர்களை என்னவென்று சொல்வது!
ஈமு கோழியில் முதலீடு செய்பவர்களைத் தொடர்ந்து எச்சரித்து வந்தோம். கடந்த சில வாரங்களுக்கு முன், கோபிசெட்டிபாளையத்தில் கே.ஜி. பிரைட் லைவ் ஸ்டாக் இந்தியா (பி) லிமிடெட் என்ற நிறுவனத்தின் மீது புகார் கிளம்பியது. இப்போது, பெருந்துறையைச் சேர்ந்த சுசி ஈமு ஃபார்ம்ஸ் காவல்துறையின் பிடிக்குள் சிக்கி இருக்கிறது. ஏமாற்றப்பட்டு நொந்துபோய் இருக்கும் விவசாயிகள் அந்த நிறுவனத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் குதித்துள்ளனர். கூடவே, இந்த நிறுவனத்தின் விளம்பரப் படங்களில் நடித்த நடிகர்கள் சத்யராஜ், சரத்குமார் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் புகார் செய்யவே ஏரியா கலகலக்கிறது.

ஈமு வளர்ப்பு மோசடிக்கு எதிராக பல வருடங்களாகப் போராடி வரும் வழக்கறிஞர் தளபதியைச் சந்தித்தோம். ''சுசி ஈமு நிறுவனத்தின் அதிபர் குரு என்ற குருசாமி. இவர், பெருந்துறை நகர பா.ம.க. செயலாளராக இருந்தவர். இத னால் அவருக்கு ஒரு அறிமுகம் இருந்தது. மேலும், ஈமுவுக்காக விளம்பரம் செய்த நடிகர்கள் சத்யராஜ் மற்றும் சரத்குமார் மீது மக்களுக்கு நிறைய மரியாதை இருக் கிறது. அதனால்தான், பாமர கிராம விவ சாயிகள் உட்பட 25,000 பேருக்கும் மேல் முதலீடு செய்தனர். மொத்த முதலீடு 600 கோடி ரூபாயைத் தாண்டி இருக்கலாம். இந்த மோசடிக்கு மாவட்ட நிர்வாகம், கால்நடைத் துறையும் உடந்தையாக இருந்துள்ளன. இவர்கள் அனைவரின் மீதும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார் ஆவேசமாக.

சுசி ஈமு ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் சார்பில் பேசியவர்கள், ''எங்க நிறுவனத்தின் உரிமையாளர் குரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். இங்கே உள்ள ஆதிக்க சமுதாயத்தினரும், காவல்துறையைச் சேர்ந்த சில அதிகாரிகளும் மாமூல் கேட்டு தொடர்ந்து அவரை மிரட்டி வந்தனர். ஆனால், மாமூல்
கொடுக்க குரு மறுத்து விட்டார். அதனால், ஆட்களைத் தயார் செய்து, ஒரே சமயத்தில் எங்கள் நிறுவனத்தை முற்றுகையிட வைத்து பிரச்னை ஆக்கி விட்டனர். முதலீட்டாளர்களுக்கு நாங்கள் பணம் கொடுக்கத் தயாராகவே இருக்கிறோம்'' என்றனர்.

விளம்பரத்தில் நடித்த நடிகர் சத்யராஜிடம் பேசினோம். ''ஈமு கோழி விளம்பரம்னு சொன்னாங்க. நடிச்சுக் கொடுத்தேன். மத்தபடி அதுல இருக்கும் நல்லது கெட்டது எல்லாம் எனக்குத் தெரியாதுங்க'' என்று சொன்னார்.

ஈமு தொடர்பாக விசாரணை நடத்திவரும் ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷிடம் பேசினோம். ''ஆயிரக்கணக்கான புகார்கள் வந்துள்ளன. 200 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. புகார் தருபவர்கள் சத்யராஜ், சரத்குமார் போன்ற நடிகர்கள் சொன்னதனால்தான் முதலீடு செய்தோம் என்கின்றனர். இந்த விஷயத்தில் நடிகர்களும் பொறுப்பு உணர்வோடு நடந்து கொள்ள வேண்டும். இவை ஒரு பக்கம் இருக்க... அந்தப் பண் ணைகளில் இருக்கும் ஈமுவுக்கு உணவு கொடுக்க யாரும் இல்லை. அதன் பசியைப் போக்க நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்'' என்றார்.
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள்!
No comments:
Post a Comment