தேர்தல் தோல்வி, தொடர் கைதுகள், குடும்பச் சண்டை என கலகலத்துக் கிடக்கும் தி.மு.க.வில் பரிதியின் பேச்சுக்கள் பரபரப்பை அதிகப்படுத்தி இருக்கின்றன. முன்னாள் அமைச்சரும், தி.மு.க. துணைப் பொதுச் செயலாளருமான பரிதி இளம்வழுதி உட்கட்சிப் பூசலால் கட்சியில் இருந்து தனது பதவியை ராஜினாமா செய்வதாக அக்டோபர் 8-ம் தேதி அறிவித்தார். இது தொடர்பாக சில நாட்கள் மௌனம் காத்த கட்சியின் தலைமை, கடைசியில் அவரின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதோடு, முன்னாள் து ணை சபாநாயகர் வி.பி. துரைசாமியை பரிதிக்குப் பதிலாக துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டதாக அறிவித்துள்ளது.
கட்சித் தலைமையில் இருந்து தன்னை அழைத்துப் பேசுவார்கள் என்று காத்திருந்த பரிதி, இந்த அறிவிப்பால் உடைந்து போய்விட்டார். இதையடுத்து, தி.மு.க.வில் தன் னைப்போல் அதிகம் பேர் அதிருப்தியில் உள்ளதாகவும் அவர்களுக்கு தலைமையேற்று போராடப் போவதாகவும் பரிதி அறிவித்தார். பரிதியின் ராஜினாமா குறித்து கருத்து எதுவும் தெரிவிக்காத கருணாநிதியும் கடைசியில் கொதித்து இருக்கிறார்.
‘‘கையிலே காசில்லாத போது, கழகத்திற்கு நேர்ந்த கொடுமைகளைச் சந்திக்க முயன்றவர்கள், கையிலே காசு சேர்ந்த பிறகு அதைக் காப்பதற்கு கழகத்தையே காட்டிக் கொடுக்கிறார்கள்’’ என்கிற கருணாநிதியின் பேச்சு பரிதிக்கானது என்கிறார்கள் உடன்பிறப்புகள்.
இந்தப் பரபரப்பான சூழ்நிலையில், பரிதியின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என அறிய அவரை சந்தித்தோம்.
நீங்கள் கட்சிப் பதவியை ராஜினாமா செய்ய உண்மையிலேயே என்ன காரணம்?
‘‘ஏற்கெனவே, நான் சொன்ன காரணம்தான். நான் புகார் கொடுத்ததின் பேரில் மூன்று பேர் மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுத்தது. ஆனால், அவர்களை உடனே க ட்சியில் மீண்டும் சேர்த்துக் கொண்டார்கள். அதுபற்றி என்னிடம் ஒருவார்த்தை கூட கூறவில்லை. இதைத்தவிர, புதிதாக வேறு எந்தக் காரணமும் என்னிடம் இல்லை.’’
‘கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக இருப்பவர், தலைவரை சந்திக்காமல் ராஜினாமா கடிதத்தை பத்திரிகைகளுக்கு அனுப்பியது ஏன்?’ என்று டி.கே.எஸ்.இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளாரே?
‘‘நான் தலைவர் வீட்டுக்கும், அறிவாலயத்திற்கும்தான் என்னுடைய ராஜினாமா கடிதத்தை அனுப்பினேன். அது பத்திரிகை அலுவலகங்களுக்குச் சென்றது எப்படி என எனக்குத் தெரியாது. ‘தன்நெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்னெஞ்சே தன்னைச் சுடும்’ என்ற திருக்குறளை என் விஷயத்தில் எனக்கு எதிராகச் செயல்படும் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன்.’’
உட்கட்சியில் ஜனநாயகம் இல்லை என்று கூறியிருந்தீர்களே, எந்த அடிப்படையில் என்று சொல்ல முடியுமா?
‘‘என் விஷயத்தில் ஜனநாயகத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டதா என்பது சம்பந்தப்பட்டவர்களின் மனசாட்சிக்குத் தெரியும்.’’
ஜெயலலிதாவைப் புகழ்ந்து புத்தகம் எழுதியவர்தான், உங்களைப் பற்றி தவறான செய்திகளை கட்சித் தலைமைக்கு சொல்வதாக அறிக்கையில் சொல்லி இருந்தீர்கள். யார் அவர்?
‘‘என்னைப் பற்றி தவறான கருத்துக்களை சொன்னவர் யார் என்று கட்சித் தலைமைக்குத் தெரியும். ஒருவரைப் பற்றி புகார் சொன்னால், யார் அவர், எங்கிருந்து வந்தவர் என்று பார்க்காமல், யார் எது சொன்னாலும் நம்பிவிடுவதா? அதுபற்றி என்னிடம் விசாரிக்க வேண்டாமா?’’
தி.மு.க.வில் தமிழகம் முழுவதும் அதிருப்தியாளர்கள் இருப்பதாகக் கூறியுள்ளீர்கள், இதற்கு என்ன காரணம்?
‘‘என்னுடைய புகாரின் அடிப்படையில் தலைவர் நடவடிக்கை எடுக்க உத்தரவிடுகிறார். ஆனால், ஓரிரு நாட்களிலேயே நடவடிக்கை எடுக்கப்பட்ட நபர் தான் செய்த தவறுக்கு வருத்தம் கூட தெரிவிக்காத நிலையில் மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்கின்றனர். கட்சியின் துணைப் பொதுச்செயலாளரான எனக்கே இந்த நிலை என்றால், மற்றவர்களுக்கு என்ன மரியாதை இருக்கும். இப்படி சின்னச்சின்ன விஷயத்தில் கூட ஜனநாயகம் கடைப்பிடிக்கப்படாததால் கட்சியில் அதிருப்தியாளர்கள் அதிகரித்துள்ளனர்.’’
‘தி.மு.க.வில் உள்ள அதிருப்தியாளர்களுக்கு எல்லாம் நான் தலைமை தாங்குவேன்’ என்று கூறியிருந்தீர்களே? புதிய கட்சியை துவங்கும் திட்டம் இருக்கிறதா?
‘‘புதிதாக கட்சி துவங்கித்தான் போராட வேண்டும் என்றில்லை. போராட்ட குணம் உடையவர்கள், இருக்கும் இடத்தில் இருந்தபடியே போராடலாம்.’’
அப்படியென்றால், அதிருப்தியாளர்களை ஒன்றுதிரட்டி என்ன செய்யப்போகிறீர்கள்?
‘‘நீதி கேட்டுப் போராடுவேன்.’’
நீங்கள் போராளி என்று சொல்கிறீர்கள். ஆனால், ‘கோழைகள் விலகட்டும், வீரர்கள் என் பின் தொடரட்டும்’ என்று உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தில் கருணாநிதி சொன்ன கருத்து உங்களைப் பற்றித்தான் என்று உடன்பிறப்புகளே கூறுகின்றனரே?
‘‘அண்ணா சொன்னதை, தலைவர் சொல்லியிருக்கிறார். அண்ணா யாரை நினைத்துச் சொன்னாரோ அது தெரியாது. அதேபோல், தலைவர் யாரை நினைத்துச் சொன்னார் என்பதும் எனக்குத் தெரியாது. ஆனால், நிச்சயமாக என்னைப் பற்றி சொல்லியிருக்க மாட்டார். ஏனெனில், என் வீரத்தைப் பற்றி தலைவருக்கு நன்கு தெரியும்.’’
புதிய கட்சி துவக்கும் திட்டம் ஏதும் இல்லை எனில், கட்சி மாறும் எண்ணம் இருக்கிறதா?
‘‘வடசென்னை மாவட்டத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமை செயற்குழு உறுப்பினராக உள்ளேன். இதே கட்சியில் அடிப்படை உறுப்பினராகத் தொடர்வேன்.’’
கருணாநிதிக்குப் பின்பு ஸ்டாலின் என்கிற நிலையில், நீங்கள் அவருடன் மோதல் போக்கை கடைப்பிடித்துக் கொண்டு எப்படி கட்சியில் நீடிக்க முடியும்?
‘‘தலைமை இடத்தில் இருப்பவர்களுக்கு எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் பண்பு இருக்க வேண்டும். நான், ஸ்டாலினுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்கவில்லை. அவர் செய்த தவறை சுட்டிக்காட்டி நீதிதானே கேட்கிறேன்.’’
தி.மு.க.வில் கருணாநிதியைப் பகைத்துக்கொண்டு கூட ஒருவர் இருந்து விடலாம், ஆனால், ஸ்டாலினைப் பகைத்துக் கொண்டு கட்சியில் இருக்கமுடியாது என்ற கருத்து நிலவுகின்றதே?
நீண்ட யோசனைக்குப் பின் சிரிப்பு...
நீங்கள் ஸ்டாலின் ஆதரவாளர் இல்லை என்பதுதான் கட்சியில் உங்களுக்கு பிரச்னை ஏற்பட காரணம் எனச் சொல்லப்படுகிறதே?
‘‘தி.மு.க இளைஞரணி துவக்கிய காலத்தில் 2-ம் ஆண்டு விழா திருச்சியில் நடந்தது. இளைஞரணித் தலைவர் பதவி தனக்குத் தான் கிடைக்கும் என்று வைகோ உட்பட பலர் காத்துக் கொண்டிருந்த நேரம். அப்போது மேடையேறி, ‘இளைஞரணிக்குத் தலைவ ராக ஸ்டாலினை நியமிக்க வேண்டும்’ என்று நான் பேசினேன். ஒரே குடும்பத் தைச் சேர்ந்தவர்கள் யார் யார் அரசியலில் இருக்கிறார்கள் என்று நேரு குடும்பத்தில் துவங்கி மாநிலம் வாரியாக பெயர்களைச் சொன்னதும் ஒரே கைதட்டல். ஆனால், மேடையில் இருந்த கருணாநிதி பாதியிலேயே கிளம்பிவிட்டார். ஏனெனில், இளைஞரணிப் பொறுப்பை வேறு ஒருவருக்குக் கொடுக்கும் எண்ணம் அவருக்கு இருந்தது.
மறுநாள் நடந்த நிர்வாகக் குழு கூட்டத்தில், சமீபத்தில் மறைந்த க.சுப்புதான், ‘அந்தப் பையன் பேசியதில் தவறில்லை. பிறர் விமர்சிப்பதைப் பார்க்காதீர்கள், கட்சியின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு முடிவு எடுங்கள்’ என்று சொன்னார். அதன்பின்புதான், ஸ்டாலினுக்கு இளைஞரணிச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. ஆனால், இன்றைக்கு அவரால் நான் வெளியேற வேண்டி வந்திருக்கிறது.’’ (மறுபடியும் சிரிப்பு)
சரி உங்களது அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்?
‘‘இப்போதே அனைத்தையும் சொல்லிவிட்டால் எப்படி? அடுத்தடுத்த சந்திப்புகளில் சொல்வதற்கு விஷயங்கள் வேண்டாமா?’’ சிரித்தபடியே நழுவினார் பரிதி இளம்வழுதி.
No comments:
Post a Comment