Monday, February 6, 2012

எனது இந்தியா! ( சென்னையை ஆண்ட அசோகர் ) - எஸ். ராமகிருஷ்ணன்....


பிராமி, இடப் பக்கத்தில் இருந்து வலப் பக்கமாக எழுதப்பட்ட எழுத்துமுறை. மெய் எழுத்துகளுக்குத் தனி வடிவமும், உயிர் எழுத்துகளுக்குத் தனி வடிவமும், உயிர்மெய் எழுத்துகளை எழுத, மெய் எழுத்துகளுக்கு மேல் சில உயிர்க் குறி திரிபுகள் சேர்க்கப்பட்டன. கூட்டெழுத்துகளை எழுதும்போது, ஓர் எழுத்துக்குக் கீழே இன்னோர் எழுத்து இடப்படும்.ஐராவதம் மகாதேவன் போன்றதொல் லியல் அறிஞர்கள், தமிழ் பிராமியில் இருந்தே அசோகன் பிராமி தோன்றி இருக்கலாம் என்ற கருத்தை வெளியிட்டு உள்ளனர். அசோகன் பிராமியைப் போல், தமிழ் பிராமியில் கூட்டெழுத்துகள் கிடையாது. மேலும், அசோகன் பிராமியில் காணப்படாத ற, ன, ள, ழ ஆகியவை தமிழுக்கே உரிய எழுத்துகள். இந்த நான்கு எழுத்துக்களும் அசோகன் பிராமியையும், தமிழ் பிராமியையும் வேறுபடுத்த உதவுகின்றன. இதனால், தமிழ் பிராமி எழுத்துக்கள் அசோகன் பிராமிக்கும் முற்பட்டதாக கி.மு. ஐந்தாம் நூற்றாண்டைச் சார்ந்த​தாக இருக்கலாம் என்றும் ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது.


பண்டைய கலிங்கம் என்பது தற்கால ஒரிஸ்ஸா, ஆந்திரா ஆகிய மாநிலங்களின் பகுதிகளை உள்ளடக்கியது. குலோத்துங்கன் என்னும் சோழ மன்னன் காஞ்சியை ஆண்டபோது, அனந்த வர்மன் என்னும் கலிங்க மன்னன் வரி கொடாமல் இருக்கவே, அவன் மீது முதலாம் குலோத்துங்கனின் படைத் தலைவனும் அமைச்சருமான கருணாகரத் தொண்டைமான், கி.பி. 1112-ம் ஆண்டில் படை எடுத்துச் சென்று கலிங்கத்தை வென்ற செய்தியை ஜெயங்கொண்டார் இயற்றிய கலிங்கத்துப் பரணி பாடுகிறது.அந்த நாட்களில் ஒரிசாவை காரவேளர்கள் ஆட்சி செய்தனர். அவர்களது ஹதிகும்பா கல்வெட்டில் தமிழக மன்னர்கள் பற்றிய செய்திகள் இடம்பெற்று இருக்கின்றன. ஒரிஸ்ஸாவில் கலிங்கத்துப் பரணிக்கு எதிர் வடிவம் போல, காஞ்சியைக் கலிங்கம் வென்ற கதையை நாட்டிய நாடகமாக நடத்துகிறார்கள். இது, ஆண்டுதோறும் தௌலியில் நடைபெறும் கலிங்க மகோற்சவம் நிகழ்ச்சியில் நடக்கிறது. அசோகர் காலத்தில் ஒன்பது பேர் கொண்ட ஒரு ரகசியப் படை இருந்தது, (Nine Unknown Men ) அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு கலையில் விற்பன்னர்கள். ஒன்பது பேரும் இணைந்து செயல்பட்டார்கள். அசோகனின் ரகசிய சங்கத்தின் வேலை, இந்தியாவின் பராம்பரியமான மரபையும் அறிவையும் காப்பாற்றி எதிர்காலத் தலைமுறைக்கு கொண்டுசேர்ப்பதுதான் என்ற கதை, நீண்ட காலமாகவே இருக்கிறது. இப்படி ஒரு ரகசிய சங்கம் இருந்ததற்கான எந்த வரலாற்றுத் தடயமும் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால், அதை ஊதிப் பெருக்கி நிறையக் கதைகளும் சாகச நாவல்களும் எழுதப்பட்டு இருக்கின்றன.

அசோகரின் வாழ்க்கை குறித்து நேரடியான சான்றுகள் குறைவாகவே இருக்கின்றன. தந்தை பிந்துசாரர் ஆட்சியில் இருந்தபோது, தட்சசீலம், உஜ்ஜயினி ஆகிய பகுதிகளுக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டார் அசோகர். மகாதேவி என்ற வணிகரின் மகளை மணந்து​கொண்டு மகேந்திரர், சங்க​மித்திரை என்ற பிள்ளைகளுக்கு தந்தையானார். அவர்களையே பின்னாளில் புத்த சமயத்தைப் பரப்ப இலங்கை அனுப்பி வைத்தார். பிந்துசாரரின் மரணத்துக்குப் பிறகு, கி.மு 273-ம் ஆண்டில் அரியணை ஏறினார் அசோகர்.ஆட்சிக்கு வந்து நாலு வருடங்களுக்குப் பிறகுதான் முடிசூட்டு விழா நடந்தது. அசோகரின் கல்வெட்டுக்களில் உள்ள குறிப்புகளில் இருந்து, அவரது சாம்ராஜ்யம் மேற்கே குஷ் மலைப் பிரதேசத்தில் இருந்து, கிழக்கே பிரம்மபுத்திரா நதி வரை, வடக்கே இமயமலை அடிவாரத்தில் இருந்து, தெற்கே சென்னை வரை பரவி இருந்தது என்பது தெரிய வருகிறது. மொகலாய மன்னர்களான அக்பரும் பாபரும்கூட இவ்வளவு பெரிய நிலப்பரப்பை ஆண்டது இல்லை. தனது நிலப்பரப்பை ஐந்து மாநிலங்களாகப் பிரித்து அவற்றுக்கு தட்சசீலம், உஜ்ஜயினி, ஸ்வர்ணகிரி, தோஷாலி, பாடலிபுத்திரம் என்ற தலைநகரங்கள் அமைத்தார்.


அசோகரின் காலத்தில், எந்தப் பணி​யை யார் கவனிப்பது? அதை எப்படிக் கண் காணிப்பது? மக்களுக்கான திட்டங்களை எப்படி நடைமுறைப்படுத்துவது? என்பதை வரையறுத்து இருக்கிறார்கள். நிர்வாகவியலில் அசோகரே முன்னோடிச் சாதனையாளர்.அசோகர் இரண்டு அறங்களை முதன்மைப்படுத்தி இருக்கிறார். ஒன்று சமூக அறம். இது மக்களும் அரசும் அதிகாரிகளும் கடைப்பிடிக்க வேண்டியது. மற்றது தனிநபர் பின்பற்ற வேண்டிய அறம். இதில், நல்லொழுக்கம், வாய்மை, தூய்மை, சக உயிர்களை நேசிப்பது, சகிப்புத்தன்மை, பெண் கல்வி, சத்தியத்தை முன்னெடுத்துப்போவது, முறையான நீர்ப் பங்கீடு போன்றவை அடங்குகின்றன. இந்த இரண்டு அறங்களும் ஒன்றோடு ஒன்று இணைந்து செல்ல வேண்டும். அப்போதுதான், ஒரு நல்ல ஆட்சி சாத்தியம் என்ற அசோகர், தனது அண்டை நாடுகள் தன்னைக் கண்டு ஒருபோதும் பயம்கொள்ள வேண்டாம், அவர்களின் சந்தோஷத்தை ஒருபோதும் நான் குலைக்க மாட்டேன் என்றும் ஒரு கல்வெட்டில் எழுதி இருக்கிறார்.அசோகனின் கல்வெட்டுக்கள் காலம்தோறும் மனிதர்கள் பின்பற்ற வேண்டிய அடிப்படை அறங்களாகும். இன்று, அசோகனின் கல்வெட்டு உள்ள பாறைகளின் மீது காதலர்கள் தங்களது பெயர்களை ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் பொறித்துவைத்து இருக்கிறார்கள். சில இடங்களில் கண்ணாடித் தடுப்பு அமைத்து அசோகக் கல்வெட்டுக்கள் பாதுகாக்கப்படுகின்றன. 2,000 ஆண்டுகளைத் தாண்டி வந்த கல்வெட்டுக்களை நின்று படித்துவிட்டுப் போக ஒருவருக்கும் விருப்பம் இல்லை. தௌலிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், கல்வெட்டின் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்வதோடு சரி.தயா நதி, மலையின் பின்புறம் ஒடுகிறது. அது ஒரு காலத்தில் பெரிய நதியாக இருந்திருக்கக்கூடும். இன்றும் அதன் அகன்ற கரைகளில் தண்ணீர் பெருகி ஓடிக்கொண்டு இருக்கிறது. ஜப்பானிய அரசு, புத்தரின் நினைவாக இங்கே சாந்தி ஸ்தூபி ஒன்றை அமைத்து இருக்கிறது. ஜப்பானியப் பிக்குவும் அதற்கு துணையாக இருக்கிறார்.

அசோகருக்கு, கலைகளின் மீது தீவிர ஈடுபாடு இருந்திருக்கிறது. அவர் உருவாக்கிய ஸ்தூபிகள், மற்றும் ஸ்தம்பங்கள் கலைநயம் கொண்டவை. அவரது காலத்தில் 84 ஆயிரம் ஸ்தூபிகள் கட்டப்பட்டுள்ளன. சாராநாத், பௌத்தக் கலை வடிவின் உன்னதங்களில் ஒன்று. இங்கு, அசோகர் கட்டிய ஒரு கல்தூண் இருக்கிறது. அதன் உச்சியில் நான்கு சிங்க உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அந்தச் சின்னம்தான் இன்றும் நமது இந்தியாவின் அரசாங்க முத்திரையாகப் பயன்படுத்தப்படுகிறது. மக்களின் கவனமின்மையால் இந்த சாராநாத்தும் மண் மூடி இருக்கிறது. பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர் அலெக்சாண்டர் கன்னிங்ஹாம்தான், சாராநாத்தை அடையாளம் கண்டு அதைச் சுற்றிலும் உள்ள மண் மேடுகளைத் தோண்டி எடுத்தார். இன்றுள்ள பௌத்த விகாரையை உலகுக்கு அடையாளம் காட்டியவர் அலெக்சாண்டர் கன்னிங்ஹாம். ராணுவ அதிகாரியாக இந்தியாவுக்கு வந்த இவர், ஜேம்ஸ் பிரின்செப்பை ஒருமுறை சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தபோது, பௌத்தக் கலை வேலைப்பாடுகள் பற்றிய விவாதம் ஏற்பட்டது. அதில் ஈடுபாடுகொண்ட கன்னிங்ஹாம், பௌத்த விகாரைகள் மற்றும் கலைச் செல்வங்களைத் தேடிக் கண்டறியும் வேலையில் தீவிரமாக இறங்கினார். மத்தியப் பிரதேசத்தில் உள்ள சத்னா பகுதிக்கு ஒரு முறை சென்றபோது, இடிந்துபோன பௌத்த விகாரை ஒன்றைப் பார்த்து இருக்கிறார். அது என்னவென்று விசாரித்தபோது, ஒருவருக்கும் தெரியவில்லை. அதைப் படம் வரைந்து எடுத்து வந்து, கல்கத்தாவில் உள்ள ஆசிய சங்கத்தின் ஆய்வாளர்களிடம் விசாரித்தார். அதன் பிறகுதான், பழமையைப்பற்றி அறிந்து கொண்டார். அன்று முதல், தனது பணியின் ஊடாக அவர் பௌத்த விகாரைகளைத் தேடும் வேலையையும் செய்யத் தொடங்கினார். கூடவே, பௌத்த இலக்கியங்களையும் தத்துவங்களையும் கற்றார். பௌத்த சான்றுகள் குறித்து விரிவான புத்தகம் ஒன்றும் எழுதி இருக்கிறார்.

1835-ம் ஆண்டு ஒரு பயணத்தின்போது, சாராநாத் என்ற கிராமத்தில் அடர்ந்த புதருக்கு இடையில் சிதறுண்டுகிடந்த பழங்காலக் கற்களை ஒரு சிறுவன் கொண்டுவந்து தந்திருக்கிறான். அது, ஒரு சிற்பத்தின் உடைந்த பகுதி என்று கண்டுகொண்ட கன்னிங்ஹாம், அது எங்கே கிடைத்தது என்று விசாரித்தார். அடர்ந்த புதர்ப் பகுதியை அடையாளம் காட்டினான் அந்தச் சிறுவன். தனது படை வீரர்களை அழைத்து அந்தப் புதரைச் சுத்தம் செய்யும்படியாக ஆணையிட்டார்.ஒரு வாரத்துக்குப் பிறகு, புதருக்குள் மறைந்திருந்த ஒரு விகாரையைக் கண்டுபிடித்தார்கள். அதை அகழ்வாய்வுத் துறையின் உதவியால் முழுமையாகத் தோண்டி வெளியே கொண்டுவந்தார் கன்னிங்ஹாம். அதன் பிறகுதான், பாஹியான் குறிப்பில் உள்ள சாராநாத் இந்த விகாரைதான் என்பது கண்டறியப்​பட்டது.தனது ஆட்சியின் 25-ம் ஆண்டில், புத்தர் பிறந்த இடம் முதல் அவர் பயணம் மேற்கொண்ட முக்கிய இடங்கள் அத்தனைக்கும் சென்றார் அசோகர். அந்தப் பயணத்தின் நினைவாக அங்கெல்லாம் ஸ்தூபிகளை உருவாக்கினார். 37 வருடங்கள் அரசாட்சி செய்த அசோகரின் முதுமைக் காலம், தனிமையும் புறக்கணிப்பும்கொண்டதாகவே இருந்ததுள்ளது. பதவி விலகிய பின், பௌத்தத் துறவியாகி மடாலயத்தில் தங்கினார். பட்டினி கிடந்து 72 வயதில் தன் வாழ்வை முடித்துக்கொண்டார் என்று, நீரஜ் ஜெயின் என்ற வரலாறு ஆய்வாளர் கூறுகிறார்.

உலக வரலாற்றை எழுதும் ஹெச்.ஜி. வெல்ஸ், 'எத்தனையோ மன்னர்கள் பூமியில் தோன்றி மறைந்து இருக்கிறார்கள். அவர்களில் தனிப் பெரும் ஆளுமை மிக்க மாமன்னர் அசோகரே. அவரது அறச் செயல்களுக்காக என்றும் நினைவில்கொள்ளப்படுவார்’ என்று குறிப்பிடுகிறார்.காலம் தன் நினைவில் சில பெயர்களை மட்டுமே வைத்திருக்கிறது. மற்றவை, உதிர்ந்த இலைகளைப் போல காற்றோடு போய்விடுகின்றன. அப்படி, காலத்தின் நினைவில் என்றும் உள்ள ஒரு பெயராகத் திகழ்கிறார் அசோகர். அதற்கு முக்கியக் காரணம், அவர் முன்னெடுத்த அறங்களே!

விகடன்

No comments:

Post a Comment