பாகிஸ்தானில் கொற்கை, வஞ்சி, தொண்டி, மாத்ரை, உறை, கூடல்கட் மற்றும் கோளி, என்ற தமிழ்ப் பெயர்களில் ஊர்கள் இருக்கின்றன. அதுபோலவே, ஆப்கானிஸ்தானிலும் கொற்கை மற்றும் பூம்புகார் என்ற பெயரில் ஊர்கள் இருக்கின்றன என்று ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன் கூறுகிறார்.தமிழ் இலக்கியம் படித்துள்ள பாலகிருஷ்ணன், இந்தியத் தேர்தல் ஆணையராகப் பணியாற்றியவர். சிறந்த தமிழ் அறிஞர். இவரது 'சிந்துச் சமவெளி நாகரிகமும் சங்க இலக்கியமும்’ என்ற கட்டுரை, சிந்துச் சமவெளியில் பயன்படுத்தப்பட்ட மொழி குறித்தும், சங்க காலப் பண்பாடுடன் சிந்து சமவெளிக்கு உள்ள தொடர்பு குறித்தும் முக்கிய விவாதத்தை முன்வைக்கிறது.சிந்து சமவெளி நாகரிகத்தின் வீழ்ச்சி என்பது, சிந்துவெளி மக்களின் ஒட்டுமொத்த முடிவு அல்ல. அதுபோலவே, சங்க இலக்கியம் என்பது பழந்தமிழ் தொன்மத்தின் தொடக்கமும் அல்ல என்பதே இவரது ஆய்வின் அடிப்படை.பெரிய பெரிய நகரங்களை உருவாக்கி வாழ்ந்த சிந்து சமவெளி மக்கள் எவ்வாறு அழிந்துபோனார்கள் என்பது, இன்று வரை விடை தெரியாத கேள்வியாகவே இருந்து வருகிறது. நிச்சயம் ஒரே நாளில் அழிந்திருக்க முடியாது. அவர்கள் புலம்பெயர்ந்து சென்றார்களா? அல்லது இயற்கைச் சீற்றம் ஏற்பட்டதா? என்ற கேள்விகள் எழுகின்றன.சிந்து சமவெளியில் காணப்படும் குறியீடுகள், பண்பாட்டுக் கூறுகள் இந்தியாவில் வேறு எங்கே காணப்படுகின்றன? இமயம் பற்றி சங்க இலக்கியம் கூறுவதால், அதற்கும் சிந்து சமவெளி நாகரிகத்துக்கும் எவ்விதத் தொடர்பு இருந்தது? சிந்து சமவெளி மக்கள் எந்த மொழியில் பேசினார்கள்? என்று நீண்டு கொண்டே போகும் கேள்விகளுக்கு இன்றும் விடை தேடிக்கொண்டே இருக்கிறார்கள்.
ஐராவதம் மகாதேவன், அஸ்கோ பர்போலா போன்ற அறிஞர்கள் சிந்து சமவெளியில் பயன்படுத்தப்பட்ட மொழி குறித்து பல ஆண்டு காலமாக தீவிரமான ஆய்வு செய்தார்கள். அதன் இன்னொரு பரிமாணம் போலவே, தமிழுக்கும் சிந்து சமவெளிக்குமான உறவை ஆராய்ச்சி செய்து வருகிறார் பாலகிருஷ்ணன்.பாலகிருஷ்ணனின் பிரதான ஆய்வு, ஊர்ப் பெயர்கள் உருவான விதம் பற்றியதுதான். இடம் மற்றும் மனிதர்களின் பெயர்கள் குறித்து அவர் மிக விரிவான ஆய்வு செய்து இருக்கிறார். குறிப்பாக, சங்க காலத் தமிழ்ப் பெயர்கள் இந்தியாவில் எங்கெல்லாம் காணப்படுகின்றன. அதற்கான தொடர்புகள் என்ன என்பதை அவரது ஆய்வுக் கட்டுரைகள் விவரிக்கின்றன.சிந்து சமவெளி பற்றி எண்ணிக்கையற்ற புதிய ஆய்வுகள், விளக்கங்கள் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன. ஆனால், அதற்கு நிகரான ஆதிச்ச நல்லூர் பற்றி அதிக ஆய்வுகள் செய்யப்படவில்லை. சொல்லப்போனால், ஆதிச்ச நல்லூரின் தொன்மையை தமிழகத்திலேயேகூட பெரும்பான்மையான மக்கள் அதிகம் அறிந்திருக்கவில்லை.தமிழர்களின் தொன்மையான நாகரிகத்துக்குச் சான்றாக உள்ளது ஆதிச்ச நல்லூர். திருநெல்வேலியில் இருந்து ஸ்ரீவைகுண்டம் செல்லும் வழியில் 24 கி.மீ. தூரத்தில் பொன்னன்குறிச்சி பேருந்து நிறுத்தம் அருகே உள்ளது ஆதிச்ச நல்லூர். தாமிரபரணி ஆற்றின் தென் கரையில் உள்ள சிறிய கிராமம் இது. இங்கே 114 ஏக்கர் பரப்பளவு கொண்ட மிகப் பெரிய இடுகாடு உள்ளது.வெட்டவெளியாக விரிந்துகிடக்கிறது நிலம். புராதன இடம் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. ஒரே ஓர் அறிவிப்புப் பலகை காற்றில் அரிக்கப்பட்டு காணப்படுகிறது. சில இடங்களில் கூழாங்கற்கள் காணப்படுகின்றன. அதன் அடியில் தாழி புதைந்து இருக்கக்கூடும் என்கிறார்கள். இறந்த உடல் கொண்ட தாழியை நரியோ, ஓநாயோ தோண்டி எடுத்துவிடாமல் இருக்க மண்ணை மூடி கல் வைப்பது வழக்கம். பொட்டல்காடு போன்ற வெயில் தகிக்கும் வெளியில் நடக்க நடக்க உடைந்த மண்பாண்டங்களும், ஒடுகளும் காணப்படுகின்றன.
சீனிக் கல் நிரம்பிய நிலப்பரப்பான இந்த இடுகாடு 10,000 ஆண்டுகளுக்கு முந்தியது. அந்தக் காலங்களில் இறந்தவர்களை பானையில் வைத்துப் புதைப்பார்கள். அந்தப் பானையை ஈமத் தாழி என்று சொல்வார்கள். மூன்று அடுக்குகளாகப் புதைக்கப்பட்ட ஈமத் தாழிகள் ஆதிச்ச நல்லூரில் ஏராளமாகக் கிடைக்கின்றன.ஈமச் சடங்குக்குக் கல் நடும் பழக்கம் தமிழகத்தில் இருக்கிறது. ஆனால், கல் நடும் பழக்கம் உருவாவதற்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்தது ஆதிச்ச நல்லூர். இங்கு கிடைத்துள்ள முதுமக்கள் தாழிகள் சிவப்பு வண்ணத்தில் கூம்பு வடிவமாக மூன்றடி விட்டம் கொண்டவை. தாழிகளின் ஓரங்களில் கைவிரல் பதிந்த வேலைப்பாடுகளும் முக்கோண வடிவத்தில் புள்ளிகளும் காணப்படுகின்றன.மண் பானையின் வெளிப்புறத்தில் பெண் உருவம், விலங்குகள், பறவை, தாவரங்கள் புடைப்புச் சிற்பமாக காணப்படுகின்றன. இந்தப் பெண் உருவத்தின் அமைப்பு சிந்துச் சமவெளியில் கிடைத்துள்ள பெண் உருவத்தைப் போலவே இருக்கிறது.ஆதிச்ச நல்லூர் புதைமேட்டை முதன்முதலில் ஆராய்ந்தவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த அகழ்வாராய்ச்சியாளர் டாக்டர் ஜாகர். 1876-ம் ஆண்டு திருநெல்வேலிப் பகுதியில் மானுடவியல் ஆய்வுக்காக வந்த ஜாகர், தற்செயலாகக் கண்டுபிடித்ததுதான் இந்த தொல் தமிழர்களின் நாகரிகச் சின்னம்.ஜாகருக்குப் பின், லூயி லாபெக்யூ என்ற பிரெஞ்சு ஆய்வாளர் 1903-ம் ஆண்டு ஆதிச்ச நல்லூரில் ஆய்வு செய்து, சில முதுமக்கள் தாழிகளைத் தோண்டி எடுத்தார். ஜாகர், தான் கண்டறிந்த 50-க்கும் மேற்பட்ட புதைபொருட்களை பெர்லினுக்கு எடுத்துச் சென்றுவிட்டார். அவை, 'வோல்கர் கோன்டே’ மியூசியத்தில் இருக்கின்றன. லாபெக்யூ தனது ஆய்வில் கண்டறியப்பட்ட பழமையான பொருட்களை பாரீஸுக்கு கொண்டு சென்றுவிட்டார். அதனால், ஆதிச்ச நல்லூரைப் பற்றிய ஆய்வுகள் தொடரப்படவில்லை.அதன் பிறகு, சென்னை மியூசியத்தின் கண்காணிப்பாளராக இருந்த அலக்ஸாண்டர் ரியா, ஆதிச்ச நல்லூரில் விரிவான ஆய்வு நடத்தினார். ஈமத் தாழிகள், இறந்தவர்களின் உடல்கள், மற்றும் விதவிதமான மண்பாண்டங்கள், இரும்பால் செய்யப்பட்ட பொருட்கள், சிலைகள், நகைகள், விளக்குகள், மணிகள், கருவிகள் என 4,000-க்கும் மேலான சான்றுகள் கிடைத்து இருக்கின்றன.
இந்தச் சான்றுகளை ஆராய்ந்த அறிஞர்கள், இவை சிந்து சமவெளி நாகரிகத்துக்கு முற்பட்டதாக இருக்கலாம் என்று கருதுகிறார்கள். தமிழர் நாகரிகம் அவ்வளவு தொன்மையானது என்றால், ஏன் அதற்கான இடம் இன்றும் கிடைக்கவில்லை என்று ஆராய்ந்து பார்த்தால், அதன் பின்னே ஓர் அரசியல் இருப்பதை உணர முடிகிறது.ஆரியர்களின் வருகைக்குப் பிறகே இந்தியாவுக்குப் பண்பாடு வந்தது என்ற பொய்யை பல காலமாகத் திரும்பத் திரும்ப நாம் படித்து வருகிறோம். அதற்கு எதிராக இதுபோன்று தொன்மையான தமிழர் நாகரிகம் இருந்திருக்கிறது எனச் சுட்டிக்காட்டுவதை ஆரியர்களைப் பிரதானப்படுத்தும் ஆய்வாளர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்.இன்றும் ஐரோப்பிய வரலாற்று ஆய்வாளர்கள் ஆரிய இனத்தின் பெருமையைப் பாடுவதில்தான் ஆர்வம் காட்டுகிறார்கள். உண்மையான இந்திய வரலாறு இன்னமும் முழுமையாக எழுதப்படவில்லை. ஆதிச்ச நல்லூரின் தொன்மை நாகரிகம் சிந்து சமவெளியோடு ஒப்பிட்டு ஆய்வு மேற்கொள்ளப்படவேண்டியது. குறிப்பாக, இரண்டு இடங்களிலும் கிடைத்துள்ள மண்பாண்டங்கள், அதில் எழுதப்பட்டுள்ள குறியீடுகள், எழுத்துருக்கள் மற்றும் நுண்கலைப் பொருட்கள், புதைகலன்கள் குறித்து இன்னும் தீவிர ஆய்வு செய்யப்பட வேண்டி உள்ளது.அன்றாடம் பயன்படுத்தும் மண் கலயங்களில் எழுத்துருக்கள் பொறிக்கப்பட்டு இருப்பது அன்று கல்வியில் தமிழ் மக்கள் மேம்பாடு அடைந்து இருந்தார்கள் என்பதன் சான்றாகவே உள்ளது. கிறிஸ்து பிறப்பதற்கு 800 ஆண்டுகளுக்கு முன்பே, ஆதிச்ச நல்லூரில் நாகரிகம் மிக்க மக்கள் வாழ்ந்து இருக்கிறார்கள்.பண்டைய தமிழர்கள் இரும்பைப் பயன்படுத்தி இவ்வளவு உபகரணங்கள் செய்து இருக்கிறார்கள் என்பதால், எவ்விதமான உலையைக்கொண்டு இரும்பை உருக்கினார்கள்? வார்ப்பு எப்படி நடைபெற்றது? போன்றவை ஆராயப்பட வேண்டியது அவசியம்.ஆதிச்ச நல்லூர் குறித்து தீவிரமான ஆய்வுகளைச் செய்த தமிழறிஞர் தொ.பரமசிவன், இந்தப் பகுதியில் இரும்பு உருக்கும் அடுப்புகள் இருந்திருப்பதைக் கண்டறிந்து இருக்கிறார். இயற்கையாக அமைக்கப்பட்ட இந்த அடுப்புகளில் தாமிரபரணி ஆற்றின் மணலில் கிடைத்த இரும்புத் தாதுக்களை உருக்கி இருக்கிறார்கள் என்பது அவரது கருத்து.அதுபோலவே, ஆதிச்ச நல்லூர் பற்றி விரிவாக ஆய்வு செய்துள்ள எஸ்.ராமச்சந்திரன், 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கருப்பு சிவப்பு பானை ஓடுகளைச் சேகரித்து இருக்கிறார். இவரது ஆதிச்ச நல்லூர் பற்றிய கட்டுரையில், ஈமத் தாழியில் புதையுண்ட மனிதர்கள் இவ்வளவு நாகரிகம் மிக்கவர்களாக இருந்திருக்கிறார்கள் என்றால், அவர்கள் எங்கே குடியிருந்தார்கள்? எது அவர்களின் பூர்வீகம் என்பதை விரிவாக விளக்குகிறார்.
விகடன்
No comments:
Post a Comment