‘‘வேகம் இருந்தாதான் என்னால் நடிக்க முடியும்’’ என்று சொன்ன சூப்பர்ஸ்டார் ரஜினி, விறுவிறு வேகத்தோடு சென்னையில் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். நடையில் துள்ளல், முகத்தில் வழியும் உற்சாகம், உடல்மொழியில் பரபரப்பு என துடிக்கும் இளமையோடு அவரைப் பார்க்க முடிகிறது. எஸ்.பி.முத்துராமனுக்கு விருது வழங்கும் விழா, திருமண வரவேற்பு என அவர் கலந்துகொண்ட மற்ற நிகழ்ச்சிகள் எல்லோருக்கும் தெரியும். குழந்தைகளோடு குழந்தையாக அவர் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சி... சம்திங் ஸ்பெஷல்!
‘‘ரஜினி சார் சிங்கப்பூர்ல ட்ரீட்மென்ட்டுக்காக இருந்தப்பதான் இந்த ‘பீஷ்மா’ நாடகத்தோட ரிஹர்சல் நடந்திட்டிருந்தது. அப்பவே இந்த ஸ்கிரிப்ட்டை அப்பா (ரஜினியை இப்படித்தான் அழைக்கிறார் மானு) படிச்சார். மகாபாரதத்துல வர்ற பீஷ்மர் கேரக்டர், அப்பாவோட ஃபேவரைட். இதுல பீஷ்மரா நடிச்ச புரவலன், சிங்கப்பூர்ல இருந்தப்பவே ரஜினி சாருக்கு க்ளோஸ். அவரும் நானுமா அப்பாவை டிராமா பார்க்கக் கூப்பிட்டோம். 3 ஷோஸ்ல 30ம் தேதி மதியம் நடந்தது முழுக்க முழுக்க ஸ்பெஷல் சில்ட்ரனுக்காக... ஸ்பாஸ்டிக் சொசைட்டி, ரஸா, ஆந்திர மகிள சபானு பல அமைப்புகளைச் சேர்ந்த 200 குழந்தைங்களுக்காக மட்டுமே போட்ட ஷோ. குழந்தைங்களுக்குத் தொந்தரவு இருக்கக் கூடாதுனு பத்திரிகை, சேனல்னு யாருக்கும் அழைப்பில்லை.

‘மானு, நான் எந்த ஷோவுக்கு வரட்டும்’னு கேட்டார் அப்பா. நிறைய குழந்தைங்க, கூட்டம் அதிகமா இருக்கும். இப்பத்தான் அப்பா நார்மலாகியிருக்கார்னு பல விஷயங்களை யோசிச்சு, 3 ஷோ பத்தியும் சொன்னேன். ‘நோ பிராப்ளம்... நான் இப்ப நல்லாருக்கேன். எனக்கு கூட்டம்தான் பிடிக்கும்’னு சொல்லி வந்தார். கிட்டத்தட்ட 2 மணி நேரம் எங்ககூடவே இருந்து, மேடை ஏறி பாராட்டினதோட இல்லாம, அத்தனை குழந்தைங்ககூடவும் பேசி, சிரிச்சு, அன்பு செலுத்தி, சிலிர்க்க வச்சார். அவரோட அன்புக்கும், பணிவுக்கும் இந்த உலகத்துல எதுவுமே ஈடில்லை... ரஜினி சார் கலந்துக்கிட்ட இந்த ஷோ என் கேரியர்லயே ரொம்ப ஸ்பெஷல்’’ & கண்களில் வியப்பு அகலாமல் பேசுகிறார் மானு!
சூப்பர்ஸ்டாரின் உடல்நிலை பற்றிய வதந்திகளுக்கெல்லாம் ஒரு வரி பதிலாக, கடந்த மாதம் குடும்பத்துடன் திருப்பதி சென்று துலாபார பிரார்த்தனை நிறைவேற்றி வந்தார். ‘நான் நன்றாகத்தான் இருக்கிறேன்...’ என்று சொல்லாமல் சொன்ன பதிலாக அது அமைந்தது. அதைத் தொடர்ந்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்குப் பொருத்தமான நிகழ்ச்சிக்குக் காத்திருந்த வேளையில் வந்தார், 75 படங்களை இயக்கிய எஸ்.பி.முத்துராமன். ரஜினியின் 25 படங்களை இயக்கியவர். தன் சாதனையைப் பாராட்டி ‘சங்கர நேத்ராலயா’ சார்பில் ‘சங்கர ரத்னா’ விருது வழங்கும் நிகழ்ச்சிக்காக ரஜினியை அழைத்தார் அவர்.
மூன்று மணி நேரம் நடந்த அந்த நிகழ்ச்சியில் முகம் வாடாமல் கலந்து கொண்டதுடன், தன் நீண்ட மௌனம் கலைத்து பேசவும் செய்தார் ரஜினி. அதுவும் அவரது நடிப்பு குறித்தே அமைந்தது. ‘‘நிறைய நடிக்கணும்னு சொல்றாங்க. எந்த நேரத்திலும் நடிக்கிறதுக்கு நான் சிவாஜி கணேசன், கமலஹாசன் மாதிரி பெரிய நடிகன் இல்லை. என்னோட மூலதனம் ஸ்பீடு. வேகம் இருந்தாதான் என்னால நடிக்க முடியும்...’’ என்று அமைந்த பேச்சு வழக்கம்போலவே அவரது ஸ்டைலில்தான் இருந்தது.

பார்வைக்கு அவர் நடிப்பதற்கு ‘ஃபிட்’டாகவே இருப்பதாகத் தோன்றினாலும், தனக்கு இன்னும் பழைய ‘ஸ்பீடு’ வரவில்லை என்று அவர் நினைப்பதாகத்தான் தோன்றியது. எப்படியோ, கொஞ்ச காலமாக வெளியில் வராதிருந்த சினிமா சிங்கம் மீண்டும் பொது வாழ்வுக்குள் இயல்பாக புறப்பட்டு வந்திருப்பது அவரது ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், ரஜினி மேல் அன்பு வைத்திருக்கும் எல்லோருக்கும் இனிப்பான செய்திதான். ‘ராணா’ வேலைகளும் டிசம்பரில் வரும் அவரது பிறந்தநாளுக்குப் பிறகுதான் திட்டமிடப்படும் என்கிறார்கள். அதற்குள் ரஜினி தன்னிடமே எதிர்பார்க்கும் ‘ஸ்பீடு’ வந்துவிடும் என்றும் நிச்சயமாக நம்பலாம்.
No comments:
Post a Comment