Monday, November 2, 2015

குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா

கர்நாடக இசையுலகில் பேரரசியாக விளங்கிய எம்.எஸ். என்று எல்லோராலும் அன்புடன் போற்றப்பட்ட இசையரசி எம்.எஸ். சுப்புலட்சுமியின் 'காற்றினிலே வரும் கீதம்' இன்றும் கேட்பவர்களை ஒருகணம் தன்னை மறக்க வைக்கும் .. .எத்துனை காலங்கள் உருண்டோடினாலும் கேட்பவர்களின் மனதோடும், உணர்வோடும் கலந்து விட்ட கீதம் அது.
1916ஆம் ஆண்டு செப்டம்பர் 16ம் நாள் சண்முக வடிவு அம்மாள்- ராமசாமிப்பிள்ளை தம்பதியினருக்கு மகளாக தோன்றியவர் எம்.எஸ். சுப்புலட்சுமி. தாயார் சண்முகவடிவு ஒரு சிறந்த வீணைக் கலைஞர். எம்.எஸ். சுப்புலட்சுமியின் முதல் குரு அவருடைய தாயார் சண்முகவடிவுதான். ஆரம்ப காலத்தில் அம்மாவின் வீணை கச்சேரிகளில் பாடி வந்தார் எம்எஸ். 1926ல் வெளியிடப்பட்ட ஒரு எல்.பி. இசைத்தட்டில் மரகத வடிவம் செங்கதிர் வேலும் என்னும் பாடலை சண்முக வடிவின் வீணையும், எம்.எஸ். சுப்புலட்சுமியின் பாட்டும் இணைந்து வெளிவந்தது. தி ட்வின் ரிகார்டிங் கம்பெனி இதை வெளியிட்டது. இதுதான் இவரின் முதல் இசைத்தட்டு.



எம்எஸ்ஸிற்கு ஓர் மூத்த சகோதரரும், ஒரு தங்கையும் இருந்தனர். இவரின் சகோதரர் பெயர் மதுரை சக்திவேல்பிள்ளை. இவர் ஒரு சிறந்த மிருதங்க கலைஞர். தங்கை பெயர் வடிவாம்பாள். அண்ணா சக்திவேல்பிள்ளை தங்கை எம்எஸ்ஸின் கச்சேரிகளுக்கு பலமுறை மிருதங்கம் வாசித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.



மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளி அரங்கில் சண்முகவடிவு அம்மாள் வீணை கச்சேரி செய்து கொண்டிருந்தார். வாசிப்பை திடீர் என நிறுத்தி விட்டு அருகில் இருந்த தனது மகள் 10 வயது சிறுமி எம்.எஸ். சுப்புலட்சுமியை அழைத்தார் அம்மா சண்முகவடிவு. (அம்மாவால் 'குஞ்சம்மாள்' என்று தான் எம்எஸ் அழைக்கப்படுவார்.) அருகில் மகளை அழைத்த அம்மா ''குஞ்சம்மாள் நீ பாடு'' என்று சொல்ல, உடனே சிறுமி குஞ்சம்மாள் மேடைக்கு விரைந்து வந்து ஹிந்துஸ்தானி மெட்டில் அமைந்திருந்த ''ஆனந்த ஜா'' என்னும் மராட்டி ராகப் பாடலை சிறிதும் கூச்சமோ பயமோ இல்லாமல் பாடி பார்வையாளர்கள் அத்துனை பேரின் பாராட்டையும் பெற்றார். இதுதான் இவரின் முதல் இசைக்கச்சேரி அரங்கேற்றம். அன்று எம்.எஸ்ஸின் அரங்கேற்ற இசைக்கச்சேரி நடைப்பெற்ற போது அப்பள்ளியில் அப்போது ஆசிரியராக பணிப்புரிந்தவர்களுள் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் இளைய சகோதரர் ஸ்ரீனிவாசனும் ஒருவர் என்பது சிறப்பம்சம்.

அம்மா சண்முகவடிவுதான் எம்.எஸ். சுப்புலட்சுமியின் முதல் இசை ஆசிரியை. அம்மாவைத் தொடர்ந்து சேத்தூர் சுந்தரேச பட்டர் என்பவரிடம் பல வருடங்கள் இசை பயின்றார். திருமணத்திற்குப் பிறகு செம்மங்குடி சீனிவாச அய்யர், எம்.எஸ்.ஸின் பிரதான குருவாக திகழ்ந்தார். கடையநல்லூர் வெங்கட்ராமன் அவரது கடைசி குரு. அன்னமாச்சரியா கீர்த்தனங்களை டி. பசுபதி, நேதநூரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோரிடம் கற்றுக் கொண்டார். தோடி ராக ஆலாபனை மட்டும் டி.என். ராஜரத்தினம் பிள்ளையின் நாதஸ்வர இசையைக் கேட்டுக் கற்றுக் கொண்டார். அதுபோல் முத்துசாமி தீட்சதரின் கீர்த்தனைகளை உச்சநீதி மன்ற நீதிபதி டி.எல். வெங்கட்ராம ஐயரிடம் கற்றுக் கொண்டார். பாசநாசம் சிவனும், மைசூர் வாசுதேவாச்சாரும் தாங்கள் இயற்றிய பாடல்களைத் தாங்களே எம்எஸ் .ஸுக்கு கற்றுக் கொடுத்தனர்.



இயக்குநர் கே. சுப்பிரமணியம் (புகழ் பெற்ற நாட்டிய தாரகை பத்மா சுப்ரமணியத்தின் தந்தை) அவர்களால் 'சேவா சதனம்' என்னும் திரைப்படத்தில் முதன்முதலாக பாடிக்கொண்டே நடித்தார் எம்எஸ். 1938ல் இப்படம் வெளியானது. பிறகு இரண்டு வருடங்களுக்குப் பிறகு 'சகுந்தலை' என்னும் திரைப்படத்தில் நாயகியாக நடித்தார். அன்றைய காலத்தில் சகுந்தலை மிகப்பெரிய வெற்றியை ஈட்டியது. இப்படத்தை எல்லீஸ் ஆர். டங்கன் இயக்கினார்.இப்படத்தை ராயல் டாக்கீஸ் தயாரிப்பு நிறுவனமும், சந்திரப்பிரபா சினிடோன் நிறுவனமும் இணைந்து தயாரித்தனர்.

படத்தில் எம்எஸ்க்கு இணையாக - கதாநாயகனாக அன்றைய பிரபல பாடகர் ஜி.என். பாலசுப்ரமணியம் நடித்தார். கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், டி.ஏ. மதுரம், சிறுகளத்தூர் சாமா, டி.எஸ். துரைராஜ், சாரங்கபாணி என்று பலர் நடிப்பில் வெளியானது சகுந்தலை.

1941ல் வெளியான 'சாவித்திரி' என்கிற படத்தில் எம்.எஸ். சுப்புலட்சுமி நாரதராக நடித்தது அன்றைய காலக்கட்டத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. பின்பு 1945ஆம் ஆண்டில் தீபாவளியன்று வெளியானது 'மீரா'. மீரா படத்தையும் சகுந்தலை படத்தை தயாரித்த நிறுவனமே தயாரித்தது. இப்படத்தில் எம்எஸ் பாடிய அத்துனை பாடல்களும் மிகப் பெரிய வெற்றியை தேடித் தந்தது. அன்று காற்றினிலே வந்த கீதம்... கேட்பவர்கள் நெஞ்சங்களை உருக வைத்தது நிஜம். இப்படத்திற்கான வசனத்தை எழுதியவர் கல்கி கிருஷ்ணமூர்த்தி. படத்திற்கான பாடல்களை எழுதியவர் பாபநாசம் சிவன்.




மீரா படத்தின் அத்துனை பாடல்களும் பிரபமாகியது. அதுமட்டுமல்லாமல் மீரா இந்தியில் மறுபதிப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இதில் முக்கியமான அம்சம் என்னவென்றால் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரும், எம்.எஸ். சுப்புலட்சுமியும் சேர்ந்து நடித்த ஒரே படம்இது என்கிற பெருமையை பெற்றது மீரா. அதுமட்டுமல்லாமல் மீராதான் எம்எஸ்ஸின் கடைசிப்படமும்கூட.

எம்.எஸ் நடித்த 'சேவா சதனம்' படத்திற்கான படப்பிடிப்பு கிண்டியில் உள்ள ஸ்டுடியோவில் நடைபெற்றுக்கொண்டிருந்தப் போது படப்பிடிப்பு நேரத்தில் அங்கு அடிக்கடி வருவார் டி.எஸ். சதாசிவம். எம்.எஸ். சதாசிவம் சந்திப்பு அங்கு பல சமயங்களில் நடைப்பெற்றது. இந்த சந்திப்பு இவர்களின் திருமணத்தில் முடிந்தது. 1940ல் எம்எஸ்- சதாசிவம் திருமணம் சென்னையிலுள்ள திருநீர்மலை கோயிலில் மிக எளிய முறையில் நடைப்பெற்றது.






சென்னை தமிழ் இசைச் சங்கம், எம்.எஸ். சுப்புலட்சுமிக்கு 'இசைப் பேரறிஞர்' பட்டம் சூட்டி கெளரவித்தது. இவர் பாடி பிரபலமடைந்த தமிழ் பாடல்களுள் 'வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்', 'குறையொன்றுமில்லை. நீ இறங்காய் எனில் பகலேது' 'ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா', 'வாழிய செந்தமிழ்' ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

1966ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதி ஐ.நா. சபையில் எம்.எஸ். சுப்புலட்சுமியின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். உலக அமைதியை வலியுறுத்தி மூதறிஞர் ராஜாஜி எழுதிய 'மே தி வார்ட் பர்கிவ் அவர் சின்ஸ்' என்னும் ஆங்கிலப் பாடலை எம்.எஸ்.சுப்புலட்சுமி ஐ.நா. சபையில் பாடினார். இப்பாடலுக்கு ஹாண்டல் மேனுபல் இசையமைத்துள்ளார்.

காஞ்சி பரமாச்சாரியார் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், எம்.எஸ்.ஸின் ஐ.நா. நிகழ்ச்சிக்காக பிரத்யேகமாக இயற்றிய சமஸ்கிருத ஸ்லோகமான 'மைத்ரீம் பஜத'' என்ற உலக நன்மைக்கான பிரார்த்தனை ஸ்லோகத்தையும் எம்.எஸ். சுப்புலட்சுமி பாடினார். அந்நிகழ்ச்சிக்கு வி.வி.சுப்ரமணியம் வயலின், டி.கே. மூர்த்தி மிருதங்கம், டி.எம். வினாயகராம் கடம் வாசித்தனர்.






வேங்கடேச சுப்ரபாதம் திருப்பதி திருமலையில் தினமும் கோவில் நடை திறக்கும் போது பாடப்படுகிறது. இறைவனை துயில் எழுப்பும் இந்த தெய்வீகப் பாடலை ப்ரதிவாதி பயங்கரம் அனங்கராச்சாரியார் என்னும் வைணவப் பெரியவரின் குரலில் தான் திருப்பதி கோயிலில் ஒலிபரப்பி வந்தனர். 

எம்.எஸ். சுப்புலட்சுமி பாடிய வேங்கடேச சுப்ரபாதம், பஜகோவிந்தம் என்னும் ஆதிசங்கரரின் ஸ்லோகம், ரங்கபுர விஹாரா என்னும் முத்துசாமி தீட்சதரின் கீர்த்தனை ஆகியவற்றை எச்.எம்.வி. நிறுவனம் இசைத்தட்டாக வெளியிட்டப் போது அது உலக அளவில் பெரும் வெற்றியைத் தேடித் தந்தது.

திருப்பதி தேவஸ்தானம் முதலில் எம்.எஸ்ஸின் சுப்ரபாதத்தை அங்கீகரிக்காமல் இருந்தது. பிறகு 1975ல் திருப்பதி தேவஸ்தானம் எம்.எஸ். பாடிய சுப்ரபாதத்தை ஒலிபரப்ப சம்மதித்தது என்பது முக்கியமான தகவல். 

No comments:

Post a Comment