Tuesday, November 3, 2015

ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதம்

திருமலை – திருப்பதிக்கு உறக்கம் என்பதே இல்லை. நள்ளிரவில் ‘ஏகாந்த சேவை’ முடிந்து, நடை சாத்திய சிறிது நேரத்திலேயே, அடுத்த நாளின் முதல் சேவையான ‘சுப்ரபாத சேவை’ தொடங்கிவிடுகிறது.



பக்தர்கள் கூட்டமும், வாகனப் போக்குவரத்தும், கடைகளின் வியாபாரமும் கடல் அலை போல்தான். எதற்கும் ஓவே இல்லை. எல்லாம் அதுபாட்டுக்குத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது திருமலை – திருப்பதியில்.
தினம்தோறும் அதிகாலையில் திருப்பதி-திருமலையில் நடை திறக்கும் போது பதிவு செய்யப்பட்ட ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதத்தை இசைக்க விடுகிறார்கள் தேவஸ்தானத்தார். இந்த வேளையில் நடைபெறும் தரிசனத்துக்கு, ‘சுப்ரபாத தரிசனம்’ அல்லது ‘விஸ்வரூப தரிசனம்’ என்று பெயர். சுமார் 200-லிருந்து 250 பக்தர்கள் வரை இந்த தரிசனத்துக்கு அனுமதி உண்டு. இதற்கான முன்பதிவை, ஆன்லைனிலும் நேரடியாகவும் பதிவு செய்து கொள்ளலாம்.
‘சுப்ரபாத சேவை’ தரிசனம் அரை மணி நேரம் மட்டுமே. இந்த சேவையின் முடிவில், வாத்திய முழக்கங்களுடன் ஸ்ரீவேங்கடவனின் கருவறைக்கு முன்னால் உள்ள தங்கக் கதவுகள் திறக்கப்படும். திருமலா ஸ்ரீமடத்தின் ராமானுஜ ஜீயர் கற்பூரத்தை ஏற்றி கருவறையில் இருக்கும் பிரதான அர்ச்சகரிடம் தருவார். அவர் அதை வாங்கி, மூலவர் ஸ்ரீவேங்கடாசலபதிக்கு ஸ்ரீமந் நாராயணனின் திருநாமங்களை ராகத்துடன் சொல்லி ஆரத்தி செய்வார்.
குலசேகரப்படி வரை பக்தர்கள் ஒவ்வொருவராக நகர்ந்து வந்து ஸ்ரீவேங்கடவனின் விஸ்வரூப தரிசனத்தைக் கண்டு பரவசத்துடன் நகர்வார்கள்.

ஸ்ரீவேங்கடவனின் கருவறையில் ஒவ்வொரு தினமும் முதன்முதலில் காட்டப்படும் இந்த ஆரத்தியை, கர்நாடக மாநில அரசின் அறநிலையத் துறை ஸ்பான்சர் செய்கிறது. இது இன்று நேற்று இருந்து வரும் வழக்கம் அல்ல… மன்னர் கிருஷ்ணதேவராயர் காலத்தில் இருந்து தொடர்ந்து நடந்து வருகிறது. ஸ்ரீவேங்கடவன் மீது அதீத பக்தி கொண்ட அந்த மன்னர், இப்படி ஒரு கட்டளையைத் தன் காலத்தில் தொடங்கி வைத்து விட்டுப் போனார். அவர் காலத்தில் இருந்து இது தொடர்கிறது. இன்றைக்கும் கர்நாடக மாநிலத்தில் எந்த ஆட்சியாளர் பதவியில் இருந்தாலும், இந்த சேவையை மட்டும், மாநிலத்தின் அறநிலையத் துறை பொறுப்பேற்றுக் கொண்டு, தொடர்ந்து செய்து வருகிறது.
மார்கழி மாதம் மட்டும், திருமலை – திருப்பதியில் பெருமாள் சன்னிதானத்தில் சுப்ரபாதம் ஒலிப்பதில்லை. காரணம் – அந்த ஒரு மாதம் மட்டும் சுப்ரபாதத்துக்குப் பதிலாக ஆண்டாளின் திருப்பாவை பாடப்படுகிறது.
இந்த ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதம், பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் எனும் வைணவப் பெரியவரால் எழுதப்பட்டது. ஐநூறு வருடத்துக்கும் பழமையான மூல ஸ்லோகத்தை அடிப்படையாகக் கொண்டும், ஆழ்வார் பாசுரங்களின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டும், இந்த சுப்ரபாதத்தை இயற்றி இருக்கிறார் இந்தப் பெரியவர்.



சுப்ரபாதத்தை இயற்றிய பெருமைக்கு மட்டும் அண்ணங்கராச்சாரியார் சொந்தமல்ல. அவரது குரலில்தான் ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதம் திருமலை திருச்சன்னிதியில் நீண்ட காலமாக ஒலிபரப்பப்பட்டு வந்தது. தினமும் சுப்ரபாத சேவை தொடங்கப்படும் வேளையில் அண்ணங்கராச்சாரியார் குரலில் ஆலயப் பகுதியில் சுப்ரபாதம் ஆங்காங்கே ஒலிக்கத் தொடங்கிவிடும். இதற்கென இவரது குரலில் சுப்ரபாதத்தைப் பதிவு செய்து வைத்திருந்து, அதை ஒலிபரப்புவது தேவஸ்தானத்தாரின் வழக்கம். அப்போதெல்லாம் சுப்ரபாத சேவைக்கு டிக்கெட் வாங்கி, பெருமாளின் விஸ்வரூப தரிசனத்துக்குக் காத்திருக்கும் பக்தர்கள், அண்ணங்கராச்சாரியாரின் குரலோடு இணைந்து மனம் உருகி சுப்ரபாதம் பாடுவது வழக்கம்.
இந்த வேளையில் அவரைப் பற்றி ஓரிரு தகவல்கள் தெரிந்து கொள்வது அவசியம்.
வைணவத் துறைக்கு எண்ணற்ற சேவைகள் புரிந்த இந்த வைணவ மேதை காஞ்சிபுரத்தில் வாழ்ந்தவர். ‘பிரதிவாதி பயங்கரம்’ என்பது இவரது பட்டப் பெயர். எதிராளியுடன் நடக்கும் வாதப் போரில், எதிர் அணியினருக்குப் பயங்கரமானவராக இருப்பவர் என்ற பொருளில் இந்தப் பட்டப் பெயர் இவருக்கு அமைந்தது. 1983, ஜூன் 21-ஆம் தேதி இவர் இவ்வுலக வாழ்வை நீத்தார்.
இவருக்கு நான்கு மொழிகளில் புலமை உண்டு. வைணவர்களால் ஓர் ஆழ்வாராகவே மதித்துப் போற்றப்பட்டவர் இவர். தன் காலத்தில் 1,207 புத்தகங்கள் எழுதி இருக்கிறார் என்பது ஆச்சரியமூட்டும் தகவல். ஒரே நேரத்தில் வலது கையால் தமிழிலும், இடது கையால் சம்ஸ்க்ருதத்திலும் எழுதும் வல்லமை இவருக்கே உரித்தான சிறப்பம்சம்.
‘சரி… இப்போது திருமலை – திருப்பதியில் தினமும் காலை வேளையில் கர்நாடக இசை மேதை எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களின் தேனினும் இனிய குரலில் அல்லவா சுப்ரபாதம் கேட்டு வருகிறோம்’ என்கிறீர்களா?
உண்மைதான்! சரியாகச் சொன்னால், 1975-லிருந்துதான் எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின் குரலில் திருமலையில் சுப்ரபாதம் ஒலிக்கத் தொடங்கியது. அதற்கு முன்வரை, பிரதிவாதி பயங்கரம் ஸ்வாமியின் குரலில்தான், சுப்ரபாதம் திருமலையில் ஒலித்துக் கொண்டிருந்தது.



எம்.எஸ். சுப்புலட்சுமி பாடிய வேங்கடேச சுப்ரபாதம், பஜ கோவிந்தம் போன்ற அருமையான தொகுப்புகளை பிரபல எச்.எம்.வி. நிறுவனம் இசைத்தட்டாக வெளியிட்டபோது, அது பட்டி தொட்டி எங்கும் பரவியது. இசைத்தட்டு வெளியிட்ட நிறுவனத்துக்கும், எம்.எஸ். அவர்களுக்கும் இது மாபெரும் வெற்றியைத் தேடித் தந்தது. அதன் பின்னர்தான் திருமலை – திருப்பதி தேவஸ்தானத்தார், எம்.எஸ். பக்கம் திரும்பினார்கள். 1975-லிருந்து எம்.எஸ். அவர்களின் குரலில் ஒலித்துக் கொண்டிருக்கிற சுப்ர பாதத்தைதான், நாம் இன்றுவரையில் திருமலையில் கேட்டு வருகிறோம்.
எம்.எஸ். அவர்களின் சுப்ரபாதம் கேட்டுத்தான் ஸ்ரீவேங்கடவன் துயில் எழுகின்றான். இனி காலாகாலத்துக்கும் எம்.எஸ். அவர்களின் குரல்தான் இங்கே ஒலிக்கும். அகில உலகத்தையும், தன் குரலால் கட்டிப்போட்ட அந்த இசை மேதைக்கு, இந்த ஆந்திர அரசாங்கம் கொடுத்த அங்கீகாரம் இது” என்று பெருமைப்படுகிறார் திருப்பதியில் வாழும் அன்பர் ஒருவர்.


இந்த மாபெரும் கௌரவத்தை அங்கீகரிக்கும் வகையில் – எம்.எஸ். அவர்கள் மறைந்த ஒரு சில நாட்களுக்குள், திருப்பதியின் நுழைவாயிலில் அவரது சிலையை அமைத்துப் பெருமைப்படுத்தியது ஆந்திர அரசு.
முழு உருவச் சிலையான இது, 14 அடி உயரம் கொண்டது. கையில் தம்புராவுடன் எம்.எஸ். அவர்கள் அமர்ந்திருப்பது போல் இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. 4,000 கிலோ எடையில், முழுக்க முழுக்க வெண்கலத்தாலான இந்த சிலையை, அப்போதைய ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி திறந்து வைத்தார்.
ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதத்தில் மொத்தம் 70 ஸ்லோகங்கள் உள்ளன. இவை நான்கு பகுதிகளாக அமைந்துள்ளன.
முதல் பகுதியான சுப்ரபாதம், யோக நித்திரையில் இருக்கும் வேங்கடவனைத் துயில் எழச் செய்வது குறித்ததாகும். இதில் 29 ஸ்லோகங்கள் காணப்படுகின்றன.
இரண்டாம் பகுதியான ஸ்தோத்திரம், ஸ்ரீவேங்கடவனை துதி செய்தல் – அதாவது போற்றி வணங்கும் பகுதியாகும். இதில் 11 ஸ்லோகங்கள் உண்டு.
மூன்றாம் பகுதியான பிரபத்தி, திருமகளின் பெருமை குறித்தும், ஸ்ரீவேங்கடவன் திருவடிகளில் சரணாகதி அடைவது குறித்தும் சொல்லப்பட்டிருக்கிறது. இதில் 16 ஸ்லோகங்கள் உண்டு.
நான்காவது பகுதியான மங்களம், நிறைவுப் பகுதி. மங்களகரமான அருளை வேண்டும் வகையில் துதிக்கப்படும் இந்தப் பகுதியில், 14 ஸ்லோகங்கள் அமைந்துள்ளன.

No comments:

Post a Comment