Wednesday, June 8, 2011

விரக்தியில் கருணாநிதி..பூரிப்பில் ஜெயலலிதா

விரக்தியில் கருணாநிதி;

திஹார் சிறையில் இருக்கும் மகள் கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்குமென்றால் 7 கடல் தாண்டி குகையில் இருக்கும் கிளியை கொண்டு வரச்சொன்னாலும் கொண்டு வந்துவிடுவார் கருணாநிதி....நாட்டை பத்தி இவருக்கு கவலையில்லை...கட்சியை பத்தி கவலையில்லை..மகள் மீது கவலைதான் இவருக்கு என அழகிரியே கோபமாக வெடித்தாராம்...


இதற்கிடையே எவனோ 30 ஆம்தேதி கனிக்கு ஜாமீன் என புரளி கிளப்பிவிட,அன்று முழுவதும் வட இந்திய சேனல்களை திருப்பி திருப்பி பார்த்து ஏமாந்து போனாராம் தாத்தா.

உடன்பிறப்பே..என்னைப்போல கப்சிப் என்று இருந்தால் அம்மையார் ஆட்சியில் நீயும் தப்பிக்கலாம்!




தமிழக மக்களை ஜெயலலிதா பார்த்துக்கொள்வார்..தன் மகளை இனி தாந்தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என கலைஞர் ரொம்பவே விரக்தியில் இருக்கிறார்.

பூரிப்பில் ஜெயலலிதா;

தமிழ்க மக்களுக்கு இலவச அரிசி இலவசம்...திருமணத்திற்கு தாலி க்கு தங்கம் இலவசம் என ஜெட் வேகத்தில் உத்தரவுகளை போட்டுவிட்டு,மெட்ரிகுலேசன் பள்ளி கொள்ளை பற்றி பெற்றோர் புகார் கொடுத்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என சொல்லியிருக்கிறார்.

இனி தங்க நகைகளை நீங்கள் அணிய வேண்டும் இல்லையெனில் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளிப்பேன் என தொண்டர்கள் சொன்னதால் சிறிய தோடு அணிவதாக கூறினார்.
சிறிய தோட்டுக்கு இவ்வளவு பெரிய விளக்கம் தேவையில்லை என நினைக்கிறேன்....

இந்தம்மா அரிசி சும்மாவே தருது..இந்த கருணாநிதி 5 வருசமா கிலோவுக்கு ஒரு ரூபான்னு வாங்கி ஏமாத்திருக்காரு பாருக்கா இதுக்குத்தான் அந்தம்மா வரணுங்கிறது..என ரேசன் கடை க்யூக்களில் மக்கள் பேசிக்கொள்கிறார்கள்.

தயாநிதி தப்பு செய்யல;கதறும் சன் டிவி

எந்த நிறுவனமும் ஆதாயம் பெறும் வகையில் செயல்படவில்லை..விதிமுறைகளை மீறி எதுவும் செய்யவில்லை-தயாநிதி விளக்கம் என சன் டிவி திரும்ப திரும்ப செய்தி ஒளிபரப்பி வருகிறது..காலை சன் நியூஸ் பார்க்கும்போது ஃப்ளாஸ் செய்திகளில் 3 செய்திகளுக்கு அடுத்து இந்த வரி ஓடுகிறது..கணக்கு பார்த்தால் இன்று மட்டும் ஒரு லட்சம் முறை வந்து விடும் போலிருக்கிறது....

ராசா சொன்னது போல,விதி முறை மீறி எதுவும் செய்யவில்லை என்கிறார்.வட இந்திய சேனல்கள் த்யாவை குறி வைத்துவிட்டன...அகோர பசியில் இருக்கும் ஊடகங்கள் நிரபராதியை கூட நிர்க்கதி ஆக்கிவிடும் போல உள்ள இந்த காலகட்டத்தில் ....பல ஆயிரம் கோடி சொத்துக்களை கண் முன்னால் லவட்டும் கோஸ்டிகளை சும்மா விடுமா...சன் டிவி முதலீடு ஆதி அந்தம் வரை தோண்டினாலும் ஆச்சர்யமில்லை...இதனால் அண்ணன் தம்பிகள் மு.க வை காட்டிக்கொடுத்தாலும் ஆச்சர்யமில்லை...


மதுரையில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்!-ரிப்போர்ட்டர்

ரவுடிகளால் சிக்கித்தவிக்கும் மதுரையை மீண்டும் ஆன்மீக நகராக மாற்றுவேன் என்று தேர்தல் பிரச்சாரத்தில் அறிவித்தார் முதல்வர் ஜெயலலிதா.இந்நிலையில் ,மதுரைக்கு மீண்டும் உதவி கமிஷனராக வெள்ளைத்துரையை நியமித்ததின் மூலம் இந்த வாக்குறுதியையும் முதல்வர் நிறைவேற்றத்தயாராகி விட்டார் என்று நம்புகிறார்கள் மதுரை வாசிகள்.



ஆட்சி மாற்றத்திற்கு பிறகு சென்னைக்கு மாற்றப்பட்ட மதுரை எஸ்.பி அஸ்ரா கர்க்,மீண்டும் மதுரை மாவட்ட எஸ்.பியாக நியமிக்கப்பட்டார்.மேலும் மடுதரைக்கு மாற்றம் செய்யப்பட்ட பதினொரு உதவி கமிஷனர்கள் மதுரையில் புதன்கிழமை பதவி ஏற்பதாக இருந்தது.ஆனால் அவர்கள் பதவியேற்கும் முன்பே அவர்களுக்கு மீண்டும் மாறுதல் உத்தரவு வந்தது.
இந்நிலையில் மதுரை அண்ணாநகர் உதவி கமிஷனராக என்கவுண்டர் புகழ் வெள்ளைத்துரை நியமிக்கப்பட்டிருக்கிறார்.இது மதுரை மதுரை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுத்தந்துள்ளது.

வீரப்பனை சுட்டுக்கொன்றதின் மூலம் பிரபலமானவர் வெள்ளைத்துரை.அதற்கு முன்பாக தாதா வீரமணியை ஒற்றையாளாக சுட்டு வீழ்த்தியவர்.பின்னர் 2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் மதுரை நகர் சட்டம் ஒழுங்கு உதவி கமிஷனராக வெள்ளைத்துரை நியமிக்கப்பட்டார்.அப்போது கவியரசு,கல்லுமண்டையன் ஆகியோரை என்கவுண்டர் செய்தார்.
முன்பு இவர் இங்கு பணியாற்றியபோது, மதுரையின் அடையாளமான மீனாட்சி அம்மன் கோயிலுக்கு விரிக்கப்பட்டுள்ள ஆபத்தை அகற்ற விதிமுறைகளை மீறி ,கோயில் அருகில் கோயில் கோபுரம் உயரம் தாண்டி கட்டப்பட்ட கட்டிடங்களை இடிக்க உத்தரவிட்டார்..அதனாலேயே அவர் இங்கிருந்து மாற்றப்பட்டார்..இந்நிலையில் அவர் இங்கு மீண்டும் வருகிறார்..

தேர்தலின் போது அடாவடி செய்த ரவுடிகள் லிஸ்ட் இப்போது மதுரை உதவி கமிஷனர் வெள்ளைத்துரை கையில்....



நன்றி-ரிப்போர்ட்டர்

உண்ணாவிரதத்தை துவக்கினார் ஹசாரே

யோகா குரு ராம்தேவ் டில்லியிருந்து நள்ளிரவில் அப்புறப்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அன்னா ஹசாரே இன்று காலை 10 மணிக்கு மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தை துவக்கி உள்ளார். மகாத்மா காந்தியின் நினைவிடமான ராஜ்காட்டில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. மாலை 6 மணி வரை இந்த போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க ராஜ்காட்டில் பெருமளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அன்னா ஹசாரேவிற்கு ஆதரவாளர்களுடன் ராம்தேவ் ஆதரவாளர்களும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.


Monday, June 6, 2011

தயாநிதி மாறனால் இழப்பு ரூ.440 கோடி? "தூங்குகிறது சி.பி.ஐ. அறிக்கை'

நினைத்தாலே அதிர்ச்சிதரத்தக்க துணிகரமான கொள்ளை! தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் 323 தொலைபேசிகளைத் தன்னுடைய வீட்டோடு இணைக்குமாறு பி.எஸ்.என்.எல்.லைப் பணிக்கிறார். இது எங்கே நடந்தது தில்லியிலா, இல்லையில்லை சென்னையிலேயேதான். இந்த 323 இணைப்புகளும் அமைச்சரின் பெயரில் அல்ல சென்னை பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் பெயரிலேயே இணைக்கப்படுகின்றன.

இவை வெறும் 323 தொலைபேசி இணைப்புகள் அல்ல - இவை ஒரு தொலைபேசி இணைப்பகமே; இந்த இணைப்பகம் அமைச்சர் குடும்பத்து வியாபார நலனுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக 3.4 கிலோ மீட்டர் நீளத்துக்கு பொது வீதியில் "ரகசியமாக' கேபிள்கள் பதிக்கப்பட்டுள்ளது. வீட்டிலிருந்து குடும்பத்து வர்த்தக நிறுவனத்துக்கு இணைப்பு தரப்பட்டிருக்கிறது. இதனால் பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு.

பொதுச் சொத்துகளைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அந்த புத்திசாலியான அமைச்சர் யார்? அலைக்கற்றை ஊழலில் சிக்கி பெயரையும் புகழையும் இழந்திருக்கிறாரே அந்த ஆ. ராசாவா? இல்லையில்லை, இன்னமும் மத்திய அமைச்சராகப் பெயருடனும் புகழுடனும் வலம் வருகிறாரே அந்த தயாநிதி மாறன்தான் அவர். ஆ. ராசாவுக்கும் முன்னதாக அந்தத் துறையை வகித்துவந்தார், இப்போது ஜவுளித்துறையில் அமைச்சராக இருக்கிறார்.

அவருடைய இந்த இணைப்பக ஊழலை விசாரித்த மத்தியப் புலனாய்வுக் கழகம் (சி.பி.ஐ.) இந்த மோசடிக்காக தயாநிதி மாறன் மீது நடவடிக்கை எடுக்குமாறு மத்தியத் தகவல் தொடர்புத்துறை செயலருக்கு 10.9.2007-ல் கடிதம் எழுதியது. இந்தக் கடிதம் ஒரு பெட்டிச் செய்தியாகவும் சி.பி.ஐ. அறிக்கையின் சாரம் தனிச் செய்தியாகவும் தரப்பட்டுள்ளது. படியுங்கள், படியுங்கள் படித்துக்கொண்டே இருங்கள்.

323 தொலைபேசி இணைப்புகளை தயாநிதி மாறன் பொழுதுபோக்குக்காக வைத்துக் கொள்ளவில்லை. சென்னையில் தான் வசித்த போட்கிளப் சாலை வீட்டிலிருந்து அண்ணா சாலையில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள சன் டி.வி. அலுவலகம் வரையிலும் தன்னுடைய குடும்ப நிறுவனத்தின் பயன்பாட்டுக்காகத் தனிப்பட்ட முறையில் தொலைபேசி இணைப்புக் கேபிள்களைப் பதித்துக் கொண்டிருக்கிறார். தன்னுடைய வீட்டுடனான 323 தொலைபேசி இணைப்புகளையும் மோசடியாக தன்னுடைய சகோதரர் கலாநிதி மாறனின் சன் டி.வி. குழுமத்தின் டி.வி. நிகழ்ச்சி ஒளிபரப்புகளுக்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

நன்றி தினமணி

இந்த 323 இணைப்புகளில் முதல் 23 இணைப்புகள் 24372211 முதல் 24372301 வரையிலான எண்ணில் செயல்பட்டவை. அடுத்த 300 இணைப்புகள் 24371500 முதல் 24371799 வரையிலானவை. எல்லா தொலைபேசிகளும் 2437 என்ற எண்ணுடன் தொடங்கியதால் 323 இணைப்புகளும் ஒரே தொலைபேசி இணைப்பகத்தைச் சேர்ந்தவையாகச் செயல்பட்டன. 2007 ஜனவரி முதல் பல மாதங்களுக்கு இந்த இணைப்பகம் சன் குழுமத்துக்காகப் பயன்படுத்தப்பட்டது.

இவை சாதாரண தொலைபேசி இணைப்புகள் அல்ல; விலைமதிப்புள்ள ஐ.எஸ்.டி.என். இணைப்புகளைக் கொண்டவை. செயற்கைக் கோள்களைவிட அதிக விரைவாக உலகின் எந்தப்பகுதியிலிருந்தும் எந்தப் பகுதிக்கும் செய்திகளையும் படங்களையும் விடியோ காட்சிகளையும் நொடிக்கணக்கில் கொண்டுபோய்ச் சேர்க்கும் அதிநவீன தகவல் தொடர்பு இணைப்புகளாகும்.

டிஜிடல் வழியிலான தகவல்களைக் கொண்டுபோய்ச் சேர்க்கவும் விடியோ கான்ஃபரன்சிங் சேவை அளிக்கவும் ஆடியோ, விடியோ சேவைகளை அளிக்கவும் வல்லவை இந்த இணைப்புகள். சுருக்கமாகச் சொன்னால் சன் குழுமத் தொலைக்காட்சி நிறுவனங்கள் வெகு திறமையாகச் செயல்பட பெரும் பங்காற்றியவை.

இதை சன் குழுமம் தனிப்பட்ட முறையில் வாடகைக்கு அமர்த்தியிருந்தால் கோடிக்கணக்கான ரூபாய்கள் இதற்காகச் செலவிட வேண்டியிருந்திருக்கும். ஆனால் அமைச்சரின் அபாரமான உத்தியால் இவை அனைத்தும் நயா பைசா செலவில்லாமல் முழுக்க முழுக்க இலவசமாகவே குடும்ப வியாபாரத்துக்குப் பயன்படுத்தப்பட்டன.

இது அமைச்சரின் சொந்த உபயோகத்துக்காக மட்டுமே ஏற்படுத்தப்பட்ட இணைப்பகம் என்று பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ஒரு சில ஊழியர்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாதவண்ணம் மிகமிக ரகசியமாக இது வைக்கப்பட்டிருந்தது என்று இந்த விவகாரத்தை விசாரித்த சி.பி.ஐ. தனது அறிக்கையில் தெரிவிக்கிறது.

மேலோட்டமாகப் பார்க்கும்போது பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்புகளை அமைச்சர் தன்னுடைய வீட்டில் பயன்படுத்தியதைப்போலத் தோற்றம் அளிக்கும். ஆனால் இந்த இணைப்புகள் அனைத்தும் நீட்டிக்கப்பட்ட கேபிள்கள் வழியாக அமைச்சருடைய குடும்ப நிறுவனத்தின் வர்த்தக நோக்கத்துக்குப் பயன்பட்டன என்று சி.பி.ஐ. சுட்டிக்காட்டியுள்ளது.

கூகுள் மேப் சேவை மூலம் இந்தத் தொலைவைக் கணக்கிட்டபோது அது மொத்தம் 3.4 கிலோ மீட்டர் என்று காட்டுகிறது. நகரின் மையப் பகுதியில் பெரிய சாலைகள் வழியாக இந்த கேபிள் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. இதை ரகசியமான மோசடி என்று சொல்ல முடியாது, பகிரங்கமாக நடத்தப்பட்ட ரகசிய மோசடி என்றே கருத வேண்டும்.

இதனால் அரசுக்கு ஏற்பட்ட நஷ்டம் எவ்வளவு? மலைக்கவைக்கும் இந்தக் கணக்கையும் சி.பி.ஐ.யே ஒரு மாதிரிக்கு போட்டுக் காட்டியிருக்கிறது. 24371515 என்ற ஒரு தொலைபேசி மூலம் மட்டும் 2007 மார்ச் மாதத்தில் மட்டும் 48 லட்சத்து 72 ஆயிரத்து 27 யூனிட்டுகள் அளவுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது ஒரே ஒரு தொலைபேசி மூலம் ஒரு மாதத்துக்கு சராசரியாக 49 லட்சம் யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அப்படியானால் 323 இணைப்புகள் வாயிலாக எத்தனை லட்சம் - இல்லையில்லை - கோடி யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கும்.

2007 ஜனவரி முதல் ஏப்ரல் வரையில் 629.5 கோடி யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கும் என்று சராசரி கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. ஒரு யூனிட்டுக்கு 70 பைசா என்ற கணக்கில் பார்த்தால் பி.எஸ்.என்.எல்லுக்கு இதன் மூலம் ரூ.440 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்கிறது சி.பி.ஐ. இதையே சி.பி.ஐ. மதிப்பிடாமல் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் கணக்கிட்டால் இன்னமும் துல்லியமாக - ரூ.440 கோடியைவிட - அதிகமாக இருக்கக்கூடும். கதை இத்தோடு முடியவில்லை.

இந்த இணைப்புகள் சன் டி.வி. குழுமத்தோடு நிற்கவில்லை; அதன் சகோதர நிறுவனமான தினகரன் நாளிதழின் மதுரை அலுவலகப் பதிப்புக்கும் பயன்பட்டிருக்கிறது, அந்த தொலைபேசி இணைப்புகள் குறித்து துல்லியமான விவரங்கள் கிடைக்காவிட்டாலும் பயன்பாடு குறித்து தகவல்கள் கிடைத்துள்ளன என்கிறது சி.பி.ஐ. அறிக்கை

Wednesday, June 1, 2011

ராசா , கனி ......... அடுத்து ?

ஜாமீன் எந்த கடலிலும் கிடைக்கல

கம்மல் அணிவது ஏன்? ஜெயலலிதா விளக்கம்

கம்மல் அணிவது பற்றி முதல்-அமைச்சர் ஜெயலலிதா விளக்கம் அளித்தார். இன்று கோட்டையில் அவர் அளித்த பேட்டி விவரம் வருமாறு:-
கே:- நீண்ட நாட்களாக நீங்கள் நகைகள் எதுவும் அணிவதில்லை. இப்போது காதில் தோடு அணிந்து இருக்கிறீர்களே?
ப:- 1997-க்கு பிறகு நகைகளை அணிவதை விட்டு விட்டேன். ஆனால் அ.தி.மு.க. நிர்வாகிகளும் தொண்டர்களும் என்னை சந்திக்கும் போதெல்லாம் நகை அணிய வேண்டும் என்று வற்புறுத்தி வந்தார்கள். சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்றதும் தொண்டர்கள் என் வீட்டு முன்பு குவிந்தார்கள். அப்போது உடன்பிறப்புகள் நான் நகை அணிய வேண்டும் என்று வற்புறுத்தினார்கள்.
பல்வேறு தவறுகளை செய்த கருணாநிதி குடும்பமே மகிழ்ச்சியாக இருக்கிறது. நீங்கள் ஏன் நகை அணியாமல் இருக்கிறீர்கள். நகை அணியாவிட்டால் தீக்குளிப்போம் என்று கூறினார்கள். எங்கள் கட்சி தொண்டர்கள் சொன்னதை செய்து விடுவார்கள். ஒரு பெண் தொண்டர் நாக்கை அறுத்துக் கொண்டார். இன்னொருவர் கை விரலை துண்டித்துக் கொண்டார். எனவே தொண்டர்கள் விருப்பத்துக்கு ஏற்று காதில் தோடு அணிந்து இருக்கிறேன்.
நாக்கை அறுத் துக்கொண்ட பெண்ணுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்து இருக்கிறேன். சில பத்திரிகைகளில் இது போன்ற செயல்களை நான் ஊக்கப்படுத்துவதாக எழுதுகிறார்கள். அது உண்மை இல்லை. அந்த பெண் கணவரால் கைவிடப்பட்டவர். 2 குழந்தைகள் உள்ளன. அவருக்கு வருமானம் எதுவும் இல்லை. எனவே அரசு வேலை கொடுக்கப்பட்டு இருக்கிறது.
இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறினார்.