Saturday, June 18, 2011

தயாவிடம் பாதி... கனியிடம் மீதி!

''குடும்ப விவகாரம் கொலு மண்டபத்துக்கு வரும் விசித்திரத்தை சரித்திரம் இப்போதுதான் சந்திக்கிறது'' - 'மனோகரா’ படத்துக்காக கருணாநிதியின் பேனா தீட்டிய அதே வசனத்தை, இப்போது கோபாலபுரம், பாட்டியாலா கோர்ட், சி.ஐ.டி. காலனி வீடு, திஹார் ஜெயில் காட்சிகள் நினைவூட்டுகின்றன!

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுப் புகார் படிப்படியாக முன்னேறி, கனிமொழிவரையில் சிறைக் கதவுகள் திறந்துகொண்டபோது, தி.மு.க. தொண்டன் துடித்தான். அடுத்தபடியாக, தயாநிதி மாறனை மையம் கொண்டு 'தெகல்ஹா' இதழ் கிளப்பிய புயல் வேகம் பெறும் நேரம் இது!

படிப்படியாக திசை மாறி மையம் கொள்ளும் இந்தப் புயலை, ஒரே கட்சியின் வெவ்வேறு முகாம்களில் இருப்பவர்கள் பரஸ்பரம் ரசிக்கும் விதத்தை சாதாரண கோஷ்டி அரசியலாகவோ, குடும்ப அரசியலாகவோ மட்டுமே சொல்லிவிட முடியாது. சரித்திரத் தேர்ச்சி கொண்டவர்கள் இதை 'யதுகுல’ மோதல் போன்றது என்றே வர்ணிக்கிறார்கள்.

பாண்டுவும் திருதராஷ்டிரனும் பெற்ற பிள்ளைகளுக்கு இடையே அரங்கேறிய சகோதரச் சண்டையே... மகாபாரதம். இறுதியில் காந்தாரியின் கோபம் எல்லாம் கிருஷ்ணனின் பக்கம் திரும்பியதாகவும்... 'சூழ்ச்சியால் நீ என் குலத்தை அழித்தாய்... கிருஷ்ணா, உன் குலமும் தமக்குள் அடித்துக்கொண்டு அழியும்’ எனச் சாபம் கொடுத்ததாகவும்... இதனால், மதுராவை ஆண்ட கடைசி மன்னனாக கிருஷ்ணனே ஆனதாகவும் கிளைக் கதைகள் உண்டு!

அப்படி ஒரு நெடுங்கதையின் கிளைக் கதையாகவே ஸ்பெக்ட்ரம் விவகாரத்தையும் சொல்கிறார்கள் சில அரசியல் பார்வையாளர்கள்.

அசைக்க முடியாத ஆளும் கட்சியாய் கோலோச்சி வந்த தி.மு.க, இன்று இழந்திருப்பது அரியாசனத்தை மட்டும் அல்ல... தன் கட்சியின் ஒட்டு மொத்த இமேஜையும்தான்..!

2007 மே 9... தி.மு.க-வில் கருணாநிதிக்கு அடுத்ததாக யாருக்குச் செல்வாக்கு? என்ற கருத்துக் கணிப்பை, 'தினகரன்’ நாளிதழ் கணித்துச் சொன்னது.

74 சதவிகித செல்வாக்கு ஸ்டாலினுக்கும் அழகிரிக்கு 2 சதவிகிதமும் கனிமொழிக்கு 1 சதவிகிதமும் என்றது அந்த சர்வே முடிவு. இதுபோக... மீதி உள்ள சதவிகித எண்ணிக்கை 'மற்றவர்கள்' என்றும் சொன்னது. ''அண்ணன் - தம்பி சண்டையை மூட்டுவது மட்டும் அல்ல இதன் நோக்கம்... அந்த 'மற்றவர்கள்' என்பது தயாநிதி மாறனை மனதில் கொண்டுதான்'' என்று அறிவாலயத்திலும் மதுரையிலும் கொதிப்பு கிளம்பியது.


அந்தக் கணிப்பை ஸ்டாலின் ரசித்தார். அழகிரி வெறுத்தார். கனிமொழியின் நலம் விரும்பிகளும் எரிச்சலானார்கள். இதன் தொடர்ச்சியாக, மதுரையில் நாளிதழின் அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டு கொளுத்தப்பட்டது. மூன்று உயிர்கள் பலியாகின.

அன்றைக்கு தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த தயாநிதி மாறன், அன்றைய உள்துறைச் செயலாளர் மாலதிக்கு போன் செய்து மிரட்டியதாக மின்சாரத் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமியே பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். ''மதுரையில் இவ்வளவு பெரிய சம்பவம் நடக்கிறது. நடவடிக்கை எடுக்க மாட்டீர்களா?'' என்று அவர் கேட்டதாக ஆற்காடு வீராசாமி சொன்னார்.

மகனுக்கும், பேரனுக்குமான மோதலில், மகன் பக்கம் கருணாநிதி நின்றார். மே 13-ம் தேதி தயாநிதி மாறன் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய... கோபாலபுர மெகாபாரதம் வேகம் கண்டது!

முரசொலிமாறன் மறைவுக்குப் பிறகு டெல்லி விவகாரங்களைக் கவனித்துக் கொள்ள அவரது குடும்பத்துக்குள் இருந்தே வாரிசை அழைத்து வந்தவர் கருணாநிதிதான். ''தயாநிதி மாறன் தேர்தலில் நிற்கப்போகிறாரா?'' என்று அதற்கு முன் ஆனந்த விகடனுக்கான தனிப் பேட்டியில் கருணாநிதியிடம் கேட்டபோது, ''இல்லை! அண்ணன் கலாநிதியை விட்டுவிட்டு தம்பியை ஏன் கேட்கிறீர்கள்?'' என்று திருப்பிக் கேட்டார் கருணாநிதி.

அவரே, பிறகு தயாநிதியை மத்திய சென்னை எம்.பி. ஆக்கினார். அமைச்சரும் ஆக்கினார். அதுவும் கேபினெட் அந்தஸ்து வாங்கிக் கொடுத்தார். அதற்கு விமர்சனங்கள் வந்தபோது வக்காலத்தும் வாங்கினார். ''தயாநிதி அரசியலுக்கு வருவார். இப்படி வளர்வார் என்று நான் எதிர்பார்க்கலே. அவர் ஜூனியர்தான். ஆனால், பார்ப்பனக் குஞ்சாக இருந்தால், திருஞானசம்பந்தன் என்று பாராட்டி இருப்பார்கள். இவன் சூத்திரனுக்குப் பேரன்தானே'' என்பது கருணாநிதி தந்த வாசகங்கள். ஆனால், அது மதுரைச் சம்பவத்துக்குப் பிறகு மொத்தமாகத் திசை மாறிப் போனது.

தயாநிதி கவனித்து வந்த டெல்லி காரியங்களை இனி யார் பார்த்துக் கொள்வது என்ற கேள்வி எழுந்தபோது, ''நம்பிக்கையாக இருக்கணும். இங்கிலீஷ் நல்லாத் தெரியணும். தங்கச்சி கனி இருக்குதே...'’ என்று மு.க.அழகிரிதான் அப்போது எடுத்துக் கொடுத்தார் என்பார்கள்.

அந்தச் சமயத்தில், ''கனிமொழிக்கு ஏதாவது பதவி கொடுப்பீர்களா?'' என்று கேட்கப்பட்டது. ''காய், கனி ஆகும்போது பார்க்கலாம்'' என்றது மு.க-வின் வாய்ஜாலம். அடுத்த சில வாரங்களில் கனிமொழி மாநிலங்களவை உறுப்பினரானார். தயாநிதி வகித்து வந்த அதே தொலைத் தொடர்புத் துறை, ஆ.ராசாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

அப்போது ராசாவுக்கும் தயாநிதிக்கும் இடையே ஓர் அறிக்கைப் போர் நடந்தது. பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு செய்ததாக தயாநிதி மீது ஆ.ராசா பகிரங்கமாகக் குற்றம் சாட்டி திகிலைக் கிளப்பினார். இன்று '2-ஜி’ பற்றிப் பேசுபவர்கள்கூட இதை ஏனோ மறந்துவிட்டார்கள்!

இன்று விஸ்வரூபம் எடுத்து தி.மு.க. குடும்பத்தின் ஒவ்வொரு தலையாகக் கபளீகரம் செய்துவரும் ஸ்பெக்ட்ரம் தொடர்பான அசிங்கங்கள் மெள்ள மெள்ள மீடியாவின் வாசலுக்கு வரத் துவங்கியதும், அந்தக் குடும்ப மோதலுக்குப் பிறகுதான்!

'மீடியாவை வைத்துக் கொண்டுதானே அதிகாரம் செலுத்துகிறார் தயாநிதி. அதையே நாமும் செய்தால் என்ன?’ என்று அழகிரி தரப்பு யோசித்தது. அதன் பிறகுதான் 'கலைஞர் டி.வி.’ உதயம் ஆனது. சுமங்கலி கேபிளுக்குப் பதிலாக இவர்கள் ராயல் கேபிளைத் தொடங்கினார்கள். அதாவது, தயாநிதி மாறனின் இரண்டு பலங்களைப் பலவீனப்படுத்தத் தொடங்கினார்கள்!

டெல்லி குருஷேத்திரத்தைக் களமாக்கி, தி.மு.க. குடும்பம் இரண்டு அணிகளாக நடத்திக் கொண்ட அந்த 'நவீன பாரத' யுத்தத்தில் சூழ்ச்சிகளுக்கு எந்தத் தரப்பிலுமே பஞ்சம் இல்லை. நஷ்டங்களும் அப்படியே!

2008 செப்டம்பர், அக்டோபரில் ஸ்பெக்ட்ரம் டெண்டர்களுக்கு ஒப்புதல் தரப்பட்டது. அடுத்த மாதமே, இது மீடியாக்களில் வெளியானது. நவம்பர் 3-ம் தேதி யுனிடெக் நிறுவனத் தலைவர் ரமேஷ் சந்திராவிடம் டெலிபோனில் பேசிய நீரா ராடியா, ''மீடியாக்கள் இந்த விஷயத்தைக் கண்டுபிடித்துவிட்டன. இது சன் டி.வி, ஜெயா டி.வி-யில் வருகிறது. ஸ்வான் நிறுவனத்துக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்துகொடுத்து, ஆ.ராசா பயனடைந்ததாக அவை சொல்கின்றன. ஜெயா டி.வி-யாவது அ.தி.மு.க-வைச் சேர்ந்தது. ஆனால், சன் டி.வி. மாறன் குரூப்பைச் சேர்ந்தது'' என்று குழப்பம் அடைந்தவராகப் பேசுகிறார்.

அதாவது, 'தனது பதவியைப் பறித்த தி.மு.க-வைப் பழிவாங்கவே, இந்தச் செய்திகளை தயாநிதி மாறன் லீக் செய்தாரோ’ என்ற அர்த்தத்தில் நீரா ராடியாவின் வாக்குமூலம் பதிவாகி உள்ளது.


மோதலை முடித்துக் கொள்ள இரு தரப்பிலும் மாறி மாறிப் பேச்சுவார்த்தைகள் நடந்து, வெளியிலும் உள்ளேயுமாகப் பல உடன்பாடுகள் ஏற்பட்டு, எல்லோரும் கூடிச் சிரித்து, 'கண்கள் பனிக்க... இதயம் இனிக்க' புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தாலும், மோதல் நெருப்பின் கங்குகள் அணையாமல் உள்ளே கனன்று கொண்டேதான் இருந்தன.

அது மட்டுமா... நெஞ்சம் இனித்த அந்த தினத்தன்று இரு தரப்பினரும் உள்ளே நுழைவதற்குச் சில நிமிடங்களுக்கு முன் ஒரு விஷயம் நடந்ததாகச் செய்திகள் உண்டு.

சமாதான அறிவிப்பு ஸ்தலமான கோபாலபுரத்தில் இருந்து ராஜாத்தி அம்மாளுக்கு போன் செய்த கருணாநிதி, ''அவங்க எல்லாரும் தனியாப் பேசி ஒண்ணு சேர்ந்துட்டாங்க. இது எதுவுமே எனக்குத் தெரியாது!'' என்றாராம். அதாவது, மாறன் சகோதரர்கள் மறுபடி கோபாலபுரத்துடன் உடன்பாடு கண்டதை சி.ஐ.டி. காலனி ரசிக்கவில்லை!

''தயாநிதி மாறன் மட்டுமல்ல... அவரை ஆதரிப்பவர்களும் எனக்கு எதிரிகள்தான்'' என்று சொன்ன அழகிரியும், ''நான் என்ன தவறு செய்தேன்? அவரைப் போல் போட்டி வேட்பாளரை நிறுத்தி முன்னாள் சபாநாயகரைத் தோற்கடித்தேனா?'' என்று கேட்ட தயாநிதியும்... கை குலுக்கிக் கொண்டார்கள். ''நீதான் இங்கிலீஷ் நல்லாப் பேசுவியே!'' என்று அழகிரியால் ஆசீர்வாதம் செய்து அழைத்து வரப்பட்ட கனிமொழி, மீண்டும் தனித்துவிடப்பட்டார்.

ஸ்பெக்ட்ரம் புகாரோ, எதிர்க் கட்சிகள் மற்றும் ஊடகங்களால் பலமான அலைவரிசையில் போட்டுத் தாக்கப்பட்டது. அடுத்த சில நாட்களில் டெல்லி சென்ற கருணாநிதியிடம் ஸ்பெக்ட்ரம் பற்றிக் கேட்கப்பட்டது. ''ஸ்பெக்ட்ரம் விவகாரம் முடிக்கப்பட்டுவிட்டது'' என்றார் அவர். கருணாநிதி குடும்பமும் மாறன் குடும்பமும் ஒன்றிணைவதால், ஸ்பெக்ட்ரம் விவகாரம் எப்படி முடிக்கப்பட்டுவிடும்?

தொடர்ந்து நடந்ததை நாடு அறியும்!

ஆ.ராசா, கனிமொழியை சி.பி.ஐ. கைது செய்தது... தயாளு அம்மாள் கை விலங்கில் இருந்து தப்பினார். ''அந்தக் குடும்பத்துல எல்லாரும் தப்பிட்டாங்க. கனிமொழி மட்டும் என்ன பாவம் செய்தார்? தயாநிதிதான் இது எல்லாத்துக்கும் காரணம்'' என்று சி.ஐ.டி. காலனியில் சோகமும் சீறலுமாகக் கேள்வி ஒலித்தது.

இப்போது 'தயாநிதி மாறனுக்கு எதிராக சிவசங்கரன் வாக்குமூலம்' என்று புதிய புயல் வீசும் நிலையில், தி.மு.க. தரப்பு கவனமாக அமைதி காத்துக் கொண்டிருக்கிறது - அடுத்து நடப்பதை எதிர் நோக்கி!

அலைக்கற்றை விவகாரம் ஆ.ராசா காலத்தில் இருந்து ஆரம்பமான விஷயம் அல்ல. தயாநிதி மாறன் அமைச்சராக இருந்த நேரத்திலும் சில முறைகேடுகள் நடந்திருக்கின்றன என்று 'தெகல்ஹா’ சொல்ல... அவருடைய பதவி, சி.பி.ஐ-யின் குற்றப்பத்திரிகையை எதிர்நோக்கித் தள்ளாடிக் கொண்டிருக்கிறது.

'குற்றப்பத்திரிகையில் பெயர் சேர்க்கப்படுவதாலேயே ராசா குற்றவாளி ஆகிவிட மாட்டார்’ என்று வக்காலத்து வாங்கிய கருணாநிதி, ''தயாநிதி தனது பிரச்னைகளைத் தானே பார்த்துக் கொள்வார்'' என்று சொன்னதன் உள் அர்த்தம் அந்தக் கனல் ஆறவில்லை என்பதையே காட்டுகிறது.

''ஆ.ராசா, கனிமொழி கைதுக்குக் காரணமே தயாநிதி மாறன்தான்'' என்று சொல்லும் ஒரு தரப்பு தி.மு.க-வினர், ''நாளைக்கு தயாநிதி மாறனுக்குச் சிக்கல் வலுத்தால் அதற்கு ஆ.ராசாவும் கனிமொழியும்தான் காரணமாக இருப்பார்கள்'’ என்றும் சொல்லத் தவறவில்லை!

கருணாநிதியை, அவர் குடும்பத்து உட்பகையே உறக்கம் இல்லாமல் செய்துவிட்டது. இதில் இருந்து தப்பிக்க மந்திரக்கோல் எதுவும் இப்போதைக்கு அவர் கை வசம் இல்லை. அப்படி ஒன்று இருந்தாலும்... அது இரண்டாக உடைந்து போனதாகவே சொல்லலாம்...

தயாவிடம் பாதியும்... கனியிடம் மீதியும்!

நன்றி : ஆனந்தவிகடன்-22-06-2011

Thursday, June 16, 2011

டார்கெட் தயா


முதன் முறையாக நாடாளு மன்ற எம்.பி-யானபோதே, மத்திய அரசின் கேபினெட் அமைச்சராகி... அதுவும் முக்கியத்துவம் வாய்ந்த தகவல் தொழில்நுட்பம், தொலைத் தொடர்புத் துறை போன்ற பொறுப்புகளைப் பெற்றவர் தயாநிதி மாறன். இப்போது 2ஜி ஸ்பெக்ட்ரம் சுழலில் இவரும் சிக்குகிறார்!

தயாநிதி குறித்த விவகாரங்களை ஏற்கெனவே வாக்குமூலமாகக் கொட்டி இருந்தார் - முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் அருண் ஷோரி. இப்போது அவர் சொல்வது என்ன? அவரை நாம் சந்தித்தபோது...

''மத்திய அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி சிவராஜ் பாட்டீல் விசாரணை அறிக்கையில் ஓர் அத்தியாயம் முழுக்க தயாநிதி மாறன் செய்த காரியங்கள் குறித்துச் சொல்லப்பட்டு உள்ளது. ஆனால், மீடியாக்கள் அந்த அத்தியாயத்தை அப்போது கண்டுகொள்ளவில்லை.

ஆ.ராசா என்ன செய்தார்? ஒரு டெலிகாம் சர்க் கிளில், எத்தனை மொபைல் ஆபரேட்டர்களுக்கும்உரிமங்களைக் கொடுக்கலாம் என்கிற முறையைக் கொண்டுவந்தார். இந்த முறை தொலைத் தொடர்புத் துறை வழிகாட்டி நெறிமுறைகளுக்கு எதிரானது. இந்த வழிகாட்டி நெறிமுறைகளை மீறி 2005 டிசம்பர் மாதமே தயாநிதி மாறன் அனுமதி கொடுத்து உள்ளார். ஆக, மாறன்தான் விதிமுறைகளை மீறி முதலில் செயல்பட்டவர். இத்தகைய அனுமதிக்கு, தொலைத் தொடர்பு கமிஷனின் அனுமதி, தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) ஆலோசனை மற்றும் அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற வேண்டும். ஆனால், இவற்றில் ஒன்றைக்கூட பெறாமல் தயாநிதி மாறன் உரிமங்களைக் கொடுத்தார். குறைந்த பட்சம் இதை டிராய் சிபாரிசின் அடிப்படையிலாவது செயல்படுத்தி இருக்க வேண்டும். டிராயின் சிபாரிசு 2007-ல்தான் வந்தது. அப்படியானால் மாறன் முன்கூட்டியே எப்படிச் செய்தார்?

பல ஆபரேட்டர்களை அனுமதிப்ப தன் மூலம் ஆரோக்கியமான போட்டியையாவது தொலைத் தொடர்பு ஆபரேட்டர்களுக்கு மத்தி யில் ஏற்படுத்தினார்களா? இல்லை என்பதே என் வாதம். பால்வா போன்ற - தொலைத் தொடர்புத் துறைக்கே சம்பந்தம் இல்லாத - ரியல் எஸ்டேட் தொழிலதிபர்களை இந்தத் துறைக்குள் கொண்டுவந்தது எப்படி?'' என்று கேள்விகளை வரிசையாக அடுக்கிய அருண்ஷோரி, மேலும் பல விஷயங்களையும் எடுத்து வைக்கிறார்.

''என்.டி.ஏ. ஆட்சியில் கேட்டுக்கொள்ளப்பட்ட ஆலோசனைகளை அடுத்து, டிராய் அமைப்பு ஒருங் கிணைந்த அணுகுமுறை சேவைகளுக்கான உரிமம் சம்பந்தப்பட்ட சிபாரிசுகளை 18 மாதங்களுக்குப் பின்னர் கொடுத்தது. அந்த சமயத்தில் என்.டி.ஏ. ஆட்சி இல்லை. இந்த இறுதி சிபாரிசு வந்த 2005 அக்டோபரில் தயாநிதி மாறன்தான் தொலைத் தொடர்புத் துறைக்கு அமைச்சர். ஒருங்கிணைந்த அணுகுமுறை சேவைக்கான உரிமங்களை வழங்குவது குறித்து அந்த சிபாரிசில் சொல்லப்பட்டது. ஆனால், மாறன் இந்த சிபாரிசுகளைக் கிடப்பில் போட்டார். இதனால், டிராய் சேர்மன் பிரதீப் பைஜாலுக்கும் மாறனுக்கும் மோதல் நடந்தது. பைஜால் இந்த சிபாரிசுகளை அமல்படுத்த வேண்டும் என்று கூறினார். ஆனால், மாறன் மறுத்தார். காரணம், ஒருங்கிணைந்த அணுகுமுறைச் சேவையில் டெலிகாம் ஆபரேட்டர்கள் தொலைக்காட்சி சேவையிலும் ஈடுபடலாம் என்று இருந்தது. ஆனால், ஏதோ சில காரணங்களுக்காக மாறன் இந்த சிபாரிசை முடக்கத் திட்ட மிட்டார்.

மூன்று விதங்களில் தயாநிதி மாறன் பதவிக் காலத்தில் தவறுகள் நடந்து இருக்கின்றன. ஒன்று, டிராய் சிபாரிசு இல்லாமல் ஏராளமான தொலைபேசி ஆபரேட்டர்களுக்கு உரிமங்கள் வழங்கியது. இரண்டா வது, ஏர்செல் டிஷ்நெட் பங்குகளை அப்போலோ நிறுவனத்தையும் துணையாக்கி மாற்றியது. மூன்றாவது, 2003-ம் ஆண்டு அமைச்சரவை எடுத்த முடிவுப்படி, ஒருங்கிணைந்த அணுகுமுறை சேவைக்கான உரிமங்கள் வழங்குவது குறித்து டிராய் கொடுத்த சிபாரிசை முடக்கியது. இதனை எல்லாம் முறையாக விசாரித்தால், உண்மைகள் வெளிவரும். இந்த வகையில் சி.பி.ஐ-யின் அடுத்த டார்கெட் மாறன்தான்!'' என்றார்.

இப்போது சி.பி.ஐ. முன்பு வாக்குமூலம் கொடுத்து, பழைய யுத்தத்தைப் புதுப்பித்து இருக்கிறார் சிவசங்கரன். ஒரு பக்கம் சி.பி.ஐ-யே சிவசங்கரனைத் தேடிப் பிடித்து அழைத்து வந்து தகவல்களைக் கறப்பதாகச் சொல்லப்படுகிறது. மற்றொரு பக்கம், தமிழக அரசியல் புள்ளி களின் ஆதரவு கிடைக்கவும், அதையட்டியே சி.பி.ஐ-க்கு சிவசங்கரன் வந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. எப்படியோ சி.பி.ஐ-யின் புதிய அலுவல கத்தின் ஒன்பதாவது மாடி வரை சிவசங்கரன் படி ஏறிவிட் டார். ஆரம்பத்தில் சி.பி.ஐ. அலுவலகத்துக்கு வெளியேயும்... பின்னர் அலுவலகத்தில் அதிகாரபூர்வமாகவும் தனது வாக்குமூலத்தை அவர் கொடுத்த தாகச் சொல்லப்படுகிறது.

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், சி.பி.ஐ. 2007 முதல் 2010 வரையிலான விஷயங்களை மட்டும் உள்ளடக்கி விசாரணையை முடித்து மூன்றாவது குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்யப்போகிறது. அடுத்த கட்டமாக 2001 முதல் 2007 வரையிலான விசாரணையைத் தொடங்க வேண்டும். இதற்கான ஆரம்ப கட்ட விசாரணை தொடங்கிவிட்ட நிலையில், தயாநிதி மாறன் விவகாரம்தான் முன்னிலையில் இருக் கிறது என்கிறார்கள் டெல்லி வட்டாரத்தில். தயாநிதி மாறன் தன்னை நிர்ப்பந்தம் செய்து ஏர்செல் பங்குகளை விற்கவைத்தார் என்று சிவசங்கரன் கூறும் குற்றச்சாட்டுக்கு ஆதரவாக சுமார் 10 சாட்சி களை சி.பி.ஐ. முன் நிறுத்தத் தயாராவதாகவும் சொல்லப்படுகிறது. இவர்களில் பெரும்பாலோர் வெளிநாடுகளில் இருப்பவர்களாம். வங்கி அதிகாரிகள், முதலீட்டாளர்கள், வழக்கறிஞர்கள், பங்குதாரர்கள் போன்றவர்களும் இதில் அடக்கம் என்று கூறப் படுகிறது.

இந்த சாட்சிகளோடு, தயாநிதி மாறன் அமைச்சராக இருந்தபோது மேற்கொள்ளப்பட்ட விவகாரங்கள் தொடர்பான ஆவணங்களையும் சி.பி.ஐ. சேகரிக்கும் எனத் தெரிகிறது. ஏர்செல் பங்குகளை வாங்கிய 'மேக்ஸிஸ்' அனந்த கிருஷ்ணனின் மலேசியாவைச் சேர்ந்த ஆஸ்ட்ரோ நிறுவனம், 'சன் டைரக்ட்'டில் முதலீடு செய்வதற்கு முன்பு, அந்த முதலீட்டுக்கான அனுமதியை மத்திய அரசிடம் பெற்றுள்ளது. எந்தவொரு வெளிநாட்டு நிறுவனமும் முதலில் சம்பந்தப்பட்ட நாடுகளில் அனுமதியைப் பெறாமல் முடிவு எடுக்காது. இதன்படி, மத்திய அரசின் எஃப்.ஐ.பி.பி. பிரிவுக்கு மனு வந்து, 2007 மார்ச் 2 மற்றும் 19-ம் தேதிகளில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவிலும் ஒப்புதல் பெறப்பட்டு உள்ளது. இறுதியாக, சன் டைரக்ட்டில் ஆஸ்ட்ரோ முதலீடு செய்ததை 2007 ஜூலை ஆண்டு அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது. மாறன் 2007 மே மாதம் வரை பதவி வகித்தார். ''மேக்சிஸ் நிறுவனம் நான் அமைச்சராவதற்கு முன்பே எங்கள் குடும்பத்துடன் தொடர்பில் உள்ளது. 15 வருடங்களாகத் தொடர்பு உண்டு!'' என்பது தயாநிதி தரப்பு விளக்கமாக உள்ளது.

''தொலைத் தொடர்புத் துறையில் எந்த அந்நிய நாட்டு முதலீடும் 74 சதவிகிதத்துக்கு மேல் போகக் கூடாது. இதன்படி ஏர்செல்லில் அனந்த கிருஷ்ண னின் 'மேக்சிஸ்' நிறுவனத்துக்கு அதிகபட்சமான 74 சதவிகிதம் போக, மீதி 26 சதவிகிதம் வேறு நிறுவனத்துக்குக் கொடுக்கப்பட்டு உள்ளது. இதை பிரபல அப்போலோ குழுமத்தின் பிரதாப் ரெட்டி குடும் பத்தினர் பெற்று உள்ளனர். இவர்கள் டெக்கான் டிஜிட்டல் நெட்ஒர்க் என்கிற நிறுவனத்தின் பேரில் அந்த 26 சதவிகிதப் பங்குகளைப் பெற்று உள்ளனர். இந்த டெக்கான் நிறுவனத்தில், ஆஸ்ட் ரோவின் 49 சதவிகிதப் பங்குகள் உள்ளன. அனந்த கிருஷ்ணனுக்காக மறைமுகமாக இந்தப் பங்குகள் வாங்கப்பட்டதா என்ற கோணத்தில் இதை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரிப்பதாகவும் கூறப்படுகிறது.

தொடர்ச்சியாக ஊழல் விவகாரங்களில் சிக்கி காங்கிரஸ் அரசாங்கத்தின் பெயர் கெட்டு வருவதைத் தொடர்ந்து ஒரு தடுப்பணை போடுவதற்கு பிரதமர் முயற்சித்துள்ளார். அமைச்சர்களுக்கு செக் வைக்கும் விதத்தில், 'அனைத்து அமைச்சர்களும் தங்களது பெயரில் உள்ள சொத்துக்கள் மற்றும் குடும்பத்தினரின் சொத்து விவரங்களை ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்’ என்று பிரதமர் அலுவலகம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த நடத்தை விதிகள் ஏற்கெனவே இருப்பவைதான். என்றாலும், இப்போது பிரதமர் அலுவலகமே அதிரடியாக இறங்கி இருப்பது, விவகாரத்தின் கடுமை யைக் காட்டுகிறது!

நன்றி ஜூனியர் விகடன்

Monday, June 13, 2011

MISSED CALL PLZ......

இந்தியாவை ஊழல் அற்ற சொர்க்க பூமியாக மாற்ற வேண்டிய கடமை நம் ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் உள்ளது. இந்தியாவில் இருந்து ஊழலை எதிர்க்க வேண்டிய மசோதாவான லோக்பால் மசோதாவுக்கு பல தடைகற்கள் வந்து கொண்டிருந்தாலும் இப்போது குறைந்தபட்சம் 25 கோடி மக்களின் ஆதரவு இருந்தால் தான் இந்த மசோதா நிறைவேற்றப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. இதற்காக நாம் நம் அலைபேசியில் இருந்து ஒரு மிஸ்ட்கால் கொடுப்பதன் மூலம் நம்முடைய ஆதரவை தெரிவிக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

மக்களின் பணத்தை கொள்ளை அடிக்கும் ஊழல் அரசியல்வாதிகளுக்கு தண்டனை கொடுக்க வரவிருக்கும் லோக்பால் மசோதாவுக்கு நம் ஆதரவை செலுத்த வேண்டிய தருனத்தில் இப்போது உள்ளோம், தொழில்நுட்பம் மூலம் புதுமையான முறையில் இம்மசோதாவிற்கு நம் ஆதரவை அளிக்கலாம்.

மிஸ்ட்கால் செய்ய வேண்டிய அலைபேசி எண் : 0 22 6155 0789 (அ) + 91 22 6155 0789

இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் அலைபேசி எண்ணுக்கு ஒரு மிஸ்ட்கால் (Missed Call ) கொடுப்பதன் மூலம் நம் ஆதரவு லோக்பால் மசோதாவுக்கு சென்றுவிடும்.இதற்காக எந்த கட்டணமும் வசூலிப்பதில்லை. வாக்கு பதிவு செய்யப்பட்டதும் உடனடியாக பதிவு செய்யப்பட்டதற்கான ஒரு குறுஞ்செய்தி உங்கள் மொபைலுக்கு வரும். ஊழலை ஒழித்தால் போதும் வறுமை நீங்கி நம் நாடு வல்லரசாக மாறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, நம்மால் முடிந்தவரை அத்தனை பேருக்கும் இந்தச்செய்தியை கொண்டு சேர்ப்போம். குறைந்த பட்சம் 25 கோடி மக்களின் ஆதரவு வேண்டும் அதனால் உங்கள் வீட்டில் இருக்கும் அனைத்து அலைபேசிகள் மூலமும் உங்கள் உணர்வுகளை வாக்குகளாக பதிவு செய்யுங்கள்.தன்னார்வத் தொண்டர்கள் (Volunteers) தங்கள் தகவல்களை இத்தளத்தில் பதிவு செய்யலாம்.

இணையதள முகவரி : http://www.indiaagainstcorruption.org

Friday, June 10, 2011

கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததன் பின்னணி அம்பலம்... ஜெ

உண்மையிலேயே கருணாநிதிக்கு தமிழக மீனவர்கள் மீது அக்கறை இருந்திருந்தால், கச்சத்தீவை கொடுப்பதற்கு, இந்திய - இலங்கை உடன்பாடு கையெழுத்தாவதற்கு முன், சட்டசபையில் தீர்மானத்தை நிறைவேற்றி, மிகப் பெரிய போராட்டத்தை நடத்தியிருக்க வேண்டும். ஆனால், அதைச் செய்யத் தவறிவிட்டார். திரை மறைவில் கச்சத்தீவை காவு கொடுப்பதற்கு ஒப்புதல் அளித்துவிட்டு, கண் துடைப்பு நாடகமாக தீர்மானத்தை முன்மொழிந்தவர் கருணாநிதி,'' என, சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டினார்.


கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததை எதிர்த்து, 2008ல், அ.தி.மு.க., பொதுச் செயலர் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்கு வலு சேர்க்கும் விதமாக கச்சத்தீவு குறித்த அனைத்து ஆவணங்களையும், தன் வசம் வைத்துள்ள தமிழக அரசின் வருவாய்த் துறையை சேர்க்க வலியுறுத்தி, சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா நேற்று தீர்மானம் கொண்டு வந்தார். அதன் மீது, விவாதம் நடந்து முடிந்ததும், முதல்வர் ஜெயலலிதா பதிலளித்து பேசியதாவது: டெல்ப் தீவுக்கு தெற்கே, 9 மைல் தொலைவிலும், ராமேஸ்வரத்திற்கு வடகிழக்கே, 10 மைல் தொலைவிலும் உள்ள பாக் ஜலசந்தி என்ற பகுதியில் கச்சத்தீவு அமைந்துள்ளது. ஓய்வெடுப்பதற்கும், வலைகளை உலர வைப்பதற்கும், பிடிபட்ட மீன்களை இனவாரியாக வகைப்படுத்துவதற்கும், மக்கள் வசிக்காத வறண்ட கச்சத்தீவை, பரம்பரை பரம்பரையாக தமிழக மீனவர்கள் பயன்படுத்தி வந்தனர். மீனவர்களின் புண்ணிய புரவலராகக் கருதப்படும் புனித அந்தோணியாருக்கு அர்ப்பணம் செய்யப்பட்ட கத்தோலிக்க சர்ச் இந்தத் தீவில் உள்ளது.

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த சீனிகுப்பன் படையாச்சி என்பவர் இந்த சர்ச்சை கட்டினார். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாத இறுதியில், வாரக் கணக்கில் நடக்கும் சமய விழாவில் கலந்து கொள்ள, இந்தத் தீவுக்கு தமிழக மீனவர்கள் செல்வது வழக்கம். ராமேஸ்வரத்திற்கு வடகிழக்கே, 10 மைல் தொலைவில் கச்சத்தீவு இருக்கிறது என்றும், ஜமீன் ஒழிப்புக்கு முன், ராமநாதபுரம் அரசர் இத்தீவை தனி நபர்களுக்கு குத்தகைக்கு விட்டுக் கொண்டிருந்தார் என்றும், இந்தத் தீவு ராமேஸ்வரம் கர்ணத்தின் அதிகார எல்லைக்கு உட்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய கடலோர மாவட்டங்களில் வாழும் தமிழக மீனவர்கள் தொன்று தொட்டு, கச்சத்தீவின் அருகில் மீன் பிடித்து அன்றாட வாழ்க்கையை நடத்தி வந்தனர். 1974ல், கருணாநிதி, தமிழக முதல்வராக பதவி வகித்தபோது, அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே ஓர் உடன்பாடு ஏற்பட்டது. இந்த உடன்பாட்டின்படி, இரு நாடுகளும் பரம்பரை பரம்பரையாக தங்கள் நாட்டிற்குச் சொந்தமான கடல் எல்லைகளில் எந்தெந்த உரிமைகளை அனுபவித்து வந்தனவோ, அந்ததந்த உரிமைகளை தொடர்ந்து அனுபவிக்கலாம் என பொதுவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

உண்மையிலேயே கருணாநிதிக்கு தமிழக மீனவர்கள் மீது அக்கறை இருந்திருந்தால், இந்திய - இலங்கை உடன்பாடு கையெழுத்தாவதற்கு முன், சட்டசபையில் தீர்மானத்தை நிறைவேற்றி மிகப் பெரிய போராட்டத்தை நடத்தியிருக்க வேண்டும். ஆனால், அதைச் செய்யத் தவறிவிட்டார். சட்டசபை தீர்மானத்தில் கூட, மத்திய அரசு செய்து கொண்ட ஒப்பந்தம் வருத்தம் அளிக்கிறது என்று தான் கருணாநிதி குறிப்பிட்டிருக்கிறாரே தவிர, எதிர்க்கிறோம் என்ற சொல் எங்கேயும் இடம் பெறவில்லை. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், திரை மறைவில் கச்சத்தீவை காவு கொடுப்பதற்கு ஒப்புதல் அளித்துவிட்டு, கண் துடைப்பு நாடகமாக தீர்மானத்தை முன்மொழிந்தவர் கருணாநிதி. தான் செய்த துரோகத்திற்கு பரிகாரம் காணும் வகையில், மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த போது, தமிழக மீனவர்கள் மீதான காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை இலங்கை கடற்படை தொடர்ந்து நடத்தினால், கடும் விளைவுகளை இலங்கை அரசு சந்திக்க நேரிடும் என, மத்திய அரசின் மூலம் இலங்கை அரசை எச்சரிக்கை செய்ய நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால், அதை செய்யவில்லை.

தமிழ் வாழ்ந்தால் தான் தமிழர் வாழ முடியும்; தமிழர் வாழ்ந்தால் தான் தமிழ் சமுதாயம் வாழ முடியும் என்று கூறியவர் அண்ணாதுரை. தமிழன் அழிந்தாலும் பரவாயில்லை; தன் சமுதாயம் வாழ்ந்தால் போதும் என்பதை நிகழ்த்திக் காட்டியவர், அண்ணாதுரையின் பாசறையில் வளர்ந்தவர் என்று தனக்குத் தானே தம்பட்டம் அடித்துக் கொள்ளும் கருணாநிதி என்பதை சுட்டிக்காட்டி, கச்சத்தீவு குறித்த வழக்கில் தமிழக மீனவர்களுக்கு சாதகமான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் அளிக்க வகை செய்யும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள இத்தீர்மானத்தை நிறைவேற்றித் தர வேண்டும். இவ்வாறு ஜெயலலிதா பேசினார். இதன் பின் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தி. மு . க மீது விஜயகாந்த் குற்றச்சாட்டு



""ஊழல் வழக்குக்கு பயந்து கச்சத்தீவை கருணாநிதி தாரை வார்த்தார்,'' என எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டினார்.


சட்டசபையில் கச்சத்தீவு தொடர்பான தீர்மானத்தின் மீது நடந்த விவாதம்:


கிருஷ்ணசாமி - புதிய தமிழகம்: கடந்த 10 ஆண்டில், 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் சிங்கள ராணுவத்தால் கொலை செய்யப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மீனவர்களின் நீண்ட கால பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்தை வரவேற்கிறேன்.


முத்துக்குமரன் - இந்திய கம்யூ.,: கச்சத்தீவை மீட்பதற்காக, மீனவர்கள் பறி கொடுத்த உரிமைகளை பெறுவதற்காக முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்தை வரவேற்கிறேன்.


சவுந்தர்ராஜன்- மார்க்சிஸ்ட்: தமிழக மீனவர்கள் வழக்கமாக கடலில் சென்று மீன் பிடிக்கும் பகுதிகளுக்கு அனுமதிக்க வேண்டும். கச்சத்தீவு மீட்கப்படுவதன் மூலம், மீனவர்கள் சுதந்திரமாகச் சென்று மீன் பிடிக்க முடியும். முதல்வர் தொடுத்துள்ள வழக்கில் வருவாய்த் துறை இணைத்துக் கொள்வதை வரவேற்கிறோம்.


ஜவாஹிருல்லா - மனிதநேய மக்கள் கட்சி: மீனவர் நலனுக்காக இந்த அரசு பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறது. வரலாற்றின் அடிப்படையில் கச்சத்தீவு தமிழகத்திற்கு சொந்தமானது. கச்சத்தீவை மீட்பதற்காக முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்தை வரவேற்கிறேன்.


எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த்: முதல்வர் கொண்டு வந்துள்ள இந்த தீர்மானத்தை முழு மனதோடு ஆதரவு தெரிவிக்கிறேன். மதுரையில் பிறந்தவன், வளர்ந்தவன் என்ற முறையில், ஒரு காலத்தில் கச்சத்தீவு பகுதியில் பண்டமாற்று முறை நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் நான் அங்கு சென்றிருக்கிறேன். இன்று அந்த தீவிற்கு தமிழர்கள் யாரும் போக முடியாத, வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மக்களுடைய குறைகளை அறிந்து, அதை தீர்க்கின்ற வகையில் நடப்பது தான் ஜனநாயகம். கடந்த தி.மு.க., அரசு, மீனவர்களின் குறைகள் எதையும் கேட்கவில்லை. 1973 ல் ஜெயபிரகாஷ் நாராயணன் ஊழல் தடுப்பு இயக்கம் நடத்தியபோது, தி.மு.க., அதற்கு ஆதரவு அளித்தது என கருணாநிதி பேசியிருக்கிறார். 1972ம் ஆண்டில் தி.மு.க.,வை விட்டு எம்.ஜி.ஆர்., வெளியேறி அ.தி.மு.க., துவக்கி, அன்றைய முதல்வர் கருணாநிதி மீது ஊழல் புகார்களை அளித்தார். வருமானத்திற்கு அதிகமாக அவர் சொத்துகளை சேர்த்திருக்கிறார் என அதில் குறிப்பிட்டிருந்தார். எங்கே தன் மீது மத்திய அரசு வழக்கு தொடுத்து விடுமோ என்று பயந்து தான் கருணாநிதி கச்சத்தீவை தாரை வார்த்தார். மேற்கு வங்கத்தில் ஒரு பகுதியை பாகிஸ்தானுக்கு கொடுக்க வேண்டும் என்ற நிலை வந்தபோது, அந்த மாநிலத்தின் முதல்வராக இருந்த பி.சி.ராய் அதற்கு மறுப்பு தெரிவித்து, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். அப்போது கோர்ட், பார்லிமென்ட் இரு சபைகளின் தீர்மானம் மூலமாகவே நாட்டின் ஒரு பகுதியை இன்னொரு நாட்டிற்கு வழங்க முடியும் என்று கூறினர். எனவே, கச்சத்தீவை அவ்வாறு தரவில்லை. இந்த விஷயத்தில் கருணாநிதி வெறும் கண் துடைப்பு நாடகத்தை மட்டுமே நடத்தியுள்ளார். இவ்வாறு விவாதம் நடந்தது.

Wednesday, June 8, 2011

அடுத்தது தயாநிதி? - ஓ பக்கங்கள்

ஸ்பெக்ரம் ஊழலில் ராசாவுக்கு முன்பு டெலிகாம் அமைச்சராக இருந்த தயாநிதிக்கும் தொடர்பும் பங்கும் இருக்கிறதா என்பதுதான் இனி அடுத்தக் கட்ட விசாரணை. எந்த அடிப்படையில் ராசாவும் கனிமொழியும் சரத் ரெட்டியும் பவ்லாவும் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்களோ, அதே அடிப்படையில் தயாநிதி மாறனும் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்படுவதற்கு போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன என்கிறது தெஹல்கா இதழ்.

தெஹல்காவின் பல முக்கிய புலானாய்வு கட்டுரைகளை எழுதியவரான அஷிஷ் கேத்தனும் ராமன் கிர்பாலும் இப்போது ஸ்பெக்ரம் ஊழலில் தயாநிதி மாறன் தொடர்பை வெளிபடுத்தியிருக்கிறார்கள். தெஹல்கா சொல்வது என்ன என்று பார்ப்போம்.

தயாநிதி மாறன் மே 2004 முதல் 2007 வரை டெலிகாம் அமைச்சராக இருந்தார். அப்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் சிவசங்கரன் நடத்தும் ஏர்செல் கம்பெனி இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கான ஒருங்கிணைந்த தொடர்பு சேவை லைசன்சுகளுக்கு விண்ணப்பித்தது. ஆனால் ஒவ்வொரு விண்ணப்பத்தின் மீதும் தயாநிதி அமைச்சகம் கேள்விகளை எழுப்பியது. ஏர்செல் பதில் தந்துகொண்டே இருந்தது. ஆனால் லைசன்சு வழங்கப்படவே இல்லை.

இரண்டாண்டுகள் இப்படியே நீடித்த நிலைமை திடீரென்று மாறியது. சிவசங்கரன் தன் கம்பெனியில் 74 சதவிகிதப் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் கம்பெனிக்கு, சுமார் 7800 கோடி ரூபாய்களுக்கு விற்றார். மேக்சிஸ் கம்பெனியின் அதிபர் இலங்கைத் தமிழரான ஆனந்தகிருஷ்ணன். இன்னொரு 26 சதவிகிதப் பங்குகளை மாறன் குடும்பத்துக்கு நெருக்கமான சென்னை அப்போலோ மருத்துவமனை டாக்டர் பிரதாப் ரெட்டியின் குடும்பத்தினர் வெறும் 34 கோடிக்கு வாங்கினர்.

அக்டோபர் 2005ல் ஏர்செல்லை வாங்க விரும்புவதாக ஆனந்தகிருஷ்ணன், சிவசங்கரனிடம் தெரிவித்தார். அடுத்த இரண்டே மாதங்களில் டிசம்பர் 14 அன்று தயாநிதியின் அமைச்சகம் லைசன்சுகளுக்கான புதிய விதிமுறைகளை அறிவித்தது. டிசம்பர் 30ம் தேதி ஏர்செல்லை மேக்சிஸூக்கு விற்பதாக ஒப்பந்தம் கையெழுத்தாயிற்று. அடுத்த மூன்றே நாட்களில் தயாநிதி மாறனின் அமைச்சகம் புதிய விதிமுறைகளின் கீழ் தகவல்களை அனுப்பும்படி ஏர்செல்லைக் கேட்டுகொண்டது. அடுத்த பதினேழே நாட்களில் ஏர்செல் தகவல்களைக் கொடுத்தது. ஜனவரி 12 அன்று மேலும் புது வட்டாரங்களுக்கு லைசன்ஸ் கேட்டு விண்ணப்பித்தது.

பிப்ரவரி மாதத்திலிருந்து ஏர்செல்லுக்கு தயாநிதியின் அமைச்சகம் லைசென்சுகளை வழங்கத் தொடங்கியது. நவம்பர் மாதத்தில் மொத்தமாக ஏர்செல்லுக்கு 14 வட்டாரங்களுக்கான லைசன்ஸ் கிடைத்ததுவிட்டன. மொத்தமாக லைசன்ஸ் கட்டணமாக ஏர்செல் செலுத்திய தொகை 1399 கோடி 47 லட்சம் ரூபாய்கள். ஆனால் தணிக்கைக் கணக்கீடுப்படி இதனால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு 22 ஆயிரம் கோடி ரூபாய்கள்.

ஆனந்தகிருஷ்ணன் கைக்கு ஏர்செல் மாறி லைசன்சுகள் கிடைத்த நான்காவது மாதத்தில், அவரது மேக்சிஸ் குழுமம், தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறன் நடத்தும் சன் குழுமத்தைச் சேர்ந்த சன் டைரக்ட் டி.வி. கம்பனியில் 20 சதவிகிதப் பங்குக்காக 150 மில்லியன் டாலர் (சுமார் 600 கோடி ரூபாய்கள்) கொடுத்தது. அடுத்தப்படியாக 2008-2009ல் மேக்சிஸ் குழுமம் சன் முழுமத்தின் எஃப்.எம். வானொலி கம்பெனியில் சுமார் 100 கோடி ரூபாய் முதலீடு செய்தது.

தெஹல்கா மேலும் சொல்லும் மூன்று தகவல்களும் முக்கியமானவை. ஸ்பெக்ரம் அலைக்கற்றை விலை நிர்ணயிப்பது பற்றி முடிவு எடுக்கும் அதிகாரம் மத்திய அமைச்சரவையின் குழுவிடம் இருந்ததை தயாநிதி மாறன் மாற்றி முழு அதிகாரமும் தமது அமைச்சகத்திடமே வைத்துக் கொண்டார். இதை நிதி அமைச்சகம் கடுமையாக ஆட்சேபித்தது. ஆனால் பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புதல் அளித்தார். (இந்த ஆதிகாரத்தைப் பயன்படுத்தித்தான் அடுத்து வந்த ராசாவும் முடிவுகள் எடுக்க முடிந்தது.)

சிவசங்கரன் ஏர்செல்லை நடத்தி வந்தபோது டாடா குழுமத்துடன் தொழில் ரீதியான கூட்டு வைத்திருந்தார். டாடாகளுக்கும் தயாநிதி மாறனுக்கும் இடையே நல்லுறவு இருக்கவில்லை. அதற்குக் காரணம் டிஷ் டி.வி. தொழிலில் டாடாவுக்கும் சன் குழுமத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டு நீதிமன்ற வழக்கு வரை சென்றதுதான். எனவே சிவசங்கரனிடம் ஏர்செல் இருந்தவரை தயாநிதி மாறனின் அமைச்சகம் லைசன்சுகளைத் தரவில்லை. தமக்கு எதிராக அமைச்சகத்தில் யாரோ தொடர்ந்து வேலை செய்வதாக சிவசங்கரன் 2005ல் புகார் கடிதமே எழுதியிருக்கிறார்.

முன்றாவது தகவல்தான் அரசியல்ரீதியாக முக்கியமானது. உச்ச நீதிமன்றத்தில் ஸ்பெக்ரம் வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு ராசா அமைச்சர் பதவிலிருந்து விலக வேண்டிவந்ததும், புதிய அமைச்சராகப் பொறுப்பேற்ற கபில் சிபில், 1998 முதல் 2009 வரை ஸ்பெக்ரம் லைசன்ஸ் வழங்குவதில் பின்பற்றிய அனைத்து நடைமுறைகள், நடவடிகைகள் பற்றியும் விசாரித்து அறிக்கை தரும்படி நீதிபதி சிவராஜ் பாட்டில் கமிஷனை நியமித்தார்.

அந்த கமிஷனும் அறிக்கையைத் தந்துவிட்டது. அந்த அறிக்கையில், ஏர்செல்லுக்கு லைசன்ஸ் தராமல் விதவிதமான கேள்விகள் கேட்டு வருடக்கணக்காக தயாநிதி மாறனின் அமைச்சகம் இழுத்தடித்தது சரியல்ல என்று கூறப்பட்டிருக்கிறது. அமைச்சகம் ஏர்செல்லிடம் கேட்ட விவரங்கள், தேவையற்றவை, பொருத்தமற்றவை, லைசன்ஸ் விதிமுறைகளுக்கு புறம்பானவை என்று நீதிபதி தெரிவித்திருக்கிறார். அதுமட்டுமல்ல; பணம் தொடர்பான எந்தக் கொள்கை முடிவானாலும் அதுபற்றி நிதி அமைச்சகத்தின் ஒப்புதல் இல்லாமல் எந்த அமைச்சகமும் உத்தரவுகள் போடக்கூடாது. என்ற மத்திய அரசின் நடத்தை விதியை தயாநிதி மாறனின் அமைச்சகம் பின்பற்றவே இல்லை என்றும் கூறியிருக்கிறார்.

ராசா அமைச்சராக இருந்தபோது பாவ்லாவின் ஸ்வான் கம்பெனிக்கு ஸ்பெக்ரம் லைசன்ஸைக் குறைந்த விலைக்குக் கொடுத்தார். லைசன்ஸ் கிடைத்ததும் பாவ்லா, தன்னுடைய வேறு கம்பெனிகள் மூலம் கலைஞர் டி.வி.க்கு 214 கோடி கடன் கொடுத்தார். அது லஞ்சப் பணம்தான் என்பது சி.பி.ஐ.யின் வாதம். அந்த அடிப்படையில்தான் ராசா, கனிமொழி, சரத் ரெட்டி, பாவ்லா எல்லாருமே கைது செய்யப்படிருக்கிறார்கள்.

தயாநிதி மாறன் ஆனந்தகிருஷ்ணனின் ஏர்செல்லுக்கு குறைந்த விலையில் ஸ்பெக்ரம் லைசென்ஸ் கொடுத்தார். லைசன்ஸ் கிடைத்ததும், ஆனந்தகிருஷணனின் கம்பெனி தயாநிதி மாறன் சகோதரர் நடத்தும் சன் குழுமத்தில் 70 கோடி ரூபாய் முதலீடு செய்திருக்கிறது. இதுவும் லஞ்சப் பணம்தானே. இது லஞ்சப் பணம் இல்லை, தற்செயலாக நடந்தது என்றால் அதே விதி ராசாவுக்கும் பொருந்தும் அல்லவா? தமக்கு சன் குழுமத்தில் எந்த முதலீடும் இல்லை என்று தயாநிதி மாறன் அறிவித்திருக்கிறார். இதே வாதப்படி ராசாவுக்கும் கலைஞர் டி.வி.யில் எந்த முதலீடும் இல்லை.

தெஹல்கா இந்தச் செய்தியை வெளியிட்டதைத் தொடர்ந்து ஆங்கில டி.வி. சேனல்கள் எல்லாம் தொடர்ந்து இதை எழுப்பி வருகின்றன. பி.ஜே.பியும் இடதுசாரிக் கட்சிகளும் தயாநிதி மாறனும் பிரதமரும் விளக்கம் தரவேண்டும் என்று கோரியுள்ளன. ஸ்பெக்ரம் பற்றி விசாரித்துவரும் பாராளுமன்றக் கூட்டக் குழுவின் விசாரணை வரம்புக்கு இதுவரும்; மேற்கொண்டு கருத்து சொல்ல முடியாது என்று காங்கிரஸ் சொல்லிவிட்டது.

உச்ச நீதிமன்றத்தின் முன்பு ஸ்பெக்ரம் தொடர்பாக வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் தொடுத்த பொதுநல வழக்கின் அடிப்படையில்தான் இதுவரை விசாரணை கைதுகள் எல்லாம் நடந்துள்ளன. புதிதாக தெஹல்கா வெளியிட்டுள்ள தகவல்கள் அடிப்படையிலும் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று பூஷண் இன்னொரு மனு இந்த வாரம் தாக்கல் செய்யவிருக்கிறார். எனவே ஸ்பெக்ரம் வழக்கில் அடுத்து தயாநிதி மாறனும் உட்படுவாரா? மாட்டாரா? எனபது இனி உச்ச நீதிமன்றத்தின் முடிவைப் பொருத்துத்தான் இருக்கிறது.

-ஞாநி
04.06.2011 கல்கி இதழ்

இலங்கை மீது பொருளாதாரத் தடை-சட்டபேரவை தீர்மானம்

இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இன்று நடைபெற்ற சட்டபேரவை கூட்டத்தில் இலங்கை மீது மத்திய அரசு பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றும் போர் குற்றாவாளிகளை ஐ.நா சபை பிரகடனப்படுத்த வேண்டும் என்று ஐ.நாவை இந்தியா வலியுறுத்த வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதல்வர் ஜெயலலிதா முன்மொழிந்த இத்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இத்தீர்மானம் இயற்றப்படுவதற்கு முன்பு ஆளுநர் உரை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏ., குணசேகரன், “இலங்கை தமிழ் மக்களின் தாயக உரிமைக்கான போராட்டத்திற்கு தமிழக முதல்வர்தான் தலைமையேற்க வேண்டும்.
தமிழகத்தின் 7 கோடி தமிழ் மக்களும் உலகம் முழுவதும் உள்ள 10 கோடி தமிழ் மக்களும் இதைத்தான் எதிர்பார்கிறார்கள். இன அழிப்பு குற்றவாளியான ராஜபட்சே தண்டிக்கப்பட வேண்டும் என்பதற்கான தீர்மானத்தை புகழ்மிக்க இந்த அவை ஒருமனதாக நிறைவேற்ற வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.