
சோத்துக்குள்ளே சொக்கநாதர்: வழிபாட்டு முறைகள் எத்தனையோ இருந்தாலும், இறையருளைப் பெற எளியவழியாக இருப்பது அன்னதானம் மட்டும் தான். தானத்தில் சிறந்தது அன்னதானம் சோத்துக்குள்ளே இருக்கார் சொக்கநாத சுவாமி உப்பிட்டவரை உள்ளளவும் நினை அன்னம் இட்டவீடு சின்னம் கெட்டுப் போகாது போன்ற சுலவடைகள் இதன் பெருமையை எடுத்துக்காட்டுவதாகும். பொன்,பொருள் எவ்வளவு கொடுத்தாலும் மனம் திருப்தி கொள்வதில்லை. இன்னும் கொடுக்கக் கூடாதா என்று எதிர்பார்ப்புடனே இருக்கும். ஆனால்,ஒருவன் வேண்டும் என்று கேட்ட அதே வாயால் போதும் என்று சொல்லி மனநிறைவோடு எழுவது சாப்பிடும் போது மட்டுமே.
அன்னபூரணி: நமக்கு அன்னமூட்டும் தாயாக விளங்குபவள் அன்னபூரணி. காசியில் இருக்கும் இவளது கையில் பால் அன்னம் நிறைந்த பாத்திரமும், கரண்டியும் இருக்கும். தம்மை நாடிவருவோருக்கு வயிற்றுப்பசியை மட்டுமல்லாமல் ஆன்மபசியையும் போக்கி அருள்கிறாள். திருமூலர் திருமந்திரத்தில் அன்பே சிவம் என்று குறிப்பிடுகிறார். அறிவான தெய்வமே என்று இறைவனை தாயுமானவர் அழைக்கிறார். இந்த அன்பையும், அறிவையும் நமக்குத் தருபவள் அன்னபூரணி என்று ஆதிசங்கரர் காசி அன்னபூரணி மீது பாடிய ஸ்தோத்திரத்தில் கூறியுள்ளார். அன்னபூர்ணே ஸதாபூர்ணே சங்கர ப்ராண வல்லபே! ஞான வைராக்ய ஸித்யர்த்தம் பிக்ஷõம் தேஹி ச பார்வதி!! என்று அன்னத்தை மட்டுமல்லாமல், தேவியிடம் ஞானத்தையும் பிச்சையிடும்படி வேண்டுகிறார். எனக்குப் பார்வதியே அம்மா! பரமேஸ்வரனே அப்பா! பக்தர்கள் அனைவரும் சொந்த பந்தங்கள்! மூவுலகமும் என் வீடு! அன்னபூரணியாகிய அம்பிகை அருளும் யாசகத்தை மூவுலகமும் (உயிர்கள் அனைத்தும்) பெறவேண்டும், என்று உயிர்கள் மீது கொண்ட கருணையால் வேண்டுகிறார்.
வள்ளலார் சொல்வதைக் கேளுங்க: அருட்பெருஞ்ஜோதி வழிபாட்டில் அன்னதானத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. ஜீவ காருண்யத்துடன் வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் உள்ளம் வாடிய அருளாளர் வள்ளலார். இவர் தொடங்கிய சத்திய தருமசாலை ஆல்போல் தழைத்து அருகு போல எங்கும் வியாபித்திருக்கிறது. இவர் ஏற்றிய அணையா அடுப்பு இன்றும் பலருடைய பசியை போக்கி வருகிறது. அன்னதானத்தின் பெருமைகளை குறிப்பிடும்போது,சக மனிதனின் பசியைப் போக்குபவன் கடவுளின் தயவைப் பூரணமாகப் பெறும் தகுதி பெறுகிறான். பசி என்னும் கொடுமை ஏழைகளின் மீது பாய்ந்து கொல்லும் தருணத்தில், உணவிட்டுக் காப்பதே ஜீவகாருண்யமாகும். அன்னதானம் இடுபவரை வெயில் வருத்தாது. வறுமை தீண்டாது. இறையருள் எப்போதும் துணை நிற்கும். மனதில் மகிழ்ச்சி நிலையாக குடிகொண்டிருக்கும். என்று குறிப்பிட்டுள்ளார்.
சோறு கண்ட இடம் சொர்க்கம்: ஒரு வீட்டிற்கு விருந்துக்குப் போய், அங்கேயே டேரா போட்டு விடுபவர்களைப் பார்த்து உனக்கு சோறு கண்ட இடம் சொர்க்கமாயிற்றே என்று வேடிக்கையாக சொல்வது வழக்கம். உண்மையில் இந்த பழமொழி ஏன் வந்தது தெரியுமா? சிவலிங்கத்துக்கு ஐப்பசி பவுர்ணமியன்று வெள்ளை அன்னத்தால் அபிஷேகம் செய்வர். இந்த அபிஷேகத்தைக் காண்பவர்களுக்கு சொர்க்கம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் தான் சோறு கண்ட இடம் சொர்க்கம் என்றார்கள். பிற்காலத்தில், இந்த சுலவடையை, நீண்டநாள் தங்கும் விருந்தாளிகளைக் கேலி செய்வதற்கு பயன்படுத்தி விட்டார்கள்.
தர்மம் தலைகாக்கும்: பாடுபட்டு தேடிய செல்வத்தை சேமிக்க ஆயிரமாயிரம் வழி முறைகளை இன்று நாம் பின்பற்றுகிறோம். ஆனால், தெய்வப்புலவர் திருவள்ளுவர் செல்வத்தை சேமிக்க காட்டும் வழியைத் தெரிந்து கொள்ளுங்கள். திருக்குறள் ஈகை அதிகாரத்தில், அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றார் பொருள் வைப்புழி என்கிறார். ஏழைகள் பசியால் வாடும்போது, அன்னமிட்டு அப்பசியைப் போக்குபவன் இறையருளைப்பெறுவது உறுதி. இந்த புண்ணியபலன், சரியான சந்தர்ப்பத்தில் நம் உயிரையும் காக்கும், என்பது அவரது கருத்து. இதையே செய்த தர்மம் தலைகாக்கும் என்று குறிப்பிட்டனர். இறையருள் என்னும் வட்டியைப் பெற, இதை விட பாதுகாப்பான முதலீடு வேறொன்றும் கிடையாது.
அபிஷேகப்பிரியனுக்கு அன்னாபிஷேகம்!
அபிஷேகப் பிரியரான சிவபெருமான், அபிஷேக நேரங்களில் பல்வேறு திரவியங்களால் திருமுழுக்காட்டு செய்விக்கப் பெறுகிறார். பின்னரும் லிங்கத் திருமேனியின் மேலே தாரா பாத்திரம் எனப்படும் செம்புப் பாத்திரத்தில் நீர் நிறைத்து, சொட்டு சொட்டாக லிங்கத் திருமேனியின்மீது அபிஷேகிக்கப்படும் தாரை அமைப்பை பல ஆலயங்களிலும்- குறிப்பாக வடமாநிலங்களில் நாம் காணமுடியும். இந்த அபிஷேக வரிசையில், ஐப்பசி பௌர்ணமி நாளன்று அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் எனப்படும் சிறப்பு வழிபாடு லிங்க மூர்த்திக்கு நடத்தப்படுகிறது. அனைத்து உயிர்களுக்கும் அன்னமான உணவை அளித்துப் பாதுகாக்கும் சிவபெருமானுக்கு சுத்த அன்னத்தைக் கொண்டு முழுக்காட்டுவது இந்த நாளின் சிறப்பாகும். இனிப்பு, காய்கறி மற்றும் பழங்களுடன் செய்யப்படும் சுத்த அன்னாபிஷேகக் காட்சி, ஆலயத்துக்கு வழிபட வரும் பக்தர்களை பரவசத்துக்குள்ளாக்குகிறது. இந்த அன்னாபிஷேக நாளன்று சிவாலயங்களில் கருவறையிலுள்ள சிவபெருமானுக்கு அபிஷேக ஆராதனை முடிந்த பின்னர், சமைத்த சுத்த அன்னத்தைக் கொண்டு திருமுழுக்காட்டப்படுகிறது. லிங்கத் திருமேனி மறையுமளவுக்கு அன்னம் குவிக்கப்பட்டு, இனிப்புகள், பழங்கள் நிவேதனதுக்கு வைக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெறுகின்றன.
தஞ்சை பெரிய கோவிலை முதலாம் ராஜராஜன் மிக பிரம்மாண்டமாக கட்டினான். இந்த ஆலய சிவபெருமானுக்கு உயிர்களுக்கெல்லாம் ஈசன், மிகவும் பெரிய லிங்க வடிவுள்ள பெருமான் (பிருஹத்- மிகப்பெரிய) என்றெல்லாம் பொருள்படும் பிரகதீஸ்வரர் என்ற பெயரிட்டு மகிழ்ந்தான். அவன் மகனான ராஜேந்திர சோழனும் தன் தந்தையைப் போன்றே கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரம்மாண்டமான சிவாலயத்தை எழுப்பினான். இங்குள்ள இறைவனுக்கும் பிரகதீஸ்வரர் என்ற திருநாமத்தையே சூட்டினான். இந்த கங்கை கொண்ட சோழபுரம் ஆலயத்தில் நடைபெறும் அன்னாபிஷேகப் பெருவிழா தமிழகத்தில் நடைபெறும் ஒரு முக்கிய திருவிழா ஆகும்.
இங்கு சோழர் காலத்தில் சிறப்பாக நடைபெற்ற அன்னாபிஷேகம், காலப்போக்கில் மறைந்து போனது. தற்போது, காஞ்சிப்பெரியவர் வழிகாட்டுதலின்படி மீண்டும் அன்னாபிஷேகம் நடந்து வருகிறது. சுமார் பதின்மூன்றரை அடி உயரமும் அறுபது அடி சுற்றளவும் கொண்ட இந்த சிவலிங்கத் திருமேனிக்கு, 108 மூட்டை அரிசி அன்னமாக சமைக்கப்பட்டு அன்னா பிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் இறைவனுக்குப் படைக்கப்பட்ட அன்னம் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது. கங்கை கொண்ட சோழபுரத்தைச் சுற்றியுள்ள கிராமங்கள் மட்டுமின்றி, தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் கூடி அன்னாபிஷேகத்தை தரிசித்து மகிழ்கின்றனர். இந்த அன்னாபிஷேக நாளன்று இறைவனைத் தரிசித்து பிரசாதத்தை உட்கொள்வதை பெரும்பேறாக பக்தர்கள் கருதுவதுடன், வரும்காலங்களில் வாழ்வில் பஞ்சமே இராது என்றும் நம்புகின்றனர். அத்துடன் அபிஷேக அன்னத்தை எறும்பு, கால்நடை, பறவை உள்ளிட்ட எல்லா உயிர்களுக்கும் அளிப்பர். இத்தலம், திருச்சியிலிருந்து 110 கி.மீ., தொலைவில் உள்ளது.
No comments:
Post a Comment