Wednesday, November 9, 2011

ஸ்டாலினிடம் பொங்கிய கனிமொழி!

''ஆறு அமைச்சர்களுக்கு கல்தா கொடுத்​தார் என்பதைவிட கோட்டை வட்டாரத்திலும் அ.தி.மு.க. வளையத்​திலும் அதிர்ச்சியைக் கொடுத்தது செங்கோட்​டையனிடம் இருந்த விவசாயத் துறை பறிக்கப்பட்ட செய்திதான். கடந்த வாரத்தில் நிதித் துறையின் மிக முக்கியமான அதிகாரி ஒருவரை அழைத்து முதல்வர் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது, ஒவ்வொரு துறையும் நிதிகளை எப்படிக் கையாண்டு வருகிறது?
திட்டங்களை அமல்படுத்துவதில் எந்த அமைச்சர் முன்னுரிமை கொடுக்கிறார்? என்ற கேள்விகளை முதல்வர் கேட்டார். அது தொடர்பாக உங்களுக்கு நான் ஓர் அறிக்கை தருகிறேன் என்று சொல்லிவிட்டு வந்தாராம் அந்த அதிகாரி. அவர் தயாரித்துக் கொடுத்த பட்டியலில் இருந்த பலரும்தான் இப்போது கல்தா கொடுக்கப்பட்டவர்கள்!''

''செங்கோட்டையன்?''

''விவசாயத் துறையைக் கையில் வைத்திருக்கும் செங்கோட்டையன் அதற்காக ஒதுக்கப்பட்ட திட்டங்​களைச் செயல்படுத்துவதில் முனைப்​புக் காட்டவில்லை என்ற கோபம்தான் அவரது துறை மாற்றத்துக்கு முக்கியக் காரணம். 'அமைச்சரவையில் பன்னீருக்கு அடுத்து முக்கியம் வாய்ந்த மனிதராக இருப்பவரை நீக்கினால் விமர்சனங்கள் அதிகம் வரும்’ என்பதால்கல்தா பட்டியலில் இருந்து அவரது பெயரை எடுத்தாராம் ஜெ. அதுவும் சிக்கி இருக்க வேண்டிய தலைதான் என்கிறார்கள். பொதுவாகவே சசிகலா வட்டாரத்​துக்கும் செங்கோட்டையனுக்கும் ஆகாது என்பது அனைவரும் அறிந்த விஷயம்​தான்!''

''மற்ற கல்தாக்களுக்கு நீர் சொல்லும் காரணம்?

'' ஆட்சிக்கு வந்ததும் தொழில் துறை அமைச்சர் ஆக்கப்பட்ட சண்முகவேலு 47-வது நாளில் அந்தத் துறையில் இருந்து மாற்றப்பட்டு ஊரகத் தொழில் துறை அமைச்சர் ஆனார். இப்போது அமைச்சர் அந்தஸ்தையும் இழந்து நிற்கிறார். அவருடைய குடும்பத்தினரின் தலையீடுதான் பதவி பறிபோகக் காரணமாம். அதுவும் அவரது வாரிசு ஒருவரின் செயல்பாடுகள் பற்றி தோட்டத்துக்கு அதிகமான தகவல்கள் வந்துள்ளன. தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பற்றி உமது நிருபரே விலாவாரியாக எழுதி இருக்கிறார். மின் ஆளுமைத் திட்டம், எல்காட், தமிழ் இணையக் கல்விக் கழகம், கேபிள் டி.வி. ஆகிய நான்கும்தான் முக்கியமானவை. கேபிள் டி.வி.க்கு எனத் தனி வாரியம் அமைக்கப்பட்டதால், அதில் உதயகுமார் தலையிட வழி இல்லாமல் போனது. இதனால், அந்த வாரியத் தலைவர் உடுமலை ராதாகிருஷ்ணனுக்கும் இவருக்கும் வாக்குவாதம் முற்றிப்போனதும் உண்டு. லோக்கல் சேனல்களை மூடுவதா வேண்டாமா என்ற பிரச்னையில் 'மூடத் தேவை இல்லை’ என்று உதயகுமார் சொன்னதாகச் சொல்கிறார்கள். இலவசக் கணினி வழங்கும் திட்டத்தில் இவர் சில உள்ளடி வேலைகளைப் பார்த்ததாகவும் சொல்கிறார்கள். இதற்காகவே தனக்கு வேண்டப்பட்ட ஒருவரை எல்காட் அமைப்பில் முக்கியப் பொறுப்புக்கு வைத்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதுவரை கொடுத்த கணினிகளில் வெப் கேமரா, டிவிடி ப்ளேயர், மூன்று வருட வாரன்டி ஆகியவை உண்டு. ஆனால், அடுத்து தரப்போகும் கணினிகளில் இவை இல்லையாம். வாரன்டியையும் ஓர் ஆண்டாக அந்த நிறுவனம் குறைத்துவிட்டதாம். இதைச் சரியாகக் கண்காணிக்​காததும் அந்த நிறுவனங்களிடம் ரகசிய ஒப்பந்தங்கள் போட்டுக்​கொண்டதாகவும் இவர் ​மீது குற்றச்சாட்டு மழை!''

''செந்தமிழனை நீக்கியதும் அதிர்ச்சிக்குரியதாக இருக்கிறதே?''
''செய்தி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைத்துறை என ஏராளமான துறைகளை வைத்திருந்தார் செந்தமிழன். அக்டோபர் 30-ம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த நாளையட்டி செய்தித் துறை சார்பில் செய்யப்பட்ட ஏற்பாடுகள் சிறப்பாக இல்லையாம். பிறந்த நாளுக்காக பெரிய அளவில் விளம்பரங்களும் செய்யப்படவில்லையாம். கோட்டூர்புரம் அண்ணா நூலகத்தை மாற்றியது தொடர்பாக போடப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தற்காலிகத் தடை உத்தரவு போட்டது. இந்த வழக்கை போட்டதே வழக்கறிஞர்கள்தான். அப்படிபட்ட நிலையில் அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட அன்று பெண் வக்கீல்கள் சங்கம் சார்பில் இலவச சட்ட விழிப்பு உணர்வு முகாம் தொடக்க விழா ஹைகோர்ட்டில் நடந்தது. அதில் செந்தமிழன் கலந்துகொள்ளத் தேதி கொடுத்திருந்தார். தகவல் கேள்விப்பட்டு கார்டன் கோபம் ஆனது. அரசின் சாதனை விளக்கப் படங்கள் எல்லா தியேட்டர்களிலும் சரியாக திரையிடப்படவில்லை என்று ஜெயலலிதா கோபப்பட்டதாகவும் சொல்கிறார்கள்!''

''புதிதாக வந்திருப்பவர்களைப் பற்றிச் சொல்லும்!''

''கார்டனில் யார் யார் எப்போது கோலோச்சுகிறார்கள் என்பதைப் பொறுத்ததாக இருக்கிறது இந்தப் பட்டியல். சிவபதியைத் தூக்கிவிட்டு திருச்சி பரஞ்சோதி வந்திருக்கிறார். சங்கரன்கோவில் கருப்பசாமி மறைவைத் தொடர்ந்து, அவர் இடத்தை நிரப்ப பரமக்குடி டாக்டர் சுந்தர்ராஜ் வந்துள்ளார். செந்தமிழனுக்குப் பதிலாக மாதவரம் மூர்த்தி அவரது சமூகத்தில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளார். நன்னிலம் காமராஜ், திவாகரனின் பரிந்துரை என்கிறார்கள். முதல் பட்டியலிலேயே அவரது பெயரைச் சேர்க்க முயற்சித்தார் திவாகரன். முடியாமல் போனது. இப்போது திவாகரன் ஜெயித்து இருக்கிறார். மாதவரம் மூர்த்திக்கும் வெயிட்டான பரிந்துரை இருந்துள்ளதாம்.''

''பதவி ஏற்பு விழாவில் என்ன நடந்தது?''

''ஞாயிற்றுக்கிழமை மதியம் மூன்று மணி அளவில் நடந்தது புதிய அமைச்சர்களுக்கான பதவி ஏற்பு விழா. இதில் பதவி இழந்த செந்தமிழனும் சிவபதியும் அருகருகே உட்கார்ந்து இருந்தார்கள். செந்தமிழன் சிரித்த முகத்துடன் காணப்பட்டார். நார்மலாக இருந்தார் முதல்வர். புதிதாகப் பதவி ஏற்றவர்கள் ஜெயலலிதாவைப் பவ்யமாக வணங்கினார்கள். 'கவர்னரைப் பாருங்க’ என்று சொல்லி அனைவரையும் ரோசய்யா பக்கமாகத் திருப்பினார் ஜெயலலிதா. சாதாரண வைபோகமாகவே அது முடிந்தது!'' என்ற கழுகார் அடுத்த சப்ஜெக்ட் மாறினார்!

''திருச்சி மேற்குத் தொகுதி இடைத்​தேர்தல் முடிந்த பின்பும் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு சோதனைகள் தொடர்கின்றன!''

''அவர்தான் வெளியே வந்து விட்டா​ரே?''ஆனாலும் அவரை விடாது கருப்பு போல! கலைஞர் அறிவாலயம் நில அபகரிப்பில் கைது செய்யப்பட்ட நேரு, அந்த வழக்கில் ஜாமீன் பெற்றாலும், வெளியே வர முடியாதபடி, அடுத்தடுத்து வழக்குகள் தொடரப்பட்டன. அதன் காரணமாக திருச்சி மேற்கில் போட்டியிட்ட நேரு, பிரசாரத்துக்குச் செல்ல முடியாத சூழ்நிலை. பலத்த சட்டப் போராட்டத்துக்குப் பிறகு, பிரசாரம் முடிவதற்கு முந்தைய நாள்தான் வெளியே வந்தார். நேரு மீது கடைசியாக தொடரப்பட்டது 'தங்களது ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பங்கு கேட்டு மிரட்டினார்; திருவள்ளுவர் சிலையைச் சேதப்படுத்தினார்’ என்று கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்த லேரோஸ் முராய்ஸ் என்பவர் கொடுத்த வழக்கு. அதில் அவரது சகோதரர் ராமஜெயம் மற்றும் தி.மு.க. மாநகரச் செயலாளர் அன்பழகனும் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டு இருந்தனர். 'எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டதில் இருந்து 24 மணி நேரத்துக்குள் குற்றம் சாட்டப்பட்டவர்களை ஆஜர்படுத்தவில்லை’ என்று கூறி, அவர்களை நீதிமன்றக் காவலில் வைக்க முடியாது என்று திருச்சி மாஜிஸ்திரேட் மறுத்துவிட்டார். அதனையடுத்தே நேரு உள்ளிட்டவர்கள் முந்தைய வழக்குகளில் பெற்றிருந்த ஜாமீன் அடிப்படையில் வெளியே வந்தனர்.

'திருவள்ளுவர் சிலை சேதப்படுத்திய வழக்கில் திருச்சி மாஜிஸ்திரேட் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என்று திருச்சி போலீஸார் மதுரை உயர் நீதிமன்றத்தில் அப்பீலுக்கு சென்றனர். அதை எடுத்துக்கொண்ட மதுரை உயர் நீதிமன்ற நீதிபதிகள், நீதிமன்றக் காவலில் வைக்க மறுத்த திருச்சி மாஜிஸ்திரேட்டின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர். அதோடு, 'வருகிற 9-ம் தேதி காலை நேரு உள்ளிட்ட மூவரும் திருச்சி நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும். அவ்வாறு அவர்கள் சரணடையும் பட்சத்தில் சட்டத்துக்கு உட்பட்டு மாஜிஸ்திரேட் நடவடிக்கை எடுக்க வேண்டும். சரணடையாத பட்சத்தில் ஜாமீனில் வெளியே வர முடியாத வாரன்ட் பிறப்பித்து சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளலாம்’ என்றும் உத்தரவில் கூறியுள்ளனர்.''

''கோர்ட்டில் ஆஜராகப் போய் மீண்டும் அவரை அமுக்கிவிட்டால்?

''அமுக்கிவிட்டால்... உள்ளே போக வேண்டியது​தான்!

இதில் விசேஷம் என்னவென்றால்... கோர்ட்டில் சரணடையச் சொல்லி நீதிபதி சொல்லி இருக்கும் நவம்பர் 9 தேதி... நேருவுக்குப் பிறந்த நாள். அன்றைய தினம் நேருவை எப்படியும் ஜாமீனில் வெளியே கொண்டுவந்துவிட வேண்டும் என்று நேரு தரப்பினர் வக்கீல்களுடன் பலத்த ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். நேரு தனது பிறந்த நாளை வீட்டில் கொண்டாடுவாரா... அல்லது, சிறையிலா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!''

'
'கனிமொழி விவகாரம் அவ்வளவுதானா?''

''கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்கும் நாளில் ஸ்டாலின் டெல்லியில் இருக்க வேண்டும்’ என்பது கருணாநிதியின் எண்ணம். பலத்த விவாதங்களுக்குப் பிறகுதான் அதற்கு ஒப்புக்கொண்டு டெல்லிக்குப் போனார் ஸ்டாலின். ஜாமீன் முடிவு குறித்து தெரியும் முன்னரே ஸ்டாலின் கோர்ட்டுக்கு வருவார் என பலரும் காத்திருக்க, அவர் வரவே இல்லை. ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்ட தகவல் அவருக்குச் சொல்லப்பட, மனிதர் ஏக அப்செட். செல்வகணபதி உள்ளிட்ட டெல்லிவாலாக்கள் ஏதோ பேச முயல, 'யாரும் என்னுடன் பேச வேண்டாம். ஜாமீன் கிடைக்குமா கிடைக்காதா என்பதைக்கூட சரிவர அனுமானிக்க முடியாத உங்களை நம்பி டெல்லிக்கு வந்த என்னைச் சொல்லணும்’ என்றாராம் ஆவேசமாக. இதற்கிடையில், 'அண்ணன் வர்றாரா?’ என கோர்ட்டில் இருந்தபடி கேட்டிருக்கிறார் கனிமொழி. ஸ்டாலினின் கோபம் குறித்துச் சொல்லப்பட, கனியும் சோகத்துடனேயே திகாருக்கு கிளம்பிவிட்டார்!''

''அப்புறம்?''

''மாலை 4.15 மணிவாக்கில் திகாருக்குப் போனார் ஸ்டாலின். 35 நிமிடங்கள் கனிமொழியிடம் மனம்விட்டுப் பேசினார். 'வந்து பார்க்கலைன்னு வருத்தப்படாதம்மா’ எனத் தன் உடல்நிலையைக் காரணம் காட்டி ஸ்டாலின் சொல்ல, 'நீங்க இப்போ வந்ததே போதும்ணே’ என உருகி இருக்கிறார் கனிமொழி. சிறைக்குள் உள்ள சிரமங்களைப் பற்றிப் பேசிய கனிமொழி, 'உள்ளுக்குள்ளே இருக்கிற பிரச்னைகள்கூட எனக்குப் பெருசு இல்லை. ஆனா, வெளியே நடக்கிற பிரச்னைகளைத்தான் பொறுக்க முடியலை’ எனச் சொல்லி குடும்ப நிலவரங்கள் குறித்து ஆரம்பித்தாராம். பொறுமையாகக் கேட்டுக்கொண்ட ஸ்டாலின், 'கட்சி நிர்வாகிகள் தொடங்கி குடும்பத்தினர் வரை எல்லோருக்கும் நீ சுமக்கும் பாரம்பற்றித் தெரியும். இனி யாரும் உன்னைப் பாரபட்சமாப் பார்க்க மாட்டாங்க. என்னைப்பற்றி யார் என்ன சொன்னாலும் நம்பாதே. உன்னை வெளியே எடுத்த பிறகுதான் எனக்கு நிம்மதி!’ எனச் சொன்னாராம். கடைசி சில நிமிடங்கள் இருவருக்கும் கண்ணீரிலேயே கரைந்திருக்கிறது!''

''மூத்த அண்ணன் அழகிரி கனிமொழியை சந்திக்கவில்லையே?''

''ஜாமீன் கிடைக்கும் என அவரும் உறுதியாக நம்பித்தான் இருந்தாராம். ஆனால், மனு நிராகரிக்கப்பட, அவரும் தி.மு.க-வின் டெல்லி புள்ளிகளுக்கு செம டோஸ் விட்டார். ஸ்டாலின் திகாருக்குப் போகும் தகவல் தெரிந்துதான் அழகிரி திகாருக்குப் போகாமல் தவிர்த்துவிட்டாராம். 'கனிமொழியின் நிலைப்பாடு என்ன?’ என்பதை மட்டும் நெருக்கமான புள்ளிகள் மூலமாக அறிந்தார் அழகிரி. உயர் நீதிமன்றத்தில் ஜாமீனுக்கு மனு போட வேண்டாம் என பலரும் சொல்லிய நிலையில், 'கடைசிக் கட்டமா அதையும் செஞ்சுதான் பார்த்தால் என்ன?’ என கருணாநிதிக்கு போனைச் சுழற்றி இருக்கிறார் அழகிரி!''

''ஓ...''

''இதற்கிடையில் அரவிந்தனை கோபாலபுரத்துக்கு வரவழைத்து கனிமொழியின் மனநிலை குறித்து அக்கறையோடு கேட்டிருக்கிறார் கருணாநிதி. இதரக் குடும்ப உறவுகளும் அங்கே சூழ்ந்திருக்க, கனிமொழியின் ஒட்டுமொத்த சோகங்களையும் மொத்தமாக இறக்கிவைத்தார் அரவிந்தன். அவர் சி.ஐ.டி. காலனிக்குப் போன பிறகு குடும்ப உறவுகளிடம் கருணாநிதி கண்ணீர் சொரிந்ததாகவும் சொல்கிறார்கள்!''

No comments:

Post a Comment