Wednesday, November 9, 2011

'மந்திரி... எந்திரி!'தேன் எடுத்தாரா... தேய்ந்தே போனாரா!

தேன் எடுத்தாரா... தேய்ந்தே போனாரா!

ஜெயலலிதா தலைமையில் அமைச்சரவை அமைந்தபோது சுற்றுலாத் துறை அமைச்சராகப் பதவியேற்றார் ஊட்டி சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ-வான புத்திசந்திரன். சசிகலாவின் சகோதரி கணவரும், மேற்கு மண்டல அ.தி.மு.க-வின் அறிவிக்கப்படாத தலைமைக் கழகச் செயலாளருமான பொறியாளர் ராவணனின்அதிதீவிர விசுவாசி. அமைச்சராக இருந்தபோது, ஒரு மினிஸ்டர் என்ற முறையில் தலைமைக்குச் செய்து கொடுக்க வேண்டிய 'கடமைகள்’ அத்தனையையும் மிகத் தெளிவாக நிறைவேற்றினார். விளைவு, பசையான 'உணவுத் துறை’ மந்திரியாக நியமிக்கப்பட்டார். இந்தத் துறையில் இருந்துகொண்டும் தொடக்கத்தில் பழைய விசுவாசத்தோடே இருந்தவர், அதன் பிறகு சற்றே தடம் மாறினதாகத் தகவல். மேலிடத்தில் இருந்து விசாரித்தபோது 'தேனெடுத்தவன் புறங்கையை சுவைக்க மாட்டானா?’ என்கிற லாஜிக் புரிந்திருக்கிறது. அதோடு, உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர்களைத் தேர்வு செய்ததில் இவர் மீது மிக மிகக் கடுமையான அதிருப்தி வெடிக்க... நீலகிரி மாவட்ட அ.தி.மு.க-வினர் இதை வெளிப்படையாகவே உடைத்துச் சொன்னார்கள். ஆனாலும் 'மாவட்டச் செயலாளரான நான் எடுத்ததே முடிவு’ என்று இறுக்கம் காட்டினார் புத்திசந்திரன். வாக்கு எண்ணிக்கை அன்றும்கூட முடிவுகளை மாற்றியமைக்கும் அளவுக்கு அமைச்சர் வட்டாரத்தின் ஆதிக்கம் நீண்டது. அன்று மாலையே இது சம்பந்தமாக ஏகப்பட்ட ஃபேக்ஸ்கள் தோட்டத்துக்குப் பறந்தன. தனக்கு வேண்டப்பட்ட நபர்களுக்கு பால் பூத்களை ஒதுக்குமாறு, நீலகிரி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்கப் பொது மேலாளருக்கு இவர் கடிதம் எழுதியதாக வெடித்த விவகாரத்தில் ஏற்பட்ட அப்செட்டால், முதல்வர் மனதில் புத்திசந்திரனுக்கான இடம் தேய ஆரம்பித்தது. இதை எல்லாம் தாண்டி, எம்.எல்.ஏ. பதவிக்காக வேட்பு மனு தாக்கல் செய்தபோது தேர்தல் கமிஷனுக்கு இவர் வழங்கிய அஃபிடவிட்டில் ஒரு விஷயத்தை மறைத்துவிட்டதாகவும் ஒரு புகார். அதாவது, தேர்தலுக்கு முன்பு, தான் செய்த ஒரு கான்ட்ராக்ட் பணிக்காக வரவேண்டிய நிலுவைத் தொகையை அஃபிடவிட்டில் குறிப்பிடாமல்விட்டதும், அமைச்சரான பிறகு அந்தப் பணத்துக்கான காசோலையை வாங்கியதையும் ஆதாரபூர்வமாக எடுத்துவைத்தார் ஊட்டியைச் சேர்ந்த வழக்கறிஞர் விஜயன். இறுதியாக, நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் கொடநாட்டில் ஜெயலலிதாவின் எஸ்டேட் பகுதியில், தி.மு.க-வுக்கு மிகக் கணிசமான வாக்குகள் விழுந்ததைப் பார்த்து முதல்வரிடம் சொல்லி வருந்தி இருக்கிறார் ராவணன். புத்திசந்திரனின் பதவிக்கு வேட்டு வைத்துவிட்டார்கள்.

வினை இழுத்த வின்ட் மில் மாஃபியா!

நீண்ட நாள் விசுவாசத்துக்கும் பொறுமைக்கும் பரிசாகத்தான் ஊரகத் தொழில் துறை அமைச்சராக சண்முகவேலுவை நியமித்தார் முதல்வர். இருந்தும், சண்முகவேலு வீழ்த்தப்பட்டதற்கான முக்கியக் காரணமே அவரது நெருங்கிய உறவுகள்தான். கான்ட்ராக்ட் விஷயங்களில் ஆரம்பித்து கவுன்சிலர் பதவிக்கு ஸீட் வழங்குவது வரை அமைச்சரின் உறவுகள் அகலக்கால் வைத்து இருக்கிறார்கள். இன்னொரு முக்கியக் காரணத்தையும் சொல்கிறார்கள். உடுமலைப்பேட்டை சுற்றுவட்டாரங்களில் காற்றாலைகள் அதிகம். இவற்றை நிர்மாணிக்க இடம் வளைப்பது உள்ளிட்ட விஷயங்களைக் கவனிக்கும் மாஃபியா ஒன்று, சண்முகவேலுவின் பெயரைச் சொல்லி பல இடங்களில் காரியம் சாதித்திருக்கிறது, மெகா வசூலும் நடந்தது. இது அமைச்சரின் கவனத்துக்குப் போயும்கூட, அவர்களைக் கட்டுப்படுத்தவில்லை என்று முதல்வருக்கு ரிப்போர்ட் போக... டென்ஷனாகிவிட்டார் ஜெயலலிதா. அதோடு, உள்ளாட்சித் தேர்தலில் அமைச்சரின் தரப்பு, கட்சி விசுவாசம் இல்லாத பேர்வழிகளுக்கு வாய்ப்புகள் வழங்கியதாகவும் புகார். இவை எல்லாம் தாண்டி, சண்முகவேலுவுக்கு நிர்வாகத் திறன் இல்லை என்ற லேட்டஸ்ட் குற்றச்சாட்டும் சேர்ந்துவிட்டது. சண்முகவேலுவின் ஆலோசனையின்படி, சமீபத்தில் அமராவதி அணையின் ஷட்டர்கள் திறக்கப்பட்டன. கடும் மழையால் ஆற்றில் வெள்ளம் புரண்ட நிலையில் ஷட்டரும் திறக்கப்பட்டதால்... கரையோரத்தில் உள்ள விவசாய நிலங்கள் மூழ்கிவிட்டன. இதனால், அரசு மீது விவசாயிகளுக்கு கடும் அதிருப்தி. இந்த விவகாரமும் முதல்வருக்குப் போக, சண்முகவேலுவுக்குக் கல்தா.
சறுக்கவைத்த சின்னதுரை!

'மாவட்டத்தில் இரண்டு அதிகார மையங்கள் இருப்பது சாத்தியம் ஆகாது என்பதற்கு உதாரணம்தான் அறநிலையத் துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் பதவி பறிப்பு நடவடிக்கை’ என்கிறார்கள் தூத்துக்குடி மாவட்டத்தினர். பொறுப்பேற்ற நாளில் இருந்து சண்முகநாதனும், இந்த மாவட்டத்தின் மற்றொரு அமைச்சரான சி.த.செல்லபாண்டியனும் நேரில் நன்றாகப் பேசிக்கொண்டாலும், ஒருவருக்கு ஒருவர் குழி தோண்டிக்கொண்டு இருந்தார்களாம். சின்னம்மா டீமுடன் சண்முகநாதன் வைத்திருந்த நெருக்கத்தை இப்போது செல்லப்பாண்டியன் ரீ பிளேஸ் செய்துவிட்டதாகத் தகவல். உள்ளாட்சித் தேர்தலில், மாவட்டத்தில் பல பதவிகளில் ஆளும் கட்சிக்கு எதிர்மறையாக ரிசல்ட் இருந்திருக்கின்றன. 'இரண்டு அமைச்சர்களுமே திறமையானவர்களாக இல்லை’ என்று மேலிடத்துக்கு புகார் போயிருக்கிறது. பெரும்பான்மை வாக்கு வங்கியான 'கிறிஸ்துவ நாடார்’ சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால், நூலிழையில் சி.த.செல்லப்பாண்டியன் தப்பித்துவிட்டார். இதற்கிடையில், கடந்த 31-ம் தேதி திருச்செந்தூர் முருகன் கோயில் சூரசம்ஹார விழாவில் அமைச்சர் சண்முகநாதன் தனது சகாக்கள் அத்தனை பேரையும் மேடையில் ஏற்ற, பாரம் தாங்காமல் அது விழுந்துவிட்டது. இதை அபசகுனமாகக் கருதிய முதல்வர், சண்முகநாதனின் ஃபைலை எடுத்திருக்கிறார். அதில் சண்முகநாதனின் ஆல் இன் ல் அழகுராஜாவாக வலம் வரும் 'சின்னதுரை’ என்பவரின்



ஜாதகத்தைப் பார்த்ததும் கடுப்பாகிவிட்டார் ஜெயலலிதா. இரண்டாவது தடவையாக மாவட்டப் பஞ்சாயத்து தலைவராகி இருக்கும் சின்னதுரை, தன் மைத்துனர் பெயரில் அரசு கேபிள் எம்.எஸ்.ஓ., தன் மகன்கள் பெயரில் இரண்டு லோக்கல் சேனல்கள், தம்பி சேகரை மாநகராட்சி உறுப்பினராக்க முயற்சி செய்தது, இன்னொரு தம்பியான சரவணனை இடையர்காடு பஞ்சாயத்துத் துணைத் தலைவராக்கியது, தந்தை பெயரில் அனல் மின் நிலையத்தில் கான்ட்ராக்ட் வேலை என.... தன் ராஜாங்கத்தை ஜாம்ஜாம் என விஸ்தீரணம் செய்து இருக்கிறார். சண்முகநாதனின் பெயரைச் சொல்லியே இவற்றை எல்லாம் செய்திருக்கிறாராம். எல்லாவற்றையும் பார்த்த ஜெயலலிதா, சின்னதுரையை ஆடவிட்டு அழகு பார்த்த சண்முகநாதனின் விக்கெட்டைப் பறித்துவிட்டார்.

ஓவர் பணிவு உடம்புக்கு ஆகாது!

ஜெ. அமைச்சரவையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அடுத்து 'மிஸ்டர் தன்னடக்கம்’ என்று பெயரெடுத்தவர் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரான உதயகுமார். நல்ல உழைப்பாளி, தலைவியின் விசுவாசி. ஆனாலும் டாக்டர்.வெங்கடேஷின் அறிமுகம் ப்ளஸ் நட்பால்தான் உதயகுமார் மளமளவெனக் கட்சியில் உயர்ந்ததாகச் சொல்கிறார்கள். சாத்தூரில் டிக்கெட், ஜெயித்​ததும் அமைச்சர் பதவி என்று ஏற்றம் கண்டார். துறைரீதியாக ஜொலித்துப் பெயர் எடுக்கும் அளவுக்கு வாய்ப்பு இல்லை என்பதால், அநியாயத்துக்கு அடக்கம் காட்டினார். 'அம்மா இருக்கும் இடம் கோயில். அங்கே செருப்பு அணிந்து வர மாட்டேன்’ என்று சொல்லி சட்டசபைக்குள் வெறுங்காலுடன் திரிந்து புல்லரிக்கவைத்தவர். இப்படிப்பட்டவரின் பதவி பறிக்கப்பட்டதற்கான காரணங்களில் முக்கியமான ஒன்றைக் கேட்டால் 'ஐயோ பாவம்’ என்று தோன்றும். திருச்சி இடைத் தேர்தல் பிரசாரத்துக்கு ஜெயலலிதா சென்ற​போது அவரை வரவேற்று 8 கி.மீ. து£ரத்துக்கு டியூப் லைட் மற்றும் பேனர்களை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வைத்திருந்தார். இதைக் கண்டு முகம் சுளித்த ஜெயலலிதா, விமான நிலை​யத்தில் உதயகுமாரை அழைத்து லெஃப்ட்-ரைட் வாங்கினார். அதோடு, அங்கே இருந்த சீனியர் அமைச்சர்களைக் காட்டி, 'இவர்களிடம் ஆலோசனை கேட்​டிருக்க வேண்டியதுதானே?’ என்று சீறினாராம். சீனியர்களும், 'சொன்னோம் அம்மா, அவர் கேட்கலை...’ என்று போட்டுக் கொடுத்திருக்கிறார்கள். 'மின்சாரப் பற்றாக்குறை நேரத்தில் நீ இப்படி டாம்பீகம் காட்டினா... மக்கள் என் மேலேதானே அதிருப்தி அடை​வாங்க. என் மேல் மரியாதை காட்டுறதா நினைச்சு​கிட்டு இப்படியா பண்றது?’ என்று பொரிந்​தாராம் முதல்வர். உள்ளாட்சித் தேர்தலிலும், வேட்பாளர் தேர்வில் சில்மிஷங்கள் நடத்தியதாக இவர் மீது ஒரு குற்றச்சாட்டு. அருப்புக்கோட்டை நகராட்சி, அருப்புக்கோட்டை யூனியன், ஸ்ரீவில்லிபுத்தூர் யூனியன் போன்றவற்றில் அ.தி.மு.க. அதிக இடங்களைப் பெற்றிருந்தும் தலைவர் பதவியை கைப்பற்ற முடியாமல் போனதும் உதயகுமாரின் பெயரை டேமேஜ் ஆக்கிவிட்டது. அதனால்தான் அவருக்கும் டாட்டா காட்டிவிட்டார் முதல்வர்.

அலட்சியம் அடித்த ஆப்பு!

திருச்சி மேற்குத் தொகுதி இடைத்தேர்தலில் பரஞ்சோதி வெற்றி பெற்ற கணத்தில் இருந்தே கால்நடைத் துறை அமைச்சராக இருந்த சிவபதியின் தலைக்கு மேல் கத்தி தொங்க ஆரம்பித்தது. எதிர்பார்த்தது போலவே பரஞ்சோதிக்குப் பதவி வழங்குவதற்காக, சிவபதியின் பதவியைப் பறித்து, திருச்சிக் கணக்கை நேர் செய்திருக்கிறார் ஜெயலலிதா. அதையும் தாண்டி, சிவபதியின் பதவி பறிபோக இன்னொரு முக்கியமான காரணமும் சொல்லப்படுகிறது. திருச்சி மேற்கு மற்றும் திருச்சி மாநகராட்சியில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்றிருந்த நிலையில், மாவட்டத்தில் இருக்கும் மணப்பாறை, துறையூர் மற்றும் தூவாக்குடி ஆகிய மூன்று நகராட்சிகளையும் தி.மு.க-விடம் கோட்டைவிட்டது. அ.தி.மு.க-வுக்கு செல்வாக்கான அந்த ஏரியாக்களில் தோல்விக்குக் காரணம்... வேட்பாளர் தேர்வு சரியில்லாததுதான் என்று சொல்லப்பட்டது. அவர்கள் எல்லாம் புறநகர் மாவட்டச் செயலாளராக இருந்த சிவபதி சிபாரிசு செய்த ஆட்கள் என்பதோடு, அவர்களுக்காக முழு மூச்சோடு ஓடியாடி தேர்தல் வேலையும் பார்க்காமல் அலட்சியம் காட்டினார் என்று கோபப்பட்ட தலைமை, சமீபத்தில்தான் அவரது புறநகர் மாவட்டச் செயலாளர் பதவியைப் பறித்து பலமாக குட்டுவைத்தது. இப்போது, அமைச்சர் பதவியையும் பறித்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து உள்ளது!

பலி ஆடு ஆனாரா?

மூன்று முறை சைதாப்பேட்டை எம்.எல்.ஏ. ஆன செந்​தமிழன், முதல் முறையாக அமைச்சராக்கப்​பட்டதும், செய்தித் துறை அமைச்சர் ஆனார். சட்ட அமைச்சராக இருந்த இசக்கி சுப்பையா பிரச்னையில் மாட்டியதால், அவர் வகித்த சட்டம் மற்றும் சிறைத் துறைகள் செந்தமிழனுக்கு அளிக்கப்பட்டன. சட்டத்தில் முதுநிலை பட்டம் படித்தவர் என்பதால், கெட்ட பெயர் இல்லாமல் ஓடியது. செய்தி, சட்டம், நீதி மற்றும் சிறைத் துறை என்று பவர்ஃபுல் துறைகளின் அமைச்சரான செந்தமிழன் ஒட்டுமொத்தமாக நீக்கப்பட்டுவிட்டார். தென் சென்னை மாவட்டச் செயலாளர் பதவியில் மட்டுமே தற்போது இருக்கிறார். மௌனச் சாமியார் என்று இவரை கட்சிக்காரர்கள் சொல்வது உண்டு. மந்திரி பதவி வந்ததில் இருந்து எந்த வம்புதும்புக்கும் போகாதவர். மேயர் சைதை துரைசாமியும் அமைச்சர் செந்தமிழனும் எலியும் பூனையும் மாதிரி. இப்படிப்பட்ட இருவர் சைதை தொகுதியிலேயே இருப்பதால், கட்சி நிர்வாகிகள் இடையே பூசல் நிலவுவதாக உளவுத் துறை சொன்னது. அதனால், மந்திரி பதவியில் இருந்து செந்தமிழன் கழற்றிவிடப்பட்டதாக கட்சிக்காரர்கள் சொல்கிறார்கள். அதே நேரம், தென் சென்னை மாவட்டக் கழகத்தின் சார்பில் வளர்மதியை மந்திரியாக்க பவர் சென்டர் பிரமுகர் ராவணன் முயற்சித்தார். கலைராஜனுக்காக டி.டி.வி. தினகரன் காய் நகர்த்தினார்.

இதற்காகப் பலிகொடுக்கப்பட்டவர் செந்​தமிழன். கடைசி நேரத்தில் இதை யூகித்த முதல்வர் ஜெயலலிதா... அந்த இருவருக்கும் பதவி தராமல் தவிர்த்தார். தவிர... மந்திரி சபை மாற்ற அறிவிப்புக்குப் பிறகு, செந்தமிழன், மேயர் சைதை துரைசாமி, கலைராஜன்... மூவரையும் கார்டனுக்கு அழைத்து பேசினாராம் முதல்வர். செந்தமிழனுக்கு ஆறுதலான வார்த்தைகளை சொன்னாராம்.

No comments:

Post a Comment