Wednesday, December 26, 2012

ராஜீவ் காந்தியின் இறப்பு சான்றிதழை பெற்ற மர்ம பெண் யார்? மத்திய உளவுப்பிரிவு போலிஸார் அதிரடி விசாரணை.


www.thedipaar.com

வி.ஐ.பி-களின் பெயரைப் பயன்படுத்தி தனிநபர்கள் 'விளையாடுவது’ தமிழகத்துக்குப் புதிதல்ல. ஆனால், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் நடந்த சம்பவம், அத்தனையையும் சாப்பிட்டு ஏப்பம் விட்டுவிட்டது! 
கடந்த 21-ம் தேதி, உயர் ரக கார் ஒன்றில் பரபரப்பாக வந்து இறங்​கினார் ஒரு பெண். வந்தவர், 1991 மே 21-ம் தேதி இறந்துபோன தன் கணவரின் இறப்புச் சான்றிதழ் கேட்டார் என்கிறார்கள். அந்தப்பெண்ணின் நடை, உடை, பாவனை அவரை பெரியஇடத்து ஆளாக அடையாளம் காட்டியதால்,சில சம்பிர​தாயங்​களுக்குப் பிறகு, அவர் கேட்ட சான்றிதழ் தரப்பட்டது. அந்தப் பெண்ணிடம் கொடுக்கப்பட்டது முன்னாள் பிரதமர் ராஜீவ்​காந்தியின் இறப்புச் சான்றிதழ். வந்தவர் சோனியா காந்தி அல்ல; ஓர் ஆந்திரப் பெண்!
ஸ்ரீபெரும்புதூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் மூன்று தினங்களாக அந்தப் பெண்ணின் நடமாட்டம் இருந்ததாகச் சொல்கிறார்கள். சபீனா ஃபெரோஷ்கான் என்று தன்னை அறிமுகப்​படுத்திக்​கொண்ட அவர், ஆந்திர மாநிலம் ஹைதராபாத் நகர் தாதா சாஹேப் தெருவை தனது விலாசமாக மனுவில் குறிப்பிட்டு இருக்கிறார். கடந்த 19-ம் தேதியே அவர் மனு கொடுத்து இருக்கிறார். இரண்டு நாட்கள் கழித்து 21-ம் தேதி இறப்புச் சான்றிதழ் அவர் கைக்குச் சென்றுள்ளது. அந்தப்பெண் யார், என்ன நோக்கத்துக்காகச் சான்றிதழ் பெற்றார் என்று இப்போது விசாரணையை முடுக்கி இருக்​கிறார்கள் மத்திய உளவுப் பிரிவு போலீஸார்.
'ராஜீவைப்பற்றி புத்தகம் எழுதும் வெளி மாநிலப் பத்திரிகையாளர் ஒருவர்தான், இப்படி ராஜீவின் மனைவி என்று ஒருவரை நடிக்க​வைத்து சான்றிதழ் பெற்றார்’ என்றும் தகவல் சொல்லப்படுகிறது. சான்றிதழ் வழங்கிய சார்பதிவாளர் ராமலிங்கத்திடம் விளக்கம் கேட்​டுள்ளது அரசு. அவர் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்​பட்டுள்ளார். அவரைத் தொடர்புகொள்ள முயற்சித்​தும் இயலவில்லை.
இதுகுறித்து நம்மிடம் பேசிய உயர் அதிகாரி ஒருவர், ''பத்திரப்பதிவு அலுவல​கத்தில் இறப்புச் சான்றிதழ் என்பது பொது ஆவணமாகப் பராமரிக்கப்படுவதால், யாரும் யாருடைய இறப்புச் சான்றிதழையும் உரிய விவரங்​களுடன் மனுசெய்து பெறுவது சாதாரணமாகப் பின்பற்றப்படும் நடைமுறைதான். இருப்பினும், பெரிய தலைவர் ஒருவரின் பெயர் சம்பந்தப்பட்டு இருப்பதால், அதிகாரி அதை ஒன்றுக்குப் பலமுறை விசாரித்து, தேவையற்ற  சர்ச்சையைத் தவிர்த்து இருக்கலாம். சர்ச்சைக்குரிய மனுவின் எந்த இடத்திலும் தன்னை ராஜீவ் காந்தியின் மனைவி என அந்தப் பெண் குறிப்பிடவில்லை. அதிகாரியால் தரப்​பட்ட சான்றி​தழிலும் 'ராஜீவின் மனைவி’ என்ற வார்த்தை எங்கும் குறிப்பிடப்​படவில்லை. விசாரணையில் இது தெளிவாகவே உறுதிப்படுத்தப்​பட்டு உள்ளது. பர​பரப்​பைக் கிளப்ப வேண்​டும் என்றே சில விஷமிகள் பொய்​யான தகவல்​களை இட்டுக்கட்டி இதைப் பெரிது​படுத்துகின்​றனர்'' என்றார் அந்த அதிகாரி.
நம் அரசு அலுவலகங்கள் இயங்கும் லட்சணத்துக்கு, இந்தச் சம்பவம் இன்னும் ஓர் உதாரணம்!

No comments:

Post a Comment