Friday, July 29, 2011

சீறிய ஜெ.... சிக்கிய ஜாபர் சேட். கொட்டும் ஆதாரங்கள்.

01

கடந்த செவ்வாயன்று காலை ஒன்பது மணிக்கு பத்திரிகையாளர்களுக்கு ‘முன்னாள் உளவுத்துறைத் தலைவர் ஜாபர் சேட் வீட்டில் சோதனை’ என்று எஸ்.எம்.எஸ். வந்து பரபரப்பை ஏற்படுத்தியது.

பலரால் நம்பவே முடியவில்லை. அதிகாரத்தின் உச்சியில் இருந்த, வானளாவிய அதிகாரம் படைத்த ஜாபர் வீட்டிலா சோதனை? பலருக்கு சோதனை கொடுத்த ஜாபருக்கே சோதனையா?... அந்த சில நிமிடங்களில் திக்குமுக்காடிப் போனார்கள் பத்திரிகையாளர்கள்.

தமிழகத்தின் அதிகார மையமாக இருந்து அனைவரையும் ஆட்டிப்படைத்த ஜாபர் சேட்டை லஞ்ச ஒழிப்பு போலீஸார் எப்படி நெருங்கினார்கள்....?

தி.மு.க. ஆட்சியின் போது, தொலைபேசி ஒட்டுக்கேட்பு புகார் வந்தது அல்லவா? அந்தப் புகாரின் கதாநாயகனே இந்த ஜாபர் சேட்தான். அப்போதைய எதிர்க்கட்சித் தலைவி ஜெயலலிதாவின் தொலைபேசியையும் ஒட்டுக்கேட்க ஜாபர் சேட் தவறவில்லை.

அப்போதே இதுகுறித்து ஜெயலலிதா கண்டனத்தைத் தெரிவித்திருந்தார். தேர்தல் நேரத்திலும் ஜாபர் மீது சரமாரியாக புகார் தெரிவித்து தேர்தல் கமிஷனின் நடவடிக்கையைக் கோரினார். அதன்பிறகு, ஜாபர் சேட் அதிரடியாக மேற்கு வங்கத் தேர்தல் பார்வையாளராக மாற்றப்பட்டார்.

ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு, அதிகாரிகளை அழைத்த முதல்வர் ஜெயலலிதா, ‘என்ன ஆச்சு ஜாபர் சேட் விவகாரம்...?’ என்று சீறியதுதான் தாமதம். சுறுசுறுப்பாக களத்தில் இறங்கினார்கள் போலீஸார்.

லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றி, தொலைபேசி ஒட்டுக் கேட்பு சர்ச்சையில் சிக்கி பணி இடை நீக்கத்தில் உள்ள சங்கர் என்பவர் புகார் கொடுக்க... ஜாபர் சேட் மீதான நடவடிக்கையை முடுக்கி விட்டனர் போலீஸார். இதுகுறித்து ‘ஜாபர் மீது பல கோடி மோசடிப் புகார்’ என்ற தலைப்பில் 24.7.2011 தேதியிட்ட இதழில் செய்தி வெளியிட்டி ருந்தோம்.

தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த அதிரடி குறித்து விசாரித்தோம். ‘‘சும்மா சொல்லக்கூடாது...போலீஸார் ரொம்பத்தான் மெனக்கெட்டிருக்கிறார்கள்...’’

லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சமீபத்தில் நியமிக்கப் பட்ட துணை இயக்குனர் வெங்கட்ராமன் தான் ஒட்டுமொத்த ஆபரேஷனையும் மேற்பார்வை செய்திருக்கிறார். ஏற்கெனவே, சி.பி.ஐ.யில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் என்பதால், இந்த ஆபரேஷனை கச்சிதமாகவே செய்திருக்கிறார்.

மே மாதம் தலைமைச் செயலாளருக்கு சங்கர் கொடுத்த புகாரின் மீது ரகசிய விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது. அந்த விசாரணையில், பல ஆண்டுகளாகவே ஜாபர் சேட் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது.

ஜாபர் சேட்டின் கல்லூரித் தோழரான பால்ராஜ் ஜான்சன் மற்றும் ஜாபர் சேட்டின் பினாமி என்று கருதப்படும் ஜெய்சங்கர் ஆகியோர் ஜாபரின் முதலீடுகளை நிர்வகித்து வந்தனர் என்ற தகவலும் தெரிய வந்துள்ளது.

“புகார் எங்களுக்கு மே மாதத்திலேயே வந்தாலும், உரிய விசாரணை நடத்தி பல்வேறு விவரங்களைக் கண்டறிந்த பிறகே வழக்குப் பதிவு செய்தோம்’’ என்கிறார் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி ஒருவர். அந்த அதிகாரி தொடர்ந்து கூறுகையில், ”விருப்புரிமை கோட்டாவின் கீழ் அரசு நிலம் ஒதுக்கீடு செய்வது, ஒதுக்கீடு பெறும் நபர் அந்த இடத்தில் வீடு கட்டிக் கொள்ளத்தானே தவிர, வியாபாரம் செய்து லாபம் சம்பாதிக்க அல்ல.

ஆனால், ஒதுக்கீடு பெற்ற ஜாபரின் மனைவியும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் செயலாளராக இருந்த ராஜமாணிக்கத்தின் மகன் துர்காசங்கரும் சேர்ந்து ‘லேண்ட் மார்க் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்’ என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தோடு கூட்டாக வியாபாரம் செய்துள்ளனர். அந்த நிறுவனம் ஜாபர் சேட்டின் மனைவி பர்வீன் ஜாபருக்கும், துர்கா சங்கருக்கும் ஒதுக்கிய நிலத்தில், 12 அடுக்கு மாடி வீடுகளைக் கட்டி வருகிறது.

இந்த வீடுகள் ஒவ்வொன்றும் இரண்டரைக் கோடிக்கு விற்பனை செய்யத் திட்டமிட்டிருந்தனர். ஒட்டுமொத்த அடுக்கு மாடியும், ‘சென்ட்ரலைஸ்டு’ ஏ.சி. வசதி கொண்டது. இது தவிர, ஒவ்வொரு வீட்டின் சமையலறைக்கும் இத்தாலி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உபகரணங்கள், தரைக்கு இத்தாலி பளிங்குக் கற்கள், நீச்சல் குளம், ஜிம்னாசியம், லிஃப்ட், ஜெனரேட்டர் போன்ற வசதிகளோடு கட்டப்பட்டு வருகிறது.

இதற்காகவா சமூக சேவகர் என்ற பிரிவில் நிலம் ஒதுக்கினார்கள்?’’ என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார் அந்த அதிகாரி.

லஞ்ச ஒழிப்புத் துறை வட்டாரத்தில் விசாரித்த போது, கிடைத்த தகவல்கள் ஜாபர் மோசமான புதைகுழியில் சிக்கிக் கொண்டுள்ளார் என்றே தோன்ற வைக்கிறது.

‘‘செவ்வாயன்று காலை 8 மணிக்கு அண்ணா நகரில் உள்ள ஜாபர் வீட்டுக்குள், விசாரணை அதிகாரி கூடுதல் எஸ்.பி. சுப்பையாவும், கூடுதல் எஸ்.பி. ஜெயலட்சுமி தலைமையிலான டீமும் நுழைந்தது. லஞ்ச ஒழிப்புத் துறையின் பல்வேறு சோதனைகளில் பங்கெடுத்து நீண்ட அனுபவம் கொண்ட இன்ஸ்பெக்டர் வேலன் சுப்ரமணியும் இந்த டீமில் இடம்பெற்றிருந்தார்.

வீட்டினுள் நுழைந்ததும் தங்களை அறிமுகப் படுத்திக் கொண்ட அதிகாரிகள், சோதனை நடத்தப் போகும் விவரத்தை ஜாபர் சேட்டிடம் தெரிவித்து, ‘உங்கள் மனைவியை ஒத்துழைக்கச் சொல்லுங்கள்’ என்று ஜாபரிடம் போனில் தெரிவித்த பின், சோதனையைத் தொடங்க உத்தரவிட்டார் கூடுதல் எஸ்.பி. சுப்பையா.

சோதனையின் போது ஜாபர் சேட்டின் லேப்டாப் மற்றும் 8 ஐபாட் கருவிகளும், 35 சி.டி.க்களும் சிக்கியிருக்கின்றன. அதில் ஒரு சி.டி.யை போட்டுப் பார்த்த சுப்பையா அதிர்ச்சி அடைந்திருக்கிறார். கருணாநிதியின் குடும்ப உறுப்பினர் ஒருவரோடு ஜாபர் நடத்திய உரையாடல் அந்த சி.டி.யில் இருந்திருக்கிறது.

உடனடியாக லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் கே.பி. மகேந்திரனைத் தொடர்பு கொண்டார் சுப்பையா. இதன்பின்னர், லேப்டாப் உள்ளிட்ட கருவிகள் மட்டும் முதலில் அப்புறப்படுத்தப்பட்டன. அதன்பிறகு, சோதனையில் சிக்கிய பல்வேறு ஆவணங்களைக் கைப்பற்றிய விஜிலென்ஸ் அதிகாரிகள் ஜாபரின் வீட்டை விட்டுக் கிளம்பினர்.

இந்நிலையில், லேண்ட் மார்க் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்தில் தொடக்கத்தில் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்திருக்கின்றனர். ‘எங்கள் எம்.டி. வராமல் எந்த ஆவணங்களையும் ஒப்படைக்க முடியாது’ என்று சாக்குப்போக்கு சொல்லியிருக்கிறார்கள்.

அந்த அலுவலகத்தை சோதனையிடச் சென்ற டி.எஸ்.பி. அலி பாஷா, சோதனைக்கு ஒத்துழைத்து ஆக வேண்டிய அவசியத்தை விளக்கியதும், ஒரு வழியாக ஒத்துழை த்திருக்கிறார்கள். துர்கா சங்கர் வீட்டுக்குச் சென்ற டி.எஸ்.பி. திருநாவுக்கரசு தலைமையிலான டீமும், பல்வேறு ஆவணங்களை அள்ளி வந்திருக்கிறது.

ஜாபர் வீட்டுக்கு அருகிலேயே கஸ்தூரி ராஜா என்ற ஜாபரின் நண்பர் வீடும் சோதனைக்குத் தப்பவில்லை. பல்வேறு ரியல் எஸ்டேட் ப்ராஜெக்டுகளைச் செய்து வரும், இந்த கஸ்தூரி ராஜாவின் வீடு, வெள்ளை மாளிகை என்று வர்ணிக்கும் அளவுக்கு மிக ஆடம்பரமாக இருந்தது. இவர்தான் ஜாபரின் பல்வேறு முதலீடுகளை ரியல் எஸ்டேட் டில் ஜாபர் சார்பாக செய்து வருகிறார். ஜாபரின் நண்பர் ஜான்சன் வீட்டில் மட்டும் ரூ.50 கோடி மதிப்புள்ள ஆவணங்கள் சிக்கியதாகச் சொல்கிறார்கள்.

சோதனைக்குச் சென்ற லஞ்ச ஒழிப்புத் துறையினரின் சோதனை இரவு மற்றொரு இடத்தில் தொடர்ந்தது.

எண் 23, ராஜா தெரு, கல்யாணி நகர், திருவான்மியூர் என்ற முகவரியில் உள்ள இந்த இடத்தை சோதனைக்குத் தேர்ந்தெடுத்த காரணம், ஜாபரின் மகள் செல்வி ஜெனிஃபர்தான். ‘சமூக சேவகர்’ என்ற பிரிவில் வீடு ஒதுக்குங்கள் என்று கருணாநிதிக்கு ஜெனிஃபர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்த முகவரிதான் இது.

இந்த இடத்தில் சோதனை செய்யச் சென்ற அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனென்றால், இந்த இடம் பெரும் பணக்காரர்கள் குடியிருக்கும் பகுதியில் இருந்த காலி இடம். இந்த வீட்டு மனையும் எப்படியும் மூன்று கோடி விலை இருக்கும் என்கிறார்கள்.

ஒரு காலி மனையை குடியிருக்கும் முகவரியாக ஜெனிஃபர் ஏன் காட்ட வேண்டும் என்றும் கேள்வி எழுகிறது. இதற்கு தனியாக செல்வி ஜெனிஃபர் மீது ஒரு கு ற்றச்சாட்டு சேர்க்கப்படும்’’ என்கிறார்கள் லஞ்ச ஒழிப்பு போலீஸார்.

இந்த ரெய்டு குறித்து கருத்துத் தெரிவித்த மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர், “பேராசை காரணமாக தன் மகளை சிக்கலில் இழுத்து விட்டு கருணாநிதி திகாருக்கு அனுப்பியது போலவே, ஜாபர் சேட்டும் தன் மகளை கிரிமினல் வழக்கில் சிக்க வைத்துள்ளார். திறமையான அதிகாரியான ஜாபர் சேட், முன் பின் யோசிக்காமல் மனைவியையும், மகளையும் பயன்படுத்தி சொத்து சேகரிக்க எடுத்த முயற்சிதான் இன்று அவருக்கு சிக்கலாகி இருக்கிறது’’ என்றார்.

இதனிடையே வக்கீல் புகழேந்தி கொடுத்த புகாரிலும் ஜாபர் சேட் மீது இன்னொரு வழக்குப் பதிவு செய்யப்படலாம் என்கிறார்கள் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்.

‘‘ஆடிக்காற்றில் அம்மியே பறக்கும்போது... ஜாபர் சேட் எல்லாம் எம்மாத்திரம்...?’’

- ஆச்சரியப்படுபவர்களுக்கு இதையே பதிலாக சொல்லிக் கொண்டிருக்கிறது போலீஸ் வட்டாரம்.

அடேங்கப்பா...?

ஜாபர் சேட் குடியிருந்த அண்ணா நகர் பங்களா 4 கிரவுண்டுகளில் கட்டப்பட்டிருக்கிறது. அதன் மதிப்பு ரூ. 15 கோடி என்கிறார்கள். அந்த வீட்டில் மாதந்தோறும் 20 ஆயிரம் வாடகைக்கு குடியிருப்பதாக ஒப்பந்தம் போட்டுள்ளார் ஜாபர்.

ஒரு மாதம் முன்புதான் ஜாபர் சேட், அண்ணா நகர் பங்களாவுக்கு குடி போயிருந்தாலும், ஜாபரின் மனைவி, 2 ஜூன் 2009 அன்று வீட்டு வசதித் துறைக்கு எழுதிய மனுவில், ஜாபர் தற்போது குடியிருக்கும் அண்ணா நகர் பங்களா முகவரியையே கொடுத்திருக்கிறார். இதனையும் தீவிரமாக ஆராய்ந்து வருகிறார்கள் போலீஸார்.

அண்ணா நகர் பங்களா ஜாபர் சேட் பினாமி பெயரில் வாங்கியுள்ள சொத்து என்றும் போலீஸார் தெரிவிக்கிறார்கள். இது போக, பழைய மகாபலிபுரம் சாலையில் ‘க்ள £சிக் ஃபார்ம்ஸ்’ என்ற இடத்தில் இரண்டு கிரவுண்டுகள் வேறு பெயரில் ஜாபர் வைத்திருப்பதாகவும் தெரிகிறது.

இந்த இரண்டு கிரவுண்டுகள், அண்ணா நகர் பங்களா, இதர முதலீடுகள், திருவான்மியூர் கல்யாணி நகர் காலி மனை ஆகியவற்றை மட்டும் வைத்தே, ஜாபர் மீது வரு மானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு விரைவில் பாயும் என்று பயமுறுத்துகிறார்கள் லஞ்ச ஒழிப்பு போலீஸார்.

என்ன பொருத்தம்!

முன்னாள் தலைமைச் செயலாளர் திரிபாதிக்கும், முன்னாள் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனர் உபாத்யாயாவுக்கும் இடையே நடைபெற்ற உரையாடல் வெளியானது தொடர்பான வழக்கில் சங்கர் கைது செய்யப் பட்டார்.

சி.பி.சி.ஐ.டி. கஸ்டடியில் சைபர் க்ரைம் டி.எஸ்.பி. பாலு தம்மை கடுமையாக சித்திரவதை செய்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்தார் சங்கர். ஆட்சி மாறியதும் மீண்டும் ஒரு புகாரை உள்துறைச் செயலாளரிடம் நேரில் கொடுத்துள்ளார்.

ஜாபர் சேட் உத்தரவின்படி, இரண்டு காவல்துறை உயர் அதிகாரிகளை அந்த வழக்கில் சிக்க வைக்கவே சங்கரை டி.எஸ்.பி. பாலு சித்திரவதை செய்தார் என்ற புகார் கூறப்பட்டது. அந்த பாலுவின் சொந்தத் தம்பியான கூடுதல் எஸ்.பி. சுப்பையா, ஜாபர் சேட் மீதான இந்த வழக்கின் புலனாய்வு அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கிறார் என் பது தான் கூடுதல் தகவல்.

நன்றி குமுதம் ரிப்போர்ட்டர்

No comments:

Post a Comment