Sunday, January 13, 2013

குவஸார் நட்சத்திர மண்டலம் கண்டுபிடிப்பு!!

அண்டவெளியில் நாம் இதுவரை கண்டிராத அளவுக்கு ஒரு மாபெரும் 'குவஸார்' மண்டலங்கள் அடங்கிய பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை ஒளியின் வேகத்தில் கடக்க 4 பில்லியன் ஆண்டுகள் ஆகுமாம். அந்த அளவுக்கு மாபெரும் அளவில் பரந்து விரிந்து கிடக்கிறது இந்த மண்டலம்.


'குவஸார்' என்றால்?.. Quasi-stellar radio source ("quasar") என்பது தான் குவஸார். ஒரு நட்சத்திர மண்டலத்தின் (galaxy) மையக் கருவை அடங்கிய நட்சத்திரம் தான் குவஸார். பல்லாயிரம் சூரியன்களை விட அதிக கனமும் ஒளிவீச்சும் கொண்டவை குவஸார்கள். நட்சத்திர மண்டலத்தின் மையத்தில் உள்ள மாபெரும் பிளாக்ஹோலை சூழ்ந்துள்ள இந்த குவஸார்கள் பிளாக்ஹோலில் உள்ள ஆற்றலைத் தான் ஒளியாக, மின்காந்த அலைகளாக வானில் பல பில்லியன் கி.மீ. தூரத்துக்கு பீய்ச்சி அடிக்கின்றன. 



 இந் நிலையில் இதுவரையில் காணப்படாத அளவுக்கு மாபெரும் 'குவஸார்கள்' அடங்கிய ஒரு மண்டலத்தை பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். Large quasar group (LQG) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மண்டலத்தை கடக்கவே 4 பில்லியன் ஒளி ஆண்டுகள் ஆகிவிடுமாம். ஒளியின் வேகம் என்பது வினாடிக்கு 186,282 மைல்கள் அல்லது 3,00,000 கிலோ மீட்டர்கள். நமது சூரியனிலிருந்து கிளம்பும் ஒளி பூமியை அடைய 8 நிமிடங்கள் ஆகின்றன. அதாவது, பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான 1,50,000,000 கி.மீ. தூரத்தைக் கடக்க இவ்வளவு நேரம் ஆகிறது.   



 எவ்வளவு பெரிசு என்பதற்கு ஒரு உதாரணம்: 
நமது பூமி, சூரியன் உள்ளிட்ட நட்சத்திர மண்டலம் இருப்பது மில்கிவே கேலக்சி எனப்படும் பால்வெளி மண்டலம். இதற்குப் பக்கத்தில் இருக்கும் இன்னொரு மண்டலம் ஆண்ட்ரோமெடா கேலக்சி. இந்த இரு மண்டலங்களுக்கும் இடையிலான தூரம் 2.5 மில்லியன் ஒளி ஆண்டுகள். அதாவது நாம் ஒரு விண்கலத்தில் ஒளியின் வேகத்தில் பறந்தால் மில்கிவே கேலக்சியிலிருந்து ஆண்ட்ரோமெடா கேலக்ஸியை அடைய 2.5 மில்லியன் ஆண்டுகள் ஆகும்!. வழக்கமாக இரு வேறு நட்சத்திர மண்டலங்களுக்கு இடையிலான தூரம் 6 முதல் 10 மில்லியன் ஒளி ஆண்டுகளாக இருக்கும். ஆனால், இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள குவஸார் மண்டலத்தின் விட்டம் 4 பில்லியன் ஆண்டுகள், மில்லியன் அல்ல, பில்லியன். இப்போ புரியுதா எவ்ளவு பெரிசு என்பது (எங்க புரியுது?!).   


பிரச்சனைகளும் ஆரம்பம்? 
சரி, புதுசா ஏதோ பெரிய குவஸார் மண்டலத்தை கண்டுபுடிச்சாச்சு.. ''ரொம்ப சந்தோஷம் தம்பி'' என்று 'கரகாட்டக்காரன்' கனகாவின் அப்பா சண்முகசுந்தரம் மாதிரி உணர்ச்சிவசப்பட்டுவிட்டு ஓராமாய் உட்கார முடியாத நிலை. காரணம், இந்த சைஸ் இதுவரை விண்வெளி குறித்து நாம் வைத்துள்ள பல மாடல்களை, கணக்கீடுகளை துவம்சம் செய்துவிட்டது. குறிப்பாக ஆல்பர்ட் எய்ன்ஸ்டீனின் அண்டவியல் கொள்கையை (Cosmological Principle) இது கேள்விக்குறியாக்கும் என்று தெரிகிறது. அண்டத்தை எந்தத் திசையிலிருந்து பார்த்தாலும் அது ஒரேமாதிரியாகவே இருக்கும் என்பது இந்தக் கொள்கையின் சாரம்சம். ஆனால், இந்த மாபெரும் சைஸ் அந்தக் கொள்கையை பஞ்சர் ஆக்குகிறது.     

 புதிய சிந்தாங்களுக்கு வித்திடும்... இதனால் இந்த புதிய மாபெரும் 'குவஸார்' மண்டலம் அண்டம் குறித்த கொள்கைகளை, சித்தாங்களை உலுக்கும் என்கிறார்கள் இங்கிலாந்தின் ராயல் அஸ்ட்ரனாமிகல் சொசைட்டி விஞ்ஞானிகள்.



No comments:

Post a Comment