Wednesday, January 2, 2013

என் கல்யாணத்தைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. சுதாகரன் பகீர் பல்டி


நீதிபதி பாலகிருஷ்ணாவின் கிடுகிடு நடவடிக்​கைகளால், சொத்துக் குவிப்பு வழக்கின் போக்கில் திடீர் உக்கிரம். கோர்ட் பக்கமே தலை​காட்டாமல் இருந்த சுதாகரனை நான்கு நாட்களாக பெங்களூ​ருவிலேயே டேரா போட​வைத்து, கிடுக்கிப்​பிடி கேள்விகளை வீசிக்​கொண்டு இருக்கிறார். (இதில் குறிப்​பிடப்படும் சொத்து மதிப்புகள் 16 ஆண்டு​களுக்கு முந்தை​யவை.) 
கங்கை அமரனின் சொத்து
கடந்த புதன், வியாழக் கிழமைகளில் நீதிபதியின் கேள்வி​க ளுக்குப் பதில் சொன்ன சுதாகரன்,வெள்ளிக்​கிழமை காலை 10.45 மணிக்கு வழக்கம்போல தும்பைப் பூ பைஜாமாவில் வந்து இறங்​கினார். நீதிபதி பாலகிருஷ்ணா  கொஞ்சம் தாமதமாகவே கோர்ட்டுக்கு வந்ததால், 11.20-க்குத்தான் கேள்விகள் பாயத் தொடங்கின. அபிராமி பில்டர்ஸ், ரிவர்வே என்டர்பிரைசஸ், அக்ரோ பிரைவேட் லிமிடெட், மெடோ ஃபார்ம் உள்ளிட்ட நிறுவனங்களுக்காக பல்வேறு இடங்களில் நிலங்கள், கட்டடங்கள் வாங்கியது, அவற்றைப் பதிவு செய்தது, பராமரித்தது தொடர்பாக நீண்ட கேள்விகளை நீதிபதி சரமாரியாகக் கேட்க, சுதாகரனும் சளைக்காமல் 'தெரியாது’ என்ற பதிலையே மீண்டும் மீண்டும் சொன்னார். ஆனாலும் நீதிபதி விடாமல், ''சென்னை தி.நகரில் உள்ள 20.41 லட்ச ரூபாய் மதிப்புள்ள கட்டடம், சென்னை ஸ்ரீராம் நகரில் உள்ள 20.57 லட்ச ரூபாய் மதிப்புள்ள கட்டடம், மாமல்லபுரத்தில் உள்ள 53.11 லட்ச ரூபாய் மதிப்புள்ள கட்டடம், சோழிங்கநல்லூரில் உள்ள 80.37 லட்ச ரூபாய் மதிப்புள்ள கட்டடங்கள் வாங்கியது, பராமரித்தது தொடர்பாக என்ன சொல்கிறீர்கள்?'' என்று கேட்டார் நீதிபதி. தான் ஏற்கெனவே ரெடி மேடாகக் கொண்டுவந்த ஃபைலைப் பார்த்து, ''விசாரணை அதிகாரிகள் கட்டடத்தின் மதிப்பை உண்மையைவிட அதிகமாகக் காட்டி உள்ளனர். அது மட்டும் இல்லாமல் எங்களுக்கு எந்தத் தகவலையும் தெரிவிக்காமல் அதிரடியாகப் புகுந்து சோதனையிலும் ஈடுபட்டனர்'' என்றார்.
''சென்னை புறநகர்ப் பகுதியில் கங்கை அமரனின் சொத்தை வாங்குவதற்காக உங்கள் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதாக கங்கை அமரன் வாக்குமூலம் அளித்திருக்கிறாரே?'' என்று நீதிபதி கேட்டபோது, ''அதுகுறித்து எனக்கு எதுவும் தெரியாது'' எனச் சொல்லிவிட்டு, தன்னுடைய வக்கீல் அன்புக்கரசுவைப் பார்த்து மெல் லிய புன்னகை பூத்தார் சுதா​கரன். அதை, தன் மூக்குக் கண்ணாடி வழியே கவனிக்க நீதிபதி பாலகிருஷ்ணாவும் தவற வில்லை.
எதுவுமே தெரியாது சாமியோவ்
சுதாகரன், சசிகலா மற்றும் இளவரசி மூவரும் இணைந்து நடத்திய நிறுவனங்கள், அப்போது வாங்கிய நிலங்கள், அவற்றைப் பதிவுசெய்யச் செலவழித்த பணம் மற்றும் பங்குப் பரிவர்த்தனைகள் தொடர்பான கேள்விகள் அனைத்துக்கும் 'தெரியாது’ என்ற பதிலையே வேடிக்கை பார்த்தபடியே ஹாயாக சொல்லிக்கொண்டு இருந்தார். அடுத்து, ஜெயலலிதா மற்றும் போயஸ் கார்டன் தொடர்பான‌ கேள்விகளைக் கேட்கத் தொடங்கியதும் நிமிர்ந்து உட்கார்ந்தார் சுதாகரன்.
''நம்பர் 36, போயஸ் கார்டனில் உள்ள ஜெயல​லிதாவின் வீட்டை பொதுப்பணித் துறை பொறியாளர் தலைமையிலான அதிகாரிகள் குழு 1996-ம் ஆண்டு டிசம்பர் 8 மற்றும் 9 தேதிகளில் மதிப்பீடு செய்தது. அதன் மதிப்பு ஏழு கோடியே 93 ஆயிரம் ரூபாய் என்பது உங்களுக்குத் தெரி​யுமா?'' என்று நீதிபதி கேட்டதும் சற்று நேரம் யோசித்த சுதாகரன் வழக்கம்போல், ''ஐ டோன்ட் நோ'' என்று சடாரெனப் பதில் அளித்தார். ''28.6.1996 அன்று ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் வேலை செய்யும் கருப்பன் என்பவருக்கு ஜெயலலிதா கையெழுத்திட்டுக் கொடுத்த காசோலை பற்றி தெரியுமா?'' என்று நீதிபதி மடக்க, ''எனக்கு அவர் யாரென்றே தெரியாது'' என்றார் சுதாகரன். இதைத் தொடர்ந்து நீதிபதியின் நீண்ட கேள்விகளுக்கு எல்லாம் ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லிக் களைத்துப்போன சுதாகரன், அடிக்கடி வென்னீரையும் விக்ஸ் மிட்டாயையும் சுவைத்துக் கொண்டார்.  
மூன்றாம் நாள் முழுக்கவே கேள்விகள் மிகவும் நீளமாக இருந்ததால், 125 கேள்விகள்தான் கேட்க முடிந்தது. மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு நீதிபதிக்கு வேறு வழக்குகள் இருந்ததால், வழக்கை அடுத்த நாளைக்கு ஒத்தி வைத்தார்.
பிரமாண்ட கல்யாணம்
சொத்துக் குவிப்பு வழக்கைப் பொறுத்த வரை, 'அபாய வளைவாக’க் கருதப்​படுவது, சுதாகரனின் திருமணம் குறித்த கேள்விகள்தான். அதனால், நள்ளிரவு வரை தன்னுடைய வக்கீல்களிடம் ஸ்பெஷல் கோச்சிங் எடுத்த சுதாகரன் மறுநாள் காலை 10.50 மணிக்கு, சாய்​பாபாவை வணங்கிவிட்டு கோர்ட்டுக்குள் நுழைந்தார். நீதிபதியும் தயாராக இருந்​ததால் சரியாகக் காலை 11 மணிக்கு கேள்வி கேட்கும் படலம் ஆரம்​பமானது.
''டெல்லியைச் சேர்ந்த மல்லம் லா என்ற தணிக்கையாளரின் மதிப்பீட்டின்படி, உங்களின் திருமணச் செலவுக்காக ஜெயலலிதா கையெழுத்திட்ட 5.91 கோடி ரூபாய் காசோலை பற்றி தெரியுமா?'' என்று நீதிபதி கேட்டதும் தன்னுடைய கைக்குட்டையால் முகத்தைத் துடைத்துக் கொண்டார்.
''எனது திருமணத்துக்குச் செய்யப்பட்ட செலவுகள் எல்லாம் எனது மனைவி வீட்டார் செய்ததே...'' என்று சுதாகரன் சொன்னார். கூடுதல் பதிலை எதிர்பார்த்திருந்த நீதிபதி, 'அவ்வளவுதானா?’ என்பது​போல் பார்த்துப் பதிலை பதிவு செய்தார். ''உங்களின் திருமணத்துக்காக 65 ஆயிரம் அழைப்பிதழ்கள் அச்சிடுவதற்கு ஜெயலலிதா 1.15 லட்சத்துக்கு
கா​சோலையில் கையெழுத்திட்டது குறித்துத் தெரியுமா?'' என்று கேட்டதும் அதே ஸ்பீடில், ''தெரியாது'' என்றார் சுதாகரன்.
அதைத்தொடர்ந்து, ''உங்கள் திருமணத்துக்காக யூனிட் டூல்ஸ் நிறுவனத்தின் ஆறு ஆடம்பர கார் களைப் பயன்படுத்துவதற்கு ஜெயலலிதா செக் கொடுத்தது, அ.தி.மு.க. அலுவலகத்தில் பணியாற்றும் பாபு என்பவரிடம் 50 ஆயிரம் அழைப்பிதழ்களை அச்சிடுவதற்கு 64 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை கொடுத்தது, திருமணத்தின்போது வாங்கப்பட்ட 450 சட்டைகள், 450 பேன்ட்கள், 45 சிக்நோரா ஆடைகள் ஆகியவற்றுக்கான தையல் கட்டணமாக ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 800 ரூபாய் காசோலையில் ஜெயலலிதா கையெழுத்திட்டுக் கொடுத்தது பற்றி வரிசையாக கேள்விகள் கேட்டு நீதிபதி கலங்கடித்தார். ஆனாலும் சுதாகரன் அனைத்துக்கும் கொஞ்சமும் அசராமல், 'தெரியாது’ என்
பதை​யே பதிலாகச் சொன்னார்.
எத்தனை முறை கேட்டாலும் ஒரே பதில்
கல்யாண கேள்விகளைத் தொடர்ந்து, மீண்டும் வங்கிப் பணப்​பரிவர்த்​​தனைகள் தொடர்பான கேள்விகள் தொ​டர்ந்தன. ''சென்​னை யில் உள்ள எஸ்.பி.எம். தலைமை அலுவலகத்தில் நீங்கள் கணக்குத் தொடங்கி இரண்டு கோடி ரூபாய் கடன் வாங்கியது மற்றும் கனரா வங்கியின் மைலாப்பூர் கிளையில் கணக்குத் தொடங்கியது உண்​மையா?' என்று கேட்டார் நீதிபதி.
''உண்மையாக இருக்கலாம்'' என்றார் சுதாகரன்.
அதுபோல் வங்கிக் கணக்கு எண் 1068-ல் இருந்து உங்களுடைய 1110 மற்றும் 1113 ஆகிய வங்கிக் கணக்கு​களுக்கு பல லட்ச ரூபாய் பரிமாற்றம் நடை​பெற்றது தெரியுமா?'' என்றார். இந்தக் கேள்விக்கும், ''உண்மையாக இருக்கலாம்'' என்றே பதில் சொன்னார்.
''சசிகலாவின் வங்கிக் கணக்கில் இருந்து உங்களின் வங்கிக் கணக்குக்கு 1992 முதல் 1996 வரை பலமுறை பணப் பரிவர்த்தனைகள் ந‌டந்திருக்கின்றனவே?'' என்ற கேள்விக்கும் ''உண்மையாக இருக்கலாம். நிறுவனங்களின் நிர்வாகக் காரணங்களுக்காகப் பெறப்பட்டு இருக்கலாம். இதுதொடர்பான விரிவான விளக்கத்தை எழுத்து மூலமாகத் தருகிறேன்'' என்றார் சுதாகரன். இதைத் தொடர்ந்து, சுதாகரனிடம் கோப் புகளில் கையெழுத்து வாங்கும் பணி ஆரம்ப​மானது.
கெஞ்சிய நீதிபதி
சுதாகரன் ஒரு கேள்விக்குப் பதில் சொல்லி முடித்ததும் நீதிபதி பாலகிருஷ்ணா, ''சுதாகரனிடம் மீதி இருக்கும் கேள்விகளை திங்கள்கிழமை கேட்டு முடித்து விடுகிறேன். அதனால், டிசம்பர் 31-ம் தேதி, திங்கள்கிழமை வந்து விடுங்கள். அதன்பிறகு இளவரசி...'' என்று சொல்லி முடிக்கும் முன்பே இருக்கையை விட்டு எழுந்த ஜெ. தரப்பு வக்கீல்கள், ''திங்கள் கிழமை வேண்டாம். இன்றைக்கு சனிக்கிழமை. தமிழ்நாட்டுக்குப் பயணித்து விட்டு, ஞாயிறு மதியமே களைப்பாகப் பெங்களூருக்குக் கிளம்ப வேண்டும். அது மட்டுமில்லாமல் புத்தாண்டை முன்னிட்டு குடும்பத்​துடன் கோயிலுக்குச் சென்று பிரார்த்திக்க வேண்டும். அதனால், ஜனவரி 2-ம் தேதிக்கு தயவு செய்து ஒத்தி வையுங்கள்'' என்று கெஞ்சும்​ தொனியில் கோரஸாகக்‌ கேட்டனர்.
அதற்கு ''இல்லை... இல்லை. தினமும் கோர்ட்டை நடத்தி வழக்கை விரை​வாக முடிக்க வேண்டும் என்பது சுப்ரீம் கோர்ட்​டின் உத்தரவு. நான் சிறப்பு நீதிபதி, சீக்கிரமாக வழக்கை முடிக்க வேண்டும் என்பது உங்களுக்கே தெரி​யும். அதனால், தயவுசெய்து எனக்கு ஒத்துழைப்பு கொடுங்கள்'' என்று பதிலுக்கு நீதிபதியும் கெஞ்சினார். ஆனாலும் ஜெ. தரப்பு வக்கீல்கள் விடாமல், ''புத்தாண்டு அன்று கோயிலுக்குப் போகணும். தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள்'' என்று கேட்டனர்.
''நீங்கள்தான் கோயிலுக்குப் போக வேண்டும் என்று சொல்கிறீர்கள். அவர் (சுதாகரன்) அமைதியாகத்தான் இருக்கிறார்'' என்று நீதிபதி சொல்ல... அதைக் கண்டுகொள்ளாத சுதாகரன் கையெழுத்துப் போடுவதில் பிஸியாக இருந்தார். மீண்டும் ஜெ. வக்கீல்கள் ''ப்ளீஸ்... ப்ளீஸ்...'' என்று கெஞ்சவே, ''சரி, ஜனவரி 2-ம் தேதி புதன்கிழமை வழக்கை ஒத்திவைக்கிறேன்'' என்றார். நான்கு நாட்கள் முடிவில் 632 கேள்விகளுக்கு சுதாகரன் பதில் சொல்லி இருக்கிறார். கோர்ட்டை விட்டு வேகமாக வெளியேவந்த சுதாகரன், ''என்ன ஜட்ஜ் இவ்ளோ ஸ்ட்ரிக்ட்டா இருக்கிறார்?'' என்று தன் வக்கீல்களிடம் ஆதங்கத்தைத் தெரிவித்து விட்டு சென்னைக்குக் கிளம்பினார். இன்னும் 282 கேள்விகள் மட்டுமே இருக்கின்றன. அடுத்து, இளவரசியை நோக்கி கேள்விக்கணைகள் பாயும்

No comments:

Post a Comment