Wednesday, January 2, 2013

சேவை வரிக்கு ரஜினி, கமல் ஆதரவா? மீண்டும் போராட்டத்தில் தமிழ் சினிமா


காவிரி, ஈழப் பிரச்னைகளுக்காகக் குரல் கொடுத்த சினிமாக்காரர்களை, மீண்டும் போராட்டக் களத்துக்கு இழுத்து வந்துள்ளது சேவை வரி! 
இப்போது தயாரிப்பாளர், வினியோகஸ்தர், தியேட்டர் உரிமையாளர்கள் தவிர ஏனைய திரைப்படத் தொழிலாளர்கள் அனைவரும், வாங் கும் சம்பளத்தில் 12.3 சதவிகிதம் சேவை வரி செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு ஆணை பிறப்பித்து இருக்கிறது. இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன், ஃபெப்சி தலைவர் அமீர், தியேட்டர்கள் சங்க தலைவர் அபிராமி ராமநாதன் ஆகியோர் ஒன்றுகூடி ஜனவரி 7-ம் தேதி உண்ணாவிரதம் இருக்கப்போகிறார்கள். சரத்குமாரிடம் பேசினோம்.
''சினிமாவை நம்பி இருக்கும் தயாரிப்பாளர், வினி யோகஸ்தர், தியேட்டர் உரிமையாளர்கள் தவிர ஒட்டுமொத்த சினிமாத் தொழிலாளர்களுக்கும் சேவை வரி விதிப்பது என்ன நியாயம்? சினிமா உலகத்தையே பிரித்துப்பார்த்தால் என்ன அர்த்தம்? அதிலும் சினிமாவில் இருக்கும் கிரியேட்டர்களுக்கு சர்வீஸ் டாக்ஸ் கிடையாதாம்... அது என்ன கணக்கு? கேமரா முன் நடிப்பவர்களும் தங்களுடைய கிரியேட்டிவ் திறமையைக் காட்டித்தானே நடிக்கிறார்கள்.
சேவை வரிக்கு ரஜினி, கமல் ஆதரவா? மீண்டும் போராட்டத்தில் தமிழ் சினிமா - Thedipaar.com
நடிகர்கள் மீது சேவை வரி விதித்தாலும், அதை தயாரிப்பாளர்தான் செலுத்த வேண்டியது வரும். அதாவது, 1 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் நடி கருக்கு சர்வீஸ் டாக்ஸ் தொகையான 12 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயையும் தயாரிப்பாளர்தான் செலுத்தும் சூழ்நிலை உண்டாகும். அதுபோல், சின்னத் திரையில 10 லட்சத்துக்குக் குறைவாக சம்பளம் வாங்குபவர்கள் சேவை வரி செலுத்த வேண்டாம் என்கிறார்கள். இது, நிச்சயமாக டி.வி. கலைஞர்கள் மத்தியில் பிரிவி னையை ஏற்படுத்தும்.
ஏற்கெனவே, ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங் கும் நடிகர்கள் 33 ஆயிரம் ரூபாயை வருமான வரியாகச் செலுத்துகின்றனர். இப்போது, 12.3 சதவிகிதம் சேவை வரியையும் சேர்த்தால் 45 ஆயிரம் ரூபாயை அரசாங்கத்துக்குக் செலுத்தி விட்டு, 55 ஆயிரம் ரூபாயை மட்டுமே எடுத்துச்செல்லும் நிலைமை ஏற்படும்.
உடல்நலத்துக்கு தீங்கானது என்று பகிரங்கமாக அறிவிக்கப்பட்ட சிகரெட், மது மீது 100 சதவிகிதம் விரி விதிக்கட்டும்... எங்களுக்கு ஏன் விதிக்கிறார்கள்? கடந்த 2.7.2012 தேதியில் இருந்தே சேவை வரி அமலுக்கு வந்துவிட்டது. அன்றைய தினத்தில் இருந்து நடிகர்கள் இதுவரை வாங்கிய சம்பளத்துக்கும் வரி செலுத்த வேண்டிய இக்கட்டான சூழ்நிலை.
டாக்டர், வக்கீல், லாரி உரிமையாளர்களுக்கு முதலில் சேவை வரி விதித்தனர். 'நாங்கள் மக்களுக்கு சேவை செய்கிறோம்... எங்களுக்கு எதற்கு சேவை வரி?’ என்று அரசை எதிர்த்துப் போராடினர். உடனே, அரசாங்கம் அவர்களுக்குச் சேவை வரியை நீக்கியது. அதுபோல, சினிமாத் துறையினர் மீது விதித்திருக்கும் சேவை வரியையும் அரசு நீக்க வேண்டும். எங்கள் போராட்டத்தில் கலந்துகொள்ள தியேட்டர்கள் உரிமையாளர்களையும் அழைத்து இருக்கிறோம். சேவை வரியை நீக்கச் சொல்லி ஜனவரி 7-ம் தேதி ஒட்டுமொத்த தமிழ் சினிமா உலகமும் சேர்ந்து உண்ணாவிரதம் இருக்கப்போகிறோம்'' என்று கொதித்தார்.
சினிமா துறையினருக்கு விதிக்கப்பட்ட வரி குறித்து, சேவை வரித்துறை சென்னை மண்டல கமிஷனர் பெரியசாமியிடம் விளக்கம் கேட்டோம்.
''இப்போது புதிதாக எதுவும் விதிக்கவில்லை. கடந்த ஆண்டு பட்ஜெட்டிலேயே சேவை வரி விதிக்கப்பட்டது. இதைஎதிர்த்து டாக்டர்கள், வக் கீல்கள், லாரி உரிமையாளர்கள் போராடியது உண்மை. ஆனால், டாக்டர்களுக்கு மட்டும்தான் சேவை வரி தளர்த்தப்பட்டது. வக்கீல்களுக்கான வரியை அவர்கள் வாதாடும் நிறுவனமே செலுத்தி விடுகிறது. அதுபோல் லாரி உரிமையாளர்களுக்கான வரியை, சரக்கு பெற்றுக் கொள்பவர் செலுத்துகிறார்.
நடிகர்களுக்கு மட்டுமா, ஏர்போர்ட், ரயில்வே டிக்கெட் என எல்லாவற்றுக்கும் சேவை வரி விதிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த ஜூலை மாதமே சினிமா சேவை வரி அமலாகி விட்டது. பாலிவுட் நட்சத்திரங்கள் அமிதாப், சல்மான்கான் போன்றவர்கள் சரியாக சேவை வரியைக் செலுத்துகிறார்கள். அது மட்டுமல்ல... தனியார் நிறுவனங்களின் பிராண்ட் அம்பாசிடர்களாக இருக்கும் தமிழ் நடிகர், நடிகைகள் எல்லாம் கடந்த ஐந்து வருடங்களாகவே சேவை வரி செலுத்துகிறார்கள். சினிமாத் துறையினர் மீதான சேவை வரியை ரத்துசெய்வது குறித்துப் பரிசீலிக்க வேண்டியது நாடாளுமன்றம்தான்'' என்றார்.
சினிமாத் துறையினர் மீது சேவை வரி என்ற பிரம்மாஸ்திரத்தை ஏவி இருக்கும் நிதிஅமைச்சர் ப.சிதம்பரத்தின் நூல் வெளியீட்டு விழாவில், ரஜினியும் கமலும் கலந்துகொண்டதில், சினிமா உலகத்துக்கு கடும் வருத்தம். இருவரும் விழாவைப் புறக்கணித்து இருந்தால்,  சேவை வரி விதிப்பில் நிச்சயம் மாற்றம் ஏற்பட்டு இருக்கும் என்று புலம்புகிறார்கள்.
அவர்கள் இருவரையும் உண்ணாவிரதத்துக்கு அழைத்து வரும் முயற்சிகள் தொடங்கி உள்ளன!

No comments:

Post a Comment