Tuesday, September 30, 2014

மிஸ்டர் கழுகு: 'மிஸ்டர் விசுவாசம்!'

''செப்டம்பர் மாதம் செப்​டம்பர் மாதம்
 வாழ்வின் துன்பத்தைத் தொலைத்து விட்டோம்
அக்டோபர் மாதம் அக்டோபர் மாதம்
வாழ்வின் இன்பத்தைத் தொலைத்து விட்டோம்'' - என்று பாடியபடியே ரீ-என்ட்ரி கொடுத்தார் கழுகார்!
''இருக்கிற டென்ஷன்ல என்ன பாட்டு? அ.தி.மு.க  தலைமைக் கழகத்துக்குப் போனதை ஆரம்பியும்'' என்று நாம் அவசரம் காட்டினோம்.
''நான் பாடின பாட்டுக்கும் சொல்லப்​போற விஷயத்துக்கும் சம்பந்தம் இருக்கு. பன்னீருக்கு ரெண்டாவது லட்டு தின்ன சான்ஸ் கிடைச்சிருக்கு. முதல்வர் நாற்காலி என்கிற முள் கிரீடத்தை சூட்டிக்கொள்ளப் போகும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அக்டோபர் மாதம் வந்தாலே அதிரடித் திருப்பம் நடக்கும்.
2001 சட்டசபைத் தேர்தலில் இரண்டா​வது முறையாக ஆட்சியில் அ.தி.மு.க அமர்ந்த நேரம் அது. முதல் முறையாக எம்.எல்.ஏ ஆன ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் சான்ஸ் அடித்தது அப்போதுதான். சட்டசபை நடைமுறை பற்றியே அப்போது அறியாதவராக முதல் வரிசையில் கடைசி ஆளாக அமர்ந்திருந்தார் அவர். துறை ரீதியான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்தபோது வருவாய்த் துறை அமைச்சரான ஓ.பன்னீர்செல்வம் 'மானிய கோரிக்கை’ என்பதைக்கூட சரியாக உச்சரிக்க முடியாமல் 'மாணிக்க கோரிக்கை’ என சொல்லிக் கொண்டிருந்தபோது அந்த வரிசையில் முதல் ஆளாக அமர்ந்திருந்த ஜெயலலிதா புன்னகைத்தபடியே இருந்தார். 2001 ஜூன் மாதத்தில் அரங்கேறியது இந்தக் காட்சி. ஆனால், அதே ஆண்டு செப்டம்பரிலோ ஓ.பன்னீர்செல்வம் தமிழ்நாட்டின் முதல்வர்.''
 
''ம்!''
''டான்சி வழக்கில் ஜெயலலிதா தண்டனை பெற்றதால் 2001-ல் ஜெயலலிதா முதல்வராகத் தொடர முடியாமல் போனது. 2001 செப்டம்பர் முதல் 2002 மார்ச் வரை ஓ.பன்னீர்செல்வம் முதல் அமைச்சராக பதவி வகித்தார். ஜெயலலிதா விருப்பப்படி நடந்து கொண்டார். அந்தப் பணிவுக்கும் விசுவாசத்துக்கும்தான் இப்போது இரண்டாவது சான்ஸ் அவருக்குத் தரப்பட்டது. கடந்த முறை அவர் பெயரை டிக் அடித்தது சசிகலா. ஆனால், இப்போது டிக் அடித்தது ஜெயலலிதா. 26-ம் தேதி இரவு இரண்டு ஃபைல்களை ஜெயலலிதா தயார் செய்தார். ஒன்று 'ஏ’ ஃபைல். இன்னொன்று 'பி’ ஃபைல். ஏ ஃபைலில் இருந்த பெயர் செந்தில் பாலாஜி. பி ஃபைலில் இருந்த பெயர் ஓ.பன்னீர்செல்வம்.''
''அப்படியா?''
''பன்னீர்செல்வத்தை முன்பு தேர்வு செய்தபோது, 'இப்போது ஏற்பட்டிருக்கிற சூழ்நிலை உங்களுக்கெல்லாம் தெரியும். புதிதாக ஒரு முதல்வரைத் தற்காலிகமாகத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நான் ஒரு பெயரைக் குறிப்பிடுகிறேன். அதற்கு ஒப்புதல் தருவீர்கள் என்ற நம்பிக்கையோடுதான் நான் அவரை தேர்ந்தெடுத்திருக்கிறேன்’ என்று சொன்னார் ஜெயலலிதா. அப்படிச் சொல்ல முடியாத சூழ்நிலையில் சிறையில் இருக்கிறார் இப்போது!''
''முதல்வர் பதவிக்குப் பலரின் பெயரும் அடிபட்டதே?''
''ம்... ஓ.பன்னீர்செல்வம், செந்தில் பாலாஜி, ராஜேந்திர பாலாஜி, ஷீலா பாலகிருஷ்ணன் ஆகிய பெயர்கள் சொல்லப்பட்டன. பரப்பன அக்ரஹாரா கோர்ட்டில் இருந்து இரண்டு முறை வெளியே வந்த ஜெயலலிதா சந்தித்தது ஓ.பன்னீர்செல்வத்தைத்தான். தண்டனை அறிவிக்கப்பட்டு ஜெயிலுக்குக் கிளம்புவதற்கு முன்பு பன்னீர்செல்வத்திடம், 'எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு விரைவில் புதிய முதல்வர் பதவியேற்பு விழா நடக்க வேண்டும். நீங்கள்தான் பொறுப்பாக எல்லாவற்றையும் கவனித்துக்கொள்ள வேண்டும்’ என்று சொன்னதாகச் சொல்கிறார்கள். தீர்ப்புக்கு மறுநாள் காலை ஜெயலலிதாவை ஜெயிலில் சந்தித்துவிட்டு சென்னைக்கு வரக் காத்திருந்தார் பன்னீர்செல்வம். ஆனால், அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பார்வையாளர்கள் யாருக்கும் அனுமதி இல்லை என்று மறுத்துவிட்டதாம் சிறை நிர்வாகம். அதன் பிறகே அங்கிருந்து அவசரமாக சென்னைக்குக் கிளம்பியிருக்கிறார். அவர் அங்கிருந்து கிளம்பும்போதே எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்துக்கான ஏற்பாடுகள் சென்னையில் தயாரானது.''
''இது மற்ற அமைச்சர்களுக்கு முன்கூட்டியே தெரியுமா?''
''நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு மட்டும் தெரியுமாம். அவர்கள்தான் சென்னையில் எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்துக்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார்கள். தலைமைக் கழகத்துக்கு ஓ.பி.எஸ் வந்தபோது வெளியே கூடியிருந்த பலரும் அவருக்குக் கைகொடுத்து வாழ்த்துச் சொன்னார்கள். மகளிர் அணியைச் சேர்ந்தவர்களோ, 'அம்மா...அம்மா!’ என்று கதறியழுதனர். அதில் உச்சகட்டமாக அமைச்சர் கோகுல இந்திரா தலைவிரி கோலமாக தலையிலடித்துக்கொண்டு கண்ணீர்விட்டுக் கதறினார். எந்த ரியாக்ஷனும் காட்டாமல் கட்சி அலுவலகத்துக்குள் போனார் ஓ.பி.எஸ் கூட்டம் தொடங்கியதும் முதலில் நத்தம் விஸ்வநாதன்தான் ஆரம்பித்தார். ''இப்படியொரு இக்கட்டான சூழ்நிலையில் நாம் புதிய முதல்வரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஆனாலும் அம்மாதான் நமக்கு எப்போதும் நிரந்தர முதல்வர். என்றாலும் நம் இதயத்தில் எல்லாம் அவர்தான் நிறைந்திருக்கிறார். அவரின் பொற்பாதங்களை வணங்கி, அவர் இருக்கும் திசை நோக்கி வணங்கி முதல்வர் பதவிக்கு புரட்சித்தலைவி அம்மாவின் உத்தரவுப்படி கட்சியின் பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களை முன்மொழிகிறேன்!’ என்று சொல்லும்போது கதறி அழுதார். அதை அவைத்தலைவர் மதுசூதனன் வழிமொழிந்தார். மதுசூதனனும் கண் கலங்க... அங்கிருந்த பெண் எம்.எல்.ஏ-க்கள் எல்லாம், 'அம்மா... அம்மா...’ என்றபடி கதறியழ ஆரம்பித்துவிட்டனர். இதில் தே.மு.தி.க.வின் அதிருப்தி எம்.எல்.ஏ-க்களான மா.ஃபா பாண்டியராஜன், மைக்கேல் ராயப்பன், சுந்தர்ராஜன் உள்ளிட்ட ஆறுபேர் வந்தார்கள். இவர்களிடம் கையெழுத்து பெறப்பட வில்லை. ஒரு முதல்வரைத் தேர்ந்தெடுக்கும் கூட்டம் இந்த அளவுக்கு சோகமாக நடந்தது இதுதான் முதல் முறையாக இருக்கும்.''
''பன்னீரின் ரியாக்ஷன்?''
''அந்த ஹாலில் மாட்டப்பட்டிருந்த ஜெயலலிதாவின் படத்தை நோக்கி கும்பிட்டவரின் கண்களிலும் கண்ணீர் எட்டிப்பார்த்தது. சோகம் அப்பிய முகத்துடன் எல்லோரையும் பார்த்து வணக்கம் சொன்னார் பன்னீர்செல்வம். 4.30 மணிக்கு ராகு காலம் தொடங்குவதால் அதற்கு முன்பே அவசரமாகக் கூட்டத்தை முடித்தார்கள். ஆறு மணிக்கு கவர்னர் மாளிகையில் அப்பாயின்ட்மென்ட் வாங்கியிருந்தனர். கூட்டம் முடிந்ததும் உடனே கவர்னர் மாளிகைக்குக் கிளம்பிச் செல்லவில்லை. ஆறு மணிக்கு ராகு காலம் முடிந்த பிறகே கவர்னர் மாளிகைக்குப் போனார்கள். அதன் பிறகும் அ.தி.மு.க அலுவலகத்தில் கூட்டம் குறையவில்லை.''
''பெங்களூரில் ஜெயலலிதாவைப் பார்க்க ஷீலா பாலகிருஷ்ணன் சென்றிருந்தாரே?''
''ஞாயிற்றுக்கிழமை காலை ஷீலா பாலகிருஷ்ணன், வெங்கடரமணன், ஷீலா ப்ரியா, ராம்மோகன் ராவ் ஆகிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பெங்களூரு சென்றிருந்தனர். ஆனால், ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் சிறைத் துறை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. 'நான் தமிழக அரசின் தலைமை ஆலோசகர். எனக்குச் சிறப்பு அனுமதி வழங்க வேண்டும்!’ என்று ஷீலா பாலகிருஷ்ணன் கர்நாடகாவில் உள்ள முக்கிய அதிகாரிகள் பலருடனும் பேசினார். ஆனால், எந்தப் பிரயோஜனமும் இல்லை. காலையில் இருந்து மாலை வரை நால்வரும் பல்வேறு முயற்சிகளைச் செய்தும் ஜெயலலிதாவை சந்திக்க முடியவில்லை. சிறை வாசலிலேயே காத்திருந்தவர்கள் ஆறு மணிக்குப் பிறகுதான் அங்கிருந்து திரும்பியிருக்கிறார்கள். பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தாலும் அரசின் சிறப்பு ஆலோசகராக ஷீலா பாலகிருஷ்ணன் செயல்படுவார் என்று சொல்கிறார்கள். இது சம்பந்தமாக பன்னீர்செல்வத்துக்கு ஜெயலலிதா அறிவுறுத்தியிருப்பதாகவும் சொல்கிறார்கள். பெங்களூரில் தங்கி ஜெயலலிதாவை சந்தித்த பிறகே ஷீலா சென்னை திரும்புவாராம்!''
''பதவியேற்பு எப்போது?''
''திங்கள்கிழமை அன்று பதவியேற்பு விழா இருக்கும். 29-ம் தேதி சென்னையில் கவர்னர் கலந்து கொள்ளும் ஒரு விழா இருந்தது. திடீரென அதனை ரத்து செய்துவிட்டார் கவர்னர். 'நாளை பதவியேற்பு விழா இருக்கிறது’ என்று அதற்குக் காரணம் சொல்லப்பட்டதாம். திங்கள்கிழமை பன்னீர் பதவியேற்கும்போது கர்நாடக உயர் நீதிமன்றப் பதிவாளரைச் சந்திக்க ஜெயலலிதாவின் வக்கீல்கள் முயற்சி எடுத்து வருகிறார்கள். அக்டோபர் 5 வரைக்கும் அங்கு தசரா விடுமுறை என்பதால் பெயில் சம்பிரதாயங்கள் அதுவரை தொடங்குவதும் சந்தேகம்தான்!'' என்று சொல்லிவிட்டுப் பறந்தார் கழுகார்!

No comments:

Post a Comment