Friday, September 26, 2014

குறட்டை தானேன்னு நினைக்காதீங்க…

சாதாரண குறட்டை தானே என, அலட்சியம் வேண்டாம்; அது, உங்களை சோம்பேறியாக்கி, செயல்திறனை குறைத்து விடும். உங்களால் மற்றவர்களுக்கும், பல நோய் பாதிப்புகளை உருவாக்கும்’ என்கிறார், சென்னை அரசு பொது மருத்துவமனை, காது, மூக்கு, தொண்டை சிகிச்சை நிபுணர் கணநாதன். குறட்டை தொடர்பான கேள்விகளுக்கு, அவர் அளித்த பதில்கள் விவரம்:
1குறட்டை ஏன் வருகிறது? இது நோய் தானா?

மூக்கு வழியாக சுவாசிக்கிறோம். உடலுக்கு தேவையான ஆக்சிஜனை உள்ளே செலுத்தி, கார்பன் – டை – ஆக்சைடை வெளியேற்றுகிறோம். சுவாசிக்கும்போது, காற்று செல்லும் வழியில் அடைப்பு ஏற்படுவதால், குறட்டை வருகிறது. இது ஒரு நோய் தான்; எந்த சந்தேகமும் வேண்டாம். மூக்கில் சதை வீக்கம், மூக்குத்தண்டு வளைவு, மூக்கை ஒட்டிய, தாடைப் பகுதிகளில் ஏற்படும் தசை வீக்கம் போன்ற காரணங்கள், குறட்டை வர வாய்ப்புள்ளது.
2. ஆண்களுக்கு மட்டுமே குறட்டை வரும் என்பது சரியா?
‘ஆண்களுக்கு மட்டும் தான் குறட்டை வரும்; பெண்களுக்கு வராது. குண்டாக இருந்தால் தான் குறட்டை வரும்; ஒல்லியாக இருப்பவர்களுக்கு வராது’ என்ற, எண்ணம் பரவலாக உள்ளது. இது முற்றிலும் தவறு. இரண்டு தரப்பினருக்கும் குறட்டை வர வாய்ப்புள்ளது. ஆண் – பெண், குண்டு – ஒல்லி என்ற பாகுபாடெல்லாம் குறட்டைக்கு கிடையாது.
3. குறட்டை விடுவோருக்கு, திடீரென மூச்சுத்திணறல் ஏற்படுவது ஏன்?
மூக்கில் காற்று உட்புகும் முன்புற பகுதியில் தசை வீக்கம், நாக்கின் பின் பகுதியில் வீக்கம், நாக்கு அகலமாக இருத்தல், தாடை, தொண்டை பகுதியில் கொழுப்பு சேர்ந்து, தசையில் ஏற்படும் தளர்ச்சியாலும் மூச்சுக் குழாயில் அடைப்பு ஏற்படுகிறது. காற்று எளிதாக செல்ல முடியாமல் தடை ஏற்படுவதால், உடலுக்குள் செல்லும் ஆக்சிஜன் அளவு குறையும். இதனால், சிலர், தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு, பதறி அடித்து எழுவர். இது, முற்றிய நிலை.
4. குறட்டை விடுவோருக்கு எந்த மாதிரியான பாதிப்பு வரும்?
குறட்டை விடுவோருக்கு ஆரம்பத்தில் லேசான சத்தம் வரும்; அடுத்து, பக்கத்து அறையில் இருப்போரையும் பாதிக்கும் வகையில், சத்தம் அதிகமாகும். அடுத்த நிலையில் தான், மூச்சுத்திணறல் ஏற்படும் நிலை வரும். இதுதான், குறட்டை பாதிப்பின் முற்றிய நிலை.
இதனால், நுரையீரல் பாதிக்கும், இதய நோய்கள் வரும். படிப்படியாக உடல் உறுப்புகளின் செயல்பாடு குறைய வாய்ப்புள்ளது.
5. குறட்டைக்கும், அவர்களின் செயல்திறனுக்கும் ஏதாவது தொடர்பு உண்டா?
குறட்டை விடுவோர், காலையில் எழுந்ததும் சோர்வுடன் காணப்படுவர். சுறுசுறுப்பு இன்றி, மந்தமாக இருப்பர். சிந்தனை திறன் குறையும். இது, செயல்திறனை நிச்சயம் பாதிக்கும். திறம்பட செயல்பட முடியாமல், பணியில் பின்னடைவு ஏற்படும்; அலட்சியமாக இருந்தால் வேலை இழப்புக்கும் வழி வகுத்துவிடும். இத்தகையோர், உட்கார்ந்த இடத்திலேயே தூங்கி விழுவர். டிரைவர்களாக இருந்தால், விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால் தான், குறட்டை விடுவோரை, ‘பைலட்’களாக எடுப்பதில்லை என, விமானத் துறையில் கொள்கை முடிவே உள்ளது.
6. குறட்டை சிக்கலுக்கு தீர்வு காண என்ன வழி?
குறட்டை அளவைக் கண்காணித்து, போதிய அளவில், ஆக்சிஜன் செல்வதை உறுதி செய்ய வேண்டும். ‘எண்டோஸ்கோபி’ செய்து, மூக்கு, நாக்கு, தொண்டை பகுதிகளில் பரிசோதித்து, எதனால் அடைப்பு ஏற்படுகிறது என, அறிய வேண்டும். நாக்கு அகலமாக, தடிமனாக இருந்தாலும் சிக்கல் வரும். மூக்கு அடைப்பு நீக்கல், மேல் தாடைப் பகுதியை வெளியிலும் நீட்டுதல், நாக்கின் அளவை சிறிதாக்குதல், கழுத்தின் தசைப் பகுதியை இறுகச் செய்யும் அறுவை சிகிச்சைகள் செய்வதால் குறட்டை பிரச்னை தீரும்.
7. இசைக்கருவிகள் வாசித்தால் குறட்டை போகும் என்கின்றனரே உண்மையா?
தொண்டையின் சதைப்பகுதியை இறுகச் செய்ய மூச்சுப் பயிற்சி அவசியம். இதற்காக, ‘டெக்ரிடோ’ என்ற இசைக்கருவி வந்து விட்டது. மூக்கு வழியாக காற்றை இழுத்து, வாய் வழியாக ஊத வேண்டும். பெரிதாக இருந்த இசைக்கருவி, தற்போது சிறிய அளவில் வடிவமைக்கப்பட்டு, வெளிநாடுகளில் புழக்கத்தில் உள்ளது; இந்தியாவிற்கு இன்னும் வரவில்லை. யோகாவில் இதற்கான
பிரத்யேக பயிற்சிகள் உள்ளன.
8. சிக்கலின்றி தூங்க பிரத்யேக இயந்திரம் வந்துள்ளதாக கூறுகின்றனரே?
உண்மை தான். ‘ஸ்லீப்பிங் மெஷின்’ என்று பெயர். சூட்கேஸ் வடிவில் இருக்கும்; தானியங்கி வசதியுடன் கூடிய கருவி, 50 ஆயிரம் ரூபாய் வரையில் கிடைக்கிறது. தடையின்றி தேவையான ஆக்சிஜனை உடலுக்குள் செலுத்தும் என்பதால், நிம்மதியாக தூங்கலாம்.
இதை பயன்படுத்துவதால், குறட்டை பிரச்னை தீர்ந்து விடாது; தூக்கத்திற்கான தற்காலிக தீர்வு தான். ஒன்றிரண்டு ஆண்டுகள் பயன்படுத்தலாம். அதற்குள், உரிய பயிற்சிகள் செய்து உடல் எடை குறைத்தல், தாடைப் பகுதி தசைகளை இறுகச் செய்தல் போன்ற குறட்டையைப் போக்கும் முயற்சிகள் எடுப்பது அவசியம்.
9. குறட்டை விடுவோர், நிம்மதியாக தூங்குவர் என, கூறுவது சரியா? குறட்டையால் மற்றவர்களுக்கு பாதிப்பு வருமா?
‘குறட்டை விட்டுகிட்டு எப்படி நிம்மதியா தூங்குறான் பாரு…’ கிராமங்களில் கூறுவது உண்டு. உண்மையில் குறட்டை விடுவோர், நிம்மதியாக தூங்குவதில்லை; மற்றவர்களையும் சரியாக தூங்க விடுவதில்லை. குறட்டை விடுவோரின் அருகில் படுப்போருக்கு, ரத்த அழுத்த பாதிப்பு வரும். இந்த பாதிப்பு நாளடைவில், இதய நோய்கள் வரை கொண்டு செல்லவும் வாய்ப்புள்ளது. பொதுவாக, உரிய நேரத்தில் அளவான சாப்பாடு, எளிதான உடற்பயிற்சி மற்றும் மூச்சுப் பயிற்சிகள் செய்வதோடு, உடல் பருமன் அதிகரிக்காமல் பார்த்துக் கொண்டால், குறட்டை பிரச்னை வராமல் தப்பலாம்.
டாக்டர். ஜி.கணநாதன்,
இயக்குனர், காது, மூக்கு, தொண்டை பிரிவு,
ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை, சென்னை.

No comments:

Post a Comment