Thursday, September 25, 2014

மிஸ்டர் கழுகு: வருமான வரி வலை!

கழுகார் வரும்போதே கத்தையாக ஆவ​ணங்களை எடுத்து​வந்தார். ”பெங்களூருவில் இருந்து​தான் வருகிறீரா?” என்று எடுத்துக் கொடுத்தோம். ‘ஆமாம்’ என்பதற்கு அடையாளமாகத் தலையாட்டியபடி தொடங்கினார் கழுகார்.
”சொத்துக் குவிப்பு வழக்கின் மீதான தீர்ப்பு 27-ம் தேதி அளிக்கப்பட இருக்கிறது. இதையொட்டி ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் அ.தி.மு.க தொண்டர்கள் பெங்​களூருவுக்கு 26-ம் தேதி இரவே வந்துவிட வேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறார்கள். அதனால் பெங்களூருவில் உள்ள அனைத்து ஹோட்டல்களிலும் ரூம்கள் புக் ஆகிவிட்டன. இதையெல்லம் உளவுத் துறை மூலம் கண்காணித்த கர்நாடக காவல் துறை தமிழக காவல் துறை பாணியை கையாளப் போகிறதாம். அதாவது 25-ம் தேதியில் இருந்தே தமிழ்நாடு பதிவுகளில் வரும் வாடகை வாகனங்கள் பெங்களூருக்குள் நுழையத் தடை விதிக்கலாம் என முடிவு செய்திருக்கிறார்கள். கர்நாடக எல்லையிலேயே நிறுத்தி விடவும் முடிவு செய்திருக்கிறார்கள். ஜெயலலிதா ஏற்கெனவே கர்நாடக அரசு மீது அதிருப்தியில் இருக்கிறார். இந்த நிலையில் பாதுகாப்பில் ஏதாவது குறைபாடு ஏற்பட்டுவிட்டால் கர்நாடக அரசைக் குறை சொல்லி விடுவார். அதனால் பாதுகாப்பு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறாராம் கர்நாடக முதல்வர் சித்தராமையா. ஜெயலலிதா பாதுகாப்பு டீமுக்குத் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த பெங்களூரு குற்றப் பிரிவு கூடுதல் போலீஸ் கமிஷனர் ஹரிசேகரனை நியமித்துள்ளார்கள்!”
”அப்படியா?”
”ஹரிசேகரன், நம்முடைய அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். காமராஜர் காலத்தில் அமைச்சராக இருந்த கக்கனின் பேத்தியை திருமணம் செய்திருக்கிறார். தமிழ் இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடு உடையவர். இவர்தான் பெங்களூருக்கு வரும் ஜெயலலிதாவுக்குப் பாதுகாப்பு கொடுக்கும் கர்நாடக காவல் துறை டீமுக்கு தலைவர். இவர் தலைமையில் கர்நாடக காவல் துறை டீம் 22-ம் தேதி அன்று சென்னைக்கு வந்து இங்குள்ள காவல் துறை உயர் அதிகாரிகளிடம் பாதுகாப்பு சம்பந்தமாக ஆலோசனை செய்துவிட்டுச் சென்றுள்ளார். இது நல்லிணக்க பாதுகாப்பு விதிமுறையாம். மூன்று விதமான பாதுகாப்பைப் பலப்படுத்த இருக்கிறார்கள். சி.எம் செக்யூரிட்டி, ரூட் செக்யூரிட்டி, கோர்ட் செக்யூரிட்டி ஆகியவற்றைச் செய்து கொடுப்பார்கள். இதுதவிர பெருமளவில் மக்கள் வர இருப்பதால் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், அசம்பாவிதங்கள் எதுவும் நடந்துவிடாமல் இருக்கவும் அதிரடி ஆயுதப்​படை போலீஸார்களும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், இன்னும் எவ்வளவு காவலர்களை இந்தப் பணியில் அமர்த்துவது என முடிவு எடுக்கவில்லை என்கிறார்கள்!”
”ஓஹோ! உமது சிறகுகளுக்கு இடையில் உள்ள ஆவணங்களை இன்னும் அவிழ்க்கவில்லையே!”
”இவை சொத்துக் குவிப்பு வழக்கின் ஆவணங்கள் அல்ல. சென்னையில் நடக்கும் வருமான வரி தாக்கல்  செலுத்தாத வழக்கின் ஆவணங்கள். அக்டோபர் 1-ம் தேதி, சென்னை எழும்பூரில் உள்ள பொருளாதாரக் குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் அவர் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா தமிழகத்தின் முதலமைச்சராக 1991 முதல் 1996 வரை இருந்தபோது, மூன்று ஆண்டுகளுக்கு அவர் வருமான வரி தாக்கல் செய்யவில்லை. 1993 காலகட்டத்தில் ஜெயலலிதா தன்னுடைய வருமானத்துக்கும், அதுபோல், 1992 மற்றும் 1994 ஆண்டுகளுக்கு ஜெயலலிதாவும் சசிகலாவும் பங்குதாரர்களாக இருந்த ஜெ-சசி என்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கும் வருமான வரித்தாக்கல் செய்யவில்லை. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தவரை வருமானவரித் துறை இதைக் கையில் எடுக்கவில்லை. ஆனால், 1996-ல் ஆட்சி மாறியதும் காட்சிகள் மாறின. 1997-ம் ஆண்டு, மத்திய அரசின் வருமானவரித் துறை இந்தப் பிரச்னையைக் கையில் எடுத்தது. சென்னை எழும்பூரில் உள்ள முதலாவது பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. அந்த வழக்கில் பதில் மனுத்தாக்கல் செய்த ஜெயலலிதா, தான் முதலமைச்சராக இருந்த காலத்தில், ஒரு ரூபாய் மட்டும் ஊதியமாகப் பெற்றதாகவும், அதுதவிர்த்து தனக்கு வேறு எந்த வருமானமும் இல்லை. அதுபோல், ஜெ-சசி என்டர்பிரைசஸ் நிறுவனத்தில் இருந்தும் எந்த வருமானமும் தங்களுக்கு வரவில்லை. வருமானமே இல்லாதபோது வருமானவரி செலுத்தவும் தேவையில்லை என்றும் தன்னுடைய பதில் மனுவில் குறிப்பிட்டு இருந்தார்!”
”ம்!”
”அத்துடன் கீழ் நீதிமன்றத்தில் வருமான வரித் துறை தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சொல்லி   சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் 2006-ம் ஆண்டு ஜெயலலிதா-சசிகலாவின் மனுக்களை தள்ளுபடி செய்தது. இவர்கள் உச்ச நீதிமன்றம் சென்றனர். அந்த மனு மீதான விசாரணை எட்டு ஆண்டுகள் நடைபெற்றன. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், விக்ரம்ஜித் சென் ஆகியோர், ‘வருமான வரி செலுத்தாமல் இருந்தது தவறு. ஆனால், தங்கள் பக்கம் குற்றம் இல்லையென்று மனுதாரர்கள் கருதினால், அவர்கள் வழக்கை சந்தித்து, விசாரணையில் தாங்கள் குற்றமற்றவர்கள் என்று நிரூபித்துக் கொள்ளட்டும். மாறாக இது விசாரணைக்கே உகந்த வழக்கல்ல என்று சொல்லக் கூடாது. வழக்கு விசாரணையை நான்கு மாதத்துக்குள் எழும்பூர் பொருளாதார குற்றப் பிரிவு நீதிமன்றம் முடிக்க வேண்டும்’ என்று கடந்த ஜனவரி 30-ம் தேதி உத்தரவிட்டனர். உச்ச நீதிமன்றம் விதித்த கெடுவைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம், இந்த வழக்கு எழும்பூர் முதலாவது பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நாடாளுமன்றத் தேர்தலை காரணமாகக் காட்டி, ஜெயலலிதா தரப்பு வழக்கை முடிக்க கூடுதல் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தனர். அதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு கூடுதலாக மூன்று மாதங்கள் வழங்கியது!”
”இப்போதைய நெருக்கடி என்ன?”
”வருமான வரிச் சட்டத்தின்படி, வருமான வரி செலுத்தாதவர்கள் அபராதம் மட்டும் கட்டலாம் என்று விதிமுறை உள்ளது. அதைப் பின்பற்றி, அபராதம் செலுத்துவதற்கு நாங்கள் வருமான வரித் துறையிடம் விண்ணப்பித்துள்ளோம். அவர்கள் அதில் பதில் சொல்லும்வரை வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்து கீழ் நீதிமன்றத்தில் முறையிட்டு இருந்தனர். இதனை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும் என்று ஜெயலலிதா தரப்பு எதிர்பார்த்தது. ஆனால், கடந்த வாரம் நீதிமன்றத்தில் வருமான வரித் துறை இதனை மறுத்துவிட்டது. ‘தாமதமாக வருமான வரி செலுத்துபவர்கள் சிலருக்கு அபராதம் மட்டும் விதிக்கப்படும். ஆனால், அந்தச் சலுகையை எல்லோருக்கும் கொடுக்க முடியாது. வருமான வரி செலுத்தாத குற்றத்துக்கு வழக்குப் போட்டால் எதிர் மனுதாரர்கள் வழக்கை சந்தித்துத்தான் தீரவேண்டும்’ என்று வாதிட்டனர். இதையடுத்து, அக்டோபர் 1-ம் தேதி, இந்த வழக்கில் ஜெயலலிதா சசிகலா ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை எழும்பூர் பொருளாதாரக் குற்றப்பிரிவு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. ‘மத்திய அரசு ஜெயலலிதா மீதான தனது நெருக்கடியைத் தொடங்கிவிட்டது. மத்திய அரசு நினைத்திருந்தால், சலுகை காட்டி அபராதம் செலுத்தச் சொல்லி வழக்கை முடித்திருக்கலாம். ஆனால் வலுக்கட்டாயமாக வழக்கை நடத்த நினைக்கிறார்கள் என்றால் ஏதோ திட்டமிட்டு விட்டார்கள் என்று அர்த்தம்’ என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்!”
”ப.சிதம்பரம் மீதான வலை இறுகி வருவதாகச் சொல்கிறார்களே?”
”2ஜி ஸ்பெக்ட்ரம், ஏர்செல்-மேக்ஸிஸ், சாரதா சிட்பண்ட் நிதி நிறுவனம் ஆகிய சர்ச்சைக்குரிய மூன்று விஷயங்களிலும் ப.சிதம்பரம் தலை உருள்கிறது. ‘2ஜி விவகாரத்தில் நான் தனிப்பட்ட எந்த முடிவும் எடுக்கவில்லை. அன்றைய பிரதமர் மன்மோகன் சிங், நிதிஅமைச்சர் ப.சிதம்பரம் ஆகிய இருவருக்கும் அனைத்தும் தெரியும்’ என்று முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசா சொல்லி வந்தார். நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமியும் இதனைச் சொல்லியிருக்கிறார். இதைத் தொடர்ந்து, ஏர்செல் விவகாரத்திலும் சிதம்பரம் பெயர் அடிபடுகிறது. ஏர்செல் நிறுவனப் பங்குகளை மலேசியாவின் மேக்ஸிஸ் மற்றும் சில நிறுவனங்களும் வாங்கின. ஆனால், அப்படி வாங்கிய நிறுவனங்கள் அனைத்தும் மேக்ஸிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனங்கள் என்ற உண்மை மெல்ல மெல்ல வெளியில் வந்தது. ‘ஏர்செல் நிறுவனத்தின் ஒட்டுமொத்தப் பங்குகளையும் வெவ்வேறு பெயர்களில் மேக்ஸிஸ் நிறுவனமே வாங்கியுள்ளது. இது சட்டப்படி தவறு. இந்த விவகாரத்தில் ஆதாயம் அடைந்ததாகவும் தன் அதிகாரத்தை வரம்புமீறிப் பயன்படுத்தியதாகவும் முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன் மீது சி.பி.ஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ப.சிதம்பரம் வகித்த நிதித் துறைக்குக் கீழ்தான் அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் வருகிறது. அந்த வாரியம்தான் இத்தகைய அந்நியச் செலவாணி தரும் வியாபரத்துக்கு அனுமதி அளிக்கும். அப்படிப் பார்க்கும்போது, இந்திய நிறுவனத்தின் ஒட்டுமொத்த பங்குகளையும் ஒரு வெளிநாட்டு நிறுவனம் பொய்யான தகவல்களைக் கொடுத்து வாங்கியபோது அதில் சிதம்பரம்தான் எந்தக் கேள்வியும் கேட்காமல் கையெழுத்திட்டுள்ளார்’ என்று சொல்கிறார்கள்.”
”இதற்கு ப.சி. தரப்பு பதில் என்ன?”
”இதுபற்றி தன்னிலை விளக்கம் அளித்த சிதம்பரம், ‘அதிகாரிகள் காட்டிய கோப்புகளில் கையெழுத்திட்டேன்’ என்று சொல்லியுள்ளார். அதையும் கடுமையாக விளாசி உள்ள சுவாமி, ‘அதிகாரி எந்தக் கோப்பைக் காட்டினாலும் கையெழுத்துப் போடுவாரா சிதம்பரம்? ஓர் அமைச்சர் பொறுப்பில் இருந்தவர் பேசுகிற பேச்சா இது?’ என்று கொந்தளித்துள்ளார். தற்போது சுவாமி வீசி உள்ள அடுத்த அணுகுண்டு, சிதம்பரத்தையும் அவர் குடும்பத்தையும் கொஞ்சம் அல்ல, நிறையவே பீதியில் ஆழ்த்தி உள்ளது. கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்ட சாரதா குழுமம் 160-க்கும் மேற்பட்ட தொழில்களில் முதலீடு செய்திருந்தது. அந்தக் குழுமம் நிதி நிறுவனமும் தொடங்கியபோது அதற்கு ஏக வரவேற்பு. 12 சதவிகித வட்டி, ஒன்றுக்கு இரண்டாகப் பணம் என்று விளம்பரங்கள் செய்யப்பட்டன. திடீரென ஒருநாள் அந்த நிறுவனம் திவாலாகிவிட்டது. அதன் நிர்வாக இயக்குநர் சுதீப்தா சென் தலைமறைவாகிவிட்டார். காஷ்மீரில் பதுங்கியிருந்த சுகிப்தா சென் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது சிறையில் இருந்தபடி அவர் சி.பி.ஐ-க்கு 18 பக்கக் கடிதம் ஒன்றை எழுதினார். அதில்தான் சிதம்பரத்தின் மனைவி பெயர் வருகிறதாம்!”
”அதில் என்ன இருக்கிறதாம்?”
”நளினி சிதம்பரத்தைப் பற்றிக் அந்தக் கடிதத்தில், ‘முன்னாள் மத்திய அமைச்சர் மதாங் சின்கின் மனைவி பெயர் மனோரஞ்சனா. அவர்கள் பாசிட்டீவ் குருப்ஸ் என்ற நிறுவனத்தை வாங்கச் சொல்லி என்னை வற்புறுத்தினார்கள். அந்த ஒப்பந்​தத்​துக்கு என்னை சம்மதிக்க வைக்க, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் நளினி சிதம்பரத்திடம் மனோரஞ்சனா என்னை அழைத்துச் சென்றார். அப்போது, நளினி சிதம்பரம் என்னிடம் தனியாக ஒரு கோரிக்கை வைத்தார். கௌகாத்தியில் தொலைக்காட்சி சேனல் ஆரம்பிக்க வேண்டும் என்றும் அதற்கு என்னை உதவும்படியும் கேட்டார். முதல் கட்டமாக 42 கோடி ரூபாயை அந்தத் தொழிலில் என்னை முதலீடு செய்ய வற்புறுத்தினார். அத்துடன், அதுதொடர்பான ஆலோசனைகளை தன்னுடைய கன்சல்டன்சியே ஒன்றரை வருடத்துக்கு வழங்கும் என்றும் அதற்குக் கட்டணமாக ஒரு கோடி ரூபாயை அவராகவே நிர்ணயம் செய்துகொண்டார். தவிர, மனோரஞ்சனாவுடன் சேர்ந்து நளினி சிதம்பரம் கொல்கத்தா வந்தபோது எல்லாம் அவர்களுடைய விமானச் செலவுகள், தாஜ் ஹோட்டலில் ஆடம்பர அறைகளில் அவர்கள் தங்கிய செலவுகள் என அனைத்தையும் நான்தான் செய்தேன்’ என்றெல்லாம் இருக்கிறதாம். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் இதன் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. இப்போதுதான் ஆட்சி மாறிவிட்டதே… இதையடுத்து சுறுசுறுப்பான சி.பி.ஐ தற்போது சென்னையில் நளினி சிதம்பரத்தை அவரது வீட்டில் விசாரித்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால், தன்னிடம் சி.பி.ஐ விசாரணை எதுவும் நடக்கவில்லை என்று நளினி சிதம்பரம் தரப்பு மறுப்பும் தெரிவிக்கிறது.”
”மோடி அரசு சூடாக இருக்கிறது என்று சொல்லும்!” என்று நாம் சொன்னபோது தலையசைத்தபடி எழுந்த கழுகார், ”ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பு 27-ம் தேதி பெங்களூரில் சொல்லப்படுவதை பரபரப்புடன் தமிழகம் எதிர்நோக்கி இருக்கும் நிலையில் இந்த வழக்கின் பிதாமகனான சுப்பிரமணியன் சுவாமியும் அன்றைய தினம் பெங்களூரு வருகிறார். ஏற்கெனவே ஒப்புக்கொண்ட கல்வி நிறுவனத்தின் விழா ஒன்றில் கலந்து கொள்ளத்தான் அவர் வருகிறார் என்றாலும் இந்த வழக்கைப் போட்டவர் என்பதால் தீர்ப்பு வாசிக்கப்படும் கோர்ட்டுக்கு வந்தால் எத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இப்போதே பெங்களூரு போலீஸார் முன்னேற்பாடுகளைச் செய்து வருகின்றனர். பெங்களூரு கோர்ட்டுக்கு வருவதை சுப்பிரமணியன் சுவாமி உறுதி செய்யவில்லை என்றாலும் அவர் கோர்ட்டுக்கு வருவார் என்றே எதிர்பார்க்கிறார்கள்” என்பதையும் சொல்லிவிட்டுப் பறந்தார்!
சில நாட்களுக்கு முன்பு நாடாளுமன்றத் துணை சபாநாயகர் தம்பிதுரையை போயஸ் கார்டனுக்கு வரவழைத்து சந்தித்தார் முதல்வர் ஜெயலலிதா. அந்தத் திடீர் சந்திப்பின் பின்னணி பற்றி அ.தி.மு.க வட்டாரத்தில் விசாரித்தபோது அதிரவைக்கும் தகவல்களைச் சொல்கிறார்கள்.
”சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது முதல்வர், முதலில் துணை சபாநாயகர் தம்பிதுரை பெயரை சொல்லிவிட்டுத்தான் அடுத்து தலைமை நீதிபதி மற்றும் அமைச்சர்களின் பெயர்களைச் சொன்னார். அந்த அளவுக்கு உச்சாணியில் இருக்கும் தம்பிதுரை மீது கடும் கோபத்தில் இருக்கிறார் முதல்வர். அதற்குக் காரணம் நாடாளுமன்ற நிலைக் குழு பதவிகளைப் பெறுவதில் அவர் நடத்திய உள்ளடி வேலைகள்தான்!
மைத்ரேயனுக்கு ஒரு முக்கியப் பதவி தரப்படும் சூழ்நிலையில், ‘வெங்கைய நாயுடுவுடன் அவரது அணுகுமுறை சரியாக இல்லை!’ என்று முதல்வரிடம் சொல்லிவிட்டாராம் தம்பிதுரை. இதைத் தொடர்ந்துதான் மைத்ரேயன் பதவி பறிக்கப்பட்டது. சமீபத்தில் முதல்வரை சந்தித்த வெங்கய்ய நாயுடு நடந்த விஷயங்களை முதல்வரிடம் தெளிவுபடுத்தியிருக்கிறார். அதைத் தொடர்ந்துதான் தம்பிதுரை அழைக்கப்பட்டிருக்கிறார். அ.தி.மு.க-வைவிட, குறைந்த எம்.பி-க்களை வைத்திருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ரயில்வே, கப்பல், சுற்றுலா, தரைவழி போக்குவரத்து என வலுவான நிலைக் குழுக்களை எல்லாம் கைப்பற்றிவிட்டது. 19 எம்.பி-க்களை வைத்திருக்கும் பிஜு ஜனதாதளம் பவர் புஃல்லான ஒரு நிலைக் குழுவை வைத்திருக்கிறது. ஆனால், 37 எம்.பி.களை வைத்திருக்கும் அ.தி.மு.க-வுக்கு ஒரே ஒரு நிலைக் குழுதான் என்பது எவ்வளவு பெரிய கொடுமை. இதற்கும் காரணம் தம்பிதுரைதான்” என்று சொல்லும் அவர்கள், ”துணை சபாநாயகர் பதவியோடு அ.தி.மு.க-வுக்கு இரண்டு நிலைக் குழுக்கள் ஒதுக்க முடிவு செய்தது பி.ஜே.பி. அதன்படி ஊரக வளர்ச்சித் துறை, சட்டத் திருத்த ஆய்வுக்குழு என இரண்டு குழுக்கள் தர முடிவானது. அப்படிக் கிடைக்கும் இரண்டு நிலைக் குழுக்களும் மற்றவர்களுக்குத்தான் போகும் என நினைத்தார் தம்பிதுரை. திருவள்ளூர் வேணுகோபாலுக்கும் திருச்சி குமாருக்கும் அந்தப் பதவிகள் கிடைக்கும் என பேச்சு இருந்தது. அவர்களுக்குப் பதவிகள் கிடைத்தால் தன்னுடைய டெல்லி லாபியில் இறக்கம் ஏற்படும் என நினைத்த தம்பிதுரை ஊரக வளர்ச்சித் துறை நிலைக் குழுவை மட்டும் வேணுகோபாலுக்குப் பெற்றுக் கொடுத்திருக்கிறார். இந்த நிலைக் குழுவை ஒதுக்கும் பொறுப்பு நாடாளுமன்ற விவகார குழு அமைச்சர் வெங்கைய நாயுடுவிடம் இருந்தது. இன்னொரு நிலைக் குழுவான சட்டத் திருத்த ஆய்வுக் குழுவை தனக்கே தரும்படி வெங்கைய நாயுடுவிடம் தம்பிதுரை முறையிட்டிருக்கிறார். ‘துணை சபாநாயகராக இருப்பவரே, இந்தக் குழுவுக்கும் தலைவராக இருக்க, விதிகள் இடம் அளிக்கவில்லை’ என்று வெங்கைய நாயுடு  அலுவலகம் சொல்லியிருக்கிறது. தம்பிதுரை வற்புறுத்தி கேட்ட பிறகு நாடாளுமன்றக் கட்சித் தலைவரிடம் கடிதம் வாங்கிக் கொடுங்கள் என சொல்லியிருக்கிறார் நாயுடு. உடனே நாடாளுமன்ற கட்சித் தலைவரான வேணுகோபாலிடம் நிலைக் குழு பதவியை தம்பிதுரைக்கு வழங்குங்கள் எனச் சொல்லி ஒரு கடிதம் தரும்படி கேட்டிருக்கிறார் தம்பிதுரை.  வேணுகோபால் ‘அம்மாவிடம் கேட்டுவிட்டு கடிதம் தருகிறேன்’ எனச் சொல்லி மறுத்துவிட்டார். கடைசியில் அ.தி.மு.க-வுக்குக் கிடைக்க வேண்டிய அந்தக் குழுவை பி.ஜே.பி-யே எடுத்துக் கொண்டது” என்றும் சொல்கிறார்கள். அத்தனை தகவல்களையும் திரட்டிய ஜெயலலிதா, அத்தனைக்கும் காரணம் தம்பிதுரைதான் என்பது தெரிந்து கடும் கோபத்தில் இருப்பதாகவும், அதனால் தம்பிதுரையை துணை சபாநாயகர் பதவியில் வாபஸ் வாங்கச் சொல்லலாம் என்றும் பேச்சு அடிபடுகிறது. விரைவில் தம்பிதுரை வசம்  உள்ள கட்சியின் கொ.ப.செ பதவி பறிக்கப்படும் என்று பேச்சு கிளம்பியிருக்கிறது.
அரசு ஊழியர்களின் ஆவணங்கள் எரிந்தது!
கோட்டையில் முதல் தளத்தில் பணியாளர் நிர்வாக சீர்திருத்தத் துறையின் அலுவலக வளாகத்தில் 22-ம் தேதி காலை 9 மணிக்கு திடீரென்று கரும்புகை வெளியேறியது. லிஃப்ட் ஆபரேட்டர் முருகன் என்பவர் ஜன்னல் கண்ணாடியை உடைத்து கதவைத் திறந்து விட்டார். தீயணைப்புப் படை வீரர்கள் இரண்டரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். கோட்டையில் வேலை பார்க்கும் 6 ஆயிரம் பணியாளர்கள் பணியில் சேர்ந்தது, அவர்களின் பணி உயர்வு, அரசு ஊழியர்கள் ஒழுங்கு நடவடிக்கை விசாரணை என்று மிக முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்கள் உள்ள துறையில் தீ பற்றியது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. டேபிள்களில் இருந்த ஃபைல்கள் முற்றிலுமாக எரிந்து நாசமாகிவிட்டன. பீரோக்களில் இருந்த ஆவணங்கள் பாதுகாப்பாக இருப்பதாக சொன்னாலும் அவையும் தீயணைப்பு போலீஸார் பீய்ச்சி அடித்த தண்ணீரில் சேதமடைந்துவிட்டன என்கிறார்கள். தரம் குறைந்த யு.பி.எஸ் இணைப்பில் ஏற்பட்ட மின்கசிவே தீ விபத்துக்குக் காரணம் என்று சொல்கிறார்கள்.

No comments:

Post a Comment