Wednesday, October 15, 2014

மிஸ்டர் கழுகு: பயம் பயம் பன்னீர் பயம்!

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் ஜெயலலிதா பற்றிய தகவல்களுடன் பறந்துவந்து நம்முன் ஆஜரானார் கழுகார்.
”பெங்களூரு காட்சிகளை ஒவ்வொன்றாகச் சொல்ல ஆரம்பிக்கிறேன். சொத்துக் குவிப்பு வழக்கில் உள்ளே இருக்கும் சுதாகரனைப் பார்க்க அவரது மனைவி சத்தியலட்சுமி, மகன் விவேபார்கோ, மகள் ஹரிதா, மாமனார் நாராயணசாமி, மாமியார் சாந்தி ஆகியோர் பெங்களூரு வந்திருந்தார்கள். சாந்தி, சிவாஜி கணேசனின் மகள். இவரோடு சத்தியலட்சுமியின் உறவினர்கள் 15 பேருக்கும் மேற்பட்டோர் இரண்டு கார்களில் சுதாகரனைக் காண சிறைக்கு வந்தனர்.”
”இதுதான் முதல் தடவையா?”
”ஆமாம். சுதாகரனைப் பார்க்க அவரது மனைவி சத்தியலட்சுமி வந்திருப்பது சிறை வளாகத்தில் இருப்பவர்களுக்குத் தெரிய வந்ததும் பரபரப்பு பற்றிக்கொண்டது. ‘சிவாஜி ஃபேமிலி’ என்றும் ‘சிவாஜி மகள் இவங்கதானா?’ என்றும் பலரும் சிலாகித்துச் சொல்லிக்கொண்டனர்.
சிறைக்குள் சென்றதும் மகன் விவேபார்​கோவும் மகள் ஹரி​தாவும் தங்கள் தந்தை சுதாகரனைக் கட்டிப்பிடித்து அழுதிருக்கிறார்கள். ‘அழாதீங்க… யாரும் அழ வேண்டாம். எல்லாம் இறைவன் வகுத்த கணக்கு. இதில் இருந்து சீக்கிரத்தில் வெளியே வந்திடுவேன். நீங்க நல்லா படிக்கணும். அம்மாவைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று குழந்தைகளுக்கு ஆறுதல் சொல்லியிருக்கிறார் சுதாகரன். தன் மனைவி சத்தியலட்சுமியைக் கூப்பிட்டுக் காதில் ஏதோ சொல்லியிருக்கிறார். ‘அவுங்களையும் பார்க்கத்தானே வந்திருக்கோம்’ என்று சொல்லியிருக்கிறார் சத்தியலட்சுமி. ‘அவங்க’ என்று சொன்னது சசிகலாவையாம். ஆனால், இந்தக் குடும்பத்தினருக்குள் ஏதோ அதிருப்தி என்பதால் சசிகலாவைச் சந்திக்காமல் திரும்பிவிட்டார்களாம். இதனை அறிந்து சசிகலா அப்செட் ஆகிவிட்டார் என்று சொல்கிறார்கள்.”
”எம்.நடராசன் வந்திருந்தாரே… அவர் சசிகலாவைப் பார்த்தாரா?”
”சசிகலாவைச் சந்தித்துவிட வேண்டும் என்று ஒரு வாரமாக பெங்களூரில் தங்கியிருக்​கிறார் நடராசன். சிறையில் இருந்து எந்தத் தகவலும் வரவில்லை. ஒருமுறை நேரடியாக சிறை வளாகத்துக்கே வந்து காத்திருந்தார். ஆனால், மனுப்போட்டு பார்க்க முயற்சிக்க​​வில்லை. இந்தத் தகவல் சசிகலாவின் வழக்கறிஞர்மூலமாக தகவல் உள்ளே சொல்லப்​பட்டதாம். ‘நடராசனின் உணர்வுகளைச் சசிகலா உணர்ந்திருப்பார். ஆனால், அவரைச் சந்தித்தால் தேவையில்லாத பிரச்னைகள் உருவாகும் என்று சசிகலா நினைத்திருக்கலாம்’ என்று சுற்றி இருக்கும் வழக்கறிஞர்கள் சொல்கிறார்கள்.”
”ஓஹோ!”
”ஜெயலலி​தாவுக்கு செப்டம்பர் 27-ம் தேதி சிறைத் தண்டனை அளிக்கப்பட்டது. அன்று இரவே அவருக்குத் தேவையான ஆடைகள், அவர் பயன்படுத்தும் அனைத்துப் பொருட்களும் ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பெங்களூருக்குக் கொண்டுவரப்பட்டது. அதை சேலம் கோட்டை பாபு என்பவர் காரில் சிறை வளாகத்துக்குக் கொண்டு சென்றார். ஆனால், சிறைத் துறை அதிகாரிகள் அதை உள்ளே கொண்டு செல்ல அனுமதிக்காததால் பெண்கள் சிறை நுழைவு வாயில் எதிரே கேரவேனில் வைத்துள்ளனர். அனைத்துப் பொருட்களோடு ஆடைகளும் அங்குதான் இருக்கிறது. அதை ஜெயலலிதா கேட்கும்போது அவரது பணிப் பெண் ராணி சிறைக்குள் சென்று கொடுத்து வருகிறார். தற்போது வரை தினமும் ஜெயலலிதாவைச் சந்திக்கும் ஒரே நபர் ராணிதான். அதனால் சிறைக்கு வரும் அமைச்சர்கள் சிறைத் துறை நோட்டில் என்ட்ரீ செய்கிறார்களோ இல்லையோ, ராணியின் பார்வையில்பட காத்துக் கிடக்கிறார்கள்.”
”ஜெயலலிதாவின் பி.ஏ பூங்குன்றன் அங்குதான் இருக்கிறாரா?”
”செப்டம்பர் 27-ம் தேதியில் இருந்து சிறை வட்டாரத்திலேயே இருக்கிறார் பூங்குன்றன். அதனால் சரியாகச் சாப்பிடாமல், சரியாகத் தூங்காமல் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதால் பூங்குன்றனின் முகம் தாடியோடு பொலிவு இழந்து காணப்படுகிறது.”
”ஜெயலலிதா எப்படி இருக்கிறாராம்?”
”சிறைத் துறை விதிப்படி ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை அன்று சிறைக் கைதிகளுக்கு பணி குறிப்பிடுவதோடு, அவர்களின் ஹிஸ்டரி கார்டில் உடல் எடையும் குறிப்பிடுவது வழக்கம். இந்த இரண்டு வாரத்தில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நான்கு பேரும் சராசரியாக 3 கிலோ குறைந்திருக்கிறார்கள். ஜெயலலிதா துல்லியமாக 3.650 கிலோ கிராம் எடைக் குறைந்துள்ளதால் சிறைத் துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். அவரின் உடல் எடை சீராக இருக்க மருத்துவ டீமிடம் கடும் முயற்சி எடுத்து வருகிறார்கள்”
”அப்படியா?”
”பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலையில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை கைதிகளைப் பார்க்க அவர்களது குடும்பத்தினரும் உறவினர்களும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மனுப் போட்டு பார்க்க வருவார்கள். பல ஏக்கரில் சிறைச்சாலை இருப்பதால் ஒவ்வொரு கைதிகளிடமும் போய், ‘உங்களைப் பார்க்க உங்கள் குடும்பத்தில் இருந்து வந்திருக்கிறார்கள்’ என்று நேரில் சென்று அழைத்து வர முடியாது என்பதால் ஆடியோமூலம் அவரது பெயர், நம்பர், ஊர், விலாசத்தை மைக்-கில் கூப்பிடுவார்கள். இந்தச் சத்தம் சிறை முழுக்க எதிரொலிக்கிறது. அடிக்கடி இப்படி மைக்-கில் சத்தம் போட்டுக் கூப்பிடுவதால் எப்போதும் சப்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். இந்தச் சப்தம் ஜெயலலிதாவுக்குக் கடும் எரிச்சலை ஏற்படுத்துகிறதாம். அனைத்து இடங்களுக்கும் பொதுவாக ஒலிக்கும் குரல் என்பதால், அதனை எதுவும் செய்ய முடியாது. நாளுக்கு நாள் இதனைச் சகித்து வாழ ஆரம்பித்துவிட்டாராம் ஜெயலலிதா.”
”வெயில் தாங்கமாட்டாரே ஜெயலலிதா… பெங்களூரு க்ளைமெட் எப்படியிருக்கிறது?”
”கடந்த ஒரு வாரமாக பெங்களூரில் இரவு நேரங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் பரப்பன அக்ரஹாரா ஜில்லென்று இருக்கிறது. அதனால் ஓரளவுக்குச் சமாளித்து வருகிறார் என்றும் சொல்கிறார்கள்.”
”பெங்களூரில் ஜெயலலிதாவின் உறவினர்கள் குடும்பங்கள் உண்டே… அவர்கள் யாராவது வந்து பார்த்தார்களா?”
”ஜெயலலிதாவின் தாத்தா ரங்காசாரி​யார் ஸ்ரீரங்கத்தில் இருந்து மைசூருக்கு வந்தவர். வந்த இடத்தில் கர்நாடகாவைச் சேர்ந்த கமலம்மாவைக் திருமணம் செய்துகொண்டார். கமலம்மா உடன்பிறந்தவர்கள் செல்லம்மாள், சீதாம்மாள், கல்யாணம்மாள், சுந்தரம்மாள், ரங்கநாயகியம்மாள் என 5 சகோதரிகளும் ராஜு, கிருஷ்ண ஐயங்கார், துரைசாமி, சம்பத் என 4 சகோதரர்களும் இருக்கிறார்கள். இந்தக் குடும்பத்தில் உள்ள மூத்தவர்கள் இறந்துபோன நிலையில், அவர்களின் குடும்ப வாரிசுகள் இருக்கிறார்கள். அதேபோல ஜெயலலிதாவின் அம்மா சந்தியாவின் உடன்பிறந்த வித்யாவதி உட்பட மூன்று சகோதரிகள் இருக்கிறார்கள். இந்த மொத்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் தற்போது பெங்களூரு ஜெய்நகர் அருகே பசுவனகுடி பகுதியில்  இருக்கிறார்கள். இவர்கள் யாரும் ஜெயலலிதாவுடன் தொடர்பே இல்லாத நிலையில் இருப்பவர்கள்தான்.
கர்நாடக உயர் நீதிமன்ற வழக்கறிஞராக இருக்கும் ஜெயலலிதாவின் உறவினர் ஒருவர் வீட்டில், இவர்களில் முக்கியமானவர்கள் அனைவரும் கூடி, ஜெயலலிதாவின் கைது பற்றியும் மேற்கொண்டு என்ன செய்யலாம்  என்றும் ஆலோசித்து இருக்கிறார்கள். இதில் கலந்துகொண்ட ஜெயலலிதாவின் உறவினர்கள் பலரும் பலவிதமாகப் பேசி இருக்கிறார்கள். ‘நமக்கு எதுக்குத் தேவையில்லாத வேலை’ என்று சிலர் சொல்லியிருக்கிறார்கள். ‘இவ்வளவு நாள் இல்லாத சொந்தங்கள் இப்ப மட்டும் எதற்கு வருகிறீர்கள் என்று எடுத்தெறிந்து பேசுவார்’ என்றும் சிலர் சொல்லியிருக்கிறார்கள்.”
”சொல்லும்!”
”இன்னும் சிலர், ‘அவர் நம்மிடம் தொடர்புகொள்வது இல்லை என்பதற்காக அவருக்கு ஆபத்து வந்தாலும் அதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியுமா? ஒருவருக்கு நல்ல நிலையில் இருக்கும்போது சொந்தங்கள் தேவையில்லை. கஷ்டப்படும்போது அவர்களுக்கு உதவுவதுதான் உண்மையான சொந்தங்களின் வேலை. அவர் நம்மை ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை. அவருக்கு உதவுவதுதான் சரி. அவர் தற்போது ரொம்ப இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறார்’ என்று ஒருவர் சொல்லியிருக்கிறார். சட்ட நிபுணர்கள் ஆலோசனையைப் பெற்று அடுத்தகட்ட செயல்பாடுகளில் இறங்கலாம் என்று இந்த உறவுகள் திட்டமிட்டுள்ளதாம்!”
”சசிகலா?”
”ஜெயலலிதாவின் சொந்தங்கள் இப்படி கூடிப் பேசியதை சிலர் ரசிக்கவில்லை. இந்தத் தகவலை மோப்பம் பிடித்த தமிழக உளவுத் துறையில் இருக்கும் சசிகலாவின் விசுவாசமான அதிகாரிகள் அவருக்குத் தகவல் கொடுத்ததாகவும் சொல்கிறார்கள். ‘எப்படியாவது கூடிய சீக்கிரத்தில் கர்நாடகாவைவிட்டு காலி செய்துவிட வேண்டும் என்று சசிகலா நினைக்கிறார். உச்ச நீதிமன்றத்தில் பெயில் கிடைத்துவிட்டால் உடனே கிளம்பிவிடலாம். இல்லாவிட்டாலும் உடனே தமிழக சிறைக்கோ, இல்லை வேறு மாநில சிறைக்கோ மாற்றம் செய்ய என்ன சட்டத்தில் வழிமுறைகள் இருக்கிறதோ அதை உடனே ஆலோசித்து செய்யுங்கள். இனி கர்நாடகாவில் இருக்கும் ஒவ்வொரு நொடியும் நமக்கு ஆபத்துதான் என்று சசிகலா எச்சரிக்கை செய்திருக்கிறார்’ என்று சொல்கிறார்கள். சிறைக்குள் இருக்கும் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுகாதரன் பற்றிய அப்டேட் தகவல்களை தமிழக அரசுக்குக் கொடுப்பதற்காக வேலூர் சிறையில் இருந்து ஒரு பெண் அதிகாரியையும், புழல் சிறையில் இருந்து ஓர் ஆண் அதிகாரியையும் பரப்பன அக்ரஹாரா சிறையைக் கண்காணிக்கும் பணிக்கு மாற்றி இருக்கிறார்கள்.”
”ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும் என்று சத்தியநாராயணன் என்பவர் மனு போட்டாரே?”
”கடந்த 7-ம் தேதி ஈரோட்டைச் சேர்ந்த சத்தியநாராயணன் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இப்படி ஒரு மனு  போட்டார். அது 10-ம் தேதி கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஹெச்.வகேலா முன்னிலையில் விசாரணைக்கு வர இருந்தது. ஆனால், திடீரென்று சத்தியநாராயணன் அதனை வாபஸ் வாங்கிவிட்டார். ‘அவரை மிரட்டி வாபஸ் வாங்கச் சொன்னார்கள்’ என்றும் சொல்லப்படுகிறது. சத்தியநாராயணன் சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வக்கீல் பாலசுப்பிரமணியம் ஆஜரானார். ‘எங்களை யாரும் மிரட்டவில்லை. மிரட்டவும் முடியாது. நாங்கள் வழக்கறிஞர்கள் எங்களுக்குச் சட்டம் தெரியும். மிரட்டி இருந்தால் அதை நீதிபதியிடம் சொல்லி இருப்போம். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு மேல்முறையீட்டுக்குச் சென்றிருப்பதால், உச்ச நீதிமன்றத்தில் வழக்கை மாற்றிக் கொள்ளலாம் என்பதற்காகத்தான் இந்த மனுவை வாபஸ் பெற்றோம். வாக்களிப்பதோடு மட்டும் மக்களின் கடமை முடிந்து விடுவதில்லை. வாக்களித்த மக்களின் பிரதிநிதியை பாதுகாப்பதும் மக்களின் கடமை. ஆனால், அதைப் புரிந்துகொள்ளாமல் எங்களை விஷக் கிருமிகள் என்று விமர்சித்திருப்பது எங்களுக்கு மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தி உள்ளது’ என்று இந்த பாலசுப்பிரமணியம் சொல்லி வருகிறாராம்.”
”எப்படி இருக்கிறார் புதிய முதல்வர் பன்னீர்செல்வம்?”
”தெனாலி’ கமல் மாதிரி எல்லாம் அவருக்கு பயம் தான்! கடந்த மாதம் 29-ம் தேதி முதல்வரான ஓ.பன்னீர்செல்வம், உடனே பெங்களூரு சென்று, சிறையில் உள்ள ஜெயலலிதாவைப் பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் சென்னை திரும்பினார். தமிழக முதல்வருக்கான அறை, கோட்டையின் முதல் தளத்தில் இருக்கிறது. அங்கே செல்லாமல் ஏற்கெனவே அமைச்சராக இருந்தபோது தனக்கு ஒதுக்கப்பட்ட அறையிலேயே ‘முதல்வர்’ பன்னீர்செல்வம் உட்கார்ந்து விட்டார். அவரது அறையின் முன்பு, ‘நிதி மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்’ என்ற போர்டுதான் இன்று வரை தொங்குகிறது. அவர் குடியிருக்கும் ‘தென்பெண்ணை’ பங்களாவிலும் ‘நிதி மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர்’ என்றே போர்டு வைக்கப்பட்டுள்ளது!”
”இதைக் கூடவா மாற்றக் கூடாது?”
”பயம்தான்! பெயர் பலகை மாற்றுவதை அம்மா விரும்புவாரா, மாட்டாரா என்று தெரியாமல் எப்படி மாற்றுவது என்ற பயம்தான் அதற்குக் காரணம். பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் பெயில் பெட்டிஷன் டிஸ்மிஸ் ஆன, அக்டோபர் 7-ம் தேதிதான் தலைமைச் செயலாளர், அரசின் ஆலோசகர், போலீஸ் டி.ஜி.பி உள்ளிட்ட அதிகாரிகளை அழைத்துச் சட்டம் ஒழுங்கு பற்றி ஆய்வு நடத்தினார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். ‘பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலான எந்த ஒரு நடவடிக்கைகளையும் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் விரும்பமாட்டார்கள். எனவே, கடையடைப்பு, வேலை நிறுத்தம் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம். இது அம்மா அவர்களுக்கு நம்முடைய அன்பை, ஆதரவை, மாறாப் பற்றை, பாசத்தை வெளிப்படுத்தும் செயல்’ என்று அறிக்கைவிட்டார்.
அதன் பின்னர் ஒவ்வொரு நாளும் அதிகாரிகள் வந்து இவரைப் பார்க்கிறார்கள். அவர்கள் வரும்போது இவர் கூச்சத்தால் நெளிகிறார். பொதுவாக முதல்வர் நடத்தும் ஒவ்வொரு கூட்டத்திலும் தலைமைச் செயலாளர், அரசு ஆலோசகர், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள், துறைச் செயலாளர்கள் உடன் இருப்பது வழக்கமானது. ஆனால், தற்போது ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் ஆன பிறகு நடக்கும் ஒவ்வொரு கூட்டத்திலும்  மின் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், வீட்டு வசதித் துறை அமைச்சர் வைத்திலிங்கம், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய மூத்த மூன்று அமைச்சர்களும் தவறாமல் உடன் இருக்கிறார்கள்”
”தனியாக இருக்க பயமா?”
”தீபாவளி பண்டிகைக்கான சிறப்பு பஸ் இயக்கும் அறிவிப்பிலும், ‘மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உத்தரவின் பேரில்’ என்றுதான் முதல்வர் ஓ.பன்னீசெல்வம் சொல்லியிருந்தார். முதல்வராகிவிட்டாலும் பன்னீர் இன்னும் ‘முதல்வர்’ என்று தன்னை நினைக்கவில்லை. ‘கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிடம் பவ்யமாக, பணிவாக நடந்துகொள்வதில் தவறு இல்லை. ஆனால், ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது வழிகாட்டுதல் என்று அறிக்கை வெளியிடுவது எப்படிச் சரியாகும்?’ என்று பலரும் கேட்க ஆரம்பித்துள்ளார்கள். இதுவரை கேபினட் கூட்டம் நடக்கவில்லை. துறை ரீதியான ஆய்வுகளை இன்னும் தொடங்கவில்லை. நவம்பர் மாதம் சட்டசபை குளிர்காலக் கூட்டம் கூடியாக வேண்டும். அதற்கான ஆலோசனை நடக்கவில்லை. மாவட்ட கலெக்டர்கள், எஸ்.பி-க்கள் மாநாடு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்தது. இந்த ஆண்டு டிசம்பரில் நடத்துவதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்க வேண்டும். புதிய முதல்வரை மரியாதை நிமித்தமாக அதிகாரிகள் வந்து பார்க்க வேண்டும். யாரையும் பன்னீர் பார்க்கவில்லை!”
”ம்!”
”பன்னீர் ஆதரவாளர்களிடம் கேட்டால், ‘அண்ணன் முதல்வராகப் பதவியேற்ற பிறகு இன்னும் அம்மாவை பெங்களூருக்குச் சென்று பார்க்க வாய்ப்பு தரப்படவில்லை. அம்மாவுக்கு ஜாமீன் கிடைத்து அவரை நேரடியாகப் பார்த்து ஆசி வாங்கிவிட்டுத்தான் பணியைத் தொடங்க வேண்டும் என்று நினைக்கிறார்’ என்று சொல்கிறார்கள்!”
”அது எப்போது?”
”13-ம் தேதி, திங்கள்​​கிழமை அன்று உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் ஜாமீன் வழக்கை எடுத்துக் கொள்வார்கள் என்று நினைத்தார்கள். ஆனால் 17-ம் தேதிதான் உச்ச நீதிமன்றம் வழக்கை எடுக்க இருக்கிறது. மறுநாள் 18-ம் தேதியில் இருந்து 26 வரைக்கும் உச்ச நீதிமன்றத்துக்கு விடுமுறை. அதனால் 17-ம் தேதி ஜாமீன் கொடுத்தால்தான் உண்டு. இல்லாவிட்டால் தீபாவளியைத் தாண்டிய பிறகுதான் ஜெயலலிதா வெளியில் வரமுடியும்!” என்று சொல்லிவிட்டுப் எழுந்த கழுகார், ” ‘தீபாவளியை கட்சிக்காரங்க யாரும் பெருசா கொண்டாட வேண்டாம். அம்மா வெளியில் வரும் நாள்தான் நமக்கு தீபாவளி. இதை கட்சிக்காரங்க எல்லோருகிட்டயும் சொல்லுங்க’ என்று உடனிருக்கும் அமைச்சர்களிடம் சொல்லி வருகிறாராம் முதல்வர் பன்னீர்” என்றபடி பறந்தார்.

No comments:

Post a Comment