Wednesday, October 8, 2014

சூரியனுக்கு உரிமை கொண்டாட முடியுமா? - டாக்டர் ஜோனஸ் சால்க்

டாக்டர் ஜோனஸ் சால்க் - இவர்தான் போலியோ வியாதிக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்தவர். எளிய குடும்பத்தில் பிறந்திருந்த இவரின் பெற்றோர் அடிப்படை கல்வியை
தாங்கள் பெறாவிட்டாலும் தங்களின் மகன் பெற வேண்டும் என்று தெளிவாக இருந்தார்கள். சட்டம் படிக்க முதலில் விரும்பினாலும் பின்னர் ஆர்வமானது ஜோன்ஸ் சால்குக்கு மருத்துவத்துறை பக்கம் திரும்பியது. அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த இவர் வைராலஜி, தொற்று நோயியல் போன்றவற்றில் பட்டம் பெற்றிருக்கிறார். 
சரி எதற்காக இவரைப்பற்றி இப்போது பேசிக்கொண்டிருக்கிறோம் என்று நீங்கள் நினைக்கலாம்? சூரியன் தினம் உதித்து மறைவது போல, சில அறிவியலாளர்களின் புகழும், அவர்கள் நமக்கு செய்த நல்ல காரியங்களையும் அவ்வப்போது போற்றி, பாராட்டிக் கொண்டே இருப்பது அவசியம். 

எத்தனையோ நோய்களுக்கு மருந்து கண்டுபிடித்த பல அறிவியலாளர்கள் இருக்கும்போது இவருக்கு மட்டும் என்ன இவ்வளவு முக்கியத்துவம்? என்று நீங்கள் கேட்பது தெரிகிறது. அதற்கு மிக முக்கிய காரணம் இவர் தான் கண்டுபிடித்த போலியோ தடுப்பு மருந்துக்கு காப்புரிமை பெறாமல் விட்டதுதான். இவர் அவ்வாறு செய்திருந்தால் உலகிலேயே மிகப்பெரிய பணக்காரனாக இருந்திருப்பார்.

ஆனால் அப்படி செய்திருந்தால், பல கோடி ஏழை எளிய மக்கள் அந்த மருந்தை வாங்க முடியாமல் நோய் வாய் பட்டு இறந்திருப்பார்கள்.
உலகம் முழுவது இளம்பிள்ளை வாதம் (போலியோ) நோய் பரவியிருந்த சமயம். உலக நாடுகளே கவலையில் கண்ணீர்விட்டுக் கொண்டிருந்தது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட 90% பேர் சிறுவர்கள் என்பதே சோகத்தின் உச்சம். அமெரிக்காவில் மட்டுமே 50,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு இருந்தார்கள் என்கிற செய்தியும், இந்த நோய் ஒருமுறை தாக்கினால் பின்னர் அதனால் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்யவே முடியாது என்கிற அச்சமும் மக்களை பாடாய்படுத்திக் கொண்டிருந்தது. 

பிட்ஸ்பர்க் மருத்துவப்பள்ளியில் ஏழு பேர் கொண்ட குழுவாக இரவு பகலாக உழைத்தார்கள். ஏழு வருட உழைப்பின் விளைவாக உலகை அச்சுறுத்திக்கொண்டு இருந்த போலியோவுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடித்தார் சால்க். அரசாங்கத்தின் அதிகப்படியான ஒத்துழைப்பே இவருக்கு ஊக்கத்தையும், ஆக்கத்தையும் வழங்கியது. 
 

கண்டுபிடித்த மருந்தை தங்களுக்கு தாங்களே செலுத்தி பார்த்து, தீங்கு எதுவுமில்லை என்பதை உறுதி செய்து கொண்டு நாடு முழுக்க உள்ள ஐந்து லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்தை செலுத்தினார்கள். இரண்டு வருடங்கள் நடந்த நெடிய ஆய்வுகள் மற்றும் சோதனைகளுக்கு பிறகு சால்க் கண்டுபிடித்த தடுப்பு மருந்து எந்த தீங்கும் இல்லாதது என்று அறிவிக்கப்பட்டது. 

மருந்து கண்டுபிடிக்கப்பட்ட வருடம் அமெரிக்காவில் 45,000. பேருக்கு இளம்பிள்ளை வாத நோய் இருந்தது. மருந்து அறிமுகமான வேகத்தில் ஐந்தே வருடங்களில் இந்த எண்ணிக்கை 910 என்கிற அளவுக்கு விழுந்தது. 

இதன் பிறகு பேட்டி ஒன்றில், ஏன் நீங்கள் உரிமம் பெறவில்லை எனக்கேட்டதற்கு, சூரியனுக்கு யாராவது உரிமை கொண்டாட முடியுமா என்று கேட்டார், இந்த மாமனிதர்!

இன்று பில் கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ்... போன்றவர்களை போற்றும் இந்த உலகம், இவரை யாரென்று கூட தெரிந்துகொள்ளவில்லை என்பது கசப்பான உண்மை...! 


No comments:

Post a Comment