Thursday, October 30, 2014

பெயில் டு ஜெயில் நிமிடங்கள்

‘குன்ஹாவைப் பார்க்க குவிந்த கூட்டம்!’

உச்ச நீதிமன்றம் 17-ம் தேதி மதியம் 12.30 மணிக்கு ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கியது என்ற செய்தி வெளியே கசிந்ததும் உற்சாகக் கொண்டாட்டம் ஆரம்பித்தது. தண்டனை கொடுத்தவர்களே பெயில் கொடுக்க வேண்டும் என்பதால், ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு நடைபெற்ற பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ரிலீஸ் ஆர்டர் வாங்குவதற்காக அ.தி.மு.க நிர்வாகிகள் காத்திருந்தனர். ஆனால், அன்று மாலை வரை பெயில் உத்தரவு வரவில்லை. 18-ம் தேதி காலை நீதிபதி குன்ஹாவின் வருகையை எதிர்பார்த்து ஜெயலலிதாவின் வழக்கறிஞர்கள் குமார், மணிசங்கர், நவநீதகிருஷ்ணன், செந்தில், அன்புக்கரசு, செல்வக்குமார், கருப்பையா ஆகியோர் காத்திருந்தார்கள். நீதிபதி குன்ஹாவைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே அ.தி.மு.க நிர்வாகிகள் பலரும் சிறப்பு நீதிமன்றத்தில் கூடியிருந்தனர். அந்த நேரத்தில் பவானி சிங் தன் சேம்பரில் அமர்ந்திருந்தார். சரியாக 11.05-க்கு சிரித்த முகத்தோடு அனைவருக்கும் வணக்கம் சொல்லி அமர்ந்தார் நீதிபதி குன்ஹா. ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் குமார், உச்ச நீதிமன்ற பெயில் ஆர்டரை கொடுத்தார். அதைப் படித்துப் பார்த்த குன்ஹா, ”அனுமதிக்கிறேன்” என்றார். அதன் பிறகு ஷ்யூரிட்டி ஆவணங்களை சரிபார்த்தார். ஜெயலலிதாவுக்கு கர்நாடக மாநில அ.தி.மு.க செயலாளர் புகழேந்தியின் மனைவி குணஜோதியும், டாக்டர் வெங்கடேஷின் சகலை பரத்தும் ஷ்யூரிட்டி கொடுத்திருந்தார்கள். அவர்களின் குடும்ப அட்டை, ஆதார் அட்டைகளை சரிபார்த்தார். பிறகு அவர்களிடம் நடந்த விசாரணை அப்படியே இதோ…
நீதிபதி குன்ஹா: ”நீங்க பெங்களூரில் இருக்கீங்க… அவங்க சென்னையில் இருக்காங்க, அவங்களை எப்படி உங்களுக்குத் தெரியும்” என்று ஆங்கிலத்தில் கேட்டார். குணஜோதிக்கு ஆங்கிலம் தெரியாததால், புரியாமல் விழித்தார். நீதிபதி குன்ஹா அதையே திருப்பி கன்னடத்தில் கேட்டார்.
குணஜோதி: ”அவங்களை நன்றாகத் தெரியும்!”
நீதிபதி குன்ஹா: ”நாளைக்கு ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் நீங்கள் மாட்டிக்கொள்வீர்கள் என்பது தெரியுமா… தெரியாதா?”
குணஜோதி: ”தெரியும்!”
நீதிபதி குன்ஹா: ”இந்த ஆவணங்கள் அனைத்தும் உங்கள் பெயரில்தான் இருக்கிறதா?”
குணஜோதி: ”ஆமாம்!”
‘சசிகலா எனக்கு ஃபேமலி ஃபிரெண்ட்!’
அடுத்து சசிகலாவுக்கு கர்நாடக மாநில அ.தி.மு.க இணைச்செயலாளர் ராஜுவும், பெங்களூரு தொழிலதிபர் லட்சுமிபதியும் ஷ்யூரிட்டி கொடுத்திருந்தார்கள். அவர்களிடம் நீதிபதி குன்ஹா, ”ஜெயலலிதாவைக்கூட ஒருவேளை உங்களுக்குத் தெரியும் என்று சொல்லலாம். சசிகலாவை எப்படி உங்களுக்குத் தெரியும்?”
ராஜு: ”சசிகலா எங்க ஃபேமலி ஃப்ரெண்ட்!”
நீதிபதி குன்ஹா: ”பெயில் கொடுக்க ஷ்யூரிட்டிக்கான சட்ட திட்டங்கள் தெரியுமா?”
ராஜு: ”தெரியும்!”
நீதிபதி குன்ஹா: ”இந்த சொத்து வாங்கியபோது எவ்வளவு மதிப்பு, தற்போது என்ன மதிப்பு?”
ராஜு: ”வாங்கியதைவிட தற்போது 3 மடங்கு அதிகமாக இருக்கிறது.”
‘நானும் சுதாகரனும் நண்பர்கள்!’
சுதாகரனுக்காக தொழிலதிபர் லட்சுமிபதியின் மகன் லோகேஷ§ம், கர்நாடக மாநில அ.தி.மு.க இணைச்செயலாளர் ராஜுவின் மனைவி அன்பம்மாளும் வந்திருந்தனர். அவர்களிடம் குன்ஹா, ”சுதாகரனை உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்க, ”நானும் சுதாகரனும் நண்பர்கள்!” என்றார் லோகேஷ்.
இளவரசிக்கு கர்நாடக மாநில அ.தி.மு.க செயலாளர் புகழேந்தியும், ராஜேந்திரன் என்பவரும் ஷ்யூரிட்டி கொடுக்க வந்தனர். புகழேந்தியிடம் நீதிபதி, ”இளவரசியின் கணவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்?” என்று கேட்க, ”அவர் இறந்துவிட்டார்!” என்றார் புகழேந்தி. ”அவரோட பெயர் என்ன?” என்றார். ”ஜெயராமன்” என்று புகழேந்தி சொன்னார்.
அதன் பிறகு ரிலீஸ் ஆர்டர் டைப் செய்யப்பட்டது. இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு நீதிபதி குன்ஹா அதில் கையெழுத்திட்டார். கோர்ட் தபால் அலுவலகத்தில் அந்த பெயில் ஆர்டர் கொடுக்கப்பட்டது. தபால் ஊழியர் வெங்கடேஷை, அ.தி.மு.க வழக்கறிஞர்கள் தங்கள் காரில் வரச் சொன்னார்கள். ஆனால் அவரோ, ”அரசு விதிப்படி நான் என்னோட வாகனத்தில்தான் போக வேண்டும். இல்லைன்னா அரசு வாகனத்தில் போகலாம்! உங்களோடு வர முடியாது” என்று மறுத்துவிட்டார். பிறகு, போலீஸ் வாகனத்தில் பெயில் ஆர்டர் பரப்பன அக்ரஹாராவுக்குப் போக… அந்த வாகனத்தைப் பின்தொடர்ந்தனர் அ.தி.மு.க வழக்கறிஞர்கள். சரியாக 3 மணிக்கு பெயில் ஆர்டர் ஜெயிலில் கொடுக்கப்பட்டது.
‘திருப்பிக் கொடுக்கப்பட்ட வாட்ச்!’
பெயில் ஆர்டர் சிறைக்கு வருவதற்கு முன்னதாகவே ஜெயலலிதா, சசிகலா, இளவரசி ஆகிய மூவரும் புறப்படத் தயாராக இருந்தனர். ‘ஆர்டர் சீக்கிரமே வந்தாலும் நாம் மூன்று மணிக்குப் பிறகு கிளம்பலாம்!’ என்று சசிகலாவிடம் சொல்லியிருக்கிறார் ஜெயலலிதா. மதியம் ஒரு மணி அளவில் ஜெயலலிதா உட்பட மூன்று பேருக்கும் மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. சிறைக்குள் அடைக்கப்பட்டபோது, ஜெயலலிதா கையில் கட்டியிருந்த வாட்ச் மற்றும் வைர கம்மல்களை சிறை நிர்வாகம் வாங்கிக் கொண்டது. அந்த வாட்ச், வைர கம்மல்களை ஜெயலலிதாவிடம் திருப்பிக் கொடுக்கப்பட்டு, அதற்காக கையெழுத்தும் பெறப்பட்டது. அதேபோல சசிகலா, இளவரசி ஆகியோரின் நகைகளை அவர்களிடம் திருப்பிக் கொடுத்தனர் சிறை அதிகாரிகள். சரியாக 3.11-க்கு சிறையில் இருந்து வெளியே வந்தார் ஜெயலலிதா. வந்ததும் ஒருமுறை திரும்பி ஜெயிலைப் பார்த்தார். அதன் பிறகே காரை நோக்கி நடந்தார்.
காலில் விழுந்த முதல்வர்!
சிறைக் கதவுகளுக்கு வெளியே தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், அமைச்சர்களும் காத்திருந்தனர். ஜெயலலிதாவுக்கு இஸட் பிளஸ் பாதுகாப்பு இருப்பதால் அமைச்சர்களைக்கூட அருகே அனுமதிக்காமல் கயிறு கட்டப்பட்டு, அதற்குப் பின்பாகவே நிறுத்தப்பட்டனர். முதல்வர் பன்னீர்செல்வம் மட்டும் கயிறுக்கு மறுபுறம் இருந்தார். ஜெயலலிதா வெளியே வந்ததும் காரில் ஏறுவதற்கு முன்பாக, அவரது காலில் சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிட்டார். அவரைப் பார்த்து எந்த ரியாக்ஷனும் காட்டாமல் இறுகிய முகத்துடன் காரில் ஏறிக்கொண்டார் ஜெயலலிதா. அதே காரின் பின் சீட்டில் சசிகலாவும், இளவரசியும் ஏறினர். காரின் நான்கு டயர்களுக்கும் எலுமிச்சைப் பழங்கள் வைக்கப்பட்டன. பூசணிக்காயில் சூடம் ஏற்றி ஆரத்தி எடுக்கப்பட்டு காருக்கு முன்பாக உடைக்கப்பட்டது. அதன் பிறகே ஜெயலலிதா கார் அங்கிருந்து கிளம்பியது. ஜெயில் வாசலில் இருந்து செக்போஸ்ட் வரை, அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், மேயர்கள், எம்.பி-க்கள், முக்கியப் பிரமுகர்கள் என வரிசைகட்டி நின்றிருந்தனர். அவர்களைப் பார்த்தபோதும் ஜெயலலிதா அமைதியாகவே இருந்தார்.
தலைக்குப்புற விழுந்த மேயர்!
ஜெயலலிதாவைப் பார்த்ததும் அனைவரும், ‘அம்மா வாழ்க! தங்கத் தாரகையே, புரட்சித்தலைவி வாழ்க!’ என கோஷங்கள் எழுப்பி உணர்ச்சிவசப்பட்டதும், கர்நாடக போலீஸார் மொழி புரியாமல் என்னவோ, ஏதோவென பதறிவிட்டனர். பாதுகாப்புக்காக கட்டப்பட்டிருந்த கயிற்றை வேகமாக போலீஸார் பிடித்து இழுக்க… அந்தக் கயிறு மதுரை மேயர் ராஜன் செல்லப்பா காலில் மாட்டி, அவர் தலைக்குப்புற விழுந்தார். தலையில் அடிபட்டு எழு முடியாமல் கதறி அழுதார். அவரை யாரும் கண்டுகொள்ளவே இல்லை. ஜெயலலிதாவின் கார் செக்போஸ்ட்டை தாண்டிய பிறகுதான் மேயரை, மதுரை மாநகரச் செயலாளர் முத்துராமலிங்கம் தூக்கிவிட்டார்.
பரப்பன அக்ரஹாராவில் இருந்து கிளம்பிய ஜெயலலிதாவின் கார், சரியாக 3.50 மணிக்கு ஹெச்.ஏ.எல் ஏர்போர்ட்டை வந்தடைந்தது. வழி நெடுகக் கூட்டத்தைப் பார்த்த பிறகே ஜெயலலிதா முகத்தில் சின்ன உற்சாகம் தெரிந்தது. ஏர்போர்ட்டில் காத்திருந்து கையசைத்தவர்களைப் பார்த்துச் சிரித்தார். வணக்கமும் வைத்தார். ஏர்போர்ட்டில் ஜெயலலிதாவுக்காக காபி தயாராக வைத்திருந்தார் இளவரசியின் மகன் விவேக். அங்கே சற்று இளைப்பாறி காபி சாப்பிட்டுவிட்டு சென்னைக்குப் புறப்பட்டார்.
22 நாட்களாக பரபரப்பாக இருந்த பரப்பன அக்ரஹாரா இப்போது வெறிச்சோடிக் கிடக்கிறது!

No comments:

Post a Comment