Sunday, October 5, 2014

கலங்கிய ஜெ… கதறிய… சசி… தீர்ப்பு தினம் இன்கேமரா காட்சிகள்..(ஜூனியர் விகடன் )

இத்தனை வருடங்களாக ஓப்பன் கோர்ட்டில் நடந்து வந்த சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு மட்டும் பூட்டிய அறைக்குள் வழங்கப்பட்டுள்ளது.
காலை 10.50 மணிக்கு நீதிமன்றத்துக்குள் வந்த ஜெயலலிதா மாலை 5.30 மணி வரை அங்கேயே இருக்க வைக்கப்பட்டார்.  கிட்டத்தட்ட இந்த 7 மணி நேரத்தில் உள்ளே நடந்தது என்ன… நீதிமன்றத்துக்குள் இருந்தவர்களிடம் விசாரித்தோம். இதோ அந்த தகவல்கள், அப்படியே லைவ்வாக….
அந்த 22 பேர்!
நீதிமன்றத்துக்குள் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் பவானி சிங், முருகேஷ் மராடி ஆகியோருடன் தமிழ்நாடு ஊழல் மற்றும் கண்காணிப்புத் துறை அதிகாரிகள் குணசீலன், சம்பந்தம் ஆகியோரும் இருந்தனர்.  தி.மு.க வழக்கறிஞர்கள் தாமரைச்செல்வன், சரவணன், நடேசன், பாலாஜி ஆகியோர் வந்திருந்தனர். ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் குமார், மணிசங்கர், அன்புக்கரசு, நவநீதகிருஷ்ணன், அசோகன், செந்தில், பன்னீர்செல்வம் ஆகியோர் இருந்தார்கள்.  ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி மற்றும் கோர்ட் ஊழியர்கள் இருவர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். நீதிமன்றத்துக்குள் இருந்தவர்கள் இவர்கள் மட்டும்தான். நீதிபதியுடன் சேர்த்து மொத்தம் 22 பேர் கோர்ட்டுக்குள் இருந்தார்கள்.
பெயர் அறிவிக்கப்பட்டது!
பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து சரியாக 10.45 மணிக்கு பரப்பன அக்ரஹாரா நீதிமன்ற வளாகத்துக்கு வந்து சேர்ந்தார் ஜெயலலிதா. காரில் இருந்து இறங்கியவர் நீதிமன்றத்துக்கு வெளியே போடப்பட்டிருந்த சேரில் அமர்ந்தார். நீதிபதி குன்ஹா 11 மணிக்கு வந்து அமர… அனைவரும் எழுந்து வணக்கம் சொன்னார்கள். ‘ஜெயலலிதா… சசிகலா… சுதாகரன்… இளவரசி…’ என்று டவாலி பெயர்களை வாசிக்க…. ஒவ்வொருவராக உள்ளே வந்தனர். குற்றவாளிக் கூண்டில் நால்வரும் வந்து கைகளைக் கட்டியபடி நிற்க… ‘நீங்க உட்கார்ந்து கொள்ளலாம்!’ என்று நீதிபதி சொன்னதும், நீதிபதியைப் பார்த்து கைகளைக் கூப்பி வணக்கம் சொன்னபடி நால்வருமே உட்கார்ந்தனர். சில ஆவணங்களைப் புரட்டிய நீதிபதி, நால்வரையும் நிமிர்ந்து பார்த்தார். ”உங்கள் மீது போடப்பட்ட வழக்கு சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் ஆவணங்களாலும், சாட்சியங்களாலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால் நீங்கள் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கிறேன்!” என்று சொன்னதும் கோர்ட்டில் நிசப்தம். ”இந்தத் தீர்ப்புப் படிவத்தில் நான் நிறைய கையெழுத்துப்போட வேண்டி இருக்கிறது. அதனால் 1 மணிக்கு நீதிமன்றத்தை ஒத்திவைக்கிறேன். அப்போது இந்தத் தீர்ப்பு பற்றி நீங்கள் சொல்ல விரும்பும் கருத்துகளைச் சொல்லலாம். முதல் குற்றவாளியான ஜெயலலிதா உட்பட நான்கு பேரின் பெயில் பாண்ட்-களை கேன்சல் செய்கிறேன். பரப்பன அக்ரஹாரா போலீஸார் இவர்களைக் கஸ்டடி எடுத்துக் கொள்ளுங்கள். கோர்ட்டுக்கு வெளியில் விட வேண்டாம்” என்று சொல்லிவிட்டு தன் அறைக்குள் சென்றுவிட்டார்.
அழுத அமைச்சர்கள்!
இந்த விஷயம் கோர்ட் ஹாலுக்கு வெளியே ஷாமியானா பந்தலில் அமர்ந்திருந்த அமைச்சர்களுக்குச் சொல்லப்பட்டது. அவர்கள் கதறி அழ ஆரம்பித்தனர். ”அம்மா இருக்கும் இடத்தில்தான் நாங்களும் இருப்போம். எங்களையும் ஜெயிலில் அடையுங்கள்!” என்று அமைச்சர் ஒருவர் கூச்சல் போட, ”யாராவது இங்கே சத்தம் போட்டீங்கன்னா இங்கிருந்து அனுப்பிடுவோம். கோர்ட்டுக்கு இடையூறு செய்யக்கூடாது. சைலன்ட்!” என்று போலீஸார் எச்சரிக்க… எல்லோரும் அமைதியானார்கள்.
”காரில் ஏறக் கூடாது!”
ஜெயலலிதா தன்னுடைய காரில் சென்று அமர்ந்துகொள்ள வெளியே வந்தபோது, ஓடிவந்த போலீஸாரும் கோர்ட் ரெஜிஸ்ட்ராரும், ”ஸாரி மேடம்… இப்போ நீங்க கோர்ட் கஸ்டடியில் இருப்பதால் வெளியில் போக அனுமதி இல்லை. இங்கேதான் இருக்கணும்!” என்று சொன்னார்கள். நீதிபதியை சந்தித்து காரில் உட்கார அனுமதி கேட்க ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் எவ்வளவோ முயற்சி செய்தார்கள். ஆனால், நீதிபதி  இவர்களை சந்திக்க மறுத்துவிட்டார். அதன் பிறகு வேறு வழியில்லாமல் நீதிமன்ற ஹாலுக்குப் பக்கத்தில் இருந்த அறையில் நான்கு பேரும் அமர்ந்திருந்தனர். அந்த அறைக்கு போலீஸ் காவல் போடப்பட்டது. இதற்குள், ஜெயலலிதா வந்த காரில் இருந்த தேசியக் கொடியை கர்நாடக போலீஸார் உடனடியாக அகற்றினர். 45 நிமிடங்களுக்குப் பிறகு, ஜெயலலிதா இருந்த அறைக்கு வந்த போலீஸார், ‘நீங்க போய் சாப்பிட்டுவிட்டு வந்துடுங்க…’ என்று சொல்ல… நான்கு பேரும் எழுந்து காருக்கு வந்தனர்.
சென்னையில் இருந்து கொண்டு வந்திருந்த சப்பாத்தி, தயிர் சாதம் ஆகியவற்றைக் கொண்டுவந்து அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கொடுத்தார். அதை ஜெயலலிதா காரில் அமர்ந்தபடியே சாப்பிட்டார். அந்த நேரத்தில் காருக்கு வெளியே கைகளை கட்டியபடி ஓ.பன்னீர்செல்வம் நின்றிருந்​தார். ஜெயலலிதா சாப்பிட்டு முடித்ததும், பன்னீர்செல்வத்தை காருக்கு அருகே அழைத்து சில நிமிடங்கள் பேசினார். 12.45 மணிக்கு நீதிமன்ற அறைக்குள் நான்கு பேரும் உள்ளே நுழைந்தனர்.
”நான் பாதிக்கப்பட்டுள்ளேன்!”
1 மணிக்கு நீதிபதி குன்ஹா தன் இருக்கையில் வந்து அமர்ந்தார். ”நீங்க எதாவது சொல்ல விரும்புறீங்களா?” என்று கேட்டார். ஜெயலலிதா முதலில் ஆங்கிலத்தில் பேசினார். ”இது அரசியல் காழ்பு உணர்ச்சியால் போடப்பட்ட வழக்கு. 18 வருடங்களாக இந்த வழக்கில் எனக்கு தி.மு.க-வினர் கடுமையான டார்ச்சர் கொடுத்தனர். இந்த வழக்கு போடப்பட்டபோது எனக்கு வயது 48. தற்போது எனக்கு 66 வயதாகிறது. இந்த வழக்கால் எனக்கு ரத்த அழுத்தம், சுகர், மனச்சோர்வு  என பல்வேறு பாதிப்புகளால் நிம்மதியை இழந்துள்ளேன். இதை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்” என்று சொன்னார்.
அடுத்து ஜெயலலிதாவின் வழக்கறிஞர் குமார் பேசினார். ”வருமான வரி கட்டியதற்கான ஆவணங்களை ஏற்கெனவே சமர்ப்பித்துள்ளோம். இந்த நிலையில் குற்றவாளி என்று தீர்ப்பளிப்பது ஏற்புடையதல்ல. குறைந்தபட்ச தண்டனையாக ஒரு வருடம்தான் தண்டனை விதிக்க வேண்டும். இவர் முதல்வராக இருந்தபோதுதான் சந்தனக் கடத்தல் வீரப்பனை சுட்டுப் பிடித்தார். இவருக்கு எல்.டிடி.ஈ-யால் உயிருக்கு ஆபத்து உள்ளதால் தொடர்ந்து இசட் பிரிவு கொடுக்க வேண்டும். அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு சிறந்த மருத்துவ வசதியை அளிக்கவும் உத்தரவிட வேண்டும்” என்று வாதிட்டார்.
”சசிகலா அரசு ஊழியர் அல்ல!”
சசிகலா, ”இந்த வழக்கால் நானும் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறேன். என் கண்ணில் கார்னியா கட்டாகி விட்டது. இதனால் திடீர் திடீரென மயக்கம் வருகிறது. அதனால் குறைந்தபட்ச தண்டனை தர வேண்டும்” என்றார்.
உடனே சசிகலா வழக்கறிஞர் மணிசங்கர் எழுந்தார். ”எனது கட்சிக்​காரர் அரசு ஊழியர் கிடையாது என்பதால் இவரைத் தண்டிக்க முடியாது. ஏற்கெனவே இதே வழக்குக்காக 11 மாதம் சிறை அனுபவித்து இருக்கிறார். எனவே குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
அவர் முடித்ததும் சுதாகரன் பேசினார். ”18 வருடமாக இந்த வழக்கு நடக்கிறது. இந்த வழக்கு போடும்போது என் பெண் பிள்ளைக்கு 6 மாதம். தற்போது அவர் எம்.பி.பி.எஸ் படிக்கிறாள். இந்த வழக்கில் ஏற்பட்ட மனஉளைச்சலில் எனது அம்மா இறந்துவிட்டார். எனவே, என்னை இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்ய வேண்டும்” என்று கேட்டார்.
சுதாகரன் வழக்கறிஞர் சீனிவாசன், ”சுதாகரன்தான் குடும்பத்தலைவர். இவருடைய வருமானத்தில்தான் இவரது குடும்பம் நடக்கிறது. எனவே இவருக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும்” என்றார்.
”நான் கணவரை இழந்தவர்!”
இளவரசிக்கும் பேச வாய்ப்பு வழங்கப்​பட்டது. ”நான் 91-ம் வருடத்தில் இருந்து என் கணவனை இழந்து விதவையாக இருக்கிறேன். எனக்கு யாரும் ஆதர​வு இல்லை. எனக்கு மூன்று பசங்க இருக்காங்க. அவர்களுக்குப் பாதுகாப்பில்லை. அதனால் என்னை விடுதலை செய்யுங்க…” என்றார்.
இளவரசியின் வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன், ”ஏ4 இளவரசி இந்த வழக்கில் எந்தத் தவறும் செய்யவில்லை. ஏ1 கூட இருந்த காரணத்துக்​காக இவர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. எனவே, இவருக்கு குறைந்தபட்ச தண்டனை மட்டுமே வழங்க வேண்டும்” என்று வாதிட்டார்.
அத்தனையையும் பொறுமையாகக் கேட்டுக்​கொண்டார் நீதிபதி குன்ஹா. ”இந்த வழக்கின் தண்டனை விவரத்தை 3 மணிக்கு அறிவிக்கிறேன்” என்று சொல்லிவிட்டு தன் அறைக்குள் சென்றுவிட்டார் நீதிபதி.
”கருணை கூடாது!”
மூன்று மணி வரை கோர்ட் ஹாலுக்குப் பக்கத்தில் இருந்த அறையில் நான்கு பேரும் உட்கார்ந்திருந்தனர். மூன்று மணிக்கு நால்வரும் கோர்ட் ஹாலுக்குள் வந்ததும் கோர்ட் ஊழியர், ”நீதிபதி நான்கு மணிக்கு ஒத்தி வைத்துள்ளார்!” என்று சொல்ல… மீண்டும் நால்வரும் அதே அறைக்குள் சென்றனர். நான்கு மணிக்கு மீண்டும் அவர்கள் கோர்ட் ஹாலுக்குள் வந்தபோது, சசிகலாவும் இளவரசியும் ஆளுக்கு ஒரு பக்கமாக ஜெயலலிதாவை கைத்தாங்கலாகப் பிடித்து அழைத்து வந்தனர். குற்றவாளி கூண்டில் இருந்த சேரில் ஜெயலலிதா அமர்ந்து கொண்டார். இளவரசியும் இன்னொரு பக்கம் அமர… சசிகலா மட்டும் உட்காரவே இல்லை. ஜெயலலிதாவின் தோள் மீது கைவைத்தபடியே நின்றிருந்தார். அப்போது சசிகலாவின் கண்கள் கலங்கியது.
நீதிபதி குன்ஹா வந்து அமர்ந்ததும், எல்லோரையும் பார்த்துவிட்டு, தீர்ப்பை வாசிக்க ஆரம்பித்தார். அப்போது தனது கண்களை இறுக்கமாக ஜெயலலிதா மூடிக்கொண்டு அமர்ந்து இருந்தார்.  ”நீங்கள் சொன்ன கருத்துகளையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. ஊழலுக்கு எதிராக நீதிமன்றங்கள் மென்மையான போக்கை ஒருபோதும் கடைபிடிக்காது. ஊழல் வழக்கில் கருணை காட்டக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. ஒரு வழக்கில் நீதி வழங்கும்போது கண்ணைக் கட்டிக்கொண்டு வழக்கின் தன்மையைப் பார்த்துதான் நீதி வழங்க வேண்டும். முதல்வரே தவறு செய்தால் அவருக்கு கீழ் பணி புரிகின்றவர்களிடம் எப்படி நேர்மையை எதிர்பார்க்க முடியும்? நீங்கள் செய்திருப்பது கருணை காட்டக்கூடிய குற்றமல்ல. இது மக்களுக்கு எதிரான குற்றம். சாதாரண குற்றம் என்று கருதி தண்டனை வழங்க முடியாது. இந்த வழக்கில் உங்களுக்கு 7 வருட அதிகபட்ச தண்டனைதான் வழங்க வேண்டும். இருந்தாலும் நான் உங்களுடைய வயதையும், 18 ஆண்டு தாமதத்தையும் கருத்தில் கொண்டு  50 சதவிகித தண்டனை வழங்க வேண்டும் என நினைக்கிறேன்” என்று சொல்லிவிட்டு தண்டனையை வாசித்தார்.
நீதிபதி தீர்ப்பை வாசித்து முடித்துவிட்டு எழுந்ததும், சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூன்று பேரையும் கர்நாடக காவல் துறையினர் கட்டுப்பாட்டு வளையத்துக்குள் கொண்டு வந்து சிறைக்கு அழைத்துச் சென்றனர். அரசு தரப்பு வழக்கறிஞர்களான பவானி சிங்கும், மராடியும் வெளியில் வந்தனர். பத்திரிகையாளர்களிடம் அதிகாரப்பூர்வமாக தண்டனை விவரங்களைத் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment