Sunday, October 5, 2014

மிஸ்டர் கழுகு: ஜெ.மனதில் இரண்டு காரணங்கள்!

பெங்களூரு சிறை, தீர்ப்பு விவரம், ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்பு காட்சிகள் என இந்த இதழுக்காகத் தயாரான கட்டுரைகள் அனைத்தையும் உன்னிப்பாகப் படித்துப் பார்த்துவிட்டு நம்மிடம் பேச ஆரம்பித்தார் கழுகார்!
”27-ம் தேதி மாலை 5.30 மணிக்கு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு ஜெயலலிதா அழைத்துச் செல்லப்பட்டார். இன்று அக்டோபர் 2-ம் தேதி. அதாவது ஐந்து நாட்களாக அவர் சிறையில் இருக்கிறார். அக்டோபர் 7-ம் தேதி வரை கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு விடுமுறை. அன்றைய தினம் என்ன நடக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. ஒரு வாரத்துக்கு மேல் அவர் சிறையில் இருந்தால் அவரது உடல் நிலை என்ன ஆகும் என்று கவலைப்படுகிறார்கள்!”
”மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதில் என்ன சிக்கல்?”
”ஜெயலலிதாவுக்கு சிறைத் தண்டனை அளிக்கப்பட்டதுமே, அவரது உடல்நிலையை கவனத்தில்கொண்டு மருத்துவமனையில் அவரைச் சேர்க்க கோரிக்கை வைத்தார்கள். அதுபற்றி எந்த உத்தரவும் பிறப்பிக்காத நீதிபதி குன்ஹா, ‘இதனை சிறை அதிகாரியிடம் கேளுங்கள்’ என்று சொல்லிவிட்டார். சிறையில் கோரிக்கை வைத்தார்கள். ஆனால் சிறைத் துறை அதிகாரிகள் அனுமதி தரவில்லை. ‘இங்கேயே அனைத்து வசதிகளும் இருக்கின்றன. சிறை மருத்துவமனையையே பயன்படுத்திக் கொள்ளுங்கள்’ என்று சொல்லிவிட்டார்கள். இந்த வாக்குவாதம் மட்டும் நான்கு மணி நேரம் நடந்தது. அன்றைய இரவில் மிகக் கோபமான மனநிலையில்தான் சிறைக்குள் போனார் ஜெயலலிதா. சிறை அதிகாரி பொறுப்பில் இருப்பவர் முன்னாள் பிரதமர் தேவகவுடாவுக்கு உறவினராம். ஆனாலும், அவர் ஜெயலலிதாவுக்குக் கருணை காட்டவில்லையாம். ‘நான் ஏதாவது முடிவெடுத்தால் அது எனது பதவிக்கு, சிக்கலை ஏற்படுத்தும்’ என்று சொல்லிவிட்டாராம். ‘ஜெயலலிதாவை மருத்துவமனைக்கு அனுப்பாமல் ஆளும் காங்கிரஸ் அரசு சதி செய்கிறது’ என்று செய்தி பரவியது. இது சோனியாவின் ஆலோசகர் அகமது படேல் காதுக்குப் போனது. ‘நாம் ஏதோ மருத்துவமனைக்கு அனுப்பாமல் ஜெயலலிதாவைக் கொடுமைப்படுத்துகிறோம் என்று நினைத்துவிடக் கூடாது. அவங்க மருத்துவ உதவி கேட்டால் உடனடியாக செய்யுங்கள்!’ என்று கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்குச் சொன்னார் அகமது படேல். அவர் அதற்குத் தலையாட்டினார். இந்தத் தகவல் சிறை அதிகாரிகளுக்குச் சொல்லப்பட்டது. 29-ம் தேதி மாலையில் ஜெயலலிதாவிடம் சிறை அதிகாரி, ‘நீங்கள் விருப்பப்பட்டால் மருத்துவமனைக்குச் செல்லலாம்!’ என்று சொன்னார்!”
”என்ன சொன்னாராம் ஜெயலலிதா?”
”அந்த சலுகையை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் ஜெயலலிதா இல்லை. ‘நான் என்னுடைய உடல்நிலை குறித்து கோர்ட்டிலும் சொல்லிவிட்டேன். உங்களிடமும் தெளிவுபடுத்தி விட்டேன். அதற்குப் பிறகும் நீங்கள் அனுமதிக்கவில்லை. மூன்று நாட்கள் ஆகிவிட்டன. இப்போது திடீரென்று நீங்களாக வந்து மருத்துவமனைக்குப் போகலாம் என்று சொல்கிறீர்கள். உங்களது இந்த முடிவுக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. நீங்கள் நினைக்கும்போது நான் மருத்துவமனைக்கு வர முடியாது. நான் சிறை மருத்துவமனையிலேயே பார்த்துக் கொள்கிறேன்’ என்று உறுதியாகச் சொல்லிவிட்டாராம். அந்த அதிகாரியால் பதில் பேச முடியவில்லை. இளவரசிதான், ஜெயலலிதாவை மருத்துவமனைக்குப் போய்விடுங்கள் என்று கெஞ்சிக் கேட்டுள்ளார். அப்போதும் ஜெயலலிதா மனம் மாறவில்லையாம். ‘கர்நாடகா போலீஸ் என்னை எத்தனை நாட்கள் சிறையில் வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறதோ அத்தனை நாட்கள் இங்கேயே இருந்து விடுகிறேன். எனக்கு எந்தச் சலுகையும் வேண்டாம்’ என்று ஜெயலலிதா சொன்னாராம். அதற்கு மேல் இளவரசியால் ஒன்றும் பேச முடியவில்லை!”
”ஓ.பன்னீர்செல்வத்தைக்கூட பார்க்க வில்லையே ஜெயலலிதா?”
”28-ம் தேதி காலையில் ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் சென்றனர். அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் யாரும் சந்திக்க முடியவில்லை. அன்று காலையில் ஓ.பன்னீர்செல்வம் பெங்களூரில் இருந்தார். ஆனால் ஜெயலலிதாவைப் பார்க்க முடியவில்லை. சென்னை வந்துவிட்டார். மதியம் தலைமைக் கழகத்தில் எம்.எல்.ஏ-க்கள் கூடி பன்னீரை முதல்வராகத் தேர்வு செய்தார்கள். 29-ம் தேதி மதியம் முதல்வர் பதவியேற்பு விழா நடந்தது. அன்று மாலையே விமானத்தில் பெங்களூருக்கு பன்னீர் சில அமைச்சர்களுடன் சென்றுவிட்டார். இரவு அங்கே தங்கினார். மறுநாள் 30-ம் தேதி ஜெயலலிதாவை சிறையில் பார்க்க முடியவில்லை. அன்றைய தினமே சென்னை திரும்பிவிட்டார். அதன் பிறகு அவர் பெங்களூரு போகவில்லை. ‘ஜெயலலிதாவுக்குக் கோபம். அதனால்தான் பார்க்கவில்லை’ என்று சிலர் சொல்ல ஆரம்பித்துள்ளனர்!”
”அது உண்மையா?”
”இல்லை! ஜெயலலிதா யாரையும் சந்திக்காததற்கு உண்மையான காரணங்கள் இரண்டு. தரைத் தளத்தில்தான் ஜெயலலிதா வைக்கப்பட்டுள்ளார். அவர் வைக்கப்பட்டுள்ள அறைக்கும் பார்வையாளர் அறைக்கும் வந்து சென்றால் குறைந்தது ஒரு கிலோமீட்டர் ஆகுமாம். அவ்வளவு தூரம் அவரால் நடந்து வர இயலாது. மேலும், சீரான வராண்டா வழியாகவும் வர முடியாது. கிரவுண்டுக்குள் இறங்கி, மணலில் நடந்துதான் வர வேண்டுமாம். எனவே, ஜெயலலிதாவால் யாரையும் பார்க்க வரமுடியவில்லை என்கிறார்கள் ஒரு தரப்பினர். போயஸ் கார்டனிலோ தலைமைச் செயலகத்திலோ கம்பீரமாகவும் திருத்தமான உடைகளுடனும் காட்சி தரக்கூடியவரால் அப்படி சிறையிலும் இருக்க முடியாது அல்லவா? அப்படிப்பட்ட சூழலில் யாரையும் சந்திக்க வேண்டாம் என நினைக்கிறார். இந்த இரண்டு காரணங்களுக்காகத்தான் அவர் யாரையும் சந்திக்கவில்லை!”
”ஓஹோ!”
”இதுவரை அரசியல் நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கி இருந்த சசிகலா குடும்பத்​தினர் தீர்ப்புக்குப் பிறகு பெங்களூரிலேயே முகாமிடத் தொடங்கியிருக்கிறார்கள். எம்.நடராஜனின் தம்பி ராமச்சந்திரன், திவாகரன், மகாதேவன், டாக்டர் வெங்கடேஷ் ஆகியோர்  பெங்களூரு வந்துள்ளார்கள்.  இதில் டாக்டர் வெங்கடேஷ் மற்றும் திவாகரன் மட்டுமே சசிகலாவை சந்தித்துப் பேசியதாகச் சொல்​கிறார்கள். திவாகரனிடம் மனம்விட்டுப் பேசினாராம் சசிகலா. சுதாகரனைப் பார்க்க அவரது குடும்பத்தினர் வர ஆரம்பித்துள்ளார்கள். சுதாகரன் மன்றம் தொடங்கிய காலத்திலிருந்து இப்போதுவரை நெருக்கத்தில் இருக்கும் ஒரு சிலர் அவரைப் பார்த்து வருகிறார்களாம். இளவரசியின் மகன் விவேக் சிறு வயதிலிருந்தே கார்டனில் இருந்தவர். ஜெயலலிதாவோடு சகஜமாகப் பேசக்கூடியவரும் அவர்தான். அவர்தான் ஜெயிலில் இருப்பவர்களுக்கு சாப்பாடு கொண்டு வந்து கொடுத்துக்கொண்டிருக்கிறார். சசிகலா குடும்பத்தில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் விவேக் மூலம் சசிகலாவிடம் கேட்ட பிறகே மனுப் போடுகிறார்கள்.  டி.டி.வி.தினகரனின் சகலை டாக்டர் சிவக்குமார் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த ஆலோசனைகளைக் கொடுத்து வருகிறார். இளவரசியின் அண்ணன் அண்ணாத்துரை போயஸ் கார்டனில் இருந்து தேவையானவற்றை கவனித்து வருகிறாராம்.”
”ம்!”
”உளவுத் துறை இந்த விவகாரத்தை முன்கூட்டியே கணித்துச் சொல்லவில்லை என்ற கோபம் சசிகலா குடும்பத்தினருக்கு உள்ளது. ‘இரண்டு வாரங்களுக்கு முன்பே பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள இந்த அறையை வெள்ளை அடித்துவிட்டார்கள். அது எப்படி நம்முடைய உளவுத் துறைக்குத் தெரியாமல் போனது?’ என்று இவர்கள் கேட்கிறார்கள். முதல்வர் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளும் ஜெயலலிதாவுக்கு உண்மையான தகவல்களைச் சொல்லவில்லை என்றும் இவர்கள் சொல்கிறார்கள்!”
”எப்போது கிடைக்கும் ஜாமீன்?”
”ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி சார்பாக, தங்கள் மீது தனி நீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்புக்குத் தடை விதிக்க வேண்டும், தங்களுக்கு வழங்கியுள்ள தண்டனையை ரத்துசெய்ய வேண்டும், பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளை வாபஸ்பெற வேண்டும், உடனே நால்வரையும் ஜாமீனில் விட வேண்டும் என்று கடந்த 29-ம் தேதி மனுத் தாக்கல் செய்திருந்தார்கள். அந்த மனுவை அன்றே விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி ரத்னகலா, 6-ம் தேதிக்குத் தள்ளிப்போட்டார். அதையடுத்து ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள், ‘இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் 389(1) விதிப்படி அரசு வழக்கறிஞரின் ஒப்புதல் இல்லாமலேயே ஜாமீன் வழங்கும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு உள்ளது. எனவே அவசரகால அமர்வு அமைத்து விசாரிக்க வேண்டும்’ என்று மறுபடியும் மனு செய்தார்கள். அந்த மனு கடந்த 1-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போதும் இவர்கள் எதிர்பார்த்தது நடக்கவில்லை. அன்று நடந்த காட்சிகளோ அ.தி.மு.க தரப்புக்கு ஏமாற்றம் அளித்தது!”
”என்ன காட்சிகள்?”
”சரியாக உயர் நீதிமன்றத்தின் 11-வது ஹாலில் நீதிபதி ரத்னகலா 10.30 மணிக்கு வந்து அமர்ந்ததும்,  ‘பவானி சிங் எங்கே?’ என்று கேட்டார். பவானி சிங் ஹாலுக்குள் இல்லாததால் நீதிபதி ஒத்திவைக்கும் முடிவுக்கு வந்தார். அடுத்த 5-வது நொடியில் பவானி சிங் ஹாலுக்குள் ஓடி வந்தார். ‘குற்றவாளிகள் தரப்பு ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று கொடுத்துள்ள மனுவுக்கு ஆட்சேபனை தெரிவிக்கிறீர்களா?’ என்று கேட்டார் நீதிபதி. உடனே பவானி சிங் ஆட்சேபனை மனுத் தாக்கல் செய்தார். அதையடுத்து ஜெயலலிதா தரப்பில் ஆஜராக டெல்லியில் இருந்து வந்த ராம் ஜெத்மலானி, ‘குற்றவியல் நடைமுறைச் சட்டம் 389(1) படி அரசு வழக்கறிஞரின் ஒப்புதல் இல்லாமல் குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கும் அதிகாரம் இந்த நீதிமன்றத்துக்கு உள்ளது. எங்களுடைய நியாயமான கோரிக்கையை நான் ஆர்க்யூமென்ட் செய்யத் தயாராக இருக்கிறேன்’ என்றார். ‘உங்கள் தரப்பினருக்கு ஜாமீன் வழங்க அரசுத் தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் சீரியஸான பெட்டிஷன் என்பதால் இந்த மனுவை வழக்கமான நடைமுறை கோர்ட்டுக்கு மாற்றி 7-ம் தேதிக்கு ஒத்தி வைக்கிறேன்’ என்றார். உறுதியாக ஜாமீன் கிடைக்கும் என்று நினைத்த வழக்கறிஞர்களுக்கு விவாதமே நடக்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தியது!”
”சொல்லும்!”
”நீதிபதியின் உத்தரவைக் கேட்டு வெளியே வந்த அ.தி.மு.க வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தின் வாயிலில் அமர்ந்து தர்ணா செய்தார்கள். ‘காவிரி பிரச்னையில் அம்மா வெற்றி கண்டதால் பழிவாங்கும் நோக்கத்தோடு கர்நாடக நீதிமன்றங்கள் செயல்படுகின்றன’ என கோஷம் போட்டனர். உள்ளே இருந்து ஓடிவந்த அ.தி.மு.க வழக்கறிஞர்களில் இன்னொரு குழுவினர், ‘இப்படி கோஷம் போட்டால் அது நமக்குதான் ஆபத்தாக முடியும்’ என்று தடுத்து நிறுத்தினார்கள்.    ‘மீண்டும் உயர் நீதிமன்ற பதிவாளர் தேசாயைப் பார்த்துப் புதிய மனு தாக்கல் செய்கிறோம். அதை ஏற்று அவசர கால நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்’ என்றார்கள். அதற்கு பதிவாளர், ‘நீங்கள் ஒரு மெமோ எழுதிக்கொண்டு வாருங்கள்’ என்றார். அதனைத் தடுத்த ராம் ஜெத்மலானி, ‘மீண்டும் கொடுக்க வேண்டாம். அது சட்டச் சிக்கலை உருவாக்கும்’ என்று சொல்லிவிட்டார். உயர் நீதிமன்ற நீதிபதிகளின் கார்களை நீதிமன்ற வளாகத்தில் வரிசையாக நிற்க வைத்து பூஜை போட்டார்கள். அதற்காக நீதிபதிகள் நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்துவிட்டார்கள். இனி 7-ம் தேதிதான் இதைப் பற்றி பேச முடியும் என்று சொல்கிறார்கள்!” என்று சொல்லிவிட்டு எழுந்த கழுகார், ”ஜெயிலுக்குள் சசிகலா, இளவரசியை ஒரு பகுதியிலும் ஜெயலலிதாவை வேறு ஒரு பகுதியிலும் அடைத்திருந்தார்கள். ‘எனக்கு உதவிக்காக அவர்கள் இருவரையும் நான் இருக்கும் அறைக்கு அருகிலேயே மாற்ற வேண்டும்’ என்று ஜெயலலிதா சிறைத் துறைத் தலைவர் ஜெயசிம்ஹாவுக்கு மனு கொடுத்திருந்தார். இரண்டு நாட்களுக்குப் பிறகு, ‘ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மூவரையும் ஒரே பகுதிக்கு மாற்றிவிட்டார்களாம்” என்றபடி பறந்தார் கழுகார்.

No comments:

Post a Comment