Sunday, October 5, 2014

ஆவின் அதிர்ச்சி! பலே பால் கொள்ளை

மாநிலத்தில் கலவர நிலவரம் என்றாலோ, பேரிடர் இழப்பு தருணங்களிலோ, பால் கிடைக்காவிட்டால் பரிதவித்துப்போவார்கள் மக்கள். பால் இல்லாமல், பொழுது விடியாது… பொழுது முடியாது. அதிலும் தமிழக அரசின் ஆவின் பாலுக்கு, ‘கோமாதா… குலமாதா…’ அளவுக்கு முக்கியத்துவம் உண்டு. ஆவின் பால் இல்லாவிட்டால்தான்,  தனியார் பால் பக்கம் கவனம் திருப்புவார்கள் தமிழக மக்கள். ஆனால், கடந்த வாரம் வெளியான ஆவின் பால் மோசடி, ஒட்டுமொத்த தமிழர்களையும் அதிரச்செய்தது. 
தினசரி சுமார் 1.5 லட்சம் லிட்டர் ஆவின் பாலைத் திருடிக்கொண்டு 1.5 லட்சம் லிட்டர் தண்ணீரைக் கலந்து, அதை பொதுமக்களுக்கு விற்று மோசடி செய்திருக்கிறார்கள். விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சென்னைக்குக் கொண்டுவரப்படும் பால் டேங்கர் லாரிகளை, திண்டிவனத்தில் நிறுத்தி, பாலைத் திருடியிருக்கிறார்கள். ஒவ்வொரு டேங்கர் லாரியில் இருந்தும் 1,500 முதல் 2,000 லிட்டர் வரை பாலை எடுத்துவிட்டு, அதே அளவுக்கான தண்ணீரைச் சேர்த்துள்ளனர். தோராயமாக ஒரு நாளைக்கு 1.5 லட்சம் லிட்டர் பால் திருட்டு. சிலபல ஆண்டுகளாக நடந்துவந்த இந்த மோசடி இப்போதுதான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
வைத்தியநாதன் என்கிற அ.தி.மு.க நபர்தான் இந்த மோசடிகளின் சூத்ரதாரி. 2000-ம் ஆண்டில் சாதாரண சில்லறை விற்பனையாளராக ஆவின் நிறுவனத்துக்குள் நுழைந்த இந்த நபர், 14 ஆண்டுகளில் ஒரு மோசடி சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கி இருக்கிறார். கூட்டுறவு ஒன்றியங்களில் இருந்து சென்னை ஆவின் பால் பண்ணைகளுக்கு பால் விநியோகம் செய்யும் ஒப்பந்தத்தை இவர் பெற்றிருக்கிறார். ஜெ. பேரவையின் தென்சென்னை மாவட்ட இணைச் செயலாளர் என்ற பொறுப்பிலும் இருக்கிறார். எனினும் கடந்த தி.மு.க ஆட்சியிலும் இவரது செல்வாக்குக் கொடிகட்டிப் பறந்துள்ளது. அதனால்தான் கடந்த 10 ஆண்டுகளாக இவரது ஒப்பந்தம் எந்தத் தடையும் இல்லாமல் புதுப்பிக்கப்பட்டு வந்திருக்கிறது. இவருக்குச் சொந்தமாக 83 டேங்கர் லாரிகள் இருக்கின்றன. அவை ஒவ்வொரு நாளும் பாலைச் சேகரித்துக்கொண்டு சென்னை நோக்கி விரைகின்றன. ஒப்பந்தமும் இவருடையது, லாரியும் இவருடையது என்பதால், தண்ணீர் கலப்பதைத் தங்குதடையின்றி செய்திருக்கிறார்.
”ஆனால், வெளியில் தெரிந்தது ஒரு வைத்தியநாதன்தான். தெரியாமல் இருப்பது பலர்” என்கிறார் தமிழ்நாடு பால் முகவர்கள் நலச் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.ஏ.பொன்னுசாமி. ”எனக்குத் தெரிந்து, குறைந்தது கடந்த 15 ஆண்டுகளாக இதுபோன்ற மோசடிகள் ஆவினில் நடந்துவருகின்றன. பொதுவாக, குளிரூட்டப்பட்ட டேங்கர் லாரியில் பாலை ஏற்றும்போது 4 டிகிரி செல்சியஸ் குளிர்நிலையில் ஏற்றுகிறார்கள் என வைத்துக்கொள்வோம். இவர்கள் பாலை எடுத்துக்கொண்டு தண்ணீரை ஊற்றும்போது குளிர் குறைந்து, 6 டிகிரி, 7 டிகிரி என வெப்பம் அதிகரித்து விடும். அது பாலில் ஏற்படுத்தும் மாற்றங்களைச் சமாளிக்கவும், பாலின் அடர்த்தியைத் தக்கவைக்கவும் சர்க்கரையைக் கொட்டுவார்கள். எப்படி இருப்பினும், பால் இறக்கப்படும் இடத்தில் அதன் தரம் குறித்து ஆய்வுசெய்து சான்று அளிக்க ஊழியர்கள் இருக்கின்றனர். அவர்கள் கண்டுபிடிக்க முடியும்; கண்டுபிடித்திருக்க வேண்டும். ஆனால், அதைச் செய்யவில்லை. அதேபோல, ஆவினில் நடைபெறும் தவறுகளைக் கண்டறிந்து களைவதற்கு என்றே ஊழல் கண்காணிப்புப் பிரிவு செயல்படுகிறது. அவர்களும் கண்டுகொள்ளவில்லை. ஒட்டுமொத்தமாக அனைவரும் சேர்ந்து இந்தக் கூட்டுக்கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். அதனால்தான் இத்தனை ஆண்டுகளாக இது எந்தவித இடையூறும் இல்லாமல் நடந்திருக்கிறது.
இந்திய உணவுப்பொருள் கலப்படத் தடுப்புச் சட்டத்தின்படி, இதுபோன்ற குற்றங்களுக்கு 1,500 ரூபாய் அபராதமும், ஆறு மாத சிறைத் தண்டனையும்தான் வழங்க முடியும்; அதுவும் குற்றம் நிரூபிக்கப்பட்டால்தான். ஆகவே இந்தச் செயல்பாட்டை, மக்களின் உயிரோடு விளையாடி, பொதுச் சொத்தைக் கொள்ளையடித்த பெருங்குற்றமாகக் கருத வேண்டும். அந்த அடிப்படையில் வழக்குகள் பதிவுசெய்து விசாரிக்க வேண்டும்!” என்கிறார் பொன்னுசாமி.
ஆவின் நிறுவனத்தின் பிரச்னைகள் இவை மட்டும் அல்ல… தோண்டத் தோண்ட வந்துகொண்டே இருக்கின்றன. ஆவின் மூலம், தமிழ்நாடு முழுவதும் நாள் ஒன்றுக்கு 23.5 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது. இதில் 11.5 லட்சம் லிட்டர் சென்னையில் மட்டுமே விற்பனை ஆகிறது. மாதவரம், அம்பத்தூர், சோழங்கநல்லூர், காத்தலூர் ஆகிய இடங்களில் பால் பண்ணைகள் இருக்கின்றன. இந்தப் பண்ணைகளுக்கு பாலைக் கொண்டுவந்து சேர்ப்பவைதான் வைத்தியநாதனின் டேங்கர் லாரிகள். பால் பண்ணைகளில் இருந்து பாலை எடுத்து, சென்னை முழுவதும் விநியோகிக்க 34 விநியோகஸ்தர்கள் இருக்கிறார்கள். இவர்களின் கீழ் முகவர்கள் இருக்கின்றனர். தமிழ்நாடு முழுவதும் சுமார் 1.5 லட்சம் முகவர்கள் இருப்பார்கள். தினம்தோறும் அதிகாலையில் பால் பாக்கெட்களை கடைகளுக்குக் கொண்டுசேர்ப்பது இந்த முகவர்கள்தான். மேலிருந்து கீழாக இயங்கும் இந்த விநியோக முறையைப் பற்றி கேட்டால், தலை கிறுகிறுக்கும் அளவுக்குத் தாறுமாறான குழப்பங்கள்.
”ஒவ்வொரு நாளும் பால் பண்ணையில் இருந்து விநியோகஸ்தர்களின் லாரிகள் பாலை ஏற்றிக்கொண்டு வெளியில் வரும். ஒரு லாரியில் 2,500 லிட்டர் பால் ஏற்றிவிட்டு, 2,200 லிட்டருக்கு மட்டும் கணக்கு எழுதுவார்கள். 2,000 லிட்டர் ஏற்றிவிட்டு 1,500 லிட்டர் ஏற்றியதாகப் பதிவு செய்வார்கள். இத்தனைக்கும் லாரி உள்ளே நுழையும்போதும் வெளியேறும்போதும் எடைபோட்டு அனுப்ப வேண்டும் என்பது விதி. எடையும் போடுவார்கள்; ஆனால் உண்மைகள் ஆவணங்களில் மாற்றி பதியப்படும்.
ஆவின் பால் அடைக்கப்படும் பாலித்தீன் கவர், முன்பு 20 மைக்ரான் அளவு இருந்தது. இப்போதைய புது விதிப்படி 40 மைக்ரான் அளவு இருக்க வேண்டும். ஆனால், வெறும் 15 மைக்ரான் அளவு பாலித்தீன் பாக்கெட்களில்தான் இப்போது பால் அடைத்து விற்கப்படுகிறது. இதனால் பல ஆவின் பால் பாக்கெட்கள் ஒழுகுகின்றன. பால் பண்ணைகளுக்குச் சென்று பார்த்தால் தெரியும்… பால் பாக்கெட்களில் இருந்து கசிந்து, ஒழுகி வெளியேறும் பால் நேரடியாக சாக்கடையில் கலக்கும். பார்க்கவே நமக்குப் பதறும். ஆவின் பால் பாக்கெட் கவர் தயாரிக்கும் டெண்டர், கடந்த 20 ஆண்டுகளாக ஒரே நிறுவனத்துக்கே வழங்கப்பட்டுவருகிறது என்பதில் இருந்தே, இதில் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
ஆவின் நிறுவனத்தில் ‘மாதாந்திர அட்டை’ என்ற ஒரு நடைமுறை இருக்கிறது. இந்த அட்டை இருந்தால், ஒரு லிட்டருக்கு (ஆவின் நீலம்) 3 ரூபாய் விலை குறைவு. மக்கள் யார் வேண்டுமானாலும் விண்ணப்பித்து வாங்கலாம். சென்னையில் விற்பனை ஆகும் 11.5 லட்சம் லிட்டர் பாலில் 7.5 லட்சம் லிட்டர் பால், இந்த மாதாந்திர அட்டை முறையில்தான் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் உண்மையில் இதில் 2 லட்சம் லிட்டர்தான் மக்களை நேரடியாகச் சென்று அடைகிறது. மீதமுள்ள 5.5 லட்சம் லிட்டர் பாலை, மாதாந்திர அட்டைச் சலுகை மூலம் பெற்று லாபம் அடைவது ஆவின் நிறுவன ஊழியர்கள்தான். முன்னாள், இன்னாள் ஆவின் ஊழியர்கள், ஆவினில் செல்வாக்கு உள்ளோர் போன்றவர்கள், 1,000 அட்டைகள், 2,000 அட்டைகள் என வைத்துள்ளனர். ஒருவரிடம் 1,000 மாதாந்திர அட்டைகள் இருக்கின்றன என வையுங்கள். அவர் தினசரி 500 லிட்டர் பால் வாங்கலாம். வாங்கி அப்படியே எங்களைப் போன்ற முகவர்களுக்கு கைமாற்றிவிட்டால், ஒரு லிட்டருக்கு 3 ரூபாய் வீதம் 1,500 ரூபாய் லாபம். மாதத்துக்கு 45 ஆயிரம் ரூபாய். இது வெறும் 1,000 அட்டைகளுக்கு. நடைமுறையில் பலர் 3,000 அட்டைகள்கூட வைத்துள்ளனர். எனில் அவர்கள் மாதம் ஒன்றுக்கு, குறைந்தது ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக எந்த உழைப்பும் இல்லாமல் சம்பாதிக்கின்றனர். எந்த ரிஸ்க்கும் இல்லாமல், சட்டப்படி ஊழல் எதிலும் சிக்காமல், இந்த வகையில் லட்சம் லட்சமாகச் சம்பாதிக்கிறார்கள் பலர். மாதாந்திர அட்டை என்ற முறையையே ரத்துசெய்ய வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை. இதனால் மக்களுக்கு எந்தப் பலனும் இல்லை” என்கிறார் பொன்னுசாமி. 
இப்படி மலைக்கவைக்கும் அளவுக்கு ஆவின் சிக்கல்கள் நீள்கின்றன. நாம் கடையில் வாங்கும் ஆவின் பால், எப்போதுமே அதன் அதிகபட்ச விற்பனை விலையைவிட ஒரு ரூபாய் அல்லது இரண்டு ரூபாய் கூடுதலாக விற்கப்படும். இதற்குக் காரணம் கடைக்காரர் அல்ல. மொத்த விநியோக முறையில் உள்ள குளறுபடி. அந்தக் கூடுதல் சுமை வாடிக்கையாளரின் தலையில் சுமத்தப்படுகிறது. ஆனால், ”இது ஒன்றும் சுமை அல்ல. பாலின் விலையை உயர்த்தி, பால் உற்பத்தியாளர்களுக்குக் கூடுதல் விலை வழங்க வேண்டும்” என்கிறார் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கத் தலைவர் செங்கோட்டுவேல். சில மாதங்களுக்கு முன்பு பால் விலையில் உயர்வு கேட்டு கடுமையாகப் போராடிய சங்கம் இது.
”மாடு எங்களுடையது; உழைப்பு எங்களுடையது; பால் எங்களுடையது. எங்களுக்கு ஒரு ரூபாய் உயர்த்தித் தரச் சொன்னால் மறுக்கிறார்கள். ஆனால், தினம்தோறும் 1.5 லட்சம் லிட்டர் தண்ணீரைக் கலந்து விற்றுள்ளனர். தமிழ்நாட்டைத் தவிர இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அந்தந்தப் பகுதியில் உள்ள கூட்டுறவு அமைப்புகள்தான் பால் விலையை முடிவு செய்கின்றன. இங்கு மட்டும்தான் அரசு முடிவு செய்கிறது. அவர்கள் மக்களிடம் ஓட்டு வாங்குவதற்காக பாலுக்குக் குறைந்த விலை நிர்ணயிக்கின்றனர். மற்ற மாநிலங்களில் ஒரு லிட்டர் பால் 40 ரூபாய் விற்கும்போது, இங்கு ஒரு லிட்டர் 27 ரூபாய். இதனால் பாதிக்கப்படுவது உற்பத்தியாளர்கள்தான். அதாவது நாங்கள்தான். தயவுசெய்து பாலின் விலையை உயர்த்துங்கள்; எங்கள் வயிற்றில் அடிக்காதீர்கள். விலையை உயர்த்தி, அதன் லாபத்தை எங்களுக்கு வழங்க வேண்டும். அல்லது பால் விலையை நிர்ணயம் செய்யும் உரிமை அந்தந்தக் கூட்டுறவு அமைப்புகளுக்கு வழங்க வேண்டும்!” என்கிறார் செங்கோட்டுவேல்.
விடிந்து எழுந்ததும் பால் பாக்கெட்டை எடுத்து காபி, டீ போடுவதுடன் நம் வேலை முடிந்தாக நினைக்கிறோம். ஆனால், அதற்குப் பின்னால் எவ்வளவு பிரச்னைகளும் குளறுபடிகளும் இருக்கின்றன?!

பால்… நல்லதா!?
”’வெளுத்தது எல்லாம் பால் அல்ல’ என்பது முதுமொழி. மக்களுக்குத் தெரிந்த, எல்லோராலும் வாங்கக்கூடிய, அதிக சிரமம் இல்லாமல் உண்ணக்கூடிய சத்துள்ள ஆகாரம் பால் மட்டும்தான். ஆனால், பால் என்ற பெயரில் நாம் குடித்துக்கொண்டிருக்கும் வெள்ளை திரவம் உண்மையிலேயே பால்தானா? ‘பால் என்ற பெயரில் நாம் விஷத்தைக் குடித்துக்கொண்டிருக்கிறோம்!” என்று அண்மையில் சொன்னார், குழந்தைகள் மற்றும் மகளிர் நலத் துறைக்கான மத்திய அமைச்சர் மேனகா காந்தி. பாலில் அப்படி என்ன பிரச்னை?
பசும்பாலில் மனிதனுக்குத் தேவையான கால்சியம், புரதம் போன்ற சத்துக்கள் உள்ளன என மேற்குலகில் கண்டுபிடித்தார்கள். அதன் பின்னரே பால் மிகப் பெரிய சந்தைப் பொருள் ஆனது. பாலை பவுடராக்கி நீண்ட நாட்களுக்குப் பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள் வந்த பிறகு, பால் வணிகம் இன்னும் பரந்துவிரிந்து சூடு பிடித்தது. சுமார் 40 வருடங்களுக்கு முன் பாலின் ஜீரணத்தன்மை குறித்த கேள்விகள் உருவாகின. குழந்தைப் பருவத்தில் இருப்பவர்கள் பாலை அருந்தினால் அதில் கெடுதல் எதுவும் இல்லை எனவும், வயதானவர்கள் பால் அருந்தினால் பாலில் உள்ள கொழுப்பு, ரத்தக்குழாய்களில் படிந்து மாரடைப்புக்கு அதுவும் காரணம் ஆகிறது எனவும் விவாதங்கள் எழுந்தன. தமிழகத்தில்கூட கலப்பினப் பசுக்களில் இருந்து எடுக்கும் பாலைத் தொடர்ச்சியாக அருந்துவதால், கணையம் பாதிக்கப்படுகிறதா என ஆய்வுகள் இன்று வரை நடக்கின்றன.
எழுத்தாளரும், இயற்கை விவசாய நிபுணருமான பாமயன், பால் பொருட்களின் பின்னணி குறித்து வேறுபட்ட பார்வையை முன்வைக்கிறார். ”பால் நமக்கான உணவே அல்ல. பழங்காலத்தில் நாம் அதிகமாக மோரையும், குறைந்த அளவில் தயிர், வெண்ணெய், நெய் போன்றவற்றையும் பயன்படுத்திவந்தோம். குளிர்ப்பிரதேசங்களில் வாழ்கிறவர்களுக்கு கொழுப்புச்சத்து அதிகம் தேவை. எனவே ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்களில் பாலின் பயன்பாடு அதிகம். இங்கே நம்முடைய தட்பவெட்ப நிலைக்கு, மோர்தான் சிறந்த பானம். சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்புதான் பால், தமிழர்களின் அன்றாட உணவில் ஒன்று எனப் போதிக்கப்பட்டது. பாலால் என்ன நன்மை என்றால், அது கால்சியம், புரோட்டீன் சத்துக்களைக்கொண்டிருக்கிறது எனச் சொல்வார்கள். ஆனால், நமது தானிய உணவுகளிலும் கால்சியம், புரோட்டீன் சத்துக்கள் கிடைக்கின்றன. அதில் கெடுதல் எதுவும் இல்லை. பொதுவாக அதிக பால் உண்ணும் குழந்தைகள் புஷ்டியாக கொழுகொழு என இருப்பார்கள். ஆனால் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பதற்கு பால் உண்டாக்கும் சளியும் ஒரு காரணம்!” என்கிறார்.
ஆனால், அலோபதி மருத்துவர்கள் இந்தக் கருத்தை முற்றாக மறுக்கிறார்கள். ”பாலால் நோய்கள் வருகின்றன என்பது அறிவியல்பூர்வமாக, மருத்துவரீதியாக நிரூபிக்கப்படவில்லை. பால் இன்றைய மனித வாழ்வில் தவிர்க்க முடியாத ஊட்டச்சத்து உணவு. இந்த நிலையில் கலப்படம் இல்லாத தரமான பாலை மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதுதான் நம் கோரிக்கையாக இருக்க வேண்டும். மாறாக, பாலே வேண்டாம் எனச் சொல்வது எப்படிச் சரி? கால்சியம் உள்பட புரதச் சத்துள்ள உணவுப் பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்கிச் சாப்பிடுவது, சாதாரண ஏழை மக்களுக்கு இயலாத காரியம். அவர்களுக்கு எட்டிய ஊட்டச்சத்து பானம்  பால் மட்டுமே! அதற்கும் சிக்கல் உண்டாக்கினால்,  பெரும்பான்மை மக்கள் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக பலவீனம் அடைவார்கள். ஆகவே, அறிவியல் அடிப்படை இல்லாத இதுபோன்ற யூகங்களை மக்கள் நம்பக் கூடாது!” என்கிறார் அரசு மருத்துவர் ஒருவர்.
நன்றி-ஆனந்த விகடன்

No comments:

Post a Comment