Tuesday, July 4, 2017

கர்ணன் திரைப் படத்தை வைத்து ஒரு இசை அலசல் !!!!!


*கர்ணன் திரைப் படத்தை வைத்து ஒரு இசை அலசல் !!!!!

Cine Songs

 இசை மதிப்பீடு:*

*தமிழ் திரை உலகில் வந்த கர்ணன் திரைப்படம் ஒரு இசைக் காவியம் என்றால் மிகை ஆகாது.*

இந்த படத்தில் உள்ள டைட்டில் சாங் முதல் கடைசி பாடல் வரை உள்ள பாடல்கள் ஒவ்வொன்றும் கர்நாடக மற்றும்
ஹிந்துஸ்தானி இசை கிளாச்சிக் ஆக உள்ள ராகங்களைக் கொண்டு நேர்த்தியாக அமைக்கப்பட்ட இசை.
ஒவ்வொரு பாடலும் அந்தந்த ராகங்களுக்கு ஒரு ஷோ கேஸ் பாடலாக விளங்கும் வண்ணம் அவ்வளவு அற்புதமாக
MSV /TKR இரட்டையர் இசைத்திருப்பார்கள் !

அவற்றைப் பற்றி ஒரு சிறு கண்ணோட்டம் தான் இது.

முதலில் :
“பெற்றவர் வீதியில் பிள்ளையை விட்டெறிந்தால்
குற்றமுடையோர் அந்த குழந்தைகளா ?
பெற்ற மக்கள் சுற்றமும் அந்த சுய மதிப்பும் விட்டனரே
அர்ப்பணம் செய்தோம் அவர்களுக்கு “ என்ற டைட்டில் .

1. முதலில் கர்ணனை அறிமுகப்படுத்தி வரும் பாடலே அருமை. அது டைட்டில் சாங் : ‘மன்னவர் பொருள்களைக் கைக் கொண்டு நீட்டுவார் மற்றவர் பணிந்து கொள்வார் , மாமன்னன் கர்ணனோ தன் கரம் நீட்டுவான் மற்றவர் எடுத்துக் கொள்வார் .

வலது கை கொடுப்பதை இடது கை அறியாமல் வைப்பவன் கர்ண தீரன்.வறுமைக்கு வறுமையை வைத்ததோர்
மாமன்னன் வாழ்கவே வாழ்க வாழ்க ‘ என்ற இந்த பாடல் TMS பாடியது ; மோகன ராகம் !

2. துரியோதனன் அந்தப்புரத்தில் அவன் மனைவி பானுமதி பாடும் பாடல் களை கட்ட வரும் .அது என்னுயிர் தோழி கேளொரு சேதி இது தானோ உங்கள் மன்னவன் நீதி – என்று P.சுசீலா பாடல் :

அருமையான பிருகாக்களுடன் வரும் – இதன் ராகம்: ஹமீர் கல்யாணி!

3. பிறகு கர்ணன் அங்க தேசத்து மன்னனாக மாறிய பிறகு அரியணை ஏறி அமரும் போது இரு புலவர்கள் பாடுவார்கள் .

முதல் பாடல் சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய ‘மழை கொடுக்கும் கொடையும் ஒரு இரண்டு மாதம் ‘ என்ற பாடல் – இது ஹிந்தோளம் ராகம்.

4. கூடவே இன்னொரு புலவர் பாடுவது திருச்சி லோகநாதன் அவர்கள் பாடிய பாடல் : ‘நாணிச் சிவந்தன மாதரார்

கண்கள் நாடு தோறும் நடந்து சிவந்தன பாவலர் கால்கள் , நற்பொருளை தேடி சிவந்தன ஞானியர் நெஞ்சம் –

தினம் கொடுத்து தேய்ந்து சிவந்தன கர்ண மாமன்னன் திருக்கரமே’ – இது கானடா .

5. பிறகு தன் தந்தை சூர்யனை வழிபட கர்ணன் வருகிறான் – அங்கே அவன் தன் தந்தையை வணங்கி பாடும் பாடல் : ‘ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி அருள் பொங்கும் முகத்தைக் காட்டி இருள் நீக்கும் தந்தாய் போற்றி ‘ என்று ஆதித்ய ஹ்ருதயம் ஸ்தோத்ரத்தின் தமிழாக்க பாடலை TMS, சீர்காழி கோவிந்தராஜன்
,திருச்சி லோகநாதன் மற்றும் PBS அனைவரும் கோரஸ் ஆக பாடுகிறார்கள் . –

இந்த ராகம் : ரேவதி. குறிப்பு : இந்த ரேவதி ராகம் தான் நாம் இன்று உச்சாடனம் செய்யும் வேத கோஷத்திற்கு அடிப்படை!

6. கர்ணன் இடம் கூடப்பிறந்த கவச குண்டலத்தைப் பறிக்க அர்ச்சுனனின் தந்தையாகிய இந்திரன் அந்தணர்
வேடத்தில் வந்து யாசிக்கிறான்-

அப்போது அவன் பாடிய பாடல்: ‘என்ன கொடுப்பான் எவை கொடுப்பான் என்றிவர்கள் எண்ணும் முன்னே பொன்னும் கொடுப்பான் பொருளும் கொடுப்பான் போதாது போதாது என்றால் – இன்னும் கொடுப்பான்

இவையும் குறைவென்றால் எங்கள் கர்ணன் , தன்னைக் கொடுப்பான் தன் உயிரும் தான் கொடுப்பான்
தயாநிதியே – என்ற இந்த PBS பாடல் ஹம்சானந்தி ராகம்!

7. பிறகு கர்ணன் பிரம்மாஸ்திரத்தை பெறுவதற்காக பரசுராமரிடம் வித்தை கற்கிறான்- அப்படி பயிற்சி பெறும் போது சொல்லப்படும் ஸ்லோகம்- ‘குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மஹேஸ்வரஹ : இது வரும் ராகம் –

மாயா மாளவ கௌளை (இது படத்தில் மட்டும் வரும் ஒரு சிறு பாடல்)

8. பிறகு கர்ணனும் சுபாங்கியும் சந்தித்த பிறகு பிரிந்த பிறகு சுபாங்கி கர்ணனை நினைத்து தன் அந்தப்புரத்தில்
பாடும் பாடல் : கண்கள் எங்கே நெஞ்சமும்அங்கே – P.சுசீலா பாடிய இந்த பாடல் அமைந்த ராகம் – சுத்த தன்யாசி

9. பிறகு கர்ணனும் சுபாங்கியும் ஒருவரை ஒருவர் நினைத்து கனவில் பாடும் ஒரு அற்புத பாடல் –

‘இரவும் நிலவும் வளரட்டுமே இனிமை சுகங்கள் பெருகட்டுமே –‘

அருமையான இந்தப் பாடல் அமைந்த ராகம்: சுத்த சாரங்கா!

இந்த பாடலை பாடியவர்கள் : TMS மற்றும் P. சுசீலா .

10. கர்ணன் தன் மாமனாரால் அவமதிக்கப்பட்டு வீடு திரும்பியதும் சுபாங்கி பாடுவது –‘ கண்ணுக்கு குலம் ஏது-

P.சுசீலா பாடிய இந்த பாடல் அமைந்த ராகம்- பஹாடி !

11. கர்ணன் மனைவி சுபாங்கியை அவள் தாய் வீட்டில் அழைத்து வர சொன்ன போது அவளை வழி அனுப்ப துரியோதனன் மனைவி பானுமதி பாடும் பாடல் : ‘போய் வா மகளே போய் வா ‘ இந்த பாடலை பாடியது

சூலமங்கலம் ராஜலக்ஷ்மி – இந்த பாடல் ராகம்: ஆனந்த பைரவி.

12. கர்ணன் மனைவி சுபாங்கி கர்ணன் பேச்சைக் கேளாமல் தாய் வீடு சென்று தாய் வீட்டில் வளைகாப்பு நடத்திக்கொள்ள சென்றபோது தந்தையால் அவமதிக்கப் பட்டு கணவனிடம் திரும்பி வந்து துரியோதனன் மனைவி பானுமதியால் ஆதரிக்கப் பட்டு அவளை வாழ்த்தி பானுமதி பாடும் பாடல் :

மஞ்சள் முகம் நிறம் மாறி மங்கை உடல் உரு மாறி கொஞ்சும் கிளி போல் பிள்ளை உருவானதே-

இது ராக மாலிகை;

முதலில் வருவது – காபி ராகம் ;

பிறகு “மலர்கள் சூடி “ என்று வருவது சுத்த சாவேரி.

13. பிறகு குருக்ஷேத்திர யுத்தம் துவங்கியவுடன் அர்ஜுனன் தன் உறவினர்கள் அனைவரையும் யுத்த களத்தில் தனது எதிரிகளாக பார்த்து மனம் தளர விட்டு தான் போர் புரியப் போவதில்லை என்று கிருஷ்ணனிடம் கூறி தன் காண்டீப வில்லை கீழே போட்டு அமர்ந்த போது கிருஷ்ணனால் உபதேசம் செய்யப் பட்ட போது வந்த பாடல்

“மரணத்தை எண்ணி கலங்கிடும் விஜயா’ !

இந்த பாடலை இயற்றிய கண்ணதாசனை எவ்வளவு பாராட்டினாலும் தகும் !

ஒரு சாதாரண பாமரனுக்கும் புரியும் வகையில் இந்த கீதோபதேசத்தின் சாராம்சத்தை சிறிய வார்த்தைகளில்
வடித்து அவர் இந்த பாடலை இயற்றி இருக்கிறார்.

இந்த பாடலுக்கு அட்சர லக்ஷம் பொற்காசுகள் கொடுக்கலாம் – அவ்வளவு சிறப்பான பாடல் !

இந்த பாடலை மனம் உருகும் வகையில் பாடிய சீர்காழி கோவிந்தராஜனை நாம் எப்படி பாராட்டுவது என்றே
எனக்கு தெரியவில்லை .

இந்த பாடல் அமைந்த ராகங்கள் :

மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா- நாட்டை :

என்னை அறிவாய் எல்லாம் எனது உயிர் என கண்டு கொண்டாய் – இது சஹானா ;

புண்ணியம் இதுவென்று உலகம் சொன்னால் அந்த புண்ணியம் போகட்டும் கண்ணனுக்கே – இது மத்யமாவதி !

மொத்தத்தில் இந்த பாடல் ஒரு அருமையான ராக மாலிகை!

14. யுத்த களத்தில் அம்புகளால் வீழ்த்தப் பட்டு சாகும் தருவாயில் கர்ணன் செய்த புண்ணியங்களின் பலனாக தர்ம தேவதையே கர்ணனை காப்பாற்றிக்கொண்டு இருக்கும் உச்ச கட்டத்தில் அவனிடம் ஏழை அந்தணன் போல் வேடமிட்டு அவன் செய்த புண்ணியங்களை எல்லாம் தாரை வார்த்து கொடுக்க கிருஷ்ணன் யாசித்த போது சிறிதும் தயங்காமல் இப்போதும் தன்னால் கொடை செய்ய ஒரு அருமையான சந்தர்ப்பம் கிடைத்ததே என்று
மகிழ்ந்து தன் தான பலன்களையெல்லாம் அருகில் யுத்த களத்தில் தாரை வார்க்க நீர் இல்லாததால் தன் குருதியினால் தாரை வார்த்துக் கொடுக்கும் முன் வரும் பாடல் “ உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காததென்பது வல்லவன் வகுத்ததடா ‘ இந்த பாடல் அமைந்த ராகம் : ஆஹிர் பைரவி என்கிற சக்ரவாகம் !

இந்த பாடலை பாடிய சீர்காழி கோவிந்தராஜன் இன்றளவும் நம்முடைய மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்
என்றால் மிகை ஆகாது.

இந்த படம் வந்து நாற்பது வருடங்கள் ஆகியும் இந்த பாடல் ஒலிக்காத இசை மேடையே கிடையாது என்று சொல்லலாம்.

இந்த பாடலின் இசையாகட்டும் இந்த பாடலில் உள்ள கருத்துக்களாகட்டும் நம்மை கண் கலங்கச் செய்து
கொண்டிருக்கின்றன இன்றளவும் !

தி எவர் ஹிட் சாங் !!

(ஒரு குறிப்பு : இந்த பாடலில் வரும் செஞ்சோற்று கடன் தீர சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா.....
வஞ்சகன் கண்ணனடா ! ‘’ என்று வருமே அது கிருஷ்ணரால் தரப்படும் ஒப்புதல் வாக்குமூலம்.

இது உண்மையில் மகாபாரத போர் கடைசியில் துரியோதனன் வீழ்ந்த பிறகு தன் மரணத்தை எதிர் பார்த்து அவன்
கிருஷ்ணனை நிந்திக்கிற போது ‘கிருஷ்ணனும் ‘ஆமாம் , வஞ்சகத்தால் தான் நாம் ஜெயித்தோம்.

இந்த வெற்றி வஞ்சத்தால் தான் பெற்றது ‘ என்று கூறுகிறான். அதைக் கூறும் போது துரியோதனன் மேல் பூ மாரி
பொழிகிறது. கோவிந்தனும் வெட்கித் தலை குனிகிறான் “.)

15. இந்த பாடல்களைத் தவிர படத்தில் வராத இன்னொரு அருமையான பாடல் ஒரு டூயட் “ மகாராஜன் உலகை
ஆளுவான் அந்த மகா ராணி அவனை ஆளுவாள் “ இந்த பாடல் அமைந்த ராகம் : கரஹரப்ரியா ! இந்த பாடலை
பாடியவர்கள் TMS /P.சுசீலா !

16. இந்த படம் முடிகையில் வரும் பாடல் ஒரு பகவத் கீதை ஸ்லோகம் .......
‘பரித்ராணாய சாதூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம்
தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே “

என்று வரும் ஒரு ஸ்லோகம் – நல்லவர்களை காப்பாற்றுவதற்கும் கெட்டவர்களை அழிப்பதற்கும் தர்மத்தை
நிலை நாட்டுவதற்கும் யுகந்தோறும் அவதரிக்கிறேன் ‘ என்ற கீதையின் வாசகம் வரும் ராகமும் மத்யமாவதி

படித்து மகிழ்ந்தது: கேட்டு மகிழ்ந்தது. உங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன்

Tuesday, February 7, 2017

அசல் ஆவணங்கள் சரிபார்ப்பு அவசியமா?



சென்னை வேளச்சேரியில் அடுக்குமாடிக் கட்டிடம் ஒன்றில் ஒரு வீடு வாங்க முடிவுசெய்தார் ஒரு நண்பர். வங்கியில் வீட்டுக் கடன் பெற்று அதை வாங்கத் தீர்மானித்தார். ஒவ்வொரு வங்கியிலும் தேர்வுசெய்யப்பட்ட வழக்கறிஞர்கள் குழு ஒன்று உண்டு. வங்கிக் கடன் பெற வேண்டுமென்றால் அவர்களில் ஒருவரிடம் அந்தச் சொத்து தொடர்பான ஆவணங்களைப் பரிசீலனைக்கு அளிக்க வேண்டும். சொத்தில் எந்த வில்லங்கமும் இல்லை என்று அவர்கள் சான்றிதழ் அளித்த பிறகுதான் வீட்டுக் கடன் அளிப்பது தொடர்பாக வங்கி முடிவெடுக்கும்.
வழக்கறிஞர் வீட்டுக்குச் செல்வதற்குமுன் தற்செயலாக என் வீட்டுக்கு அந்த ஆவணங்களுடன் வந்திருந்தார் அந்த நண்பர். அவற்றை வாங்கிப் பார்த்த நான், “இவை நகல்கள்தானே. அசல் இல்லையே!’’ என்றேன். “நானும் கட்டுநரிடம் கேட்டேன். ‘ஒரிஜினல் ஆவணங்களைத் தருவது எங்களுக்குப் பாதுகாப்பானது இல்லை. தவிர இந்த நிலத்தில் 32 வீடுகளைக் கட்டப் போகிறோம். அவ்வளவு பேருக்கும் நாங்கள் அசல் ஆவணங்களைத் தர முடியாது’ என்று சொல்லி விட்டார்” என்றார் நண்பர்.
அசல் ஆவணங்கள் இல்லையென்றால் வழக்கறிஞர் சான்றிதழ் கொடுக்க மாட்டார் என்று கூறினேன். ஆனால், இரண்டே நாட்களில் நண்பரிடமிருந்து தொலைபேசித் தகவல். வழக்கறிஞர் ‘க்ளியர்’ செய்துவிட்டாராம். அதாவது நகல் ஆவணங்களைப் பார்த்தே தன் பரிந்துரையை அவர் அளித்திருக்கிறார்.
நகல் அசலாகுமா?
இந்தப் போக்கு அதிகமாகிவருகிறது என்பதைக் காண முடிகிறது. வங்கி எதற்காக இந்த நடைமுறையைத் தேர்ந்தெடுக்கிறது என்பதை யோசியுங்கள். ‘சொத்துரிமையில் ஏதோ பிரச்சினை இருந்தால் அது கடன் அளித்தவரின் உரிமையைப் பாதிக்கும். சொத்து வாடிக்கையாளரின் கையைவிட்டுப் போனால் அவரால் வங்கிக் கடனைச் சரியாகச் செலுத்த முடியாமல் போகும். இதனால் வங்கிக்கும் நஷ்டம். இதற்காகத்தான் வங்கிகள் ‘வழக்கறிஞர் கருத்து’ (Lawyer’s opinion) என்பதைப் பெறுகிறது. அதுவும் திறமையான அனுபவமுள்ள வழக்கறிஞர்களைத்தான் இந்தக் குழுவில் வங்கி சேர்த்துக் கொள்ளும்.
வழக்கறிஞருக்கு சில ஆயிரங்களை நீங்கள்தான் கொடுக்க வேண்டியிருக்கும் என்றாலும் இது ஒரு பாதுகாப்பான முறை. சொல்லப்போனால் வங்கி மூலமாகக் கடன் பெறவில்லை என்றால்கூட நீங்களாகவே கூட ஒரு சொத்தை வாங்குவதற்குமுன் இப்படி ஒரு வழக்கறிஞரின் மூலம் அந்த ஆவணங்களைச் சரிபார்த்துக் கொள்வது நல்லது.
ஆனால் இப்போதெல்லாம் ஆவண நகல்களை மட்டும் சரிபார்ப்பது என்பது வழக்கமாகி வருகிறது. இது ஆபத்தான ஒரு பழக்கம். கட்டுநருக்கு அவர் தரப்பில் சில தயக்கங்கள் இருப்பதும் இயல்புதான். எந்த ஒப்பந்தமும் போடப்படாத நிலையில் உங்களை நம்பி அவர் எப்படி அசல் ஆவணங்களைக் கொடுப்பார்? அதே சமயம் உங்களைப் பொறுத்தவரை ஒப்பந்தம் போட வேண்டுமென்றால் அதற்கு முன்பாக அந்த ஆவணங்களின் நம்பகத் தன்மையை வழக்கறிஞர் மூலம் சரிபார்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறதே!
இந்த இரண்டு எதிர்கோணங்களையும் சந்திக்க வைக்கும் புள்ளி ஒன்று உண்டு. என் நண்பருக்கு நான் கூறிய ஆலோசனை இது. (இந்த வழிமுறையை நானும் முன்பு பின்பற்றி இருக்கிறேன்).
ஒரு மாற்று யோசனை
வழக்கறிஞரே நேரடியாகக் கட்டுநரின் அலுவலகத்துக்கு வந்து அசல் ஆவணங்களைச் சரிபார்க்கலாம். இதற்கு கட்டுநர் மறுப்பு சொல்ல மாட்டார். (கூடவே அவரும் உட்கார்ந்து கொண்டிருப்பார், அவ்வளவுதான்).
ஆனால் இதில் ஒரு சங்கடம் உண்டு. அதிகமாக அலுவல்கள் உள்ள மூத்த வழக்கறிஞர்கள் இதற்கு உடன்பட மறுக்கலாம். அல்லது இதற்கான நாளை தள்ளிப்போட்டுக் கொண்டடே செல்லலாம். அதற்கான தீர்வு இது. நீங்கள் அளிக்கும் நகல் ஆவணங்களை அந்த சீனியர் வழக்கறிஞர் தனது இருப்பிடத்திலேயே சரிபார்க்கட்டும். பில்டரின் அலுவலகத்துக்கு அவர் தன் ஜூனியர் ஒருவரை அனுப்பி வைக்கலாம். அந்த ஜூனியரின் முக்கிய வேலை அந்த நகல் உண்மையான நகல்தானா என்பதை அசலுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதுதான்.
பல்வேறு காரணங்களால் இந்த நடைமுறைக்கும் வழக்கறிஞர் ஒத்துவரவில்லை என்றால் நீங்கள் இந்தத் திட்டத்திலிருந்து விலகிக்கொள்வதுதான் நல்லது. அல்லது குறைந்தபட்சமாக அந்த ஜூனியர் வழக்கறிஞருக்குப் பதிலாக நீங்களே கட்டுநரின் அலுவலகத்துக்குச் சென்று அசலையும், நகலையும் கொஞ்சம் விவரமாக, நிதானமாக ஒப்பிட்டுப் பார்த்து விடுங்கள்.
நகல்களில் எந்தவித ஏமாற்று வேலைகள் பொதுவாக நடைபெறுகின்றன என்பதைப் பார்க்கலாம். கையெழுத்தில் இது நடைபெற வாய்ப்பு உண்டு.
பிரச்சினைகள் என்னென்ன?
இதோ ஓர் எடுத்துக்காட்டு. ஒரு வீட்டின் உரிமையாளர் யாருக்குமே ‘பவர் ஆஃப் அட்டர்னி’ கொடுக்காத போதும் மோசடிக்காரர் ஒரு ‘பவர் ஆஃப் அட்டர்னி’ ஆவணத்தை முத்திரைத் தாளில் தட்டச்சு செய்து அதற்குக் கீழே வேறொரு இடத்திலிருந்து உரிமையாளரின் கையெழுத்தை அந்த ஆவணத்தில் நகல் செய்யலாம்.
அசல் ஆவணத்தைப் பார்த்தாலே இந்த வித்தியாசம் புரிந்துவிடும். ஆனால் அதன் நகலைப் பார்க்கும்போது வித்தியாசம் தெரியாமல் போகலாம். (ஒரு சின்ன குறிப்பு: இதுபோன்ற நகல்களில் மோசடியாகச் சேர்க்கப்பட்ட கையெழுத்து கொஞ்சம் மங்கலாகத் தெரியும். அதைக் கொண்டு ஓரளவு அது மோசடி ஆவணம் என்று கண்டுபிடிக்கலாம். ஆனால் இப்போதெல்லாம் பிரிண்டர் செட்டிங்கை மாறுதல் செய்து இப்படி ஒட்டப்பட்ட கையெழுத்தும் தெளிவாகவே இருக்கும்படி மோசடி மன்னர்கள் பார்த்துக் கொள்ளத் தொடங்கி விட்டனர்).
எனவே மீண்டும் நாம் கூறுவது இதைத்தான். அசல் ஆவணங்களைச் சரிபார்க்காமல் ஒருபோதும் எந்தச் சொத்தையும் வாங்காதீர்கள்.

Tuesday, January 17, 2017

நிலம் வாங்கும் முன்...



நிலத்தில் முதலீடு செய்வது என்பது மற்ற முதலீடுகளைக் காட்டிலும் அதிக வருமானம் ஈட்டித் தரும் எனச் சொல்லப்படுகிறது. ஆனால் நிலத்தில் முதலீடு செய்யும் முன் சில அம்சங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
1. தாய்ப் பத்திரம் கடந்த 30 ஆண்டுகளுக்குச் சரி பார்க்கப்பட வேண்டும்.
2. தற்போது உரிமையாளாரின் அசல் ஆவணங்கள் சரிபார்க்கப்பட வேண்டும். மேலும் தற்போதைய விற்பனையாளரின் பெயரில் பட்டா உள்ளதா என்று உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் அந்தப் பட்டாவை ஆன்லைனில் சரிபார்க்க வேண்டும்.
3. நில அளவைப் படங்கள் (Field Measurement Book FMB) சரிபார்க்கப்பட வேண்டும்.
4. நில உபயோக வரைபடத்தை (Land Use Maps) ஆன்லைன் மூலம் சரிபார்க்க வேண்டும். சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் (CMDA) கீழ் உள்ள அனைத்து கிராமங்களிலும் நில உபயோக வரைபடம் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் இதில் குடியிருப்புப் பகுதிகளில் என்று குறிப்பிடப்பட்டிருந்தால் அங்கு வணிகம் அல்லது தொழிற்சாலை கட்டுவதற்கான கட்டிடங்களுக்கு அனுமதி வழங்கப்படாது.
5. நிலம் அங்கீகரிக்கப்பட்ட மனையில் உள்ளது என்று உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். நகர ஊரமைப்புத் திட்ட இயக்ககம் (DTCP) அல்லது சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் (CMDA) அங்கீகரிக்கப்பட்ட மனையாக இருக்க வேண்டும். பஞ்சாயத்துத் தலைவரால் அங்கீகரிக்கப்பட்ட மனையாக இருக்கக் கூடாது. ஏனெனில் தமிழ்நாட்டைப் பொருத்த வரை வீட்டு மனைக்கு அங்கீகாரம் வழங்கும் அதிகாரம் பஞ்சாயத்துத் தலைவருக்கு இல்லை. மேலும் அங்கீகரிக்கப்பட்ட மனையின் விவரங்கள் ஆன்லைன் மூலம் சரிபார்க்கப்பட வேண்டும் (இச்சேவை சிஎம்டிஏவின் இணையதளத்தில் 2000-ம் ஆண்டு முதல் அங்கீகரிக்கப்பட்ட மனையின் விவரங்கள் ஆன்லைனில் சரிபார்க்கலாம். அதே டிடிசிபியால் கடந்த 5-6 ஆண்டுகளாக அங்கீகரிக்கப்பட்ட மனையின் விவரங்கள் ஆன்லைனில் சரிபார்க்கலாம்.
6. அங்கீகரிக்கப்பட்ட மனையின் நிபந்தனை ஏதேனும் இருந்தால் அந்த நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளனவா என்று சரிபார்க்க வேண்டும்.
7. உயரழுத்த மின் கம்பிகள் மனையின் மேல் இருக்கக் கூடாது.
8. மனை வாங்கும் முன் அந்த மனையின் மீது அரசாங்கத்திடமிருந்து கட்டுபாடுகள் ஏதும் இல்லை என்று உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு அரசாங்கத்தால் பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கு இலவசமாக நிலங்கள் வழங்கப்படும். அந்த நிலத்தில் இச்சமுதாயத்தைச் சார்ந்தவரைத் தவிர வேறு எவருக்கும் சம்பந்தப்பட்ட நிலங்களை பயனாளி விற்கக் கூடாது போன்ற சில நிபந்தனைகள் குறிப்பிடப்பட்டிருக்கும்.
9. 2,500 சதுர மீட்டருக்கு மேல் (26,900 சதுர அடி) அங்கீகரிக்கப்பட்ட மனை இருப்பின் 10 சதவீத நிலத்தைத் திறந்த வெளி இட ஒதுக்கீடு (Open Space Reservation-OSR) ஒதுக்க வேண்டும். இந்த இடத்தை தானப் பத்திரம் மூலம் அரசுக்குப் பதிவு செய்ய வேண்டும். 10,000 சதுர மீட்டர்க்கு மேல் (1,07600 சதுர அடி) அங்கீகரிக்கப்பட்ட மனை இருப்பின் (சாலையைத் தவிர்த்து) பொதுச் சேவைகளுக்குக் (கல்விக் கட்டிடம், தபால் நிலையம், காவல் நிலையம், பூங்கா) ஒதுக்கீடு செய்ய வேண்டும். மேலும் 10 சதவிகித நிலத்தைப் பொருளாதாரத்தில் பின் தங்கிய நபர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஒருவேளை ஒதுக்கீடு செய்ய முடியாவிட்டால் அந்த 10 சதவீத நிலத்தை நில அமைப்பில் இருந்து 5 கீ.மி. சுற்றளவை உள்ள இடத்தில் அரசாங்கத்திற்குத் தானமாக வழங்க வேண்டும்.
10. நில உரிமையாளாரின் பெயரில் நில வரி செலுத்தப்பட்டுள்ளதா என்று சரிபார்க்க வேண்டும் (சென்னையைப் பொறுத்தவரை 4,800 சதுர அடிக்கு மேல் இருக்கும் நிலங்களுக்கு மட்டும் நில வரி வசூலிக்கப்படுகிறது).
11. ஒரு வேளை நில உரிமையாளர் பவர் பத்திரம் மூலம் முகவருக்குச் சில அதிகாரம் வழங்கியிருந்தால் அந்த அதிகாரம் நிலுவையில் உள்ளதா மற்றும் முதன்மையாளர் (நில உரிமையாளர்) உயிருடன்தான் உள்ளாரா என்று சரிபார்க்க வேண்டும். சார் பதிவாளர் அலுவலகத்திலிருந்து விற்பனையாளர் நகல் ஆவணப் பத்திரம் (Copy Document)) விண்ணப்பித்துப் பெற வேண்டும். மேலும் அந்த நகல் ஆவணத்தை விற்பனையாளர் ஆவணத்துடன் சரிபார்க்க வேண்டும். இவ்வாறாகச் செய்தால் மட்டுமே விற்பனையாளாரின் பத்திரத்தின் அசல் தன்மையை உறுதி செய்ய முடியும்.
12. நிலங்களின் அளவீடு பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளதுபோல் சரியாக உள்ளதா என்று சரிபார்க்க வேண்டும். (நிலத்தைச் சரியாக அளக்க வேண்டும்).
13. நிலத்தின் வழிகாட்டு மதிப்பு (Guidline Value) என்னவென்று பத்திரப் பதிவு இணையதளத்தின் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அந்த வழிகாட்டு மதிப்புக்கு முத்திரை வரி மற்றும் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும்.
14. கடந்த 30 ஆண்டுகளுக்கான சொத்தின் வில்லங்கச் சான்றிதழைச் சரிபார்க்க வேண்டும். சொத்தின் மேல் எந்த ஒரு வில்லங்கமோ அல்லது நீதிமன்ற ஆணையின் இணைப்போ இல்லை என்பதை உறுதிசெய்ய வேண்டும். மேலும் ஆன்லைன் மூலம் வில்லங்கச் சான்றிதழ் விவரங்கள் சரிபார்க்க வேண்டும் (இச்சேவை தற்போது ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, மகாராஷ்ட்ரா, தமிழ்நாடு, ஜார்க்கண்டில் மட்டும்தான் உள்ளது).

Monday, January 2, 2017

சுயதொழிலுக்கு வங்கி கடனுதவி பெறுவது எப்படி?

புதிதாக சுயதொழில் தொடங்க நினைப்பவர்களுக்குக் கிடைக்கும் வங்கிக் கடனுதவி, மானியம் பற்றிய தகவல்களைக் கூறுகிறார் சென்னை எம்.எஸ்.எம்.இ (MSME- Ministry of Micro, Small & Medium Enterprises) வளர்ச்சி மையத்தின் உதவி இயக்குநரான புனிதவதி.
புதிதாகத் தொழில் தொடங்கும் பெண்களுக்கு புதிதாக இயந்திர – தளவாடங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்க அரசு மூன்று திட்டங்களில் கடனுதவி வழங்க உதவி செய்வதுடன், அவற்றில் 25 சதவிகித தொகையை மானியமாகவும் வழங்குகிறது.
1. வேலை இல்லாதோருக்கு வேலை உருவாக்கும் திட்டத்தில் அதிகபட்சமாக சர்வீஸ் தொழில்களுக்கு ரூ.3 லட்சமும், உற்பத்தித் தொழில்களுக்கு ரூ.5 லட்சம் வரையும் கடனுதவி வழங்கப்படுகிறது. இதற்கு மாவட்ட தொழில் மையத்துக்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
2. பாரத பிரதமரின் வேலை உருவாக்கும் திட்டத்தில் அதிகபட்சமாக சர்வீஸ் தொழில்களுக்கு ரூ.10 லட்சமும், உற்பத்தித் தொழில்களுக்கு ரூ.25 லட்சம் வரையும் கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கு http://bit.ly/2aCchF8 என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
3. புதிய சுயதொழில் முனைவோர் வளர்ச்சித் திட்டத்தில் அதிகபட்சமாக சர்வீஸ் மற்றும் உற்பத்தித் தொழில்களுக்கு ரூ.1 கோடி கடனுதவி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்துக்கு www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
  

* முதலில் தாங்கள் தேர்ந்தெடுத்த தொழில், தொழிற்சாலை அமைக்கும் இடம், தொழிலை வெற்றிகரமாக நடத்திச்செல்ல திட்டமிட்ட பிளான் உள்ளிட்ட விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து, தொழில் தொடங்கவிருக்கும் பகுதிக்கு அருகிலுள்ள வங்கியில் வழங்க வேண்டும். திட்ட அறிக்கையை  வங்கி ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், அந்தப் பகுதிக்கு உட்பட்ட மாவட்ட தொழில் மையத்தில் திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் பெற வேண்டும்.
முதல் திட்டத்துக்கு மட்டும் மாவட்ட தொழில் மையத்தில் விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து கொடுக்கலாம். பின்னர் அம்மையத்தினரால், விண்ணப்பதாரர் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார். தொடர்ந்து மேற்கண்ட மூன்று திட்டங்களில் உங்களுக்குப் பொருத்தமானதை தேர்வுசெய்து, உங்களுக்கு கடனுதவி செய்யலாம் என நீங்கள் குறிப்பிட்ட வங்கிக்கு சிபாரிசு செய்வார்கள். தொடர்ந்து வங்கியில் கடனுதவி பெறலாம்.

* எம்.எஸ்.எம்.இ டெவலப்மென்ட் இன்ஸ்டிட்யூட் சார்பில் சுயதொழில் செய்வ தற்கான ஒரு நாள், ஒரு வாரத்துக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாகவும் கட்டண முறையிலும் நடத்தப்படுகின்றன. இதில் தாங்கள் தேர்ந்தெடுத்த தொழில், அதை வெற்றிகரமாகச் செய்வது, மார்க்கெட்டிங், லோன் பெறும் வழிமுறைகள் உள்பட சுயதொழில் பயிற்சியாக அளிக்கப்படும். குறிப்பாக dcmsme.gov.in இணையதளத்தில் சுயதொழில் தொடர்பான தகவல்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கண்காட்சி நிகழ்வுகள், நடப்பு நிகழ்வுகள் குறித்த செய்திகள் வெளியிடப்படும். உள்நாட்டில், வெளிநாட்டில் நடைபெறும் கண்காட்சிகளுக்கு செல்லும் பெண் சுயதொழில் முனைவோர்களுக்கு அவர்களுக்கு ஆகும் பயணச் செலவில் 80-100 சதவிகிதத்தொகை மானியமாகக் கொடுக்கப்படுகிறது. பெண்கள் தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை mahilaehaat-rmk.gov.in என்ற இணையதளத்தில் இலவசமாக டிஸ்ப்ளே செய்யலாம்.
* சுயதொழில் செய்ய நினைப்பவர்கள் தங்களுக்கான துறையை சரியாகத் தேர்தெடுத்து தங்களால் தொடர்ந்து செய்ய முடியுமா என பலமுறை யோசித்து, அதற்கு ஏதாவது தடை இருந்தால் சரிசெய்ய வேண்டும். பின்னர் தாங்கள் தயாரிக்க உள்ள பொருளின் தேவை, போட்டியாளர்கள், அதனை எந்த வழிகளில் விற்பனை செய்தால் வெற்றி கிடைக்கும் என்பதுபோன்ற பல விஷயங்களை ஆராய்ந்த பிறகே, புதிய தொழிலைத் தொடங்க வேண்டும். உற்பத்திப் பொருளை சிறிய அளவில் அக்கம்பக்கத்தினருக்கு விற்பனை செய்து பார்த்தாலே, சாதக பாதக அம்சங்கள் ஓரளவு தெரிந்துவிடும். பின்னர் அதனை மெருகூட்டி, மேம்படுத்தி தொழில் தொடங் கலாம். சுயதொழில் செய்யும் பலருக்கும் மார்க் கெட்டிங் பற்றிய விழிப்பு உணர்வு குறைவாக இருக்கிறது. தரமான பொருளை உற்பத்தி செய்து விற்கத் தெரியாமல் இருப்பவர்களும், மட்டமான பொருளை உற்பத்தி செய்து நன்றாக மார்க்கெட்டிங் செய்பவர்களும் கூட இருக்கிறார்கள். நம் பொருள் தரமாக இருப்பதுடன் அதனை எந்தெந்த வழிகளில் எல்லாம் விற்பனை செய்ய முடியுமோ, அந்த யுக்திகளைக் கையாளுவது பலன் கொடுக்கும். பணம் கொடுத்து மீடியாக்களில் விளம்பரம் செய்வது ஒரு ரகம். தரமான பொருட்களை விற்பனை செய்வதால் ஒரு வாடிக்கையாளர் மூலமாக அடுத்தடுத்த வாடிக்கையாளர்கள் கிடைப்பது மற்றொரு ரகம். கால மாற்றத்துக்கு ஏற்ப நம் பொருட்களை மதிப்புக்கூட்டல் செய்து விற்பனை செய்வதும் அவசியத்தேவை.

* சுயதொழில் தொடங்கும் முன்பு ஆயிரம் முறை யோசிக்கலாம். ஆனால், தொடங்கிய வுடன் ஒருமுறை முறைகூட நெகடிவாக யோசிக்கக் கூடாது. சுயதொழில் செய்தால் ஏற்ற இறக்கம் கட்டாயம் வரும் என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை நஷ்டம் ஏற்பட்டாலும் அதனை தைரியமாக எதிர்கொண்டு மீண்டும் லாபத்தை நோக்கிய பாதையில் செல்ல வேண்டும்” என நம்பிக்கையோடு கூறுகிறார் புனிதவதி.