Tuesday, November 27, 2012

அருள் மழை




யார் துறவிஎது துறவு?’ என்கிற கேள்விக்கு இலக்கணமாகபெரியவர்திகழ்ந்த ஒரு அரிய சம்பவம் ...
பெரியவர் அறுபது வயதை தொட்டிருந்த சமயம்பக்தர்கள் அவருக்குதங்க கிரீடம் சூட்டி கௌரவிக்க எண்ணினார்கள்.
ஆந்திர மாநிலம்விஜய வாடாவில் பெரியவரின் இந்த வைபவத்தைஒட்டி ஒரு தங்க கீரீடமும்இரண்டு லட்ச ரூபாய் காணிக்கையும் வழங்கதீர்மானித்திருந்தனர்.

...
இதுபற்றிய தகவல் பெரியவரை அணுகவுமேஅதற்கான வசூலைதடுத்துவிட்டார் பெரியவர்அவ்வேளையில் அவர் சொன்னதுதான் "யார்துறவி – எது துறவுஎன்பதற்கு இலக்கணம்!

ஸ்தாபன பலம் என்று ஒன்று மிதமிஞ்சி ஏற்பட்டுவிட்டாலேஅதன்அதிபதியனாவன் ஆத்ம பலம் சம்பாதிக்க சிரமப்பட வேண்டியதில்லைஎன்னும் ஆபத்து ஏற்பட்டுவிடுகிறதுசன்னியாசி என்பவனைஒருஉடைமையுமில்லாத ஏகாங்கியாகஅவன் தன் ஊர் என்றுசொல்லிக்கொள்வதற்குக்கூடஒரு இடம் இருக்க வேண்டாமென்றுசதாஊர்ஊராக சஞ்சாரம் பண்ணும்படிதான் சாஸ்திரம் கூறியுள்ளது.
இருந்தும்சமூகத்துக்கு வழிகாட்ட ஒரு அமைப்பு தேவைப்பட்டுஅதுதான் மடம் என்றானதுஇதை ஒரு தவிர்க்க முடியாத தீமை(Necessary evil) என்றுதான் கூற வேண்டும்.தவிர்க்க முடியாத இந்தத்தீமையை நன்மையாக மாற்றிக்காட்டும் கடமையே சன்னியாசியின்கடமைஇந்தக் கடமையின் போதுஅவனது ஆன்ம தபோ பலத்தைவிட,பணத்தின் பலம் பெரிதாகி விடாமல் அவன் பார்த்துக் கொள்ளவேண்டும்.காஞ்சிமடம் அவசியச் செலவுக்கே கஷ்டப்பட்ட காலம்உண்டுஆனால் சந்திரமௌலீஸ்வரர் கருணையாலே அந்த கஷ்டம்நீங்கியதுஇந்த மாதிரி கஷ்டங்களை ஈஸ்வர சோதனையாகவேகருதினேன்உத்தமமா பார்த்துக்கொள்வது அவன்தான்;பணமல்ல.எனவேஎப்போதும் Nil Balanceலேயே மடம் இருக்கும்படிஜாக்ரதையாக நிர்வகித்து வருகிறேன்இன்று இரண்டு லட்சம் என்றுசர்ப்ளஸ்ஸில் போகப் பார்த்ததுஇதற்கு ‘ப்ளஸ்’ கூடாது என்றுகருதுகிறேன்ஸ்வாமிவாரு தடுத்து விட்டாரே எனவருத்தப்படவேண்டாம்பணத்தை வாங்கிக்கொண்டுநான் பண்ணுவதுஆசீர்வாதமாக இருக்காதுஅதற்காக பணமே வேண்டாம் என்றுகூறவில்லைநெருக்கடி ஏற்படும்போதுஉங்களிடம்தான் பிட்சைகேட்டு நிற்பேன்தேவைக்குத்தான் பணம்சன்னியாசிக்கு பணத்தைவிடஆத்மபலம்தான் பெரும் பணம்…!’
நன்றி: "தீபம்" (கல்கி வழங்கும் ஆன்மீக இதழ்)

எனது இந்தியா (கலையை அழிக்கும் கொடுமை!) - எஸ். ராமகிருஷ்ணன்....


அலங்காரமும் வசீகரமும் மாயமும் கொண்ட இந்த ஓவியங்களை யார் வரைந்தது என்பது தெரியவில்லை. ஆனால், அவற்றை வரைந்த ஓவியன் மகத்தானவன். இங்குள்ள குகைகளில் காணப்படும் புடைப்புச் சிற்பங்கள் மிக அற்புதமானவை. குறிப்பாக, மாபெரும் புத்தர் சிலைகள். அவை, புத்தரின் அடர்ந்த மௌனமும் அழகும் ஒருங்கேகொண்டவை. கல்லில் கசியும் புன்னகையைக் காண வேண்டும் என்றால், இந்தச் சிற்பங்களை ஒரு முறை அவசியம் பாருங்கள்.  இந்தியக் கலையின் உச்சமே அஜந்தா. அது ஒரு கல்லில் வடிக்கப்பட்ட கனவு. பௌத்தக் கலையின் உன்னதம்.
 உலக அளவில் இதற்கு நிகரான சிற்பங்களை நாம் காண்பது அரிது. மேற்குலகின் சிற்பங்கள் யாவும் உடல் தோற்றத்துக்கு முக்கியத்துவம் தந்து, இயல்பான உருவத்தின் நரம்புகள் வரை சித்திரிப்பதில் தனித்துவம் பெற்றபோது, இந்திய சிற்ப மரபு மனிதனின் ஆன்மாவை முதன்மைப்படுத்தி உருவங்களை இயல்பான நிலையில் இருந்து உருமாற்றி, முத்திரைகள், பாவங்கள், குறியீடுகள், சயன நிலைகள் என்று கலையில் இருந்து ஞானத்தை நோக்கி நீள்வதாக அமைந்து இருக்கின்றன. அதன் மகத்தான சாட்சியே அஜந்தா குகைகள்.


அஜந்தா ஓவியங்களில் சிறப்பானதாகக் கருதப்படுபவை புத்தர் வாழ்வோடு தொடர்புடைய ஓவியங்கள். குறிப்பாக, வானுலகத் தேவதை புத்தரை வழிபட பூலோகம் இறங்கி வரும் ஓவியக் காட்சி, கலையின் உச்ச நிலை. இதில் காணப்படும் ஒரே இழுப்பில் வரையப்பட்ட கண்களும் புருவமும் உயிர்ப்புமிக்க கலை வெளிப்பாடு. சிபிச் சக்கரவர்த்தி, புறாவுக்கு ஈடாக தனது சதையை அறுத்துத் தரும் ஓவியமும் அற்புதமான ஒன்றே. நடனமாடும் பெண்களும், யானைகளின் அழகும், தாமரைப் பூக்களின் வசீகரமும், அன்னங்களும் மயில்களும் இணைந்த வளைவுகள் என இந்த ஓவியங்கள் கண்கொள்ளாக் காட்சிகள்.

எல்லோராவின் குடைவரைக் கோயில்கள் ஒளரங்கபாத் நகரில் இருந்து 30 கி.மீ. தூரத்தில் இருக்கின்றன. மேற்குத் தொடர்ச்சி மலையைச் சேர்ந்த சஹ்யாத்திரி மலைத் தொடரில் தெற்கு, வடக்காக அமைந்துள்ள இந்தக் குகைக் கோயில்கள் புத்த மதக் குகைகள், இந்து மதக் குகைகள், சமணர்களின் குகைகள் என்று மூன்று வகையாகக் காணப்படுகின்றன.

எல்லோராவின் 34 குடைவரைக் கோயில்களை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். ஒன்று முதல் 12 வரையிலான குகைகள் பௌத்தர்களுக்கு உரியவை. 29 வரையிலான குகைகள் இந்துக்களுக்கு உரியவை. எஞ்சியவை சமணர்களுக்கு உரியவை.


தென்கோடியில் பௌத்தக் குகைகள் அமைந்​துள்ளன. அரை வட்டப் பாதையின் நடுவில் இந்து மதக் குகைகளும், அதன் பின்னர் வடக்கே சமணக் குகைகளும் காணப்படுகின்றன.

பௌத்த குடைவரைக் கோயில்கள் பிரமாண்ட​மான சிற்ப நுணுக்கங்களுடன் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. 10 அடி மற்றும் 15 அடி உயரத்துக்கு புத்தர் சிலைகள் இங்கே இருக்கின்றன. இங்குள்ள கைலாசநாதர் கோயில் இந்தியச் சிற்பக்கலையின் மிகச் சிறந்த சாதனை. ஒற்றைக் கல்லில் செதுக்கப்​பட்ட உலகிலேயே மிகப் பெரிய கோயில் இதுவே. ஒரு பெரும்பாறை உடைக்கப்பட்டு ஒரு பக்கம் கோயிலாகவும் அதன் வெளிப்புறம் பிரகாரமாகவும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. அஜந்தா குகை ஓவியங்களின் சாயலில் அமைந்தது தமிழகத்தில் உள்ள சித்தன்னவாசல். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இந்தக் குடைவரை ஓவியங்கள், சமண ஓவிய மரபைச் சார்ந்தவை. இவை, கி.பி. 7 மற்றும் 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்கின்றனர். சித்தன்னவாசல் ஓவியங்களில் காணப்படும் அரசன் - அரசி, எருமைகள் நிறைந்த தாமரைக் குளம், மீன்கள், வாத்துகள் போன்றவை ஓவிய நுட்பத்தின் சான்றாகக் காணப்படுகின்றன. அஜந்தா, எல்லோராவின் பாணியில் அமைந்தவை சோழர் கால ஓவியங்கள். இந்த ஓவியங்கள் பிரஸ்கோ வகையைச் சேர்ந்தவை. இவை, தஞ்சைப் பெருவுடையார் கோயிலின் கருவறை முதல் தளச் சுற்றுச் சுவரில் வரையப்பட்டு இருக்கின்றன. தஞ்சை ஓவியங்களை உற்று நோக்கும்போது அஜந்தா ஓவியங்களின் முகத்தோற்றம் போலவே இருப்பதை உணர முடிகிறது.

அஜந்தா போலவே இந்தியக் கலைச் சிறப்பின் இன்னொரு சாதனையாக, தமிழகத்தில் உள்ள மாமல்லபுரச் சிற்பங்களைக் குறிப்பிட வேண்டும். மாமல்லபுரக் கலைத் தொகுதியை மூன்று வகையாகப் பிரிக்கலாம். குடைவரைக் கோயில்கள், ஒற்றைக்கல் ரதங்கள் மற்றும் கட்டுமானக் கோயில்கள். இவை தவிர, புடைப்புச் சிற்பத்தொகுதிகள் வெளிப்புறத்திலும் கோயில்களின் உள்ளும் காணப்படுகின்றன. பல்லவ மன்னர் முதலாம் மகேந்திரவர்மன் காலத்துக்குப் பிறகு மாமல்லபுரச் சிற்பங்கள் உருவாக்கப்பட்டு இருக்க வேண்டும். இங்குள்ள பஞ்சபாண்டவ ரதங்களை முதலாம் நரசிம்மவர்மன் கட்டியதாகவும் மற்றவை அவனுடைய பேரன் பரமேஸ்வரவர்மனும் மற்றும் இரண்டாம் நரசிம்மவர்மன் கட்டியதாகவும் சரித்திர அறிஞர்கள் கூறுகின்றனர்.

மாமல்லபுரத்தில் உள்ள வெளிப்புறப் புடைப்புச் சிற்பத் தொகுதிகள் இந்தியாவிலேயே வேறு எங்கும் காண முடியாதவை. குறிப்பாக, அர்ச்சுனன் தபசு சிற்பத் தொகுதி சுமார் 30 மீட்டர் உயரமும் சுமார் 60 மீட்டர் அகலமும் கொண்டது. இதில், 150-க்கும் மேற்பட்ட உருவங்கள் செதுக்கப்பட்டு இருக்கின்றன. இந்தச் சிற்பத் தொகுதியில் உடல் ஒடுங்கிப்போய் எலும்பும் நரம்பும் தெரிய தவக்கோலத்தில் ஒற்றைக்காலில் நின்று இரு கைகளையும் பூட்டி சூரிய வணக்கம் செய்கிறான் அர்ச்சுனன். கையில் பாசுபத ஆயுதத்தை வைத்து நிற்கும் சிவன், சுற்றிலும் பூத கணங்கள். இரு பாறைப் பிளவுகளுக்கு இடையே ஓடிவரும் கங்கை ஆறு. இதன் பாதை ஓரத்தில் காணப்படும் நாகர்கள். காத்திருக்கும் சூரியன், சந்திரன், தேவர்கள், நாகர்கள், கின்னரர்கள், முனிவர்கள், கந்தர்வர்கள். அதன் ஒரு பக்கம் ஒரு திருமால் கோயில். அதன் முன் அமர்ந்திருக்கும் முனிவர்கள், யானைகள், இருவிதமான குரங்குகள், சிங்கம், புலி, மான், அன்னப்பறவை, உடும்பு, யானைகள் நீர் அருந்துவது, குட்டி யானைகள் விளையாடுவது என நுட்பமாகக் காட்சிகள் செதுக்கப்பட்டு உள்ளன. இந்தச் சிற்பத் தொகுதி குறித்து விரிவாக ஆராய்ச்சி செய்து பேராசிரியர் சா.பாலுசாமி, 'அர்ச்சுனன் தபசு: மாமல்லபுரம் சிற்பம்’ என்ற அற்புதமான புத்தகத்தை எழுதி இருக்கிறார். தமிழகக் கோயில் கலைகளில் ஆவுடையார் கோயில் சிற்பம் மற்றும் ஓவியம், கழுகுமலைச் சிற்பங்கள், மதுரையைச் சுற்றிய எட்டு சமணக் குன்றுகளில் காணப்படும் சமணச் சிற்பங்கள், ஸ்ரீவில்லிபுத்தூர், கிருஷ்ணாபுரம், திருநெல்வேலி, தாடிக்கொம்பு, மதுரை போன்ற கோயில்களில் காணப்படும் அற்புதமான சிற்பங்கள், பனைமலை, காஞ்சிக் கைலாசநாதர் கோயில், திருப்பருத்திக்குன்றம், திருவாரூர் கோயில், சிதம்பரம் கோயில், கும்பகோணம், தாராசுரம், பட்டீஸ்வரம், திருமங்கலக்குடி, தஞ்சை, அழகர்கோவில், திருவலஞ்சுழி, ஸ்ரீரங்கம் போன்ற கோயில்களில் காணப்படும் கலைப் படைப்புகள் அதிஅற்புதமானவை.

இந்தியாவின் கலை மரபு என்பது முப்பரிமாண முறையில் அமையாத ஒன்று. ஆகவே, இது வெறும் பழங்குடி மரபு என்ற எண்ணம் ஐரோப்பியர்களிடம் இருந்தது. அதை மாற்றி இந்தியக் கலைகளுக்கான தனித்துவத்தை உலகம் அறியச்செய்தவர் டாக்டர் ஆனந்த கே.குமாரசாமி.

கி.பி. 1877 ஆகஸ்ட் 22-ம் தேதி இலங்கையின் கொழும்பு நகரில் பிறந்தவர் ஆனந்த குமாரசாமி. இவரது தந்தை முத்துக்குமாரசாமி யாழ்ப்பாணத்தில் வழக்கறிஞராக இருந்தவர். பொதுச் சேவைக்காக 'சர்’ பட்டம் பெற்ற முதல் ஆசியர் இவரே. இவரது தாய், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த எலிசபெத் கிளே. இவரது முழுப் பெயர் ஆனந்த கெண்டிஸ் குமாரசாமி. இந்திய விடுதலை இயக்க ஆதரவாளரான ஆனந்த குமாரசாமி, மகாகவி ரவீந்திரநாத் தாகூர் மற்றும் சகோதரி நிவேதிதா ஆகியோரின் நெருங்கிய நண்பர். ஆனந்த குமாரசாமியின் இடைவிடாத எழுத்துப் பணி வழியாகத்தான் இந்தியக் கலைகள் உலக அளவில் அங்கீகாரம் பெற்றதோடு, அது குறித்த விழிப்பு உணர்வும் கலை விமர்சகர்களிடம் பரவியது.

ஆனந்த குமாரசுவாமி தேர்ந்த கலை விமர்சகர், ஆய்வாளர். இவர், கீழை தேசத்துக் கலைகளையும் பண்பாட்டையும் மட்டுமின்றி மேலை நாடுகளின் பண்பாட்டையும் கலைகளையும் அறிந்து இருந்தவர். ஆங்கிலம், பிரெஞ்ச், சமஸ்கிருதம், தமிழ், லத்தீன், சிங்களம், இத்தாலி, பாலி, பாரசீகம், கிரேக்கம் உள்ளிட்ட 14 மொழிகளிலும் புலமைகொண்டு இருந்தார்.

இந்தியக் கலைகளை, பௌத்தம் எவ்வாறு பாதித்துள்ளது என்பதைப் பற்றி ஆனந்த குமாரசாமி விரிவாக ஆராய்ச்சி செய்து 'புத்தர் வடிவத்தின் தோற்றுவாய்’ என்ற புத்தகத்தை எழுதி இருக்கிறார். அதுபோலவே, இவரது 'சிவனின் நடனம்’ என்ற புத்தகத்தில் நடராஜர் சிற்பத்தின் பின்புள்ள தத்துவத்தை சைவ நெறிகளோடு ஒப்பிட்டு அழகாக விளக்கி இருக்கிறார். மேலை நாட்டில் கலைஞன் என்பவன் ஒரு தனிமனிதன். அவனது கற்பனைகள் உணர்ச்சிகளுக்கு ஏற்ப படைப்புகளை உருவாக்குவான். ஆனால், இந்தியாவில் ஒரு சிற்பியோ, ஓவியனோ தனி நபர் அல்ல. அவன் ஒரு மரபின் தொடர்ச்சி. ஓர் இனத்​தின் அடையாளம். ஆகவே, அவன் தனது படைப்பை உருவாக்குவதில் சமூகம் முக்கியப் பங்கு வகிக்கிறது.

ஒருவர் இந்தியக் கலைப் படைப்புகளைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், அவருக்கு இந்தியப் பண்பாடு முழுமையாகத் தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், அவற்றை வெறும் புறத்தோற்றமாகக் கண்டு கடந்து போய்விட நேரிடும். தாமரை மலர் மீது புத்தர் சிற்பத்தைக் காண்பவன், இது எப்படி சாத்தியம்? என்று யோசித்தால் அது முட்டாள்தனம். தாமரை மலர் என்பது ஒரு குறியீடு. புத்தரின் கை விரல்களில் உள்ள முத்திரை, முகபாவம், அமர்ந்த நிலை ஒவ்வொன்றுக்கும் ஆழமான அர்த்தங்கள் இருக்கின்றன. இந்தியர்களுக்கு தங்களுடைய கலையின் முக்கியத்துவம் மற்றும் சிறப்புகள் குறித்து இன்னமும் முறையாகத் தெரியவில்லை. ஆங்கில வழிக் கல்வி மேற்குலகின் ரசனையை நமதாக்கிவிட்ட காரணத்தால் நாம் இந்தியச் சிற்பங்கள் மற்றும் ஓவியங்களை வெறும் பொம்மைகளைப் போல பார்க்கவும் புகைப்படம் எடுக்கவும் மட்டுமே பழகி இருக்கிறோம். இவை, நூற்றாண்டுகளைக் கடந்து நிற்கும் அற்புதங்கள் என்பதை நாம் உணர வேண்டும்.

அதோடு, மலைகள் குவாரிகளாக மாற்றப்பட்டு வருவதால், அங்குள்ள குகைக் கோயில்கள், சிற்பங்கள், ஓவியங்கள் அழிக்கப்பட்டு வருவது தடுக்கப்பட வேண்டும். அதுபோலவே, கோயில்களில் காணப்படும் சிறப்பான ஓவியங்கள் அதன் முக்கியத்துவம் அறியாமல் சிதைக்கப்படுவதும், வண்ணம் பூசி அழிக்கப்படுவதும் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. முக்கியக் கலைக் கோயில்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள், பண்டிகைகள், நுண்கலைக் கூடங்கள், அகழ்வாய்வு இடங்கள், இயற்கை வாழிடங்கள், தொல்பழங்காலம் முதல் இப்போது வரை எங்கே என்ன சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன என்ற அத்தனை தகவல்களையும் ஒன்று திரட்டி பொதுமக்கள் பயன்படும் விதத்தில் ஒரு கல்சுரல் அட்லஸ் வெளியிட்டுள்ளது ஒடிசா மாநிலம். இதை வெற்றிகரமாக செய்து முடித்திருப்பவர் தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பாலகிருஷ்ணன். இதுபோன்ற கல்சுரல் அட்லஸ், தமிழ்நாட்டுக்கு உடனடித் தேவை என்றே உணர்கிறேன். வெளிநாட்டவர் நமது கலைச் செல்வங்களை கொள்ளை அடித்துச் சென்றது ஒரு பக்கம் என்றால், நமது அறியாமை மற்றும் சுயலாபங்களுக்கான வேட்கை, இந்தியக் கலைகளின் உன்னதங்களை கண் முன்னே சிதையவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக்கொண்டு இருக்கிறோம் என்பது வருத்தப்பட வேண்டிய உண்மை.

அருள் மழை


 
பெரியவா மேல் உள்ள கரைகாணா அன்பாலும், குழந்தை போன்ற உள்ளத்தாலும், அவரை "அப்பா" என்றும் "நீ" என்று ஏக வசனத்தில் பேசும் உரிமையும் பெற்றவர்.
நெய்வேலி மஹாலிங்கம் என்னும் பரம பக்தர். இவருடைய சில அனுபவங்களை
முன்னால் பார்த்திருக்கிறோம். பெரியவா சதாராவில் முகாம். மஹாலிங்கம்
சதாராவில் போய் பெரியவாளை தர்சனம் பண்ணிவிட்டு அன்றுதான் திரும்பியிருந்தார்.  அவரைத் தேடிக்கொண்டு ஒரு நண்பர் வந்தார். முகத்தில் அப்படியொரு சோகம்.

"மஹாலிங்கம் ஸார்....எம்பிள்ளை மெட்ராஸ்ல படிச்சிண்டு இருக்கான்..
திடீர்னு நாலஞ்சு நாளா அவனைக் காணோம்! எல்லா எடத்லையும் விஜாரிச்சாச்சு!
ஒண்ணுமே தெரியலை.....நீங்கதான் பெரியவாளோட பரம பக்தராச்சே!....பெரியவாகிட்ட ப்ரார்த்தனை பண்ணறதை தவிர எனக்கு வேற கதி இல்லே....என்னை சதாராவுக்கு
அழைச்சிண்டு போறேளா?" கண்களில் கண்ணீர் மல்க கெஞ்சினார். மகாலிங்கத்திற்கோ
என்ன பண்ணுவது என்று தெரியவில்லை. அவர் மனைவி சொன்னாள் "பாவம்.....அழைச்சிண்டு போங்கோ! பிள்ளையைக் காணாம தவிக்கறார்" என்று பரிந்தாள்.
இருவரும் கிளம்பி சதாராவை அடைந்தபோது விடிகாலை மணி மூணு! பெரியவா தங்கியிருந்த இடத்துக்கு வந்தால்...........மஹாராஜபுரம் சந்தானம் மூன்று நாட்களாக
பெரியவா தர்சனத்துக்காக காத்திருக்கிறார் என்று தெரிய வந்தது! மணி விடிகாலை
நாலரை!

"என்ன மஹாலிங்கம்! சந்தானத்துக்கே இந்த நெலைமை...ன்னா...நாம எப்டி
பெரியவாளை தர்சனம் பண்ண முடியும்?" நண்பர் கவலைப் பட்டார்.

பெரியவா ஒரு சின்ன "டொக்கு" மாதிரி ரூமில் ஜன்னல் கதவைக்கூட சாத்திக்
கொண்டு இருந்தார்.

"ஏன் கவலைப்படறேள்? பெரியவா காருண்ய மூர்த்தி..........தன்னை
நம்பி வந்தவாளை கைவிட்டதா சரித்திரமே கெடையாது.........கதவு தெறக்கும்!
தர்சனம் கெடைக்கும்!" அடித்துச் சொன்னார் மஹாலிங்கம்.

சொன்ன மறு நிமிஷம்,பிரஹ்லாதனின் வார்த்தையை "சத்யம்" என்று நிருபிக்க
தூணைப் பிளந்துகொண்டு வெளியே வந்த நரசிம்ஹமூர்த்தி, இங்கே
"டொக்கு" ரூமில், சௌம்ய நாராயணனாக இருந்தாலும், பக்தானுக்ரகம்என்ற கல்யாண குணத்தை அவனால் விட முடியாதே! எனவே, "படக்"கென்று ஜன்னல் திறந்தது.......உள்ளே பெரியவா! மகாலிங்கத்தை சைகை காட்டி அழைத்தார்...........

நண்பர் கண்ணீர் வழிய " பெரியவா......எம்பிள்ளைய நாலஞ்சு
நாளா காணோம்........ஒரு தகவலும் இல்லே.....கொழந்தை க்ஷேமமா
திரும்பி வர அனுக்ரகம் பண்ணணும்......பெரியவா"
என்று கூறி, அவனுடைய போட்டோ ஒன்றையும்
காட்டினார். திருநயனங்கள் அதை
கருணையோடு பார்த்தன! கரங்களை
உயர்த்தி ஆசி
கூறினார். மஹாலிங்கம் இன்னும்
தெம்பாகிவிட்டார்! இருவரும்
நமஸ்கரித்துவிட்டு
கிளம்பினார்கள்.

"ஸார்......நீங்க திரும்ப
நெய்வேலிக்கே வந்துடுங்கோ!
பெரியவா பாத்துப்பா!
ஒங்க பிள்ளை நிச்சயம் திரும்ப
வந்துடுவான்..........கவலையே
படாதீங்கோ!
வந்ததும், மடத்துக்கு ஒரு தந்தி
அனுப்பிடலாம்" என்று ஆறுதலும்
நம்பிக்கையும் ஊட்டினார்.

அடுத்த ரெண்டு  நாட்களில் பையன்
திரும்ப வந்துவிட்டதாக
மடத்துக்கு தந்தி
போனது! பையன் பல ஊர்களுக்கு
சென்றுவிட்டு, கடைசியில்
மந்த்ராலயம்
போயிருக்கிறான். அங்கே
துங்கபத்ராவில்
குளிக்கும்போது அவன் மனஸில் ஒரு
குரல்......"நீ உடனே வீடு திரும்பு"
என்று சொன்னது. அது எப்போது? எந்த
விடிகாலையில் சதாராவில்
பெரியவா அவனுடைய போட்டோவை
கடாக்ஷித்தாரோ.......அப்போதுதான்!
"சஹாஸ்ராக்ஷ சஹாஸ்ரபாத்" என்று
வேதங்கள் ஸ்துதி பாடுவதும்
இவரைத்தானே?

அந்தப் பையன் பின்னாளில் மிகப்
பிரபலமான பாடகராக, நல்ல பக்தராக
திகழும்
நெய்வேலி சந்தானகோபாலன்தான்!

அருள்வாக்கு - சிரத்தை!


‘முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்’ மனஸு தளராமல், நம்மால் முடிந்த முயற்சியை விடாமல் பண்ணிக் கொண்டே போனால், எத்தனை காலமானாலும் ஸரி, முறையான முன்னேற்றம் காண ஆரம்பித்து முடிவிலே லக்ஷ்யத்தைச் சேர்ந்து விடலாம். நம்பிக்கை முக்யம். ச்ரத்தை என்பது அதுதான். ‘ஸ்வாமி கைவிட மாட்டார். சாஸ்த்ரமும் குருவும் காட்டும் வழி வீணாய்ப் போகாது’ என்ற த்ருடமான நம் பிக்கைக்குத்தான் ச்ரத்தை, ச்ரத்தை என்று பெயர்.

நாம் பேச்சுவழக்கில் ‘ச்ரத்தையாக ஒன்றை ஒருத்தர் பண்ணினார்’ என்று சொல்லும்போது ‘ஸின்ஸியராக, மனப்பூர்வமாக’ என்ற அர்த்தத்திலேயே அந்த வார்த்தையை உபயோகிக்கிறோம். வாஸ் தவத்தில் அது ‘நம்பிக்கை’ என்பதைத்தான் முக்யமான அர்த்தமாகக் கொண்டது. ஆழ்ந்த நம்பிக்கையால் ஏற்படுகிற ‘ஸின்ஸியாரிடி’யோடு ஒருத்தர் ஒன்றைப் பண்ணுவதே ‘ச்ரத்தையோடு பண்ணுவது.’

நேராக நமக்கு ப்ரூஃப் கிடைக்கும் விஷயங்களில் ‘நம்பிக்கை’ என்பது தேவையில்லை. ஆனால், மத சாஸ்த்ரங்களில் சொல்லியிருக்கும் அநேக விஷயங்களுக்கோ இப்படி ப்ரத்யக்ஷ ப்ரூஃப் இருக்காது; சிலது ப்ரத்யக்ஷத்துக்கு நேர்மாறாகக் கூடத் தோன்றும். ‘புண்யம் பண்ணினால் நல்லது கிடைக்கும், பாபம் பண்ணினால் கெட்டது கிடைக்கும்’ என்று எல்லா மதங்களிலும் இருக்கிறது. ஆனால், ப்ரத்யக்ஷத்தில் அநேக பாபங்கள் பண்ணுபவர்கள் நல்லபடி வாழ்வதையும், புண்ய கர்மாக்கள் பண்ணுபவர்கள் கஷ்டப்படுவதையும் பார்க்கிறோம். இப்படியிருக்கிறதே என்றால், அதற்கு நம் ஹிந்து சாஸ்திரத்தில், ‘ஒரு ஜன்மாவுக்குள்ளேயே பாப - புண்ய பலன்கள் தெரிந்தாக வேண்டுமென்றில்லை. அநேக ஜன்மாக்களில் பலன்கள் தொடரும். இன்றைக்கு ஒரு பாவி ஸுகப்படுகிறான், புண்யவான் கஷ்டப்படுகிறான் என்றால் ஜன்மாந்தரத்தில் இந்தப் பாவி புண்யம் பண்ணியிருக்கிறான். அந்தப் புண்யவான் பாவம் பண்ணியிருக்கிறான் என்று அர்த்தம்’ என்று சொல்லியிருக்கிறது. இதை நாம் ப்ரூஃப் பண்ணிக் கொள்ள முடியாது. இங்கேதான் நம்பிக்கை - அதாவது ச்ரத்தை - தேவைப்படுகிறது. இதே மாதிரி இன்னும் அநேகம் ச்ரத்தையின் மேலேயே ஒப்புக் கொள்ள வேண்டியதாயிருக்கிது.

- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

அருள்வாக்கு - ஸ்நேகிதன் யார்?



ஜீவராசிகள் எவனுக்கு வசமாம்?
ஸத்யமும் ப்ரியமுமான வசனமுடைய வணக்கமுள்ளவனுக்கு.

தானம் என்பது எது?
கேட்காது கொடுத்தல்.

ஸ்நேகிதன் யார்?
பாவஞ் செய்யாது தடுப்பவன்.

அழகு எது?
சீலம்

வாக்கிற்கு அழகு எது?
ஸத்யம்.

வித்வான்களின் மனதைக் கவர்வது யாது?
நல்ல கவிதையும் புத்தியுள்ள ஸ்த்ரீயும்

முடவன் யார்?
முதிர்ந்த வயதில் தீர்த்த யாத்திரை போகிறவன்.

ஸகல குணங்களையும் அழிப்பது எது?
லோபம் - கருமித்தனம்

பகைவன் எவன்?
காமம்

பொய் சொல்வது எப்பொழுது பாபமல்ல?
தர்மத்தை ரக்ஷிக்கச் சொல்லப்பட்ட பொய் பாபமல்ல.

எது தர்மம்?
நமது வம்சத்தில் பிறந்த பெரியோர்களால் ஸ்நானானுஷ்டான முள்ளவர்கள் அனுஷ்டித்த தர்மமே நமக்கும் தர்மம்.

(ப்ரச்னோத்தர ரத்னமாலை - என்ற நூலிலுள்ள வடமொழி கேள்வி - பதிலை தமிழாக்கம் செய்து 27.1.33-ல் சென்னையில் மகா பெரியவர் பேசியது

எனது இந்தியா (அஜந்தாவும் எல்லோராவும்) - எஸ். ராமகிருஷ்ணன்....


இந்தியக் கலைகள் என்றதுமே நம் நினைவுக்கு வருபவை அஜந்தாவும் எல்லோ​ராவும். இந்தியாவின் சமூக வரலாறு எவ்வளவு முக்கியமானதோ, அதே அளவுக்கு அதன் கலை வரலாறும் முக்கியமானதே. கிரேக்கக் கலைகள் எப்படி அதன் உன்னத நாகரிகத்துக்கு அடையாளமாக இருக்கிறதோ, அதுபோலவே, இந்தியக் கலைகள் தனக்கெனத் தனித்துவமான அழகியலுடன் இருக்கின்றன. இந்தியக் கலைகளின் ஊடாக கலைஞனின் ஞானமும் வாழ்க்கை குறித்த தத்துவ​சாரமும் ஒன்றிணைந்து இருக்கின்றன. கலைஞனின் ஆன்ம வெளிப்பாடே, கலையின் உன்னதமாகக் கருதப்படுகிறது.
சாஞ்சியில் ஒரு சிற்பம் உள்ளது. அதில், ஞானம் பெற்ற பிறகு தன் தாயிடம் பிட்சை ஏற்க வரும் புத்தர் பிரமாண்டமாக நிற்கிறார். பிட்சை அளிக்கும் தாயும் அந்த அரண்மனையும் சதுக்கமும் படைகளும் அவரது முழங்காலுக்குக் கீழே இருப்பதுபோல், அந்தச் சிற்பம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஞான நிலையின் முன், உலகம் மிகச் சிறியது என்ற கலைஞனின் ஆன்மிக வெளிப்பாட்டின் உதாரணம் இது.


கலையின் வரலாறு, குகையில் வாழ்ந்த மனிதர்கள் உருவாக்கிய கலைப் பொருட்​களில் இருந்தே தொடங்குகிறது. கலைகளே இந்தியப் பண்பாட்டின் மகத்தான ஆவணங்கள். ஆதிகாலத்தில் மனிதர்கள் எப்படி வாழ்ந்தனர், அவர்களுடைய பண்பாடு, நம்பிக்கைகள் எப்படி இருந்தன என்பதற்கு இன்றும் ஆதாரமாக இருப்பவை குகை ஓவியங்களே.

அகழ்வாய்வுகளில் கிடைக்கும் மணிகள், தாழிகள், கல்வெட்டுகள் வழியாக நாம் 3,000 ஆண்டுகள் வரைதான் பின்னோக்கிப் போக முடிகிறது. ஆனால், குகை ஓவியங்கள் வழியாக நாம் மொழியின் பயன்பாடு உருவாவதற்கு முந்தைய மனிதர்களின் உலகையே அறிந்துகொள்ள முடிகிறது. அதுதான் கலையின் சிறப்பு. அஜந்தா மற்றும் எல்லோராவைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு முன், இதுபோல குகைகளில் உருவாக்கப்பட்ட சிற்பங்கள், ஓவியங்கள் பற்றி அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

உலகின் மிகப் பழைமையான குகை ஓவியம் பிரான்சில் உள்ள குரோட்டே சோவெட்டில் உள்ளது. இது, 32 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. சிவப்பு நிறத்தில் வரையப்பட்டுள்ள இந்த ஓவியங்களில் குதிரைகள், காண்டாமிருகங்கள், சிங்கங்கள், எருமைகள், மனிதர்களின் உருவங்கள் காணப்படுகின்றன. பெரும்​பாலும் இவை வேட்டைக் காட்சிகளாகவே இருக்கின்றன. இதுபோன்ற வேட்டைக் காட்சிகள்கொண்ட குகை ஓவியங்கள் பிரான்ஸ், இந்தியா, ஸ்பெயின், போர்ச்சுக்கல், சீனா, ஆஸ்திரேலியா உட்பட உலகம் முழுவதிலும் காணப்படுகின்றன.

தொல்பழங்காலத்தில் வாழ்ந்த குகை மனிதர்கள், வன விலங்குகளின் இயல்பைப் பதிவு செய்வதற்காகவும் நினைவைப் பாதுகாக்கவும் இவை வரையப்​பட்டு இருக்கலாம். அடுத்த தலைமுறைக்கு வேட்டை குறித்த தகவல்களைப் பரிமாறுவதற்காக வரையப்பட்டது என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். எட்வர்டோ கலியானே என்ற ஆய்வாளர் இது​போன்ற குகை ஓவியங்களைப் பெண்கள்தான் வரைந்து இருப்பார்கள் என்று கருதுகிறார். குகை ஓவியங்களில் மனித உருவங்கள் மிகவும் குறைவாகவே இடம் பெற்றுள்ளன. பெரும்பாலும் விலங்குகளே வரையப்பட்டு இருக்கின்றன. வேட்டை​யாடப்பட்ட மிருகங்களை மட்டுமின்றி வலிமையான காண்டாமிருகம் போன்ற விலங்குகளும் குகை ஓவியங்களில் காணப்படுகின்றன.


ஓவியங்கள் காணப்படும் பல குகைகளில் மனிதர்கள் வசித்த தடயங்கள் இல்லை. விலங்குகள் குறியீடுகளுடன் சேர்த்து வரையப்பட்டு இருப்பதால், இந்தக் குகைகள் மந்திரச் சடங்குகள் செய்யப் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என்கின்றனர்.

தமிழகத்தில் குகை ஓவியங்களை ஆய்வு செய்யும் அறிஞர் காந்திராஜன், குகை ஓவியங்​களின் வரலாற்றைப் பற்றி நிறையத் தகவல்கள் தருகிறார். அவர் தனது தொடர்ந்த தேடுதலில் கரிக்கியூரில் காணப்படும் அரிய பாறை ஓவியங்​களைக் கண்டறிந்துள்ளார். இது, கி.மு. 7000-ம் ஆண்டைச் சேர்ந்தது. இவரது கருத்துப்படி நீலகிரி, கோயம்புத்தூர், தர்மபுரி, வேலூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் குகை ஓவியங்கள் காணப்படுகின்றன. தர்மபுரி மாவட்டம் மல்லப்​பாடியில் உள்ள பாறை ஓவியத்தில் குதிரை மீது அமர்ந்த ஒரு வீரன் காணப்படுகிறான். கீழ்வாலை என்ற ஊரில் காணப்படும் குகை ஓவியத்தில் செம்மண் வண்ணத்தால் வரையப்பட்டுள்ள பறவையின் முக அமைப்புடைய மனிதர்கள் காணப்​படுகின்றனர். இந்த ஓவியம் 3,500 ஆண்டுகளுக்கு முந்தையதாகக் கணக்கிடுகின்றனர். சேத்தவாரை என்ற இடத்தில் எழில்மிக்க மான் ஓவியம் காணப்​படுகிறது. ஐயனார் மலையில் எருமை, கரடி, புலி, மீன் போன்ற உருவங்கள் கோட்டோவியங்களாக வரையப்பட்டுள்ளன.

கோயம்புத்தூரில் வெள்ளெருக்கம்பாளையம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசினக்குடி, ஆலம்பாடி, பதியாண்டாள், கொல்லூர், மல்லசமுத்திரம் திண்டுக்​கல் மாவட்டம் சிறுமலைக் குகைகள், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள குடியம் என்ற ஊரில் குகை ஓவியங்​கள் இருக்கின்றன. பௌத்தத் துறவிகள் குகைகளில் தங்கி வாழ்ந்தனர். மாணவர்களுக்கு ஞானம் அளிக்கும் கல்விச் சாலைகளும் குகைகளில் இருந்தன. பௌத்தக் கலைஞர்கள் குகைகளில் படுகை​களையும், புத்தரின் சிலைகளையும், புத்த ஜாதகக் கதைகளைப் பற்றிய ஓவியங்களையும், பல்வேறு விதமான கலைச்சிற்பங்களையும் உருவாக்கி இருக்கின்றனர். அப்படி உருவாக்கப்பட்ட குகைவரைக் கோயில்கள்தான் அஜந்தாவும் எல்லோராவும்!

7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அஜந்தா ஓவியங்​கள் இயற்கையாக உருவாக்கப்பட்ட சிவப்பு, செம்மஞ்சள் முதலிய நிறங்களைப் பயன்படுத்தி வரையப்பட்டு இருக்கின்றன. இவை, பௌத்தக் கலை மரபின் சாட்சிகள். மகாராஷ்டிராவின் ஒளரங்கபாதில் இருந்து 70 மைல் தூரத்தில் இருக்​கிறது அஜந்தா குகை. இங்கே உள்ள குகைகளில் பாதி இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்றும் மீதம் உள்ளவை 5-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அஜந்தா ஒரு கல்வி நிலையமாகவும் ஞான மார்க்கத்தின் அற நிலையமாகவும் புகழ்பெற்று விளங்கியது. அஜந்தாவை ஒரு கலைத் தொகுப்பு என்றே சொல்லலாம். இங்குள்ள சிற்பங்கள் மற்றும் ஓவியங்களில் இருந்து அந்தக் காலத்தைய உடைகள், நகைகள், இசைக் கருவிகள், நடனமுறைகள், அரண்மனை அழகிகள், சமூக அந்தஸ்து, துறவிகளின் இயல்பு, மன்னர்களின் வாழ்க்கைமுறை எனப் பல உண்மைகளை அறிந்துகொள்ள முடிகிறது.

ஹீனயான பௌத்த மரபு, புத்தருக்கு உருவம் தந்து வழிபடுவது இல்லை. குறியீடுகள் வழியாகவே அவை பௌத்த ஞானத்தை அடையாளப்படுத்துகின்றன. மஹாயான மரபில்தான் புத்த உருவங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. அஜந்தாவில் இந்த இரண்டு மரபுகளின் சாட்சிகளையும் காணலாம். ஆரம்ப காலக் குகைகளில் புத்த பாதம், போதி மரம் போன்ற குறியீடுகளும் அலங்கார ஸ்தூபங்களும் மட்டுமே இருக்கின்றன. அதன் பிறகே, மிகப் பெரிய புத்தர் உருவங்கள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. அஜந்தா குகைகள் கி.பி. 460 முதல் 480 வரை வாகதகர் காலகட்டத்தில் செதுக்கப்பட்டு இருக்கக்கூடும் என்கிறார் வால்டர் எம்.ஸ்பிங் என்ற ஆய்வாளர். வாகதகப் பேரரசர் ஹரிசேனரின் காலகட்டத்தில் இந்தக் குகைகளில் பல ஓவியங்கள் செதுக்கப்பட்டன. கி.பி. 3-ம் நூற்றாண்டில் மகாராஷ்டிர நிலப்பகுதியில் தோன்றிய அரசு வாகதகப் பேரரசு. குஜராத்தின் மால்வா பகுதியையும் தெக்காணத்தின் வடக்குப் பகுதியையும் இணைத்து வாகதகர்கள் ஆட்சி செய்து இருக்கின்றனர்.

வாகதக வம்சம் இந்து தர்மத்தைப் பின்பற்றிய​போதிலும் அஜந்தா குகை ஓவியங்களை நிர்மாணித்​திட உதவி செய்துள்ளது. இது நடைபெற்றது குப்தப் பேரரசின் காலத்தில் என்ப​துடன், வாகதகர்களே குப்தர்களுடன் மண உறவு​கொண்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அஜந்தாவின் வளர்ச்சிக்குக் காரணமாக இருந்த சாதவாகனர் மற்றும் வாகத​கர்கள் வைதீக நெறியைப் பின்பற்றுகிறவர்கள் என்றபோதிலும், அவர்களின் ஆதரவில் பௌத்தக் கலை, வளர்ச்சி அடைந்து இருக்கிறது. பௌத்தம், இந்தியாவில் வீழ்ந்த பிறகு, அஜந்தா குகைகள் கவனிப்பார் இல்லாமல் சிதிலம் அடையத் தொடங்கியது.

1819-ம் ஆண்டு ஏப்ரல் 28-ம் தேதி பிரிட்டிஷ் ராணுவ அதிகாரியான ஜான் ஸ்மித், புலி வேட்டை ஆடுவதற்காக காட்டுக்குள் சென்றார். ஒரு புலியைத் துரத்திச் சென்றபோது தற்செயலாக ஒரு குகைக்குள் நுழைந்து இருக்கிறார். அப்போது கண்டுபிடிக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். இது முற்றிலும் நிரூபணம் செய்யப்படாத தகவல். ஆனால், அவரது முயற்சியால் அஜந்தாவின் ஓவியங்​களும் சிற்பங்களும் கண்டுபிடிக்கப்பட்டன என்பது வரலாற்று உண்மை.

அஜந்தாவில் 30 குடைவரைக் கோயில்கள் உள்ளன. அவற்றில் 9, 10, 19, 26 மற்றும் 29 ஆகிய குகைகள் சைத்யங்கள் எனப்படும் பௌத்த வழி​பாட்டு ஸ்தலங்கள். மற்றவை துறவியர் தங்கும் விகாரைகள்.

குகைச் சுவரின் மீது களி மண்ணும் சாணமும் கலந்த கலவையால் வேயப்பட்டு அதன் மேல் சுண்ணாம்புச் சாந்து பூசப்பட்டு இருக்கிறது. அதில் பல்வேறு இயற்கையான நிறங்களைக்கொண்டு அஜந்தா ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன. ஐந்து குகைகளில் ஓவியங்கள் இருக்கின்றன. பெரும்பாலான ஓவியங்கள் இன்று சிதைவுற்ற நிலையில்தான் இருக்கின்றன. இதில், புத்த ஜாதகக் கதைகளின் நிகழ்வுகள் ஓவியமாக வரையப்பட்டுள்ளன. இங்குள்ள ஓவியங்களில் மிகப் புகழ் பெற்றவை பத்மபானி, வஜ்ரபானி போன்ற ஓவியங்கள்.

எனது இந்தியா (மத்த விலாசம் - II) - எஸ். ராமகிருஷ்ணன்....

அது, தன்னுடைய பிட்சைப் பாத்திரம் என்பதைப் புரிந்துகொண்ட காபாலிகன்,  பைத்தியக்காரனிடம் இருந்து கபால ஓட்டைப் பிடுங்க முயற்சிக்கிறான். ஆனால் பைத்தியக்காரனோ, அதை ஒரு தங்கக் கிண்ணம் என்று சொல்லி காபாலிகனுக்கே பரிசாகத் கொடுத்துவிடுகிறான். உங்களைச் சிரமப்படுத்தியதற்கு மன்னியுங்கள் என்று பௌத்த துறவியிடம் மன்னிப்பு கேட்கிறான் காபாலிகன். அதற்கு, உன்னை சந்தோஷப்படுத்த முடிந்ததற்கு நன்றி என்று பெருந்தன்மையுடன் சொல்கிறான் புத்த துறவி. அவரிடம் இருந்து விடைபெற்று சத்தியசோமன் தன் காதலியோடு புறப்பட்டுச் செல்வதோடு நாடகம் நிறைவுபெறுகிறது. நாய் தூக்கிச் சென்ற கபால ஓட்டை முன்வைத்து புத்த துறவியும், சமணத் துறவியும், காபாலிகர்களும் கேலிசெய்யப்படுகின்றனர். மூவருமே மதத்தின் பெயரால் பிறரை ஏமாற்றுகிறவர்களாக சித்திரிக்கப்பட்டு இருக்கின்றனர்.

பசுவின் கொம்பில் மது வாங்கிக் குடிப்பது, கபாலத்தில் இறைச்சி உண்பது, பெண்களும் மது குடித்துவிட்டு ஆடுவது, பௌத்த பிக்குகள் வணிகர்களின் விருந்தில் கலந்துகொண்டு உல்லாசமாக வாழ்வது, சமணர்களைக் கேலிசெய்வது என, சமூக வாழ்வு துல்லியமாக இந்த நாடகத்தில் பதிவாகி இருக்கிறது.
இந்த நாடகம், மகேந்திர வர்மனின் அரச சபையில் நிகழ்த்தப்பட்டு இருக்கிறது. ஆகவே, இதன் பார்வையாளர்களாக இருந்தவர்கள் அரசை குடும்பத்தைச் சார்ந்தவர்களாகவே இருந்திருக்கக் கூடும். பொதுமக்கள் இந்த சமஸ்கிருத நாடகத்தைப் பார்த்தார்களா? இந்த நாடகத்துக்கு எவ்வாறு எதிர்வினை செய்தனர் என்ற விவரங்களை அறிந்துகொள்ள முடியவில்லை. ஒரு நாயோ அல்லது பௌத்த பிக்குவோதான் கறிக்கு ஆசைப்பட்டு தன்னுடைய பிட்சைப் பாத்திரமான கபால ஓட்டைத் திருடி இருக்க வேண்டும் என்று சத்தியசோமன் சொல்வது பௌத்த சமயத்தை விமர்சிக்கும் குரலாகும். அது வெறும் கேலி அல்ல. மாறாக, பௌத்தர்கள் மீதான வெறுப்பு. அதே வேளையில், வணிகனின் விருந்தை ரசித்துப் பாராட்டும் புத்த துறவி, 'புத்தர் ஏன் மது, மாது இரண்டையும் தனது சங்கத்தில் அனுமதிக்கவில்லை. இது நிச்சயம் கையாலாகாத மூத்தத் துறவிகள் செய்த ஏற்பாடாகத்தான் இருக்கக் கூடும். மூல பாடத்தைத் தேடிப்பார்க்க வேண்டும். நிச்சயம் இதை புத்தர் தடுத்திருக்க மாட்டார்’ என்று ஆதங்கப்படுகிறான். அவனுடைய மனது, ஞானத்தைவிடவும் போகத்துக்காக ஏங்கித் தவிக்கிறது. ஆகவே, பௌத்தம் குறித்த தனது தீவிரமான எதிர்ப்பு மனநிலையை மகேந்திரவர்மன் நாடகமெங்கும் பிரதிபலித்து இருக்கிறான்.

போதையில் கைப்பொருளை மறப்பதும், தெருவில் சண்டை போடுவதும், தனது பொருளை யாரோ திருடிவிட்டனர் என்று அப்பாவியை வம்புக்கு இழுப்பதும், குடிப்பதற்காக இடம் தேடி அலைவதும் 1,000 வருடங்களுக்கு முன்பு இருந்து இன்று வரை ஒரு நீண்ட மரபாகவே நடைபெற்று வருகின்றன போலும்.

மத்த விலாசத்தைப் போலவே, பகவதஜ்ஜூகமும் புத்த மதத்தைக் கேலி செய்கிறது. இந்த நாடகத்தில் ஒரு புத்த துறவி கூடுவிட்டு கூடுபாயும் வித்தை கற்று இருக்கிறான். அவனது சீடன் சாண்டில்யன். இருவரும் ஒரு நந்தவனத்தில் இருக்கும்போது வசந்த சேனா என்ற தாசி, பாம்பு கடித்து இறந்துவிடுகிறாள். அவளை எப்படியாவது பிழைக்கவைக்க சாண்டில்யன் வேண்டுகிறான். அவள் உடலுக்குள் புத்த துறவியின் ஆவி புகுந்துகொள்கிறது. தாசியின் ஆவியோ துறவியின் உடலுக்கு மாறிவிடுகிறது. இந்த மாறாட்டம் ஏற்படுத்தும் வேடிக்கைகள்தான் நாடகம்.

இதிலும் புத்தமதத் துறவிகளைக் கடுமையாகக் கேலிசெய்து இருக்கிறார் மகேந்திர வர்ம பல்லவன். ஒரு மன்னர் பௌத்த சமயத்துக்கு எதிராக எவ்வளவு கசப்பு உணர்ச்சியுடன் இருந்தார் என்பதன் அடையாளமாகவே இந்த நாடகங்கள் இருக்கின்றன. கேரளாவின் கூடியாட்டக் கலையில் மத்தவிலாஸ் இன்றும் நிகழ் கலையாக நடத்தப்பட்டு வருகிறது. மகேந்திர வர்மனைப் போலவே, ஹர்ஷரும் சமஸ்கிருத நாடகங்களை எழுதி இருக்கிறார். 'நாகானந்தம்’, 'ரத்னாவளி’, 'ப்ரியதர்சிகா’ என்ற மூன்று நாடகங்களை இவர் எழுதி இருக்கிறார். இவை, கவிஞர் பாண பட்டரால் எழுதப்பட்டவை என்றும் ஒரு சாரார் கூறுகின்றனர்.

ஆறாம் நூற்றாண்டில் குப்தப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, வட இந்தியா சிறுசிறு மன்னர்களால் ஆளப்பட்டு சிதறிக்கிடந்தது. அவற்றை, ஹர்ஷரே ஒன்றிணைத்து ஆட்சி செய்தார். கி.பி. 590-ல் பிரபாகர வர்தனரின் மகனாகப் பிறந்தார் ஹர்ஷர். அவரது அண்ணன் ராஜீய வர்தன். இவனே ஹூணர்கள் என்ற நாடோடி இனத்தைப் போரிட்டு விரட்டி அடித்தவன். ஹூணர்கள், முரட்டு நாடோடி இன மக்கள். குப்தர்களின் ஆட்சி இவர்களால்தான் அழிந்தது. ஹூணர்களில் இரண்டு பிரிவுகள் இருந்தன. ஒன்று கறுப்பு ஹூணர். மற்றது வெள்ளை ஹூணர். இதில், கறுப்பு ஹூணர்கள் ரோமப் பேரரசைத் தாக்கி ஜெயித்தனர். அவர்களின் தலைவன் அட்டில்லா. ஹெபாத லேட்ஸ் எனப்படும் வெள்ளை ஹுணர்கள், இந்தியாவைத் தாக்கி இங்கிருந்த குப்த அரசை நிலைகுலையச் செய்து பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானியப் பகுதிகளைப் பிடித்து, தோராமான் தலைமையில் ஆட்சி செய்யத் தொடங்கினர். இந்த ஹுணர்களை ஒடுக்கியதில் ராஜீய வர்தன் முக்கியமானவர்.


ஹர்ஷரின் சகோதரி ராஜஸ்ரீயின் கணவர் கொலை செய்யப்பட்டதற்கு பழிவாங்க ராஜீய வர்தன் சென்றபோது, கௌட மன்னன் சசாங்கனால் சூழ்ச்சிசெய்து கொலை செய்யப்பட்டான். அதற்கு பழிவாங்க ஹர்ஷர் படை எடுத்துச்சென்று சசாங்கனை வீழ்த்தி வங்காளத்தைக் கைப்பற்றினார்.
புத்த கயாவில் இருந்த போதி மரத்தைத் தோண்டி எடுத்துக் கொளுத்தியதோடு, பௌத்த விகாரைகளை இடித்துப் புத்த உருவங்களை சிதைத்தவன் இந்த சசாங்கனே. ஹர்ஷரின் ஆட்சியில் உள்ளாட்சி நிர்வாக அமைப்புகள் சிறப்பாக செயல்பட்டன. கடுமையான சட்டங்கள் அமலில் இருந்தன. குறிப்பாக, கொள்ளையரின் வலது கை துண்டிக்கப்பட்டது. ஹர்ஷர், கல்வி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்தார். அவரது ஆட்சியின்போது நாளந்தா பல்கலைக்கழகம் சிறப்பாக இயங்கியது. அப்போது வந்த சீனப் பயணி யுவான் சுவாங், ஹர்ஷர் காலத்து இந்தியா குறித்து விரிவாக எழுதி இருக்கிறார். பௌத்த மதத்தைத் தழுவிய ஹர்ஷர், பௌத்த மடாலயங்களுக்கும் விகாரைகளுக்கும் நிறைய பொருளுதவிகள் செய்து இருக்கிறார். பௌத்த இலக்கியங்களை முறையாகக் கற்றுத்தேர்ந்ததோடு புத்த ஜாதகக் கதையின் கருப்பொருளைக்கொண்டு புதிய நாடகங்களை எழுதி இருக்கிறார். ஹர்ஷர் அறிவைப் பரவலாக்குகிறார். எல்லோருக்கும் கல்வி வழங்குகிறார் என்று உயர் ஜாதியினர் குற்றம் சாட்டி, அவரைக் கொலைசெய்ய சதித் திட்டம் தீட்டினர். ஹர்ஷர் தலைமையில் நடக்க இருந்த தத்துவ விவாத அரங்குக்குத் தீ வைத்தனர். ஆனால், ஹர்ஷர் இந்தச் சதியில் இருந்து தப்பிவிட்டார். விசாரணையின்போது, சதியின் பின்னால் பண்டிதர்கள் பலர் இருப்பதை அறிந்து அவர்களை நாடு கடத்தினார் ஹர்ஷர். போரில் தோல்வியே காணாத ஹர்ஷர், தெக்காணத்தை நோக்கிப் படை எடுத்து வந்தபோது, சாளுக்கிய மன்னர் இரண்டாம் புலிகேசியிடம் தோற்றுப்போனார்.

அசோகரைப் போலவே பௌத்த மத வளர்ச்சிக்குப் பெரிதும் துணை செய்தார் ஹர்ஷர். அசோகர்,இந்தியாவுக்கு வெளியே கடல் கடந்து புத்த மதம் பரவ வேண்டும் என்பதற்காக, இலங்கைக்குத் துறவிகளை அனுப்பி வைத்தார். அவரைப் போலவே, ஹர்ஷரும் பௌத்த மதம் பரவி இருந்த சீனாவுக்குத் தனது தூதுவர்களை அனுப்பி சீன அரசனுடன் நல்லுறவை ஏற்படுத்திக்கொண்டார். 
ஹர்ஷருக்கு சமஸ்கிருதக் கவிதைகள் மீது மிகுந்த ஈடுபாடு இருந்தது. அவர் முறையாக சமஸ்கிருத இலக்கணங்களைக் கற்றுத்தேர்ந்ததோடு, இசையோடு பாடுவதற்கு ஏற்ற பாடல்களைப் புனைபவராகவும் இருந்தார். அவரது நாடகங்களின் உரையாடல்களும் கவித்துவமாகவே இருக்கின்றன. சமஸ்கிருத நாடக மரபில், உயிரோடு வாழ்ந்த ஒருவரின் வரலாற்றைக் கேலியாக நகைக்கும்படி மாற்றி எழுதும் நாடகங்களை பிரஹசனம் என்பார்கள். அப்படியான ஒரு நாடகம்தான், 'மத்தவிலாச பிரஹசனம்’.

இன்று நமக்கு கிடைத்துள்ள சமஸ்கிருத நாடகங்களில் மிகப் பழமையானது சுபந்து இயற்றிய 'உதயணன் வாசவதத்தை’ என்ற நாடகம். இது, கி.மு. 4-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. அதே கதையை, கவிஞர் பாஷனும் 'ஸ்வப்ன வாசவதத்தை’ என்ற பெயரில் நாடகமாக எழுதி இருக்கிறார்.

திருமணமான உதயணனை, ரத்னாவளிக்குக் கட்டிவைக்க சதி நடக்கிறது. அதற்காக, வாசவதத்தை காட்டில் இறந்து போய்விட்டாள் என்ற கட்டுக்கதை உருவாக்கப்படுகிறது.

அதை நம்பிய உதயணன், ரத்னாவளியை திருமணம் செய்துகொள்கிறான். ஆனால், முகத்திரை போட்டு முகத்தை மறைத்த காரணத்தால் ரத்னாவளியை உதயணன் நேரில் பார்க்கவே இல்லை. அவர்கள் பயணம் செய்த கப்பல் விபத்துக்கு உள்ளாகி ஆளுக்கு ஒரு பக்கம் சிதறடிக்கப்படுகின்றனர். தன் கணவன் என அறியாமலேயே வேறு பெயரில் ரத்னாவளி அவனுடன் பழகத் தொடங்குகிறாள். அதில் ஏற்படும் விளைவுகளையும் குழப்பத்தையும் விவரிக்கிறது ஹர்ஷரின் நாடகம்.

சமஸ்கிருத மொழியின் முக்கியக் கவியான பாண பட்டர், ஹர்ஷரின் ஆஸ்தானக் கவிஞராக இருந்தார். இவரே, ஹர்ஷர் வாழ்க்கை வரலாற்றை, 'ஹர்ஷ சரிதம்’ என்ற நூலாக எழுதியவர். அதில், ஹர்ஷரின் கொடைத்திறனையும் அவரது அரசாட்சியின் சிறப்புக்களையும் நுட்பமாகப் பதிவுசெய்து இருக்கிறார். ரத்னாவளி எழுதிய ஹர்ஷரைப் போலவே, ஸ்ரீஹர்ஷர் என்ற இன்னோர் அரசர் 12-ம் நூற்றாண்டில் நள சரித்திரத்தை நைஷதம் என்ற பெயரில் எழுதினார். அதை புகழேந்திப் புலவர் நைடதம் என தமிழில் மொழிபெயர்த்து இருக்கிறார். இரண்டு ஹர்ஷர்களும் வேறுவேறு நபர்கள்.

ஹர்ஷரும் மகேந்திர பல்லவனும் கால வெள்ளத்தில் மறைந்துவிட்டனர். ஆனால் அவர்களின் நாடகங்கள் காலத்தின் அழியாத சாட்சிகளாக மீண்டும் மீண்டும் வாசிக்கப்படுகின்றன. தன்னுடைய வாழ்க்கையை காலவெளியில் நீட்சி பெறச்செய்யவே மனிதன் ஆசைப்படுகிறான். மாமன்னராக இருந்தாலும் மரணம் வாழ்வின் முற்றுப்புள்ளியாகிவிடுகிறது.  மரணத்தையும் தாண்டி தன் படைப்புகளின் வழியே  வாழ்வது கலைஞர்களால் மட்டுமே சாத்தியம். அதுதான், உண்மையான கலைக்குக் காலம் தரும் பரிசு.