Tuesday, May 31, 2011

டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் கோபாலபுரம்..!


அழகிரிக்கும் மாறன் சகோதரர்களுக்கும் இடையே நிலவிய மனக் கசப்பு முடிவுக்கு வந்தபோது, 'கண்கள் பனித்தன... இதயம் இனித்தது!’ என மனம் உருகிச் சொன்னார் கருணாநிதி. மீண்டும் மொத்தக் குடும்ப உறவுகளும் ஒன்று கூடும் வைபோகம் பாட்டியாலா நீதிமன்றத்திலும். திகார் சிறைச்சாலையிலும் கடந்த சில நாட்களாக நடந்தது.

அதாவது கோபாலபுரமே டெல்லிக்கு இடம் பெயர்ந்தது மாதிரி இருந்தது. அழுகை, ஆதங்கம், கோபம், கூச்சல் என மீடியாக்களின் பார்வைக்கு அப்பால் நடந்த அத்தனை நிகழ்வுகளும் அப்படியே இங்கே...

சி.பி.ஐ. நீதிமன்றத்துக்கு 23-ம் தேதி வந்த கனிமொழியை மத்திய அமைச்சர் அழகிரி சந்திப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், 'மத்திய அமைச்சராக இருக்கும் ஒருவர் குற்றம் சுமத்தப்பட்ட ஒருவரை நீதிமன்றத்தில் சந்திக்கக் கூடாது’ என்பதால், தன் மனைவி காந்தி, மகள் கயல்விழி, மகன் துரை தயாநிதி ஆகியோரை அங்கே அனுப்பி வைத்தார் அழகிரி.

கனிமொழி மீது மிகுந்த அன்பு பாராட்டுபவர் கயல்விழி. அதனாலோ என்னவோ... கனிமொழியைக் கண்டதும் 'அத்தே...’ எனக் கதறத் தொடங்கிவிட்டார் கயல். கனிமொழியைத் தோளோடு சாய்த்து காந்தி ஆறுதல் சொல்ல, ராஜாத்தி அம்மாளுக்கும் கண் கலங்கிவிட்டது. மதுரையில் துரை தயாநிதியின் திருமணத்துக்குப் பிறகு, காந்தியும் ராஜாத்தியும் அன்றுதான் சந்தித்தனர். நடுவில் கனிமொழி, இடப்புறம் காந்தி, வலப்புறம் கயல்விழி என அமர்ந்து நிறைய நேரம் பேசிக் கொண்டு இருந்தார்கள்.


''இந்த விவகாரத்தில் என்ன நடக்குதுன்னு எனக்குத் தெரியவே இல்லை அண்ணி. கலைஞர் டி.வி-யில் நான் பங்கு கேட்கலை. கையெழுத்துப் போடச் சொன்னாங்க, போட்டேன்...!'' என காந்தியிடம் கனிமொழி உருக்கமாகச் சொல்ல, ''எல்லாத்தையும் அண்ணன் பார்த்துப்பார். நீ தைரியமா இரு!'' என்றார் அவர் ஆறுதலாக!

கயல்விழியிடம் நெடுநேரம் பேசிய கனிமொழி, சகஜ நிலைக்கு வந்தார். சரத்குமாரின் உறவினர்களிடம், 'தைரியமாக இருங்கள்!’ என கனிமொழியே ஆறுதல் வார்த்தார். ''கோர்ட்டில் விசாரணை தொடங்க இன்னும் நேரம் ஆகுமா?'' என காந்தி அப்பாவியாகக் கேட்க, ''தாமதம் ஆகுறது நல்லதுதான் அண்ணி. உங்களோட இன்னும் கொஞ்ச நேரம் இங்கே பேசிக்கிட்டு இருக்கலாம். இல்லேன்னா, சீக்கிரமே ஜெயில்ல போய்த் தனி ஆளா உட்கார்ந்து இருக்கணும்!'' எனச் சொல்லி கனி சிரிக்க, எல்லோருக்குமே கண்ணில் நீர் கோத்துக்கொண்டது.
நீதிமன்ற நிகழ்வுகள் முடிந்து சிறைக்குச் செல்லும் நேரம் வந்ததும், ''ஆதியைப் பத்திரமா பார்த்துக்கோங்க!'' என்றபடியே கையசைத்துக் கிளம்பினார் கனி.

அன்று மாலை திகார் சிறைக்கு கருணாநிதி வர, அங்கே பெரிய பாசப் போராட்டமே நடந்தது. கனிமொழிக்கு ஆறுதல் சொல்லும் விதமாக, 'நான் டெல்லியிலேயே தங்கிடவாம்மா?’ எனக் கருணாநிதி தழுதழுக்க, 'எதுவா இருந்தாலும் நான் பார்த்துக்கிறேன்பா... நீங்க தைரியமாப் போங்க!’ என நம்பிக்கை ஊட்டினார்.

சிறை சந்திப்பு முடிந்தும் கருணாநிதிக்கு சென்னை திரும்ப மனம் இல்லை. ஜெகத்ரட்சகன், ஏ.கே.எஸ்.விஜயன் ஆகியோரிடம், 'சட்ட ரீதியா மேற்கொண்டு என்ன செய்ய முடியும்?’ என்பது குறித்து விசாரித்தார். இதற்கிடையில், அடுத்த நாள் ஸ்டாலின் டெல்லிக்கு வந்தார். சி.பி.ஐ. கோர்ட்டுக்கு வந்திருந்த கனிமொழியிடம் இந்தத் தகவல் சொல்லப்பட, அவருக்கு நம்ப முடியாத ஆச்சர்யம்.


ஸ்டாலினை சந்தித்தபோது மிகுந்த உற்சாகத்துடன் இருந்தார் கனி. ''என்னால் அப்பா ரொம்ப சங்கடப்படுறார். அதான் வருத்தமா இருக்கு!'' என்பது மட்டுமே கனி காட்டிய ஆதங்கம். கனி, ஸ்டாலின், ஆதித்யன் மூவரும் ஒரு பெஞ்சில் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்க, அதனை ஒருவர் செல்போனில் படம் எடுத்தார். இதில் கடுப்பான ஸ்டாலின், 'அவனைப் பிடிங்கய்யா...’ என்றார் ஆவேசமாக. தி.மு.க. புள்ளிகள் அந்த நபரைத் துரத்திப் பிடித்து அந்தப் படத்தை அழித்தனர்.

அடுத்த கட்ட சட்டரீதியான முன்னேற்பாடுகள் குறித்து சொல்லி, ஸ்டாலின் கனிமொழியைத் தேற்ற, ''அவ்ளோ சீக்கிரம் பெயில் கிடைக்காதுன்னு எனக்குத் தெரியும். சிறையில் இருப்பதை ஒரு புது அனுபவமா நினைச்சு என்னை நானே தேத்திக்கிறேன்!'' என்றார் கனி. ராஜாத்தி அம்மாளும் ஸ்டாலினுடன் சில நிமிடங்கள் பேசினார்.

அன்று மாலை... டெல்லி மீடியாக்களுக்கே தெரியாதபடி முக்கியமான ஒரு சந்திப்பு திகார் சிறைச்சாலையில் நடந்தது. மத்திய அமைச்சர்கள் மு.க.அழகிரியும் தயாநிதி மாறனும் சிறையில் கனியை சந்திக்க அனுமதி கேட்டனர். தயாநிதி மாறன் வந்திருப்பதை, கனியால் கொஞ்சமும் நம்ப முடியவில்லை!

ஸ்பெக்ட்ரம் பிரச்னைக்குப் பிறகு தயாநிதியை, கனிமொழி சந்திப்பதே இப்போதுதான். அழகிரியிடம் மனம்விட்டுப் பேசிய கனிமொழி, தயாநிதியிடம் நலம் விசாரித்தார். அப்போது ஆறுதலாக தயாநிதி சில விஷயங்களைச் சொல்லி இருக்கிறார். இருவரையும் சமாதானப்படுத்தும்விதமாக அழகிரி, குடும்ப விவகாரங்களை உரக்கப் பேசி இருக்கிறார்.

இறுதியில் கனிமொழியைத் தட்டிக் கொடுத்து, ''நானும் சிறைவாசம் அனுபவிச்சவன்தான். ஆனா, அப்போகூட இந்த அளவுக்கு சங்கடப்பட்டது இல்லை. நீ தைரியமாப் பேசினாலும் எனக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கும்மா. சீக்கிரமே உன்னை வெளியே எடுத்திடுவோம். குடும்ப ரீதியான அத்தனை கசப்புகளும் நிச்சயம் முடிவுக்கு வந்திடும்!'' எனச் சொன்னாராம். தயாநிதி அதிகம் பேசவில்லை என்றாலும், குடும்ப சமாதானத்துக்கான முதல் முயற்சி அங்கே நிகழ்ந்ததாக அடித்துச் சொல்கிறார்கள் டெல்லிவாலாக்கள்.

அடுத்து நிகழ்ந்த சந்திப்புதான் நம்ப முடியாத ஆச்சர்யம். ஆ.ராசா உடனான சந்திப்புதான் அது. ஆ.ராசா சகஜமாகப் பேசவில்லை என்றாலும், அழகிரியின் ஆறுதல் அவரைத் தெம்பாக்கி இருக்கிறது. தயாநிதி மாறனும் ராசாவுடன் கை குலுக்கி நிறையப் பேசி இருக்கிறார். 'சரத்குமாரை வரச் சொல்லுங்கள். நாங்கள் பார்க்க வேண்டும்!’ என ஆ.ராசாவிடம் சொல்லி அனுப்பினர் இருவரும். 'தயாநிதி மாறனை சந்திக்கும் நிலையில் நான் இல்லை!’ எனச் சரத்குமார் சொல்லிவிட்டதாக டெல்லி நிருபர்கள் வட்டாரம் சொல்கிறது.

சரத்குமாரின் சகோதரியின் வீடு டெல்லியில்தான் இருக்கிறது. அங்கே இருந்தும் கனிமொழிக்கும், சரத்துக்கும் சாப்பாடு வருகிறது. துணிமணிகள் பரிமாற்றமும் சரத் மூலமே நடக்கிறது. மூன்று வேளையும் வீட்டு சாப்பாட்டுக்கு நீதிமன்றம் அனுமதி கொடுத்திருந்தும், மதியம் தவிர்த்து இரு வேளைகளும் சிறை உணவைத்தான் கனிமொழியும் சரத்தும் சாப்பிடுகிறார்கள்.

25-ம் தேதி, சி.பி.ஐ. நீதிமன்றத்துக்கு வந்த கனிமொழியை, மு.க.தமிழரசு, செல்வி, துர்கா ஸ்டாலின், மோகனா என பெரிய உறவு வட்டாரமே சந்தித்தது.

குடும்ப ரீதியான பிரச்னையில் பெரிய பனிப் போர் நிகழ்ந்தது, செல்விக்கும் கனிமொழிக்கும் இடையேதான். ஆனால், அதை எல்லாம் மறந்துவிட்டு அத்தனை பேர் மத்தியிலும், ''உனக்கு இப்படி ஆயிடுச்சேம்மா'' என செல்வி தழுதழுத்தார். கனிமொழிக்கு மிகுந்த ஆறுதலாக அமைந்தது செல்வியின் வார்த்தைகள்தான். செல்வியின் கைகளைப் பற்றியபடியே துர்காவிடம் சிறை வாழ்க்கை குறித்து பேசி இருக்கிறார் கனிமொழி. அடுத்த சில நிமிடங்களில் முரசொலி மாறனின் மனைவி மல்லிகாவும் அங்கே ஆஜர். ''என்னைப் பார்க்க நீங்க எல்லாம் வருவீங்கன்னு நான் நினைக்கவே இல்லை. கெட்டதிலும் ஒரு நல்லதுன்னு சொல்வாங்களே... அதை நினைச்சே மனசைத் தேத்திக்கிறேன்!'' என அவரைப் பார்த்து கலங்கிவிட்டார் கனி.

ஆனால், ராஜாத்தி என்ன நினைத்தாரோ... செல்வி, துர்கா உள்ளிட்ட உறவுகள் வந்த உடனேயே அவர் பட்டும்படாமல் ஒதுங்கிக்கொண்டார்.

உறவுகளின் சந்திப்புகள் குறித்துப் பேசும் தி.மு.க-வின் டெல்லிப் புள்ளிகள், ''கனிமொழிக்கு இந்த அளவுக்கு சிக்கல் வராது என்ற நம்பிக்கையில்தான் ஆரம்பத்தில் உறவினர்கள் பலரும் அவரைக் கண்டுகொள்ளாமல் விட்டார்கள். கனிமொழியின் பிறந்த நாளுக்குக்கூட வாழ்த்து சொல்லாத அழகிரி, இப்படித் தேடி வந்து சந்தித்ததில், கனி மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார். குறிப்பாக தயாநிதி மாறனும், செல்வியும் நேரில் வந்து சந்தித்ததை எங்களால் இன்னமும் நம்ப முடியவில்லை.

ஸ்பெக்ட்ரம் பிரச்னையில் இருந்து வெளியே வர, முதலில் குடும்ப மோதல்களை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என தலைவர் நினைக்கிறார். அதற்குத் தக்கபடி குடும்ப உறவுகள் கைகோத்து இருப்பது நம்பிக்கை அளிக்கிறது. அதே நேரம், சிறைக்குள் தயாநிதி மாறனை சந்திக்க சரத்குமார் மறுத்ததும், செல்வி, துர்கா ஆகியோருடன் ராஜாத்தி அம்மாள் சரிவரப் பேசாமல் முறுக்கிக் கொண்டு நின்றதும்... குடும்ப மோதல்களை இன்னமும் பெரிதாக்கிவிடும் என்றே தோன்றுகிறது.

'எனக்கும் ஸ்பெக்ட்ரம் விவகாரத்துக்கும் என்ன சம்பந்தம்?’ என சிறைக்குள் புலம்பித் தவிக்கிறார் சரத். இவற்றை எல்லாம் தாண்டி, சட்ட ரீதியாகவும் இன்னும் சில திருப்பங்கள் இருக்கும்....'' என்கிறார்கள் டெல்லி சிறைத் துறை வட்டாரத்தில்!

நன்றி : ஜூனியர்விகடன்-01-06-2011



Friday, May 27, 2011

கனிமொழியைச் சிக்க வைத்த கலைஞர் டி.வி. அதிகாரி…!

'மகள் கனிமொழி பிறந்த அதிர்ஷ்டமே கருணாநிதியை முதல் அமைச்சராக உயர்த்தியது!’ என்று 'நாத்திகம் பேசும்’ தி.மு.க-வினரே சொல்வார்கள். இன்று அதே கனிமொழியின் துரதிர்ஷ்டம், கருணாநிதியின் 70 வருடப் பொது வாழ்க்கைக்கு ஒரு களங்கம்!

2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சி.பி.ஐ. தாக்கல் செய்த இரண்டாவது குற்றப் பத்திரிகையில் கலைஞர் டி.வி-யின் முதன்மை நிர்வாகி சரத்குமாரும் கனிமொழியும், முறையே 16-வது மற்றும் 17-வது குற்றவாளிகளாகச் சேர்க்கப் பட்டனர்.

'கலைஞர் டி.வி-க்கு யாரிடமும் சட்டபூர்வமாக கடன் வாங்க உரிமை உண்டு. அதன்படி நேர்வழியில் கடன் வாங்கி உள்ளனர். அதற்காக அவரை குற்றம் புரிந்தவராகக் கருதக் கூடாது!’ என்று வாதாடினர். சி.பி.ஐ. தரப்பிலும் ஏராளமான எதிர் வாதங்கள் வைக்கப்பட்டன. இப்படி இரு தரப்பிலும் வைக்கப்​பட்ட வாதங்களைக் கேட்ட பின், சிறப்பு நீதிமன்ற நீதிபதி சைனி, நீளமான ஒரு தீர்ப்பைக் கூறினார். 2ஜி வழக்கின் இரண்டாவது குற்றப் பத்திரிகையே 100 பக்கங்களுக்கு குறைவானதுதான். ஆனால், கனிமொழி ஜாமீன் மனு மீது, நீதிபதி அளித்த தீர்ப்பு 144 பக்கங்கள்.

''நான் இப்போது வழக்கின் தன்மையைக் குறித்தோ, அல்லது அதுகுறித்து மதிப்பிடவோ செய்யவில்லை. வழக்கு ஆரம்ப கட்டத்தில்தான் உள்ளது. நீதிமன்ற விசாரணையில்தான் உண்மைகள் வெளிவரும். ஆனால், குற்றப் பத்திரிகையில் சொல்லப்பட்டவை மற்றும் சாட்சியங்களின் படி, 2ஜி உரிமம் பெற்ற ஸ்வான் டெலிகாம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து 200 கோடி பெற்றது சரத்குமார்தான். அவர்தான் எல்லா ஆவணங்களிலும் கையெழுத்துப் போட்டுள்ளார். நிறுவனம் சார்பில் மட்டும் அல்ல, மற்ற இயக்குநர்கள் சார்பிலும் கையெழுத்துப் போட்டுள்ளார். கலைஞர் டி.வி. தொடர்பாக ஆ.ராசாவோடு அடிக்கடி தொடர்பு கொண்டு உள்ளார் என்பதற்கு சாட்சியங்கள் உள்ளன...'' என்றார் நீதிபதி சைனி.

அடுத்ததாக, கனிமொழியைப்பற்றி குறிப்பிட்டார் நீதிபதி.

''கனிமொழி குற்றமற்றவர், அப்பாவி, ஓர் அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதாலே தவறுதலாக சம்பந்தப்படுத்தி உள்ளனர் என்று சொல்லப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆ.ராசாவின் தனி உதவியாளர் ஆசீர்வாதம் ஆச்சாரி கொடுத்துள்ள வாக்குமூலத்தோடு, கலைஞர் டி.வி-யின் நிதி மேலாளர் ஜி.ராஜேந்திரன் கூறிய சாட்சியமும் கனிமொழிக்கு எதிராக இருக்கிறது!'' என்று கூறி ஜாமீனை மறுத்தார்.

'கலைஞர் டி.வி. 200 கோடியை லஞ்சமாக வாங்கவில்லை. கடனாகவும் பங்குகளாக மாற்றிக்கொள்ளவும்தான் வாங்கியது’ என்று உருவாக்கப்பட்ட ஒப்பந்தமே கனிமொழிக்கு எதிராக மாறி உள்ளது.

6.6.07 முதல் 20.6.07 வரை கனிமொழி, கலைஞர் டி.வி.யின் இயக்குநராக இருந்துள்ளார். சில காரணங்​களுக்காக இந்தப் பொறுப்பில் இருந்து விலகி இருந்​தாலும், 19.12.08-ல், 200 கோடியை சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்கிய ஒப்பந்தத்தில் தயாளு அம்மாள், கனிமொழி, சரத்குமார் ஆகியோர் கையெழுத்து இட்டுள்ளனர். 13.2.2009 அன்று நடந்த இயக்குநர்கள் கூட்டத்தில் சரத்குமாரோடு கனிமொழியும் பங்கெடுத்துக்கொண்டு, சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பணம் பெற சரத்குமாருக்கு அனுமதி கொடுத்துள்ளார் என்கிற தகவல்களை கலைஞர் டி.வி. நிதிப் பிரிவு பொது மேலாளர் ராஜேந்திரன் சாட்சியமாகக் கூறி இருப்பதைத்தான் நீதிபதி குறிப்பிடுகிறார்.

ராம்ஜெத்மலானி வைத்த வாதங்களில் மிக முக்கியமானது, கனிமொழி ஒரு பெண் என்பதற்காக ஜாமீன் வழங்க வேண்டும் என்பதாகும். ''பெண் என்கிற முறையில் கனிமொழிக்கு ஜாமீன் வழங்க முடியாது! ஏனென்றால் மிகப் பெரிய குற்றத்தின் தன்மை (Magnitude of crime) மற்றும் அவருக்கு எதிராக உள்ள குற்றச்சாட்டின் அடிப்படைத் தன்மை வலுவாக இருக்கிறது'' என்றார்.

இந்த ஜாமீன் மனு விவகாரத்தில் கனிமொழியின் வழக்கறிஞர்கள் சண்முக சுந்தரம், ராம் ஜெத்மலானி மற்றும் சரத்குமாரின் வழக்கறிஞர்கள் வி.ஜி.பிரகாசம் மற்றும் அல்டாஃப் ஆகியோர், ''புலனாய்வின்போது கைது செய்யப்படாத ஒருவர், சம்மன் (சி.ஆர்.பி.சி. 88-வது பிரிவின் படி) மூலம் நீதிமன்றத்தில் ஆஜராகி இருக்கும்போது, அவரை குற்றவியல் நடைமுறைப் பிரிவு 309-வது பிரிவின்படி நீதிமன்றக் காவலில் வைக்கக் கூடாது!'' என்று அழுத்தமாகச் சொன்னார்கள்.

ஆனால் நீதிபதியோ, ''ஒருவர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், குற்றத்தின் தன்மையின் அடிப்படையில், நீதிமன்றக் காவலில் வைக்கவோ அல்லது ஜாமீனில் அனுப்பவோ அதிகாரம் உண்டு'' என்று குறிப்பிட்டார். மேலும் தீர்ப்புக் குறிப்பில், ''கனிமொழியின் கண்ணியத்தையும் நன் மதிப்பையும் என்னால் பார்க்க முடிகிறது என்றாலும், என்னால் வழக்கின் தன்மையைக் கருதி எந்தச் சலுகையும் காட்ட முடியவில்லை!'' என்று கருத்துச் சொல்லி இருக்கிறார்.

கடந்த 20-ம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு ஒரே வரியில் தீர்ப்பைப் படித்தார். ''வழக்கின் முக்கியத்துவத்தைக் கருதி, கனிமொழி, சரத்குமாரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்கிறேன்!'' என்று கூறினார் சைனி.

தீர்ப்பு கூறிய அடுத்த சில நிமிடங்களில் கனிமொழியையும், சரத்குமாரையும் குற்றவாளிக் கூண்டுக்கு அருகே அழைக்கவே இருவர் முகத்திலும் பதற்றம் பரவியது. அன்றைய தினம் நீதிமன்றத்துக்கு வந்திருந்த தி.மு.க. ஆதரவுப் பெண்கள் பலரும் கதறி அழுதனர். மயிலாப்பூர் கவுன்சிலர் துரை கதறி அழுதார். கனிமொழியின் கணவர் அரவிந்தனும் முன்னாள் அமைச்சர்கள் பூங்கோதையும் சற்குண ​பாண்டியனும் வேதனையில் துடித்தனர். 2-ஜி விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஷாகித் பால்வா உட்பட மற்ற குற்றவாளிகளும், அவர்களின் உறவினர்களும் கனிமொழிக்கு ஆறுதல் கூறினர்.

அடுத்த சில நிமிடங்களில் பெண் போலீஸார் ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் வர, நீதிமன்ற வளாகத்தில் உள்ள லாக்-அப்புக்கு அழைத்துச் செல்லப்பட்டார் கனிமொழி. லாக்-அப்புக்குச் சென்ற கனிமொழி, தன் மகனைப் பார்க்க வேண்டும் என்று சொல்லவே, ஆதித்யன் நீதிமன்ற வளாகத்துக்கு வரவழைத்துப் பேசவைக்கப் பட்டார். கனிமொழி கைப்பையோடு லாக்-அப் செல்ல முயன்றார். அனுமதி இல்லை என்றதும் அதில் இருந்து புத்தகங்களை மட்டும் எடுத்துக்கொண்டார். கனிமொழி, 'மை நேம் இஸ் ரெட்’ என்ற ஆங்கில நாவலோடு சிறைக்குச் சென்றார்.



ஆ.ராசாவுக்கு அடுத்து இப்போது, கனிமொழியும் சரத்குமாரும் திகார் ஜெயிலுக்குப் போய்விட்டார்கள். 'இத்துடன் முடியாது. இன்னும் சில தி.மு.க. அரசியல் புள்ளிகளும் உள்ளே செல்ல இருக்கிறார்கள்’ என்கிறார்கள் நீதிமன்ற வட்டாரத்தில்!


ராசா வீட்டுச் சாப்பாடு...

அமைச்சர் என்கிற முறையில் பல டெல்லிப் பிரமுகர்கள் நீதிமன்றத்துக்கு நேரடியாக வர முடியாத நிலையில், டி.ஆர்.பாலுதான் அனைத்து விவகாரங்​களையும் கவனித்துக் கொள்கிறார். நெப்போலியன் வர முடியாத சூழ்நிலையில், அவரது தனிப்பட்ட உதவியாளரும் ஐ.பி.எஸ். அதிகாரியுமான கண்ணன் ஜெகதீசனை அனுப்பி வருகிறார். டி.கே.எஸ்.இளங்​கோவன், கே.பி.ராமலிங்கம்போன்றவர்கள் தவறாமல் நீதிமன்றத்துக்கு வருகிறார்கள். திகார் சிறை எண் 6-ல் உள்ள 8-வது வார்டில் கனிமொழி அடைக்கப்பட்டு உள்ளார். இது புதிதாகக் கட்டப்பட்டது.

'ஏ’ கிளாஸ் கைதிகளுக்கு ஆறு செல்கள் உள்ளன. சிமென்ட் மேடைதான் கட்டில். படுக்கை விரிப்புகளைத் தலையணையாக்கிக் கொண்டாராம். ஒரு சிறிய இந்தியன் டைப் டாய்லெட். முதல் நாள் கடுமையான உஷ்ணத்தை சந்தித்தார், கனி. ஆனால், திடீரென வருண பகவான் கனிவு காட்டவே, கோடை மழை வந்து உஷ்ணத்தைத் தணித்தது.

பொதுவாக, சிறைகளில் மின் விசிறிகளுக்கு அனுமதி இல்லை. கனிமொழி நாடாளுமன்ற உறுப்பினர் என்பதால் சீலிங் ஃபேன் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வழங்கப்​பட்ட இலவச டி.வி. மாதிரி சிறிய தொலைக்காட்சி பெட்டியில் 20-க்கும் மேற்பட்ட சேனல்கள் வரும். தினசரிகள் வழங்கப்படுகின்றன.

இரு தினங்களுக்குப் பின்னர், கனிமொழிக்கும், சரத்​குமாருக்கும் வீட்டில் சமைக்கப்பட்ட உணவுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ராசாவுக்கும் அனுமதி உண்டு என்பதால், ராசா வீட்டில் இருந்தே மூவருக்கும் உணவு வருகிறது.

நன்றி : ஜூனியர்விகடன்


டெல்லியிலேயே தங்கிடவா…? - மகளிடம் தழுதழுத்த அப்பா..!

15-க்கு 10 அடி நீள அகலம்தான் அந்த அறை. கல் படுக்கையும் ஒரு காற்றாடியும். தமிழகத்துக்கே இலவசத் தொலைக்காட்சிப் பெட்டி அளித்தவரின் மகளுக்கு, சிறையில் சிறப்புச் சலுகையாக ஒரு சின்னத் தொலைக்காட்சிப் பெட்டி. படிப்பதற்கான மனநிலை இருக்குமோ இருக்காதோ... கைவசம் ஆறு புத்தகங்கள்... ஆம், திஹார் சிறையில் கனிமொழி!

தி.மு.க-வின் ராஜ்யசபா எம்.பி, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள்... என்ற சக்தி வாய்ந்த அடையாளங்கள் சட்டத்தின் முன் தோற்கடிக்கப்பட, திஹாரில் சிறை எண் 6-ல் அடைக்கப்பட்டார் கனிமொழி. அலைக்கற்றை விவகாரத்தில் கனிமொழியின் பெயர் அடிபடத் தொடங்கிய நாளில் இருந்தே, கருணாநிதியின் தூக்கம் தொலைந்துவிட்டது.

கட்சியின் உயர்நிலை செயல்திட்டக் குழுவைக் கூட்டி, 'இது கனிமொழி மீதான பிரச்னை இல்லை. கட்சியின் மதிப்புக்கு பங்கம் உண்டாக்கும் பிரச்னை!’ எனச் சொல்லி தீர்வுக்கு வழி கேட்டார். ஆனால், 'காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகுவது நல்லது அல்ல!’ என கட்சிக்காரர்களே கருணாநிதியின் எண்ணத்துக்கு அணை போட்டார்கள்.

“கனிமொழி என் மகள் மட்டும் அல்ல... இந்தக் கட்சிக்காக பெரிதாகத் தொண்டாற்றியவர். அவரும் அவருடைய தாயாரும் படுகிறபாட்டை என்னால் சொல்ல முடியவில்லை!'' எனக் கட்சி நிர்வாகிகள் மத்தியில் கருணாநிதியால் தழுதழுக்க மட்டுமே முடிந்தது.

'பிரசித்தி பெற்ற வழக்கறிஞரான ராம்ஜெத்மலானியை வாதாட வைத்தால், நிச்சயம் கனிமொழிக்கு பெயில் கிடைக்கும்’ என நம்பினார் கருணாநிதி. ஆனால், ஜெத்மலானியின் வாதமும் கனிமொழியைக் காப்பாற்றாமல் கைவிட்டதுதான் கருணாநிதியின் பெரும் துயரம்.

20-ம் தேதி காலையில் கணவர் அரவிந்தனுடன் சி.பி.ஐ. கோர்ட்டுக்கு வந்தார் கனிமொழி. டி.ஆர்.பாலு உள்ளிட்ட தி.மு.க. எம்.பி-க்களுடன் மகளிர் அணியினரும் குழுமி இருந்தார்கள். 'பெயில் மனு நிராகரிக்கப்பட்டால், அடுத்த கணமே கைதாக வேண்டி இருக்கும்!’ என்பதால், மகன் ஆதித்யனை கனிமொழி கோர்ட்டுக்கு அழைத்து வரவில்லை.

மீடியா வெளிச்சம்படாமல் பையனை வளர்ப்பதில் ஒரு காலத்தில் உறுதியாக இருந்தவர் கனிமொழி. ஆதித்யனின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிக்க வந்த ஒரு முன்னாள் அமைச்சரைக் கையெடுத்துக் கும்பிட்டு, 'அவனைப் பெரிய ஆளா ஆக்கிடாதீங்க!’ என வேண்டியவர். ஆனால், கோர்ட்டுக்கு அனுதினமும் வந்து கையெழுத்திட வேண்டும் என உத்தரவு வந்தபோது, மகனோடு வர வேண்டிய இக்கட்டு கனிமொழிக்கு.

20-ம் தேதி மதியம் தீர்ப்பை வாசித்த நீதிபதி சைனி, 'குற்றச் சதியில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் வலுவாக இருக்கின்றன. சாட்சி களைக் கலைக்கும் வாய்ப்பும் அதிகம். அதனால், முன் ஜாமீன் மனு நிராகரிக்கப்படுகிறது!’ என அறிவிக்க, அரவிந்தனின் தோளில் சாய்ந்து கண் கலங்கினார் கனிமொழி.

மகளுக்கு எப்படியும் பெயில் கிடைத்துவிடும் என நம்பி இருந்த ராஜாத்தி அம்மாள் பதறி அடித்து டெல்லிக்குக் கிளம்பினார். ஆனால், அவர் வருவதற்கு முன்னரே, திஹார் ஜெயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார் கனிமொழி.

சிறைக்குள் போகும் முன்னர் கனிமொழி, அரவிந்தனைக் கூப்பிட, அவர் பதறியடித்து ஓடி வந்தார். 'நான் ஆதித்யனிடம் பேசணுமே...’எனக் குரல் உடைந்து சொல்லியிருக்கிறார் கனிமொழி. அதற்கு போலீஸ் அனுமதி மறுக்க, 'என்னைப் பிரிஞ்சு ஒரு நாள்கூட இருக்க மாட்டான். ஆதிகிட்ட நான் ஸாரி கேட்டதா சொல்லிடுங்க!’ என்றபடியே சிறை வளாகத்துக்குள் போனார் கனிமொழி.

சிறை விதிகளின்படி, வாட்ச், அணிகலன்கள் உள்ளிட்டவற்றைக் கழற்றிவிட வேண்டும். 'கைப் பையை நீங்கள் வைத்துக் கொள்ளலாம். ஆனால், மூக்குத்தியைக் கழற்றிக் கொடுங்கள்!’ என சிறை அதிகாரி சொல்ல, கனிமொழி எதிர்பாரா அதிர்ச்சியில் நிலை குலைந்தது அங்கேதான்.

'அஞ்சாவது படிக்கிற காலத்தில் இருந்து மூக்குத்தி போடுறேன். அவசியம் கழற்றித்தான் ஆகணுமா?’ எனக் கலங்கினார் கனி. மூக்குத்தியை அவ்வளவு சுலபமாகக் கழற்ற முடியவில்லை. தி.மு.க-வின் எம்.பி-க்களான வசந்தி ஸ்டான்லியும், ஹெலன் டேவிட்சனும் போலீஸ் அனுமதி பெற்று உள்ளே போக, அங்கே கனி அமர்த்தப்பட்டு இருந்த கோலம் அவர்களைக் கதற வைத்துவிட்டதாம். சிறை சம்பிரதாயங்களை முடித்துவிட்டு, கண்ணீர் முட்ட உள்ளே போன கனிமொழி திரும்பத் திரும்பச் சொன்ன வார்த்தைகள்... 'ஆதித்யனைப் பத்திரமாப் பார்த்துக்கங்க!’


''திஹார் சிறையில் பணியாற்றும் பெண் அதிகாரி ஒருவர் இரண்டு வாரங்களுக்கு முன் சி.ஐ.டி. நகருக்கு அழைத்து வரப்பட்டார். சிறை எப்படி இருக்கும், என்னென்ன சாப்பாடு, உள்ளே யாருக்கு அதிகாரம் அதிகம் போன்ற விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டார்கள்.
அதனால், 6-ம் எண் அறையைப் பார்த்து கனிக்கு பெரிதாக அதிர்ச்சி இல்லை. அரை மணி நேரத்துக்குப் பிறகு கூடுதலாக இரண்டு தலையணைகள் கேட்டு வாங்கிக் கொண்டார். இரவு அவர் சரியாகத் தூங்கவில்லை. பெண் அதிகாரி ஒருவர் மூலம் மகனுடைய செல்போனுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பச் சொன்னார். இந்த வருடம் ஆதித்யன் ஆறாம் வகுப்பு சேர வேண்டும். அவனைப் பற்றிய கவலைதான் கனிமொழியை வாட்டுகிறது!'' என்கிறார்கள் டெல்லி தி.மு.க. புள்ளிகள்.

அடுத்த நாள் பாட்டியாலா சி.பி.ஐ. கோர்ட்டுக்கு வந்தார் கனிமொழி. அதற்கு முன்னதாகவே கோர்ட்டுக்கு வந்து வராண்டாவில் காத்திருந்த ராஜாத்தி அம்மாள் மகளைக் கட்டிப் பிடித்துக் கலங்கினார். ''என்னால்தானே இத்தனையும்...'' என ராஜாத்தி சொல்லி அழ, அவரை அமைதியாக்கி, ரகசியமாக ஏதோ சொன்னார் கனிமொழி. உடனே சரத் ரெட்டியையும் ஆ.ராசாவையும் சந்தித்து ஏதோ பேசினார் ராஜாத்தி அம்மாள். அப்போது, கண்ணீர் மறைந்து... கோபமும் ஆவேசமுமாக இருந்தது அவருடைய முகம்.

ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி, ஆதித்யனை அழைத்து வர, கனிமொழிக்கு மீண்டும் கண்ணீர் கோத்துக்கொண்டது. ''அம்மா, எப்போ வெளியே வரப் போறேன்னு தெரியலை. பத்திரமா இரு. அம்மாவைப் பார்க்கணும்னு அடம் பிடிக்காதே...'' எனத் தளும்பிய கண்களுடன் கனிமொழி சொல்ல, ''நான் பத்திரமா பார்த்துக்கிறேன். நீங்க தைரியமா இருங்க!'' என ஆறுதல் சொன்னார் பரமேஸ்வரி. டெல்லியில் உள்ள ஆ.ராசாவின் வீட்டில் அவருடைய மனைவி பரமேஸ்வரியின் பராமரிப்பில்தான் இருக்கிறார் ஆதித்யன்.

காந்தி அழகிரி, துரை தயாநிதி ஆகியோர் கோர்ட்டில் கனிமொழியைச் சந்தித்தனர். 'அண்ணி...’ என அடக்க மாட்டாமல் கனிமொழி விசும்ப, அவரைத் தோளில் சாய்த்துத் தேற்றினார் காந்தி அழகிரி. இதற்கிடையில், ஸ்டாலின் சொல்லி அனுப்பிய ஆறுதலும் கனிமொழிக்கு ஆறுதல் வார்த்து இருக்கிறது.

23-ம் தேதி காலையிலேயே டெல்லி கிளம்பிய கருணாநிதி, திஹாருக்குப் போய் கனிமொழியைச் சந்தித்தார். அங்கே கனிமொழி சில விஷயங்களை வேதனையோடு சொல்லிக் கலங்க, 'நான் இங்கேயே தங்கிடவாம்மா?’ என தழுதழுத்திருக்கிறார் கருணாநிதி. விழிகள் துடைத்து தன்னைத்தானே தேற்றிக் கொண்ட கனிமொழி, 'நீங்க கிளம்புங்கப்பா... நான் பார்த்துக்கிறேன். ஆதித்யனை கவனிச்சுக்கங்க!’ எனச் சொல்லி இருக்கிறார்.

எப்போதும் இல்லாத அளவுக்கு டெல்லியில் தற்போது 42 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக அனல் அடிக்கிறது. மகள் படும் துயரம் பொறுக்காமல் கருணாநிதி எத்தகைய முடிவையும் எடுப்பார் என்கிற நிலையில், டெல்லியின் அனல் இன்னும் அதிகமாகலாம்!

நன்றி : ஆனந்தவிகடன்



Tuesday, May 24, 2011

‘ரெட்’ கலரில் SONY!

நியூயோர்க், அமெரிக்கா: Sony நிறுவனத்துக்கு நேற்றைய தினம் (திங்கட்கிழமை) அவ்வளவு சந்தோஷமான தினமாக இருந்திருக்க முடியாது. காரணம், நேற்று வெளியிடப்பட்ட அவர்களின் வருடாந்த வரவு-செலவு கணக்கில் காட்டப்பட்டிருப்பது, 360 பில்லியன் யென் (ஜப்பானிய கரன்சி) நஷ்டம்!

Sony நிறுவனத்தின் இந்த வருடக் கணக்குகள், Red Inkல் (நஷ்டம் காட்டுவதை அப்படித்தான் அழைப்பார்கள்) காட்டப்பட்டுள்ளதற்கு, ஜப்பானில் சமீபத்தில் நடைபெற்ற பூகம்பம் காரணமல்ல. ஏனென்றால், இந்த நஷ்டத்தின் பெரும்பகுதி சென்ற வருடத்திலிருந்து கொண்டுவரப்பட்டது!

உலக அளவிலான பொருளாதார சீர்குலைவு ஒரு காரணம், அதிகரித்த எண்ணைவிலை ஏற்றுமதிச் செலவை அதிகரித்தது மற்றொரு காரணம். மூன்றாவது காரணம், குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட கொரியப் பொருட்களின் அருமையான சந்தைப்படுத்தல்.

ஜப்பானில் மாத்திரமே 'தனித்துவ' மார்க்கெட் இருக்கின்றது!

ஒருகாலத்தில், ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்கச் சந்தைகளுக்குள் நம்பகத்தன்மையற்ற பொருட்களாக ஒதுக்கப்பட்டவை கொரியத் தயாரிப்புகள். இன்று நிலைமை தலைகீழ். அவற்றின் திறமையான மார்க்கெட்டிங், அட்வர்டைசிங் ஆகியவை அவற்றைத் தாங்கி நிற்கின்றன.

2010க்குப் பின், ஜப்பானியப் பொருட்களில் கார்களைத் தவிர வேறெந்தப் பொருளுக்கும் தனித்துவ மார்க்கெட் கிடையாது.

Sony நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள ரெட் இங்க் வரவு-செலவு அறிக்கை, அவர்களது பங்குகளை நியூயோர்க் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் சிறிதளவு சரிய வைத்திருக்கின்றது. ஆனாலும், நிலைமை எதிர்பார்த்த அளவுக்கு மோசமில்லை.

Sony நிறுவனத்தின் சீஃப் பைனான்சியல் ஆபிசர் மசாரு காட்டோ, இந்த நஷ்டம் தமது கையிருப்பிலுள்ள நிதியையோ, நிறுவனத்தின் ஓவர்ஆல் நிதிநிலைமையையோ பாதிக்காது என்று உறுதி செய்திருக்கின்றார். நிறுவனத்தின் கேஸ் ஆன் ஹான்ட், இதைப்போல மூன்று நஷ்டக் கணக்குகள்வரை சமாளிக்கும் அளவில் உறுதியாக இருக்கின்றது.

இருப்பினும், Sony நிறுவனம், செலவு குறைந்த தயாரிப்பு முறைகள் பற்றி அதிகம் அலசத் தொடங்கியுள்ளது. இந்த வருடம், மூன்றாம் உலக நாடுகளில் தொழிற்சாலைகள் தொடங்குவதுதான் அவர்களது முன்னுரிமையாக இருக்கப்போகின்றது.

Monday, May 23, 2011

திமுக தோல்வி அடையும் என்பதை முன்கூட்டியே கணித்த தயாநிதி மாறன்: விக்கிலீக்ஸ்

சட்டப்பேரவைத் தேர்தலில் படுதோல்வி, 2ஜி வழக்கில் திமுக எம்பி கனிமொழி கைது என திமுகவுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக ஏற்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் இதெல்லாம் நடக்கும் என அக்கட்சியின் மத்திய அமைச்சர் ஒருவர் முன்கூட்டியே கணித்துள்ளார்.

இதுகுறித்த அமெரிக்க தூதரகத்தின் கேபிளை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.

திமுக தோல்வி அடையும் என்பதை 2008-ம் ஆண்டிலேயே மத்திய அமைச்சரும், கருணாநிதியின் பேரனுமான தயாநிதி மாறன் கணித்துள்ளார்.

திமுக மீது படிந்துள்ள ஊழல் கறையை அகற்றாவிட்டால் கட்சிக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் மாறன் தெரிவித்துள்ளார்.

மாறன் இவ்வாறு கூறியதாக அமெரிக்க வெளியுறவுத் துறைக்கு அந்நாட்டின் தூதரக அதிகாரி டேவிட் ஹூப்பர் தகவல் அளித்துள்ளார்.

அதிகாரத்துக்கு வருபவர்கள் கவனத்தை இழந்து பணம் சேர்ப்பதிலேயே குறியாக இருக்கின்றனர் என தயாநிதி மாறன், டேவிட் ஹூப்பரிடம் தெரிவித்துள்ளார்.

விக்கிலீக்ஸ் வெளியிட்ட அமெரிக்க கேபிளில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்லேடன் கொலைக்கு பழிக்குப் பழி


பாகிஸ்தான் கடற்படை முகாமில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலைவரை வெடிச் சத்தங்கள் கேட்டவண்ணம் இருந்தன. பாகிஸ்தானின் தெற்கு நகரமான கராச்சியில் அமைந்துள்ள இந்தக் கடற்படை முகாமுக்குள், தீ கொழுந்துவிட்டு எரிவதை வெளியேயிருந்தே காணக்கூடியதாக இருந்தது.

நன்கு ஆயுதம் தாங்கிய தீவிரவாதக் குழு ஒன்று, கடற்படை முகாமுக்குள் நேற்று நள்ளிரவுக்குச் சற்றுமுன் ஊடுருவியது. அவர்களுக்கு கடற்படை முகாமின் உள்ளேயுள்ள அமைப்புப் பற்றி நன்றாகவே தெரிந்திருக்கின்றது என்பதை அவர்களது நடவடிக்கைகளில் இருந்து அறியக்கூடியதாக இருந்தது.

கடற்படை முகாமுக்குள் எந்தெந்த இடங்களில் தாக்குதல் நடாத்தினால் வெடித்துச் சிதறும் என்று இலக்கு வைத்தே அவர்கள் தாக்குதல்களை நடாத்தினார்கள். நள்ளிரவுக்குச் சற்றுமுன் தொடங்கிய தீவிரவாதிகளின் தாக்குதல்கள், இன்று அதிகாலைவரை தொடர்ந்துகொண்டிருந்தது.

விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ள இடத்துக்கு அருகே இன்று அதிகாலையில் கொழுந்துவிட்டு எரியும் நெருப்பு

குறிப்பிட்ட இந்தக் கடற்படை முகாமின் பெயர் சமீபத்தில்தான் ஊடகங்களில் அடிபட்டுக் கொண்டிருந்தது. காரணம், விக்கிலீக்ஸால் கசியவிடப்பட்ட ஆவணங்கள் ஒன்றில், இந்த முகாம் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தது.

“அமெரிக்காவால் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டிருந்த முக்கிய யுத்த தளவாடங்கள் இந்த முகாமுக்குள்தான் வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் அமெரிக்காவால் வழங்கப்பட்ட P-3C ரகத்திலான ரோந்து விமானங்களும், கடலில் செலுத்தப்படக்கூடிய ஏவுகணைகளும் இங்குதான் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன.” இதுதான், விக்கிலீக்ஸ் ஆவணங்களில் இருந்து வெளியாகியிருந்த தகவல்.

பாகிஸ்தான் தலிபான் அமைப்பு, இன்று காலை இத் தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ளது. பின்லேடன் கொல்லப்பட்டதற்குப் பழிக்குப் பழி வாங்கவே கடற்படை முகாம் தாக்குதல் நடாத்தப்பட்டதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.

தாக்குதல் செய்தி கிடைத்து இன்று அதிகாலை வேறு ராணுவ முகாம்களில் இருந்து வந்த பாகிஸ்தானின் ராணுவத்தினர்.

தாக்குதல்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே, பாகிஸ்தானின் சில டீ.வி. சானல்கள் கடற்படை முகாமுக்கு வெளியே நின்றபடி உள்ளே நடப்பதை லைவ்வாக ஒளிபரப்புச் செய்துகொண்டிருந்தன. முகாமுக்கு உள்ளே அமெரிக்காவால் வழங்கப்பட்ட விமானம் ஒன்று கொழுந்துவிட்டு எரிவதையும், அதன் பின்னணியில் துப்பாக்கிச் சண்டை நடப்பதையும் அந்த வீடியோ ஃபூட்டேஜ்களில் காணக்கூடியதாக இருந்தது.

பாகிஸ்தான் கடற்படைக்கு மிகவும் முக்கியமான தளம் இது. அதைவிட இந்தத் தளத்துக்கு மற்றொரு முக்கியத்துவமும் இருக்கின்றது. பாகிஸ்தான் வைத்திருக்கும் அணு ஆயுதங்களுக்கு கடல் வழியாக ஆபத்து வந்தால் அதைத் தடுக்கவென அமைக்கப்பட்டுள்ள ராணுவ அரண்களில் இந்தக் கடற்படை முகாமும் ஒன்று.

இந்த முகாமிலிருந்து வெறும் 30 கி.மீ. தொலைவிலேயே, பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது!

அதனால்தான் இந்தத் தாக்குதல் ராணுவ வட்டாரங்களில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தீவிரவாதிகளால் எப்படி இந்த முகாமுக்குள் செல்ல முடிந்தது என்ற கேள்விக்கான பதிலை பாகிஸ்தான் ராணுவம் தேடிக்கொண்டிருக்கின்றது. பாகிஸ்தான் ஜனாதிபதியும், பிரதமரும் தாக்குதல் செய்தி கிடைத்தவுடன் இன்று அதிகாலை காலை கராச்சிக்கு விரைந்திருக்கின்றார்கள்.


Saturday, May 21, 2011

வெற்றிகரமாக ஏவப்பட்டது GSAT-8 செயற்கைக்கோள்!

இந்தியாவின் நவீன தொலைத்தொடர்பு செயற்கைக்கோளான ஜிசாட்-8 (GSAT-8) சனிக்கிழமை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையமான ஏரியன்ஸ்பேஸ் தளத்தில் இருந்து ஜிசாட்-8 செயற்கைகோள், ஏரியான் 5 ராக்கெட் மூலமாக அதிகாலை 02.06 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் சீறிப் பாய்ந்தது.

இந்தியாவின் தகவல் தொடர்பு பயன்பாட்டுக்காக அதி நவீன தொழில் நுட்பங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயற்கைக் கோள் 3,100 கிலோ எடை கொண்டது.

பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத்தில் ஜிசாட் -8 செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டது.

இந்த செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதாக இஸ்ரோ குழுவினர் தெரிவித்தனர்.

ஜிசாட் 8 செயற்கைக்கோள் வெற்றிக்கு, இஸ்ரோ செயலர் கே.ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழுவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கண்ணீர் சிந்திய ராஜாத்தி

புதுடில்லி : 2ஜி வழக்கில் சி.பி.ஐ., தாக்கல் செய்த 2வது குற்றப்பத்திரிகையில் கூட்டு சதியாளர் என குற்றஞ்சாட்டப்பட்டிருந்த தி.மு.க., எம்.பி.,யும், கருணாநிதியின் மகளுமான கனிமொழி ‌நேற்று ( 20ம் தேதி) டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். டில்லி திகார் சிறை எண் 6ல் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.


ராஜாத்தி கண்ணீர் : 2ஜி வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட கனிமொழி, கலைஞர் டி.வி., நிர்வாக இயக்குநர் சரத்குமார் ஆகியோர் திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். இன்று காலையில் மீண்டும் இன்று ‌கனிமொழி, சரத்குமார் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர். ராஜாவும் ஆஜர் படுத்தப்பட்டார். கனிமொழி கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜரான போது அங்கே காத்திருந்த கனி‌மொழியின் தாயார் ராஜாத்தி, கனிமொழியை பார்த்து அழுத வண்ணம் இருந்தார். கனிமொழியின் கணவர் அரவிந்தனும் கோர்ட்டில் இருந்தார்.



சிறையில் கிடைத்தது என்ன ? சிறை எண் 6ல் 8வது வார்டில் கனிமொழி நேற்று மாலை 4.30 மணிக்கு அடைக்கப்பட்டார். முதல் முறையாக குற்றப் பின்னணியுடன் வருபவர்கள் இந்த சிறையில் அடைக்கப்படுவது வழக்கம். கனிமொழி தனி செல்லில் இருக்கிறார். அவருக்கு தென் இந்திய உணவு வகை வழங்கப்படுகிறது. 10 அடி அகலமும் 15 அடி நீளமும் கொண்ட அறை தான் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கனிமொழி சிறைக்குள் செல்லும் போது, மருந்துப் பொருட்கள், புத்தகங்கள், மூக்கு கண்ணாடி ஆகியனவற்றை எடுத்துச் சென்றார். அறையில் மின்விசிறி, தொலைக்காட்சி பெட்டி, மற்றும் போர்வை ஆகியன தரப்பட்டுள்ளதாக திகார் சிறை துணை ஆய்வாளர் ஆர்.என்.சர்மா தெரிவித்துள்ளார். நாளிதழ்களும் வழங்கப்படும் என தெரிகிறது.



மூக்குத்திக்கு தடை : கனிமொழி சிறைக்கு செல்லும் போது அவரது மூக்குத்தியை அகற்றி விடுமாறு அதிகாரிகள் வலியுறுத்தினர். இதனையடுத்து அவர் மூக்குத்தியை அகற்றினார். சிறை விதிமுறைகளின் படி அவர் ஒரு வாரத்துக்கு இரண்டு முறை அவரது உறவினர்களை சந்திக்க முடியும்.



பக்கத்து சிறையில் உளவாளி ! கனிமொழியின் பக்கத்து சிறையில் பாகிஸ்தான் நாட்டுக்கு உளவு பார்த்து மாஜி ஐ.எப்.எஸ்., அதிகாரி மாதுரி குப்தாவும், விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்ட பு‌ரோக்கர் சோனு பஞ்சாபன் ஆகியோரும் இருப்பதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.


சப்பாத்தி , சப்ஜி, சாதம் : நேற்றிரவு கனிமொழிக்கு சப்பாத்தி, சிறிது அளவு சாதம், சப்ஜி, பருப்பு கூட்டு ஆகியன வழங்கப்பட்டன. சி‌றை அறையிலேயே இருந்து உணவு அருந்தினார். கொசுத் தொல்லை அதிகமாக இருந்ததால், தனக்கு கொசு விரட்டி ஏற்பாடு செய்து தருமாறு சிறை அதிகாரிகளுடன் கேட்டுக் கொண்டுள்ளார் கனி. கனிமொழி அறைக்குள்ளேயே அட்டாச்ட் டாய்லட் இருக்கிறது. ஆனால் அதற்கு கதவு இல்லை. கனிமொழி டாய்லட் பயன்படுத்தும் நேரம் சிறைக் காவலர்களிடம் சொன்னால் பெரிய திரை ஒன்று போடப்படும். இதற்கு வேறு வழியில்லை, இது சிறை வழக்கம் என அதிகாரி்கள் கூறினர்.


பேசக்கூடாது......... கனிமொழி சிறை எண் 6ல் இருக்கிறார். சிறை எண் 1, 3,4 ல் 2ஜி வழக்கில் கைதான மற்றவர்கள் இருக்கின்றனர். அவர்களுடன் எக்காரணம் கொண்டும் கனிமொழி பேசக்கூடாது என கனி‌மொழிக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.


கண்ணீர், மவுனம், கனிமொழி : ‌கோர்ட் சீன்
நேற்று ( 20ம் தேதி) பிற்பகல் டில்லி பட்டியாலா சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் ஜாமீன் மனு மீதான தீர்ப்புக்காக காத்திருந்த கனிமொழி இறுக்கமான முகத்துடன் அமர்ந்திருந்தார். கோர்ட்டில் 2ஜி வழக்கில் ஏற்கனவே கைதான ராஜா, சாகித் பால்வா, சஞ்சய் சந்திரா, வினோத் கோயன்கா ஆகியோரும் இருந்தனர். கனிமொழி ஜாமீன் மனு மீதான தீர்ப்பை நீதிபதி ஓ.பி.செய்னி வாசிக்க ஆரம்பித்தார். தீர்‌ப்பு இந்தியில் இருந்தது. யாராவது அதை மொழி பெயர்த்து செல்ல மாட்டார்களா என்ற படி கனிமொழி சுற்றி இருந்தவர்களை ஏக்கத்துடன் ஒரு நோட்டம் விட்டார். கனிமொழி ஜாமீன் மனு ரத்து, அவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதை புரிந்து கொண்ட ராஜா, எழுந்து நின்றார். சமிக்ஞைகளில் கனி கைது என்பதை தெரிவித்தார். அதிர்ந்து போனார் கனிமொழி. சென்னையில் இருந்து வந்திருந்த கனிமொழியின் உறவுக்கார பாட்டி, கனிமொழியின் மெய்க்காப்பாளர் ஆகியோர் அழுது கொண்டே கோர்ட்டில் இருந்து வெளியேறினர். மவுனம் மட்டுமே மொழியாக, கண்களில் இருந்து கண்ணீர் வழிய கணவர் அரவிந்தனை நோக்கி நகர்ந்தார் கனிமொழி. கணவரை கண்ணீருடன் ஆரத் தழுவி மவுனத்தடன் நகர்ந்தார். கணவருடன் நின்ற தனது மகன் ஆதித்யாவுடன் ஒரு சில நிமிடங்கள் பேசிச்சென்றார். கோர்ட்டில் இருந்த டி.பி.ரியால்டி நிறுவனர் சாகித் பால்வாவின் தந்தை, கனிமொழியை நோக்கி நடந்து வந்து, கனியின் தலையில் கைவைத்து எதுவும் நடக்காது என ஆசிர்வதிப்போல் செய்து விட்டுச் சென்றார். உடைகளுக்கு ஏற்ப விதவிதமாக, வித்தியாசமாக கைப்பைகளை ‌பயன்படுத்தும் கனிமொழி, அவர் கையில் வைத்திருந்த பையை கணவரிடம் தந்து விட்டு நகர்ந்தார். யாருடனும் பேசவில்லை. அவரது ஆதரவாளர்களை நோக்கி கையை மட்டும் அசைத்து விட்டுச் சென்றனர். அதற்குள் கோர்ட்டில் இருந்த போலீசார் கனிமொழியை சுற்றிலும் பாதுகாப்புக்கு வந்தனர். வெளியில் இருந்து உள்ளே நுழைய முயன்ற பத்திரிகையாளர்களை தடுத்து நிறுத்தி, கனிமொழியையும், சரத்குமாரையும் கோர்ட் வளாகத்தில் இருக்கும் லாக் அப்புக்கு அழைத்துச் சென்று அமர வைத்தனர்.


கனியை பாராட்டிய நீதிபதி : கோர்ட் நடவடிக்கைகளுக்கு ஒழுங்காக ஒத்துழைப்பு நல்கியதாக கனிமொழிக்கு நீதிபதி ஓ.பி.செய்னி பாராட்டு தெரிவித்தார். அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்பது தான் விருப்பம், இருப்பினும் குற்றத்தின் தாக்கத்தையும், ச‌ாட்சிகளை கலைக்கக்கூடிய வாய்ப்பு இருப்பதாலும் தான் ஜாமீன் மறுக்கப்பட வேண்டியிருக்கிறது என்றார்.


Friday, May 20, 2011

இலவச “லேப்-டாப்” திட்டத்துக்கு ரூ.291 கோடி ஒதுக்கீடு

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தீவிரமாக உள்ளார்.

பதவி ஏற்பு அன்றே இலவச அரிசி, தாலிக்கு தங்கம் உள்பட 7 நலத்திட்டங்களுக்கு உத்தரவிட்டு ஜெயலலிதா கையெழுத்திட்டார். மீதம் உள்ள வாக்குறுதிகளை விரைவில் நிறைவேற்றுவது குறித்தும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அந்தந்த துறை சார்பில் அதற்கான நடவடிக்கைகளை எடுக்கவும் உத்தரவிட்டார்.

இதையடுத்து பிளஸ்-1, பிளஸ்-2, மாணவ -மாணவிகளுக்கு இலவச லேப்-டாப் வழங்குவதற்கான முதல் கட்ட நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மாணவ-மாணவிகளுக்கு இலவச லேப்-டாப்வழங்கும் திட்டம் குறித்து விரிவாக ஆய்வு செய்தார்.

ஜூன் முதல் ஆகஸ்டு வரை பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும். அதன் பிறகு பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும் மாணவ -மாணவிகளின் முழுமையான எண்ணிக்கை குறித்து கணக்கெடுப்பு நடத்தும்படி பள்ளிக் கல்வித்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதவிர தரமான லேப்-டாப்வழங்குவது, இதற்காக தேவைப்படும் நிதி ஆகியவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆண்டு சுமார் 14 லட்சம் மாணவ-மாணவிகள் பிளஸ்-1, பிளஸ்-2 படிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவர்கள் அனைவருக்கும் லேப்-டாப் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மாணவ-மாணவிகள் எண்ணிக்கை குறித்து மாவட்ட வாரியாக கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. முழுமையான எண்ணிக்கை தெரிந்ததும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடங்கும்.

இது தவிர 10-வது வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அ.தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்டிருந்தது.

இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இந்த உதவியை மாணவர்கள் பெறுவதற்கான விதிமுறைகள் குறித்தும் விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பெண்கள் திருமண உதவி திட்டத்தில் இனி தாலிக்கு தங்கமும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 10-வது வகுப்பு வரை படித்த ஏழை பெண்களுக்கு திருமண உதவி நிதி ரூ.25 ஆயிரத்துடன் தாலி செய்ய 4 கிராம் தங்கமும், பட்டம் அல்லது டிப்ளமோ படித்த பெண்களுக்கு ரூ.50 ஆயிரத்துடன் 4 கிராம் தங்கமும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஒரு குடும்பத்தில் ஒரு பெண் மட்டுமே இந்த திட்டத்தில் உதவி பெற முடியும் என்று விதி வகுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு திருமண உதவி திட்டத்தின் கீழ் 1 லட்சத்து 69 ஆயிரத்து 832 பெண்கள் பண உதவி பெற்றனர். தற்போது தாலிக்கு தங்கமும் வழங்கப்படுகிறது.

எனவே இந்த ஆண்டு இதற்கு ரூ.291 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டியது இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

டில்லி செல்ல கருணாநிதி திட்டம்?

கனிமொழியைக் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, அவர் இன்று கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், கனிமொழியின் தந்தையும் திமுக தலைவருமான கருணாநிதி, இது தொடர்பாக புதுதில்லி செல்ல முடிவு செய்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கருணாநிதி எந்நேரமும் புதுதில்லி செல்ல வாய்ப்புள்ளது.

பாகிஸ்தானுக்கு 50 போர் விமானங்களை வழங்குகிறது சீனா

பீஜிங், மே 20- பாகிஸ்தானுக்கு ஜே.எப்.17 ரகத்தைச் சேர்ந்த 50 அதிநவீன போர் விமானங்களை வழங்க சீனா சம்மதித்துள்ளது.

இத்தகவலை பாகிஸ்தானிய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

4 நாள் சுற்றுப்பயணமாக பீஜிங் வந்துள்ள பாக். பிரதமர் கிலானி, சீனத் தலைவர்களுடன் பேச்சு நடத்தியபோது இதற்கான ஒப்பந்தம் ஏற்பட்டதாக தெரிவித்தனர்.

அல்-காய்தா தலைவர் பின் லேடன், அமெரிக்கப் படையினரால் பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் சுட்டுக் கொல்லப்பட்டதால், இருநாடுகளுக்கு இடையேயான உறவு சிக்கலானது. இதனிடையே, பாக். பிரதமர் கிலானியின் சீனப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்நிலையில், பாகிஸ்தானுக்கு அதிநவீன போர் விமானங்களை வழங்க சீனா சம்மதித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்னும் 6 மாத காலத்திற்குள் இந்த போர் விமானங்கள் பாகிஸ்தானுக்கு விநியோகிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

ஒரு ஜே.எப்.17 விமானத்தின் விலை சுமாக் 90 கோடி என்றும் தகவல் வெளியாகியுள்ளது.


விஜயகாந்துடன் நடிகர் விவேக் சந்திப்பு

தமிழக சட்டமப்பேரவைத் தேர்தலில் தே.மு.தி.க. வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்றதற்காக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்தை நடிகர் விவேக், நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

SC தலையீட்டால் கனிமொழி கைது சாத்தியமானது:பிஜேபி

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கைது செய்யப்பட்டுள்ளதை எதிர்கட்சிகள் வரவேற்றுள்ளன.

பிஜேபி செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவதேகர் கூறுகையில், "உச்ச நீதிமன்றம் நேரடி கண்காணிப்பில் ஈடுபட்டதால் மட்டுமே இந்தக் கைது நடவடிக்கைகள் சாத்தியமாயிற்று," என்றார்.

மேலும், "இந்த ஊழலுக்கு காரணமானவர்கள் அனைவரும் தண்டிக்கப்படுவதே நல்ல முடிவுகளைத் தரும். இதேபோல் காமன்வெல்த் போட்டி முறைகேடு உள்ளிட்ட ஊழல்களிலும் நடவடிக்கை தேவை," என்றார் அவர்.

"இந்த நடவடிக்கைகளின் மூலம் காங்கிரஸின் 'நிலைப்பாடு' முழுமையாக அம்பலமாகியிருக்கிறது," என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலர் டி.ராஜா.

லேடி காகா

உலகிலேயே மிகவும் பிரபலமானவர்கள் பட்டியலில் முதலிடத்தில் லேடி காகா அமெரிக்க கவர்ச்சி பாப் பாடகி லேடி காகா, உலகிலேயே மிகவும் பிரபலமானவர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.போர்ப்ஸ் பத்திரிக்கை இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
வருடா வருடம் உலகிலேயே புகழ் மிக்க பிரபலமானவர்கள் 100 பேர் கொண்ட பட்டியலை போர்ப்ஸ் வெளியிட்டு வருகிறது. தற்போது வெளியாகியுள்ள பட்டியலில் லேடி காகாவுக்கு முதலிடம் கிடைத்துள்ளது. கடந்த நான்கு வருடங்களாக இந்த இடத்தில் இருந்து வந்தவர் ஓப்ரா வின்பிரே. தற்போது அந்த இடத்தை காகா பிடித்து விட்டார். வின்பிரே இரண்டாவது இடத்துக்குத் தள்ளபப்ட்டுள்ளார்.
லேடி காகாவுக்கு 90 மில்லியன் டாலர் சொத்துக்கள் உள்ளன. இது தவிர அவருக்கு பேஸ்புக்கில் 3.2 கோடி பாலோயர்களும் உள்ளனர். பேஸ்புக்கில் அதிக அளவிலான ஆதரவாளர்களைக் கொண்ட பிரபலம் இவர் மட்டுமே. ட்விட்டரிலும் இவருக்கு ஒரு கோடி ஆதரவாளர்கள் உள்ளனர்.
மேலும், அவரது பார்ன் திஸ் வே என்ற பாப் பாடலுக்கு ஐந்தே நாட்களில் பத்து லட்சம் ஆடியோ பிரதிகள் விற்று விற்பனை சாதனையும் கிடைத்தது. இதை வைத்துத்தான் தற்போது போர்ப்ஸ் பிரபலங்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து விட்டார் காகா.
முதல் பத்து இடங்களில் உள்ளவர்கள் விவரம்:
1. லேடி காகா. 2. ஓப்ரா வின்பிரே 3. ஜஸ்டின் பீபர்Justin Bieber 4.யு12 5. சர் எல்டன் ஜான் 6. டைகர் உட்ஸ் 7. டெய்லர் ஸ்விப்ட் 8. பான் ஜோவி 9. சிமோன் கோவல் 10.லெப்ரான் ஜேம்ஸ்


ஜெயலலிதா அறிவிப்பு

முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அ.தி.மு.க. கூட்டணி, நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்றும் அ.தி.மு.க. தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றும் அதனை தொடர்ந்து தமிழகத்தின் துயர் துடைக்கும் வண்ணம் கழக ஆட்சி அமைந்துள்ளது.
மக்கள் விடுதலை பெற இந்த ஆட்சி மீண்டும் அமைந்துள்ள நிலையில் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதே எனது முதல் நோக்கமாகும். அந்த விதத்தில்தான் ஆட்சி பொறுப்பேற்ற முதல் நாளே மக்கள் நலன்பெறும் 7 புதிய திட்டங்களுக்கு கையெழுத்திட்டேன்.
மக்கள் நலன் ஒன்றையே கருத்தில் கொண்டு எனது ஒவ்வொரு நடவடிக்கையும் எப்பொழுதும் அமைத்துக் கொண்டுள்ளேன்.தமிழக சட்டமன்றம் மற்றும் தலைமைச் செய லகம் தற்போதுள்ள புதிய கட்டிடத்திலிருந்து ஏற்கனவே இயங்கி வந்த புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள கட்டடத்திற்கு மாற்ற நான் உத்தரவிட்டதன் அடிப்படையில் அதற்கான பணிகள் விரைந்து நடைபெற்றுக் கொண்டு வருகின்றன.
இந்நிலையில் சட்டமன்ற மும், தலைமைச் செயலகமும் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்தில் இயங்கிட வேண்டுமென்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். அவர்கள் இந்த புதிய கட்டிடம் முந்தைய தி.மு.க. அரசால் கட்டப்பட்ட கட்டிடம் என்பதால்தான் நான் அதனை மாற்றுவதற்கு உத்தரவிட்டுள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர். அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் எந்த நடவடிக்கையையும் நான் எப்பொழுதும் எடுத்ததில்லை என்பது நடுநிலையாளர் அனைவரும் அறிந்ததே.
சென்றமுறை நான் தமிழக முதல்-அமைச்சராக இருந்தபோது புதிய தலைமைச் செயலக கட்டிடம் கட்டுவதற்கு எடுத்த முயற்சிகளுக்கு எல்லாம் மத்திய அரசில் அப்போது சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலு, கருணாநிதியின் தூண்டுதலால் எவ்வாறெல்லாம் தடை ஏற்படுத்தினார் என்பது எல்லோரும் நன்கு அறிந்ததே.
எனது அரசுக்கு நற்பெயர் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையில் அவ்வாறு தடையை ஏற்படுத்தியவர்கள்தான் பின்னர் புதிய தலைமைச் செயலக கட்டடத்தினை கட்டியுள்ளனர். அவ்வாறு தலைமை செயலகத்திற்கு புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளதை நான் ஒருபோதும் எதிர்த்ததில்லை. எனினும் தற்போது கட்டப்பட்டுள்ள புதிய தலைமைச் செயலக கட்டடத்திலிருந்து பணியாற்றுவது அரசு பணிக்கும், நிர்வாகத்திற்கும் ஊறு விளைவிக்கும் என்பதால்தான் புதிய தலைமைச் செயலக கட்டடத்திலிருந்து பணிபுரிய நான் விரும்பவில்லை.
தற்போது கட்டப்பட்டுள்ள புதிய தலைமைச் செயலகம் 2008-ம் ஆண்டு முடிவில் துவங்கப்பட்டு கட்டடப் பணிகள் முழுமையாக முடிவடையாமலேயே 2010-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் துவக்க விழா நடத்தப்பட்டது என்பது எல்லோருக்குமே தெரியும். புதிய தலைமைச் செயலகத்தின் மேற்கூரை கோபுரம் கட்டி முடிக்கப் படாமலேயே தற்காலிக செட்டிங் போடப் பட்டு அதற்கே 3 கோடி ரூபாய்க்கு மேல் வீணடிக்கப் பட்டதும் எல்லோரும் அறிந்ததே.
2010-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் துவக்கி வைக்கப்பட்ட கட்டடம் முழுமையடைந்த கட்டடமாக இருந்திருந்தால் ஏன் முந்தைய அரசு அன்றைய தினம் முதலே அரசுத் துறைகளை புதிய கட்டடத்திற்கு மாற்ற வில்லை? 2010-ம்ஆண்டு மார்ச் மாதத்திலேயே புதிய கட்டட துவக்க விழாவினை நடத்திய காரணத்தால் சட்டமன்ற செயலகம் அப்போதிலிருந்தே புதிய கட்டடத்தில் செயல்படத் தொடங்கியது.
19.3.2010 அன்று புதிய கட்டடத்தில் முதல், சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெற்ற போது, சட்டமன்ற தரையில் புதிய தரைவிரிப்புதான், போடப்பட்டிருந்தது. கேலரிகள் உள்ள முதல் மாடி முடிக்கப்படாததினால் பெரிய திரைச்சீலை ஒன்றினால் சுவர்கள் மறைக்கப்பட்டும், தற்காலிக இருக்கைகள் அமைக்கப்பட்டும் சட்டமன்றக் கூட்டம் நடைபெற்றது.
சட்ட மன்றப் பேரவைத் தலைவர் இருக்கையும் கூட தற்காலிகமாக உயர்த்தப்பட்ட மேடையில் நிறுவப்பட்டது. கட்டிடம் முழுமை பெறா மலேயே திறப்பு நடை பெற்றதை மக்கள் குறை கூறிய காரணத்தால் அவசர கோலத்தில் ஒரு சில துறைகள் மட்டும் 2010-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குப் பின்னர் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டன.
மேலும் தங்களது ஆட்சியை மக்கள் தூக்கியடித்துவிடுவார்கள் என்பதை நன்கு உணர்ந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி, புதிய கட்டிடத்தில் இருந்து தான் பதவி இறங்குவதற்கு முன் பணிபுரிய வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் தான் முழுமையாக கட்டி முடிக்கப்படாத கட்டிடத்தில் இருந்து செயல்பட அவசர முடிவு எடுத்தார். எனவே தான் அப்போதைய முதல்- அமைச்சர் மற்றும் துணை முதல்-அமைச்சர் ஆகியோரது இலாகாக்கள் சம்பந்தப்பட்ட துறைகள் மட்டும் புதிய தலைமைச் செயலகக் கட்டடத்திற்கு கொண்டு செல்ல உத்தரவிடப்பட்டது.
அவையும் முழுமையாக கொண்டு செல்லப்படவில்லை. டிசம்பர், 2010க்குப் பிறகே நான்கு அரசுத் துறைகள் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டன. ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தான் மாற்றப்பட்டது.
முன்னாள் துணை முதல்-அமைச்சர் பொறுப்பில் இருந்த நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மாற்றப்படவில்லை. இந்தப் புதிய கட்டிடத்தில் சட்டமன்ற செயலகத் துறை, பொதுத்துறை, உள் துறை, தொழில் துறை, பொதுப் பணித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை, ஆகிய துறைகள் மட்டுமே மாற்றப்பட்டன.
மேலும் அப்போதைய அனைத்து அமைச்சர்களின் அறைகளும் மாற்றப்பட்டன. தலைமைச் செயலகத்தின் அனைத்து துறைகளும் மாற்றப்படாமல், அள்ளித் தெளித்த அவசரக் கோலத்தில் முந்தைய அரசு 2 தலைமைச் செயலகங்களில் இருந்து செயல்பட்டுக் கொண்டிருந்தது. அதாவது புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்து செயல்படும் தலைமைச் செயலகம் ஒன்று, புதிய கட்டிடத்தில் தலைமைச் செயலகம் ஒன்று என 2 தலைமைச் செயலகங்கள் இயங்கிக் கொண்டு வந்தன.
மாற்றப்பட்ட துறைகளைத் தவிர மேலும் ஒரு துறை மட்டும் செயல்படுவதற்குத் தான் புதிய கட்டிடத்தில் இடவசதி உள்ளது. இரண்டாம் பிளாக் முடிக்கப்பட்டால் தான் எஞ்சியுள்ள துறைகளுக்கு இடவசதி இருக்கும். அந்த இரண்டாவது பிளாக் கட்டிடம் கட்டி முடிக்க இன்னும் ஓராண்டுக்கு மேல் ஆகும்.
சட்டமன்ற பேரவைச் செயலகம் உள்பட 36 துறைகளுள், வெறும் 6 துறைகள் மட்டும் புதிய கட்டிடத்தில் இருந்தும், எஞ்சிய 30 துறைகள் புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்தும் செயல்பட்டால் அரசு இயந் திரத்தை செம்மையாக நிர்வ கிக்க முடியுமா? நிர்வாக வசதிகளை புறந்தள்ளி விட்ட காரணத்தால் தான், முழுமை அடையாத கட்டிடத்தில் இருந்து செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள்.
தற்போதும் அவ்வாறு இரண்டு தலைமைச் செயலகங்களில் இருந்து செயல்படுவது நிர்வாக நலனுக்கு ஏற்றதா என்பதை தமிழக மக்கள் தான் கூற வேண்டும். துறை அமைச்சர்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவிலும், துறைச் செயலாளர்கள் மற்றும் அலுவலர்கள் பிறிதொரு கட்டிடத்தில் இருந்தும் செயல்பட்டால் அரசு இயந்திரம் முழுமையாக செயல்பட இயலுமா?
தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ள மக்கள் நலத் திட்டங்கள் ஒன்றரை ஆண்டுக்குள் நிறைவேற்றி முடிக்கப்பட வேண்டும் என்பதில் நான் உறுதி பூண்டுள்ளேன். அவ்வாறு மக்கள் நலத் திட்டங்கள் விரைந்து நிறைவேற்றப்பட வேண்டுமெனில் அனைத்து தலைமை செயல கத்துறை களும் ஒரே இடத்தில் செயல் படுவது தான் சரியானது ஆகும்.
அமைச்சர் பெருமக்கள் அரசு அலுவலர்களுடன் விவாதிக்க அவர்களை 2 கிலோ மீட்டர் தொலைவி லுள்ள கட்டிடத்தில் இருந்து ஒவ்வொரு முறையும், வரவழைப்பதும், அமைச்சர்கள் பார்க்க வேண்டிய கோப்புகளையும் அவ்வாறு தொலைவில் உள்ள கட்டிடத்தில் இருந்து பெறுவதும், காலவிரையம் பொருள் விரையம் மற்றும் நிர்வாகக் குறைபாட்டை தானே ஏற்படுத்தும்?
தற்போது கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தில் இன்னமும் முழுமையான வசதிகள் அனைத்தும் செய்து முடிக்கப்படவில்லை. மின் தூக்கிகள் கூட முழுமையாக முடிக்கப்படவில்லை. எனவே, அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் அந்தக் கட்டடத்தின் மேல்மாடி களுக்கு செல்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர்.
மேலும், புதிய தலைமைச் செயலகக் கட்டடம் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்படுவதற்கு பல வணிகர்கள், குறிப்பாக, ரிட்சி தெருவில் மின்னணு சாதனங்களை விற்கும் வணிகர்களும், புதுப்பேட்டையில் உள்ள மோட்டார் வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் வணிகர்களும் எதிர்ப்பு தெரிவித்தே வந்தனர்.
பாதுகாப்பு காரணங்களுக்காக விரைவில் அந்தக் கடைகளை அங்கிருந்து காலி செய்யப்பட்டுவிடும் என்ற அச்சத்திலேயே அவர்கள் இருந்தனர். போக்குவரத்து நெரிசல் மிகுந்த சென்னையில் மத்திய பகுதியில் உள்ள அண்ணா சாலையில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டுள்ளதால், தலைமைச் செயலகத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் மிகுந்த இடர்ப்பாடு ஏற்படுகிறது.
எனவே, மேம்பாலங்கள் கட்டப்பட்டால் தான் அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கலாம் என்பதை உணர்ந்து, முந்தைய அரசு, மேம்பாலங்கள் கட்டப்படும் என்று 2010-2011 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையிலும், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் அறிவிப்புகளிலும் தெரிவித்திருந்தது.
2010-2011 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், அண்ணா சாலையில் உள்ள சந்திப்புகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்குடன் மேம்பாலங்கள் ரூபாய் 500 கோடி மதிப்பீட்டில் சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையத்தின் நிதி ஆதாரங்களைப் பயன்படுத்திக் கட்டப்படும் என குறிப்பிடப்பட்டது.
மேலும் 2010-2011 ஆம் ஆண்டு அத்துறை சார்ந்த அறிவிப்புகளில், சென்னை அண்ணா சாலையில் மேம்பாலங்கள் என்ற தலைப்பில், ரூபாய் 500 கோடி மதிப்பில், சென்னை பெருநகர வளர்ச்சித் திட்டத்தில், அண்ணா சாலையில் புதிய சட்டப் பேரவை வளாகத்திற்கும் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு இடையே துவங்கிபட்டு லாஸ் சாலை சந்திப்பு வரை சுமார் 2.00 கி.மீ. நீளத்திற்கும், அண்ணா அறிவாலயம் அருகே துவங்கி சைதாப்பேட்டை மாம்பலம் கால்வாய் வரை சுமார் 3.00 கி.மீ. நீளத்திற்கும் இரண்டு சாலை மேம்பாலங்கள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது.
சாலை மேம்பாலம் துவங்கப்படாத நிலையில், புதிய தலைமைச் செயலகப் பகுதியில் உள்ள அண்ணா சாலையில், போக்குவரத்து நெரிசலை குறைக்கவே இயலாது. இவ்வாறு நிர்வாக வசதியே இல்லாமல், முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் ஒரு பக்கமும், பல துறைகள் புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்திலும் இயங்கி வந்தால், அரசை நிர்வகிக்க இயலாது என்பதால் தான் சட்டமன்றம் மற்றும் அரசுத் துறைகள் அனைத்தும் ஒரே இடத்தில் இயங்க வேண்டும் என்பதால், புனித ஜார்ஜ் கோட்டையில் எனது பணியைத் தொடருவேன் என்று தேர்தலின் போதே நான் அறிவித்திருந்தேன்.
எனவே, நிர்வாக நலன் கருதி நான் புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்தே செயல்பட முடிவெடுத்துள்ளேன்.
இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறி உள்ளார்.