Tuesday, January 17, 2012

பசுபதியில் கொலைக்கு பின்னணியில் பெண்?

தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவரான பசுபதி பாண்டியனை யாரோ கொலை செய்துவிட்டார்கள் என்ற செய்தி வந்தபோது முதலில் யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவும் இல்லை, நம்பவுமில்லை. காரணம், அவர் மீதான கொலை முயற்சிகள் ஒன்றும் புதிதல்ல. இதற்குமுன் அப்படி நடந்த பல முயற்சிகளை அவர் முறியடித்தும் இருக்கிறார். அதனால்தான் முதல் ரியாக்ஷன் அப்படி இருந்தது. ஆனால் அடுத்த சில நிமிடங்களிலேயே செய்தி உண்மை என்பது தெரியவர, பரபரப்பு பற்றிக்கொண்டது!



அவர் கொலையுண்ட அந்த சம்பவத்தை நமக்கு விவரித்த அவருக்கு நெருக்கமான ஒருவர், ‘‘இது யாரோ நன்றாக ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்துதான் நடந்திருக்கிறது... பவர்கட், பக்கத்தில் ஆள் இல்லாமல் போனது, அண்ணன் கையில் ஆயுதம் இல்லாதது என எல்லாம் எதிராக இருக்க, சரியாக அதைப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

2006லிருந்தே அண்ணன் அமைதியாகிவிட்டார். அவரது மனைவி இறந்த பிறகு அதற்கு பதிலுக்குப் பதிலாக எதிலும் இறங்காமல் விட்டுவிட்டார். இன்னும் சொல்லப்போனால் அதன்பிறகு அவர் எந்த பாவச்செயலும் செய்யவில்லை. அதுவே மற்றவர்களுக்கு குளிர்விட்டுப் போக காரணமாக ஆகிவிட்டது. இனி சொல்ல என்ன இருக்கிறது’’ என்று விரக்தியாகச் சொன்னார் அவர்.

பசுபதி பாண்டியனுக்கும் மறைந்த வெங்கடேஷ் பண்ணையாருக்குமான பகை ஊரறிந்த ஒன்று. அவ்வப்போது இரு தரப்பும் மோதிக்கொள்வதும் ஏரியா பரபரப்பாவதும் வாடிக்கையாகிக்கொண்டிருந்தது. ஒருகட்டத்தில் இனி தூத்துக்குடியில் இருக்க வேண்டாம் என்று முடிவெடுத்த பசுபதி பாண்டியன், பதினைந்து வருடங்களுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்டம் நந்தவனப்பட்டிக்கு தனது இருப்பிடத்தை மாற்றிக்கொண்டார்.

கணவரின் சுகத்தில் பங்கேற்றதைவிட, துக்கத்தில் அதிகம் பங்கேற்றவர் அவரது மனைவி ஜெஸிந்தா பாண்டியன். அவர் வழக்கறிஞராகவும் இருந்தது பசுபதி பாண்டியனுக்கு கூடுதல் பலம். அதனால், வழக்கைப்பற்றி கவலைப்படாமல் களத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார் பசுபதி பாண்டியன்.

இடையில் அரசியல் ஆசை எட்டிப் பார்க்கவும் பாட்டாளி மக்கள் கட்சிக்குச் சென்றார். ஆனால் அங்கு தொடர முடியாமல் போக, அங்கிருந்து வெளியேறினார். பிறகு, தமிழக தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பைத் தொடங்கினார். ஆனாலும் அது பெயருக்குத்தான் இருந்தது. மற்றபடி அதன் மூலம் தீவிர அரசியலில் இறங்க எவ்வித முயற்சியையும் அவர் மேற்கொள்ளவில்லை.

இந்நிலையில்தான் பசுபதி பாண்டியனின் முக்கிய எதிரியாக திகழ்ந்த வெங்கடேஷ் பண்ணையார் போலீஸாரின் என்கவுன்டரில் கொல்லப்பட, பசுபதி பாண்டியனின் வேகமும் படிப்படியாகத் தணியத் தொடங்கியது. அந்த நேரத்தில்தான் அவருக்கு பெரிய சோதனை நிகழ்ந்தது.

கடந்த 2006-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தூத்துக்குடிக்குச் சென்று வழக்கு ஒன்றில் ஆஜராகிவிட்டு மனைவியுடன் திண்டுக்கல்லுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, ‘எப்போதும்வென்றான்’ பாலம் அருகே அவர்களது கார் வந்தபோது, சிலர் வெடிகுண்டுகளை வீசினர். இதில் பசுபதி பாண்டியன் தப்பிவிட, அவரது மனைவி ஜெஸிந்தா இறந்துபோய்விட்டார்.
அதன்பிறகுதான் பெரிதாக எந்த வம்புதும்புக்கும் போகாமல் இருந்தார் பசுபதி பாண்டியன். அவரோடு மகள் சந்தனப்பிரியா, மகன் சந்தோஷ் மற்றும் அவர் தாய் வேலம்மாள் ஆகியோர் வசித்துவந்தார்கள். திருச்சியில் கம்ப்யூட்டர் சென்டர் ஒன்றை வைத்திருந்தார். அந்த சென்டரை நிர்வகிக்கும் பொறுப்பை சுந்தரி என்ற பெண்ணுக்குக் கொடுத்தார். பஞ்சாயத்துக்காக வந்த சுந்தரி பசுபதியிடமே சரண்டராகிவிட்டார்.

படுகொலை செய்யப்படுவதற்கு முந்திய நாளான ஜனவரி 9-ம் தேதி தேனியில் தனது அமைப்பு சார்பாக நடந்த முல்லைப் பெரியாறு போராட்டத்தில் பங்கேற்றுவிட்டுத் திரும்பினார். இதுதான் அவரது கடைசி நிகழ்ச்சி. மறுநாள் காலை தன் வீட்டுக்கு அருகே உள்ள காலி வீட்டு மனையில் சேரில் அமர்ந்தபடி போனில் பேசிக் கொண்டிருந்தார். எப்போதுமே அவர் அருகில் நிறைய இருக்கும் பாதுகாவலர்களின் எண்ணிக்கை அங்கு குறைவாக இருந்திருக்கிறது.

இவற்றையெல்லாம் கடந்த ஒரு மாதமாகவே கவனித்த கொலைக் கும்பல் நன்கு திட்டமிட்டே காயை நகர்த்தியிருக்கிறது. மின்தடையைப் பயன்படுத்திக்கொண்டு யாருக்கும் சந்தேகம் வராதவகையில் உள்ளூர் ஆட்கள் போல் சிலர் சைக்கிளைத் தள்ளிக்கொண்டே வந்திருக்கிறார்கள். இருந்த பாதுகாவலர்களும் சைக்கிளில் வந்தவர்கள் மீது சந்தேகம் எழவில்லை.

இதெல்லாம் கொலைக் கும்பலுக்கு சாதகமாக அமைந்தது. கண்மூடித் திறக்கும் நேரத்தில் பசுபதியை வெட்டி வீழ்த்திவிட்டு காரில் ஏறித் தப்பியிருக்கிறார்கள். சத்தத்தைக் கேட்டு பசுபதியின் தாய், மகள், மகன் ஆகியோர் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர். அதற்குள் பசுபதி பாண்டியன் ரத்த வெள்ளத்தில் சவமாக மிதந்தார்.


பசுபதி பாண்டியன் கொலை செய்யப்பட்ட தகவல் வெளியே முழுமையாகத் தெரிய ஆரம்பித்ததும் திண்டுக்கல் நகரமே பதட்டமானது. திருமங்கலம், நிலக்கோட்டை, ராஜபாளையம், தூத்துக்குடி ஆகிய இடங்களிலும் கல்வீச்சு சம்பவங்கள் நடந்ததால் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இந்தப் பதட்டம் தென்மாவட்டங்களுக்கும் பரவியது. பரமக்குடி அருகே ரயில் பெட்டி மீது சிலர் நாட்டுவெடி குண்டை வீசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், 10-ம் தேதி இரவே அவரது உடல் போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்டு உறவினர்களிடம் தரப்பட்டது. அவரது சொந்த கிராமமான கீழ அலங்காரத்தட்டில் மனைவியின் மணிமண்டபம் அருகே பசுபதியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.கலங்கிய கண்களோடு ஆயிரக்கணக்கானோர் அங்கு அஞ்சலி செலுத்தினர். பசுபதி பாண்டியனின் தம்பி தாமோதரன் இரண்டு வழக்குகளில் ஆயுள் தண்டனை பெற்று பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரும் பரோலில் வந்து அண்ணனின் உடலைப் பார்த்துக் கதறினார்.

தமிழக தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பைச் சேர்ந்த முக்கிய நிர்வாகி ஒருவரிடம் பேசினோம்.
‘‘திட்டமிட்டே இந்தக் கொலையைச் செய்திருக்கிறார்கள். எப்போதும் உஷாராக இருக்கும் அண்ணன் எப்படி கோட்டைவிட்டார் என்றே தெரியவில்லை. கொஞ்ச காலமாக பெண்களின் சகவாசம் அவருக்கு அதிகமாகிவிட்டது. இந்த விஷயம் உறவினர்களுக்குத் தெரிந்து அசிங்கமாகிவிடும் என்பதற்காகவே தனிமையாக இருந்தார். உறவினர்களையும் புறக்கணித்தார். அப்படி இல்லாமல், உறவினர்கள் அருகில் இருந்திருந்தால் இந்தப் படுகொலை நடந்திருக்கவே முடியாது. ஏற்கெனவே சுந்தரி என்ற பெண்ணோடு தொடர்புண்டு. தவிர, கடந்த ஒரு மாதமாக மற்றொரு பெண்ணுடன் அண்ணன் நெருக்கமாக இருந்தார். அந்தப் பெண் மூலமாகத்தான் கொலைத் திட்டம் அரங்கேறியிருக்குமோ என்று சந்தேகிக்கிறோம். தலித் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்தவர் அண்ணன். அவரது இழப்பு உண்மையிலே பேரிழப்புதான்’’ என்று தழுதழுத்தார்.

தென்மாவட்டம் முழுவதும் பதற்றமாக இருக்கும் நிலையில், தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.ஜெயசந்திரனிடம் பேசியபோது, ‘‘பசுபதி பாண்டியன் கொலைச் சம்பவம் தொடர்பாக மூன்று தனிப் படைகளை அமைத்து கொலையாளிகளைத் தேடி வருகிறோம். ஆதாரங்கள் கிடைத்துள்ளன. விரைவில் சிக்குவார்கள்’’ என்றார் நம்பிக்கையுடன்.

இதற்கிடையே சுந்தரி மற்றும் சிலரை போலீஸார் தங்களது விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்திருக்கிறார்கள். இந்நிலையில், வியாழனன்று வள்ளியூர் கோர்ட்டில் தூத்துக்குடியைச் சேர்ந்த ஆறுமுகசாமி, அருளானந்தம் என்ற இரு இளைஞர்கள் சரணடைந்திருக்கிறார்கள். இவர்கள் இருவரும் நாடார் இனத்தை சேர்ந்தவர்கள் என்பதால் வெங்கடேஷ் பண்ணையார் தரப்பின் தாக்குதலாக இருக்குமோ என்ற கோணத்தில் போலீசார் அவர்கள் இருவரையும் விசாரித்து வருகிறார்கள்.
வெங்கடேஷ் பண்ணையார் தரப்பைச் சேர்ந்த ஒருவர் நம்மிடம் பேசியபோது, “பண்ணையாரின் தாத்தாவைச் சாய்த்தது பசுபதி பாண்டியன்தான்.பண்ணையாரின் தாத்தா சிவசுப்பிரமணிய நாடார் இதேபோல் வீட்டுக்கு வெளியே காலி இடத்தில் கட்டிலில் தனியாக உட்கார்ந்திருந்தார். பக்கத்தில் பாதுகாப்புக்கு இருந்த பையனிடம் சுருட்டு வாங்கி வருமாறு கடைக்கு அனுப்பிய நேரத்தில்தான் அவரைக் கொன்றுவிட்டார்கள் எதிரிகள். இன்று அதே போல பசுபதி பாண்டியன் தனது வீட்டுக்கு வெளியே காலி இடத்தில் உட்கார்ந்துகொண்டு உதவியாளரை சிகரெட் வாங்கி வரச் சொல்லி அனுப்பினார். அந்த சந்தர்ப்பத்தை வந்தவர்கள் நன்றாக பயன்படுத்திக்கொண்டு பழிவாங்கிவிட்டார்கள்’’ என்றார்.

போலீஸாருக்கு இப்போதைய கவலை எல்லாம் அடுத்து இதன் தொடர்ச்சியாக எதுவும் நடந்துவிடக்கூடாது என்பதாகத்தான் இருக்கிறது.
பசுபதி பாண்டியனின் மூத்த அக்காள் பெயர் பார்வதி. இவரது கணவர் சண்முகச்சாமி தூத்துக்குடி துறைமுகத்தில் வேலை பார்க்கிறார். இவர்கள் குடும்பம் துறைமுகக் குடியிருப்பில் இருக்கிறது. பசுபதி பாண்டியன் கொலை செய்யப்பட்ட செய்தியைக் கேள்விப்பட்டதும் திண்டுக்கல் சென்றார் பார்வதி. அவரிடம்தான் பசுபதியின் உடலை போலீஸார் ஒப்படைத்தனர்.

திண்டுக்கல்லில் இருந்து பசுபதி பாண்டியன் உடலை ஊர்வலமாக எடுத்துச் செல்ல அவரது ஆதரவாளர்கள் ஆசைப்பட்டார்கள். அதற்கு முதலில் தடை போட்டது போலீஸ். அவர்களோடு காரசார வாக்குவாதம் செய்து ஊர்வலமாக செல்ல அனுமதி வாங்கியவர் இந்த பார்வதிதான். தம்பி உடலுடன் தூத்துக்குடி வந்த அவர், ஒருசில நேரங்களில் ஊர்வலத்திற்கு தலைமை தாங்கி வழி நடத்தினார்.

பார்வதியிடம் பேசினோம். “என் தம்பி ஆயிரம் பேருக்கு சமம். ஜாதி ஜாதின்னு அலைஞ்சான். இப்போ அவன் உயிர் போச்சு. இதுதான் மிச்சம். 15 வருடத்திற்கு முன்பு அந்த ஜாதியாலேயே இந்த ஊரைவிட்டுப் போனான். இப்போ பிணமாத்தான் வந்திருக்கான். ஏற்கெனவே நாங்கள் எங்கள் உதவியாளர் பீரை இழந்தோம். இப்போது எங்க குடும்பத்திற்கு எல்லாமா இருந்த அவனையே இழந்துட்டோம். ஏன் நடந்துச்சு? எதற்கு நடந்துச்சு?னு எதை சொல்றது... இனிமேல் நாங்கள் என்ன செய்யப் போறோம்னு இப்போதைக்கு எந்த சிந்தனையும் இல்லை. தம்பி தாமோதரன் வந்துடுவான். அடுத்தது என்ன என்று அவனிடம்தான் பேசணும்!’’ என்றார்.

No comments:

Post a Comment