Saturday, September 29, 2012

பத்தாவது நாளில் பல் இளித்த பாரதிராஜா! தா.பா.விழாவில் பாய்ந்த வைகோ!


திராவிடக் கட்சிகளைப் போன்றே கம்யூனிஸ்ட் கட்சிகளும் மாறிவிட்டன’ என்று, சமீப காலமாக ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள். அது, நிஜம்​தான் என்பதை நிரூபிக்கும் வண்ணம் சகல கட்சிக்காரர்களின் பாராட்டு மழையுடன் தா.பாண்டியனின் 80-வது பிறந்த நாள் வைபவம் நடந்தது. 
பிறந்த நாளை எப்போதுமே கொண்டாடாத காம்ரேட்கள், தா.பாண்டியன் பிறந்த நாளுக்குத் தேதி குறித்தது ஆச்சர்யம்தான். ஆனால், 'பிறந்த நாள்’ என எங்கேயும் குறிப்பிடாமல், '80-வது ஆண்டு விழா’ என்று பூசி மெழுகியிருந்தனர். விழா அன்றுதான், சி.பி.ஐ. எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் மீது குண்டாஸைப் பாய்ச்சியது அரசு. அதனால்தானோ என்னவோ, ஓ.பன்னீர்செல்வம் பெயர் அழைப்பிதழில் இருந்தும் வரவில்லை. காமராஜர் அரங்கத்தில் நடந்த விழாவில் ஆளுயுர மாலை, வாள் என திராவிடக் கட்சி ஸ்டைல் சம்பிரதாயங்கள் அத்தனையும் அரங்கேறின.
''பிறந்தநாள், வாள், பரிசுகள் என்று கம்யூனிஸ்ட்​​களும் மாறிட்டே வர்றீங்க. வீரத்துக்கு அடையாளமாகத்தான் வாள் கொடுப்பார்கள். ஆனால், நியாயப்படி பார்த்தால் துப்பாக்கியைத்தான் பரிசாகக் கொடுத்திருக்க வேண்டும்'' என்று பரபரப்பைப் பற்றவைத்த மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் சேதுராமன், ''கடந்த தேர்தலில் கூட்டணிப் பேச்சு​வார்த்தை நடந்தபோது ஒரு பிரச்னை. அப்போது, ஓ.பி.எஸ்-சையும் செங்கோட்டை​யனையும் நள்ளிரவில் தா.பா.வீட்டுக்கு அழைத்துப் போனேன். அங்கே நடந்த சந்திப்பு, ஓர் அரசியல் மாற்றத்தை உருவாக்கியது. நிச்சயம் நம்பிக்கை வையுங்கள். தமிழகத்தில் சிவப்புத் துண்டு ஆட்சி அமைக்கும்'' என்று கொளுத்திப் போட்டார்.
''சமதர்ம சமுதாயம் அமைப்பது 100 மீட்டர் ரேஸ் இல்லை. அது, மராத்தான் ஓட்டம். மக்கள் நினைத்தால் மாற்றம் கொண்டு வரலாம். அதை, தா.பா. செயல்படுத்த வேண்டும்'' என, மாற்றத்தைப் பற்றிப் பேசினார் தே.மு.தி.க. அவைத்தலைவர் பண்ருட்டி ராமசந்திரன். அடுத்துப் பேசவந்த திருமாவளவனும் தன் பங்குக்கு, ''வீரவாள் என்பது வீரத்தின் அடை யாளம் என்பதைவிட, அது அதிகாரத்தின் குறியீடு என்பதுதான் சரி. ஆதிக்க சக்திகளிடம் இருந்து பாட் டாளிகளின் கைகளுக்கு அதிகாரம் மாற வேண்டும் என்பதற்கு அடையாளமாகத்தான் இங்கே வாள் பரிசு அளிக்கப்பட்டிருக்கிறது'' என்றார்.    
அடிக்கடி தண்ணீரைக் குடித்தபடியே பேச ஆரம் பித்தார் பாரதிராஜா. ''நான் மேடையில் மட்டுமல்ல, சினிமாவிலும் பேசுவதை நிறுத்திவிட்டேன். தா.பா-வுக்காகத்தான் இங்கே வந்தேன். மேடை போட்டுக் கொடுத்தால் அங்கே ஆக்ரோஷமாகப் பேசி சிலர் பெரிய ஆள் ஆகிவிடுகிறார்கள்'' என்று மேடையில் இருந்த சீமானை மறைமுகமாக விளாசினார். ''ஈழப் பிரச்னையில் நாம் தோற்றுவிட்டோம். திராவிடம் பேசி நம்மை அழித்து விட்டனர். தமிழர் இனம் அழிவதை தமிழக அரசியல்வாதிகள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். திராவிடத்தைப் பேசிக்கொண்டே ஈழத்தைக் காப்பாற்றாமல் விட்டு​விட்​டார்கள். பேசியே தமிழர்களை மழுங்கடித்து விட்டனர்'' என்று பாரதிராஜா பேசியதை, மேடையில் இருந்த வைகோ உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டு இருந்தார். பேசி முடித்ததும் உடனே கிளம்பியும் போய்விட்டார் பாரதிராஜா.
அடுத்துப் பேசவந்த வைகோ எடுத்தவுடனே கர்ஜிக்கத் தொடங்கினார். ''பாரதிராஜாவே... வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ எனப் பேசிவிட்டுப் போயிருக்கிறீர். விமர்சிப்பார்களைப் பகைவனாகக் கருதுபவன் நான் அல்ல. என்னைப் பேச வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளிவிட்டார். அரசியல்வாதிகளையும் திராவிடத்தையும் பற்றிப் பேசுவது சிலருக்குப் பொழுதுபோக்கு. திராவிடம் இல்லை என்றால், இங்கே எதுவுமே இல்லை. பெரியார், அண்ணா இல்லாமல், இங்கே எதுவுமே நடந்திருக்காது. 'திராவிடம் என்று சொல்லி நாட்டைக் கெடுத்து விட்டனர்’ என்று யார் சொல்வது... அல்லிநகரத்துப் சின்னசாமி (பாரதிராஜாவின் இயற்பெயர்). மண்ணின் மணத்தை திரையில் வடிக்கும் திறமை பாரதிராஜாவை விட்டால் வேறு யாருக்கும் இல்லை. ஆனால், அவரோ 'அரசியல் வாதிகள் பேசிவிட்டுப் போய்விடுவார்கள்’ என்று கேலி பேசியிருக்கிறார். 2009 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கு எதிராக நீங்கள் (பாரதிராஜா) பிரசாரம் செய்ததற்காக உங்கள் அலுவலகம் சூறையாடப்பட்டது. அப்போது அந்த அலுவலகத்துக்கு வந்த முதல்ஆள் நான்தான். அந்தக் காரியத்தைச் செய்த தி.மு.க-வைக் கண் டித்துப் பேசியதற்காக அவதூறு வழக்கு என் மீது பாய்ந்தது. அந்த வழக்கு இப்போதும் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், நீங்களோ பத்தாவது நாளில் கருணாநிதியின் காலடியில் பல் இளித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தீர்கள். இனி, திராவிடம் பற்றி ஒரு வார்த்தை பேசினால், பத்து வார்த்தைகள் நாங்கள் திருப்பிப் பேசவேண்டி வரும். பாரதிராஜா பேச்சை கம்யூனிஸ்ட்களாகிய நீங்கள் தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும்'' என்று முடித்தவர் விறுவிறுவெனக் நிகழ்ச்சியை விட்டு கிளம்பினார். அவரை சமாதானம் செய்ய முயன்றபோதும் முடியவில்லை.
ஏற்புரை நிகழ்த்திய தா.பாண்டியன், ''இது அரசியல் மேடை அல்ல. அரசியலில் பங்கெடுத்த ஒரு மனிதனின் மேடை. தமிழகத்தில் கருத்து வேறுபாட்டைக் கடந்து பண்பாட்டைக் காக்க எல்லோரையும் அழைத்தோம். இங்கே பேசிய வர்களின் கருத்துக்கு ஏற்பு, மறுப்பு எதற்கும் நான் கருத்துச் சொல்ல விரும்பவில்லை'' என்று முடித்துக் கொண்டார்.
தி.மு.க-வை அழைக்காத 'பெருந்தன்மை’ காரண​மாக​வோ என்னமோ அதிசயமாக அடுத்த நாள், தா.பாண்டியன் வீட்டுக்கே சென்று வாழ்த்தினார் முதல்வர் ஜெயலலிதா!

நீ தி.மு.க-வுக்குப் போயிட்டு வந்தவன் தானே? பன்னீர்செல்வம் வீட்டில் விழுந்த பலே குத்து!


கடந்த வாரம், அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தைப் பார்க்க, பெரியகுளத்தில் உள்ள அவருடைய வீட்டில் கட்சிப் பிரமுகர்கள் வரவேற்பறையில் காத்திருந்தனர். காலை நேரம் என்பதால், நல்ல கூட்டம். தேனி நக ராட்சி சேர்மனும், அ.தி.மு.க. நகரச் செயலாளருமான முருகேசன் தன் னுடைய ஆதரவா ளர்களுடன் அமைச்சர் வீட்டுக்குள் நுழைந்தார். அப்போது, அவர் உட்காருவதற்கு நாற்காலி எதுவும் காலியாக  இல்லை.
அப்போது, அங்கே உட்கார்ந்திருந்த அத்தனை பேரும் சேர்மனுக்கு வணக்கம் வைத்திருக்கிறார்கள். ஆனால், மாணவர் அணி முன்னாள் செயலாளர் விஜய ராமசாமி மட்டும் முருகேசனைக் கண்டுகொள்ளவில்லையாம். உடனே முருகேசன், 'தி.மு.க-வுக்குப் போயிட்டு வந்த உனக்கு இவ்வளவு திமிரா?’ என்று சொல்லி திட்டியதாகக் கூறப்படுகிறது. அதற்கு விஜய ராமசாமி, 'நீங்க மட்டும் என்னவாம்? போன தி.மு.க. ஆட்சியில் என்னோட சொந்தக்காரர்னு சொல்லிக்கிட்டு அமைச்சர் தங்கம் தென்னரசுவுடன் சுற்ற வில்லையா? அவரை வைத்து வசதி ஆகவில்லையா?’ என்று டென்ஷன் ஆகியிருக்கிறார்.
ஆத்திரம் அடைந்த முருகேசன், பதிலுக்கு ஏக வசனத்தில் திட்டியபடி விஜய ராமசாமியைத் தாக்கவும்... குபுகுபுவென ரத்தம் கொட்டியது. சத்தம் கேட்டு வெளியே வந்த ஓ.பன்னீர்செல்வம், 'இதுவரைக்கும் பொதுஇடத்தில்தான் சண்டை போட்டீங்க... இப்போ என் வீட்டுக்குள்ளேயே இப்படிப் பண்றீங்களே... உங்களுக்குனு பொறுப்பு இருக்கு. பார்த்து நடந்துக்கோங்க’ என்று, முருகேசனை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கி விட்டாராம். இது, பெரியகுளம் வட்டாரத்தில் பெரிய பரபரப்பைக் கிளப்பி உள்ளது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பேசிய அ.தி.மு.க. பிரமுகர்கள், ''விஜய ராமசாமி விஷயம்மட்டுமில்லீங்க. போன வாரம் 22-வது வார்டு முன்னாள் கவுன்சிலர் அய்யாசாமியை நடுரோட்டில் வைச்சு முருகேசன் அடிச்சுட்டார். அதுக்கு முந்தின வாரம் எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் காந்திராஜனைப் பொளந்துட்டார்'' என்று புள்ளி விவரம் வாசிக்கிறார்கள்.
அடிவாங்கியதாகச் சொல்லப்படும் மற்றவர்கள் பேசமறுத்த நிலையில், காந்திராஜன் மட்டும் பேசினார். ''நான் 1970-ம் ஆண்டு முதல் இருந்து கட்சிப்பணி ஆற்றி வருகிறேன். இப்போது, எம்.ஜி.ஆர். மன்ற நகரத் துணைச் செயலாளராக இருக்கிறேன்.
கடந்த மாதம் எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் ஈஸ்வரன் இறந்த பிறகு, அவருடைய இடம் காலியானதால் அமைச்சரிடம் அந்தப் பதவியைக் கேட்டேன். அவர், 'அப்புறம் பார்க்கலாம்’ என்று சொல்லி விட்டார். இது முருகேசனுக்குத் தெரிய வர, அரசு சுற்றுலா மாளிகையில் கலெக்டர், போலீஸ் அதிகாரிகள் எல்லோர் முன்னிலையிலும், 'உனக்கெல்லாம் கட்சிப்பதவி தேவையா?’ என்று என்னுடைய சாதியைச் சொல்லித் திட்டி முகத்திலேயே குத்தினார். 'அடிங்கடா... அவனைக் கொல்லுங்கடா’ என்று முருகேசன் சொல்ல... அவருடைய ஆதரவாளர்களும் என்னைத் தாக்கினார்கள். அப்போதே இதுபற்றி அமைச்சரி டம் முறையிட்டேன். ஆனால், அவர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.
அவர் என்னை மட்டுமல்ல, தேனி மாவட்டச் செயலாளர் சிவக்குமாரையும் கேவலமாகப் பேசி அடிக்கப் பாய்ந்திருக்கிறார். இப்போது, தேனியில் புதிதாகக் கட்டப்படும் பிரபல ஜவுளிக் கடையில், அமைச்சர் பெயரைச் சொல்லி முறைகேடு செய்து இருக்கிறார். நகராட்சியில் அவசர அவசரமாகத் தீர்மானம் போட்டு விதிமுறையை மீறி, கட்டடம் கட்ட அனுமதி கொடுத்து இருக்கிறார். எதிர்க்கட்சி கவுன் சிலர் மூலம் நகராட்சியில் புகார் செய்யவைத்து, அந்தக் கட்டடத்தின் பக்கத்தில் இருக்கும் பொதுக்கழிவறையை அகற்றி இருக்கிறார். மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் பார், ரியல் எஸ்டேட் என்று எல்லாவற்றிலும் தலையிட்டு அதிகாரம் செலுத்துகிறார். அதிகாரிகளை மிரட்டுவது, அடிப்பது என்று இவருடைய அடாவடித்தனங்கள் எல்லை மீறிப் போகின்றன. அமைச்சரிடம் புகார் சொல்லியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை'' என்று கொதித்தார்.
இதுகுறித்து, முருகேசனிடம் பேசியபோது, ''என்னைப் பத்தி தேவையில்லாம சிலர் புகார் கிளப்பி இருக்காங்க. அதெல்லாம் பொய். அமைச்சர் வீட்டில் என்ன நடந்த துன்னா, தி.மு.க-வுக்குப் போயிட்டு வந்ததால, விஜய ராமசாமிகிட்ட சின்ன சத்தம் போட்டேன். நான் எந்தக் கட்டடத்துக்கும் விதிமுறையை மீறி அனுமதி தரலை. அந்தக் கட்டடத்துக்கான அனுமதி தி.மு.க. ஆட்சிக் காலத்துல கொடுக்கப்பட்டது. எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் ஈஸ்வரன் இறந்த மறுநாளே காந்திராஜன் அந்தப் பதவியைக் கேட்டதால, கருமாதி முடிஞ்சு பார்த்துக்கலாம்னு அவரைத் திட்டினேன். இப்ப எல்லார்கிட்டேயும் சமாதானம் ஆகிட்டோம்'' என்று அமைதியாகப் பதில் சொன்னார்.  
இந்த விவகாரம் முடிவுக்கு வரும் முன்னரே, கூட்டுறவு அச்சக ஊழியர் சங்க ஊழியர்களை மிரட்டினாராம் முருகேசன். அதனால், கடுப்பான ஊழியர்கள் முருகேசனுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் இறங்கி இருக்கிறார்கள்.
பன்னீர் பெயரைப் பழுதாக்காமல் விட மாட்டார் களோ?

கட்சியைக் கரையேற்ற தெலுங்கானா ரெடி! காங்கிரஸின் அரசியல் ரெடி


ரசியல் லாபத்துக்காக தனித் தெலுங்கானா மாநிலத்தை அறிவிக்க இருக்கிறது காங்கிரஸ் என்ற செய்திதான் டெல்லியில் பரவிக் கிடக் கிறது! 
இந்தியாவை உலுக்கிய மிகப்பெரிய உரிமைப் போராட்டங்களில் ஒன்று தனித் தெலுங்கானா. ஆந்திர மாநிலத்தின் ஓர் அங்கமாக இருக்கும் தெலுங்கானாவைப் பிரித்துத் தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று சந்திரசேகர் ராவின் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியினர் நடத்திய உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், ரயில் மறியல், பந்த் ஆகியவை காரணமாக, ஆந்திரா அலறியது. நட வடிக்கை எடுக்கவேண்டிய மத்திய அரசோ, இத்தனை காலமும் மௌனமாக வேடிக்கை பார்த்தது.  
ஆனால் இப்போது, காங்கிரஸ் திடீரென விழித்து எழுந்து ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டியிடம், 'தனித் தெலுங்கானாவை அறிவித்தால், நமக்கு அரசியல் ரீதியிலான சாதக பாதகங்கள் என்னென்ன?’ என்று அறிக்கை கேட்டிருக்கிறது. ஆந்திர கவர்னர் தரப்பிடமும், 'தனி மாநில அறிவிப்பு வெளியானால், என்ன மாதிரியான பிரச்னைகள் ஏற்படும்?’ என்று பிரதமர் அலுவலகமும் உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேவும் விசாரித்து இருக்கிறார்கள். டெல்லியில் முகாமிட்டு இருக்கும் சந்திரசேகர் ராவும் சோனியாவின் பிரதிநிதிகளை ரகசியமாக சந்தித்துப் பேசி வருகிறார். அதனால், தனி மாநில அறிவிப்பு வெளியானதும், 'தனது
தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதியை காங்கிரஸ் கட்சியுடன் இணைக்கப் போகிறார் ராவ்’ என்ற அளவுக்குச் செய்திகள் பரவி வருகின்றன.
ஆந்திராவைப் பிரிப்பதற்குத் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கும் 'ஒகே ஆந்திரா’ (ஒரே ஆந்திரா) அமைப்பினர், '' போராட்டம் நடந்தபோதெல்லாம் கண்டுகொள்ளாத மத்திய அரசு, இப்போது மட்டும் சம்மதிக்கிறது என்றால், ஆட்சி ஆட்டம் கண்டிருப்பதுதான் காரணம். நாடாளுமன்றத் தேர்தல் வரும் சூழலில், ஆந்திர காங்கிரஸின் நிலை மோசமாக இருப்பதை சோனியா புரிந்து ​வைத்திருக்கிறார். ராயலசீமா பகுதிகளில் ஜெகன்மோகன் ரெட்டிக்கு அதிக ஆதரவு இருப்பதால், காங்கிரஸ் அடி வாங்கும். தெலுங்கானா பகுதியில் 55 சதவிகிதத்துக்கும் அதிகமான வாக்கு வங்கியை சந்திரசேகர் ராவ் வைத்திருப்பது சோனியாவின் கண்களை உறுத்துகிறது. ஆந்திராவில் கணிசமான இடங்களைப் பெற வேண்டும் என்றால், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதியுடன் இணைவதைத் தவிர வேறு வழி இல்லை என்பதால், இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்கள். சந்திரசேகர் ராவிடம் பேரம் பேசி வருகிறது காங்கிரஸ்' என்கிறார்கள்.  
இதுகுறித்து, சந்திரசேகர் ராவிடம் பேசினோம். 'காங்கிரஸ் தரப்பில் இருந்து சிலர் பேசி வருகிறார்கள் என்பது உண்மைதான். பொறுத்திருந்து பார்ப்போம்'' என்கிறார்.  தனித் தெலுங்கானா, ஆந்திர காங்கிரஸைக் கரையேற்றுமா?

ப.சிதம்பரத்தைப் பிரதமர் ஆக்குமா ஏகாதசருத்ர பூஜை? பிள்ளையார்பட்டி பரபரப்பு


ப.சிதம்பரத்துக்கான வேண்டுதல், கோயில் கோயிலாக நடக்கிறது! 
ஏகாதச ருத்ர பூஜை கடந்த 24-ம் தேதி காலை, பிள்ளையார்பட்டியில் படுசிரத்தையுடன் நடந்து முடிந்திருக்கிறது. எதிரிகளை வீழ்த்தி, முடிவுகளை எடுக்கக்கூடிய முக்கியப் பதவியில் அமர்வதற்காக நடத்தப்படும் இந்த பூஜை, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்துக்காக நடத்தப்பட்டது என்று தெரியவரவே, விசாரித்தோம்.
கோயில்களுக்குப் போவதில் அவ்வளவாய் மெனக்கெடாதவர் ப.சிதம்பரம். சனிப்பெயர்ச்சி, சங்கட மான தருணங்களை உருவாக்கும் என்று ஜோதிடர்கள் சொன்னதால், குடும்பத்துடன் குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயிலுக்குச் சென்று யாகம் நடத்தினார். அடுத்து, 2ஜி வழக்கில் சிதம்பரத்தை சிக்கவைக்க நாலா பக்கமும் சதிவலைகள் பின்னப்பட்ட நேரத்தில் திருப்பதிக்குச் சென்று வெங்கடாஜலபதியைத் தரிசனம் செய்து விட்டு வந்தார். அதன்பிறகு, அவருக்கு ஏறுமுகம்தான். இந்த சூழலில்தான், சில நாட்களுக்கு முன், சிதம்பரத்தின் மானகிரி தோட் டத்தில் சிவாச்சாரியார்களை வைத்து பெரிய அளவில் யாகத்தை அவரது மகன் கார்த்தி நடத்தினார் என்றும் செய்திகள் கசிந்தன.
இதுகுறித்துப் பேசிய சிதம்பர விசுவாசிகள், ''செப்டம்பரில் அமைச்சரவை மாற்றம் வருகிறது. தனக்கு உடல்நிலை சரியில்லை என்று சொல்லி பிரதமர் பதவியில் இருந்து தன்னை விடுவித்துவிடும்படி சோனி யாவிடம் கெஞ்சுகிறார் மன்மோகன் சிங். அவரது விருப்பம் ஏற்கப்பட்டால், பிரதமர் நாற்காலிக்கு இரண்டே பேர்தான் பொருத்தமானவர்கள். ஒருவர் சிதம்பரம், இன்னொருவர் ஏ.கே.அந்தோணி. அப்படி ஒரு காலம் கனிந்தால் அடுத்த வாய்ப்பு அப் பாவுக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே மகன் கார்த்தி இந்த யாகத்தை நடத்தினார்.
ஆனால், அந்த யாகத்துக்கு முன்னதாகவே பிள்ளையார்பட்டியில் ஏகாதச ருத்ர ஜெபத்தை நடத்தத் தொடங்கி விட்டார். இதற்கான பொறுப்பை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினரும் தனது விசுவாசியுமான கோட் டையூர் நெல்லியானிடம் ஒப்படைத்திருந்தார். ப.சிதம்பரத்தின் பிறந்த தேதி 16 என்பதால், 16 மாதங் களுக்குத் தொடர்ந்து இந்த ஏகாதச ருத்ர பூஜையை நடத்த வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்களாம் ஜோதிடர்கள். ப.சிதம்பரத்தின் நட்சத்திரமான பூராட நட்சத்திரத்தில் இந்தப் பூஜையை நடத்த வேண்டும் என்பதும் ஜோதிடர்கள் குறித்துக் கொடுத்ததுதான்.
'ஏக’ என்றால் ஒன்று, 'தசம்’ என்றால் பத்து. அதனால், 11 கலசங்களை கோயில் கொடி மரத்தின் எதிரே வைத்து 11 சிவாச்சாரியார்கள் அமர்ந்து சுமார் இரண்டு மணி நேரம் இந்த கும்ப பூஜையைச் செய்தனர். அதன்பிறகு, பூஜையில் வைத்திருந்த புனிதநீரால், பிள்ளையாருக்கு அபிஷேகம் செய்தனர்.
பிள்ளையார்பட்டி பிள்ளையாரும் அங்கே இருக் கும் மருதீசரும் சக்தி வாய்ந்த சுவாமிகள். பிரணாப், ஜனாதிபதி தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்வ தற்கு முன், அவருடைய மகள் இங்கே வந்து சிறப்பு பூஜை செய்துவிட்டுப் போனார். அதனால்தான் அவங்க அப்பா ஜனாதிபதி தேர்தலில் அமோகமாக ஜெயித்தார்.
தலைவர் சிதம்பரத்துக்காக நாங்கள் கடந்த ஜூலை மாதமே, இந்த ஏகாதச ருத்ர பூஜையைத் தொடங்கினோம். அதன் பலனால்தான், 2ஜி வழக்கில் தலைவருக்கு எதிராக சுப்ரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனுவை, கோர்ட் தள்ளுபடி செய்துவிட்டது. தலைவரும் நிதிஅமைச்சர் பதவிக்கு மறுபடியும் வந்து விட்டார். கடந்த மாதம் தலைவர் வயிற்று வலியால் அவஸ்தைப்பட்டார். இந்த பூஜை முடிஞ்சதும் ஆபரேஷன் முடிஞ்சு நலமாக வந்துட்டார். இப்போது, மூன்றாவது பூஜை நடந்திருக்கிறது, இதுக்கும் நிச்சயம் நல்ல பலன் இருக்கும். மத்திய அமைச்சரவை மாற்றம் வரப்போகிறது. மத்திய அரசில் முக்கிய இடத்தில் இருக்கும் எங்கள் தலைவர், பிரதமர் ஆக வேண்டும். அதுதான் எங்களோட ஆசை. அதை கற்பக விநாயகர் நிச்சயம் கைகூட்டிக் கொடுப்பார்'' என்றனர்.
  சிவாச்சாரியார்கள் சிலரிடம் இந்த 'ஏகாதச ருத்ர’ பூஜையின் தாத்பரியம் குறித்துக் கேட்டதற்கு, ''இது சிவபெருமானுக்குச் செய்யும் பூஜை. பிள்ளையார்பட்டியில் மருதீசர் சந்நிதியும் பிள்ளையார் சந்நிதியும் ஒரே சந்திப்பில் இருப்பதால் அங்கே வைத்து செய்திருப்பார்கள் அல்லது பிள்ளையாருக்கு ஆவாகனம் செய்து பூஜையை நடத்தி இருக்கலாம். நினைத்த காரியம் தடை இல் லாமல் நடக்கவும் உடல் உபாதைகள் நீங்கவும் இந்த ஜெபத்தை நடத்துவது உண்டு'' என்று சொன்னார்கள்
பூஜை முடிந்து மாலையும் கழுத்துமாய் கோயிலைவிட்டு வெளியில் வந்த நெல்லியானிடம் இதுகுறித்துக் கேட்டோம். ''சாமிக்கு வேண்டுதல் வைத்து பூஜை செய்றோம். அதை விளம்பரப்படுத்த வேண்டாம்னு நினைக்கிறேன்'' என்று நைஸாக நழுவினார்.
இந்த பூஜை குறித்து கார்த்தி சிதம்பரத்திடம் பேசுவதற்கு நாம் முயற்சி செய்தும், அவர் பேசுவதற்கு முன்வரவில்லை. இதுகுறித்து அவர் விளக்கம் சொன்னால் பிரசுரம் செய்வதற்குத் தயா ராகவே இருக்கிறோம்!

கன்னியாஸ்திரியை கர்ப்பமாக்கிய பாதிரியார்?



பாதிரியார் ராஜரத்தினம் பதவி உயர்வு பெற்று திருச்சி ஜோசப் கல்லூரிக்கு முதல்வர் ஆனார். நெல்லையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் திருச்சியில் நீடித்தது. இசை ஆர்வமாக இருவரும் அடிக்கடி சந்தித்து (பாதிரியார் ராஜரத்தினம் பிளாரன்சுமேரி) இசை ஆல்பம் தயாரிப்பது குறித்து விவாதித்தனர்.

பாதிரியார் ராஜரத்தினம் தனது செல்வாக்கை பயன்படுத்தி பிளாரன்சுமேரி பாட “ரதியின் கீதம்” என்ற ஆல்பம் தயாரித்தார். அந்த ஆல்பம் கிறிஸ்தவ மக்களிடையே பிரபலமாக தொடங்கியது. இதனால் இருவரது சந்திப்பும் தினமும் நடக்க தொடங்கியது. அவரை சந்திக்க ஜோசப்கல்லூரிக்கு பிளாரன்சுமேரி செல்வது உண்டு. அவரும் தினமும் விரும்பி அழைப்பது உண்டு.

இந்தநிலையில்தான் 2006-ம் ஆண்டு ஜனவரி மாதம் 22-ந்தேதி பிளாரன்சுமேரி கற்பு பறிபோனதாக கூறப்படும் நாள். வழக்கமாக இருவரும் சந்திக்கும் அதே கல்லூரி அறையில் தான் கற்பு பறிபோனதாக பிளாரன்சு மேரி கூறியுள்ளார்.

பாதிரியார் கொடுத்த குளிர்பானத்தை குடித்ததும் அவருக்கு தலைகனக்க தொடங்கியது. மயங்கி விழுந்தார். சிலமணிநேரம் கழித்து மயக்கம் தெளிந்தது. நடக்க கூடாதது நடந்து விட்டதாக அறிந்தார். இதுபோன்ற சம்பவம் மீண்டும் மீண்டும் நடந்ததாக பிளாரன்சுமேரி கூறியுள்ளார். சிலநாள் கழித்து அவரது உடலில் ஒரு மாற்றம் ஏற்படுவதை உணர்ந்தார். வயிறு சற்று பெரிதாக இருப்பதை அறிந்தார். உடனே நம்பதகுந்த பெண் டாக்டர் ஒருவர் உதவியை நாடினார். கர்ப்பம் அடைந்து இருப்பதாக டாக்டர் தெரிவித்தார்.

என் கற்பை பலமுறை சூறையாடிய பாதிரியார் முகமூடியை கிழிக்காமல் விட மாட்டேன்: கன்னியாஸ்திரி சபதம் ஏற்றுள்ளார். தயவுசெய்து கல்யாணம் பண்ணி தொலைங்க பாதிரிமார்களே! கள்ள சாமியார்களே!?

Thursday, September 27, 2012

எனது இந்தியா ( சுதேசி மன்னர்கள்! ) - எஸ். ராமகிருஷ்ணன்....


சுதந்திரம் அடைந்தபோது இந்தியா மூன்று பகுதி​களாக இருந்தது. ஒன்று, பிரிட்டிஷ் இந்திய மாகாணங்கள். அதாவது சென்னை, பம்பாய், உத்திரப் பிரதேசம், ஒரிஸ்ஸா, பஞ்சாப், பீகார், வங்காளம், சிந்து அஸ்ஸாம் பகுதிகளை உள்ளடக்கியது. இரண்டாவது, தலைமைக் கமிஷனர் மாகாணங்கள். இவை, பிரிட்டிஷ் ஆளுகைக்கு உட்பட்ட பலுசிஸ்தானம், வட மேற்கு எல்லை மாகாணம். மூன்றாவது, 500-க்கும் மேற்பட்ட சுதேசி மன்னர்கள் ஆட்சி செய்த மன்னர் மாநிலங்கள்.

இந்த மூன்று பகுதிகளின் பிரதிநிதிகளைக்கொண்டே அரசியல் அமைப்புச் சட்டமன்றம் அமைக்கப்பட்டது. நேருவின் தலைமையில் செயல்பட்ட இடைக்கால அரசாங்கம், மன்னர் மாநிலங்களை இந்தியாவோடு இணைக்க ஒரு தனி அமைச்சரகத்தை உருவாக்கி இருந்தது. அதற்கு வல்லபாய் படேல் பொறுப்பேற்று இருந்தார். மன்னர் மாநிலங்களை சுதந்திர இந்தியா​வோடு இணைப்பது என்பது மிகப் பெரிய சவாலாக இருந்தது. அன்று இருந்த மன்னர்கள் காலம்காலமாக அனுபவித்த சலுகைகள் மற்றும் ராஜ வாழ்க்கையை விட்டுக்கொடுக்க விரும்பவில்லை. இதற்காக, 1947-ம் ஆண்டு ஜுலை 25-ம் தேதி இந்திய மன்னர்களின் மாநாடு ஒன்றை நடத்தினார் மௌன்ட் பேட்டன்.  இதில், மன்னர்கள் தங்கள் விருப்பப்படி இந்தியாவுடனோ அல்லது பாகிஸ்தானுடனோ தங்களை இணைத்துக்கொள்ளலாம் என்றும், அவர்களின் எதிர்கால வாழ்வுக்கான அனைத்துச் சலுகைகளையும் பிரிட்டிஷ் அரசு முறையாகப் பெற்றுத்தரும் என்றும் அந்த மாநாட்டில் உறுதி அளிக்கப்பட்டது. சுதேசி மன்னர்கள், படேலுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய உரிமைகளை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அந்த மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது. ஆனால், மன்னர்களின் இணக்கத்தைப் பெறுவது எளிதாக இல்லை. படேல் சாம, தான பேத, தண்டம் ஆகிய நான்கு வழிகளைப் பயன்படுத்தியே மன்னர்களின் இசைவைப் பெற்றார். இதற்கு, உள்துறைச் செயலராக இருந்த வி.பி.மேனன் முக்கியத் துணையாக இருந்தார்.



அந்தக் காலத்தில், சுதேச சமஸ்தானங்களில் இந்தியத் தேசியக் கொடியை ஏற்றுவது தண்டனைக்​குரிய குற்றமாகக் கருதப்பட்டது. இதை எதிர்த்து கம்யூனிஸ்ட் இயக்கம் சுதேசி சமஸ்தானங்கள் அனைத்திலும் இந்திய தேசியக் கொடியை ஏற்றும் போராட்டத்தைத் தொடங்கியது. பி.சி.ஜோஷி போன்ற மூத்த தலைவர்கள் இதில் கலந்துகொண்டு சமஸ்தானங்களை இந்தியாவோடு இணைக்க வேண்டும் என்று குரல் எழுப்பினர். 550 மன்னர்கள் தங்கள் பகுதிகளை இந்தியாவுடன் இணைப்பதற்காக அதற்கான பத்திரத்தில் கையெழுத்துப் போட்டனர். ஆனால், ஜுனாகத் நவாப், ஹைதராபாத் நிஜாம், மற்றும் காஷ்மீர் மன்னர் ஆகியோர் கையெழுத்திட மறுத்துவிட்டனர். அவர்கள் இந்தியாவோடு இணைந்த நிகழ்வு எதிர்பாராத பல திருப்பங்களைக்கொண்டது.

சுதேசி மன்னர்கள், தங்களது ராஜ்ஜியத்தின் வெளியுறவு, பாதுகாப்பு இரண்டையும் ஆங்கிலேயருக்கு விட்டுக்கொடுத்துவிட்டு உள்ளாட்சியை மட்டுமே தமதாக்கி இருந்தனர்.

சுதேசி மன்னர்களில் காஷ்மீர், ஹைதராபாத் இரண்டும் பரப்பில் மிகப் பெரியவை. அடுத்தபடியாக மைசூர், பரோடா, குவாலியர், புதுக்கோட்டை ஆகிய நடுத்தர அளவிலான ராஜ்ஜியங்கள். சமஸ்தானம் ஒவ்வொன்றுக்கும் 'திவான்’ என்று சொல்லப்படும் ஒரு பிரதம மந்திரி இருந்தார். அவர் மகாராஜாவால் நியமிக்கப்பட்டாலும், வைஸ்ராயின் ஒப்புதல் பெற்ற பிறகே பொறுப்பு ஏற்க முடியும். அத்துடன், 'ரெஸிடென்ட்’ எனப்படும் பிரிட்டிஷ் பிரதிநிதியும் சமஸ்தானத்திலேயே இருந்து பிரிட்டிஷ்காரர்களின் நலன்களைக் கண்காணித்து வருவார். சுதேசி மன்னர்கள் ஒவ்வொருவரும் ஒரு ரகம். விசித்திரமான மனநிலைகொண்டவர்கள். ஆடம்பரப் பிரியர்கள். கபூர்தலா மன்னர் தன்னை 14-ம் லூயி மன்னரின் மறு பிறப்பு என்று நம்பினார். அதற்காக, தனது மாளிகையை வார்செலஸ் அரண்மனையைப் போலவே பிரெஞ்சுக் கட்டடக் கலை நிபுணர்களைக்கொண்டு வடிவமைத்தார்.

அதோடு, 'அனிடா டெல்கோடா’ என்ற ஸ்பானியப் பெண்ணை ஒரு நடன விருந்தில் சந்தித்து, கண்டதும் காதல்கொண்டு, அவளையே தனது மகாராணியாகவும் ஆக்கிக்கொண்டார். மேலும், தனது அரச சபையின் மொழியாக பிரெஞ்சு பேசப்பட வேண்டும் என்று அறிவித்தார். காசி ராஜா எங்கே சென்றாலும் பசுவின் முகத்தில்தான் காலையில் கண் விழிப்பது வழக்கம். அதற்காக, அவர் போகுமிடம் எல்லாம் பசுக்களைக் கூடவே அழைத்துச் சென்றனர். பாட்டியாலா அரசருக்கு சாப்பிடுவதுதான் ஒரு நாளின் முக்கிய வேலை. அவரது ஒரு வேளை உணவு நெய்யில் வறுத்த ஆறு கோழிகள். இரண்டு கிலோ ஆட்டு இறைச்சி. பாலில் செய்யப்பட்ட இனிப்புகள். காடை, கௌதாரி, புறா, மான், மிலா, மீன் என ரகம் ரகமாகப் பொறிக்கப்பட்டு உணவு மேஜையில் அடுக்கப்பட வேண்டும். அவரது எடை 300 பவுண்ட் (136 கிலோ).

 இப்படி, ஆண்டு முழுவதும் சாப்பிட்டுவிட்டு உடம்பு இளைப்பதற்காக ஒரு மாதம் வெறும் எலுமிச்சை சாற்றை மட்டுமே அருந்துவார். எடை குறைந்தவுடன் மீண்டும் உணவு வேட்டை தொடங்கிவிடும். ராம்பூர் நவாப், கன்னிப் பெண்களாகத் தேடித்தேடி சுகித்து அவர்களின் மூக்குத்திகளை நினைவுச் சின்னமாக சேகரித்துக்கொள்வார். அவரிடம் ஆயிரக்கணக்கான மூக்குத்திகள் இருந்தன. டோல்பூர் மன்னருக்கு, சீட்டு விளையாட்டுதான் உலகம். ராஜா பூபிந்தர் சிங், ரோல்ஸ் ராய் கார் பிரியர். இவரது ஆடம்பரக் கார்களின் முகப்பைத் தங்கத்தால் இழைத்து வடிவமைத்து இருந்தார். அத்துடன் இருக்கைகள், காரின் முகப்பு போன்றவற்றில் பதிப்பதற்கெனத் தனியான நகைகள், முத்து மாலைகள் செய்தார்.  இந்தியாவில் இருந்த சுதேசி மன்னர்கள் மட்டுமே ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரோல்ஸ்ராய் கார்களை வைத்திருந்தனர். ஒவ்வொரு காரின் விலையும் பல லட்சங்கள். இப்படி, விசித்திர குணங்கள்கொண்ட மகாராஜாக்களில் ஒருவர்தான் குஜராத்தின் தென் மேற்குப் பகுதியில் இருந்த ஜுனாகத்தின் நவாப் மகபத் கான் ரசூல் கான்.

இவருக்கு நாய்கள் என்றால் உயிர். அவரிடம் 800 நாய்கள் இருந்தன. ஒவ்வொரு நாய்க்கும் ஒரு தனி இடம், பராமரிப்பதற்குத் தனி ஆள், மன்னர் நினைத்த நேரம் நாயைக் கொண்டுவருவதற்காக ஒவ்வொரு நாயின் இருப்பிடத்துக்கும் ஒரு போன் இணைப்பு, அத்துடன் நாய்களுக்கான விசேஷ உடைகள், அலங்கார மணிகள், முத்து மாலைகள் ஆகியவை வைத்து இருந்தார். ஏதாவது ஒரு நாய் இறந்துவிட்டால், அதன் நினைவாக சலவைக்கற்களால் மண்டபம் கட்டப்படும்.  நாய்களை நேசித்த அளவில் ஒரு பங்குகூட அவர் தனது ராஜ்ஜியத்தில் இருந்த மக்களை நேசிக்கவில்லை. அவரது படுக்கையில் அவரோடு தூங்குவதற்கு என்றே சில நாய்களை வைத்து இருந்தார். அவற்றைக் கட்டிக்கொண்டுதான் நவாப் தூங்குவார்.

அவரது செல்ல மகள் என்று அழைக்கப்பட்ட 'ரோஷனா ரா’ என்ற நாய்க்கு விமரிசையாகத் திருமணம் செய்துவைக்க ஆசைப்பட்டார் நவாப். அதற்காக, மணமகன் தேடும் பணி நடந்தது. மங்ரோல் சமஸ்தானத்தைச் சேர்ந்த 'பாபி’ என்ற ஆண் நாய் மணமகனாகத் தேர்வு செய்யப்பட்டது. அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டன. திருமண விழா மூன்று நாட்கள் நடந்தன. எல்லா சமஸ்தானங்களைச் சேர்ந்த மன்னர்கள், நவாப்புகள், ஜமீன்தார்கள் விருந்தினர்களாக அழைக்கப்பட்டு இருந்தனர்.

திருமணத்தின் தலைமை விருந்தினர் கர்சன் பிரபு. அது, இரண்டு நாய்களுக்கு நடக்கும் திருமணம் என்று அறிந்த கர்சன், நிகழ்ச்சிக்கு வரவில்லை. அது, தன்னை அவமதிக்கும் செயல் என்று நவாப் பகிரங்கமாக அறிவித்தார். திருமண நிகழ்ச்சியில் ஒரு லட்சம் பேருக்கும் மேலானோர் கலந்துகொண்டனர்.


திருமண நாள் அன்று காலையில், மணமகளான 'ரோஷனா ரா’ பன்னீரில் குளிக்கவைக்கப்பட்டாள். பட்டு ஆடை, வைர மாலைகள், முத்து மாலைகள் அணிவிக்கப்பட்டன. மணமகளை, வெள்ளிப் பல்லக்கில் வைத்து ஊர்வலமாக அழைத்து வந்தனர். 250 நாய்கள் அந்தப் பல்லக்குக்கு முன்னால் அணிவகுத்து வந்தன. அதன் முன்னால், ராணுவ வீரர்கள் பேண்ட் வாத்தியம் முழங்கி வந்தனர்.

மணமகன் 'பாபி’ ரயிலில் வந்து சேருவதால் ரயில் நிலைய வாசலில் அந்த நாயை எதிர்கொண்டு அழைக்க, அரண்மனையின் முக்கியப் பிரமுகர்கள் மாலையோடு காத்திருந்தனர். மணமகனுக்குப் பட்டாடை, மாலைகள் சூட்டப்பட்டு தங்கக் காப்பு அணிவிக்கப்பட்டது. 

எனது இந்தியா ( திருத்த வேண்டிய வரலாறு! ! ) - எஸ். ராமகிருஷ்ணன்....



லோதல் நகரத்தின் கிழக்கு முகமாக அமைந்திருக்கும் செங்கல் சுவர் அமைப்பு வர்த்தகக் கலங்கள் வந்து நிற்கக்கூடிய ஓர் அமைப்பு என்கிறார் ராவ். ஆனால், தோர் மற்றும் ஹெய்டர்தால் உள்ளிட்ட மற்ற வரலாற்று ஆய்வாளர்கள் இதை மறுக்கின்றனர். பெரும்பாலான அகழ்வாராய்ச்சியாளர்கள், இந்த அமைப்பு தண்ணீர் சேகரிப்பதற்கான சாதாரணத் தொட்டியாகத்தான் இருந்திருக்க வேண்டும் என்று கருதுகிறார்கள். ஆனால், ராஜிவ் நிகம் என்ற பரிசோதனையாளர், லோதாலில் கடல்நீர் சார்ந்த நுண்ணுயிரிப் படலங்களைக் கண்டறிந்து ஆய்வு செய்தபோது, அந்தச் செங்கல் சுவரமைப்பு குடிநீர் சேகரிக்கப் பயன்படவில்லை. கப்பல்கள் வந்து நிற்கவே பயன்பட்டது என்கிறார். இந்த வாதப் பிரதிவாதங்கள் இன்றும் தொடர்கின்றன.  

லோதலில் வசித்தவர்கள் அக்னியை வணங்கி இருக்கின்றனர். அங்கே, பலிச் சடங்குகள் நடைபெற்று இருக்கின்றன. கடல் அன்னையை வணங்கி விழா நடத்தி இருக்கிறார்கள். இறந்தவர்களை எரிக்கும் பழக்கமும் லோதலில் இருந்திருக்கிறது. கோலார் தங்கச் சுரங்கத்தில் இருந்து தங்கம் கொண்டுவரப்பட்டு இங்கே தங்க வளையல், மாலைகள் செய்யப்பட்டு இருக்கின்றன.

லோதல் கி.மு. 2,400 முதல் கி.மு. 1,900க்கு உட்பட்ட காலத்தைச் சேர்ந்ததாக இருக்கக்கூடும் என்கிறார்கள்.  லோதலுக்கும் தென் இந்தியாவுக்கும் இடையில் தொடர்பு இருக்கிறது எனக் கூறும் ஆய்வாளர் குரூமூர்த்தி, தனது 'சிந்து சமவெளி நாகரிகமும் தமிழர் நாகரிகமும்’ என்ற நூலில் சில விவரங்களைக் குறிப்பிடுகிறார். அதில், ''லோதல் மற்றும் அம்ரா ஆகிய நகரங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஹரப்பா பண்பாட்டுச் சின்னங்களுள், கறுப்பு சிவப்பு நிற மண் கலங்கள் காணப்படுகின்றன. ஹரப்பா பண்பாட்டுடன் கலந்து காணப்படும் இந்த மண் கலங்களை, அந்தப் பண்பாட்டின் இணை பிரியாக் கூறு எனக் கொள்ளலாம். அத்தகைய மண் கலங்கள் தென்னகத்தில் கணக்கிட முடியாத எண்ணிக்கையில் கண்டு பிடிக்கப்பட்டு இருக்கின்றன. எனவே, இந்த இரு பகுதிகளிலும் வாழ்ந்த மக்களிடமும் கருத்துப் பரிமாற்றம் இருந்திருக்க வேண்டும். அண்மையில், மைசூரில் உள்ள அல்லூரில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சி மூலம், கறுப்பு சிவப்பு மண் கல வகைகளின் காலம் கி.மு. 1000 எனத் தெரிய வந்துள்ளது. மேலும், கொற்கையில் இவற்றின் காலம் கி.மு. 785 எனவும், ஆதிச்சநல்லூரில் கி.மு. 1500 எனவும் தெரியவந்துள்ளது. இந்தத் தடயங்களைவைத்து ஒப்பிடுகையில், அந்தக் காலத்தில் திராவிடர் பண்பாடு இந்தியாவின் பல பகுதிகளில் பரவியிருந்தது என்பது புலனாகிறது'' என்கிறார் குரூமூர்த்தி.

சிந்து சமவெளியில் காணப்படாத குதிரை, லோதலில் காணப்படுகிறது. இங்கே கண்டு எடுக்கப்​பட்ட 23 விலங்கு சிற்பங்களில் ஒன்று குதிரையின் உருவம். ஆகவே, இது ஹரப்பா காலத்தின் கடைசி நிலையைச் சேர்ந்ததாக இருக்கக்கூடும் என்றும் ஒரு சாரார் கூறுகிறார்கள். லோதலை, சிந்து சமவெளி நாகரிகம் என்று சொல்வது தவறு. அதை, ஹரப்பா நாகரிகம் என்றே குறிப்பிட வேண்டும் என்று ஒரு பிரிவும், அதை சிந்து சரஸ்வதி நாகரிகம் என்று குறிப்பிட வேண்டும் என்று இன்னொரு பிரிவும் வாதம் செய்கின்றனர்.

குஜராத்தில் உள்ள லோதல் போல, தமிழகத்தில் பண்டைய வணிக நகரமாக விளங்கிய ஈரோட்டின் அருகில் உள்ள கொடுமணலும், அதுகுறித்த தொல்லியல் ஆய்வுகளும் இன்றும் முறையாகக் கவனப்படுத்தப்படவே இல்லை. நொய்யல் ஆற்றின் வடகரையில், ஈரோடு நகரில் இருந்து சுமார் 40 கிமீ தூரத்தில் உள்ளது கொடுமணல் தொல்லியல் களம். கொடு மணம் என்று சங்க காலத்தில் அழைக்கப்பட்ட இந்த இடம் பற்றிப் 'பதிற்றுப்பத்து’ என்னும் சங்க நூலில் குறிப்புகள் காணப்படுகின்றன. கொடுமணல் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு அதை உலகுக்கு அடையாளம் காட்டியவர் கல்வெட்டுஇயல் ஆய்வு அறிஞர் புலவர் இராசு.

கொடு மணலை அகழ்வாய்வு செய்து ரோமானியர்​களுடன் தொடர்புடையது நொய்யல் கரை நாகரிகம் என்று வெளிப்படுத்தியது இவர் கண்டுபிடிப்புகளுள் குறிப்பிடத்தகுந்த பணியாகும். தென் இந்தியாவில் மிக அரிதான பாடலுடன் கூடிய பழமங்கலம் நடுகல்லைக் கண்டறிந்தது இவரது இன்னோர் அரிய பணி. கொடுமணலில் 1961-ம் ஆண்டில் புலவர் இராசு, செல்வி முத்தையா ஆகியோர் அகழ்வாய்வு மேற்கொண்டனர். இங்கு உள்ள தொல்லியல் களம் 50 ஹெக்டேர் வரை பரந்துள்ளது. இதில் பெரும்பகுதி புதைகுழிகள் அடங்கிய புதைமேடாகக் காணப்படுகிறது. இதை ஒட்டி, குடியிருப்புப் பகுதிகள் இருந்தமைக்கான சான்றுகளும் காணப்படுகின்றன. பெருங் கற்காலப் பண்பாட்டுக்கு உரிய 300-க்கும் மேற்பட்ட இறந்தோருக்கான நினைவுச் சின்னங்கள் இங்கே கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றன.

கொடுமணல், இன்னமும் முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை. இந்தத் தொல்லியல் களத்தை, தமிழகத்தின் அரிய பண்பாட்டுச் சுரங்கமாகக் கருதுகின்றனர். 'கொடுமணம் பட்ட நெடுமொழி யக்கலொடு’ எனப் பதிற்றுப்பத்தில் குறிப்பு இருக்கிறது. கொடுமணம், பந்தர் ஆகிய இரண்டு கடலோரத் துறைமுகங்கள் பற்றி சங்க இலக்கியத்தில் குறிப்புகள் இருக்கின்றன. கொற்கை, பந்தர் ஆகிய இரண்டும் முத்து வணிகத்தில் புகழ்பெற்று விளங்கி இருக்கின்றன.

கொடு மணத்தில் வசித்த பாணர்கள், பந்தர் சென்று செல்வச் செழிப்பு உள்ள வாழியாதனிடம் தென்  கடல் முத்தும் அணிகலன்களும் பரிசாகப் பெற்று வந்தால், அவர்கள் கடன் தீர்ந்து சுகமாக வாழலாம் என்று கபிலர் பாடல் ஒன்று குறிப்பிடுகிறது. கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வரும் கொடுமணல் ஆய்வில் நாணயங்கள், முதுமக்கள் தாழி, பாசி மாலைகள், ஆபரணங்கள், மண் கலயங்கள், இசைக் கருவிகள், தொழிற் கருவிகள், பண்டைய தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மண் பாண்டங்கள், போர்க் கருவிகள், நெசவுத் தொழிற்சாலை இருந்த இடம், மணிகள் கோக்கும் தொழிற்சாலைகள், சங்கு அறுக்கும் தொழிற்கூடங்கள், இரும்பு உலைகலன் ஆகியவை கண்டறியப்பட்டு இருக்கின்றன.

கொடு மணலில் இரும்பு உருக்கு ஆலைகள் இருந்து இருக்கின்றன. இரும்பு மற்றும் தாமிர தாதுக்கள் இங்கு கிடைத்து இருக்கின்றன. இங்கு கண்டறியப்பட்ட தமிழ் பிராமிக் கல்வெட்டு ஒன்றை வாசித்துள்ள கல்வெட்டு அறிஞர் ஐராவதம் மகாதேவன், 'தண்ணீரும் வெந்நீரும் புகும் தாழி’ என எழுதப்பட்டுள்ளதாக கூறுகிறார். இன்று, சாயப்பட்டறைகளில் வெந்நீரும் தண்ணீரும் புகும் தாழி பயன்படுத்தப்படுகிறது. ஆகவே, இந்தத் தாழி ஒருவேளை இரும்பு உருக்கும் தொழிற்சாலையில் பயன்படுத்தப்பட்டு இருக்கக்கூடும் என்கிறார் ஐராவதம் மகாதேவன்.

பண்பாட்டு வளர்ச்சியும் பொருளாதார வளர்ச்சியும்​கொண்ட தொன்மையான நகரமாக விளங்கி இருக்கிறது கொடுமணல். பண்டைய தமிழர்கள் இரும்புக் கருவிகளை உருவாக்குவதில் தேர்ந்த அறிவுத் திறனுடன் இருந்திருக்கிறார்கள். கொடு மணலில் நெசவு நெய்யப் பயன்படும் தக்களி ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. அதன் தண்டு இரும்பாலும் வட்டம் சுடுமண்ணாலும் செய்யப்பட்டிருப்பது அதன் தொழிற்நுட்ப சாதனையைப் பறைசாற்றுகிறது. அதுபோலவே பட்டை தீட்டுதல், கற்கள் பதித்தல், அலங்கார வேலைப்பாடு என அணிகலன் உருவாக்குவதிலும் தேர்ந்தவர்களாக இருந்தனர். ஆப்கானிஸ்தான், ரோம் நகரங்களுடன் வணிக உறவுகள் இருந்தன. இரும்புத் தாதுக்கள், சென்னிமலைப் பகுதியில் இருந்து கிடைத்திருக்கின்றன. அதை உருக்குவதற்கு விசேஷமான உருக்கு உலைகளை அமைத்து இருக்கிறார்கள். உருக்கிய இரும்பைக்கொண்டு ஆயுதங்கள், விவசாயக் கருவிகள் போன்றவற்றை உருவாக்கி விற்பனை செய்திருக்கிறார்கள். இரும்பை உருக்கும் தொழில்நுட்பத்தில் தமிழர்கள் முன்னோடிகள் என்பதற்கு கொடுமணல் ஒரு சாட்சி.

இங்கு காணப்படும் புதைமேட்டில் முதுமக்கள் தாழிகள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்றில், பத்மாசன நிலையில் ஒரு எலும்புக்கூடு காணப்படுகிறது. சுடுமண் பாண்டங்களில் தமிழ் பிராமி மற்றும் பிராகிருத எழுத்து வடிவங்கள் காணப்படுகின்றன. சம்பன், ஸுமநன், ஊரணன், சந்துவன், மாத்தன், ஆதன் முதலான பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. வணிக மையமாகக் கொடுமணம் இருந்த காரணத்தால், வட இந்தியாவில் இருந்து வணிகர்கள் வந்திருக்கக்கூடும். ஆகவே, இங்கு காணப்படும் தமிழ் எழுத்துக்களில் பிராகிருதக் கலப்பு ஏற்பட்டுள்ளது என்கிறார்கள்.

வரலாற்று ஆய்வாளர் இராம.சுந்தரம் தனது கட்டுரை ஒன்றில், தமிழ்ப் பண்பாட்டைப் புரிந்துகொள்ள கொடுமணல் ஆய்வுகள் எப்படி உதவுகின்றன என்பதைக் குறிப்பிடுகிறார். ''அந்தக் காலத்தில் சமன்செய் கருவிகள், விதைப்புக் கருவிகள், இறைப்புக் கருவிகள், பயிர்காப்புக் கருவிகள், அறுவடைக் கருவிகள், பதன்செய் கருவிகள் என உழவுக் கருவிகளை பாகுபடுத்துவார்கள். பண்டைத் தமிழர்கள் நாஞ்சில் என்ற கலப்பையைப் பயன்படுத்தி உழுதனர். கலப்பையின் நுகத்தடியில் கொழுவும் இருக்கும். கொழு என்பது நிலத்தைப் பிளந்து உழக்கூடியது. பரம்படிக்கப் பயன்படும் கருவியின் பெயர் தளம்பு. ஏத்தம், ஆம்பி, பத்தர், கிழார், முகவை முதலியன நீர் இறைப்புக் கருவிகள். புன்செய் நிலத்துக் களையை நீக்க, துளர் என்ற கருவியைப் பயன்படுத்தினர். தண்ணுமை, குளிர், தட்டை, தழலை, கவண், அடார் முதலியன பயிர் பாதுகாப்புக் கருவிகளாகும். அடார் என்பது கற்பொறி. கருங்கல் பலகையை ஒரு பக்கமாகச் சாய்த்துக் கீழே முட்டுக்கொடுத்து உணவை உள்ளே வைத்திருப்பர். உணவை உண்ண வரும் விலங்கு அந்த முட்டைத் தொட்டவுடன் கல் விழுந்து அதனுள் மாட்டிக்கொள்ளும், இதுபோன்ற விவசாயக் கருவிகள் செய்வதில் தமிழ் மக்கள் முன்னோடியாக விளங்கி இருக்கின்றனர்.

இரும்புத் தொழில்நுட்பம் மனிதகுல வரலாற்றில் ஒரு மாபெரும் வளர்ச்சிப் போக்கை ஏற்படுத்தியது. கி.மு. 1000-த்தை ஒட்டியே இந்தியாவில் இரும்பு அறிமுகம் ஆனது. கர்நாடகத்தில் உள்ள ஹல்லூர் பகுதியில் கி.மு. 950-ஐ ஒட்டிய இரும்புப் பொருட்கள் கிடைத்து இருக்கின்றன. தமிழ்நாட்டில் ஆதிச்ச நல்லூரிலும், பெருமாள் மலையிலும் இதே காலத்தை ஒட்டிய இரும்புப் பொருட்கள் கிடைத்து இருக்கின்றன. தமிழகத்தில் கி.மு. 700 முதல் கி.பி 200 வரை இரும்புக் காலம் எனலாம். சங்க காலத்தில் இரும்பு நன்கு பயன்படுத்தப்பட்டு வந்தது என்பதற்குச் சங்கப் பாடல்கள் சான்று தருகின்றன. கொடுமணல் அகழ்வாய்வு இதை முழுமையாக உறுதிப்படுத்துகிறது'' என்கிறார்.

தமிழகத்தில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட இடங்களில் அகழாய்வுகள் நடந்து இருக்கின்றன. இதுவரை நடந்த ஆய்வுகளில் கிடைத்த தொல்லியல் சான்றுகள், கல்வெட்டுக்கள், ஆவணங்கள் அனைத்தையும் சேர்த்து விரிவாக நேர்மையாக தமிழக வரலாறு திருத்தி எழுதப்பட வேண்டும். அதுதான் இன்றைய முக்கியத் தேவை.


அருள்வாக்கு - தூய்மை!



உடல், எடை இவற்றுக்கு மேலாக ஒன்று இருக்கிறது. அதுதான் உள்ளம், மனம் என்பது. மனச்சுத்தம், உள்ளத் தூய்மைதான் மிகமிக முக்கியம். அது இல்லாமல் உடம்பும், உடுப்பும் எவ்வளவு தூய்மையாக இருந்தாலும் பயனேயில்லை. மனசிலே அழுக்குப் படியாமல் அதை அவ்வப்போது தேய்த்துக் கழுவிக் குளிப்பாட்டிக் கொண்டே இருக்கவேண்டும்.

மனசுக்கு ஏற்படுகிற அழுக்கு என்பது என்ன? தப்பு, தவறு செய்வதுதான் உள்ளத்துக்கு அழுக்கு. நாம் செய்கிற காரியங்களில் தவறு ஏற்படக் கூடாது. அதாவது கெட்ட நோக்கங்களுக்காகக் காரியம் செய்யவே கூடாது.

ஆனாலும் காரியம் என்று வந்துவிட்டால் நல்லதைச் செய்கிற போதுகூட அதிலே சில தப்பு, தவறுகள் நேர்ந்து விடலாம். இதனால் பெரிய குற்றம், அதாவது தோஷம் இல்லை. ரொம்பப் பெரியவர்கள் கூட எவ்வளவோ நல்ல காரியங்கள் செய்கிறபோது அவர்களையும் கொஞ்சம் சறுக்கிவிட்டிருக்கிறது. நாமே எல்லாம் செய்து கொள்ள முடியும் என்று கர்வப்படாமல், பகவான் துணையால்தான் எதையும் சாதிக்க முடியும் என்று நாம் உணருவதற்காகவே இப்படிச் சில தவறுகள் நேர்ந்துவிடுகின்றன. இம்மாதிரி சமயங்களில் நீங்கள் பகவானை வேண்டிக் கொள்வதுதான் சரி. அதுவே அழுக்கைக் கழுவிவிடும்.

- ஜகத்குரு காஞ்சிகாமகோடி ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

சில்லறை வர்த்தகத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள்...


1942-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி... அன்று வெள்ளையனே வெளியேறு போராட்டத்தை நம்மில் பெரும்பாலானோர் பார்த்திருக்க வாய்ப்பு இல்லை. ஆனால், அதற்கு நிகரான ஒரு போராட்டம் இப்போது இந்தியா முழுவதும் நடந்துகொண்டிருக்கிறது. ரீடெய்ல் துறையில் அந்நிய முதலீட்டை எதிர்க்கும் போராட்டம்தான் அது.
 
சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கலாமா, கூடாதா என கடந்த பல ஆண்டு காலமாக விவாதித்துக் கொண்டிருந்த மத்திய அரசு, மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகளிலிருந்து பலமான எதிர்ப்பு கிளம்பிய பிறகும், அவர்கள் அளித்துவந்த ஆதரவு போனாலும் பரவாயில்லை, எடுத்த முடிவில் உறுதியாக இருப்போம் என்கிற துணிவோடு கடந்த வாரம் வியாழக்கிழமை அன்று சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் அரசு அறிவிப்பை முறைப்படியாக வெளியிட்டது. இந்த வர்த்தகத்தில் இது ஒரு பெரும் புரட்சி என்றே விளம்பரம் செய்திருக்கிறது மத்திய அரசாங்கம். இதற்கு நடுவே, அரசாங்கத்தின் இந்த முடிவுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பல்வேறு கருத்துகள் மக்களிடம் புழங்க ஆரம்பித்தன. காரணம், மீடியாக்களிலும் சமூக வலைதளங்களிலும் இதுபற்றி கடுமையாக விவாதிக்கப்பட்டன. வால்மார்ட், டெஸ்கோ, கேரிஃபோர் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தியாவில் கால் பதிக்கும்பட்சத்தில் சிறு வியாபாரிகள் எப்படி எல்லாம் பாதிக்கப்படுவார்கள்:(
 
முதலில் அந்நிய முதலீட்டுக்கு ஆதரவாகச் சொல்லப்படும் கருத்துகளைப் பார்ப்போம்.
 
 

இந்திய ரீடெய்ல் துறையில் சுமார் 6-8% வரை மட்டுமே ஆர்கனைஸ்டு நிறுவனங்களின் கையில் இருக்கிறது. மீதம் பரம்பரை பரம்பரையாக வணிகம் செய்பவர்களிடமும், சிறுவணிகர்களிடமும்தான் இருக்கிறது. அந்நிய நேரடி முதலீட்டில் தொடங்கப்படும்  கடைகள் பத்து லட்சத்துக்கு மேல் மக்கள் தொகை இருக்கும் நகரங்களில் தான் அனுமதிக்கப்படும். அப்படிப் பார்த்தால் 2011 மக்கள் தொகை கணக்கின்படி, இந்தியாவில் 53 நகரங்கள்தான் பத்து லட்சத்துக்கு மேலான மக்கள் தொகையை கொண்டிருக்கிறது. ஒடிஷா உள்ளிட்ட சில மாநிலங்களில் 10 லட்சத்துக்கு மேல் மக்கள் தொகை இருக்கும் நகரங்களே இல்லை. ஆக, வெறும் 53 நகரங்கள் சம்பந்தப்பட்ட விஷயத்தை ஒட்டுமொத்த இந்தியாவுக்கே உரிய பிரச்னையாக பூதாகரமாக ஆக்கிக் காட்டுகிறார்கள்.

இந்தோனேஷியா உள்ளிட்ட பல நாடுகளில் பல ஆண்டுகளுக்கு முன்பே ரீடெய்ல் துறையில் அந்நிய முதலீடு அனுமதிக்கப்பட்டது. ஆனால், அங்கு இன்னும் 70 சதவிகிதத்துக்கு மேலான வர்த்தகம் இன்னும் சிறுவணிகர்களிடம்தான் இருக்கிறது. சீனா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் அந்த துறை நன்றாக வளர்ந்திருக்கிறது. மேலும், இந்தியாவில் ஆங்காங்கே அமைக்கப்படும் கடைகள் எப்படி ஒட்டுமொத்த இந்திய ரீடெய்ல் துறையையே மாற்றி அமைக்கும் என்று புரியவில்லை.

மேலும், அந்நிய நிறுவனங்கள் இந்தியாவை மொத்தமாக சுரண்டி லாபம் சம்பாதிக்கும் என்பது உண்மையில்லை. ஏற்கெனவே இப்போது இருக்கும் முக்கியமான பிராண்டட் ரீடெய்ல் நிறுவனங்கள் பல தங்களது கடையை இழுத்து மூடிவருகின்றன. அவர்கள் விரிவாக்கப் பணிகளை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். அவர்கள் இன்னும் லாபமே சம்பாதிக்க ஆரம்பிக்கவில்லை. இப்படிப்பட்ட நிலையில் வெளிநாட்டு நிறுவனங்கள் வந்து எல்லோரையும் ஒழித்துவிடும் என்று சொல்வதெல்லாம் அதீதமான கற்பனைதான்.

அந்நிய நிறுவனங்கள் பிஸினஸ் செய்வதற்கும் நாம் பிஸினஸ் செய்வதற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது. இந்தியா ஒரு பரந்துபட்ட நாடு. தினந்தோறும் தேவைக்கு ஏற்ப மளிகை வாங்குபவர்களும் இருக்கிறார்கள். வாரத்துக்கு, மாதத்துக்கு ஏற்ப பொருட்களை வாங்குபவர்களும் இருக்கிறார்கள். அதாவது, ஏழைகளும் நடுத்தர மக்களும்தான் நம் நாட்டில் அதிகம். இவர்களின் தேவையை நிறைவேற்ற எங்களை போன்ற கடைக்காரர்களால்தான் முடியும். பத்து பட்டாணிக் கடை இருந்தாலும் பதினோறாவதாக இன்னொரு கடை போட்டால் இங்கு வியாபாரம் நடக்கும். அது ஒரு பிரச்னையே இல்லை.  

ஆனால், வெளிநாட்டு நிறுவனங்கள் எல்லா ஊர்களிலும் வரமாட்டார்கள். ரீடெய்ல் கடைகளுக்கு வரும் மக்கள் அந்தந்த ஏரியாவைச் சேர்ந்த மக்களாகவே இருப்பார்கள். அதிகபட்சம் ஒரு கிலோ மீட்டருக்கு மேல் சென்று மளிகை வாங்குவதெல்லாம் நடக்காத காரியம். அவர்களுடன் போட்டி போட்டு ஜெயிக்கும்பட்சத்தில் எங்களுக்கு மக்கள் மத்தியில் இன்னும் நல்ல பெயர் கிடைக்கும்.

என்றாலும் அந்நிய நாட்டு நிறுவனங்களை டாடா, பிர்லா, ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களுடன் ஒப்பிட முடியாது. காரணம், இந்த நிறுவனங்களின் முக்கிய பிஸினஸ் ரீடெய்ல் ஸ்டோர் நடத்துவது கிடையாது. அவர்களிடத்தில் இருக்கும் பல பிஸினஸ்களில் இதுவும் ஒன்று, அவ்வளவுதான். அதனால்தான் அவர்களால் சிறப்பாக நடத்த முடியவில்லை. ஆனால், இப்போதுவரும் அந்நிய நிறுவனங்களுக்கு அதுதான் முக்கிய பிஸினஸ். அதனால் அவர்கள் மிகத் தெளிவாக இருப்பார்கள். இதனால் ஆரம்ப கட்டத்தில் நாங்கள் பல சவால்களை சந்திக்க வேண்டி இருக்கும். குறிப்பாக ஆட்களின் சம்பளம், ஷிஃப்ட் முறை கொண்டுவருவது, டெக்னாலஜியில் மாற்றங்களை கொண்டுவருவது உள்ளிட்ட பல வேலைகளை நாங்கள் செய்தாக வேண்டும். இது ஆரோக்கியமானதுதான். எல்லாவற்றுக்கும் மேலாக எங்கள் ஊரில் யார் வந்தாலும் எங்களால் ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு நிறையவே இருக்கிறது''.


 ''சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடே தேவை இல்லை. இது தேசத்தையே விற்பதற்கான முயற்சிகளில் ஒன்று. 1991-ம் ஆண்டு இந்தியர்களின் சேமிப்பு ஜி.டி.பி.யில் 18%. ஆனால், இப்போது 36%. இத்தனை வருட இடைவெளியில் நமது சேமிப்பு இரட்டிப்பாகி இருக்கிறது. ஆனால், இந்த சேமிப்பு முதலீடாக மாறவில்லை. நம்மிடத்தில் சேமிப்பு இல்லை என்கிறபட்சத்தில் அந்நிய முதலீட்டை வரவேற்பதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால், இவ்வளவு சேமிப்பு இருந்தும், அதை இந்த அரசு முதலீடாக மாற்ற முயற்சிக்கும் வழியை, நம்பிக்கையை உண்டாக்காமல் அந்நிய முதலீட்டை கொண்டுவருவதில் என்ன நியாயம்?

அந்நிய முதலீடு வரும்பட்சத்தில் ஒரு கோடி வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. ஆனால், சில்லறை வர்த்தகத்தை நம்பி இருக்கும் பத்து கோடி தொழில்முனைவோர்களுக்கு என்ன வேலை கொடுக்கப் போகிறார்கள். மேலும், இந்தியாவின் முக்கியமான நகரங்களில்தான் இந்த நிறுவனங்கள் ஆரம்பிக்க போவதாகச் சொல்கிறார்கள். ரீடெய்ல் துறையின் பிஸினஸ் பெருநகரங்களில்தானே நடக்கிறது? 

இந்தக் கடைகள் வரும்பட்சத்தில் இடைத்தரகர்கள் தேவை இல்லை; விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும் என்கிறார்கள். அந்நிய முதலீடு வரும்பட்சத்தில் விவசாயிகளுக்கு தரும் மானியத்தை மத்திய அரசு ரத்து செய்துவிடுமா? முடியாதே! மக்களின் வரிப் பணம், விவசாயிகளுக்கு மானியம் என்கிற பெயரில் வால்மார்ட் போன்ற நிறுவனங்களுக்குப் போகப் போகிறது.

மேலும், இந்த நிறுவனங்களிடம் இருக்கும் பணபலத்தால் சில பொருட்களை அவர்களிடத்தில் மட்டுமே கிடைக்குமாறு பார்த்துக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. அவர்களிடத்தில் குறைவான அளவுகொண்ட பொருட்கள் இருக்காது. ஆஃபர் என்கிற பெயரில் கிலோ கணக்கில் பல பொருட்களை நாம் வாங்கி வைத்திருப்போம். இப்போதும் அதுதான் நடக்கப் போகிறது. நம்மூர் ரீடெய்ல் நிறுவனங்களைவிட பல மடங்கு பெரிய நிறுவனங்கள் நம் வணிகர்களை விழுங்கும் வாய்ப்பே அதிகம். இதனால் நமது இந்திய வாழ்க்கை முறையே மாறுவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது'' 
 
 

ஆனாலும், ரீடெய்ல் துறையில் அந்நிய முதலீட்டை நமது இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள் வரவேற்கவே செய்கின்றன. காரணம், வெளிநாட்டு நிறுவனங்கள் 51 சதவிகிதம்தான் வைத்திருக்க முடியும். மீதியை ஏதாவது ஒரு இந்திய நிறுவனத்திடமிருந்துதான் வாங்க வேண்டி இருக்கும். ஏற்கெனவே நஷ்டத்தில் இருக்கும் அவர்கள் இதை விரும்புவதில் ஆச்சர்யமில்லை.
 

சமையல் எரிவாயு... சிக்கனமா பயன்படுத்துவது எப்படி?


னி ஆண்டுக்கு ஆறு கேஸ் சிலிண்டர்தான் மானிய விலையில் கிடைக்கும் என மத்திய அரசு தடாலடியாக அறிவித்தது கண்டு அதிர்ந்து போயிருக்கிறார்கள் குடும்பத் தலைவிகள். ஆறு கேஸ் சிலிண்டருக்கு மேல் தேவைப்படுமெனில், ஒரு கேஸ் சிலிண்டர் 733 ரூபாய் தந்துதான் வாங்க வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.வருடத்திற்கு ஆறு கேஸ் சிலிண்டர் எப்படி போதும்; குறைந்தது பத்து கேஸ் சிலிண்டராவது வேண்டும் என்கிற கோரிக்கை இந்தியா முழுக்க எழுந்துள்ளது. சிலிண்டர்களின் எண்ணிக்கையை எட்டாக உயர்த்தலாமா அல்லது ஆறு சிலிண்டர் என்கிற அறிவிப்பையே வாபஸ் வாங்கிவிடலாமா என மத்திய அரசு யோசித்து வருவது ஒருபக்கமிருக்க, சமையல் எரிவாயுவை சிக்கனமாகப் பயன்படுத்துவது எப்படி..? மாறிவிட்ட கலாசார சூழலில் இனி விறகு அடுப்புக்கு மாறுவது சாத்தியமே இல்லை என்கிறபோது, சமையல் எரிவாயுக்கு வேறு என்னதான் மாற்று என்பதைப் பற்றி விளக்கமாகப் பார்ப்போம்.  

மின்சார அடுப்பு!
மின்சார அடுப்பை பயன்படுத்துவது கேஸ் சிலிண்டருக்கு ஒரு சிறந்த மாற்று. ஒரு கேஸ் சிலிண்டர் குறைந்தது 45 நாள் வருகிறது என வைத்துக் கொள்வோம். ஒரு கேஸ் சிலிண்டர் ரூ.386.50 விலை எனில், சராசரியாக ஒரு நாளைக்கு ரூ.8.50 செலவாகும். அதே ஒரு கேஸ் சிலிண்டர் 733 ரூபாய்க்கு வாங்கினால் ஒரு நாளைக்கு ரூ.16.28 செலவாகும்.

மின் அடுப்பின் மூலம் ஒரு நாளைக்கு ஒரு குடும்பத்திற்குத் தேவையான சாதம், சாம்பார், பொரியல், டீ, பால் காய்ச்சுவது, இட்லி அல்லது தோசை என மூன்று வேளையும் செய்ய ஒரு நாளைக்கு அதிகபட்சம் இரண்டு மணி நேரம் ஆகும். ஒரு மணி நேரத்திற்கு மின் அடுப்பில் 1,000 வாட் பவரில் வைத்து தொடர்ந்து ஒரு மணி நேரம் சமைத்தால் ஒரு யூனிட் மின்சாரம் செலவாகும். அதாவது, ஒரு நாளைக்கு 2 யூனிட் மின்சாரம் செலவாகும்.

உங்களின் வீட்டில் அதிகபட்சமாக 500 யூனிட்டுக்குள் மின்சாரம் பயன்படுத்தினால், நீங்கள் ஒரு யூனிட்டுக்கு 3 ரூபாய் மின் கட்டணம் கட்ட வேண்டியிருக்கும். அதாவது, மின் அடுப்பிற்காக ஒரு மாதத்திற்கு ரூ.180 உங்களுக்குச் செலவாகும். ஒரு வருடத்திற்கு அதிகபட்சமாக ரூ.2,160 செலவாகும். ஆனால், மானியம் மற்றும் மானியமில்லாத விலையில் ஆண்டுக்கு 10 கேஸ் சிலிண்டர் வாங்கினால் 5,251 ரூபாய் செலவாகும். இதனோடு ஒப்பிட்டால் மின் அடுப்புக்கு நீங்கள் செய்யும் செலவு  மிகக் குறைவுதான்.

ஆனால், நீங்கள் சொந்த வீட்டில் இருந்தால் மட்டுமே இந்த கணக்கு சரிவரும். நீங்கள் வாடகை வீட்டில் இருந்து, ஒரு யூனிட்டுக்கு 6 முதல் 8 ரூபாய் தரும்பட்சத்தில், அதற்காகும் செலவை நீங்கள் கேஸ் வாங்கி பயன்படுத்திவிடலாம்.

எலெக்ட்ரிக் குக்கர்!

சாதம், பிரியாணி, பொங்கல் செய்ய மட்டுமே எலெக்ட்ரிக் குக்கர் பயன்படுத்தப்படுகிறது. இதில், சாதம் வேக குறைந்தபட்சம் 30 முதல் 45 நிமிடங்கள் ஆகின்றன. மின் அடுப்புக்குச் செலவாகும் அதே அளவு மின்சாரம்தான் இதற்கும் தேவைப்படும். ஆவியில் வேக வைக்கும் பொருட்களை இதில் வேக வைத்து எடுத்துக் கொள்ளலாம்.

மைக்ரோவேவ் அவன்!

மைக்ரோவேவ் அவன் - இன்று கணிசமான குடும்பங்களில் இதைத்தான் பயன்படுத்துகிறார்கள். இதில் டீ, காபி போட்டுக்கொள்ளலாம். ஃபிரிட்ஜில் வைத்த உணவுப் பொருட்களை சூடுபடுத்தவும் பயன்படுத்திக்கொள்ளலாம். இதற்கான நேரம் என்பது மிக மிக குறைவாக இருக்கும். ஆனால், இதற்கென இருக்கும் பிரத்யேகமான பாத்திரங்களை மட்டுமே பயன்படுத்த முடியும்.


மாற்று வழிகளைப் பற்றி யோசிப்பது ஒருபக்கமிருக்க, சமையல் எரிவாயுவை சிக்கனமாகப் பயன்படுத்தும் முறைகளை பார்ப்போம். காரணம், சில எளிமையான நடைமுறைகளை பயன்படுத்தினாலே அரசு தரும் ஆறு சிலிண்டர்களை வைத்து, ஆண்டு முழுவதையும் ஓட்டிவிடலாம் என்கிறார்கள் ஆயில் நிறுவன அதிகாரிகள். அவர்கள் தரும் டிப்ஸ்கள் இதோ உங்களுக்கு:

சமையலுக்குத் தேவையான அத்தனை பொருட்களையும் தயார் செய்து வைத்துக்கொண்டு அடுப்பை ஆன் செய்வது அவசியம்.

அடிக்கடி ஆஃப், ஆன் செய்வதால்  அதிக கேஸ் செலவாகும். எனவே, அதை தவிர்ப்பது நல்லது.

அகலமான பாத்திரத்தை வைத்து சமைத்தால் எரிபொருள் வீணாகாது.

தண்ணீரை கொதிக்க வைத்து சாதம் வடிக்காமல், குக்கரில் சமைப்பது ஒரு வழி. அதோடு ஒரே குக்கரில் காய்கறி, பருப்பு, அரிசி என தனிதனிப் பாத்திரத்தில் வைத்து சமைக்கலாம். கேஸ் அதிகமாக மிச்சமாகும்.

வெந்நீர் வைப்பதற்கு கேஸ் அடுப்பை பயன்படுத்தக்கூடாது. வெந்நீர் தயாரிக்க என எலெக்ட்ரிக் கொதிப்பான்கள் உள்ளன. அதையே வாங்கி பயன்படுத்தலாம்.

 டீ, காபி அடிக்கடி போடுவதற்குப் பதில்,  மொத்தமாகப் போட்டு ஃபிளாஸ்கில் வைத்து குடிக்கலாம்.

ஃபிரிட்ஜில் வைத்திருந்த பால் மற்றும் பொருட்களை சிறிது நேரம் வெளியே வைத்து அறை வெப்ப நிலைக்கு வந்தபிறகு சூடுபடுத்தலாம்.

எனது இந்தியா ( சிந்துசமவெளியும் லோதலும்! ) - எஸ். ராமகிருஷ்ணன்....


ரலாற்றைத் தனக்குச் சாதகமாக்கிக்கொள்ளவும், முடியாதபோது அதை அழித்து ஒழித்துவிடவுமே அதிகாரம் விரும்புகிறது. வரலாற்றைத் திருத்தி எழுதும் முயற்சிகளுக்குத் தடையாக இருப்பவை புராதனச் சின்னங்களும், கல்வெட்டுக்களும், அகழாய்வுச் சான்றுகளுமே ஆகும். ஆகவே, அவற்றை அழித்துவிட்டால் விரும்பியபடி ஒரு வரலாற்றை உருவாக்கிக்கொள்ளலாம் என்ற எண்ணம் அரசியல் உலகில் இருக்கிறது. ஆனால், ஊதினால் உடைந்துவிடும் நீர்க்குமிழி போல, வரலாறு எளிதாக மறைந்துவிடாது.

வரலாற்றை ஆய்வு செய்வது என்பது உண்மையைக் கண்டறியும் ஒரு பரிசோதனை. வரலாற்றைப் புரிந்துகொள்ள அறிவியல்பூர்வமான சிந்தனையும், திறந்த மனதும், கூர்மையான அவதானிப்புகளும், தொடர்ந்த தேடுதலும் வேண்டும். வரலாற்றுச் சின்னங்களை அறிந்துகொள்வதிலும் பராமரிப்பதிலும் எப்போதுமே அலட்சியமாகவே இருக்கிறோம். வரலாறு என்பது பெருமை அடித்துக்கொள்வதற்கு மட்டுமே நமக்குத் தேவைப்படுகிறது.

மனிதப் பண்பாட்டின் வளர்ச்சி பற்றியோ, இந்தியாவின் சமூக, கலாசார, பொருளாதார நிலைகள் எப்படிக் காலம்தோறும் மாறி வந்திருக்கின்றன என்பதைப் பற்றியோ, பண்பாட்டு வரலாற்றைப் புரிந்துகொள்ளுதல் குறித்தோ, பெரும்பான்மையினர் அக்கறை காட்டுவதே இல்லை. கலைப் பொருட்களைத் திருடி விற்பது, கல் குவாரிகள், முறையற்ற பராமரிப்புப் பணிகள், ஆக்கிரமிப்பு, அலட்சியமாக உடைத்தெறிவது எனப் பல்வேறு மோசமான செயல்பாடுகளால் நம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அரிய ஓவியங்கள், சிற்பங்கள், கல்வெட்டுக்கள், பட்டயங்கள், கலைப் பொருட்கள், நினைவுச் சின்னங்கள் ஆகியவை கண் முன்னே அழிக்கப்பட்டு வருகின்றன.

மத்திய அகழ்வாய்வுத் துறை, இந்தியா முழுவதும் 3,685 இடங்களைப் புராதன நினைவுச் சின்னங்களாகப் பராமரித்துவருகிறது. தமிழகத்தில் 411 இடங்கள் இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறையின் பாதுகாப்பில் இருக்கின்றன. ஆனால், இவற்றை முறையாகப் பாதுகாக்க போதிய காவலர்கள் கிடையாது. நேரடியாகப் பார்வையிடச் செல்பவர்கள் அங்கே அடிப்படைத் தகவல்களைக்கூட அறிந்துகொள்வது சிரமம். தொல்லியல் களங்களைக் கண்டுபிடித்தல், அவற்றில் அகழ்வாய்வு செய்தல், வகைப்படுத்துதல், பகுப்பாய்தல், பேணிக் காத்தல் ஆகியவையே தொல்லியல் துறையின் முக்கியப் பணிகள். கட்டடக் கலை, தொல் பொருட்கள், தொல்லுயிர்களின் எச்சங்கள், மனித எலும்புகள் மற்றும் நிலத் தோற்றங்கள் உள்ளிட்ட எஞ்சிய பொருட்களை முறையாக வெளிக்கொணர்ந்து ஆவணப்படுத்தி, பகுப்பாய்வு செய்வதன் மூலம் மனிதப் பண்பாட்டு வளர்ச்சியை அறிந்துகொள்வதற்கு அகழ்வாய்வுத் துறை உதவி செய்கிறது.

இன்னமும் முழுமையாக ஆய்வு மேற்கொள்ளப்படாத புராதன இடங்கள், இந்தியாவில் நிறைய இருக்கின்றன. அவற்றில் அகழ்வாய்வு மேற்கொள்ளப் போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை என்று தொல்லியல் துறை கூறுகிறது. அதே நேரம், கண்டறியப்பட்ட வரலாற்று உண்மைகள் பலவும் இன்றும் முறையாகக் கவனப்படுத்தப்படவில்லை. உதாரணமாக, சிந்து சமவெளி பற்றிக் குறிப்பிடும்போது மொகஞ்சதாரோ மற்றும் ஹரப்பா மட்டுமே முன்னிறுத்தப்படுகின்றதே அன்றி ஹரப்பா நாகரிகத்தைச் சேர்ந்த லோதல், அடையாளம் காட்டப்படுவது இல்லை.

இதற்கு முக்கியக் காரணம் மார்டிமர் வீலர். அவர்தான் சிந்து சமவெளி பற்றிய வரலாற்றுக் கவனத்தை ஏற்படுத்தியவர். மொகஞ்சதாரோ, ஹரப்பா இரண்டை மட்டுமே பிரதானமாகக்கொண்டு சிந்து சமவெளி நாகரிகம் பற்றி மார்டிமர் வீலர் ஆய்வு செய்தார். ஆகவே, அவரது ஆய்வுகளின் வழியாக முன்வைக்கப்பட்ட கருதுகோள்களை அப்படியே பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்த இந்தியக் கல்வித் துறை தனதாக்கிக்கொண்டது. அதுதான் முக்கியக் கோளாறு.

சுதந்திரத்துக்குப் பிறகு, இந்தியத் தொல்லியல் துறை சிந்து சமவெளி நாகரிகம் குறித்து தீவிரமாக ஆய்வு செய்யத் தொடங்கியது. காரணம் மொகஞ்சதாரோ, ஹரப்பா போன்ற தொல் நகரங்கள் இந்தியப் பிரிவினையின்போது பாகிஸ்தானுக்குப் போய்விட்டன. ஆகவே, இந்தியா தனது புராதனத்தை அடையாளம் காட்டும் நினைவுச் சின்னங்களை தீவிரமாக ஆய்வு செய்யத் தொடங்கியது. ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் நடந்த இந்தக் கள ஆய்வில் கனேரிவாலா, ராக்கிகார்ஹி காலிபங்கன், ரூபர், தோலவீரா, லோதல் என ஆறு முக்கிய இடங்கள் கண்டறியப்பட்டன. இவை, ஹரப்பா காலகட்டத்தைச் சேர்ந்தவை. சிந்து நதிக் கரையில்தான் நாகரிகம் பிறந்தது என்ற பொதுக் கருத்துருவாக்கத்தை இந்தக் கண்டுபிடிப்புகள் மாற்றி அமைத்தன. காரணம், இவை சிந்து நதிக் கரையில் இல்லை. சபர்மதி மற்றும் நர்மதா ஆற்றில் அமைந்து இருக்கின்றன. ஹரப்பா நாகரிகம் பல ஆயிரம் சதுர கிலோ மீட்டருக்கு விரிந்து பரந்து இருந்திருக்கிறது என்ற புதிய வெளிச்சத்தை இந்தக் கண்டுபிடிப்புகள் உலகுக்கு அறிவித்தன.

குஜராத்தில் காணப்படும் இந்த ஆய்விடங்கள், ஒரு தொன்மையான நாகரிகம் சிந்து சமவெளிக்கு அப்பாலும் இருந்திருக்கிறது என்பதையே அடையாளம் காட்டுகின்றன.

இந்த ஆய்விடங்களில் லோதல் மிகவும் தனித்துவமானது. காரணம், இது ஒரு துறைமுக நகரம். கப்பல் கட்டுமானம் மற்றும் கடற்சார் வணிகத்தில் இந்தியா முன்னோடியாக விளங்கியதற்கு லோதலை சாட்சியாகக் கூறுகிறார்கள். அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள தோல்கா தாலுகாவின் சரகவாலா கிராமத்தின் அருகே லோதல் உள்ளது. லோதல் என்றால், மரண மேடு என்று அர்த்தம். 1955-ம் ஆண்டு குஜராத்தில் உள்ள லோதலில் எஸ்.ஆர்.ராவ் தலைமையில் ஒரு குழு அகழ்வாய்வு  அப்போது, அங்கே ஒரு பழைமையான மேடு, அழிந்துபோன நகரத்தின் மிச்சங்கள் மற்றும் ஒரு சந்தை இருந்த இடம் ஆகியவை கண்டறியப்பட்டன.

லோதல், அன்றே ஒரு தொழில் நகரமாக இருந்திருக்கிறது. மணி மாலை செய்வது, கடல் சிப்பி, சங்குகளில் கலைப் பொருட்களைச் செய்தல், அணிகலன்களை உருவாக்குவது, இரும்புக் கருவிகளைச் செய்வது, சுடுமண் கலயங்கள் உருவாக்குவதுபோன்ற பணிகள் நடைபெற்று இருக்கின்றன. வெண்கலம் பிரதானமாகப் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. அங்கு கண்டெடுக்கப்பட்ட அம்புகள், கத்திகள், அலங்காரப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் யாவும் வெண்கலத்தில் செய்யப்பட்டு இருக்கின்றன.

லோதலின் முக்கிய இடம் அதன் படகுத் துறை. மிக நீளமான படகுகளை லோதல் மக்கள் பயன்படுத்தி இருக்கின்றனர். அங்கே இருந்து, கப்பலில் வணிகப் பொருட்கள் சுமேரியா வரை சென்றிருக்கிறது. கடலில் இருந்து நீரோடை வழியாகப் படகுகள் நகருக்குள் வந்து செல்லும்படி நகரம் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. கடலின் ஏற்ற இறக்கத்தைச் சாதகமாகக்கொண்டு படகுகள் உள்ளே வருவதும் வெளியேறுவதற்கும் வழி செய்யப்பட்டு இருப்பதே இதன் தனித்துவம்.

மொகஞ்சதாரோ, ஹரப்பா இரண்டின் அழிவுக்குப் பிறகும், பல ஆண்டு காலம் லோதல் செழுமையாக வளர்ந்தோங்கி இருந்திருக்கிறது. இயற்கைச் சீற்றமே அதன் அழிவுக்குக் காரணமாக இருந்திருக்கும் என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். லோதலில் கண்டறியப்பட்ட சுடுமண் கலயங்கள் தனித்துவம்கொண்டவை. அவை, லோதலுக்கு என்றே ஓவியம் தீட்டப்பட்ட சுடுமண் கலயம் உருவாக்கும் முறை ஒன்று இருந்திருப்பதைக் காட்டுகிறது. லோதலில் கண்டெடுக்கப்பட்ட பாத்திரம் ஒன்றில் ஒரு மரத்தில் காகம் இருப்பதுபோன்றும், அதன் அடியில் நரி காத்துக்கிடப்பது போலவும் ஓவியம் இருக்கிறது. இது, பஞ்ச தந்திரக் கதையின் ஒரு வடிவமாக இருக்கக்கூடுமோ என்று கருதுகின்றனர். லோதலில் செய்யப்பட்ட பாசி மாலைகள், அணிகலன்களுக்கு வெளிநாட்டில் பெரிய வரவேற்பு இருந்திருக்கிறது.

லோதல் பகுதியில் அடிக்கடி வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட காரணத்தால்,  வெள்ளத்தில் சேதம் அடையாத வண்ணம் கட்டமைப்பு உருவாக்கப்பட்டு இருக்கிறது. செங்கல் கட்டடங்கள்கொண்ட இந்த ஊர், மூன்று பிரிவாக அமைந்துள்ளது. நகரை ஆள்பவர்கள் ஒரு புறத்தில் தனியாக வசித்து இருக்கின்றனர். இன்னொரு பக்கம், சந்தை போன்ற வணிகப் பகுதி. சந்தையை ஒட்டி இரு பக்கமும் குடியிருப்புகள் காணப்படுகின்றன.

துறைமுகப் பகுதியே நகரின் பிரதானம். அங்கே, பொருட்களை ஏற்றி இறக்கவும் பாதுகாத்துவைக்கவும் உரிய வழிவகை செய்யப்பட்டு இருக்கிறது. நகர வீதிகள் அளவு எடுத்தாற் போல கச்சிதமாக உருவாக்கப்பட்டு இருக்கின்றன. இது, முறையான நகர நிர்வாகம் இருந்திருப்பதைக் காட்டுகிறது. வீடுகளில் குப்பைகளைப் போட்டுவைப்பதற்கு எனத் தனித் தொட்டிகள் இருந்திருக்கின்றன. அலை எழுச்சியின்போது நகருக்குள் புகுந்துவிடும் தண்ணீரை வெளியேற்றும் வசதிகள், பொதுக் குளியல் அறை மற்றும் முறையான சுகாதார ஏற்பாடுகள் காணப்படுகின்றன. சிந்து சமவெளியில் காணப்படுவது போலவே இங்கும் செங்கற்களின் அளவு ஒன்று போல இருக்கிறது. அதுபோலவே, எடைக் கற்கள், கருவிகள், முத்திரைகள், அணிகலன்களின் அளவு போன்றவையும் சிந்து சமவெளியின் தொடர்ச்சியே லோதல் என்பதை நிரூபணம் செய்கின்றன.



எனது இந்தியா ( காட்டுக்குள் புகுந்த ராணுவம்! ! ) - எஸ். ராமகிருஷ்ணன்....


அதுவரை, பழங்குடி மக்கள் என்றால் கொத்​தடி​மைகள், குரலற்றவர்கள் என்று நினைத்துக்​கொண்டு இருந்த பிரிட்டிஷ் அரசு, இந்த எழுச்சியைக் கண்டு பயந்துபோனது. உடனே இதைத் தடுத்து நிறுத்தாவிட்டால் மற்ற பழங்குடி இனங்களும் இதில் சேர்ந்துவிடுவார்கள் என்று பயந்தது. பிரிகேடியர் ஜெனரல் லியோட் தலைமையில் துப்பாக்கிகள், பீரங்கிகளுடன் ராணுவம் காட்டுக்குள் புகுந்தது. இவர்​களுக்குத் துணையாக நவாப் அனுப்பிய யானைப்படையும் சென்றது.

சந்தால் மக்கள் தேர்ந்த வில்லாளிகள். ஒளிந்து தாக்கும் கெரில்லா போர்முறையைக் கையாளக்கூடியவர்கள். ஆகவே, காட்டுக்குள் சென்று அவர்களைத் தாக்கி வெல்ல முடியாது என்பதை உணர்ந்த பிரிட்டிஷ் படை, காட்டைவிட்டு அவர்களை வெளியே கொண்டு வந்து சண்டையிடத் திட்டமிட்டது. அதற்காக, அவர்களுடைய குடியிருப்புகளை தீவைத்துக் கொளுத்தி யானைகள் உதவியுடன் குடிசைகளைத் துவம்சம் செய்தது.

காட்டைவிட்டு வெளியே வந்த சந்தால் வீரர்களை, பிரிட்டிஷ் படை சுற்றி வளைத்துத் தாக்கியது. ராணுவத்தின் துப்பாக்கிகளுக்கு முன், வில் அம்புகள் தாக்குப்பிடிக்க முடியவில்லை. ஆனாலும், கடைசி சந்தால் இருக்கும் வரை தாங்கள் போரிட்டு மடியப்போவதாக நெஞ்சுரத்துடன் அவர்கள் எதிர்த்துச் சண்டை​யிட்டனர்.

ஆவேசமாகப் போராடிய இவர்களை அடக்க, 7-வது படைப் பிரிவின் துருப்புகளும் 40-வது படைப் பிரிவின் துருப்புகளும் கூடுதலாக வரவழைக்கப்பட்டன. இந்த மோதல், 1855 ஜூலை முதல் 1856 ஜனவரி வரை நடந்தது. ககால்கோன், சூரி, ரகுநாத்பூர் மற்றும் மங்கதோரா ஆகிய இடங்களில் நடந்த போராட்டங்கள், இரும்புக் கரம்கொண்டு ஒடுக்கப்பட்டன. மூர்ஷிதாபாத் நவாப் அனுப்பிய யானைகள், சந்தால் இன மக்களின் கிராமங்களைத் துவம்சம் செய்தன. தொடர்ந்த பீரங்கித் தாக்குதல் மூலமாக காடு பற்றி எரிந்தது. ஓயாத தாக்குதலின் முடிவில் சந்தால் இன எழுச்சி ஒடுக்கப்பட்டது. முர்மு சகோதரர்கள் கொல்லப்பட்டனர். இந்த நிகழ்வை ஓர் எச்சரிக்கை மணியாக உணர்ந்த பிரிட்டிஷ் அரசு, உடனே ஒரு சட்டத்தை இயற்றியது. அதன்படி, சந்தால் இன மக்கள் வசிக்கும் பகுதியைத் தனி மாவட்டமாகப் பிரித்து அதைத் தன் நேரடிக் கண்காணிப்பில் வைத்துக்கொண்டது. அதே நேரம், ஜமீன்தார்களின் வரி வசூல் செய்யும் உரிமையை மாற்றி பழங்குடி மக்களின் உள்ளூர்த் தலைவரே வரி வசூல் செய்வார் என்ற நடைமுறையும் அமல்படுத்தப்பட்டது.
 சந்தால் இன மக்களின் நீதி பரிபாலனம் மிகக் கடுமையானது. அவர்கள் தங்களுக்கான முறையான சட்டத் திட்டங்களை வகுத்து இருந்தனர். குற்றத்தை விசாரித்து தண்டனை அளிக்கும் பொறுப்பு கிராமத் தலைவனிடம் இருந்தது. சந்தால் மக்களின் எழுச்சிக்குப் பிறகு, அந்த நீதிமுறைகள் பிரிட்​டிஷ் அதி​காரிகளால் ரத்து செய்யப்​பட்டன. குற்றங்களை விசாரிப்​பதற்கு அவர்களுக்கு எனத் தனியாக நீதிமன்றம் அமைக்கப்பட்டது.

சந்தால் மக்களை ஒடுக்கிய சண்டையைப் பற்றி குறிப்பிடும் மேஜர் ஜெர்விஸ், 'சந்தால் இன மக்கள் துப்பாக்கி மற்றும் பீரங்கிகளைக் கண்டு அஞ்சவில்லை. முரசு அடித்துக்கொண்டே அவர்கள் கூட்டமாக வந்து, துப்பாக்கி தங்களைத் துளைக்கட்டும் என்று உறுதியாக நின்றனர். பிரிட்டிஷ் வீரர்களின் துப்பாக்கிகள் அவர்களைக் கொன்று குவித்தபோதும் பின்வாங்கி ஓடவில்லை’ என்கிறார்.

காட்டின் அடி வயிறு வரை புகுந்த ராணுவம், சந்தால் இன மக்களைப் பிடித்து வந்து, கை கால்களில் விலங்கிட்டு ரயில் பாதை அமைக்கும் பணிக்குச் சம்பளம் இல்லாத கூலிகளாகப் பயன்படுத்தியது. நூற்றுக்​கணக்கான சந்தால் மக்களைக் கைது செய்து கப்பலில் ஏற்றி பர்மாவில் உள்ள மாண்டலே சிறையில் அடைத்தனர். நோயுற்று பலர் பர்மா சிறையிலேயே இறந்தனர். இந்த எழுச்சிக்குத் தலைமை வகித்தது சந்தால் மக்கள் என்றபோதும் முண்டா, ஒரான், பாரியா இனத்தைச் சேர்ந்த பழங்குடி மக்களும் இதில் கலந்துகொண்டு போராடினர். ஆனால் பிரிட்டிஷ் அதிகாரிகள், சந்தால் என்று ஒற்றை அடையாளத்துடன் அவர்களைச் சிறையில் அடைத்து ஒடுக்கியது.

1855-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சந்தால் கைதிகளை அடைத்துவைத்திருந்த பாகுல்பூர் சிறையில் காலரா பரவியது. ஒரே வாரத்தில் 52 கைதிகள் இறந்தனர். அடுத்த சில நாட்களில் சாவு இரண்டு மடங்கானது. ஆகவே கைதிகளை எங்கே வைத்திருப்பது எனத் தெரியாமல் திறந்த வெளியில் அடைத்துவைத்தார்கள். அப்படியும் சிறைக்குள் 300 கைதிகள் காலராவால் இறந்துபோனார்கள்.

1835-ம் ஆண்டு ஒரிஸ்ஸாவில் உள்ள கோண்டு இன மக்கள் பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பை எதிர்க்கிறார்கள் என்று அவர்களில் 180 பேரைக் கைதுசெய்து நீதிமன்றத்துக்குக் கொண்டுசென்றது. அவர்களில் 43 பேருக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 47 பேர் தீவாந்திரம் விதிக்கப்பட்டு அந்தமானுக்கு நாடு கடத்தப்பட்டார்கள். மீதம் உள்ளவர்கள், சென்னை ராஜதானியில் இருந்த பெல்லாரி, திருச்சி, செங்கல்பட்டு, கஞ்சம் ஆகிய சிறைகளில் அடைக்கப்பட்டார்கள். அப்படி சிறைப்பட்ட கோண்டுகளில் 10 பேர் சிறைக்கு வந்த சில நாட்களிலேயே இறந்துபோயினர்.

சந்தால் எழுச்சியின் தொடக்கம் பழங்குடி மக்களிடம் ஒரு விழிப்பு உணர்வை உருவாக்கியது. அதில் உருவானதுதான் பிர்சா முண்டாவின் போராட்டம். இதுவும் பிரிட்டிஷ் அதிகாரத்துக்கு எதிராக உருவான எழுச்சியே. முண்டா இனத்தைச் சேர்ந்த பிர்சா என்ற 25 வயது இளைஞன் இந்தப் போராட்டத்தை வழிநடத்தினார்.

அடர்ந்த காட்டுக்குள்ளாக
கை தட்டுவது யார் ?
அடர்ந்த காட்டுக்குள்ளாக
பிர்சா கை தட்டுகிறான்.
பிர்சாவின் கை தட்டலை
மான்கள், யானைகள், காட்டெருதுகள்கூட
புரிந்துகொள்கின்றன
மனிதர்களுக்கு மட்டும் அது புரியவேயில்லை
என்ற முண்டா இனப் பாடல் இன்றும் சோட்டா நாகபுரி பகுதியில் எதிரொலித்துக்கொண்டே இருக்கிறது.
பிர்சா முண்டா, பீகாரில் 1875 நவம்பர் 15-ம் தேதி பிறந்தவர். வறுமையின் காரணமாக மாமா வீட்டில் வளர்க்கப்பட்ட பிர்சா, ஜெர்மனியக் கிறிஸ்துவ நிறுவனத்தின் பள்ளியில் ஆரம்பப் படிப்பைக்  கற்றுக்கொண்டார்.

சோட்டாநாகபுரி பகுதியில் உருவான பழங்குடி இனம் முண்டா, ஆஸ்ட்ரோ ஆசியாடிக் மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த முண்டாரி இவர்களின் மொழியாகும். முண்டா இன மக்கள்தொகை இரண்டு மில்லியன். மரங்கள், பறவைகள், காட்டு விலங்குகளின் பெயர்களையே அவர்கள் சிறப்புப் பெயர்களாகச் சூட்டிக்கொள்கிறார்கள். அவர்களின் கடவுள் சிங்போங்கா. அவர் முண்டா மக்களின் சூரியக் கடவுள். முண்டா இன மக்களை நல்வழிப்படுத்துகிறேன் என்று சொல்லி, ஜெசுவிட் சபையைச் சேர்ந்த ஜான் ஹாப்மேன் அவர்களுடன் பழகி பழங்குடியினரை கொஞ்சம் கொஞ்சமாகக்  கிறிஸ்துவமதத்துக்கு மாற்றினார். மேலும் அவர்களின் மரபான பழக்கவழக்கங்கள், அசைவ உணவுமுறை, பலிச் சடங்குகளை தடுத்து நிறுத்தி, அவர்களின்  திருமணமுறையையும் மாற்றி அமைத்தார். கிறிஸ்துவ​மயமாக்கம் காரணமாக முண்டா இன மக்களில் பெரும் பகுதி கிறிஸ்துவர்களாகி தங்களின் பூர்வக் கடவுளான சிங்போங்காவை வழிபடுவதை கைவிட்டு​விட்டார்கள்.

'கிறிஸ்துவ மத மாற்றம் தங்கள் மக்களின் நம்பிக்கை​களை, மரபுகளை ஒடுக்கிவருகிறது. இன்னொரு பக்கம் அரசு தனது கெடுபிடியான நடவடிக்கைகளால் மக்களை இன்னல்படுத்தி வருகிறது. இதில் இருந்து மீட்க கடவுளால் அனுப்பப்பட்ட தூதுவன் நான்’ என்று சொல்லிக்கொண்ட பிர்சா முண்டா, அரசையும் மிஷினரியையும் எதிர்த்து பிரசாரம் செய்யத் துவங்கினார்.

'பழங்குடி மக்களின் நிலங்களை மீட்க வேண்டும், கிறிஸ்துவமயமாவதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும், மண்ணின் மைந்தர்களான தங்களை காட்டைவிட்டு விரட்ட நடக்கும் சதியை அனைவரும் ஒன்று கூடி எதிர்க்க வேண்டும்’ என்று பிர்சா அணி திரட்டத் துவங்கினார். இடைத்தரகர்கள், நிலப்பிரபுகள், கிறிஸ்துவ மிஷனரி, பிரிட்டிஷ் அதிகாரம் என்று நான்கு எதிரிகளைக் குறிவைத்து இந்த இயக்கம்  செயல்பட்டது.

1840-ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு இந்தியாவில் உள்ள வனப் பகுதிகள் யாவும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வருவதற்காக ஒரு சட்டத்தைக் கொண்டுவந்தது. அதன்படி இந்திய வனப் பகுதி முழுவதும் பிரிட்டிஷ் ஆட்சிக்குக் கட்டுப்பட்டதாக அறிவிக்கப்பட்டதுடன்  வனவாசிகள் பிரிட்டிஷ் அறிவிக்கும் வரிகளைச் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டார்கள்.

1864-ம் வருடம் இம்பீரியல் வனத் துறை எனத் தனிப் பிரிவு உருவாக்கப்பட்டது. அத்துடன் 1865-ல் இந்திய வனச் சட்டம் ஒன்றினையும் பிரிட்டிஷ் அறிமுகம் செய்தது. 1878-ல் இந்த வனச் சட்டம் இந்தியா முழுவதுமுள்ள வனங்களை ஒரே மைய ஆளுகையின் கீழே கொண்டுவந்தது.

மகாராணி ஆட்சியைத் தூக்கி எறிந்து பழங்குடி மக்கள் ராஜ்ஜியத்தை உருவாக்குவோம் என்ற பிர்சா முண்டாவின் எதிர்ப்புக் குரல் சோட்டாநாகபுரி எங்கும் வேகமாகப் பரவியது. எல்லாப் பழங்குடி மக்களையும் ஒரே குடையின் கீழே கொண்டுவருவதற்கு பிர்சா முயற்சித்தார். பழங்குடி மக்கள் மது அருந்தக்  கூடாது, மாயம் மாந்திரீகம் போன்றவற்றில் ஈடுபடக் கூடாது, தங்கள் வசிப்பிடத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று பல சீர்திருத்தக் கருத்துகளை பிர்சா முண்டா பிரசாரம் செய்தார்.

பிர்சா முண்டாவுக்கு ஆதரவு வலுப்படுவதைக் கண்ட பிரிட்டிஷ் அரசு அவரைத் தந்திரமாக சதிசெய்து, ஆகஸ்ட் 23, 1895 அன்று கைதுசெய்தது. இரண்டு ஆண்டுகள் ஜெயில் வாசத்துக்குப் பிறகு 1897-ல் பிர்சா முண்டா விடுவிக்கப்பட்டார். அதன் பிறகு 1900-ல் மீண்டும் கைதுசெய்யப்பட்டு ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்ட பிர்சா முண்டா,  ஜூன் 9-ம் தேதி மர்மமான முறையில் இறந்துகிடந்தார். அவரது சாவுக்கு காலராதான் காரணம் என்றது பிரிட்டிஷ் அரசு. ஆனால் விஷம் கொடுத்துக் கொல்லபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் இருக்கிறது.

பிர்சா முண்டாவின் சாவு அவரது இயக்கத்தின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தியது. ஆனால், கந்து வட்டிக்காரர்கள், மற்றும் நிலப்பிரபுகள், பழங்குடி மக்களின் நிலத்தை அபகரிப்பதற்கு எதிராக புதிய சட்டம் கொண்டுவர வழிவகை செய்தது. பிர்சா முண்டாவின் எழுச்சியை முதன்மைப்படுத்தி வங்காளத்தின் பிரபல நாவலாசிரியர் மகாஸ்வேதா தேவி 'ஆரண்யேர் அதிகார்’ என்ற நாவலை எழுதியிருக்கிறார். அதில் பிர்சா முண்டா பழங்குடி மக்களின் போராளியாகச் சித்திரிக்கப்படுகிறார்.

* பிர்சா, உன்னைக் கைதுசெய்துவிட்டார்கள்
* பிர்சா, உன் கைகளில் இரும்பு சங்கிலி மாட்டிவிட்டார்கள்
* பிர்சா, உன்னை ராஞ்சி சிறைக்குக் கொண்டுபோகிறார்கள்
* பிர்சா, எந்த மண்ணுக்காக நீ கஷ்டப்பட்டுப் போராடினாயோ அதைப் பிடுங்கிக்கொண்டார்கள்
* பிர்சா, அடுத்த பிறவியெடுத்து நீ பிறந்துவர வேண்டும்
* பிர்சா, உன்னைப் பிரிந்துவிட்டதற்காக வருந்துகிறேன்
- என்று முண்டா இன மக்கள் இன்றும் பாடுகிறார்கள்.

கனடா அரசு தனது தேசத்தில் வாழும் பூர்வக்குடிகளைக் கௌரவிக்கும்விதத்தில் முதல் குடிமக்கள் என்று அவர்களை அழைக்க வேண்டும் என்று அறிவித்திருக்கிறது. அவர்கள் வசிக்கும் இடங்களை முதல் தேசம் (first Nation) என அழைக்க வேண்டும் என்றதோடு, எஸ்கிமோ என்ற சொல் பச்சை மாமிசம் சாப்பிடுகின்றவன் என்று தவறான பொருள்கொண்டிருப்பதால் அவர்களை இனிமேல் இனியூட் என்று அழைக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது. இப்படி பழங்குடி மக்களை ஒரு தேசம் பெருமைப்படுத்தி வருகிறது.

ஆனால் இந்தியா, பழங்குடிகளை அடக்கி ஒடுக்கிவருவதோடு கானகத்தைவிட்டு அவர்களை விரட்டி வெளியேற்றத் தீவிர முயற்சி எடுத்துவருகிறது. பழங்குடியினருக்கு எதிராக இன்று நடைபெற்று வரும் ஒடுக்குமுறைகள், வன்கொடுமைகள் யாவும் உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இல்லாவிட்டால் வரலாறு நம்மை ஒருபோதும் மன்னிக்காது.

Wednesday, September 26, 2012

திரும்புகிறதா ரத்தச் சரித்திரம்? பதைபதைப்பில் மதுரை தி.மு.க.!




றக்கத்தானே பிறந்தோம்... இருக்கும் வரை தளபதியுடன்!’ மதுரைக்குள் பளிச்சிடும் இந்த போஸ்டர்களைச் சுட்டிக்காட்டும் தி.மு.க-வின் சீனியர்கள், 'நடக்குறது நல்ல சகுனமாய் தெரியலை... போகிற போக்கைப் பார்த்தால் 2003 சரித்திரம் திரும்புமோ?’ என்று பதைபதைக்கிறார்கள். '2003 சரித்திரம்’ என்று அவர்கள் சொல்வது, தா.கிருட்டிணன் கொலை சம்பவத்தை! 
மதுரை தி.மு.க-வில் அழகிரி என்ன சொல்கிறாரோ அதுதான் மற்றவர்களுக்கு வேதவாக்காக இருந்தது ஒரு காலம். ஆனால், இப்போது மதுரைக்குக்குள்ளேயே கூட்டம் நடத்தி அழகிரியை மறைமுகமாகச் சாடும் அளவுக்கு நிலை மாறிவிட்டது. அழகிரி பெயர் போடாத போஸ்டரை, அவர் வீட்டுக்கு அருகிலேயே ஒட்டும் அளவுக்கு ரவுசு கட்டுகிறது ஸ்டாலின் அணி.
இந்தநிலையில், அ.தி.மு.க. அரசைக் கண்டித்து செப்டம்பர் 13-ம் தேதி மதுரை தி.மு.க. நடத்திய ஆர்ப்பாட்டம் ஏக ரகளையில் முடிந்தது. வழக்க மாக அழகிரி கோஷ்டிக்குத்தான் மற்றவர்கள் பயப் படுவார்கள். ஆனால், இந்த முறை வரலாறு திரும்பியது. அழகிரி கோஷ்டியைச் சேர்ந்த இசக்கிமுத்துவை, ஸ்டாலின் கோஷ்டி​யைச் சேர்ந்த ஜெயராம் உள்ளிட்டவர்கள் அடித்துக் கீழே தள்ளி காலையும் உடைத்தார்கள். மீண்டும் பிரச்னை வந்துவிடக் கூடாது என்பதற்காக அண்ணா பிறந்த நாளுக்கு, 'அண்ணா சிலைக்கு நாங்க தனியா மாலை போட்டுக்கிறோம்... நீங்க தனியாப் போட்டுக்கங்கப்பா’ என்று, மன்னன் கோஷ்டிக்கு முன்னறிவிப்பு கொடுத்து விட்டார் தளபதி. இதனால், தனித்தனியாக மாலை அணிவித்தனர்.
இதுகுறித்துப் பேசிய மன்னன் தரப்பினர், ''புதுசா கட்சிப் பதவிக்கு வந்தவங்க எதையாச்சும் செஞ்சு பேர் வாங்கணும்னுதான் பார்ப்​பாங்க. அன்னைக்கு ஆர்ப்பாட்டத்துக்கு வந்திருந்த இளைஞர் அணிப் பசங்க சிலபேரு ஆயுதங்களோட வந்திருப்பதைப் பார்த்து நாங்க ஒதுங்கிட்டோம். பாவம் இசக்கிமுத்து மட்டும் மாட்டிக்கிட்டார். நாங்களும் தயாராப் போயிருந்தா, அன்னைக்கு ஏடாகூடமாகி இருக்கும். கட்சித் தலைமையும் அழகிரிக்கு ஒரு நியாயம்... ஸ்டா லினுக்கு ஒரு நியாயம்னுதான் வெச்சிருக்கு. குஷ்பு கூட்டத்துக்குப் போகலைனு எங்களுக்கு நோட்டீஸ் விடுறாங்க. 'இசக்கிமுத்துவை நான்தான் அடிச்சேன்’னு ஜெயராம் பேட்டி குடுக்குறார், அவருக்கு நோட்டீஸ் அனுப்பினாங்களா? அண்ணா பிறந்த நாளுக்கு ஏன் ரெண்டு கோஷ்டியாப் போயி மாலை போட்டீங்கன்னு தளபதிக்கு நோட்டீஸ் விட்டு ருக்கணுமா வேணாமா?'' என்றவர்கள், ''ஸ்டாலினே நாளைக்கு கட்சித் தலைவரா வரணும்னாலும் அண் ணனோட ஆதரவு வேணும்ல. அதுக்காகவாச்சும் அண்ணன் சொல்றதைக் கேட்டு நடக்கலாம்ல'' என் கிறார்கள்.
ஜெயராமிடம் பேசியதற்கு, ''கட்சிப் பொறுப்பில் இல்லாதவங்க மேடையில் ஏற வேண்டாம்னு சொன் னேன். இசக்கிமுத்து, 'அப்புடித்தாண்டா ஏறுவேன்’னு சொன்னார். அதனால தள்ளுமுள்ளு ஆகிப்போச்சு. எங்க ஆளுங்க ஆயுதங்களோட வந்ததா சொல்றது அபத்தம். நாங்க எஜுகேட்டட் ஃபேமிலி. எங்க வீட் டிலேயும் கலெக்டர், தாசில்தார், ஹெட்மாஸ்டர் எல்லாம் இருக்காங்க. ரவுடித்தனம் பண்ணிட்டோ, கொலை செஞ்சுட்டோ, நாங்க ஜெயிலுக்குப் போனது இல்லை'' என்று யாரையோ சாடினார்.
மாநகர் மாவட்டச் செயலாளர் தளபதியோ, ''நடக் கும் விஷயங்களைப் பார்த்தா, பயமாத்தான் இருக்கு. என்னைப் பதவியைவிட்டுத் தூக்கத்தான் ரகளை பண்ணிப் பார்க்கிறாங்க. நான் ஒண்ணும் இந்தப் பதவியில் ஒட்டிக்கிட்டு இருக்கணும்னு நினைக்கலை. தலைமை சொன்னா, அடுத்த நிமிஷமே பொறுப்புகளை ஒப்படைச்சிட்டு துண்டை உதறித் தோள்ல போட்டுப் போயிட்டே இருப்பேன். அடிதடி சம்பவம் தொடர்பா விசாரிக்கிறதுக்காக, ரெண்டு தரப்பையும் 24-ம் தேதி அறிவாலயத்துக்கு வரச்சொல்லிருக்கார் தலைவர். அப்புறமாச்சும் மதுரை தி.மு.க-வுல அமைதி திரும்பினா சரிதான்'' என்றவரிடம் ''பொட்டு சுரேஷ்தான் உங்களைப் பின்னால் இருந்து இயக்குறதா மன்னன் தரப்பு சொல் லுதே...'' என்று கேட்டோம்.
''ஐயோ... பாவம்! எதுலயாச்சும் அடிபட்டா இந்த கவர்மென்ட்ல கேஸைப் போட்டுத் தாளிச்சிருவாங்கன்னு அரசியலே வேண்டாம்னு அவர் ஒதுங்கிட்டார். இப்படித்தான் ஏதாச்சும் புரளியைக் கிளப்பிக்கிட்டே இருக்காங்க'' என்றார்.
மதுரை தி.மு.க-வில் ஜெயராம், 'பொட்டு’ சுரேஷ், தளபதி, வி.கே.குருசாமி, மன்னன், இசக்கிமுத்து ஆகியோர் அபாய வளையத்தில் இருப்பதாக 'நோட்’ போட்டிருக்கிறது உளவுத்துறை!
  ''உங்களை நம்பித்தான் என் பிள்ளைகளை ஒப்படைச்சிருக்கேன்!'' 
மதுரையில் கைகலப்புகள் அதிக மாகி வருவதைத் தொடர்ந்து, கடந்த 24-ம் தேதி காலை 10.30 மணிக்கு அறிவால யத்தில் தொடங்கிய மதுரை பஞ்சாயத்து, மதியம் 1.45 மணி வரை இழுத்ததாம். அழகிரி தரப்பில் இருந்து 27 பேரும் ஸ்டாலின் தரப்பில் இருந்து ஏழு பேரும் விசாரணைக்கு ஆஜரானார்கள்.
'அழகிரி அண்ணனுக்கு உரிய முக்கியத்துவத்தை மாவட்டச் செயலாளர் தளபதி கொடுக்காததால்தான் அவர் ஏற்பாடு செய்த கூட்டத்துக்கு நாங்கள் போகவில்லை’ என்று, அழகிரி தரப்பு சொன்னதுமே, 'நீங்கள் பரிந்துரை செய்யும் அளவுக்கு அழகிரிக்குத் தரம் தாழ்ந்து போவிடவில்லை. கூட்டம் நடந்தபோது அழகிரி வெளிநாட்டில் இருந்தது எனக்கும் தெரியும். அழகிரிக்கு உரிய மதிப்பையும் மரியாதையையும் என்றைக்கும் தலைமை கொடுக்கும். அதனால்தான் அவரைத் தென்மண்டல அமைப்புச் செயலாளராக வைத்திருக்கிறோம்’ என்று விளக்கம் சொன்னாராம் கருணாநிதி. 'கட்சிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள், கிரிமினல் வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள், வயது மீறியவர்கள், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என தவறான ஆட்களை இளைஞர் அணி பகுதிச் செயலாளர்களாகப் போட்டிருக்கிறார் ஜெயராம். ஆலடி அருணா, பூண்டி கலைச்செல்வன் கொலைகளில் சம்பந்தப்பட்டவர்களின் கூட்டாளி ஒருவரும், பெட்ரோல் பங்க் கொள்ளையில் சம்பந்தப்பட்ட ஒருவரும் ஜெயராம் புண்ணியத் தில் இளைஞர் அணிக்குப் பகுதிச் செயலாளர்களாக வந்திருக் கிறார்கள்’ என்று அறிக்கை வாசித்த அழகிரி அணி ஆட்கள், இளைஞர் அணிப் பொறுப்புக்கு வந்திருக்கும் தகுதியற்ற நபர்கள் 20 பேரின் பட்டியலையும் கொடுத்ததாம்.  அதை மறுத்துப் பேசியதாம் ஸ்டாலின் அணி.
'அண்ணா மீது ஆணையாக, தி.மு.க-வினரை ரவுடிகள் என்று நான் சொல்லவே இல்லை தலைவரே’ என்று சத்தியம் செய்தாராம் தளபதி.
'என்னோட ரெண்டு பிள்ளைகளையும் உங்களை நம்பித்தான் ஒப்படைச்சிருக்கேன்யா... அவங்களுக்குள் பிரிவினையை உண்டாக்கி பிரச்னைகளைப் பெருசு படுத்திடாதீங்க. அவனுகளுக்குள்ள பிரச்னை இருந்தாக் கூட, நான் கவலைப்படமாட்டேன். நீங்க ரெண்டு கோஷ்டியா நின்னு கட்சியைக் கூறு போடுறதைத்தான் என்னால தாங்கிக்க முடியலே’ என்று உணர்ச்சிவசப்பட்ட கருணாநிதி, 'இனிமேல் மாவட்டச் செயலாளர் உங்கள் அனைவரையும் கலந்து பேசி, கட்சி நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வார். அவருக்கு நீங்கள் ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும். அவர் உங்களுக்கு உரிய மரியாதை கொடுக்காவிட்டால், அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விட்டு அப்புறம்தான் இங்கு வந்து புகார் தெரிவிக்க வேண்டுமே தவிர, கட்சி நிகழ்ச்சியைப் புறக் கணிக்கக் கூடாது’ என்று ஸ்டாலின் தரப்புக்கு சாதகமாகவும்... அதேநேரம், 'இசக்கிமுத்துதான் அவைத்தலைவராக செயல் படுவார்’ என்று அழகிரி தரப்புக்கு சாதகமாக ஒன்றையும் சொல்லி மத்தியஸ்தம் செய்து அனுப்பி இருக்கிறார். ஆனால், இவர்கள் சமாதானம் ஆனது மாதிரித் தெரியவில்லை!