மூன்று நாட்களுக்கும் மேலாக கஸ்டடியில் வைத்துக் கசக்கியும், 'கிரானைட் கிங்’ பி.ஆர்.பழனிச்சாமியின் வாயில் இருந்து உருப்படியான தகவல் எதையும் கறக்க முடியவில்லை. அதனால், 'மீண்டும் கஸ்டடியில் எடுப்போம்’ என்ற முடிவோடு, 27-ம் தேதி காலையிலேயே அவரை மேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டது போலீஸ்.
முரண்டு பிடித்த பி.ஆர்.பி.!
பி.ஆர்.பி-யை மூன்று நாட்கள் போலீஸ் கஸ்டடியில் வைத்து விசாரிக்க, ஆகஸ்ட் 23-ம் தேதி இரவு 7.30 மணிக்கு அனுமதி கிடைத்தது. 'அவருக்கு ஓய்வு தேவை; கூடிய மட்டும் பகலில் விசாரணை நடத்துங்க’ என்று, பி.ஆர்.பி-யின் டாக்டர்கள் அட்வைஸ் கொடுத்ததால், அடுத்த நாள் காலையில்தான் விசாரணையைத் தொடங்கியது போலீஸ். ஆனாலும், பிரயோஜனம் இல்லையாம். இதுகுறித்து தனிப்படை போலீஸார் நம்மிடம் பேசுகையில், ''நாங்க என்ன கேட்டாலும் எப்படிப் பதில் சொல்றதுன்னு பக்காவாய் கிளாஸ் எடுத்து அனுப்பி இருக்காங்க. எதைக் கேட்டாலும், 'எனக்குத் தெரியாது; சண்முகநாதனுக்கும் (பி.ஆர்.பி. நிறுவன மேனேஜர்) என் பையன்களுக்கும்தான் தெரியும்’னே சொல்லி எஸ்கேப் ஆகிடுறார். 'உங்க வீட்ல எவ்வளவு நகைகள் இருக்கு’ன்னு கேட்டதுக்கு, 'எனக்குத் தெரி யாது; ஆடிட்டரைத்தான் கேக்கணும்’னு பதில் சொன்னார். 'எந்தெந்த அரசியல்வாதிகளுக்குப் பணம் குடுத்திருக்கீங்க... உங்களால பலன் அடைஞ்ச அதிகாரிகள் யார் யார்?’னு கேட்டதுக்கு, 'நாங்க சட்டத்தை மீறி எந்தக் காரியமும் செய்யலை. அதனால யாருக்கும் பணம் குடுக்கலை’னு கூலாகப் பதில் சொன்னார்.
ஒரு கட்டத்தில் வெறுத்துப்போய் இறுக்கிப் பிடிச்சதும், 'நெஞ்சு வலிக்குது’னு சொல்லிட்டார்.
ராத்திரியே ஜி.ஹெச்-சுக்கு அழைச்சுட்டுப் போயி, செக்கப் பண்ணினோம். 'எல்லாம் நார்மல்’னு டாக்டர் சொல்லிட்டார். 'இனிமே ஆக்ட் குடுத்தா, நாங்கவேற மாதிரி டீல் பண்ணுவோம்’னு அவங்க ஆளுங்களுக்கு எச்சரிக்கை செஞ்சோம். அதுக்குப் பிறகு நெஞ்சு வலி வரலை(?)'' என்றார்கள்.
போட்டுக் கொடுத்த செக்யூரிட்டி!
ஸ்பாட்டில் வைத்து விசாரிப்பதற்காக பி.ஆர்.பி-யை 25-ம் தேதி மாலை 5 மணிக்கு கீழையூர் சி.சி.கண்மாய்க்குக் அழைத்து வந்தார் ஏ.டி.எஸ்.பி. மயில் வாகனன். அரசு நிலத்தில் அத்துமீறி கிரானைட் கற்கள் வெட்டப்பட்டு இருந்ததைக் காட்டி விளக்கம் கேட்டார் மயில்வாகனன். 'ஆயுத பூஜைக்கு மட்டும்தான் இங்கே நான் வந்திருக்கேன். அதனால என்ன நடந்திருக்குன்னு எனக்குத் தெரியலை. சண்முகநாதனைத்தான் கேக்கணும்’ என்று பதில் சொன்னாராம்.
அடுத்ததாக, இ.மலம்பட்டி ஏரியாவில் உள்ள குவாரிக்குப் பயணம். அங்கு, பி.ஆர்.பி-யைக் கீழே இறக்கி, 'இந்த இடத்தில் அனுமதி இல்லாமல் கற்களை வெட்டிட்டு மறுபடியும் பூமிக்குள் போட்டு புதைச்சிருக்கீங்க’ என்று கொக்கி போட்டார் ஏ.டி.எஸ்.பி. 'இதெல்லாம் வேஸ்ட் கல். அதை வேற என்ன பண்ணச் சொல்றீங்க?’ என்று பாய்ந்தார் பி.ஆர்.பி.
அவர் வேஸ்ட் என குறிப்பிட்ட கற்கள் அனைத்திலும் நம்பர் குறியீடுகள் இருக்கவே, அங்கிருந்த செக்யூரிட்டி பாண்டியை அழைத்து ஏ.டி.எஸ்.பி. விசாரித்தார். 'வெளிநாட்டுக்கு ஏற்றுமதியாகும்
கல்லுன்னா இந்த மாதிரி மார்க் பண்ணி வைப்பாங்க சார்’ என்று தன்னை அறியாமல் முதலாளியைப் போட்டுக் கொடுத்தார் செக்யூரிட்டி.
தொடரும் கிரானைட் வேட்டை
26-ம் தேதி திருவாதவூர் ஏரியாவில் உள்ள பி.ஆர்.பி. மற்றும் சிந்து கிரானைட்ஸ் குவாரிகளுக்குள் புகுந்தார் கலெக்டர் அன்சுல் மிஸ்ரா. அங்கே தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரியாவுக்கு உள்ளும் கிரானைட் கற்களை அத்துமீறி வெட்டி எடுத்துக் குவித்திருந்ததைப் பார்த்து மிரண்ட கலெக்டர், அந்தக் குவாரிகளுக்கு உடனடியாக சீல் வைக்க உத்தரவிட்டார். சிந்து கிரானைட்ஸ் கம்பெனிக்காக சுமார் 40 சென்ட் மேய்ச்சல் புறம் போக்கை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டு இருந்த பக்கா கட்டடத்தையும் இடித்துத்தள்ள உத்தரவிட்டார். ஓவா மலை ஏரியாவில் இரண்டு ஊருணிகளே உருத்தெரியாமல் அழிக்கப்பட்டிருந்ததை பார்த்தவர், அங்கும் குவிக்கப்பட்டிருந்த கற்களை முழுமையாக அளவீடு செய்ய உத்தரவிட்டார்.
தொடரும் கைதுகள் மிரட்டும் தகவல்கள்
மதுரா கிரானைட்ஸ் அதிபர்களில் ஒருவரான பன்னீர் முகமது போலீஸில் சரண் அடைந்ததைத் தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. அதே நிறுவனத்தில் சூப்பர்வைஸராக இருந்த முன்னாள் வி.ஏ.ஓ. சொக்கலிங்கத்தைக் கைது செய்திருக்கும் போலீஸார், பி.ஆர்.பி-யின் பினாமியாகக் கருதப்படும் ஜி.ஜி. கிரானைட்ஸ் அதிபர் ஜி.கோபாலகிருஷ்ணனின் சித்தி மகன் பிரசாந்தையும் போலி பெர்மிட் விவகாரத்தில் கைது செய்திருக்கிறார்கள். ஜி.ஜி. கிரானைட்ஸ் தொடர்புடைய சதீஷ் என்பவரை முதலில் விசாரித்து விடுவித்தது போலீஸ். 'அவர்தான் மாஸ்டர் மைண்ட்’ என்று பிரசாந்த் உதிர்த்த தகவலை அடுத்து, சதீஷை மறுபடியும் தேடுகிறார்கள். சேப்பாக்கம் கனிமவளத் துறை அலுவலகத்தில் கணக்கு அதிகாரியாக இருந்த சீனிவாசன், அங்கு பணியில் இருந்துகொண்டே, ரெங்கசாமிபுரத்தில் உள்ள சிந்து கிரானைட்ஸ் அலுவலகத்துக்கும் கடந்த எட்டு வருடங்களாக அட்வைஸராக இருந்திருக்கிறார். இப்போது, பி.ஆர்.பி-யின் வரவுசெலவு விவகாரங்களைக் கவனிக்கும் அவரது ஆடிட்டரான கான் என்பவரையும் கஸ்டடிக்குள் கொண்டு வந்துள்ளது போலீஸ்.
சிக்கியது 2,000 ஏக்கர்!
பி.ஆர்.பி-யின் சொத்து விவரங்களைத் தேடி தமிழகம் முழுவதும் உள்ள குவாரி தேசங் களுக்குப் படை எடுத்த 13 தனிப்படைகள், இதுவரை தந்திருக்கும் தகவல்களே மலைக்க வைக்கின்றன. மதுரையைத் தவிர்த்து அதை ஒட்டியுள்ள மூன்று மாவட்டங்களில் மட்டுமே பி.ஆர்.பி. பெயரில் இருக்கும் அசல் சொத்துக்கள் 2,000 ஏக்கருக்கு மேல் வருகிறதாம். சென்னையில் உள்ள பத்திரப்பதிவுத் துறை தலைவர் மூலமாக பி.ஆர்.பி. சம்பந்தப்பட்ட சொத்து ஆவணங்களைத் திரட்டும் முயற்சியில் இறங்கி இருக்கிறது போலீஸ். மணப்பாறை அருகே மூன்றெழுத்து கிரானைட் கம்பெனிக்காக 150 ஏக்கர் நிலம் வாங்கினார்களாம். அந்த இடத்தின் மையத்தில் சுமார் 10 ஏக்கர் நிலம் இன்னொரு நபரிடம் இருந்ததாம். அந்த இடத்தைக் கொடுக்க அவர் மறுத்ததால், தங்களது இடத்தைச் சுற்றி அகழி போல் பள்ளம் தோண்டிவிட்டதாம் கிரானைட் தரப்பு. இதைப் பார்த்து மிரண்டுபோனவர், தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டாராம். பி.ஆர்.பி-யின் சொத்துத் தேடலின்போது இந்த விவகாரமும் போலீஸ் பார்வைக்கு வந்திருக்கிறது.
திகைக்க வைக்கும் டர்ன்-ஓவர்!
பி.ஆர்.பி. எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் 2004-05 தொடக்கத்தில் இருந்து இந்த ஜூன் மாதம் வரை, 'கேங் ஸ்டாஃப் என சொல்லப்படும் பெரிய வகை பிளாக் கற்களில் 83,742.495 கன மீட்டர் உற்பத்தி செய்திருக்கிறதாம். இதற்கு அப்படியே எக்ஸ்போர்ட் க்ளியரன்ஸ் வாங்கி இருக்கிறார்கள். இதே காலகட்டத்தில் மினி கேங் ஸ்டாஃப் என்ற 'ஸ்லாப்’ வகைக் கற்களில் 83,87,683.83 சதுர மீட்டர் உற்பத்தி செய்து அதில் 60,87,967.3 சதுர மீட்டருக்கும், டைல்ஸ் வகை கிரா னைட் கற்களில் 20,00,921.44 சதுர மீட்டர் உற்பத்தி செய்து, 17,48,811.07 சதுர மீட்டருக்கும் எக்ஸ்போர்ட்ஸ் க்ளியரன்ஸும் வாங்கி இருக்கிறார்கள். தங்களிடம் இல்லாத கிரானைட் ரகங்களே இல்லை என்று பெயர் எடுப்பதற்காக, இத்தாலியில் இருந்து குறிப்பிட்ட சில வகை கிரானைட் கற்களை இறக்குமதி செய்து பாலீஷ் போட்டும் மார்க்கெட்டில் விட்டிருக்கிறார்கள். இப்படி 2004 முதல் இந்த ஜூன் மாதம் வரை இத்தாலியில் இருந்து 724.879 கன மீட்டர் கிரானைட் கற்களை இறக்குமதி செய்திருக்கிறது பி.ஆர்.பி. எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம்.
2006-07 நிதி ஆண்டில் இருந்து கடந்த ஜூன் வரை பி.ஆர்.பி. எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் 1,790 கோடியே 77 லட்சத்து 54 ஆயிரத்து 172 ரூபாய்க்கு டர்ன்-ஓவர் காட்டி இருக்கிறது. இதில், 95 கோடியே 97 லட்சத்து 4 ஆயிரத்து 527 ரூபாய்க்கான டர்ன்-ஓவர் மட்டுமே வரிவிதிப்புக்கு உட்பட்டது. இதே காலகட்டத்தில் பி.ஆர்.பி. கிரானைட்ஸ் நிறுவனத்தின் டர்ன்-ஓவர் 24 கோடியே 2 லட்சத்து 50 ஆயிரத்து 236 ரூபாய். இதில் 36 லட்சத்து 20 ஆயிரத்து 163 ரூபாய் டர்ன்-ஓவர் மட்டுமே வரிவிதிப்புக்கு உட்பட்டது. இவை அனைத்துமே பி.ஆர்.பி. நிறுவனங்கள் கொடுத்திருக்கும் 'ஒயிட்’ கணக்கு வழக்கு விவரங்கள். அப்படியானால் பிளாக்?
கிரானைட் புள்ளி வீட்டில் குடியிருந்த டி.எஸ்.பி.
போலி பெர்மிட் விவகாரத்தில் நடவடிக்கையை முடக்கிப்போட்ட இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மீது நடவடிக்கை பாயலாம் என்று கடந்த இதழில் எழுதி இருந்தோம். அதன்படியே, மெடிக்கல் லீவில் இருந்த ராமகிருஷ்ணன் இப்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அடுத்ததாக, வெங்கடாஜலபதியின் பெயர்கொண்ட இன்னொரு இன்ஸ்பெக்டர் மீதும் விசாரணை நடக்கிறது. நாகமலை புதுக்கோட்டை ஏரியாவில் சுமார் ஒரு கோடிக்கு இவர் கட்டியிருக்கும் ஆடம்பர பங்களாவுக்குப் பணம் வந்த ரூட்டைத் துழாவுகிறது தனிப்படை. இதேபோல், பி.ஆர்.பி. மீதான நிலஅபகரிப்பு புகார்களைக் கண்டுகொள்ளாமல் இருந்த டி.எஸ்.பி. ஒருவர், இப்போது வழக்கில் சிக்கி இருக்கும் கிரானைட் ஓனர் ஒருவரின் வீட்டில்தான் குடி இருந்தாராம். ஆட்சி மாறியதும் வடக்கு மாவட்டத்தில் டம்மியான இடத்துக்குத் துரத்தப்பட்டார். அங்கு பணியில் சேராமலேயே அவரைப் பக்கத்து மாவட்டத்துக்கு 'விஜயம்’ செய்ய வைத்த கிரானைட் தொடர்புகள் குறித்தும் விசாரணை போகிறது. ஒரே நம்பர்களில் லாரிகளை ஓடவிட்ட திருச்சியை சேர்ந்த முன்னாள் தி.மு.க. அமைச்சர் ஒருவரின் பினாமியான 'மாணிக்க’மான லாரி ஆபரேட்டரும் சீக்கிரமே சிக்கலாம் என்கிறார்கள்.
ஐ.ஏ.எஸ்-களுக்கும் ஆப்பு காத்திருக்கிறது!
விசாரணை வளையத்தில் மதுரையை ஆண்ட முன்னாள் கலெக்டர்கள் சந்திரமோகன், மதிவாணன், காமராஜ் மீதும் கூடிய சீக்கிரமே நடவடிக்கை பாயலாம் என்கிறார்கள். கைது செய்யப்பட்டுள்ள பிரசாந்த் போலி பெர்மிட்களைத் தயாரித்து மேலூரில் இருந்து ஆந்திராவுக்கு கிரானைட் கற்களைக் கடத்தியவர். இந்த பெர்மிட்களில் சந்தேகம் இருப்பதாக ஆந்திராவில் இருந்து தமிழகத் தலைமைச் செயலருக்குப் புகார் வருகிறது. அந்தப் புகார், அப்போது கலெக்டராக இருந்த காமராஜுக்கு வருகிறது. காமராஜ் அதை எஸ்.பி-க்கு அனுப்பி, மேலூர் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் விசாரிக்கிறார்.
விசாரணையில், போலி பெர்மிட் போட்டது உண்மைதான் எனத் தெரியவந்து பிரசாந்தைக் கைதுசெய்து ஆவணங்களைக் கைப்பற்றுகிறார் இன்ஸ்பெக்டர். ஆனால், பிறகு என்ன நடந்ததோ, அவற்றைக் கோர்ட்டில் ஒப்படைக்கவில்லை; ஸ்டே ஷனிலும் வைக்கவில்லை. இதில் இன்னொரு குழப்பம். பிரசாந்த்தின் பெயரை 'பிரகாஷ்’ என்று கலெக்டர் குறிப்பிட்டு இருக்கிறார். அப்படியே எஃப்.ஐ.ஆர். போட்டவர்கள் குற்றப் பத்திரிகையில் 'பிரசாந்த் என்ற பிரகாஷ்’ என கோல்மால் செய்து இருக்கிறார்கள். இந்த வழக்குத் தொடர்பான ஸ்டேஷன் ரெக்கார்டுகளில் எஃப்.ஐ-ஆரின் கார்பன் காப்பியும் மிஸ்ஸிங். நடவடிக்கை வரப்போகிறது என்றதும் ஜெராக்ஸ் காப்பியைக் கொண்டுவந்து திணித்திருக்கிறார்கள். இதற்காகத்தான் ராமகிருஷ்ணன் இப்போது சஸ்பென்ட்!
தலைமறைவாக இருக்கும் பி.ஆர்.பி-யின் மகன் உள்ளிட்ட உறவுகளின் வரவுக்காகக் கண்ணிவைத்துக் காத்திருக்கிறது காவல்துறை!