சராசரிவாசிகளை இப்படி பணக் காரர்களாக மாற்றப்போவது பில்கேட்ஸை விடவும் ஆசியாவிலேயே மிகப்பெரிய பணக்கார சீமானாகிவிட்ட குடுமியான்மலை ரவிச்சந்திரன்தான். இதை அவரே தனது திருவாயால், தமிழக காக்கி அதிகாரிகள் முன்னிலையிலேயே திருச்சியில் அறிவித்து பலருக்கும் இன்பப் புல்லரிப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
குடுமியான்மலை சவரிமுத்து அருள்தாஸ் அறக்கட்டளை என்ற பெயரில் ஒரு அமைப்பை ஏற்படுத்திக்கொண்டு, "ஒரு லட்ச ரூபாய் கொடுத்து இதில் உறுப் பினரானால், அவர்கள் அனைவருக்கும் தலா ஒரு கோடி ரூபாய் கொடுக்கப்படும்' என அறிவித்ததோடு... ராதாரவி, வடிவேல், செந்தில், தாமு, சினேகா போன்ற திரை நட்சத்திரங்களை அழைத்து, அறக்கட்டளை விழாவையும் கோலாகலமாக நடத்தி, பலருக்கும் தூண்டில் போட்ட குடுமியான் மலை ரவிச்சந்திரன் குறித்து "ஒரு லட்சம் கொடுத்தால் ஒரு கோடி! நடிகர் நடிகைகளே சாட்சி' என்ற தலைப்பில் கடந்த இரண்டு ஆண்டு களுக்கு முன்பே நக்கீரனில் செய்தி வெளியிட்டி ருந்தோம்.
இந்த செய்தியால் விழித்துக்கொண்ட பலரும் "எங்கள் பணத்தைத் திருப்பிக்கொடு' என்று ரவிச்சந்திரனைப் பிடித்து உலுக்க ஆரம்பித்தனர். இதனால் ஒரு சிலர் கட்டிய பணத்தை மட்டும் திருப்பிக்கொடுத்த ரவிச்சந்திரன், ""வெளிநாட்டுப் பணம் விரைவில் கோடிகோடியாய் எனக்கு வரப்போகிறது. அப்போது உங்கள் பணத்தை செட்டில் பண்ணு கிறேன்'' என்று காக்கி அதிகாரிகளை வைத்துக்கொண்டு அவர்கள் முன் பலரையும் சமாதானப்படுத்தினார். ஆனால் இரண்டு வருடங்கள் கழிந்த நிலையிலும் இவர்கள் யாருக்கும் ரவிச்சந்திரன் பணத்தை செட்டில் பண்ணவில்லை.தி.மு.க. ஆட்சி மாறி அ.தி.மு.க. ஆட்சி வந்த நிலையில்... ‘""இத்தனை நாள் கருப்பு சிவப்புக் கொடிபோட்ட காரில் வலம் வந்த ரவிச் சந்திரன், ஆட்சி மாறியதும் கொடி யைக் கழற்றிப் போட்டுவிட்டு மீண்டும் தன் வசூல் மேளாவைக் கோலாகலமாகத் தொடங்கிவிட்டார்'' என்றார்கள் பலரும்.
மனம்நொந்து போனநிலையில் நம்மிடம் பேசிய அந்த மணப்பாறை ஆசிரியரின் கண்ணீர் கதை இது. அதை அவரே விவரிக்கிறார்.... ‘""என் படத்தையோ பெயரையோ வெளிப் படுத்தாதீங்க. ஏன்னா என் பணம் போனதுபோல் என் உயிரும் அவரால் போய்விடும். அவருக்காக காவல் துறையினரே எங்களைப் போன்றவர்களை மிரட்டறாங்க. ஏற்கனவே கடன் சுமையால் தத்தளிச்சிக்கிட்டு இருந்தேன். இதிலிருந்து எப்படி மீளப் போறோமோன்னு நிம்மதியில்லாம தவிச்சேன். அப்ப என்னுடைய சக ஆசிரிய நண்பர் ஒருவர், "ரவிச்சந்திரன் நடத்தும் அறக்கட்டளையில் உறுப்பினராகி பணம் போட்டா, அது விரைவில் பல மடங்கா திரும்பிவரும்'னு ஆலோசனை சொன்னார். தானும் ஒரு லட்ச ரூபாய் போட்டிருப்பதா அவர் தெரிவிச்சார். இதனால் ரவிச்சந்திரன் மேல் நம்பிக்கை வச்சி, வட்டிக்குக் கடன் வாங்கி, அவரிடம் கொடுத்தேன். எனக்குத் தெரிந்த சிலரும் தாலிக்கொடியை விற்றும் மனைவியின் நகைகளை அடகுவைத்தும் நிலபுலன்களை விற்றும் அவரிடம் லட்சக் கணக்கில் பணம் கட்டினாங்க. இரண்டு மூன்று வருடமாகியும் அவர்ட்ட இருந்து எங்க பணம் திரும்பி வரலை. இப்போ இவருக்காக வாங்கிய கடனுக்கும் வட்டிகட்ட முடியாம தவிச்சிக் கிட்டு இருக்கோம்.
நாங்க சேரும்போது உலக வங்கி 30 ஆயிரம் கோடிக்கு செக் அனுப்பியிருக்கு. அதை பணமா மாற்றி எடுக்க உறுப்பினர்களின் எண்ணிக்கை பத்தலை. அதனால் மேலும் உறுப்பினர்களைச் சேர்த்து அந்தப் பணத்தை எடுத்துடலாம்னு சொன்னார்.ரிசர்வ் பேங்க் கவர்னர் லைன்ல இருப்பதா காட்டிக்கிட்டு, "என்ன கவர்னர் சார்? நல்லா இருக்கீங்களா? கூடிய சீக்கிரம் பணம் அனுப்பிடறீங்களா? ஓ.கே.ன்னு' போனை வச்சிடுவார். இவர் எதிர்ல இருக்கிறவங்களும் ரிசர்வ் பேங்க் கவர்னருக்கு தமிழ் தெரியுமான்னு யோசிக்க மாட்டேங்கறாங்க. ரொம்ப நெருக்கிக் கேட்பவர்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய்க்கு செக் கொடுத்து, அதை தான் சொல்லும்போது பேங்கில் போடும்படி கொடுத்திருக்கார்.
இப்படி ஒருத்தருக்கு மட்டும் 160 கோடி ரூபாய்க்கு செக் கொடுத்திருக்கார்ன்னா பார்த்துக்கங்க'' என்றார்.
இவரைப் போல் பலரும் நம்மிடம் கண்ணீர்விட்டு தேம்பிய நிலையில்.. இதுகுறித்து குடுமியான்மலை ரவிச்சந்திரனிடமே அவர் மீதான புகார்கள் குறித்து நாம் கேட்டபோது ""எங்கள் அறக்கட்டளைக்கு முன்பு வசூல் செய்தது உண்மைதான். ஆனால் இப்போது நாங்கள் யாரிடமும் பணம் வாங்கவில்லை. அதை நிறுத்திவிட்டோம். அதேபோல் உலகவங்கி எங்களுக்கு கோடிக் கணக்கில் பணம் தருகிறது என்றும் நான் யாரிடமும் சொல்ல வில்லை. அதே சமயம் மணப்பாறை, துவரங்குறிச்சி, விராலிமலை பகுதிகளில் என் சொந்த்க்காரங்கக்கிட்ட நான் பணம் வாங்கியிருக்கிறேன். அதேபோல் அந்தப் பணத்தை அவங்களுக்குத் திருப்பிக்கொடுப்பேன். பணம் கொடுத்தவங்களே.. "இப்ப வேண்டாம். எங்களுக்குத் தேவைப்படும்போது வாங்கிக் கொள்கிறோம்'னு சொல்லியிருக்காங்க'' என்று அதிரடியாக விளக்கம் கொடுத்தார்.
இந்த சூழ்நிலையில்தான்....
""தனது அறக்கட்டளைக்கு தமிழ்நாட்டின் 23 மாவட்டங்களில் 1000-க்கு அதிகமான உறுப்பினர்களைச் சேர்த்து பணம் வசூலித்த ரவிச்சந்திரன் ’இந்தியாவில் ஏழைகளே இல்லாமல் ஆக்கும் திட்டத்தின் ஆலோசனை கூட்டத்தையும் பொதுக் குழுவையும் நடத்துகிறார். இதில் உறுப்பினர்கள் அனைவருக்கும் பலமடங் காக பணத்தைத் திருப்பிக் கொடுக்கும் தேதியை அறிவிக்கிறார்''’ என்ற தகவல் நம் காதுக்கு வந்து மனதைக் குளிர்விக்க(?) விழா நடந்த திருச்சி பெமினா ஓட்டலின் லோட்டஸ் மஹாலில் 7-ந் தேதி ஆஜரானோம்.
உறுப்பினர் போலவே பேட்ச் அணிந்து கூட்டத்தில் நுழைந்தோம். மேடையில் ரவிச்சந்திரன், டேனியல் கென்னடி, நல்லகுமார் ஆகிய சகாக்களோடு பந்தாவாக அமர்ந்திருக்க சிறப்பு விருந்தினர்கள் சிலர் பேசிய பேச்சுகளை கவனித்தோம். அப்போது...
பிச்சைராஜ் என்பவர் ‘""இந்த இனிய நாளுக் காகத்தான் இத்தனை நாள் காத்திருந்தோம். நாம் டாடா, பிர்லா ஆகும் நாள் இதோ வந்துவிட்டது'' என்று கிறுகிறுப்பேற்றினார். காவல்துறை டி.எஸ்.பி.யான முத் தையாவோ ""நான் டாக்டர் ரவிச்சந்திரன் அனுமதியோடு இந்த விசயத்தை சொல்கிறேன். நான் பொன்னமராவதி இன்ஸ்பெக்டராக இருந்தபோது, என்னுடைய உடன்பிறவா சகோதரர் பழனிச்சாமி என்னிடம் வந்து "குடிமியான்மலை ரவிச்சந்திரன், அனிதா என்கிற பெண்ணைக் காதலிக்கிறார். நாம்தான் பேசி திருமணம் செய்துவைக்கவேண்டும்' என்று சொல்ல, நான் இரண்டு பேர் குடும்பத்திடமும் பேசி பட்டமரத்தான் கோயிலில் கல்யாணம் செய்துவைத்தேன். இன்றைக்கு அவர் யாரும் எட்டி பிடிக்கமுடியாத உயரத்திற்கு எங்கேயோ சென்றுவிட்டார்'' என்று அவர் வழியை ஆதரித்து தன் ஆச்சரியத்தையும் வெளியிட்டார்.
தேவராஜ் என்பவரோ ""ஆரம்பத்தில் நிறைய பண முதலாளிகள் எல்லாம் பணம் கொடுக்க முன்வந்தார்கள். நாங்கள் பணக்காரர்களிடம் வாங்க வேண்டாம் என்று சொல்லிவிட்டோம். சாதாரணமானவர்களிடம் 20, 30, 50 ஆயிரம் 1 இலட்சம், 2 இலட்சம் வாங்கினால் திரும்ப அவர்களுக்குப் பலமடங்காகக் கொடுக்கும் போது அவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். அதனால்தான் இப்படி. நிதி வாங்கும் போது நான் நிறைய பொய் சொல்லிக்கூட வாங்கி இருக்கிறேன். இன்னமும் நாலு நாளில் பணம் வந்துவிடும் என்று சொல்லி எல்லாம் வாங்கி இருக்கிறேன். இப்போது எல்லோருக்கும் பணம் பன்மடங்காகக் கிடைக்கப் போகிறது. யாரும் ரவிச்சந்திரனுக்கு சால்வை கொடுப்பதோ அவருடன் புகைப்படம் எடுப்பதோ கூடாது''’ என பொய் சொல்லி வசூலித்ததை பகிரங்க மாக ஒத்துக்கொண்டார்.
சென்னையில் இருந்து வந்திருந்த மகேஷ் கிருஷ்ணாவோ ‘""ஒரு அரசாங்கம் செய்யக் கூடிய வேலையை இவர் செய்கிறார். எந்த அரசாங்கமும் செய்ய மறந்ததை இவர் செய்கிறார். இவர் கடவுள் வடிவில் நம் முன் இருக்கிறார்'' என காதுகளைக் கூச வைத்தார். தியாகராஜன் என்பவரும் இப் படித்தான்.
சென்னை அரிமா சங்க ஆளுநர் ரவிச்சந்திரன் பேசும்போது... ""இரண்டு வருடங்களுக்கு முன்பு டயலிசஸ் சென்டர்; 2 கோடி செலவில் ஆரம்பித்தோம். ரத்த சுத்திகரிப்பு செய்ய ஒரு முறைக்கு 2,500 ரூபாய்வரை சென்னையில் வாங்குகிறார்கள். ஆனால் நாங்கள் அயனாவரத்தில் 650 ரூபாய்க்கு செய்து கொண்டு இருக்கிறோம். இந்த சேவையை விரிவாக்க 3 கோடிவரை தேவைப்படுகிறது. அந்த நிலையில் தான் நான் இவரை சந்தித்தேன். "அனைத்துத் தொகையையும் நானே கொடுத்துவிடுகிறேன்' என்றார். அவர் சொல்லி 2 வருடம் நம்பிக்கையோடு காத்திருந்தோம். அந்த நாள் நிறைவேறப் போகிறது''’ என்றார் அப்பாவியாக..
கடைசியாக மைக் முன்வந்த ரவிச்சந்திரன் ""நான் பிறவியிலே மற்றவர்களுக்கு உதவவேண்டும் என்ற எண்ணம் கொண்டவன். நான் ஜாதகம் பார்த்த காலத்திலே எல்லாரும் 20 ரூபாய்க்கு ஜாதகம் பார்ப்பார்கள். நானோ 2 ரூபாய்க்கு ஜாதகம் பார்த்தவன்''‘என தன் பரோபகார மனதைப்பற்றி விவரித்தவர்....
’""நான் 20 வயது ஆளாக இருந்தாலும் 60 வயது ஆளாக இருந்தாலும் உரிமையோடு வாடா போடா என்றுதான் பேசுவேன். இங்கே எல்லோரும் அம்பானியைப் பற்றிப் பேசினார்கள். பில்கேட்ஸை பற்றிப் பேசினார்கள். நானோ இப்போது தெற்கு ஆசியாவிலே முதன்மையான ஆள் என்று சொல்லிக்கொள்வதில் சந்தோஷப்படுகிறேன். அந்த சந்தோஷமான நாள் வருகிற 8-ம் தேதி வரப்போகிறது. 7-ம் தேதி பக்ரீத் அன்னைக்கு என் கணக்கில் கோடிக்கணக்கான ரூபாய்கள் கிரடிட் ஆகிடும். அது பேங்க் வழியா வரும். அதுக்கு 1 வாரம் டைம் கேட்டாங்க. அதனால் அந்தப்பணத்தில் இருந்து, 15-ம் தேதி அன்னைக்கு எல்லாருடைய பேங்க் அக்கவுண்ட்டிலும் அது கிரடிட் ஆகும்படி ஏற்பாடு செய்திருக்கிறேன். இனி நீங்கள் எல்லோரும் கோடீஸ்வரர்கள்'' என குஷிப்படுத்தியவர் ""அடுத்து இன்டர்நேஷனல் அளவில் ஒரு திட்டத்தை வகுக்க ஆரம்பித்து உறுப்பினர்களை. சேர்த்துக் கொண்டிருக்கிறோம்'' என தனது அடுத்த கட்டக் குறி... உலகப் பணக்காரர்கள் என்பதை உணர்த்திவிட்டுப் பறந்தார்.
குடுமியான்மலை ரவிச்சந்திரனால் கோடீஸ்வரர்கள் ஆகப்போகும் யோகம் யார் யாருக்கு இருக்கிறது என்பது வரும் 15-ந் தேதி வெளிச்சத்துக்கு வந்துவிடும்.
ஹைய்யோ ஹைய்... யோ.
No comments:
Post a Comment