மாண்புமிகு முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு,
வணக்கம். அன்புள்ள என்று விளித்து எழுதத்தான் ஆசை. ஆனால், மெய்யாகவே உங்களுக்கு தமிழக மக்கள் மீது அன்பிருக்கிறதா என்பதை, இந்தக் கடிதத்தின் மீது என்ன நடவடிக்கை நீங்கள் எடுக்கப்போகிறீர்கள் என்பதைப் பொறுத்துத்தான் முடிவு செய்ய வேண்டியிருக்கும் என்று தோன்றுகிறது. நீங்கள் முதலமைச்சர் பொறுப்பை ஏற்றபின் உங்களுக்கு நான் எழுதும் நான்காவது கடிதம் இது. முதல் கடிதம் பகிரங்கமாக இதே ‘ஓ பக்கங்களி’ல் செப்டம்பர் 24, 2011 அன்று எழுதினேன். அந்தக் கடிதத்தில் கூடங்குளம் அணு உலையை எதிர்த்துப் போராடி வரும் மக்களின் அச்சத்தைப் போக்காமல் உலையைத் தொடங்கக் கூடாது என்று உங்கள் அமைச்சரவை தீர்மானம் போட்டு பிரதமருக்கு நீங்கள் கடிதம் எழுதியதைப் பாராட்டியிருந்தேன். அணு உலை எதிர்ப்பில் தொடர்ந்து பிடிவாதமாக இருக்கும்படி உங்களைக் கேட்டுக் கொண்டேன்.அடுத்த இரு கடிதங்களும் பகிரங்க கடிதங்கள் அல்ல. முறையாக உங்கள் அலுவலகத்தில் அளிக்கப்பட்டவை. ஜூலை 11,2011 அன்று அனுப்பிய கடிதத்தில் இந்தியாவிலேயே ப்ளஸ் டூவில் புகைப்படம் கற்றுத் தந்த பெருமைக்குரிய ஒரே பள்ளியான சூளைமேடு நகராட்சிப் பள்ளியில் அந்தத் தொழில் பாடப் பிரிவு நிறுத்தப்பட்டதை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வந்தேன். ஸ்டாலின் அமைச்சராக இருந்தபோதே, அந்தப் பாடப் பிரிவை மூடவேண்டாமென்று சென்ற வருடம் நான் இந்த ஓ பக்கங்களில் அவருக்கு வேண்டுகோள் விடுத்தேன். நிறுத்தப் போவதில்லை என்று மேயர் மா.சுப்பிரமணியன் எனக்குத் தெரிவித்தார். ஆனால், இந்த வருட கல்வியாண்டு ஆரம்பத்தில் பாடப்பிரிவு மூடப்பட்டது தெரிந்ததும், உங்களுக்குக் கடிதம் எழுதினேன். ஜூலை 11 அன்று அனுப்பிய கடிதத்துக்கு ஆகஸ்ட் 10 அன்று சென்னை மாநகராட்சியிலிருந்து பதில் வந்தது. என் கோரிக்கை ஏற்கப்படவில்லையாம். காரணம் என்ன? 26.10.2009ல் போட்ட அரசாணை எண் 277ன்படி இந்தப் பாடப்பிரிவு தொழிற்கல்விப் பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்பது தான் காரணமாம்.
இதுதான் அரசு இயந்திரத்தின் அசட்டுத்தனம். 2009ஆம் வருட ஆணைதான் ஸ்டாலின் காலத்தில் போடப்பட்டது. அதை மாற்றும்படிதான் நான் உங்களுக்கு வேண்டுகோள் விடுத்தேன். ஏன் மாற்றமுடியாது என்பதற்கு எந்தக் காரணமும் சொல்லாமல், அதே ஆணையைக் காட்டி இப்போது கடிதம் அனுப்புகிறது அரசு இயந்திரம்.இந்த மாதிரி அதிகார வர்க்கத்தை வைத்துக்கொண்டு இங்கே ஒரு சின்ன மாற்றம் கூட வராது. நியாயப்படி என்ன செய்திருக்க வேண்டும்? உங்கள் அலுவலகம் என் கடிதத்தை மாநகராட்சிக்கு அனுப்பி காரணம் கேட்டிருக்க வேண்டும். காரணம் தெரிந்ததும் அதைப் பரிசீலித்து முடிவெடுத்து எனக்குப் பதிலை உங்கள் அலுவலகம்தான் அனுப்ப வேண்டும். ஆனால், என் கடிதத்தை உங்கள் அலுவலகம் மாநகராட்சிக்கு அனுப்பியதும் அதுவே நேரடியாக எனக்குப் பதில் அனுப்பிவிட்டது. முதலமைச்சரான நீங்கள் என் கடிதத்தைப் பார்க்கவே இல்லை என்று தோன்றுகிறது.எனவேதான் உங்களுக்கு நான் அனுப்பிய மூன்றாவது கடிதத்தை, கோட்டையில் உங்கள் அலுவலகத்துக்கே வந்து உரிய உயர் அதிகாரியிடம் நேரில் கொடுத்தேன். பிப்ரவரி 7ந் தேதி கொடுக்கப்பட்ட அந்தக் கடிதத்துக்கு, ஒரு வாரம் கழித்து நினைவூட்டல் மின்னஞ்சல் அனுப்பியும் இன்றுவரை எந்தப் பதிலும் இல்லை. இந்தக் கடிதம் என் தனிப்பட்ட கடிதம் அல்ல. அணு உலைகளுக்கு எதிரான எழுத்தாளர்கள், படைப்பாளிகள் இயக்கத்தின் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர்களான நானும், எழுத்தாளர்கள் அருள் எழிலன், சந்திரா, யுவபாரதி ஆகியோர்களும் அனுப்பியது. உங்களை நேரில் சந்திக்க எங்கள் இயக்கத்தின் சார்பில், சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர்கள்: இந்திரா பார்த்தசாரதி, பிரபஞ்சன், பொன்னீலன், நாஞ்சில் நாடன் ஆகியோரும் மற்றும் பா.செயப் பிரகாசம், எஸ்.ராமகிருஷ்ணன், மனுஷ்யபுத்திரன், தேவதேவன், ஜெயபாஸ்கரன், பாஸ்கர் சக்தி, அழகிய பெரியவன், சுகிர்தராணி, அஜயன் பாலா, அருள் எழிலன், முத்துகிருஷ்ணன், யாழன் ஆதி, குறும்பனை பெர்லின், சந்திரா, யுவபாரதி, திரைப்பட இயக்குனர்கள் அமீர், ஜனநாதன் எனப் பலரும் விரும்புவதைத் தெரிவித்து நேரம் ஒதுக்கித் தரும்படி வேண்டி தரப்பட்ட கடிதம் அது. நம் மாநிலத்தையும் மக்களையும் பல தலைமுறைகளுக்குப் பெரும் பாதிப்புக்குள்ளாக்கக்கூடிய இந்தப் பிரச்னையில் உடனடி கவனம் செலுத்துவது ஒவ்வொரு எழுத்தாளருக்கும் படைப்பாளிக்குமான சமூகக் கடமை என்ற அடிப்படையில் உங்களை நாங்கள் சந்திக்க விரும்பினோம். கேரள, மேற்கு வங்க மாநில அரசுகள் அணு உலை தங்கள் மாநிலத்தில் வேண்டவே வேண்டாம் என்று எடுத்துள்ள சரியான நிலைப்பாட்டை, தமிழக அரசும் உடனடியாக எடுக்க வேண்டும் என்ற கருத்தை நேரில் உங்களுக்குத் தகுந்த காரணங்களுடன் விளக்கித் தெரிவிக்க சுமார் 20 நிமிட பவர் பாய்ண்ட் விளக்கத்துடன் உங்களைச் சந்திக்க விரும்பினோம். ஏனோ நீங்கள் நேரம் ஒதுக்கவில்லை. தினசரி கட்சித் தொண்டர்கள் தங்கள் குடும்பத்தினரின் திருமண நாள், பிறந்த நாட்களுக்கெல்லாம் வாழ்த்து பெற உங்களைச் சந்திக்க முடிகிறது. எனவே தமிழகத்தின் வாழ்வா, சாவா பிரச்னை பற்றி எடுத்துரைக்க விரும்பும் எழுத்தாளர்களைச் சந்திக்க முடியாத அளவு உங்களுக்கு வேலைச் சுமை இருக்கிறது என்று புரிந்துகொள்கிறேன்.
சந்திப்பதைவிடச் சிந்திப்பதுதான் முக்கியம். எங்கள் கடிதத்துடன், ஏன் அணு உலை கூடாது என்பதை விளக்கும் 48 பக்க கேள்வி பதில் தொகுப்பையும் கொடுத்திருந்தேன். அதைப் படித்துவிட்டு நீங்கள் சிந்தித்திருந்தாலே போதுமானது. அணு உலைகள் பாதுகாப்பானவை, அணுமின்சாரம் விலை மலிவானது, அணு மின்சாரத்தை விட்டால் வேறு வழியில்லை, அணுமின்சாரம் தமிழக மின் பஞ்சத்தைத் தீர்த்துவிடும் என்ற நான்கு பொய்களை மத்திய அரசும் காங்கிரஸ் கட்சியும் பரப்பி வருகின்றன. இவை நான்குமே பொய்கள்தான் என்பதை போதுமான புள்ளிவிவரங்களுடன் அந்தக் கட்டுரைத் தொகுப்பில் விளக்கியிருக்கிறேன். கூடங்குளம் அணு உலையைத் தொடங்கக் கூடாது என்று போராடும் மக்கள் பக்கம் நீங்கள் இறுதி வரை நிற்பீர்கள் என்று கடந்த நான்கு மாதங்களாக இருந்து வந்த நம்பிக்கை அண்மையில் எனக்குக் குறைந்துவிட்டது. காரணங்கள் உண்டு. மத்திய அரசின் நிபுணர் குழு மக்களைச் சந்திக்க மறுத்தது. போராடுவோர் சார்பில் அனுப்ப முன்வந்த விஞ்ஞானிகளையும் சந்திக்க மறுத்தது. இந்த நிலையில் நீங்கள் ஒரு மாநில அரசுக் குழுவை நியமித்தீர்கள். யாரை? கூடங்குளம் உலைப்பகுதியில் மக்களே வாழவில்லை என்று உலைக்கான இடம் தேடிய போதே ஒரு சார்பாக அடித்துப் பேசிய அணு விஞ்ஞானி எம்.ஆர்.சீனிவாசன், அணுசக்தி துறையின் நிதி உதவியுடன் ஆய்வுகளும் கருத்தரங்குகளும் நடத்தும் அண்ணா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் இருவர். எப்படி விளங்கும்?! இந்தக் குழுவும் மக் களைச் சந்திக்க மறுத்தது. மக்கள் சார்பான விஞ்ஞானிகளைச் சந்திக்கவும் மறுத்தது. இந்தக் கடிதத்தை நீங்கள் (படித்தால்...) படிக்கிற வேளையில் அந்தக் குழு உலை பாதுகாப்பானது என்று அறிக்கையே உங்களிடம் கொடுத்துவிட்டிருக்கக்கூடும். அந்தக் குழுவின் தலைவர் இனியன் என்பவர் என்று உங்கள் அரசுதான் சொல்கிறதே ஒழிய மத்திய காங்கிரஸ் அமைச்சரும் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் மீது தொடர்ந்து அவதூறு செய்துவருபவருமான நாராயணசாமி, அந்தக் குழுவை சீனிவாசன் குழு, சீனிவாசன் தலைமையிலான குழு என்றேதான் டி.வி.பேட்டிகளில் சொல்லிவருகிறார். நீங்கள் ஆட்சிக்கு வந்ததும் மின்வெட்டைப் போக்குவேன் என்று பிரசாரம் செய்துதான் ஆட்சியைப் பிடித்தீர்கள். ஆனால், உங்கள் ஆட்சியில் ஏன் மின்வெட்டு வீராசாமி காலத்தை விட அதிகமாக இருக்கிறது? காரணம் இந்த மின்வெட்டு செயற்கையானது என்று நம்புவதற்கு இடமிருக்கிறது. மத்திய அரசால் நிர்ப்பந்திக்கப்பட்ட மின்வெட்டு என்று முடிவுக்கு வரத் தோன்றுகிறது. பழையது வீராசாமி பவர் கட். இது நாராயணசாமி பவர் கட். கூடங்குளம் அணு உலையை மக்கள் ஏற்க வைப்பதற்காகச் செயற்கையாக மத்திய அரசால் எடுக்கப்படும் நடவடிக்கை என்று நம்புவதற்கு நிறையவே இடம் இருக்கிறது. காரணம், மாநிலத் தொகுப்புக்குத் தர வேண்டிய அளவில் ஆயிரம் மெகாவாட்டைக் குறைத்தே மத்திய அரசு கொடுத்து வருகிறது. அரசுக்கு மின்சாரம் தரமுடியாது என்று சொல்லும் நான்கு தனியார் நிறுவனங்களை நீங்கள் நினைத்தால் எஸ்மா சட்டத்தின் கீழ் நாட்டுடமையாக்க முடியாதா? அல்லது அவர்களுக்குத் தரவேண்டிய பண பாக்கியை செலுத்த, மேற்கு வங்க மம்தா அரசுக்கு மத்திய அரசு சிறப்பு நிதி கொடுத்தது போல இங்கேயும் கேட்டு வாங்க முடியாதா?
கூடங்குளம் இயங்கினால்கூட கிடைக்கப் போவது வெறும் 400 மெகாவாட்தானே. தமிழகத்தில் தற்காலிகமாக இருக்கும் மின் பற்றாக்குறையைத் தீர்க்க அது உதவவே உதவாது. நமது மின்பற்றாக்குறையைத் தீர்க்க மாற்றுவழிகளையே நாம் மேற்கொள்ள வேண்டும். அணு உலையை நாடுவது என்பது வாணலியிலிருந்து அடுப்பில் குதிப்பதற்குச் சமமாகும். குண்டு பல்புகளை சி.எஃப்.எல். குழல்பல்புகளாக மாற்றினாலே 500 மெகாவாட் மின்சாரம் மிச்சமாகுமே. மழை நீர் சேகரிப்பு போல ஒரே ஆணையில் இதை நீங்கள் உடனடியாக நிறைவேற்றிவிட முடியும். தொலை நோக்கில் பார்க்கும்போது மின் கடத்து வதில் விரயமாகும் 40 சதவிகிதத்தைப் பாதி குறைத்தாலே புதிய மின் உற்பத்தியே நமக்குத் தேவைப்படாது. உங்கள் நண்பர் நரேந்திர மோடி இந்த வாரம் கூட அவர் மாநிலத்தில் சூரிய மின்சக்தி நிலையத்தைத் தொடங்கி வைத்திருக்கிறார். ஆறே மாதங்களில் 100 மெகாவாட் அவர் இலக்கு.என்ன செய்யப் போகிறீர்கள்? உங்கள் முன்னால் தெளிவாக இரண்டு வழிகள் இருக்கின்றன. முதல் வழி அணு உலைகளை எதிர்க்கும் இயக்கங்களின் விஞ்ஞானிகள் குழுவைச் சந்தியுங்கள். அணு உலையை ஆதரிக்கும் அரசு விஞ்ஞானிகள் குழுவை அவர்களுடன் பயப்படாமல் உரையாடச் சொல்லுங்கள். சங்கரன்கோவில் தேர்தலுக்கு அனுப்பும் 31 அமைச்சர்களை இடிந்தகரைக்கு அனுப்பி மக்களிடம் பேசச் சொல்லுங்கள். சிறுமியாக நடிக்கப்போன காலத்திலிருந்து செட்டில்கூட புத்தகம் படிக்கும் பழக்கம் உடையவர் நீங்கள். வாசிப்பு ருசியும் பழக்கமும் உடைய நீங்களே ஒரே ஒரு நாளை ஒதுக்கி இரு தரப்பு நூல்களையும் வாசியுங்கள். நமக்கு ஒருபோதும் அணு உலை வேண்டாம் என்ற முடிவுக்கு நிச்சயம் வருவீர்கள். கேரளத்தைப் போல, மேற்கு வங்கத்தைப் போல தமிழகமும் அணு உலை மறுப்பு மாநிலமாக உங்களால அறிவிக்கப்படட்டும். தமிழர்கள் பல தலைமுறைகளுக்கு உங்களைப் போற்றுவார்கள். ஒரு பென்னி குக்கை நினைவுகூர்வது போல தமிழகத்தில் செர்னோபில்லும் புகொஷிமாவும் வராமல் தடுத்த பெருமைக்குரியவராக நீங்கள் வரலாற்றில் இடம் பெறுவீர்கள்.இரண்டாவது வழியை மேற்கொண்டாலும் வரலாற்றில் இடம் உண்டு. சீனிவாசன் குழு அறிக்கையை ஏற்று அணு உலையை அனுமதிக்கலாம். போராடும் மக்களை போலீஸ், ராணுவ உதவியுடன் ஒடுக்கலாம். ஓரிரு துப்பாக்கிச்சூடுகளும் சில நூறு உயிர் சேதமும் ஏற்பட்டாலும் பொருட்படுத்தாமல் இருக்கலாம். இவ்வாறெல்லாம் செய்வதன் மூலம் மத்திய அரசின் அன்புக்கும் ரஷ்ய, அமெரிக்க, பிரெஞ்ச் முதலாளிகளின் அன்புக்கும் உரியவர் ஆகலாம்.
ஆனால், தமிழக மக்களின் துரோகி என்ற பெயருடன் வரலாற்றில் இடம் இருக்கத்தான் செய்யும். ஏற்கெனவே அந்த இடம் உங்கள் சக அரசியல்வாதி கலைஞர் கருணாநிதிக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. என்ன செய்ய, நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உங்கள் இருவருக்கும் வரலாற்றின் ஒரே வரிசையில்தான் இடம் கிடைக்கும். அவர்தான் கேரளம் ஏற்க மறுத்த கூடங்குளம் அணு உலையை முதலில் தானும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு, பிறகு வரவேற்று பல்டி அடித்த துரோகத்துக்குரியவர்.
மத்திய அரசின் நிர்ப்பந்தத்தால் அணு உலையை எங்கள் மீதும், தமிழர்கள் துரோகி பட்டத்தை உங்கள் மீதும் திணித்து விடாதீர்கள்.
அணு உலை எதிர்ப்புக் குழுவைச் சந்தியுங்கள். அந்த முதல் வழி மட்டுமே உங்களை நிஜமான தமிழக அன்னையாக்கும்.
அன்புள்ள
ஞாநி