அருணகிரிநாதரை வெளியேற்றி, ஆதீன மடத்தை இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் எடுப்பது தொடர்பாக அரசு தொடர்ந்த வழக்கு, 29-ம் தேதி மதுரை கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அப்போது, அருணகிரிநாதர் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும். நித்தியை நீக்கினால் கண்டச்சனி விலகும் என நினைத்தவர், நித்தியும் தானும் சேர்ந்து உருவாக்கிய மதுரை ஆதீன அறக்கட்டளையையும் கலைத்து விட்டதாக அவசரமாக அறிவித்திருக்கிறார். ஆதீன மடத்துக்குள் உள்ள நித்தியின் உடைமைகளை எடுத்துக்கொள்ள இரண்டு நாட்கள் அவகாசம் கொடுத்திருக்கிறார். இதை எல்லாம் நீதிமன்றத்தில் சொல்லி, தன்னை தற்காத்துக் கொள்ளலாம் என்பது ஆதீனத்தின் கனவு. ஆனால், இவரை வெளியேற்றியே தீரவேண்டும் என, மதுரை மீனாட்சி பிள்ளைகள் அமைப்பினர் ஒற்றைக் காலில் நிற்கின்றனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய மீனாட்சி பிள்ளைகள் அமைப்பின் தலைவர் ஜெகதலபிரதாபன், ''இப்போது மதுரை ஆதீன மடத்துக்குள் அரசு நுழைந்தால், பிற்காலத்தில் தங்களது மடங்களிலும் ஏதாவது காரணத்தைச் சொல்லி அரசு தலையிடலாம் என்பது மடாதிபதிகள் சிலரது அச்சம். அதனால்தான் பதறுகின்றனர். இளைய ஆதீனமாக அறிவிக்கப்பட்ட ஒருவரை நீக்க வேண்டுமானால், 15 நாட்கள் முன்னதாக நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்க வேண்டும். அந்தப் பதிலில் திருப்தி இல்லை என்று சொல்லித்தான் அவரை நீக்க முடியும். அந்த நடை முறைகளை எல்லாம் பின்பற்றாமல் ஏதோ தினக் கூலியை வீட்டுக்கு போகச்சொன்னதுபோல், 'நித்தி யானந்தாவை அனுப்பி விட்டேன்’ என்கிறார் அருணகிரிநாதர். இதைப்பார்த்தால் நித்தியும் அருணகிரியும் தங்களுக்குள் பேசிவைத்துக்கொண்டு அரசை ஏமாற்ற நாடகம் போடுகிறார்களோ என்று சந்தேகமாக இருக்கிறது.
1974-ல் நடந்த மகாலிங்க தம்பிரான் வழக்கு, 1982-ல் நடந்த திருவாவடுதுறை ஆதீனத்தின் அம்பலவான பண்டார சன்னிதி வழக்கு இந்த இரண்டிலுமே 'ஆதீனகர்த்தருக்கு இளைய ஆதீனத்தை நியமிக்க மட்டுமே உரிமை உள்ளது. ஒருவரை இளைய சன்னிதானமாக நியமித்த பிறகு குருவும் சிஷ்யரும் சகோதரர்களாகி விடுகி றார்கள். ஒருவரை சகோதரனாக அங்கீகரித்த பிறகு, உனக்கு என்னுடைய சொத்தில் பங்கு இல்லை என்று சொல்ல முடியாது. எனவே, இளைய மடாதிபதியை நீக்கியது செல்லாது’னு உச்ச நீதிமன்றம் தீர்ப்புச் சொல்லி இருக்கிறது. இப்போது ஏதோ காரணத்துக்காக பதுங்கிப் போகும் நித்தி, நாளைக்கு இந்தத் தீர்ப்பை எடுத்துக்கொண்டு உச்ச நீதிமன்றத்துக்குப் போனால், அவர் ஜெயிப்பதற்கு நிறையவே வாய்ப்பு இருக்கிறது'' என்கிறார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், ''நாங்கள் இப்படி எல்லாம் சிந்திக்கிறோம். ஆனால், சில மடாதிபதிகளும் இந்து அமைப்புகளும், 'இனிமேல் இந்த வழக்கில் வீரியம் காட்டாதீர்கள்’னு எங்களை நெருக் குகிறார்கள்; சிலர் மிரட்டுகின்றனர். 'ஆதீன மடத்தை அரசு எடுக்கக்கூடாது’ன்னு இப்ப அறிக்கை விடுகிற ராம.கோபாலன், இல.கணேசன் போன்றவர்கள், ஆபாசப் புகாரில் சிக்கியவர் ஆதீன மடத்துக்குள் நுழைந்தபோது எங்கே போயிருந்தனர்? இப்போது அருணகிரிநாதருக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம் என்று அரசுக்கு உணர்த்தும் முயற்சியில் மடாதிபதிகள் சிலர் இறங்கி இருக்கின்றனர். அவர்கள் எங்களையும் அடக்கி வைக்கப் பார்க்கிறார்கள். ஆனால், நாங்கள் விடுவதாக இல்லை. நித்தி நீக்கத்துக்குப் பிறகு, அரசு இந்த விவகாரத்தில் வேகத்தைக் குறைத்து விடக்கூடாது என்பதற்காகவே, மதுரை வழக்கில் எங்களையும் வாதியாக சேர்க்கச் சொல்லி மனு போட இருக்கிறோம். அருணகிரிநாதரை வெளியேற்றும் வரை எங்கள் போராட்டம் ஓயாது'' என்றார்.
இதனிடையே, கடந்த 21-ம் தேதி இரவு மதுரை ஆதீனத்தைச் சந்தித்த திருப்பனந்தாள் காசிதிருமடத்து அதிபர் முத்துக்குமார சுவாமி தம்பிரானிடம், ''மதுரை ஆதீன மடத்தை அரசு கையகப்படுத்துவதைத் தடுக்க மற்ற மடாதிபதிகள் முயற்சி செய்வதாகச் சொல்கிறார்களே?'' என்று கேட்டதற்கு, ''நித்தியானந்தா நீக்கம் முறைப்படி ரெக்கார்ட் ஆகாமல் இருக்கு. நீதிமன்றம் மூலமாகத்தான் இதைத் தீர்க்கணும். போய் ரொம்ப நாளேச்சேன்னுதான் மதுரை ஆதீன மடத்துக்குப் போனோம். தப்பு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது. மடத்தை கையகப்படுத்துவதாக அரசு முடிவெடுத்து, சட்டமும் அதை உறுதிப்படுத்தினால் யாராலும் அதை நிறுத்தி வைக்க முடியாது. வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், இதற்குமேல் பேசுவதற்கில்லை'' என்று முடித்துக்கொண்டார்.
'நித்தியையும் அருணகிரிநாதரையும் சேர்த்தே வெளியேற்ற வேண்டும்’ என்று குரல் கொடுத்து வந்த மதுரை ஆதீன மீட்பு குழுவின் தலைவர் நெல்லை கண்ணன் இப்போது, 'ஆதீன மடத்தை அரசு ஏற்கக் கூடாது’ என்கிறார். இதுகுறித்து கேட்டதற்கு, ''மதுரை ஆதீன மடத்தை அரசு கையகப்படுத்தினால், சங்கர மடத்துக்கும் பங்கம் வரலாம்னுதான் ராமகோபாலன் போன்றவர்கள் பதறுகின்றனர். இந்தச் சர்ச்சைகளுக்கும் சட்டச் சிக்கல்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் தகுதியான தம்பிரான் ஒருவரை இளைய பட்டமாக உடனடியாக நியமிக்க வேண்டும். அதன்பிறகு, அருணகிரிநாதரை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும். அவர் வெளியேறினால் அடுத்த நிமிடமே இளைய மடாதிபதி மதுரை ஆதீனப் பட்டத்துக்கு வந்துவிடுவார். இதுதான் சரியான வழி. விரைவில் ஆதீன மடத்துக்குள் நுழைந்து, இளைய மடாதிபதியை நியமிக்கக்கோரி அருணகிரிக்கு நெருக்கடி கொடுப்போம்'' என்றார்.
அருணகிரிநாதரோ, ''எங்களுடைய முடிவு இறுதியானது; உறுதியானது. இனிமேல் பக்தராகக்கூட நித்தியானந்தா இந்த மடத்துக்குள் வர மாட்டார். அவரது நீக்கத்தை சட்டப்படி பதிவு செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்'' என்கிறார்.
இந்த விவகாரம் தொடர்பாக, இந்துமுன்னணி அமைப்பாளர் ராமகோபாலனை நாம் தொடர்புகொண்டபோது, ''மதுரை ஆதீன மடம் உட்பட எந்த மடத்தையும் அரசு எடுத்துக்கக்கூடாது என்பது தான் எங்களது கருத்து. சங்கர மடத்துக்காக நான் இதைச்சொல்லவில்லை. சங்கர மடத்துக்காகவே நான் வாதாடி இருந்தாலும் என்ன தப்பு? அருணகிரிநாதர் ஊழல் செய்து விட்டதாகச் சொல்லி அவரை ஆதீன பொறுப்பில் இருந்து நீக்கச்சொல்லுகிறது அரசு. நான் கேட்கிறேன், அரசாங்கத்தில் எத்தனையோ ஊழல்கள் நடக்குது... அதற்காக தமிழக அரசை கர்நாடகா அரசு எடுத்துக்கலாமா? இந்திய அரசை சீனாவிடம் ஒப்படைப்பாங்களா? முடியாதுல்ல... அதுமாதிரித்தான் இதுவும். சைவ மடத்தில் ஒரு பிரச்னை என்றால், சைவ மடாதிபதிகள் கூடிப்பேசித்தான் அதற்கு ஒரு தீர்வை எடுக்கணும். அரசாங்கமோ மற்றவர்களோ யோசனை சொல்லலாமே தவிர, இதைத்தான் செய்ய வேண்டும் என்று நிர்பந்திக்கக் கூடாது'' என்றார்.
''இனி இந்த விவகாரத்தில் அரசின் அணுகுமுறை எப்படி இருக்கும்?'' என்று அடவகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணனிடம் கேட்டதற்கு, ''அருணகிரிநாதர் செய்திருக்கும் தவறுகள் குறித்து தகுந்த ஆதாரங்களை நீதிமன்றத்தில் வைத்திருக்கிறோம். இனி, தீர்ப்பு சொல்ல வேண்டியது நீதிமன்றம்தான். நித்தியானந்தா நீக்கத்தால் தமிழக அரசின் நடவடிக்கையில் எந்த மாற்றமும் இல்லை'' என்கிறார்.
நீதியின் கையில் ஊசலாடுகிறது அருணகிரிநாதரின் 'ஆதீன’ மகுடம்!
துரத்தப்பட்டாரா வைஷ்ணவி?
'நித்தியானந்தாவை நீக்கி விட்டதால், சென்னை உயர் நீதிமன்றத்தில் தீர்ப்புக்காக ஒத்தி வைக்கப்பட்டுள்ள பொதுநல வழக்கில் மறுவிசாரணை வேண்டும். மதுரை ஆதீனத்தை கையகப்படுத்துவது தொடர்பாக மதுரை நீதி மன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்திருக்கும் வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று கேட்டு அருணகிரிநாதர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அஃபிடவிட் செய்வதற்கான முயற்சிகள் நடக்கிறதாம். இந்த விவகாரத்தில், 'மேலும் மேலும் நித்தியானந்தாவை பகைத்துக்கொள்ள வேண்டாம்’ என்று அருண கிரிநாதருக்கு திடீர் பிரேக் போட்டாராம் அவரது உதவியாளர் வைஷ்ணவி. இதில் கடுப்பான ஆதீனம், 'இன்னுமா நான் சீரழிய வேண்டும்’ என்று வைஷ்ணவியை கடுமையாகத் திட்டினாராம். அதனால், 'இனிமேல் மடத்துக்கு வர மாட்டேன்’ என்று சொல்லிவிட்டு இரவோடு இரவாக சொந்த ஊரான கச்சனத்துக்கு வைஷ்ணவி கிளம்பி விட்டதாக சொல்கிறார்கள்.
24-ம் தேதி காலையில் நாம் கச்சனத்துக்குச் சென்றபோது வீட்டில் இருந்தார் வைஷ்ணவி. விஷயத்தைச் சொன்னதும் திடுக்கிட்டது போல் காட்டிக்கொண்டவர், ''எனக்கும் சன்னிதானத்துக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. மழை பெய்து இருக்கிறது. வயல் வேலைகள் நடப்பதைப் பார்க்க வந்தேன். இதோ இன்னைக்கி மதியம் கிளம்பிடுவேன்'' என்று சொன்னவர், அப்போதே அருணகிரிநாதருக்கு போன் செய்தார். இவரது போனுக்காகவே காத்திருந்தவர் போல் உடனேயே லைனுக்கு வந்தார் அருணகிரிநாதர். அவரிடம் நாம் வந்திருக்கும் விஷயத்தை அப்படியே ஒப்பித்தார் வைஷ்ணவி. உடனே நம்மிடம் பேசிய அருணகிரிநாதர், ''எங்களுக்குள் சண்டை எல்லாம் எதுவும் கிடையாது. அப்படியே சண்டை வந்தாலும் உடனே சமாதானம் ஆகிடுவோம். இதுக்கு மேல அந்தப் பொண்ணுகிட்ட எதுவும் கேட்காதீங்க'' என்று கட்டளை போட்டார். அதன்பிறகு, வைஷ்ணவியும் அவரது தங்கை கஸ்தூரியும் கப்சிப் ஆகிவிட்டனர்.