Tuesday, February 7, 2017

அசல் ஆவணங்கள் சரிபார்ப்பு அவசியமா?



சென்னை வேளச்சேரியில் அடுக்குமாடிக் கட்டிடம் ஒன்றில் ஒரு வீடு வாங்க முடிவுசெய்தார் ஒரு நண்பர். வங்கியில் வீட்டுக் கடன் பெற்று அதை வாங்கத் தீர்மானித்தார். ஒவ்வொரு வங்கியிலும் தேர்வுசெய்யப்பட்ட வழக்கறிஞர்கள் குழு ஒன்று உண்டு. வங்கிக் கடன் பெற வேண்டுமென்றால் அவர்களில் ஒருவரிடம் அந்தச் சொத்து தொடர்பான ஆவணங்களைப் பரிசீலனைக்கு அளிக்க வேண்டும். சொத்தில் எந்த வில்லங்கமும் இல்லை என்று அவர்கள் சான்றிதழ் அளித்த பிறகுதான் வீட்டுக் கடன் அளிப்பது தொடர்பாக வங்கி முடிவெடுக்கும்.
வழக்கறிஞர் வீட்டுக்குச் செல்வதற்குமுன் தற்செயலாக என் வீட்டுக்கு அந்த ஆவணங்களுடன் வந்திருந்தார் அந்த நண்பர். அவற்றை வாங்கிப் பார்த்த நான், “இவை நகல்கள்தானே. அசல் இல்லையே!’’ என்றேன். “நானும் கட்டுநரிடம் கேட்டேன். ‘ஒரிஜினல் ஆவணங்களைத் தருவது எங்களுக்குப் பாதுகாப்பானது இல்லை. தவிர இந்த நிலத்தில் 32 வீடுகளைக் கட்டப் போகிறோம். அவ்வளவு பேருக்கும் நாங்கள் அசல் ஆவணங்களைத் தர முடியாது’ என்று சொல்லி விட்டார்” என்றார் நண்பர்.
அசல் ஆவணங்கள் இல்லையென்றால் வழக்கறிஞர் சான்றிதழ் கொடுக்க மாட்டார் என்று கூறினேன். ஆனால், இரண்டே நாட்களில் நண்பரிடமிருந்து தொலைபேசித் தகவல். வழக்கறிஞர் ‘க்ளியர்’ செய்துவிட்டாராம். அதாவது நகல் ஆவணங்களைப் பார்த்தே தன் பரிந்துரையை அவர் அளித்திருக்கிறார்.
நகல் அசலாகுமா?
இந்தப் போக்கு அதிகமாகிவருகிறது என்பதைக் காண முடிகிறது. வங்கி எதற்காக இந்த நடைமுறையைத் தேர்ந்தெடுக்கிறது என்பதை யோசியுங்கள். ‘சொத்துரிமையில் ஏதோ பிரச்சினை இருந்தால் அது கடன் அளித்தவரின் உரிமையைப் பாதிக்கும். சொத்து வாடிக்கையாளரின் கையைவிட்டுப் போனால் அவரால் வங்கிக் கடனைச் சரியாகச் செலுத்த முடியாமல் போகும். இதனால் வங்கிக்கும் நஷ்டம். இதற்காகத்தான் வங்கிகள் ‘வழக்கறிஞர் கருத்து’ (Lawyer’s opinion) என்பதைப் பெறுகிறது. அதுவும் திறமையான அனுபவமுள்ள வழக்கறிஞர்களைத்தான் இந்தக் குழுவில் வங்கி சேர்த்துக் கொள்ளும்.
வழக்கறிஞருக்கு சில ஆயிரங்களை நீங்கள்தான் கொடுக்க வேண்டியிருக்கும் என்றாலும் இது ஒரு பாதுகாப்பான முறை. சொல்லப்போனால் வங்கி மூலமாகக் கடன் பெறவில்லை என்றால்கூட நீங்களாகவே கூட ஒரு சொத்தை வாங்குவதற்குமுன் இப்படி ஒரு வழக்கறிஞரின் மூலம் அந்த ஆவணங்களைச் சரிபார்த்துக் கொள்வது நல்லது.
ஆனால் இப்போதெல்லாம் ஆவண நகல்களை மட்டும் சரிபார்ப்பது என்பது வழக்கமாகி வருகிறது. இது ஆபத்தான ஒரு பழக்கம். கட்டுநருக்கு அவர் தரப்பில் சில தயக்கங்கள் இருப்பதும் இயல்புதான். எந்த ஒப்பந்தமும் போடப்படாத நிலையில் உங்களை நம்பி அவர் எப்படி அசல் ஆவணங்களைக் கொடுப்பார்? அதே சமயம் உங்களைப் பொறுத்தவரை ஒப்பந்தம் போட வேண்டுமென்றால் அதற்கு முன்பாக அந்த ஆவணங்களின் நம்பகத் தன்மையை வழக்கறிஞர் மூலம் சரிபார்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறதே!
இந்த இரண்டு எதிர்கோணங்களையும் சந்திக்க வைக்கும் புள்ளி ஒன்று உண்டு. என் நண்பருக்கு நான் கூறிய ஆலோசனை இது. (இந்த வழிமுறையை நானும் முன்பு பின்பற்றி இருக்கிறேன்).
ஒரு மாற்று யோசனை
வழக்கறிஞரே நேரடியாகக் கட்டுநரின் அலுவலகத்துக்கு வந்து அசல் ஆவணங்களைச் சரிபார்க்கலாம். இதற்கு கட்டுநர் மறுப்பு சொல்ல மாட்டார். (கூடவே அவரும் உட்கார்ந்து கொண்டிருப்பார், அவ்வளவுதான்).
ஆனால் இதில் ஒரு சங்கடம் உண்டு. அதிகமாக அலுவல்கள் உள்ள மூத்த வழக்கறிஞர்கள் இதற்கு உடன்பட மறுக்கலாம். அல்லது இதற்கான நாளை தள்ளிப்போட்டுக் கொண்டடே செல்லலாம். அதற்கான தீர்வு இது. நீங்கள் அளிக்கும் நகல் ஆவணங்களை அந்த சீனியர் வழக்கறிஞர் தனது இருப்பிடத்திலேயே சரிபார்க்கட்டும். பில்டரின் அலுவலகத்துக்கு அவர் தன் ஜூனியர் ஒருவரை அனுப்பி வைக்கலாம். அந்த ஜூனியரின் முக்கிய வேலை அந்த நகல் உண்மையான நகல்தானா என்பதை அசலுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதுதான்.
பல்வேறு காரணங்களால் இந்த நடைமுறைக்கும் வழக்கறிஞர் ஒத்துவரவில்லை என்றால் நீங்கள் இந்தத் திட்டத்திலிருந்து விலகிக்கொள்வதுதான் நல்லது. அல்லது குறைந்தபட்சமாக அந்த ஜூனியர் வழக்கறிஞருக்குப் பதிலாக நீங்களே கட்டுநரின் அலுவலகத்துக்குச் சென்று அசலையும், நகலையும் கொஞ்சம் விவரமாக, நிதானமாக ஒப்பிட்டுப் பார்த்து விடுங்கள்.
நகல்களில் எந்தவித ஏமாற்று வேலைகள் பொதுவாக நடைபெறுகின்றன என்பதைப் பார்க்கலாம். கையெழுத்தில் இது நடைபெற வாய்ப்பு உண்டு.
பிரச்சினைகள் என்னென்ன?
இதோ ஓர் எடுத்துக்காட்டு. ஒரு வீட்டின் உரிமையாளர் யாருக்குமே ‘பவர் ஆஃப் அட்டர்னி’ கொடுக்காத போதும் மோசடிக்காரர் ஒரு ‘பவர் ஆஃப் அட்டர்னி’ ஆவணத்தை முத்திரைத் தாளில் தட்டச்சு செய்து அதற்குக் கீழே வேறொரு இடத்திலிருந்து உரிமையாளரின் கையெழுத்தை அந்த ஆவணத்தில் நகல் செய்யலாம்.
அசல் ஆவணத்தைப் பார்த்தாலே இந்த வித்தியாசம் புரிந்துவிடும். ஆனால் அதன் நகலைப் பார்க்கும்போது வித்தியாசம் தெரியாமல் போகலாம். (ஒரு சின்ன குறிப்பு: இதுபோன்ற நகல்களில் மோசடியாகச் சேர்க்கப்பட்ட கையெழுத்து கொஞ்சம் மங்கலாகத் தெரியும். அதைக் கொண்டு ஓரளவு அது மோசடி ஆவணம் என்று கண்டுபிடிக்கலாம். ஆனால் இப்போதெல்லாம் பிரிண்டர் செட்டிங்கை மாறுதல் செய்து இப்படி ஒட்டப்பட்ட கையெழுத்தும் தெளிவாகவே இருக்கும்படி மோசடி மன்னர்கள் பார்த்துக் கொள்ளத் தொடங்கி விட்டனர்).
எனவே மீண்டும் நாம் கூறுவது இதைத்தான். அசல் ஆவணங்களைச் சரிபார்க்காமல் ஒருபோதும் எந்தச் சொத்தையும் வாங்காதீர்கள்.