Friday, November 30, 2018

காவிரிமைந்தன் என்னும் போலி நடுநிலைவாதி

திரு காவிரிமைந்தன் அவர்களை ஏன் போலி நடுநிலைவாதி என் அழைக்க காரணம் அவர் எப்பொழுதும் குறிப்பிட்ட மதம் சேர்ந்தவர்ளை மட்டும் விமர்சிக்கிறார் நான் அதற்கு பின்னூட்டங்கள் ( கமெண்ட் ) கொடுத்தால் அவரால் தாங்கிக்கொள்ளமுடியவில்லை நான் எந்த ஒரு தவறான வார்த்தைகளையே , கீழ்த்தரமான விமர்சனமோ பதிவிடவில்லை , இருந்தாலும் அவர் அவருக்கு  சார்பாக யார் comment (பின்னூட்டங்கள்) பதிவிடுகிறார்களோ அவர்களையும் அவர் சார்ந்த comment மட்டுமே வைத்துக்கொள்கிறார் மற்றவர்களுடைய பின்னூட்டங்கள்     ( கமெண்ட் ) நீக்கி ( delete ) விடுகிறார் . விமர்சனம் என்று தன்னுடைய wordpress.com பெயர் வைத்துக்கொண்டு விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு கோழை என்று கூட சொல்லலாம்  .                     திரு காவிரிமைந்தன் அவர்கள் யாரை வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம் அனால் அவரை ( அவருடைய பதிவு or எழுத்துக்களை ) யாரும் விமர்சனம்  செய்யக்கூடாது என விரும்புகிறார் . இதை படிப்பர்களுக்கு ஒரு சிறிய விண்ணப்பம் நீங்கள் வேண்டுமானால் அவருடைய பதிவை விமர்சித்து பாருங்கள் உடனே உங்களுடைய பதிவை நீக்கி விடுவார் , நீங்களே புரிந்துகொள்ளுங்கள் அவரை பற்றி.
நன்றி
s.ஞானசேகரன்

Tuesday, November 13, 2018

STAN LEE - 65 க்கும் மேற்பட்ட கேமியோஸ், பல சூப்பர் ஹீரோக்களின் காட்ஃபாதர்... ஸ்டேன் லீ ஏன் கொண்டாடப்படுகிறார்?

65 க்கும் மேற்பட்ட கேமியோஸ், பல சூப்பர் ஹீரோக்களின் காட்ஃபாதர்... ஸ்டேன் லீ ஏன் கொண்டாடப்படுகிறார்? #StanTheMan

து ஒரு சூப்பர்ஹீரோ படம். அதிரடி சண்டைக் காட்சிகள், பிரமாண்டமான அரங்க அமைப்புகள், ஆச்சர்யமூட்டும் கிராபிக்ஸ் காட்சிகள் எனத் திரையரங்கில் விசிலடித்துக் கொண்டாட நிறையவே விஷயங்கள் இருக்கின்றன. இடையில் ஒரு காட்சி. அதில் இப்படிப்பட்ட சமாசாரங்கள் எதுவும் இல்லை. கதைக்குச் சம்பந்தமே இல்லாத உரையாடல்தான் அதில் நிகழ்கிறது. ஆனால், அதை ஒட்டுமொத்த திரையரங்கமும் விசிலடித்துக் கொண்டாடுகிறது. அப்படி என்னதான் இருக்கிறது அந்தக் காட்சியில்? ஒரு வயதான மனிதர் திக்கித் திணறி ஏதோ பேசுகிறார். அதற்கு இத்தனை ஆர்ப்பாட்டமா? இது ஒரு படம், இரண்டு படங்களில் நடக்கும் விஷயமல்ல. அனைத்து மார்வெல் காமிக்ஸ் சம்பந்தப்பட்ட படங்களிலும் இது தொடர்கிறது. யார் அந்த மனிதர்?
மார்வெல் காமிக்ஸ் வாசித்தவர்களுக்கும், அதன் சூப்பர்ஹீரோ படங்களைத் தொடர்ந்து பார்ப்பவர்களுக்கும் இது போன்ற சம்பவங்கள் எந்தவித ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியிருக்காது. சொல்லப்போனால் ``என்னடா இன்னைக்கு சவுண்டு கொஞ்சம் கம்மியில்ல?" என்றுதான் பேசியிருப்பார்கள். காரணம், அவர்களுக்கு எல்லாம் அந்த வயதான மனிதர்தான் சூப்பர்ஹீரோ! அவருக்கு மட்டுமல்ல, மார்வெல்லுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த சூப்பர்ஹீரோ கதைகளுக்கும் பிதாமகன் அவர். இன்று நாம் கொண்டாடும் ஸ்பைடர்மேன், தி ஹல்க், டாக்டர் ஸ்ட்ரேன்ஜ், தி ஃபென்டாஸ்டிக் ஃபோர், டேர்டெவில், ப்ளாக் பேந்தர், எக்ஸ் மென், ஏன்ட்மேன், அயர்ன்மேன், தோர் என அனைவரும் உருவாக உழைத்த மனிதர் இவர். அவர்தான் #StanTheMan என்று கொண்டாடப்படும் ஸ்டேன் லீ!
Stan The Man
ஸ்டேன் லீ என்று அழைக்கப்படும் இந்த ஸ்டேன்லி மார்ட்டின் லீபர் டிசம்பர் 28, 1922 அன்று பிறந்தார். தன் பதின்பருவம் முதலே கடினமான உழைப்பாளி. அதைவிட முக்கியம் புதிய வேலைகளைத் தேடிச் செல்லும் விநோதர். அப்படி அவர் தேடலுக்குக் கிடைத்தது பெரும்பாலும் பார்ட்-டைம் வேலைகள். ஒரு செய்தித் தொடர்பு நிறுவனத்தில் இரங்கல் செய்திகள் எழுதும் வேலை, தேசிய காசநோய் மையத்தில் செய்திக் குறிப்புகள் வெளியிடும் வேலை, சேன்ட்விச்களை அலுவலகங்களுக்கு டெலிவரி செய்யும் வேலை, டிரவுசர்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் ஆபீஸ் பாய் வேலை, புகழ்பெற்ற பிராட்வே நாடகங்களுக்கு டிக்கெட் கிழித்துக் கொடுக்கும் வேலை, `தி நியூயார்க் ஹெரால்டு ட்ரிப்யூன்' செய்தித்தாளுக்குச் சந்தா பிடித்துக் கொடுக்கும் வேலை எனப் பல களங்களில் பல தளங்களில் பயணித்தார்.
தன் 17-வது வயதில் டைம்லி காமிக்ஸ் நிறுவனம் `வேலைக்கு ஆட்கள் தேவை' என்று விளம்பரம் செய்ததைப் பார்த்துவிட்டு அதன் கதவைத் தட்டினார் ஸ்டேன் லீ. சுவாரஸ்யம் என்னவென்றால் அது ஒரு காமிக்ஸ் நிறுவனம் என்றே ஸ்டேன் லீக்குத் தெரியாது. 1939-ம் ஆண்டு அந்த நிறுவனத்தில் அசிஸ்டென்ட்டாக இணைகிறார். அப்போது அவருக்குக் கொடுக்கப்பட்ட பணிகள் கீழே இறங்கிச் சென்று மதிய உணவு வாங்கிவருவது, ஓவியர்கள் காமிக்ஸ் பக்கங்களை வரைந்து முடித்தவுடன் வெளியே தெரியும் பென்சில் கோடுகளை ரப்பர் வைத்து அழிப்பது என ஒரு கடைநிலை ஊழியனுக்கான வேலை மட்டுமே. சிறிது நாள்களில் காமிக்ஸின் `ப்ரூஃப் ரீடிங்' வேலை இவருக்குக் கிடைக்கிறது. அதன் பிறகு அந்நிறுவனத்தின் ஜோ சைமன் மற்றும் ஜாக் கிர்பி இருவரும் இவரை எடிட் செய்யும் பணியில் அமர்த்துகின்றனர். காமிக்ஸுக்கான `கதை உதவி' வேலைகளைச் செய்கிறார். சில வருடங்களில் காமிக்ஸ் புத்தகங்களுக்குக் கதை எழுதும் அளவுக்கும் அசுர வளர்ச்சி அடைகிறார்.
Stan The Man
1960 களில் டைம்லி காமிக்ஸ் நிறுவனம் `மார்வெல்' காமிக்ஸாக உருவெடுக்கிறது. மார்வெல் காமிக்ஸ் தவிர்த்து வேறுசில காமிக்ஸ் நிறுவனங்களுக்கும் ஸ்டேன் லீ கதை எழுதியிருந்தாலும், 1960களில் மார்வெல் காமிக்ஸின் ஆஸ்தான முகமாகி போயிருந்தார் ஸ்டேன் லீ. அப்போதே மார்வெல் காமிக்ஸின் கதைகளைத் தூக்கிக்கொண்டு பிரபல ஹாலிவுட் ஸ்டுடியோக்களின் கதவைத் தட்டினார். 1966-ம் ஆண்டு வெளிவந்த `தீ மார்வெல் சூப்பர்ஹீரோஸ்' என்ற கார்ட்டூன் தொடர்தான் இவருக்குக் கிடைத்த முதல் வெற்றி. மார்வெல் காமிக்ஸ் கதைகள் புத்தகம் தாண்டி திரையை ஆக்கிரமித்ததும் அப்போதுதான். அதன் பிறகு 1980-களில் இவரின் ஹல்க் கதை முதன்முதலாக லைவ் ஆக்ஷன் டிவி தொடராக வெளியானது. 1989-ம் ஆண்டு அந்தத் தொடரின் `தி ட்ரெயல் ஆப் தி இன்கிரெடிபிள் ஹல்க்' என்ற எபிசோடில்தான் முதன்முதலாக கேமியோ (சிறப்புத் தோற்றம்) வேடத்தில் தோன்றினார். மார்வெல் காமிக்ஸில் எழுத்தாளராக இருந்தவர் அதன் பின், எடிட்டர், தயாரிப்பாளர், பப்ளிஷர், பொறுப்பாசிரியர், தலைவர் எனப் படிப்படியாக முன்னேறி சூப்பர்ஹீரோ உலகில் ஒரு முக்கிய அங்கமாகிப் போனார்.
Stan The Man
மார்வெல் காமிக்ஸ் புத்தகங்கள் தாண்டி டிவி, அனிமேஷன், லைவ் ஆக்ஷன் படங்கள் எனக் களமிறங்கியவுடன் அனைத்திலும் கேமியோ ரோல்களில் தோன்றினார் ஸ்டேன் லீ. 2000த்தின்போது வெளியான எக்ஸ்-மென் படத்தில்தான் முதன்முதலாகத் திரையில் தோன்றினார் ஸ்டேன் லீ. அதன்பிறகு இவர் இல்லாத மார்வெல் படங்களே இல்லை எனலாம். விதவிதமான கதாபாத்திரங்கள், தான் உருவாக்கிய சூப்பர்ஹீரோக்களைத் தானே கிண்டலடிக்கும் வசனங்கள் என கேமியோ ரோல்களில் மட்டுமே தோன்றி ஒரு சூப்பர்ஸ்டாராக உருமாறினார். இவருக்கு என்றே தனி ரசிகர்கள் கூட்டம் உருவானது. `இந்தப் படத்தில் ஸ்டேன் லீ என்னவாக வருவார்?' என அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். 
2000த்தின் தொடக்கத்தில் மார்வெல்லின் போட்டி காமிக்ஸ் நிறுவனமான DC காமிக்ஸ் தன்னுடைய சூப்பர்ஹீரோ கதாபாத்திரங்களை ஸ்டேன் லீ வடிவமைத்தால் எப்படியிருக்கும் எனக் கற்பனை செய்து இவர் உதவியுடனே சில காமிக்ஸ் புத்தகங்களை வெளியிட்டது. தன் போட்டியாளர்களும் மதிக்கும் அளவுக்கு அவரின் புகழ் இருந்தது. `Excelsior' என்று இவர் உருவாக்கிய ஒரு காமிக்ஸ் சொல் மிகப் பிரபலம். பின்னாளில் அதுவே இவரின் முத்திரையாகிப் போனது. ஸ்டேன் லீ அந்த வார்த்தையைச் சொல்வதை கேட்பதற்கே கூட்டம் கூடும் அளவுக்கு அந்தச் சொல் பிரபலமாகிப் போனது. 
Stan The Man
இன்று வால்ட் டிஸ்னி நிறுவனம் `பிளாக் பேந்தர்' என ஒரு கறுப்பின சூப்பர்ஹீரோவை மையப்படுத்தி பெரும்செலவில் படம் எடுத்ததற்கே நாம் அதைக் கொண்டாடுகிறோம். ஆனால், 1960களில் அமெரிக்காவில் சமூக சம உரிமைகளாக கறுப்பின மக்கள் போராடிக் கொண்டிருந்த `Civil Rights Movement'-ன் போதே `பிளாக் பேந்தர்' கதாபாத்திரத்தை ஒரு கறுப்பின சூப்பர்ஹீரோவாக ஜாக் கிர்பியுடன் இணைந்து உருவாக்கினார் ஸ்டேன் லீ! பதின்பருவத்திலிருந்தே உழைக்கும் இந்த மனிதர் தன் 95 வயது வரையும் உழைத்துக் கொண்டேதான் இருந்தார். எந்தவொரு மனிதனும் தன் வாழ்நாளில் இவர் அளவுக்குக் கதைகள் எழுதியிருக்க முடியாது. அத்தனை காமிக்ஸ் புத்தகங்களுக்குச் சொந்தக்காரர் இவர். இத்தனை சாதனைகளைச் செய்தவர் நேற்று தன் 96-வது பிறந்தநாளுக்கு ஒரு மாதமே இருந்த நிலையில் தன் மூச்சை நிறுத்திக் கொண்டார்.
அவர் ஒரு பேட்டியில் இப்படிக் கூறியிருப்பார். ``நான் உருவாக்கிய கதாபாத்திரங்களை திரையில் பார்க்கையில் நான் ஒரு படைப்பாளியாக நிச்சயம் இருக்க மாட்டேன். அப்போது நான் ரசிகன் மட்டுமே! எல்லோருடனும் சேர்ந்து படத்தைப் பார்த்துவிட்டு இறுதியில் அதைப் பாராட்டவே நான் விரும்புகிறேன். ஒவ்வொருமுறை நான் உருவாக்கிய சூப்பர்ஹீரோக்கள் படங்களாக வெற்றி பெறுகையில் என்னைப் பாராட்டுகிறார்கள். ஆனால், அதில் நடித்த நடிகர்கள், அதை உருவாக்கிய இயக்குநர்கள் எல்லோருமே அந்த வெற்றிக்குச் சொந்தக்காரர்கள். இது ஒரு கூட்டு முயற்சிதான். நானும் அதில் ஒரு பங்களித்துள்ளேன். அவ்வளவே! இத்தனை வருடங்கள் கடந்தும் அந்தக் கதாபாத்திரங்களை உருவாக்கிய என்னைத் தேடி வந்து பேட்டி எடுக்கிறீர்கள். அதுவே எனக்கு மகிழ்ச்சிதான். என்னைக் கேட்டால் 100 வருடங்களுக்குப் பிறகு என் பெயரை யாரேனும் கேட்டால், ஒருவேளை என் பெயர் அப்போதும் பேசப்பட்டால், `அவரின் கதைகள் எனக்குப் பிடிக்கும். அவை எனக்கு எப்போதும் மகிழ்ச்சியைத் தந்தன' என்று மக்கள் பேச வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். இதுதான் ஒவ்வொரு எழுத்தாளனும் எதிர்பார்க்கும் அங்கீகாரம்!"
Stan The Man
நிச்சயம் உங்களின் கதைகளும் கதாபாத்திரங்களும் பேசப்படும் ஸ்டேன். அப்போது ஒலிக்கும் ஒவ்வொரு கரவொலியும், விசிலும் உங்களுக்கானதுதான்!
பின்குறிப்பு: இனி மார்வெல் படங்களில் ஸ்டேன் லீயின் கேமியோக்களைப் பார்க்கவே முடியாதா என வருத்தம் கொள்ளவேண்டாம். இனி வரப்போகும் மூன்று படங்களுக்கான (கேப்டன் மார்வெல், அவெஞ்சர்ஸ் 4, ஸ்பைடர்மேன் ஃபார் ஃப்ரம் ஹோம்) கேமியோ காட்சிகளை முன்னரே ஸ்டேன் லீயை வைத்து எடுத்துவிட்டனர். அந்தப் படங்களில் எல்லாம் அவர் நிச்சயம் தோன்றுவார். நம்மை ரசிக்க வைப்பார்!