Friday, April 29, 2011

"ஊழல்' திரைப்பட தயாரிப்பாளர் மன்மோகன்: கட்காரி கிண்டல்

ஊழல் என்ற திரைப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்களாக பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியாவும் உள்ளனர் என, பாரதிய ஜனதா தலைவர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.


உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் நடந்த பொதுக்கூட்டத்தில் நிதின் கட்காரி பேசியதாவது: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி மற்றும் ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து பிரதமரிடம் கேட்டால், "எனக்கு எதுவும் தெரியாது' என்கிறார். சோனியாவும் இதே பதிலைத் தான் தெரிவிக்கிறார். ஊழல் செய்பவர்கள் மட்டுமல்லாது ஊழலுக்கு துணை போவோரும், ஊழல் செய்வதை பார்த்துக் கொண்டிருப்போரும் தண்டிக்கப்பட வேண்டும். "ஊழல்' என்ற திரைப்படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர்களாக சோனியாவும், மன்மோகனும் உள்ளனர். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஊழல் செய்ததற்காக சுரேஷ் கல்மாடி மீது மட்டும் ஏன் செருப்பு வீச வேண்டும். இந்த ஊழலில், டில்லி முதல்வர் ஷீலா தீட்சித்துக்கும் பங்கு உண்டு. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி தொடர்பான கோப்புகளுக்கு அனுமதியளித்ததில் அமைச்சரவை குழுவுக்கும், நிதி அமைச்சகத்துக்கும், பிரதமர் அலுவலகத்துக்கும் பங்கு உண்டு. எனவே, இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட அனைவரது மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.


தனக்கு வேண்டப்பட்ட நிறுவனத்துக்கு முன்னாள் அமைச்சர் ராஜா, ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு செய்ததை பிரதமர் கண்டு கொள்ளவில்லை. உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில், மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டோம். ஏற்கனவே செய்த தவறை மீண்டும் செய்ய நாங்கள் தயாராக இல்லை. போதிய இடம் கிடைக்காவிட்டால், எதிர்க்கட்சி வரிசையில் அமர்வதில் மகிழ்ச்சியடைவோம். உண்மையான ஜனநாயகக் கட்சி பாரதிய ஜனதா கட்சி தான். அடிமட்ட தொண்டர் கூட கட்சியின் தலைமை பதவியை அடையலாம். ஆனால், காங்கிரஸ் கட்சியில் சோனியாவுக்கும், ராகுலுக்கும் அடிபணிய வேண்டும். இவ்வாறு நிதின் கட்காரி பேசினார்.

No comments:

Post a Comment