Friday, July 6, 2012

ஐரோப்பிய கடவுள் துகள் ஆராய்ச்சி மையத்தில் நடராஜர் சிலை. இந்திய விஞ்ஞானி தகவல்.

ஹிக்ஸ் பாசன் என்று அழைக்கப்படுகிற கடவுள் துகளை கண்டுபிடித்து உள்ளதாக சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனீவா நகரில் நேற்று விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள அறிவிப்பு, உலகமெங்கும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இது தொடர்பான ஆராய்ச்சியை நடத்தி வந்த செர்ன் என்று அழைக்கப்படுகிற அணு ஆராய்ச்சிக்கான ஐரோப்பிய மையத்தில் இந்தியா அளித்த நடராஜர் சிலை வைக்கப்பட்டுள்ளது. நடராஜர் பிரபஞ்ச கடவுளாக கருதப்படுவது குறிப்பிடத்தக்கது. மேலும், கடவுள் துகள் ஹிக்ஸ் பாசன் என்று அழைக்கப்படுவதின் பின்னணியில் இந்திய விஞ்ஞானியும் உள்ளார். 

ஹிக்ஸ் என்பது இங்கிலாந்து விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸ் என்பதின் பின்பாதி. பாசன் என்பது இந்திய விஞ்ஞானி சத்யேந்திரநாத் போஸ் என்பதில் உள்ள போஸ் என்ற வார்த்தையில் இருந்து உருவாக்கப்பட்டுள்ளது. ஆமாம், கடவுள் அணுத்துகளை கண்டறிவதற்கு நமது இந்திய விஞ்ஞானியின் ஆராய்ச்சியும் அடிப்படையாக அமைந்து இருக்கிறது. 

இதுபற்றி செர்ன் ஆராய்ச்சிக்கூடத்தின், செய்திதொடர்பாளர் நேற்று குறிப்பிடுகையில்:

இந்த திட்டத்தின் வரலாற்று தந்தை போன்றது இந்தியா என பெருமிதத்துடன் கூறினார்

கலைஞர், ஜெயலலிதா, ராமதாஸ்... யாரும் எங்களை மதிப்பதில்லை!" திருமாவளவன்


கஸ்ட் மாதம் வந்தால், 50  வயது ஆகிறது தொல்.திருமா வளவனுக்கு. இப்போதே கல்யாணக் கச்சேரியில் இருக்கிறது  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அலுவலகம். ''பொன்விழா நாயகன்னு போஸ்டர் அடிப் பாங்கள்ல!'' என்று கேட்டால், சிரிக்கிறார் திருமா.  
''எப்படி இருக்கிறது ஓர் ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சி?''
''தமிழக வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு ஓர் ஆண்டு சாதனைகள் பிரசா ரத்துக்கு மக்களின் வரிப் பணத்தை இப்ப டிக் கோடிக்கணக்கில் வீணடித்ததுதான் அ.தி.மு.க. ஆட்சியின் முக்கியமான சாதனை. சம்சாரிகள் குடும்பத்துக்கு ஆடு - மாடுகள் கொடுத்து மேய்க்கச் சொல்லி குலத் தொழில் முறையை ஊக்குவிப்பது இன்னொரு சாதனை. வேறென்ன சொல்ல?''
''உங்கள் கட்சிக்கு எனப் புதிதாக தொலைக்காட்சி சேனல் தொடங்கப்போகிறீர்களாமே?''
''அது எங்கள் கனவுத் திட்டம்!
தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க. கட்சிகளுக்கு எனப் பிரத்யேக சேனல்கள் இருக்கின்றன. இடதுசாரிக் கட்சிகள் ஓர் ஆர்ப்பாட்டம் செய்தால், அது ஒரு செய்தியாகவேனும் பதிகிறது. ஆனால், நாங்கள் நடத்தும் பொதுக் கூட்டமோ, பிரமாண்ட மாநாடோ எதுவுமே பொதுமக்களைச் சென்று சேர்வதே இல்லை. அதனாலேயே எங்களுக்கு என்று தனி சேனல் தொடங்குவது அவசியம் ஆகிறது. சேட்டிலைட் சேனல் துவங்க 20 கோடி ரூபாய் சொத்து மதிப்பும் 5 கோடி ரூபாய் வங்கிக் கணக்கிலும் இருக்க வேண்டும் என்பது விதிமுறை. அதற்காகத்தான் என் 50-வது பிறந்த நாளை முன்னிட்டு கட்சித் தொண்டர்களிடம் பொற்காசுகளை நன்கொடையாகப் பெறுகிறோம்!''  
''என்னதான் காரணம் சொன்னாலும், ஏற்கெனவே கட்சிக்கு உழைப்பைக் கொட்டும் தொண்டர்களிடம் இருந்து தங்கம் வசூலிப்பது முறையா?''
''இப்படி விமர்சனம் வரும் என்று தெரியும். கட்சித் தொண்டர்கள் அனைவரும் தர வேண்டும் என்று கட்டாயம் எதுவும் இல்லை. இயன்றவர்கள் மனமுவந்து தருவதை மட்டுமே, அதுவும் நகையாக அல்லாமல் தங்கக் காசுகளாக மட்டுமே, ரசீதுடன் பெற்றுக்கொள்கிறோம். இப்படிப் பெறப் படும் ஒவ்வொரு கிராம் தங்கமும் கட்சி வளர்ச்சிப் பணிகளுக்கு மட்டுமே செலவிடப் படும். நான் 11 ஆண்டுகள் அரசு ஊழியராக இருந்து சம்பாதித்த காசில்கூட, என் அம்மாவுக்கோ அக்காவுக்கோ நகை வாங் கியது இல்லை. அவ்வளவையும் கட்சிப் பணிகளுக்குத்தான் செலவிட்டேன். பணமாகப் பெறுவதைவிட தங்கமாகப் பெறுவது எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டே!''
''முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளின்போது பேரமைதி காத்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, இப்போது டெசோ அமைப்புக்கு மீண்டும் உயிரூட்டுவதன் மூலம் என்ன சாதிக்க விரும்புகிறார்? அதில் சேர உங்க ளுக்குத் தாமதமாக அழைப்பு வந்தபோதும் ஆதரவு அளித்து இருக்கிறீர்களே?''
''முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளின்போது தி.மு.க-வின் மெத்தனப்போக்கை நானே விமர்சித்தவன்தான். ஆனால், ஈழத் தமிழர் பிரச்னையைப் பொதுமக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தது தி.மு.க-தான் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை. ஒட்டுமொத்த இந்தியாவும் பிரதமர் இந்திரா காந்தியும் புலிகளை ஆதரித்த நேரத்தில் எம்.ஜி.ஆர். புலிகளுக்கு பல கோடி ரூபாய் கொடுத்தார். அதை நான் குறைத்து மதிப்பிட வில்லை. ஆனால், இந்தி யாவும் ஆளும் மத்திய அரசும் புலிகளை எதிர்த்த நேரத்தில், ஈழத்துக்கு ஆதரவாக நின்றது தி.மு.க. மட்டுமே. இன்றைக்கு தமிழீழத்துக்காக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று உரிமையாக உரத்துச் சொல்லக்கூடிய நிலையில் இருக்கும் ஒரே பெரிய மக்கள் இயக்கம் தி.மு.க. மட்டுமே. தமிழீழத்துக்கான பொது வாக்கெடுப்பு குறித்துப் பேசுவதாலும் வெகுமக்களுக்கு பிரச்னையைக் கொண்டுசென்று அவர்களை ஒன்றிணைக்க முடியும் என்பதா லுமே நான் டெசோ அமைப்பில் இணைந்துஇருக்கிறேன்.
தமிழ்நாட்டில் சிறு சிறு தமிழ்த் தேசியக் குழுக்களாக இருந்துகொண்டு ஈழம் குறித்துப் பேசிப் பயன் இல்லை. அகில இந்திய அளவில் கவனத்தை ஈர்க்க இந்த டெசோ அமைப்பால் முடியும் என்று நான் நம்புகிறேன்!''
'' 'தி.மு.க. உங்களை எந்தக் காலத்திலும் நம்பிக்கைக்கு உரிய தோழனாக மதிப்பது இல்லை. ஆனாலும், நீங்கள் தொடர்ந்து தி.மு.க-வுடனேயே நட்பு பாராட்டுகிறீர்கள்’ என்கிறார்களே?''
''தி.மு.க. மட்டும் அல்ல... அனைத்துக் கட்சி களும் எங்களை அப்படித்தான் நடத்துகின்றன. கலைஞர் மட்டும் அல்ல, ஜெயலலிதா, ராமதாஸ் உட்பட அனைவரும் அப்படித்தான். இது ஒரு பொதுப் பண்பாகவே மாறிவிட்டது. என்ன செய்ய... இங்கே நாங்கள் தனி ஆவர்த்தனம் செய்ய முடியாதே. தலித் அரசியலை மட்டும் முன்னெ டுத்து நாங்கள் யாருடனும் கூட்டணி வைக்க முடியாதே!
ஓரளவுக்கு இடதுசாரிகளோடு மட்டுமே அனுசரித்துப் போக முடியும். ஆனால், உள்ளாட்சித் தேர்தலின்போது தி.மு.க., அ.தி.மு.க. தவிர்த்த இடதுசாரிகள், இஸ்லாமியக் கட்சிகள் உள்ளிட்ட ஒரு அணிக்கு அழைப்பு விடுத்தேன். அதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் தா.பாண்டியன் 'எங்களுக்குச் சொந்த புத்தி இருக்கிறது. திருமாவளவன் சொல்லத் தேவை இல்லை’ என்றார். என் விருப்பத்தை அவர் அறிவுரை யாகப் புரிந்துகொண்டார்போலும்.
அதனால்தான் நாங்கள் எங்க ளுடன் ஒன்றுபடும் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கிறோம். தமிழ் நாட்டு அரசியல் வரலாற்றில் ஒரு தலித் கட்சிக்கு தி.மு.க-தான் இரண்டு எம்.பி. பதவிகளைக் கொடுத்தது. எங்களை மதிக்கிற இடத்தில்தான் நாங்கள் இருக்க முடியும்!''
'' 'ஈழ அவலங்களுக்குக் காரணமான பிரணாப் முகர்ஜியை நீங்கள் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆதரிக்கிறீர்கள்’ என்கிற குற்றச்சாட்டுக்கு உங்களின் பதில் என்ன?''
''இந்தியாவின் குடியரசுத் தலைவர் வேட்பாளரை அவர் ஈழ ஆதரவாளரா, இல்லையா என்கிற ஒரு அளவுகோலை மட்டும் வைத்து அளப்பது தவறு. இதில் பன்முகச் சிக்கல்கள் உள்ளன. காங்கிரஸும் பா.ஜ.க-வும் இந்தியாவின் பிரதானமான கட்சிகள். மதவெறிகொண்ட, விளிம்பு நிலை மக்களுக்கு எதிரான  கொள் கைகளை வைத்திருக்கும் பா.ஜ.க. நிறுத்தும் வேட்பாளரை எங்களால் ஆதரிக்கவே முடியாது. பா.ஜ.க. இந்தியாவில் இந்துக்களை ஆதரிக்கிறது. இலங்கையில் சிங்கள பௌத்தரான ராஜபக்ஷேவை ஆதரிக்கிறது. ஆகவே, ஈழ விவகாரத்தின் அடிப்படையிலும் பா.ஜ.க-வை ஆதரிக்காத முடிவு சரியே. தலித் பார்வையில் பார்த்தாலும் அது சரியே. எனவே, பிரணாப் முகர்ஜியைத்தான் ஆதரிக்க வேண்டி உள்ளது!''
''பெரியார் குறித்தும் திராவிடம் குறித்தும் அண்மைக் காலமாக எழுந்துள்ள சர்ச்சைகளில் உங்கள் நிலைப்பாடு என்ன?''
''என்னைப் பொறுத்தவரை அம்பேத்கரை எப்படிப் பார்க்கிறேனோ, அப்படித்தான் பெரியாரையும் பார்க்கிறேன். பெரியார் வாழ்ந்த காலத்தின் நிலவியல், அரசியல் போன்றவற்றைப் புரிந்துகொள்ளாமல் எதுவும் பேசக் கூடாது. அப்போது ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகியவற்றை உள்ளடக்கிய சென்னை மாகாணம் இருந்தது. தமிழ்நாடு அப்போது உருவாகவில்லை. அந்தச் சமயத்தில் திராவிடர் கழகத்தை உருவாக்கினார் பெரியார். திராவிடக் கருத்தியலைப் பேசினார். அது சரிதான். அதன் பின்னரே 1956-ல் மொழிவழி மாகாணங்கள் உருவாகி தமிழ்நாடு உருவானது. இன்றைக்கு தமிழ்த் தேசியத்தை முன்னெடுப்பது சரியானதே. ஆனால், இன்றைக்கு தமிழ்த் தேசியம் பேசவே, அன்றைக்குப் பெரியார்தான் வித்திட்டார் என்பதை மறந்து, திராவிடத்தை முற்றிலுமாகப் புறந்தள்ளுவது நன்றியுணர்வு அற்ற செயல். பெரியாரிடம் கருத்து மாறுபட் டால் விமர்சனம் செய்யலாம். ஆனால், அவரையும் திராவிடக் கருத்தியலின் பங்களிப் பையும் கொச்சைப்படுத்துவதை ஒருபோதும் ஏற்க முடியாது. அப்படிக் கொச்சைப்படுத்துபவர்கள் பேசும் தமிழ்த் தேசியம் எத்தகை யது? தமிழ்த் தேசியம் என்பது இந்துத்துவத் தேசியத்தை, இந்திய தேசியத்தை, இந்தி தேசியத்தை எதிர்ப்பதாக, சாதிகளை ஒழிப்பதாக இருக்க வேண்டும். வெறும் மொழி உணர்வு, இன உணர்வு என்கிற அடிப்படையில் எழும் தமிழ்த் தேசியம் சரியானது அல்ல. ஈழ மக்களை நான் ஆதரிக்கிறேன் என்றால், அங்கு வாழ்பவர்கள் தமிழர்கள் என்பதால் அல்ல; அங்கே அவர்கள் சிங்கள ஒடுக்குமுறையால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதால்தான். ஆனால், ஈழத்தை ஆதரிக்கிறவர்கள் அங்கே வாழ்ப வர்கள் தமிழர்கள் என்கிற ஒரே காரணத்துக் காக ஆதரிக்கிறார்கள். இங்கே தமிழ்நாட்டில் பரமக்குடியில் உள்ள தலித் தமிழர்கள் கொல்லப்பட்டால் கேட்கத் துணிச்சல் இல்லாதவர்கள், ஈழத்தில் நடந்தால் மட்டும் கூக்குரல் இடுவேன் என்பது போலித்தன மானது!

Wednesday, July 4, 2012

சிறை பயத்தைப் போக்க என்னைப் பேச அழைத்தீர்களா? தி.மு.க-வின் புதிய போர்வாள் வருகிறார்!


சிறையில் இருந்து மீண்டது முதல், கருணாநிதி தான் செல்லும் இடம் எல்லாம் எடுத்துச் செல்லும் புதிய போர்வாளாக மாறிவிட்டார் ஆ.ராசா! 
சென்னை, கோவை, நீலகிரி, பெரம்பலூர், திருவாரூர்... எனக் களைகட்டிய ராசாவின் பயணம் அடுத்து வடசென்னையில் மையம் கொண்டது. தி.மு.க. வரும் 4-ம் தேதி நடத்தப்போகும் சிறை நிரப்பும் போ​ராட்டத்துக்​கான விளக்கப் பொதுக் கூட்டத்தை நாடுமுழுவதும் நடத்த உத்தரவு இட்டார் கருணா​நிதி. அதில், முன் னணிப் பேச்​சாள ராக ஆ.ராசா அமைந்திருப்பது கட்சிக்காரர்களை புருவம் உயர்த்திக் கவனிக்க வைத்துள்ளது!
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு எதிரே உள்ள தம்புச்செட்டித் தெருவில் ஆ.ராசா முழங்குகிறார் என்ற விளம்பரத்தைப் பார்த்ததும் சென்னையின் பல பகுதிகளில் இருந்தும் தொண்டர்கள் கூடியது ஆச்சர்யமானது!
ராசாவுக்கு முன்னதாகப் பேசினார் நடிகர் வாகை சந்திரசேகர். அவர் ராசாவைப் புகழ்ந்து தள்ளினார்.
'நீதிக்குத் தலை வணங்காத ஒரு ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கிற ஜெயலலிதா இருக்கும் தமிழ்நாட்டில், நீதிக்குத் தலைவணங்கி 11 மாதங்களுக்கு மேலாகத் திகார் சிறையில் இருந்து குற்றமற்றவன் என்று நிரூபிக்​கின்ற, நிரூபிக்கப்போகின்ற தலைவர் கலை ஞரின் உடன்பிறப்பு ஆ.ராசா இங்கே வந்து இருக்கிறார். ஜாமீன் கிடைத்ததும் டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்து கலைஞரைச்சந்தித்த பிறகு 'எப்படி இருக்கிறீர்கள் ராசா?’ என்று பத்திரிகை​யாளர்கள் கேட்டபோது, 'தாயின் கருவறையில் குழந்தை இருக்கும்போது பனிக்குடத்தில் எப்படிப் பத்திரமாக இருக்குமோ, அப்படி நான் கலைஞரின் அரவணைப்பில் பத்திரமாக இருக்கிறேன்’ என்றவர் ராசா. இதெல்லாம்வாய்தா மட்டுமே வாங்கிக்கொண்டு இருக்கும் ஜெயலலிதாவுக்குத் தெரியுமா?' என்று எடுத்த எடுப்பிலேயே ராசாவைப் புகழ்ந்து பேச, கூட்டத்தில் பலத்த கைதட்டல்.!
''பெங்களூரு கோர்ட்டில் நடக்கும் வழக்கில் எத்தனை வக்காலத்து வாங்குகிறார் ஜெயலலிதா? கண் வலி, காது வலி என்று எத்தனை வலிகள் இருக்கிறதோ, அத்தனை வலிகளையும் காரணமாகச் சொல்கிறார். ஆனால், இங்கே அமர்ந்திருக்கிறாரே அன்புத்தம்பி ராசா, குற்றமற்றவன் என்பதை நிரூபித்த பிறகுதான் வெளியே வருவேன்; அது வரைக்கும் சிறையில்தான் இருப்பேன் என்னு சொல்லி, அதுபோலவே செய்து காட்டியவர்' என்று ராசாவின் புகழ் பாடி சந்திரசேகர் முடித்தபோது மழை தூற ஆரம்பித்து இருந்தது!
அடுத்துப் பேச வந்த ராசாவுக்கு தி.மு.க. தொண்​டர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு. ' 'கொட்டுகிற மழையில், வீசுகிற புயலில், சரளைக் கற்கள் நிரம்பிய மலை உச்சியை நோக்கி நாம் நடக்கிறோம். கையில் ஒரு அகல் விளக்கு. அந்த விளக்கு அணையாமல் இருப்பதற்குத் தம்பிகளே உங்கள் இரு கைகளும் தேவை’ - 1949-ம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தை ராபின்சன் பூங்காவில் தொடங்கிய நேரத்தில் இப்படி ஒரு மழைதான் பெய்தது என்பதை நினைவூட்டும் வகையில் மழை கொட்டிக்கொண்டு இருக்கிறது. இதற்கு முன் பேசிய செயல்வீரர்கள், தமிழ்நாட்டின் சிறைச்சாலைகளில் இடம் இல்லை என்றால், வடநாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் அடைப்பதற்காக ஆளும் கட்சி திட்டமிடுகிறது என்று சொன்னார்கள். ஒருவேளை அந்தப் பயம் வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் திகார் சிறையில் இருந்த என்னை, இங்கு அழைத்து வந்திருக்கிறீர்கள் என்று எண்ணுகிறேன். அரசாங்கத்துக்கும் உங்களுக்கும் ஒன்று சொல்லிக்கொள்கிறேன். இந்த ஆட்சியில் இங்கு இருக்கும் ஜெயிலை விட, ஆந்திரா, கர்நாடகாவில் உள்ள சிறைகளில் சுத்தமான, சுகாதாரமான உணவும், நீரும், உடையும் கிடைக்கிறது.  
இந்தப் போராட்டத்துக்கும், இதற்கு முன்னர் திராவிட முன்னேற்றக் கழகம் நடத்திய போராட்டங்​களுக்கும் இரண்டு வித்தியாசங்கள் உண்டு. முதலாவது, இதுவரை நடந்த போராட்டங்களில் தகுதி உள்ளவர்களை மட்டுமே எதிர்த்துக் களம் கண்டோம். ஆனால், இந்தப் போராட்டத்தில் அந்தத் தகுதியை எதிர்பார்க்க முடியாது. இன்னொன்று, நாங்கள் சிறை நிரப்பிய போதெல்லாம் எங்கள் இனத்துக்கும் மொழிக்கும் வெளியில் இருந்து ஆபத்து வந்தது. தலைவர்கள் தங்களை ஆராய்ந்து அடையாளப்படுத்திக் கொண்டனர். எனவே, நாங்கள் ஆடு, மாடு உள்ளே வராமல் இருப்பதற்காக வேலி கட்டினோம். வேலி கட்டுவதற்காக அந்தப் போராட்டங்கள் நடைபெற்றன. ஆனால், இந்தப் போராட்டம் நாற்றங்காலில் ஒரு நச்சுச்செடி களை யாக வளர்ந்திருக்கிறதே, அந்தக் களையைப் பிடுங்கி எறியும் போராட்டம்.
நான் காரில் வந்துகொண்டு இருந்தபோது ஒலிபெருக்கியிலே ஒரு நண்பர், 'ஆட்சியை விட்டு ஜெயலலிதாவை உடனடியாக இறக்க வேண்டும்' என்று சொன்னார். அவசரப்படத் தேவைஇல்லை. அரசியல் சட்டமும் அதற்கு இடம் கொடுக்காது. எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது கலைஞருக்கு சிறைக்கைதியின் அரைக்கால் சட்டையையும், ஒரு பனியனையும் கொடுத்து, கையிலே அலுமினியத் தட்டையும் கொடுத்தார். எம்.ஜி.ஆரே ஜனநாயகவாதி இல்லையென்றால், எம்.ஜி.ஆர். வீட்டில் இருக்கும் கட்டிலுக்கும், நாற்காலிக்குமா ஜனநாயகம் தெரிந்து இருக்கும்?
நான் இப்போது திமிரோடு சொல்கிறேன். நீ இன்னும் 10 ஆண்டுகளுக்கு முதலமைச்சராக இருந்தாலும், எங்களைத் தாண்டி ஆட்சி அமைக்க முடியாது. ஒரு அரசு நிகழ்ச்சி நடக்கிறது. முதல்வர் போய் உட்காருகிறார். முதலில் விழா தொடங்குகிறது என்று சொல்கிறார் ஒரு அதிகாரி. விழா தொடங் குகிறது என்று சொன்னால் முதலில் எந்தப் பாட்டை இசைக்க வேண்டும்? தமிழ்த்தாய் வாழ்த்து. அதைக் கொண்டுவந்ததே கலைஞர்தான். அந்தப் பாட்டைப் போடும்போது மதிப்புமிக்க ஜெயலலிதா அவர்களே, தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்களே... உங்கள் கனத்த சரீரத்தைத் தூக்கிக்கொண்டு எழுந்திரிக்கிறீர்களே, அது தமிழுக்காக மட்டுமல்ல; என் தலைவன் கலைஞருக்காகவும்தான்!'' என்று, ஆ.ராசா கொட்டித் தீர்க்க, மழையும் அவரைப் போல வே ஆவேசத்துடன் கொட்டித் தீர்த்தது!

ஜெகனை மீட்பதற்குப் பேரம் நடக்கிறதா? விறுவிறு விஜயம்மா


கன் கைகளில் விலங்​குகள் பூட்டப்​பட்​டிருக்க, தாய் கண்​ணாம்பா பக்கம் பக்கமாய் வசனம் பேசி, 'மனோகரா’ படத்தில் சபதம் எடுப்பார். அது​போலவே, தன் மகன் ஜெகன் மோகன் ரெட்டியின் கைகளில் விலங்கு மாட்​டப்பட்டதும், சபதம் எடுத்துக்​கொண்டு அரசியல் களத்தில் குதித்தார் விஜயம்மா. சொன்​னபடியே, ஆட்சியில் இருக்கும் ஆந்திர காங்கிரஸ் கட்சியை அடித்துத் துவைத்துக் காயப் போட்டு விட்டார். 
எந்த ஜோடனையும் இல்​லாமல் வெள்ளந்தியாகவே பேசுகிறார் விஜயம்மா...
''இந்த அளவுக்கு வெற்றி​யை எதிர்பார்த்தீர்​களா?''
''என்னுடைய ஒரே பலம் என் மகன் ஜெகன்தான்.அவரை வேண்டும் என்றே தேர்தலுக்கு முன்னரே, திட்​டமிட்டு வேட்டையாடி​யது காங்கிரஸ். அதை எதிர்த்​துத்தான் போ​ராடி​னேன். அந்த 21 நாட்களும்சரி​யாக சாப்பிட்​டேனா... தூங்கினேனா என்றுகூட தெரியவில்‌லை. என் மகள் ஷர்மிளா, ஸ்கூலுக்குப் போகிற தன் பிள்ளைகளை பெங்களூருவில் தனியாக விட்டுவிட்டு, என்னுடன் ஆந்திரா முழுக்க‌ வெயிலில் கடுமையாகப் பிரசாரம் செய்தார். தேர்தல் நெருங்க நெருங்க ஏகப்பட்ட மிரட்டல்கள், போலீஸ் கெடுபிடிகள். நெல்லூரில் தொண்டை கட்டிய நிலையிலும் பேசிக்கொண்டு இருந்த​போது கூட்டத்தில் இருந்து கல் எறிந்தார்கள். நல்லவேளையாக எதுவும் ஆகவில்லை. ஒவ்வொரு நாளும் வீட்டைவிட்டுக் கிளம்பும்போது, உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்பதை உணர்ந்தே கிளம்பினேன். ஆனால் நான் கும்பிடும் தெய்வமும், மக்களும், ராஜண்ணாவும் (கணவர் ராஜசேகர ரெட்டி) என் பக்கம் இருந்தாங்க. அதனால்தான் இத்தனை பெரிய வெற்றி.''
''சந்திரபாபு நாயுடுவும் சிரஞ்சீவியும், 'இது அனுதாபத்தால் கிடைத்த வெற்றி’ என்று சொல்​கிறார்களே?''
''போட்டியிட்ட எட்டு தொகுதிகளிலும் டெபாசிட்டைப் பறிகொடுத்த சந்திரபாபு நாயுடுவுக்கு எங்களுடைய வெற்றியை ஜீரணிக்க முடியவில்லை. சிரஞ்சீவி தம்பி பாவம்... சொந்தமாக கட்சி ஆரம்பித்து, தன் ரசிகர்களையும் தொண்டர்களையும் 'அம்போ’னு விட்டுட்டு காங்கிரஸில் போய் செட்டில் ஆயிட்டார். டெல்லியில் திட்டு வாங்காமல் தப்பிக்கத்தான் இப்படி ஏதாவது சொல்வார். நம்பாதீங்க. மக்கள் ராஜண்ணாவின் ஆட்சியை விரும்புகிறார்கள் என்பதின் வெளிப்பாடுதான் இந்த வெற்றி.''
''காங்கிரஸ் கட்சியே உங்களுக்கு எதிரியாக மாறியது ஏன்?''
''காங்கிரஸை ஆட்சியில் அமர்த்துவதற்காக முழங்கால் வலியோடு பொட்டல் வெயிலில் ஆந்திராவின் அத்தனை மூலைக்கும் பாத யாத்திரை போனார் ராஜண்ணா. 37 வருடங்களாக காங்கிரஸ் கட்சிக்காக வியர்வை சிந்தியவர், கடைசியில் அந்தக் கட்சிக்காகவே ரத்தமும் சிந்தி செத்துப்போனார். காங்கிரஸையும் பெரிய குடும்பத்தையும் (சோனியாவின் குடும்பம்) எந்த அளவுக்கு அவர் நேசித்தார் என்பது என்னைவிட ஆந்திராவின் அடிமட்ட காங்கிரஸ் தொண்டனுக்கு நன்றாகவே தெரியும். 'ராகுல் காந்தியை 2014-ல் பிரதமர் ஆக்க வேண்டும்’ என்று முதலில் வெளிப்படையாகச் சொன்ன முதல்வர் ராஜண்ணாதான். அப்படிப்பட்டவரைப் பறிகொடுத்து விட்டேன். அவரது உடலுக்கு முன்னால் நின்றுகொண்டு சோனியா காந்தி, 'நான் இருக்கேன்... அழாதீங்க. மிஸ்டர் ரெட்டி செய்ய வேண்டியதை நான் செய்வேன். நீங்க அழுவது இதுவே கடைசியாக இருக்கட்டும்’ என்று என் கையைப் பிடித்துச் சொன்னார். சத்தியம் செய்யாத குறைதான். ஆனால் அன்னையாக நினைத்த என்னை, இதுவரை அழ மட்டுமே வைத்திருக்கிறார் சோனியா. இதுநாள்வரை அவரை நான் எதிரியாக நினைத்ததே இல்லை. ஆனால், என் ஒரே மகனை வேண்டும்என்றே வேட்டையாடினால் சும்மா விடுவேனா?''
''அப்படியென்றால், உங்கள் ஆதரவு எம்.எல்.ஏ-க்களைக்கொண்டு காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்ப்பீர்களா?''
''ஒருபோதும் அப்படி ஒரு கீழ்த்தரமான அரசியலை நடத்த மாட்டோம். அப்படி நினைத்திருந்தால்,எப்போதோ ஆட்சியைக் கவிழ்த்திருக்க முடியும். நானும் ஜெகனும் மக்களை நம்பி இருக்கிறோம். மற்றதை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். அதே நேரத்தில், காங்கிரஸ் ஏற்படுத்தும் அத்தனை நெருக்கடிகளையும் சகித்துக்கொண்டு சும்மா இருக்கவும் மாட்டோம். 2014-ல் ராகுல் காந்தி​யின் திட்டங்களைக் காலி பண்ணி, ராஜண்ணா ஆட்சியை நிறுவுவோம். அதற்காக இப்போதே உழைக்கத் தயாராகி விட்டோம்!''
''ஜெகன் மீதான ஊழல் குற்றச்சாட்டு, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்​தது​​ போன்ற‌ புகார்களுக்கு  உங்கள் பதில் என்ன?''
''நாங்கள் சுரங்கத் தொழிலை ராஜண்ணா உயிருடன் இருந்த காலத்திலேயே நடத்திக்​கொண்டுதான் இருக்கிறோம். அவர் இருந்தபோது கண்ணுக்குத் தெரியாத ஊழல், இப்போது மட்டும் காங்கிரஸின் கண்ணுக்குத் தெரிகிறதா? ஜெகன் மீதும், என் கணவர் மீதும் ஆயிரம் குற்றச்சாட்டுகளை அடுக்கட்டும், வழக்குகளைப் போடட்டும். அதை எல்லாம் சட்டப்படி எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம். எங்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு மக்கள் நீதிமன்றத்தில் தீர்ப்பைப் பெற்று விட்டோம். அம்​பேத்கரின் சட்டத்தின் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அங்கேயும் ஜெயித்​துக் காட்டுவோம்.''
''ஜெகனை மீட்பதற்காக ஒய்.எஸ்.ஆர் காங்​கிரஸை மீண்டும் காங்கிரஸோடு இணைக்கப் பேரம் நடக்கிறது என்று சொல்லப்​படுவது உண்மையா?''
''பிரதமருக்கும், சோனியாவுக்கும், குடியரசுத் தலைவருக்கும், 'ஜெகனை மீட்டுத் தாருங்கள்’ என்று நான் எழுதும் கடிதங்களை வைத்து, ஆந்திர அரசியல்வாதிகள் அவிழ்த்துவிடும் கட்டுக்​கதை இது. இப்போதுகூட பிரதமரை சந்திக்க அனுமதி கேட்டு இருக்​கிறேன். ஆனால் உடைந்த கண்​ணாடிகள் என்றுமே ஒட்டாது!'' என்றார் உறுதியோடு!

என் கைதுக்குக் காரணம் சசிகலா! ஜெயலலிதாவின் மகள் என கூறும் பிரியா மகாலட்சுமி


ள் பேரைச் சொல்லி ஏமாற்றுபவர்கள் ஒரே நாளில் அம்பலப்பட்டுப்போவார்கள். ஆனால், பிரியா மகாலட்சுமி விஷயம் இதில் வித்தியாசமாக இருக்கிறது!
 'ஜெயலலிதாவின் மகள்’ என்று சொல்லி பிரியா மகாலட்சுமி பல பிரபலங்களைக் கலங்கடித்த கதையை கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே எழுந்தது. இப்போது சில வாரங்களுக்கு முன், அவர் போலீஸ் வலையில் சிக்கிய கதையையும் அவரே முதலில் சொன்னார். வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி வட்டாரங்களில் அதிரடி டீலிங்குகளில் இறங்கி, பலரையும் ஏமாற்றிப் பணம் பறிக்கத் தொடங்கியதுதான் அவர் கம்பி எண்ணக் காரணம் ஆனது. ஆனாலும் தனது நிலைப்பாட்டில் கொஞ்சமும் மாறாமல் உள்ளே இருக்கிறார் பிரியா. தான் கைது செய்யப்பட்டது  பற்றியோ தன்னைப்பற்றி பத்திரிகைகள் எழுதுவதைப் பற்றியோ கொஞ்சமும் வருத்தம் இல்லாதவராக இதுவரை சொன்னதில் இன்னும் உறுதியாக இருக்கிறாராம் பிரியா.
சேலம் சிறையில் இருக்கும் பிரியா தன்னுடைய சக கைதிகளிடமும் தன் இஷ்டத்துக்கும் 'டுமீல்’ விட ஆரம்பித்து இருக்கிறாராம். இதை நம்மிடம் பகிர்ந்து கொள்ளும் நபர்கள், 'இதையெல்லாம் கேட்கும்போது அந்தப் பெண்ணுக்கு மனநிலை சரியாக இருக்கிறதா என்று சந்தேகமா இருக்கிறது’ என்கிறார்கள்.
என்ன சொல்கிறாராம் பிரியா மகாலட்சுமி?
''எங்க மம்மி அவங்கதான். நான் பொறந்ததுமே எங்க மம்மி தனியா ஒரு பங்களாவை வாடகைக்கு எடுத்து விஜயானு ஒருத்தங்ககிட்ட கொடுத்து என்னை வளர்க்கச் சொல்லிட்​டாங்க. என்னை வெளிநாட்டுக்கு அனுப்பிப் படிக்க​ வெச்சாங்க. ஊட்டியில ஒரு காலேஜ்லதான் எம்.பி.ஏ. படிச்சேன். எங்க மம்மி என்கூட ரெகுலரா போன்ல பேசுவாங்க. அவங்களுக்கு எப்போ என்னைப் பார்க்கணும்னு தோணுதோ, அப்போ அவங்களுக்கு வேண்டப்பட்ட ஒருத்தர் மூலமா சொல்லி அனுப்புவாங்க. அவங்க சொல்லி அனுப்பும் இடத்துக்கு நான் போவேன். மம்மியைப் போலவே எனக்கு அரசியலுக்கு வரணும்னு ஆசை. அதை மம்மிகிட்டயும் சொல்லி இருக்கேன். அதுக்கு மம்மி, 'வெய்ட் பண்ணு’னு சொல்வாங்க. ஆனாலும் அரசியல்ல பின்னால் இருந்து என்ன செய்ய முடியுமோ, அதை எல்லாம் நான் செஞ்சிட்டுதான் இருந்தேன். எங்க மம்மி பண்ற அரசியலே எனக்குப் பிடிக்காது.  'இதை இப்படி பண்ணக் கூடாது மம்மி’னு நானே அவங்​களுக்குப் பலதடவை  சொல்லி இருக்கேன். எங்க மம்மியைத்தான் எல்லோரும் போல்டுனு சொல்லுவாங்க. ஆனா எங்க மம்மி, 'என்னைவிட நீதான் போல்டான பொண்ணு’னு சொல்லுவாங்க.
நான் யாரையும் ஏமாத்திப் பணம் பறிக்கலை. எங்ககிட்ட இல்லாத பணமா சொல்லுங்க..? போலீஸ் திடீர்னு வந்து ஏதோ விசாரிக்கணும்னுதான் கூட்டிட்டுப் போனாங்க. ஸ்டேஷன்ல  என்கிட்ட மூணு மணி நேரம் ஏதேதோ கேள்வி கேட்டாங்க. என்னை ரொம்ப வல்கரா திட்டினாங்க. நான் யாருன்னு சொன்ன பிறகும் காவல் நிலையத்துல எனக்கு இந்த கதின்னா, சாதாரணப் மக்களுக்கு என்ன மரியாதை இருக்கும் சொல்லுங்க? இதை எல்லாம் மம்மிகிட்ட சொல்லணும்.
எங்க மம்மிக்கும் எனக்கும் எந்த பிரச்னையும் இல்லாமத்தான் இருந்தது. வெளியில போன சசிகலா எப்போ கார்டனுக்குள்ள திரும்ப வந்தாங்களோ, அப்பவே எல்லாப் பிரச்னையும் ஆரம்பமாயிடுச்சு. நான் எங்க மம்மிகூட சேர்ந்துட்டா, அவங்களைக் கழட்டி விட்டுருவாங்களோனு சசி கலாவுக்குப் பயம். அதனாலதான் என்னை ஒழிச்சுக் கட்டத் திட்டம் போட்டிருக்காங்க. அவங்க போட்ட சதித்திட்டத்துலதான் நான் இப்போ கம்பி எண்ணிட்டு இருக்கேன். இப்போ நடக்குற விஷயம் எல்லாம் எங்க மம்மிக்குத் தெரிஞ்சிருக்கும். ஆனாலும், அவங்க அமைதியா இருக்காங்க. நான் சொல்றது எதுவும் பொய் இல்லை. வேணும்னா... டி.என்.ஏ. டெஸ்ட் எடுக்கட்டும். இனி நான் வெளியில வந்த பிறகுதான் ஒரு நிஜப்போர் ஆரம்பிக்கப் போகுது.
என்னை வளர்த்த ஒரே காரணத்துக்​காக விஜயா அம்மாவையும் ஜெயில்ல பிடிச்சுப் போட்டிருக்காங்க. இது எல்லாம் நியாயமா சொல்லுங்க... எல்லாமே அந்த சசிகலா செய்யும் சதிதான். பிரியா மகாலட்சுமியின் ஒரு முகத்தை மட்டும்தான் இதுவரை எல்லோருக்கும் தெரியும். இனி நான் என்ன பண்ணுவேன்னு வெளியில வந்து காட்டுறேன்'' என்று கோபத்தோடு சொல்லி இருக்கிறார்.
அது மட்டும் இல்லாமல், ''இன்னும் இரண்டு நாளில் என்னை கோர்ட்டுக்குக் கொண்டு போகப்போறாங்க. அப்போ எல்லா பத்திரிகைகாரங்களும் வருவாங்க. படம் எடுப்​பாங்க. நான் மேக்அப் போடாமல் இதுவரை வெளியில போனதே கிடையாது. இப்போ மேக் அப் இல்லாம அவங்க முன்னாடி எப்படி போய் நிற்கிறது..? ரொம்பக் கஷ்டமா இருக்கு..'' என்று வருத்தப்படுகிறாராம்.
இந்தப் பிரியா மகாலட்சுமி யார்? முதல்அமைச்சரைச் சம்பந்தப்படுத்தி ஒருவர் இப்படி வாய்க்கு வந்தபடி பேச ஆரம்பித்த பிறகும், இந்த விஷயத்தில் காவல்துறை மௌனம் சாதிப்பது ஏன்?  வீண் பப்ளிசிட்டி கொடுத்துவிடக் கூடாது என்று எண்ணி மௌனம் சாதித்தால்... அதுவே வேண்டாத வில்லங்கத்தை உண்டு பண்ணாதா?

நித்தியை ரவுண்ட் கட்டும் விவகாரங்கள்! ஃபோரன்சிக் ரிப்போர்ட்... ஆண்மை பரிசோதனை... பாஸ்போர்ட் தில்லுமுல்லு


'தாந்த்ரீக செக்ஸ் கான்ட்ராக்ட், ஆர்த்தி ராவின் அதிரடித் தகவல்கள், பழைய சீடர்களின் ரகசிய வாக்குமூலங்கள்’ என அடுக்கடுக்காகப் பல ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டும், நித்திக்கு எதிரான வழக்கு ஒன்றரை வருடமாக‌ நொண்டிதான் அடிக்கிறது கர்நாடகாவில். இதனால், வாக்குமூலம் அளித்தவர்களை விட அதிகமாக நொந்துபோய் இருப்பது கர்நாடக சி.ஐ.டி. போலீஸார்தான். இப்போது அவர்கள் நித்தியை வளைக்க ஃபோரன்சிக் லேப் ரிப்போர்ட்டை மீண்டும் துருப்புச் சீட்டாக எடுத்திருக்கிறார்கள். இதனால் கிடுகிடுத்துப்போய் இருக்கிறார் நித்தி. 
நித்தியின் அமெரிக்க‌த் தில்லுமுல்லு!
நித்தியின் அமெரிக்கத் தில்லுமுல்லுகளை அரங்கேற்றம் செய்திருக்கும் ஸ்பந்தனா மகளிர் அமைப்பைச் சேர்ந்த வீணாவிடம் பேசினோம். ''நடிகை ரஞ்சிதாவுடனான வீடியோ சர்ச்சையில் சிக்கியதில் இருந்து, தனது கற்பை நிரூபிக்க அமெரிக்காவில் அலைந்து திரிந்து 'முறைப்படி’ வாங்கிய ஃபோரன்சிக் லேப் ரிப்போர்ட் சகிதம்தான் வெளியே செல்வார் நித்தி. அமெரிக்காவில் இருக்கும் ஆர்த்தி ராவின் உதவியோடு, அங்கு நித்தி வாங்கிய ஃபோரன்சிக் லேப் ரிப்போர்ட்களை வர வைத்தோம். அத்தனை லேப் ரிப்போர்ட்களிலும் வீடியோவை பொய் என சர்ட்டிஃபிகேட் கொடுத்திருக்கிறார்கள். அதற்குக் காரணம்... நித்தி தரப்பில் ஃபோரன்சிக் லேபுக்கு கொடுத்த அத்தனை வீடியோக்களும் யூ-டியூபில் இருந்து டவுன்லோடு செய்யப்பட்டவை. அதை அவர்கள் அளித்த சர்ட்டிஃபிகேட்டே சொல்கிறது. இதை வைத்துக்கொண்டுதான் 'வீடியோ பொய்’ என நித்தி ஊரெல்லாம் தம்பட்டம் அடிக்கிறார்'' எனக் கொதித்தவர், அத்தனை ஆதாரங்களையும் நம்மிடம் கொடுத்தார்.
தில்லுமுல்லு 1: ‘PRIMEAU PRODUCTIONS’
அமெரிக்காவில் இருக்கும் இந்த லேபை சேர்ந்த எட்வர்ட் ஜே அளித்திருக்கும் ரிப்போர்ட்டில், 'இந்த வீடியோ எலெக்ட்ரானிக் இன்ஜினீயரிங் டெக்னிக்குகளைப் பயன்படுத்தி ஹாலிவுட் படத்தைப் போல் எடுக்கப்பட்டிருக்கிறது. வீடியோ முழுக்க பாட்டுச் சத்தமும், ஒன்ஸ்மோர்(!) காட்சிகளும் நிறைய இருக்கின்றன. எனவே, வீடியோ பொய்யானது. இதுகுறித்த விசாரணைக்காக கர்நாடக சி.ஐ.டி. போலீஸ் எப்போது என்னை அழைத்தாலும் வரத் தயாராக இருக்கிறேன்'' என்று நித்திக்காக வக்காலத்து வாங்குகிறார்.
தில்லு முல்லு 2: Yonovitz & Joe Lab
அமெரிக்காவில் இருக்கும் இன்னொரு ஃபோரன்சிக் லேப்பான யோனோவிட்ஸ் - ஜோ லேபை சேர்ந்த ஹேபர்ட் ஜோ அளித்திருக்கும் 16 பக்க ரிப்போர்ட்டில்,  'எங்களிடம் கொடுக்கப்பட்டிருக்கும் நித்தி - ரஞ்சிதா செக்ஸ் ஸ்கேன்டல் வீடியோ, யூ-டியூபில் இருந்து டவுன்லோடு செய்யப்பட்டது. இந்த வீடியோ, கோவையான காட்சிகளால் உருவாக்கப்படவில்லை. வீடியோ மற்றும் ஆடியோ எடிட் செய்யப்பட்டு இருக்கிறது. எடிட் செய்யப்பட்ட எந்த வீடியோவும் பொய் என அமெரிக்க நீதிமன்றமே தீர்ப்பளித்து இருக்கிறது. எனவே, நித்தி - ரஞ்சிதா செக்ஸ் ஸ்கேன்டல் வீடியோ பொய்யானது என சான்று அளிக்கிறோம்’ என்கிறார்கள்.
தில்லு முல்லு 3: NCAVF (National center for audio & video forensics)
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருக்கும் ‘NCAVF’ லேப்பை சேர்ந்த 'டேவிட் நோட்டோவிஷ்’ அளித்திருக்கும் ரிப்போர்ட்டில் 'இந்த வீடியோவில் பதிவாகி இருக்கும் காட்சிகளின் நகர்வுகளைப் பார்க்கும்போது, வீடியோ ஆடியோ டெக்னிக்குகளைப் பயன்படுத்தி 'அவதார்(!)’ பட ரேஞ்சில் உருவாக்கி இருக்கிறார்கள்., இது ஒரிஜினலாக இருக்க வாய்ப்பு இல்லை’ என கையெழுத்திட்டு இருக்கிறார்.
தில்லு முல்லு 4: FORENSIC REPORT 1.0
நித்தி தரப்பால் கடைசியாகப் பெறப்பட்ட ரிப்போர்ட் இதுதான். அமெரிக்காவில் இருக்கும் ஃபோரன்சிக் ரிப்போர்ட் 1.0 லேப் சான்று அளித்திருக்கிறது. அதில், 'அமெரிக்க போலீஸ் ஃபோரன்சிக் செய்யும் முறையான முகவெட்டையும், உடலமைப்பையும் கிராஃப் செய்து சோதித்துப் பார்த்தோம். நித்தியின் உண்மையான முகவெட்டையும், ரஞ்சி தாவின் உண்மையான முகவெட்டையும் உடலமைப்புகளையும் சோதித்தோம். அதை, வீடியோவில் பதிவாகி இருக்கும் உருவங்களின் முகவெட்டு மற்றும் உடலமைப்போடு ஒப்பிட்டுப் பார்த்தபோது, அந்த வீடியோ பொய் எனக் கண்டறிய முடிந்தது’ எனக்கூறி இருக்கிறார்கள்.
நித்தி போலி... லெனின் வீடியோ அசல்!
நித்தி தரப்பு கத்தையாக‌ வைத்திருக்கும் இந்த நான்கு 'பலே’ ரிப்போர்ட்களுக்கும் பதிலாக‌ சி.ஐ.டி. தரப்பு வைத்திருப்பது டெல்லியில் உள்ள ஃபோரன்சிக் லேப் கொடுத்த மூன்று பக்க ரிப்போர்ட்தான். அதுகுறித்து சி.ஐ.டி. போலீஸ் தரப்பில் விரிவாகப் பேசினார்கள். ''அமெரிக்கா, ஆப்ரிக்கா என்று எங்கே போய் வேண்டுமானாலும் நித்தி ஆயிரம் ரிப்போர்ட் வாங்கி வரட்டும். இந்திய நீதிமன்றங்கள் டெல்லியில் உள்ள ஃபோரன்சிக் சயின்ஸ் லேபரட்டரி அளிக்கும் சர்ட்டிஃபிகேட்டை மட்டும்தான் நம்பும். மற்றவற்றை ஏற்றுக்கொள்ளாது.
லெனின் வீடியோ எடுத்த ஸ்பை கேமரா, ரெக்கார்டான சென் டிஸ்க் சிப், பதிவு செய்யப்பட்ட மோசர்பேர் டி.வி.டி., புகைப்படங்கள், ஆறு வீடியோ தொகுப்புகள் என எல்லாவற்றையும் ஃபோரன்சிக் சயின்ஸ் லேபரட்டரி பக்காவாகப் பரிசோதித்து இருக்கிறது. லெனின் கொடுத்த ஒரிஜினல் ஃபர்ஸ்ட் காப்பி வீடியோவில் இருப்பது நித்தியானந்தாவும் நடிகை ரஞ்சிதாவும்தான் என்பதைத் தெளிவாகச் சொல்லி இருக்கிறது. இதை மறைக்கவும், நீதிமன்றத்தையும் போலீஸையும் திசை திருப்பவும், நித்தி இந்த மாதிரி ரிப்போர்ட்களை அனுப்பி வருகிறார். பொய்யை மீண்டும் மீண்டும் சொல்வதால், அது உண்மையாகி விடாது'' என்று சீறுகிறார்கள்.  
ஆட்டம் காட்டும் ஆண்மை பரிசோதனை!
சி.ஐ.டி. போலீஸார் எட்டு முறை சம்மன் அனுப்பியும், ஆஜர் ஆகாமல் டிமிக்கிக் கொடுத்த நித்தியை, ஆண்மைப் பரிசோதனைக்கு ஆஜராகும்படி நீதிமன்றமே கட்டளை இட்டது. பெங்களூரு விக்​டோரியா மருத்துவமனையில் ஐந்து பேர் கொண்ட மருத்துவக் குழு, நித்திக்கு ஆண்மை பரிசோதனையும், குரல் பரிசோதனையும், முழு உடல் பரிசோதனையும் செய்யக் காத்திருக்கிறது. இந்தநிலையில், சிஐ.டி. போலீஸுக்கு ரகசியத் தகவல் ஒன்று வந்திருக்கிறது. அதாவது,  சி.ஐ.டி. போலீஸார் ஆண்மைப் பரிசோதனை செய்யப்போகும் தேதியை முன்கூட்டியே அறிவித்துவிட்டால், நித்தி ஐந்து நாட்கள் சாப்பிடாமல் ஈரத் துணியுடன் குண்டலினி யோகா செய்து, உடலின் ஹார்மோன்கள் உற்பத்தியை வெகுவாகக் குறைத்து விடுவார்’ என நித்திக்கு நெருக்கமானவர்களே சொல்லி இருக்கிறார்கள். ஒருவேளை சோதனையில் நித்தி, அப்படி ஏதேனும் நிகழ்த்திக் காட்டிவிட்டால், ஆர்த்தி ராவின் வாக்குமூலம் பொய்யாகிவிடும் என்பதால் ரொம்பவே உஷாராக‌ இருக்கிறது சி.ஐ.டி. போலீஸ். பரிசோதிக்கும் நாளையும் மருத்துவர்களின் பெயர்களையும் ரகசியமாக வைத்துள்ளனர்.
பிறந்த தேதி, படிப்பு குளறுபடி!
தன்னுடைய இயற்பெயரான ராஜசேகரனை, சாமியாரான பிறகு சுவாமி பரஹம்சா நித்தியானந்தர் என மாற்றிக்கொண்ட நித்தி, ஆசிரமக் குறிப்புகளில் ஆரம்பித்து விக்கிபீடியா வரை தன்னுடைய பிறந்த நாளை 1978 ஜனவரி 1- எனக் குறிப்பிட்டிருக்கிறார். அவரது பாஸ்போர்ட்டிலோ அவரது பிறந்த நாள் 13-03-1977 என கொடுக்கப்பட்டு இருக்கிறது. 'பிறந்த நாள் சர்ச்சை இருக்கிறதே?’ என்ற கேள்வியோடு நித்தியின் சீடர்களை அணுகியபோது, 'ஞானிகளும், கடவுளின் அவதார புருஷர்களும் இரண்டு முறை பிறப்பார்கள். அதை விமர்சித்தல் பாவம்’ என்கிறார்கள்.   ஆர்த்தியின் வாக்குமூலம், ஃபோரன்சிக் ரிப்போர்ட் தில்லுமுல்லு, வயது, படிப்பு உள்ளிட்ட குளறுபடிகள் குறித்து நித்தியானந்தாவிடம் பேச பலமுறை முயற்சித்தோம். ''ஜூ.வி-க்கு சுவாமி பதில் சொல்ல மாட்டார்'' என்று அவரது தரப்பில் சொன்னார்கள். கர்நாடக சி.ஐ.டி. போலீஸார் வளைக்கும்போது பதில் சொல்வாரா என்று பார்ப்போம்!

''அந்த இரண்டு பெண்கள்!''
லெனின் வெளியிடாத ரகசியம்
 நித்தியானந்தா தரப்பினரால் போடப்பட்ட வழக்கு ஒன்றுக்காக வாரணாசி கோர்ட்டில் ஆஜராக புறப்பட்ட லெனினை சென்னையில் சந்தித்துப் பேசினோம்.
''நித்தியானந்தாவுக்கும் உங்களுக்கும் எப்படி பிரச்னை ஆரம்பித்தது?''
''நித்தியானந்தாவை கடவுள் என்று நம்பி நான்கு வருஷம் பாத பூஜை செய்து இருக்கிறேன். வெறும் ஆன்மிக ஸ்தாபனமாக மட்டும் இல்லாமல், அரசியல் சார்ந்த இயக்கமாக தியான பீடத்தை மாற்றத் திட்டம் போட்டார். 2016-ல் நித்தியானந்தா யாரைக் கை காட்டுகிறாரோ அவர்தான் தமிழக முதல்வராக வரவேண்டும் என்று திட்டம் வகுத்தார். 2020-ல் இந்தியாவின் பிரதமரை நிர்ணயம் செய்யும் சக்தியாக இருக்கணும்; 2025-ல் உலகம் முழுக்கப் போற்றப்படும் 'வாட்டிகன்’ மாதிரி நித்தியானந்தா மாறணும் என நினைத்தார். இதற்காக உலகம் முழுக்கத் தனது மன்றங்களை வைத்து கூட்டம் சேர்க்க ஆரம்பித்தார். தமிழகம் முழுக்க இருக்கும் ஆன்மிக மடங்கள் அத்தனையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வர வேண்டும் என்பது 2007-ம் ஆண்டே நித்தியானந்தா எடுத்த முடிவு.
நித்தியானந்தா தவறு செய்கிறார் என்று தெரிந்த பிறகுதான் நாங்க அவரோட அறையில் வீடியோ கேமரா வெச்சோம். அந்த வீடியோவை வெச்சுப் பணம் பறிக்க வேண்டும் என்பது என் நோக்கம் கிடையாது. அப்படி நான் நினைத்திருந்தால், நான் யார் என்பதோ நித்தியானந்தா யார் என்பதோ உலகத்துக்கு தெரியாமலே போயிருக்கும். அவர் கொடுக்கும் பணத்தை வாங்கிக்கொண்டு நானும் ஒரு குட்டி ஆதீனமாக செட்டில் ஆகி இருப்பேன். ரஞ்சிதாவைப் பழி வாங்கவேண்டும் என்பதும் என் நோக்கம் கிடையாது. நித்தியானந்தாவுக்கு வைத்த பொறியில் ரஞ்சிதா சிக்கிக் கொண்டார். 22 மணி நேரம் ஓடக்கூடிய அந்த வீடியோவில் ரஞ்சிதா தவிர வேறு இரண்டு பெண்களும் வருகிறார்கள். வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், அந்த இரண்டு பெண்களைப் பற்றிய விவரங்களை என்னால் சொல்ல முடியாது.''
''ஆர்த்தி ராவ் சொல்லி வரும் புகார்களை எல்லாம் கவனித்​தீர்களா..?''
''ஆர்த்தி ராவ் மட்டும் இல்லை. நித்தியானந்தாவால் பாதிக்கப்பட்ட பெண்கள் 20 பேரும் ஆண்கள் 10 பேரும் வாய் திறக்காமல் இருக்கிறார்கள். யாராவது நித்தியானந்தா பற்றி வாய் திறந்தால், அவர்கள் மீது ஏதாவது வழக்குப் போட்டு, கோர்ட்டுக்கு அலைய வைப்பதுதான் நித்தியானந்தாவின் வழக்கம். என் மீது பல்வேறு இடங்களில் 12 வழக்குகளை போட்டு இருக்கிறார்கள். கோர்ட்டில் ஆஜராக ஊர் ஊராகப் போகவே எனக்கு நேரம் சரியாக இருக்கிறது. நித்தியானந்தா செய்த தவறுகளை ஊருக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது மட்டும்தான் நான் செய்த தவறு.
2007-ல் இருந்து 2010-ம் ஆண்டு வீடியோ வெளியாகும் காலம் வரை நித்யானந்தாவுக்கு பெர்சனல் செகரெட்டரியாக இருந்த கோபிகா என்ன ஆனார் என்பது இதுவரை தெரியவில்லை. அவர் உயிரோடு இருக்கிறாரா, இல்லையா என்பதே சந்தேகமாக இருக்கிறது. அவர் வெளியில் வந்தார் என்றால், இன்னும் பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும். நித்தியானந்தாவைப் பற்றி வெளியில் சொல்லப்படாத ஒரு மிகப்பெரிய ரகசியம் இருக்கிறது. அதைக் கூடிய சீக்கிரமே நான் சொல்வேன்'' - நிறுத்தி நிதானமாக சொல்லி முடித்தார் லெனின்.

நில மோசடியா? ஜெயலலிதாவின் பழிவாங்கும் நடவடிக்கையா? துக்கையாண்டியின் நிலைமை என்ன?


ஐ.பி.எஸ். அதிகாரிகள் சர்ச்சையில் சிக்குவது புதிதல்ல. புதுவரவு... துக்கையாண்டி. பணியில் இருந்து ஓய்வுபெறுவதற்கு ஒரு நாள் முன்பு, அவர் மீது நடவடிக்கை பாய்ந்து, ஒய்வூதியப் பலன்களுக்கும் குழிவெட்டி இருக்கிறது ஒரு நில மோசடிப் புகார்! 
என்ன நடந்தது?
சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ராஜய்யா. மகேந்திரகுமார் கம்பானி என்பவரின் நிலத்தை வாங்குவதற்கு, அந்த நிலத்தின் பவர் ஏஜென்ட்டான ரவியுடன் ஒப்பந்தம் செய்து, முன்பணமாக ஐந்து லட்ச ரூபாய் கொடுத்தார் ராஜய்யா. அதன்பிறகு, நீலாங்கரை சார்பதிவாளர் அலு​வலகத்தில் வில்லங்கம் போட்டுப் பார்த்தார். அப்போதுதான், ராஜய்யா வாங்குவதற்கு ஒப்பந்தம் போட்டிருக்கும் நிலத்தை ஏற்கெனவே, தனலட்சுமி என்பவர் வேறு ஒருவருக்கு விற்று இருப்பது தெரிந்தது.
நிலத்துக்கு உரிமையாளரான மகேந்திரகுமார் கம்பானியிடம் இருந்து, 2007-ம் ஆண்டு தனலட்சுமி அந்த நிலத்துக்கான பவரைப் பெற்று, அதைத் திருச்சி பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்திருக்கிறார். அதன்பிறகு அந்த இடத்தை சுப்புலட்சுமி என்பவருக்கு விற்பனை செய்திருக்​கிறார். அடுத்த கட்ட விசாரணையில், ரவிதான் உண்மையான பவர் ஏஜென்ட் என்பதும் தனலட்சுமி மோசடிப் பேர்வழி என்ற செய்தியும் ராஜய்யாவுக்குத் தெரிய வந்தது. 1997-ம் ஆண்டே இறந்துவிட்ட மகேந்திரகுமாரிடம் இருந்து 2007-ம் ஆண்டு பவர் பெற்றதாக தனலட்சுமி திருச்சி பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்திருப்பதை அறிந்து,  நீலாங்கரை போலீஸில் புகார் அளித்தார். இதை விசாரிக்கத் தொடங்கிய நேரத்தில்தான், தனலட்சுமி மற்றொரு நிலத்துக்கும் இதேபோல், போலியாக பவர் பத்திரம் தயாரித்து சுப்புலட்சுமிக்கு விற்பனை செய்திருப்பது தெரியவந்தது. இதில், சுப்புலட்சுமி என்று சொல்லப்படுபவர் துக்கையாண்டியின் மனைவி!
இந்த விசாரணையின்போதுதான், போலி பவர் பத்திரங்களைத் தயார் செய்ததில், துக்கை​யாண்டியின் அதிகாரம் விளையாடி இருப்பதைக் கண்டுபிடித்தனர். மொத்த நிலத்தின் அளவு 10 கிரவுண்ட். லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் டி.ஜி.பி-யே தலையிட்டதால், பத்திரப்பதிவு அதிகாரிகள் எந்தக் கேள்வியும் கேட்காமல் தனலட்சுமிக்கு போலி பவர் வழங்கி அதைப் பதிவு செய்து கொடுத்துள்ளனர்... என்ற அடிப்படையில் இப்போது குற்றச்சாட்டு சொல்லப்படுகிறது.
தனலட்சுமியைப் பிடிக்க போலீஸ் தீவிர முயற்சி செய்தது. ஆனால், முடியவே இல்லை. ஏனென்றால் தனலட்சுமி என்பதே கற்பனை கேரக்டராம்!
''போலியாக பவர் பெற்ற போலி தனலட்சுமி, அந்த இரண்டு இடங்களையும் நீலாங்கரை சார்பதிவாளர் அலுவலகத்தில் வைத்து துக்கை​யாண்டியின் மனைவி சுப்புலட்சுமி பெயருக்குப் பதிவு செய்து கொடுத்திருக்கிறார். நிலத்தை வாங்குவது லஞ்ச ஒழிப்புத்துறைக் கூடுதல் டி.ஜி.பி. துக்கையாண்டியின் மனைவி என்பதால் திருச்சி பத்திரப்பதிவு அலுவலர்களும், நீலாங்கரை பத்திரப்பதிவு அலுவலர்களும் விதிமுறைகளை மீறி இருக்கிறார்கள்.
எந்தக் கேள்வியும் கேட்காமல் பத்திரப்பதிவு செய்ய துக்கையாண்டி கொடுத்த பிரஷரை, நீலாங்கரை பத்திரப்பதிவு அதிகாரி ஒருவர், மிகத் தெளிவாக போலீஸ் விசாரணையில் தெரிவித்து இருக்கிறார். அடுத்தவர் நிலத்தை தனது மனைவி பெயரில் பதிவுசெய்துகொண்ட துக்கையாண்டி, அதை அமெரிக்காவில் வசிக்கும் தனது மூத்த மகள் யூபுவின் பெயருக்கு வேகவேகமாகப் பதிவு செய்து கொடுத்து உள்ளார்'' என்கிறது போலீஸ் வட்டாரம்.
இப்போது, சஸ்பெண்ட் செய்யப்​பட்டு இருக்கும் துக்கை​யாண்டிக்கு எதிரான புகார் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே பதி​வாகி, அவரது மனைவி பெயரில் எஃப்.ஐ.ஆர். போடப்பட்டும் விட்டது. ஆனால், துக்கையாண்டி ஓய்வு பெறு​வதற்கு, முந்தையநாள் வரை அவர் மீது எந்த நடவடிக்கையும் பாயவில்லை. இந்த விவரங்களை அறிந்த சமூக ஆர்வலர் ஒருவர், தமிழக உள்துறைச் செயலாளருக்கும் மத்திய உள்துறைச் செயலாளருக்கும் புகார் அனுப்பினாராம்.
இந்த விவரங்கள் முதலமைச்சரின் பார்வைக்குக் கொண்டுசெல்லப்பட, ஒரே நாளில் துக்கையாண்டி பற்றிய 20-க்கும் மேற்பட்ட ஃபைல்கள் சேகரிக்கப்​பட்டு, 29-ம் தேதி  காலையில், அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
துக்கையாண்டியிடம் இந்தக் குற்றச்​சாட்டுகள் குறித்துப் பேச முயன்றோம். ''நான் ஒன்றும் பேச முடியாது. நான் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக எந்த உத்தரவும் எனக்கு இதுவரை வரவில்லை'' என்றார்.
''வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்தார் என்று பல்வேறு ஆதாரங்களைத் திரட்டி ஜெயலலிதா மீது வழக்கு போட மூளையாக இருந்தவர் துக்கையாண்டி. அதற்குப் பழிவாங்கவே அவர் மீது இந்த கடைசி நிமிட சஸ்பெண்ட் உத்தரவு வந்துள்ளது’ என்று சிலர் சொல்கிறார்கள். ஜெயலலிதா நடவடிக்கை எடுத்ததற்கு உள்நோக்கம் இருக்கலாம். ஆனால், துக்கையாண்டி உத்தமரா இல்லையா என்பதுதான் இப்போதைய கேள்வி!