Tuesday, March 27, 2012

சச்சின் - சதமவதாரம்!


ஒரு வருட தவத்துக்குப் பிறகு, 100வது செஞ்சுரியை அடித்துப் பெரிய பாரத்தைக் கீழிறக்கியிருக்கிறார் சச்சின். பிராட்மேனின் டெஸ்ட் ஆவரேஜ் சாதனையை (99.94) எப்படி ஒரு கிரிக்கெட் வீரரால் கனவில் கூட நினைக்க முடியாதோ, அதே போல சச்சினின் இந்தச் சாதனையை மிஞ்ச உண்மையிலேயே வானத்திலிருந்து யாராவது குதித்து வந்தால்தான் உண்டு.சச்சினுக்கும் எத்தனையோ ஏற்ற இறக்கங்கள் உண்டு. சில உதாரணங்கள். சச்சின் ஆடிய முதல் ஒருநாள் தொடரில் அவரை ஆட வைப்பதாகவே இல்லை. பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒரு நாள் ஆட்டம் ரத்தானதால் கண்காட்சி ஆட்டம் நடத்தப்பட்டு, அதில் சச்சின் சேர்க்கப்பட்டார். அப்துல் காதிர் பந்தில் தொடர்ந்து மூன்று சிக்ஸர் அடித்து கவனத்தை ஈர்த்தார் சச்சின். உடனே, அடுத்த ஒருநாள் ஆட்டத்தில் சச்சினுக்கு இடம் கிடைத்தது. ஆனால், ஒரு ரன்னும் அடிக்கவில்லை. இதனால், அந்தத் தொடரில், அடுத்தடுத்த மேட்சுகளில் ஆட அனுமதிக்கப்படவில்லை.நியூசிலாந்துக்கு எதிராக ஆடிய இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் பூஜ்ஜியம். நூறு செஞ்சுரிகள் அடித்தவரின் தொடக்கம் எப்படி என்று பாருங்கள். இன்று, கோலி மேட்சுக்கு மேட்ச் செஞ்சுரிகள் அடிக்கிறார். ஆனால், ஒருநாள் ஆட்டத்தில், சச்சினுக்கு முதல் செஞ்சுரி அடிக்க 78 ஆட்டங்கள் தேவைப்பட்டன. அப்படியாவது நிம்மதியாக சுவாசிக்க முடிந்ததா? அடுத்த மூன்று மேட்சுகளிலும் பூஜ்ஜியம்தான் அடித்தார். 99 செஞ்சுரிகளை கடகடவென அடித்துவிட்டு நூறாவது செஞ்சுரிக்கு ஒரு வருடமாகத் தவித்தாரே, எவ்வளவு வேதனையான காலமது.

முக்கியமான போட்டிகளில் தலைசிறந்த ஆட்டங்களை முன்வைத்திருக்கிறார். சச்சின் சோடைபோன உலகக்கோப்பை என்று ஒன்று இல்லை. ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கும் ஆஸ்திரேலியா, பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டங்களில் தனித் தன்மையுடன் ஆடியிருக்கிறார். 22 ஆண்டு காலம் எந்தச் சவால்களுக்கும் பொருந்திய ஓர் உடல் தகுதியைக் கொண்டதால்தான் சச்சினால் தொடர்ந்து ஆடவும் சராசரியாக ஆறு மேட்சுகளுக்கு ஒருமுறை செஞ்சுரி அடிக்கவும் முடிந்திருக்கிறது. ஒருநாள் போட்டி க்ஷயில் சாதித்துவிட்டு டெஸ்ட்டிலும் திறமையை நிரூபிக்கும் நவீன கிரிக்கெட்டர்களுக்கு மத்தியில், முதலில் டெஸ்ட்டில் சாதித்துவிட்டு, பிறகு ஒருநாள் கிரிக்கெட்டை ஒரு கை பார்த்தவர் சச்சின். சச்சினின் ஆரம்பக் காலத்தில் அவருக்குக் கடும் சவால்களைத் தந்த மஞ்ரேக்கர், காம்பிளி, டபிள்யூவி ராமன் போன்றோரைப் பின்னுக்குத் தள்ளினார். அடுத்து அசார், சித்து போன ஜாம்பவான்களையும் முந்திக் கொண்டு கங்குலி, திராவிட், ஷேவாக் என்று புதிதாகப் புறப்பட்ட இளம்புயல்களையும் அடுத்தடுத்து சமாளித்து ஒரு தன்னிகரற்ற வீரராக விளங்குபவர் சச்சின். இரண்டு தலை முறைகள் கடந்து மூன்றாம் தலை முறையுடனும் ஈடுகொடுத்து ஆடுவது லேசுபட்ட விஷயமல்ல. சமீபத்தில், ஓய்வு பற்றிய பேச்சு எழுந்த நேரத்தில்தான் அவர் இரட்டைச் சதம் அடித்தார். பலமுறை காயங்களில் மாட்டிக் கொண்டாலும், ஒவ்வொருமுறையும் கவனமாக அதிலிருந்து மீண்டு ரசிகர்களுக்கு ஏமாற்றம் தராமல் இருந்திருக்கிறார். பள்ளிக் காலங்களிலேயே பெயரையும், புகழையும் பார்த்துவிட்டதாலோ என்னவோ, பிறகு வந்த நட்சத்திர அந்தஸ்து சச்சினைத் துளியும் பாதிக்கவில்லை. கேர்ள் ஃப்ரெண்டுடன் சுற்றினார், பார்ட்டிகளில் ஈடுபடுகிறார் என்பன போன்ற சர்ச்சைகளுக்கெல்லாம் சச்சினின் வாழ்க்கையில் இடமேயில்லை. சத்தமேயில்லாமல் காதல் திருமணம் செய்து கொண்டு, கிரிக்கெட்டில் தீவிர அக்கறை செலுத்தினார்.

சச்சின் நாட்டுக்காக ஆடுவார் என்று முதலில் சொன்னவர் சச்சினின் பயிற்சியாளரான அச்ரேகரோ, சச்சினை ரஞ்சிப் போட்டிக்குத் தேர்வு செய்த வெங்சர் காரோ, இந்திய அணிக்குள் நுழைத்த ராஜ் சிங் துங்கர்புரோ கிடையாது. பள்ளிகளுக் கிடையேயான போட்டி ஒன்றில், கோந்த லேகர் என்கிற ஒரு அம்பயர், ‘இந்தப் பையன் வருங்காலத்தில் இந்தியாவுக்காக ஆடுவான்’ என்று மீசைகூட முளைக்காத சச்சினைக் காண்பித்து அச்ரேகரிடம் ஆரூடம் சொல்லியிருக்கிறார். அன்று, அச்சின்னஞ் சிறுவனுக்கிருந்த துடிப்பும், வேகமும், ரன்கள் அடித்தால் உண்டாகிற குதூகலமும் இத்தனை வருடங்களாகியும் சச்சினிடமிருந்து விலகாமல் இருக்கிறது. அந்த உற்சாகம்தான் இன்னமும் சச்சினை மேலும் மேலும் பல சாதனைகள் செய்ய வைத்துக் கொண்டிருக்கிறது.

உலகம் அறிந்த உடைந்த மணி!


அமெரிக்காவில் பிலடெல்பியா நகரின் நடுவே சுதந்திரப் பூங்காவில் அழகான ஒரு தனி வளாகத்தில் 30 அடி உயரமும், 900 கிலோ எடையும் கொண்ட பிரம்மாண்டமான லிபர்ட்டி பெல் இருக்கிறது. ஆண்டுக்கு 10 லட்சம் பேர் வந்து பார்க்கும் இந்த மணிக்கு, அமெரிக்க தேசியக் கொடிக்கு நிகரான அந்தஸ்து வழங்கப்பட்டிருக்கிறது. தபால் தலைகளிலும் நாணயங்களிலும் இடம் பெற்றிருக்கும் ஒரு தேசியச் சின்னம் இது. ஆனால் இந்த மணி அடிக்கப்படுவதில்லை. காரணம் அதில் விழுந்த விரிசல். பயன்படுத்த முடியாமல் பல ஆண்டுகள் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த இந்த மணி, சரித்திரச் சின்னமானது எழுத்தாளர் ஒருவர் எழுதிய சிறுகதையால்தான்.அமெரிக்கா, அமெரிக்க ஐக்கிய நாடாக அறிவிக்கப்படும் முன்னரே மக்களாட்சி மலர்ந்தது பென்சில்வேனியா மாநிலத்தில்தான். அதன் தலைநகரான பிலடெல்பியாதான் நாட்டின் தலைநகராக அப்போது அறிவிக்கப்பட்டிருந்தது. அதைச் சிறப்பிக்கப் புதிதாக எழுப்பப்பட்டிருக்கும் சட்டமன்ற கட்டட கோபுரத்தில் ஒருமணியை நிறுவ விரும்பினார் மாநில கவர்னர். லண்டனில் உள்ள மணிகள் தயாரிக்கும் புகழ்பெற்ற லெஸ்ட்டர்-பாக் (Lester and Pack) நிறுவனத்தால் (இன்றும் இந்த நிறுவனம் இருக்கிறது) வடிவமைக்கப்பட்டு 1793-ஆம் ஆண்டு கப்பலில் பிலெடெல்பியா வந்த மணி நகர மக்களால் கோலாகலமாக வரவேற்கப்பட்டது.

மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்ட மணி முதல் முறை ஒலிப்பதை ஒரு விழாவாகவே கொண்டாட ஏற்பாடு செயப்பட்டிருந்தது. ஆவலுடன் காத்திருந்த மக்கள் மணியின் நாதத்தைக் கேட்டு ஏமாற்றமடைந்தனர். அந்த அளவு அது மோசமாகயிருந்தது. அதில் ஒரு சின்ன மெல்லிய விரிசல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இங்கிலாந்து நிறுவனம் ‘தவறு எங்களுடையதில்லை. உங்கள் ஊர் மணியடிப்பவர் சரியாகக் கையாளாததால் விரிசல் வந்திருக்கலாம். திருப்பியனுப்புங்கள் சரிசெய்து தருகிறோம்’ என்றது. ஆனால் மீண்டும் ஒருமுறை லண்டன் அனுப்பி திரும்பப் பெற ஆகும் கப்பல் கட்டணம் மணியின் விலையை விட அதிகமாக இருந்ததால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.ஆனால் மணியை கைவிட மனமில்லாத கவர்னர், உள்ளூர் ஆட்களை விட்டு சரிசெய்ய உத்தரவிட்டார். முன்வந்தனர் இரண்டு இளைஞர்கள். ஜான் சகோதரர்கள் (John Pass and John Stow) இறக்குமதி செயப்பட்ட மணியை உருக்கி அந்த உலோகத்தில் ஒரு புதிய மணியை உருவாக்கினர். ‘எல்லா நிலப்பரப்பிலிருக்கும் அனைத்து மக்களுக்கும் சுதந்திரம்’ என்று முன்பிருந்த வாசகங்களுடன் அவர்கள் பெயரும் அதில் பொறிக்கப்பட்டது. நம் நாட்டிலேயே தயாரான மணி என்ற பெருமையைப் பெற்ற அந்த மணியைப் பரிசோதித்தபோது, அதன் நாதமும் பலருக்குத் திருப்தி தரவில்லை. ஆனாலும் கவர்னரின் உத்தரவின் பேரில் மணி, மாடத்தில் நிறுவப்பட்டது. முக்கியமான நாட்களில் மட்டும் ஒலிக்கப்பட்டது அந்த மணி. ஒருமுறை ஜார்ஜ் வாஷிங்டனின் பிறந்தநாளில் ஒலித்தபோது, மாறுபட்டுத் தெரிந்த அதன் ஒலி, மணியில் மீண்டும் ஒரு விரிசல் விழுந்திருப்பதைச் சொல்லியது. மணி, மாடத்திலிருந்து கழற்றப்பட்டு ஓரம் கட்டப்பட்டது. சில ஆண்டுகளில் அதை மக்கள் மறந்தே போனார்கள்.


அமெரிக்க சுதந்திரப் போர் முடிந்து புதிய நாடும் ஆட்சியும் உருவாகி, மக்களின் உணர்ச்சிகளின் எழுச்சியாக இருந்த கால கட்டத்தில் நிகழ்ந்த சரித்திர நிகழ்வுகளை நாவல்களாகவும், சிறுகதைகளாகவும் எழுதியவர் ஜார்ஜ் லிப்பர்ட். இருபதுக்கும் மேற்பட்ட படைப்புகளை உருவாக்கியவர். இன்றும் அமெரிக்க இலக்கியத்தில் மதிக்கப்படுபவர். இவர் 1847ல் எழுதிய ஒரு சிறுகதை ‘ஃபோர்த் ஜூலை 1776’ சார்ட்டே ரெவியூ பத்திரிகையில் வெளியானது. அந்த மணியை அடிக்க நியமிக்கப்பட்டிருந்தவர் ஓய்வு பெற்றுவிட்டாலும் மணியை மிகவும் நேசித்ததால் அந்தப் பணியைத் தொடர்ந்தார். ஜூலை 4, 1776 அமெரிக்க மக்கள் சுதந்திரப் பிரகடனம் கையெழுத்தாகப் போகும் செய்தியை எதிர்பார்த்திருந்தனர். தன் வாழ்நாளில் நாட்டுக்கு சுதந்திரம் வந்து அதை இந்த மணியை அடித்து தாம் அறிவிக்க முடியும் என்ற நம்பிக்கையை இழந்திருந்த அந்த வயோதிகரின் பேரன் ஓடிவந்து, தாத்தா பிரகடனம் கையெழுத்தாகி விட்டது" என்று சொன்ன செய்தியில் மகிழ்ந்து வேகமாக அந்த மணியை அடித்து மக்களுக்கு அறிவித்தபின் இறந்து போகிறார் என்பது அந்தக் கதையின் ஒன் லைன்.


சார்ட்டடே ரிவிய்யூவில் வெளியான இந்தக் கதை தொடர்ந்து மற்ற மாநிலச் செய்தித்தாள்களிலும்/பத்திரிகையிலும் வெளியானதினால் மிகப் பிரபலமடைந்தது. கதையில் சொல்லப்பட்ட சுதந்திர மணியைப் பார்க்க ஆவலுடன் மற்ற மாநில மக்களும் அங்கு வர ஆரம்பித்தனர். பல ஆண்டுகள் பள்ளிப் பாடப் புத்தகங்களிலும் இந்தக் கதை இடம்பெற்றிருந்ததினால் மாணவர்களுக்கும் ஆர்வமான ஒரு விஷயமாகிப் போனது. பார்ப்பவர்களின் வசதிக்காக இந்த மணியைத் தேடிப் பிடித்து தூசி தட்டி மாநில மன்ற வளாகத்தின் தோட்டத்தில், அடிக்க முடியாதபடி அலங்காரத் தூண்களில் காட்சிக்காக வைக்கப்பட்டது. அடிமை முறையைச் சட்டப்பூர்வமாக ஒழிப்பது என்பது அந்தக் காலகட்டத்தில் அமெரிக்கா முழுவதும் பேசப்பட்ட விஷயம்.அந்தக் குழுவினர், மணி ஓசை என்பது சுதந்திரத்தின் அடையாளம் எனச் சொல்லி இந்த மணியை அவர்கள் இயக்கத்தின் சின்னமாக அறிவித்து ஆறு குதிரைகள் பூட்டிய வண்டியில் எடுத்துச் சென்று, பல நகரங்களில் பேரணிகளில் காட்சியாக்கினார்கள். மக்களிடம் பிரபலமாகிவிட்ட இந்த உடைந்த மணியை அரசும் அங்கீகரித்து தபால்தலை ஒன்றை வெளியிட்டது. தொடர்ந்து படிப்படியாக, பல கௌரவங்களைப் பெற்றது, ஓசை எழுப்பாத இந்த உடைந்த மணி. இன்று இதன் மாதிரி வடிவம் அத்தனை அமெரிக்க மாநில மன்றங்கள் முன்பும் நிற்கிறது. நாட்டின் உயரிய விருது பதக்கங்களில், நாணயங்களில் படம் பொறிக்கப்பட்டிருக்கிறது.பிலெடல்பியாவில் காட்சியகத்தில் காலச்சுவடுகளின் படங்களோடும் ஒலி ஒளி காட்சிகளோடும் நிறுவப்பட்டிருக்கும் இந்த மணியை, சில ஆண்டுகளுக்கு முன் வந்த ஒரு பார்வையாளர், தான் கொண்டு வந்த சுத்தியால் அடித்துப் பார்க்க முயன்றதால் இப்போது இதற்கு 24/7 காவல்; நுழைவாயில் சோதனை; மணியைத் தொடமுடியாதபடியான பாதுகாப்பு எல்லாம்.

விரிசல் பெரிதாகிறதா என மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை எக்ஸ்ரே, விசேஷ ரசாயன பராமரிப்பு, வல்லுனர் சோதனை எனப் பாதுகாக்கிறார்கள். மணி ஓசை எப்படித்தானிருக்கும்? என்ற ஆவல் கொண்டவர்களுக்கு உள்ளூர் பல்கலைக் கழக உலோகவியல் பேராசிரியரும் மாணவர்களும் மணியின் அளவுகளிலேயே அதே கீறலுடன் ஒரு மாதிரியைச் செய்து அதில் எழுப்பிய ஒலியைப் பதிவுசெய்து வைத்திருக்கிறார்கள்.ஜார்ஜ் லிப்பர்ட் எழுதியது உண்மைக் கதையாக இருக்க முடியாது என்று ஆராய்ச்சியாளர்கள் பல ஆதாரங்களுடன் இன்றும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த மணி எழுப்பிய ஓசையை விட அந்தச் சிறுகதை எழுப்பிய ஓசைதான் இன்று உலகத்தையே இதைப் பார்க்க வைக்கிறது.

திராவிட மாயை ஒரு பார்வை.


திராவிட இயக்கத்தின் நூறாவது ஆண்டு விழா என்ற பெயரில், கலைஞர், தனது பழைய பாணி துவேஷ அரசியலை மீண்டும் துவக்கியிருக்கிறார். திராவிடம், திராவிட நாடு என்பதையெல்லாம் மீண்டும் உலவ விட்டிருக்கிறார். இந்த நிலையில், இவை பற்றி ஏற்கெனவே ஆராய்ந்து ‘திராவிட மாயை’ என்ற பெயரில் புத்தகம் எழுதிய ‘சுப்பு’ இந்த விஷயம் பற்றி ‘துக்ளக்’கில் கட்டுரை எழுத இசைந்துள்ளார். திரிசக்தி பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட ‘சுப்பு’வின்‘திராவிட மாயை’ புத்தகத்திலிருந்து பல பகுதிகளும், இக்கட்டுரைகளில் இடம் பெறும்.

திராவிட இயக்க நூறாம் ஆண்டு துவக்க விழா கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதியன்று சென்னையில் தி.மு.க.வினரால் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்குத் தொண்டர்களை அழைக்கும் விதத்தில், முரசொலியில் கடிதம் எழுதினர் கலைஞர். அந்தக் கடிதத்தில், திராவிட இயக்கத்தின் தோற்றத்தைப் பற்றிக் குறிப்பிட்ட அவர், ‘1917ஆம் வருடம் சென்னை ஸ்பர்டாங்க் சாலையருகே நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் டாக்டர் டி.எம்.நாயர் ஆற்றிய உரையைச் சுட்டிக்காட்டி, நம் பத்திரிக்கைகள் வளர்ந்தால்தான் நம் மக்களுக்கு பலம் வரும்; நம் எதிக் கட்சியான பார்ப்பனக் கூட்டம் நடுங்கும் என்று முழங்கியதை நான் இப்போதும் திரும்பக் கூற விரும்புகிறேன்’ என்று எழுதியுள்ளார்.இதைத் தொடர்ந்து நடந்த விழாவிலும், பிராமண எதிப்பைமையப் பொருளாக வைத்து கலைஞர் பேசியிருக்கிறார். அண்ணா எழுதிய தலையங்கத்தைச் சுட்டிக்காட்டி, ‘நாமெல்லாம் இனத்தால் திராவிடர்கள்’ என்று கூறியிருக்கிறார்.ஆனால், திராவிட இனம் பற்றிய அண்ணாவின் முக்கியமான கருத்தை உடன்பிறப்புகளுக்கு எடுத்துச் சொல்ல அவருக்கு சௌகரியப்படவில்லை. இதை இந்த நேரத்தில் எடுத்துச் சொல்ல வேண்டியது நம்முடைய கடமை.


பிராமணர் இனம் வேறு; பிராமணர் அல்லாதார் இனம் வேறு என்பது திராவிடர் கழகத்தின் கொள்கை. பிராமணர் அல்லாதார் நலனுக்காக ஏற்படுத்தப்பட்ட திராவிடர் கழகத்தில், பிராமணர் உறுப்பினராக முடியாது. ஈ.வே.ரா. வின் கொள்கையால் ஈர்க்கப்பட்ட சின்னக் குத்தூசி போன்றவர்களுக்குக் கூட அங்கே அனுமதி இல்லை. ஆனால், ஈ.வே.ரா.விடமிருந்து பிரிந்து வந்த திராவிட முன்னேற்றக் கழகத்தில் பிராமணர்கள் உறுப்பினராகலாம். இது எப்படி?தளபதி மீதும் தம்பிகள் மீதும் நம்பிக்கை இல்லாத காரணத்தால், மணியம்மையைத் திருமணம் செய்து கொண்டார் ஈ.வே.ரா. அது மட்டுமல்ல, கொள்கைக்கும் சொத்துக்கும் மணியம்மைதான் வாரிசு என்று அறிவித்தார் அவர்.ஈ.வே.ரா.விடமிருந்து பிரிந்து வந்தவர்கள், அண்ணாவின் தலைமையில் ஒன்று கூடி ஆலோசித்தார்கள். சொத்துக்காக சண்டை போடுவதில்லை என்றும், புதிய அமைப்பை உருவாக்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது. புதிய கட்சியின் பெயர் ‘திராவிட முன்னேற்றக் கழகம்’ என்று தீர்மானிக்கப்பட்டது. அங்கே இருந்தவர்களால் ‘கட்சியின் பெயரில் ‘ர்’ இல்லையே?’ என்ற கேள்வி கேட்கப்பட்டது.தம்பிகளுக்கு விளக்கம் அளித்த அண்ணா, ‘திராவிடர்’ என்பது இனத்தைக் குறிக்கிறது. ‘திராவிட’ என்பது ஒரு பிரதேசத்தைக் குறிக்கிறது என்றார். பிராமணர் உட்பட அனைவருக்கும் கழகத்தில் இடமுண்டு என்றார். இன அடையாளம் வேண்டாம் என்றார். சொன்னது மட்டுமல்ல பிரபல வழக்கறிஞரான வி.பி.ராமன் என்கிற பிராமணரைச் சேர்த்துக் கொண்டார். அண்ணாவின் கருத்துப்படி பிராமணர் அல்லாத இனம் என்பது அப்போதே கழற்றி விடப்பட்டது.

பிராமணர்களை உறுப்பினராக்கியது மட்டுமல்ல, அவர்களுக்கு பதவியும் கொடுத்தது, அண்ணாவின் தி.மு.க.ஜாதி அடிப்படையில் மேயரைத் தேர்ந்தெடுக்கும் முறை, சென்னை மாநகராட்சியில் கடைப் பிடிக்கப்பட்ட காலம் அது. தி.மு.க.சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிராமணரான திருமதி. காமாட்சி ஜெயராமன் என்பவர், சென்னை மாநகராட்சியின் மேயரானது ஒரு வரலாற்றுப் பதிவு.மாநிலங்களவையில் அண்ணாவின் கன்னிப் பேச்சு இன்னொரு முக்கியமான பதிவு. “யதா ராஜா ததா பிரஜா” என்று சொன்ன அறிஞர்கள் வாழ்ந்த காஞ்சிபுரத்திலிருந்து வருகிறேன்” என்றார் அவர். பிரிவினைக் கோரிக்கையை தி.மு.க.கைவிடாத அந்தக் காலத்திலும், தன்னுடைய உரையில் சம்ஸ்க்ருத மேற்கோள் காட்டுவதற்கு அவர் தயங்கவில்லை.இதைவிட சுவாரஸ்யமான செய்தி கூட உண்டு. திராவிட இயக்கத்தின் நன்கூரமான இடஒதுக்கீடு கொள்கையிலும் மாறுதல் செய்ய விரும்பினார் அண்ணா. ‘முற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் ஏழைகளாக இருந்தால், அவர்களுக்கும் கல்வியில் முன்னுரிமை தர வேண்டும்’ என்று அண்ணா, சட்ட மன்றத்தில் உரையாற்றினார்.பல கட்சிகளின் கூட்டணியோடும் வெகுஜன ஆதரவோடும் ஆட்சியைப் பிடிக்க முயன்ற அன்னாவிடத்தில், பிராமண எதிர்ப்பு இல்லை. ஹிந்தியை எதிர்க்கும் போது கூட ‘இந்த வேலையை ராஜாஜியிடம் விட்டு விடலாம். காலில் முள் தைத்துவிட்டது. இந்த முல்லை எடுக்க என்னால் முடியாது. பெரியாரிடம் விட்டால் காலை வெட்டி விடலாம் என்பார். காலுக்கு பாதகமில்லாமல் கச்சிதமாக முல்லை எடுக்க ராஜாஜிக்குத்தான் தெரியும்’ என்று பொதுக்கூட்ட மேடையில் போட்டுடைத்தவர் அண்ணா. முதலமைச்சர் அண்ணாவிடம் பிராமணர் எதிர்ப்பு என்கிற மனோபாவம் இல்லை.

திராவிட இயக்க வரலாற்றில் அண்ணா ஏற்படுத்திய ஆரோக்கியமான மாறுதல்களை கருணாநிதி புறந்தள்ளி விட்டார். தன்னுடைய கட்சி தோல்வி அடையும் போதெல்லாம் பிராமணர்கள் மீது கசப்பைக் காட்டும் கருணாநிதிக்கும், பக்குவப்பட்ட முதலமைச்சராக இருந்த அண்ணாவுக்கும் எவ்வளவு வித்தியாசம்! அண்ணாவின் அணுகுமுறையை கருணாநிதி மறந்து விட்டார். இதயத்தை பதவியிடமும், பெட்டிச் சாவியை குடும்பத்தாரிடமும் கொடுத்தவரிடம் பெருந்தன்மையை எதிர்பார்ப்பது வீண் வேலை.
மேற்கண்ட கட்டுரை 21 மார்ச் 2012 துக்ளக் வார இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பள்ளிக் கல்வியில் மாற்றங்கள் - அலசல் !


பள்ளிக் கல்வித் துறையில் தடாலடி மாற்றங்களுக்கு வழி வகுக்கும் அரசாணை எண் 143. இந்த ஆணையின்படி வரவிருக்கும் (2012-13) கல்வி ஆண்டிலிருந்து, மாணவர்களின் தரத்தையும், திறனையும் மதிப்பிட ஒரு புதிய முறையை அறிமுகப்படுத்துகிறது தமிழக அரசு. அந்தப் புதிய முறைக்குப் பெயர் தான் ‘தொடர் முழுமைத் திறன் மதிப்பீடு’ (Continuous and Comprehensive Evaluation). சுருக்கமாக சி.சி.இ. இந்தப் புதிய மதிப்பீட்டு முறையில் மாணவர்கள் மனப்பாடம் செய்து நினைவாற்றல் முறையில் தேர்வுகளைச் சந்திக்கும் முறையை மாற்றி, சிந்தித்து, அறிவாற்றலைத் தெளிவு செய்யும் விதத்தில் ஆசிரியர்களின் பயிற்சி முறை இருக்குமாம். இந்த மதிப்பீட்டில் மார்க்குகள் கிடையாது. ஏ.பி.சி.டி. என்று கிரேட் முறைதான். புதிய மதீப்பீட்டு முறை அறிமுகத்துடன், பள்ளிகளில் முப்பருவக் கல்வி முறையையும் (Tri semester) அறிமுகப்படுத்துகிறது தமிழக அரசு. இந்த இரண்டு முறைகளும் வரும் கல்வியாண்டில் ஒன்றிலிருந்து எட்டாம் வகுப்புவரை அறிமுகப்படுத்தப்படும்.

கல்வித் துறையில் அடிப்படையான மாற்றங்களைக் கொண்டுவருவது வரவேற்கத்தக்கதே. ஆனால், இது பற்றிய விழிப்புணர்வை உருவாக்கி, பொது மக்களிடையே விவாதமாக்க வேண்டாமா?"

இது போன்ற மாற்றங்கள் ஒரு முன்னேறிய சமூகத்தில் கொண்டுவரப்பட வேண்டியவை ஆகும். இங்கு இன்னமும், ஏழை, பணக்காரன், சாதி, மத வேறுபாடுகள், ஆண் - பெண் ஏற்றத் தாழ்வு என்ற கண்ணோட்டங்கள் மாறாத நமது கிராமப்புறங்களில், இது போன்ற கல்வி மதிப்பீட்டு முறையை அறிமுகப்படுத்தினால், பல்வேறு புகார்களுக்கு வழி வகுக்குமோ என்ற ஒரு கருத்தும் இருக்கிறது. நமது கிராமப்புறப் பள்ளிகள் இரண்டே ஆசிரியர்களைக் கொண்டவைதான். அந்த இரண்டு ஆசிரியர்களுக்கும் கல்வி போதிப்பது தவிர, தேர்தல் வேலை, சென்ஸஸ் வேலை என்று வேறு பல பணிகளையும் கொடுத்து விடுகிறார்கள். இந்தச் சூழ்நிலையில் ஆசிரியர், ஒவ்வொரு தனிப்பட்ட மாணவர் மற்றும் மாணவியை சி.சி.இ.படி மதிப்பிட முடியுமா? மேலும் அறிவியல் படிப்பில் சிந்தனைத் திறனை வளர்க்க ப்ராஜக்ட் செய்யச் சொல்வார்கள். ஆனால், பெரும்பாலான மாணவர்கள் குடும்பத்தின் துணையோடுதான் ப்ராஜக்ட் செய்கிறார்கள். அப்படிச் செய்யப்படும் மாடலைக் கூட சரியாக பார்க்காமல் வகுப்பில் ஓரத்தில் வைத்துவிட்டுப் போகும்படி சொல்லும் ஆசிரியர்கள்தான் நிறைய. இந்தப் பயிற்சி ஒரு சடங்கு போல்தான் நடக்கிறது.மாணவர்களின் சிந்தனைத் திறன், படைப்பாற்றலை வளர்க்க வேண்டுமானால் ஆசிரியர்களுக்கு ஒரு சிந்தனைத் தெளிவு வேண்டும். அதற்கான பயிற்சி அவர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டாமா? அதேபோல செமஸ்டர் சிஸ்டம் என்றால், அந்த செமஸ்டரோடு படித்தது மறந்து போகும். இப்போதிருக்கும் முறையில் புரியாத பாடங்களைப் புரிந்து கொள்ள வருடம் முழுவதும் வாய்ப்பு உண்டு.

பின்லாந்தில் இது போன்ற மாற்றங்களை 1970ல் கொண்டு வந்தார்கள். 40 வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் முழுமை பெற்றிருக்கிறார்கள். இந்த இடைப்பட்ட ஆண்டுகளில் ஆசிரியர்களுக்குத் தொடர்ந்து பயிற்சிகள் கொடுத்து வந்தார்கள். அங்கே பாடத்திட்டங்களைக்கூட வெவ்வேறு பகுதிகளின் தேவைக்கேற்றபடி தீர்மானிக்கிறார்கள். சி.பி.எஸ்.சி. பள்ளிகளில் செயல்படும் இந்த சி.சி.இ. திட்டத்தை தேசியக் கல்வி, ஆராய்ச்சி நிறுவனம் மறு ஆய்வு செய்து வருகிறது. அதுபோல இரண்டு வருடங்களுக்கு முன் கொண்டு வந்த செமஸ்டர் திட்டத்தையும் தில்லி பல்கலைக் கழகம் மறு ஆய்வு செய்கிறது. எனவே தமிழக அரசு புதிய மாற்றங்களை விவாதிக்க வேண்டும்.

பிரின்ஸ் கஜேந்திரன்.
பொதுப்பள்ளிகளுக்கான மாதிரி மேடை என்ற அமைப்பின் பொதுச் செயலாளர்


வரும் கல்வியாண்டு தொடங்க நான்கே மாதங்கள் இருக்கும் நிலையில், மாற்றங்களை அமல்படுத்த தமிழக அரசு தயாராகி விட்டதா?

சி.சி.இ. மதிப்பீட்டு முறை பற்றி ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுக்க, ஆசிரியர்கள் தயாராகி வருகிறார்கள். அதுபோல முதல் செமஸ்டருக்கான புத்தகங்களும் சமச்சீர் கல்வி பாட திட்டப்படி தயாராகிவிட்டன. இது தொடர்பாக ஆசிரியர் கையேடு தயாரான பின்பு பரந்த அளவு விவாதங்களுக்கு வழி செய்யப்படும். 40,000 பள்ளிகளில் உள்ள நான்கு லட்சம் ஆசிரியர்களுக்கு ஏப்ரல், மே மாதங்களில் பயிற்சி கொடுக்கப்பட்டு விடும். தமிழக முதல்வர் இதுபற்றி அவ்வப்போது விசாரித்து வழிகாட்டி வருகிறார். எனவே எந்தச் சுணக்கமும் இல்லாமல் பணிகள் நடக்கின்றன.

சி.சி.இ. மதிப்பீட்டு முறை பற்றி ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுக்க, ஆசிரியர்கள் தயாராகி வருகிறார்கள். அதுபோல முதல் செமஸ்டருக்கான புத்தகங்களும் சமச்சீர் கல்வி பாட திட்டப்படி தயாராகிவிட்டன. இது தொடர்பாக ஆசிரியர் கையேடு தயாரான பின்பு பரந்த அளவு விவாதங்களுக்கு வழி செய்யப்படும். 40,000 பள்ளிகளில் உள்ள நான்கு லட்சம் ஆசிரியர்களுக்கு ஏப்ரல், மே மாதங்களில் பயிற்சி கொடுக்கப்பட்டு விடும். தமிழக முதல்வர் இதுபற்றி அவ்வப்போது விசாரித்து வழிகாட்டி வருகிறார். எனவே எந்தச் சுணக்கமும் இல்லாமல் பணிகள் நடக்கின்றன.
தேவராஜன்
மாநில ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் .

சி.சி.இ. மதிப்பீட்டு முறை பற்றி ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுக்க, ஆசிரியர்கள் தயாராகி வருகிறார்கள். அதுபோல முதல் செமஸ்டருக்கான புத்தகங்களும் சமச்சீர் கல்வி பாட திட்டப்படி தயாராகிவிட்டன. இது தொடர்பாக ஆசிரியர் கையேடு தயாரான பின்பு பரந்த அளவு விவாதங்களுக்கு வழி செய்யப்படும். 40,000 பள்ளிகளில் உள்ள நான்கு லட்சம் ஆசிரியர்களுக்கு ஏப்ரல், மே மாதங்களில் பயிற்சி கொடுக்கப்பட்டு விடும். தமிழக முதல்வர் இதுபற்றி அவ்வப்போது விசாரித்து வழிகாட்டி வருகிறார். எனவே எந்தச் சுணக்கமும் இல்லாமல் பணிகள் நடக்கின்றன.

ரத்தின சபாபதி.
தமிழக கல்வி, ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனத்தின் ஆலோசகர் .

- ப்ரியன்

சி. சி. இ. மதிப்பீட்டு முறையினால் என்ன நன்மைகள் ஏற்படும்? உலகப் புகழ்பெற்ற கல்வியாளர் பத்மா ஸ்ரீநாத்துடன் பேசியதில் இருந்து:

கே: புதிய மதிப்பீட்டு முறையை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியம் என்ன?

ப: ஒரு மாணவர் 12 ஆண்டுகள் அல்லது 14 ஆண்டுகள் பள்ளியில் படிக்கிறார். இவ்வளவு வருடப் படிப்புக்குப் பின்னர் அவர் எவ்வளவு தூரம் படிப்புக்குத் தகுதி படைத்தவராக, வேலைபார்க்கும் தகுதி உள்ளவராக இருக்கிறார்?

பள்ளி மாணவர்களிடம் திறன் மேம்பாடு நடக்கவில்லை. ஏனென்றால், பள்ளிகளில் கல்வி கற்றல் நடைபெறவில்லை. பாடம் சொல்லிக்கொடுக்கும் விதத்தில் கோளாறு. ஒரு மாணவர் ஒரு பாடத்தை எவ்வளவு தூரம் புரிந்து கொண்டிருக்கிறார் என்பதைப் பரிசோதித்துப் பார்ப்பதில் கோளாறு.

பள்ளிக் கல்விதானே அஸ்திவாரம்? அதில் உள்ள குறைகள்தான் எல்லாப் பிரச்னைகளுக்கும் அடிப்படைக் காரணம். இவற்றை சரிசெய்வது எப்படி? அதற்காகத்தான் சி. சி. இ. இது ஏதோ திடுதிடுப்பென வரவில்லை. உலக அளவில் ஏற்கெனவே அமலில் உள்ள விஷயம்தான்.

கே: பரீட்சை நடத்தும் விதத்தை மாற்றிவிட்டால் எல்லாமே மாறிவிடுமா?

ப: இரண்டு அடிப்படை விஷயங்களைப் புரிந்துகொள்ள வேண்டும். முதலாவது, இப்போது உள்ள கல்விமுறை, குருட்டு மனப்பாடத்தை ஊக்குவிக்கிறது. உண்மையில் கல்வி கற்பது என்பதில் விஷயம் போய்ச்சேர வேண்டும். அதுதான் அறிவு வளர்ச்சிக்கு, திறன் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். ஆசிரியர் ஏதோ பாடம் நடத்துகிறார், மாணவர் கையைக் கட்டிக்கொண்டு கவனிக்கிறார் என்பது அல்ல, விஷயம். ஆசிரியர், மாணவர் இருவருக்கும் இடையே கருத்துப் பரிமாற்றம் நடைபெற வேண்டும். மேலும், இரண்டு பேருக்கும் பயன் கிடைக்க வேண்டும்.

இரண்டாவது விஷயம் மதிப்பீட்டு முறை பற்றியது. மாணவனை மதிப்பீடு செய்வது, அவரைப் பாஸாக்குவதற்கோ பெயிலாக்குவதற்கோ அல்ல. அவரது திறன் எவ்வளவு தூரம் வளர்ச்சி பெற்றுள்ளது என்பதைக் கண்டறிவதற்காக. மாணவரை மதிப்பீடு செய்வதன் மூலம் ஆசிரியர் தன்னைத் தானே சுய மதிப்பீடு செய்து கொள்கிறார்.

மேலும், கற்றல் என்பது படிப்படியாக நடக்கிறது. ஒரே வீச்சில் நடந்து முடிவது அல்ல. எனவே இந்த வளர்ச்சியை ஒவ்வொரு கட்டத்திலும் அளவிட வேண்டியது அவசியம். இதைத்தான் சி. சி. இ. யில் formative assessment என்று குறிப்பிடுகிறார்கள்.

கே: சி. சி. இ. அறிமுகப்படுத்தப்பட்டால் கற்றல் மேம்படுமா?

ப: முழுக்க சரியாகுமா, ஆகாதா? ஐ’ம் ஸாரி. அப்படியெல்லாம் எனக்குச் சொல்லத் தெரியல. கல்வியைப் பொறுத்தவரையில் சி. சி. இ. உலகம் ஏற்கும் ஒரு பெஸ்ட் ப்ராக்டீஸ். அதை நாமளும் கடைப்பிடிக்க வேண்டியதுதானே!

கே: ஆசிரியர்கள் இதை எப்படி எடுத்துக்குவாங்க? பெற்றோர்களின் வரவேற்பு?

ப: ஆசிரியர்களுக்கு இது ஒரு சவால்தான், சந்தேகமே இல்ல. ஆனா, சி.பி.எஸ்.இ. பள்ளிகள்ல இந்த மாற்றம் ஈஸியா நடந்ததே, அதே மாதிரியே ஸ்டேட் பள்ளிகள்லயும் நடக்க வாய்ப்பு இருக்கு.

ஒரு ஆசிரியர் தன்னோட பணியில எவ்வளவு திருப்தி அடைகிறார் என்பது ரொம்ப முக்கியம். இன்னைக்கு நான் ஒரு உருப்படியான வேலை பண்ணினேன் அப்படீங்கற திருப்தி ஆசிரியர்களுக்கு ஏற்படறதுக்கு சி. சி. இ. உதவி பண்ணும். இதை அவங்களுக்கு சரியா புரியவைக்கணும்.

பெற்றோர்கள் மத்தியில வரவேற்பு இருக்கும்னு நான் நம்பறேன். காரணம், இன்னைக்கு சமுதாயத்துல விழிப்புணர்வு இருக்கு, உலகத்துல ஏற்படக்கூடிய மாற்றங்களுக்கு ஏற்ற மாதிரி நாமளும் மாறியாகணும், போட்டியை எதிர்கொள்ளணும் அப்படீங்கற சிந்தனை பரவலா வர ஆரம்பிச்சிருக்கு.

அதுமட்டுமல்ல. நீங்கள் எந்த அப்பா-அம்மாவைப் போய்க் கேட்டாலும் அவர்கள் தற்போதைய கல்விமுறையின் குறைகளைப் பற்றி வருந்துகிறார்கள். தற்போதைய முறையில் மாணவர்களுக்கு ஸ்ட்ரெஸ் அதிகம் என்பது எல்லா பெற்றோர்களுக்கும் தெரிந்திருக்கிறது. இது சிஸ்டத்தில் உள்ள குறைபாடு, இதை நம்மால் மாற்ற முடியவில்லையே என்ற ஆதங்கம் பெற்றோர்கள் மத்தியில் பரவலாக உள்ளது. இந்த சிஸ்டத்தை சரிசெய்வதுதான் சி. சி. இ.

கே: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான ஆசிரியர்கள். இத்தனை பேரையும் சி. சி. இ. க்கு ஏற்றவிதத்தில் தயார் செய்வது எப்படி?

ப: ஆசிரியர்களுக்குப் பயிற்சிதர வேண்டியது ரொம்ப அவசியம். நமது நாட்டில் மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளர்களுக்குப் பஞ்சமில்லை. ஐ.ஐ.எம். போன்ற நிறுவனங்கள் உதவ முடியும்.

ஒருதடவை பயிற்சி என்பதோடு நின்றுவிடாமல், professional development என்ற கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். சீனியர் ஆசிரியர்களை வழிகாட்டிகளாக தயார்படுத்தலாம். ஒரு பள்ளிக்கு 5 பேர் இருந்தால்கூட போதும். இவர்கள் சக ஆசிரியர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.

இதற்கெல்லாம் ஏற்ற இணக்கமான சூழ்நிலையை அரசாங்கம் ஏற்படுத்தித் தர வேண்டும். தற்போது, கார்பரேட் நிறுவனங்கள் சமுதாயப் பொறுப்பு ஏற்க முன்வருகின்றன. இவர்களின் உதவியை சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் நிச்சயம் பலன் கிடைக்கும்.

வசந்த நவராத்திரி ஸ்பெஷல்.....

வசந்த நவராத்திரி என்றால் என்ன?


ஒரு வருடத்தில் நான்கு நவராத்திரிகள் கொண்டாடப்படுகின்றன. இவை நான்குமே அம்பிகை வழிபாட்டில் முக்கியமானவை. புரட்டாசி மாதத்து அமாவாசைக்கு மறு நாள் ஆரம்பமாகும் நவராத்திரிக்கு சாரதா நவராத்திரி என்று பெயர். இது அனைவரும் கொண்டாடும் மிகப் பிரபலமான நவராத்திரி. இது ஆஸ்வீண மாத சுத்தப்ரதமையில் ஆரம்பமாகும். அடுத்து மார்கழி மாத அமாவாசைக்கு மறுநாள் புஷ்யப்ரதமையில் ஆரம்பித்து ஒன்பது நாள் கொண்டாடப்படுவது வாராகி நவராத்திரி, பங்குனி மாத அமாவாசைக்கு மறுநாள் சைத்ரசுத்தப்ரதமையில் தொடங்கி ஒன்பது நாட்களுக்கு வசந்த நவராத்திரி கொண்டாடப்படுகிறது. ஆனி மாதம் அமாவாசைக்கு மறுநாள் ஆஷாட சுத்த ப்ரதமை தினத்தில் ஆரம்பமாகி ஒன்பது நாட்களுக்கு ராஜமாதங்கி நவராத்திரி கொண்டாடப்படுகிறது. சக்தி வழிபாடு செய்யும் ஸ்ரீவித்யா உபாசகர்கள் இந்த நான்கு நவராத்திரிகளையும் கொண்டாடுவது வழக்கம்.

இடிந்த கரை... இடியாத நம்பிக்கை!, ஓ பக்கங்கள் - ஞாநி

இதை நான் எழுதும் கடைசி ஓ பக்கமாக அறிவித்துவிடலாமா என்ற மனநிலையில்தான் எழுத ஆரம்பிக்கிறேன். என்ன எழுதி என்ன பயன் என்ற அலுப்பே காரணம். அலுப்புக்குக் காரணம் கூடங்குளம்.பிப்ரவரி கடைசி வாரத்தில் இதே ஓ பக்கங்களில் நான் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எழுதிய பகிரங்க கடிதத்திலிருந்து சில பகுதிகள் இதோ :
உங்கள் முன்னால் தெளிவாக இரண்டு வழிகள் இருக்கின்றன. முதல் வழி அணு உலைகளை எதிர்க்கும் இயக்கங்களின் விஞ்ஞானிகள் குழுவைச் சந்தியுங்கள். அணு உலையை ஆதரிக்கும் அரசு விஞ்ஞானிகள் குழுவை அவர்களுடன் பயப்படாமல் உரையாடச் சொல்லுங்கள். சங்கரன்கோவில் தேர்தலுக்கு அனுப்பும் 31 அமைச்சர்களை இடிந்தகரைக்கு அனுப்பி மக்களிடம் பேசச் சொல்லுங்கள். சிறுமியாக நடிக்கப் போன காலத்திலிருந்து செட்டில்கூட புத்தகம் படிக்கும் பழக்கம் உடையவர் நீங்கள். வாசிப்பு ருசியும் பழக்கமும் உடைய நீங்களே ஒரே ஒரு நாளை ஒதுக்கி இருதரப்பு நூல்களையும் வாசியுங்கள். நமக்கு ஒருபோதும் அணு உலை வேண்டாம் என்ற முடிவுக்கு நிச்சயம் வருவீர்கள். கேரளத்தைப் போல, மேற்கு வங்கத்தைப் போல தமிழகமும் அணு உலை மறுப்பு மாநிலமாக உங்களால் அறிவிக்கப்படட்டும். தமிழர்கள் பல தலைமுறைகளுக்கு உங்களைப் போற்றுவார்கள். ஒரு பென்னிகுவிக்கை நினைவு கூர்வது போல, தமிழகத்தில் செர்னோபில்லும் புகொஷிமாவும் வராமல் தடுத்த பெருமைக்குரியவராக நீங்கள் வரலாற்றில் இடம் பெறுவீர்கள்.இரண்டாவது வழியை மேற்கொண்டாலும் வரலாற்றில் இடம் உண்டு. சீனிவாசன் குழு அறிக்கையை ஏற்று அணு உலையை அனுமதிக்கலாம். போராடும் மக்களை போலீஸ், ராணுவ உதவியுடன் ஒடுக்கலாம். ஓரிரு துப்பாக்கிச் சூடுகளும் சில நூறு உயிர் சேதமும் ஏற்பட்டாலும் பொருட்படுத்தாமல் இருக்கலாம். இவ்வாறெல்லாம் செய்வதன் மூலம் மத்திய அரசின் அன்புக்கும் ரஷ்ய, அமெரிக்க, பிரெஞ்ச் முதலாளிகளின் அன்புக்கும் உரியவர் ஆகலாம். ஆனால், தமிழக மக்களின் துரோகி என்ற பெயருடன் வரலாற்றில் இடம் இருக்கத்தான் செய்யும். ஏற்கெனவே அந்த இடம் உங்கள் சக அரசியல்வாதி கலைஞர் கருணாநிதிக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. என்ன செய்ய, நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உங்கள் இருவருக்கும் வரலாற்றின் ஒரே வரிசையில்தான் இடம் கிடைக்கும். அவர்தான் கேரளம் ஏற்க மறுத்த கூடங்குளம் அணு உலையை முதலில் தானும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு, பிறகு வரவேற்று பல்டி அடித்த துரோகத்துக்குரியவர். மத்திய அரசின் நிர்பந்தத்தால் அணு உலையை எங்கள் மீதும், தமிழர்கள் துரோகி பட்டத்தை உங்கள் மீதும் திணித்து விடாதீர்கள். அணு உலை எதிர்ப்புக் குழுவைச் சந்தியுங்கள். அந்த முதல் வழி மட்டுமே உங்களை நிஜமான தமிழக அன்னையாக்கும்."
ஜெயலலிதா புரட்சித் தலைவி அல்ல, மக்கள் விரோதத் தலைவி என்பதை நிரூபித்துவிட்டார். இந்தக் கட்டுரையை நான் எழுதிக் கொண்டிருக்கும் புதன்கிழமை மதிய நேரத்தில் இடிந்தகரை கிராமத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் மீது ஜெயலலிதாவின் அரசும் மன்மோகன் அரசும் கூட்டாக ஒரு யுத்தம் நடத்திக் கொண்டிருக்கின்றன. ராஜபட்சே இலங்கையில் பின்பற்றிய எல்லா உத்திகளையும் ஜெ-மன்மோகன் கூட்டணி இங்கே பின்பற்றிக் கொண்டிருக்கிறது. போராடும் மக்களுக்கு மின்சாரம், தண்ணீர், பால், உணவு, காய்கறிகள் எதுவும் செல்ல முடியாமல் வழிகளை அடைத்து அவர்கள் மீது ஒரு முற்றுகை யுத்தம் நடத்திக் கொண்டிருக்கிறது.இந்தக் கட்டுரை அச்சாகி உங்கள் கைக்கு வரும் நேரத்துக்குள் இடிந்தகரையில் தடியடியோ, துப்பாக்கிச்சூடோ கூட நடத்தப்பட்டிருக்கலாம். அங்கே என்ன வன்முறை நடந்தாலும் அதற்கு அரசுதான் பொறுப்பேற்றாக வேண்டும்.சுமார் 200 நாட்களுக்கு மேலாக ஐயாயிரம் முதல் நாற்பதாயிரம் வரை மக்கள் தினசரி கலந்துகொண்டு நடத்தி வந்த அறவழிப் போராட்டத்தில் துளிகூட வன்முறை கிடையாது. இந்தியாவில் 1947க்குப் பின் இது போல ஓர் அற்புதம் நிகழ்ந்ததே இல்லை. அணு உலையை பலமாக ஆதரிக்கும் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும்தான் கடந்த 45 வருடங்களாக தமிழகத்தை ஆள்பவர்கள். அவர்களுடைய தலைவர்களைக் கைது செய்தால் அடுத்த நொடியில் தெருவில் இறங்கி பஸ்களை உடைப்பது, எரிப்பது, கடைகளைச் சூறையாடுவது என்பதுதான் அவர்களுடைய அரசியல் கலாசாரம். ஒரு சிறு கல்லைக்கூட எடுத்து வீசாமல், 200 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்த கூடங்குளம் இடிந்தகரை மக்கள் மீது ஜெ-மன்மோகன் அரசுகள் பயங்கரவாதிகள் மீது போர் தொடுப்பது போல போர் தொடுத்துள்ளனர்.ஒரு நிமிடம் யோசித்துப் பார்ப்போம். மார்ச் 18 அன்று சங்கரன்கோவில் வாக்குப் பதிவு முடிந்ததும் பெரும் போலீஸ் படை, துணை ராணுவப் படை எல்லாம் கூடங்குளத்தைச் சூழ்ந்து கொள்கின்றன. கூடங்குளம் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் 40 ஆயிரம் மக்கள் நினைத்திருந்தால் மார்ச் 15ஆம் தேதியே அணு உலைக்குள் நுழைந்து அதை உடைத்து நொறுக்கியிருக்க முடியாதா? அற வழியில் போராடும் மக்களுக்கு அப்படி ஒரு சிந்தனையே வரவில்லை. இத்தனை பேர் கூடி அமைதியாக உண்ணாவிரதம் இருக்கிறோம். நாம் சொல்வதை அரசு செவி கொடுத்துக் கேட்கும் என்று நம்பினார்கள்.
அவர்கள் கேட்டது என்ன?

உலை பாதுகாப்பானது அல்ல என்று எங்கள் சார்பில் சொல்லும் விஞ்ஞானிகளின் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள் என்று கேட்டார்கள். கடைசிவரை மக்களின் விஞ்ஞானிகளைச் சந்திக்க அரசுகளின் விஞ்ஞானிகள் முன்வரவே இல்லை.விபத்து ஏற்பட்டால் இழப்பீடு தருவது பற்றி, உலையை விற்ற ரஷ்யாவுடன் போட்ட ஒப்பந்தத்தை வெளியிடுங்கள் என்று கேட்டார்கள். அரசு கடைசிவரை வெளியிடவே இல்லை.மக்களின் கோரிக்கையை அரசு கேட்கும் என்று நம்பி போராட்டத்தை அறவழியில் கடைசி நொடி வரையில் மக்கள் தொடர்ந்தார்கள். ஆனால் மக்கள் சொல்வதைக் கேட்கவே போவதில்லை என்பதில் இரு அரசுகளும் ஆரம்பத்திலிருந்தே பிடிவாதமாக இருந்தன. மன்மோகன் அரசு அதை பகிரங்கமாகவே நாராயணசாமி மூலம் சொல்லிக் கொண்டிருந்தது. ஜெயலலிதாவின் அரசு நடித்தே ஏமாற்றியது.ஆனால், ஜெயலலிதாவின் அரசு இதைத்தான் செய்யும் என்பதற்கு எல்லா அறிகுறிகளும் இருந்தன. உள்ளாட்சித் தேர்தல் சமயத்தில் போராடுவோருக்கு சாதகம் போன்ற ஒரு தீர்மானத்தைப் போட்டு முதல் சீனில் நடித்தது. ஆனால் அதில் மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும் என்று மட்டுமே சொல்லப்பட்டது. அச்சம் போகாவிட்டால் அணு உலை வேண்டாம் என்று சொல்லப்படவே இல்லை. அடுத்து மத்திய அரசு நியமித்த குழு முழுக்க முழுக்க அணு விஞ்ஞானிகளின் லாபியாகவே இருந்தது. அது அம்பலமானதும் அதை சமாளிக்க ஜெயலலிதா அரசு நியமித்த நால்வர் குழு மிகத் தெளிவாக ஜெ. கடைசியில் என்ன செய்யப் போகிறார் என்பதைக் காட்டிவிட்டது. எம்.ஆர்.சீனிவாசன் அதில் இடம் பெறுவதைப் போராட்டக் குழுவினர் ஆட்சேபித்ததை ஜெ. கண்டுகொள்ளவே இல்லை. சாகித்ய அகாதமி விருது பெற்ற நான்கு எழுத்தாளர்கள் தம்மைச் சந்தித்து அணு உலை எதிர்ப்பை விளக்க நேரம் கேட்டதற்கு ஒரு மரியாதைக்குக் கூட அவர் பதில் கடிதம் போடவில்லை.நடுவில் சங்கரன்கோவில் இடைத்தேர்தல் தேதி வராமல் இருந்திருந்தால், ஜெ. அணு உலை திறப்பையும் மக்களுக்கு எதிரான யுத்தத்தையும் ஒரு மாதம் முன்பே செய்திருப்பார். இப்போது நாம் செய்யக்கூடிய ஆராய்ச்சியெல்லாம் ஒன்றே ஒன்றுதான். ஜெ.யின் சோந்த புத்தியிலேயே அணு உலை நல்லது என்று படுவதால் இப்படி செய்கிறாரா அல்லது அதிகாரிகள் சொல்படி ஆடுகிறாரா அல்லது மத்திய அரசின் ‘நிர்பந்தத்துக்கு’ பணிகிறாரா என்றெல்லாம் ஆராயலாம். எல்லாம் வெற்று ஆராய்ச்சிதான்.
அசல் யதார்த்தம் என்னவென்றால் கூடங்குளத்தில் போராடிய ஆயிரக்கணக்கான மக்களை மன்மோகன் அரசு பகிரங்கமாகவும் ஜெயலலிதா அரசு நயவஞ்சகமாகவும் ஏமாற்றியுள்ளன என்பது மட்டும்தான். இதை வெற்றிகரமாக நிறைவேற்றும் பணியில் ஈடுபட்டவர்கள் அப்துல் கலாம், டாக்டர் சாந்தா, இனியன், சீனிவாசன், பாலு என்று ஒரு பக்கம் மெத்தப் படித்தவர்கள் பட்டியலும் இன்னொரு பக்கம் போராட்டத்தை ஒடுக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்ட போலீஸ் அதிகாரிகள் பட்டியலும் நீளமானவை. படித்தவன் சூதும் வாதும் பண்ணினால், படிக்காதவன் போவான் போவான் அயோவென்று போவான் என்றுதான் இதைச் சொல்ல வேண்டும்.உண்மையில் ஏமாந்திருப்பது மக்கள் மட்டுமல்ல; ஜெ., மன்மோகன் வகையறாக்களும்தான். எல்லாரையும் ஏமாற்றியிருப்பது அணு சக்தித் துறையும் உலக அணு உலை வியாபாரிகளும்தான். குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இன்னும் சரியாக ஒரு வருடம் கழித்து ஏப்ரல் 1, 2013ல் முட்டாள்கள் தினத்தன்று, கூடங்குளம் உலைகளிலிருந்து எத்தனை ஆயிரம் மெகாவாட் பொங்கி பிரவாகித்து தமிழகத்தில் பாலும் தேனும் ஓடச் செய்தன என்ற கணக்கைப் பார்க்கும்போது, எப்படி ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பது புரியும். இந்தியாவில் ஒரு செர்னோபில்லோ புகோஷிமாவோ நடக்கவே நடக்காது என்ற மயக்கத்தில் இருப்பவர்களை யாரும் திருத்த முடியாது. அப்படி ஒரு கொடுமை என் ஆயுட்காலத்துக்குள் நடக்க வேண்டாமென்று மட்டுமே, நான் நம்பாத கடவுளை பிரார்த்தித்துக் கொள்கிறேன்!இந்தக் கணத்தில் என்னுடைய மிகப் பெரிய வேதனையெல்லாம் கூடங்குளம் மக்கள், காந்தி போன்ற ஒரு தலைமை இல்லாமலே நடத்திய அற்புதமான காந்திய போராட்டத்தை மன்மோகனும் ஜெயலலிதாவும் அரசு இயந்திரத்தைக் கொண்டு வன்முறையால் நசுக்கிக் கொண்டிருப்பதைப் பற்றித்தான். வாஜ்பாயியும் கருணாநிதியும் இருந்தாலும் இதையேதான் செய்வார்கள் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. தோழர்கள் (!) ஜி.ஆரும் தா.பாவும் கூட ஆட்சியில் இருந்தால் (நல்லவேளை அவர்கள் ஆயுட்காலம் முழுவதும் அவர்கள் ஆட்சிக்கு வரும் வாய்ப்பே இல்லை) இதையேதான் செய்வார்கள் என்று கணிக்க வேண்டிய சூழல் இருப்பதைப் பார்க்கும்போது, என் வேதனை பல மடங்கு அதிகமாகிறது.உலையை அனுமதிப்பது என்ற முடிவை எடுத்த ஜெயலலிதா ஏன் திரும்பவும் தம்மை சந்திக்க உதயகுமார் தலைமையிலான போராட்டக் குழுவினரை அழைத்திருக்கக் கூடாது? ஏன் அவர்களுடைய விஞ்ஞானிகளையும் அழைத்திருக்கக் கூடாது? ஏன் அவர்களிடம் தமக்கு உலை திறப்பதைத் தவிர வேறு தீர்வு இல்லை என்பதைப் பேசியிருக்கக் கூடாது? வோட்டு கேட்க மக்களைச் சந்திக்க ஓடும் ஜெவும், மகளுக்காக வீல் சேரில் தில்லிக்கே செல்லும் கருணாநிதியும் ஏன் அமைதியாகக் கூடி உட்கார்ந்திருக்கும் ஆயிரக்கணக்கான கூடங்குளம் மக்களை ஒரு முறைகூட போய் பார்க்க முன்வரவில்லை?
இதுவே கூடங்குளம் மக்கள் சத்தீஸ்கர் மாவோயிஸ்டுகள் போல ஆயுதந்தாங்கி போராடியிருந்தால், காவல்துறை உயர் அதிகாரிகள் வள்ளியூர் வரை கூட போயிருக்க மாட்டார்களே? களத்தில் கடைநிலை சிப்பாய்களை நிறுத்திவிட்டு சென்னையில் இருந்தபடியே அல்லவா உத்தரவிட்டுக் கொண்டிருப்பார்கள்? இடிந்தகரைக்கு மின்சாரத்தையும் தண்ணீரையும் உணவையும் அவர்கள் நிறுத்தியிருக்க முடியுமா? ஜெயலலிதாவும் மன்மோகனும் சிதம்பரமும் அவர்களை, பேச்சுவார்த்தைக்கு வரும்படி கெஞ்சியிருக்க மாட்டார்களா?காந்திய அறவழியில் போராடும் மக்களிடம் தாமும் அறவழியில் பேசுவதே சரியென்று ஏன் அரசுகளுக்கு உறைப்பதே இல்லை? அமைதியாக வாழவும் அமைதியாகப் போராடவும் விரும்பும் மக்களை ஆயுதக் கலாசாரத்தை நோக்கித் தள்ளுவது அரசுதானே? அதுதானா அரசின் உண்மை விருப்பம்? காந்தியைக் கொல்வதுதான் அரசின் நிரந்தர திட்டமா? காந்தி இந்தியாவில் ஒரு முறை மட்டும் கொல்லப்பட்டவர் அல்ல. திரும்பத் திரும்பக் கொல்லப்படுகிறார். இந்த முறை கோட்சேவின் இடத்தில் மன்மோகனும் ஜெயலலிதாவும்.அணு உலைகள் ஆபத்தானவை. அவற்றால் எந்தப் பெரும் பயனும் வளர்ச்சியும் நடப்பதில்லை என்ற உண்மையை, கூடங்குளத்தின் பாமர மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். படித்தவர்களின் சூது அவர்களை இப்போது முறியடித்துவிட்டது. தருமத்தின் வாழ்வதனை சூது கவ்வும். தருமம் மறுபடியும் வெல்லக் காண்போம். அந்த நம்பிக்கையில்தான் நான் இன்னும் எழுதிக் கொண்டிருக்கிறேன். இல்லையென்றால் கூடங்குளத்தில் மன்மோகன், ஜெ. நடத்தும் யுத்தம் இந்த ஜனநாயகத்தின் மீது எனக்கு 35 வருடங்களாக இருந்து வந்த நம்பிக்கையை தகர்த்துவிட்டது. இனி எல்லா தேர்தலிலும் என் வோட்டு 49ஓதான்.
இன்னமும் எனக்கு இந்த நாட்டு ஜனநாயகத்தின் மீது கொஞ்சம் நம்பிக்கை எஞ்சியிருப்பதற்கு ஒரே காரணம், இதை எழுதும் இந்த நொடியிலும், துளிகூட வன்முறை இல்லாமல், அறவழியில் நம்பிக்கையுடன் இடிந்தகரையில் கூடியிருக்கும் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் குறிப்பாக மீனவர்களும்தான். அவர்கள் என்றோ ஒரு நாள் அதிகரிப்பார்கள், வெல்வார்கள் என்ற நம்பிக்கையில்தான் இந்த வாரத்துடன் எழுதுவதை நிறுத்திக் கொள்ளாமல் தொடர்கிறேன்...

எனது இந்தியா! (விசுவாசத்தின் விலை! ) - எஸ். ராமகிருஷ்ணன்...

சாமான்யனின் வாழ்க்கையைச் சரித்திரம் புரட்டிப்​போட்டு​விடுகிறது என்பதைக் காலம் பல முறை நிரூபித்து இருக்கிறது. எந்த விதி ஒரு மனிதனை வெற்றியின் உச்சத்தை நோக்கிக் கொண்டுபோகிறது? எது மனிதனைக் குப்புறத் தள்ளிவிடுகிறது? இவை, எவராலும் பதில் கண்டுபிடிக்க முடியாத கேள்விகள்! எத்தனையோ சாமான்ய மனிதர்களை அதிர்ஷ்டம் தனது கைகளால் அள்ளிக் கொண்டுபோய் உச்சத்தில்​வைத்து அழகு பார்த்திருக்கிறது. அதே அதிர்ஷ்டம், பாதியில் கைவிட்டுத் தலை குப்புறத் தள்ளியும் இருக்கிறது.அப்படி, அதிர்ஷ்டத்தின் விரலைப் பிடித்துக்​கொண்டு மேலே ஏறியவர்களில் முக்கியமானவர் விக்டோ​ரியா மகாராணியின் தனிச் சேவகராகப் பணியாற்றிய இந்தியரான முன்ஷி அப்துல் கரீம். இரண்டாவது நபர், 20 வருடங்களுக்குள் 54 முறை இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையில் கடற்பயணம் செய்த ஆயா அந்தோனி பெரா.


அப்துல் கரீமின் முழுப் பெயர் ஹாபீஸ் முகமது அப்துல் கரீம். ஜான்சியில் உள்ள லாலட்பூரில் 1863-ம் ஆண்டு ஓர் எளிய குடும்பத்தில் பிறந்தவர். இவரது அப்பா ஹாஜி முகமது வாஜிருதீன், மருத்துவமனைப் பணியாளர். கரீமுக்கு நான்கு தங்கைகள், ஓர் அண்ணன். உருது மற்றும் பெர்ஷியன் மொழிகளைக் கற்றுத் தேர்ந்த அப்துல் கரீம், வேலை தேடி ஆப்கானிஸ்தானில் சில வருடங்கள் அலைந்தார்.1880-ல் அப்துல் கரீமின் அப்பா ஆக்ரா சிறைச்சாலையில் குமாஸ்தாவாக வேலை பார்த்துக்​கொண்டு இருந்தார். அப்பாவோடு சேர்ந்து, சிறைத்துறையின் கணக்கு வழக்கு​களைக் கவனிக்கத் தொடங்கினார் அப்துல் கரீம். சில ஆண்டுகளில் அவருக்கும் சிறைச்​சாலையிலேயே வேலை கிடைத்தது.ஆக்ரா சிறைச்சாலையில் கார்ப்பெட் தயாரிக்கும் வேலையில் கைதிகளை ஈடுபடுத்துவார்கள். அழகான கார்ப்பெட்டுகள் நெய்வதில் கைதிகள் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள். அப்படித் தயாரிக்கப்பட்ட விசேஷ கார்ப்பெட்டுகள் ஏற்றுமதி செய்யப்படுவதும் உண்டு.1886-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த இந்தியப் பாரம்பரியக் கண்காட்சி ஒன்றில் கார்ப்பெட்டுகளைக் காட்சிக்கு வைப்பதற்கு 34 கைதிகள் இங்கிலாந்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்தப் பணியில், ஜெயிலர் ஜான் டெயிலருக்கு அதிக உதவிகள் செய்தார் அப்துல் கரீம். இங்கிலாந்தில் நடந்த இந்தக் கண்காட்சியை விக்டோரியா மகாராணி பார்வை​யிட்டுப் பாராட்டினார். அப்போது, இரண்டு தங்கக் காப்புகளை மகாராணிக்குப் பரிசாகத் தந்தார் ஜான் டெயிலர். வேலைப்பாடு மிகுந்த இந்திய நகைகளைப் பார்த்த மகாராணி மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். அதோடு, இந்தியாவில் இருந்து நம்பகமான இரண்டு பணியாளர்கள் தனக்குத் தேவைப்படுவதாகவும், அவர்கள் தனது சொந்த வேலைக்காரர்களாகத் தன்கூடவே இருக்க வேண்டும் என்றும், அப்படிப்பட்ட இருவரை அனுப்பிவைக்கும்படி, ஜெயிலருக்கு உத்தரவு பிறப்பித்தார்.


மகாராணிக்கு இந்த உதவி செய்வதன் மூலம் தனது பதவியை உயர்த்திக்கொள்ளலாம் என்று திட்டமிட்ட ஜான் டெயிலர், இந்தியா சென்றவுடன் அனுப்பிவைப்பதாக உறுதி அளித்தார். இந்தியா திரும்பிய சில வாரங்களில், இரண்டு பேரைத் தேர்வு செய்தார். ஒருவர் அப்துல் கரீம், மற்றவர் முகமது பக்ஷி.இருவருக்கும் ஆங்கிலப் பயிற்சி அளிக்கப்​பட்டது. அரண்மனையில் எப்படிப் பழக வேண்டும்? அங்குள்ள சம்பிரதாயங்கள் என்ன? உணவுப் பழக்கவழக்கங்கள் எப்படி இருக்கும்? என்பது குறித்தும் விசேஷப் பயிற்சி அளிக்கப்​பட்டது. மகாராணியிடம் வேலைக்குப் போவது சந்தோஷமாக இருந்தாலும், அப்துல் கரீமுக்கு சற்றுப் பயமும் இருந்தது. காரணம், அவர்கள் குடும்பத்தில் அது வரை யாரும் கடல் தாண்டி வேலைக்குப் போனது இல்லை. அதுபோல, இந்தியாவை ஆட்சி செய்யும் மேன்மை தாங்கிய மகாராணிக்கு வேலையாளாகப் போவது அவர்களுக்கு எட்டாக்கனியாக உள்ள விஷயம். ஆகவே, தனக்குக் கிடைத்த அதிர்ஷ்டத்தை சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று, அப்துல் கரீம் முடிவு செய்தார்.இங்கிலாந்து கிளம்புவதற்குள் ஆங்கிலே​யரின் பழக்கவழக்கங்கள் குறித்து நன்றாக அறிந்து​கொண்டார். இருவரும் 1887-ல் ஆக்ராவில் இருந்து மும்பை வரை ரயிலில் பயணம் செய்து, அங்கே இருந்து கப்பலில் லண்டன் புறப்பட்டனர். ஜூன் மாதம் வின்ஸ்டர் கோட்டை அரண்மனைக்குப் போய்ச் சேர்ந்தனர். மகாராணியிடம் நூற்றுக்​கணக்கான வேலையாட்கள் இருந்தனர். தனது அந்தரங்கப் பணிகளுக்கு விக்டோரியா ராணி இங்கிலாந்துவாசிகளையே பயன்படுத்தி வந்தார். முதன்முறையாக, அவரது தனி அலுவலகப் பணிகளுக்காக இரண்டு இந்தியர்கள் வேலைக்கு வந்திருப்பது அரண்மனையில் இருப்பவர்களுக்கே பெரும் ஆச்சர்யமாக இருந்தது.தங்கமும் வெள்ளியும் கொட்டிக்கிடக்கும் மாபெரும் அரண்மனையைக் கண்ட அப்துல் கரீமுக்கு, இங்குள்ள வசதிகளைக்கொண்டு, தான் ஒருநாள் பெரிய பணக்காரன் ஆக வேண்டும் என்று தோன்றியது. அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் மிகப் பணிவாக, மகாராணிக்காக தான் கொண்டுவந்திருந்த தங்க நாணயத்துடன் அவரது தனி அறைக்கு சென்றார்.அதுவரை, ஓவியங்களிலேயே பார்த்திருந்த விக்​டோரியா மகாராணியை, நேரில் பார்த்தபோது மிகவும் வித்தியாசமாகத் தெரிந்தார். கணவனை இழந்த ராணிக்கு 60 வயதுக்கும் மேலாகி இருந்தது. பருத்த, குள்ளமான தோற்றத்தில் இருந்தார். சிடுசிடுப்பும் ஆத்திரமும்​கொண்டவர் என்று அறிந்திருந்த காரணத்தால், அவரை வணங்கி, தான் கொண்டுவந்திருந்த பரிசைக் கொடுத்து மிக மென்மையான குரலில் தன்னை அறிமுகம் செய்து​கொண்டார் அப்துல் கரீம். அவருக்குப் பிறகு, பக்ஷியும் அதேபோல் அறிமுகம் செய்துகொண்டார். இருவரும் தனது எடுபிடியாக எப்போதும் கூடவே இருக்க வேண்டும் என்று உத்தரவிட்ட மகாராணி, அவர்களுக்கான சம்பளம் மற்றும் உடைகள், தங்கும் இடம் ஆகியவற்றைப் பற்றி அறிவித்தார்.


அந்த நாளைப்பற்றி விக்டோரியா மகாராணி தனது நாட்குறிப்பில் 'இந்தியாவில் இருந்து இரண்டு பணி​யாட்கள் இன்று வந்து சேர்ந்தனர். இருவரும் எனது காலில் விழுந்து வணங்கி மிகவும் பயபக்தியோடு தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டனர். அதில், அப்துல் கரீம் என்பவர் உயரமாகவும் திடகாத்திரமாகவும் இருந்தார். அவரது பேச்சில் மிகுந்த பணிவு இருந்தது’ என்று குறிப்பிட்டு உள்ளார்.முதல் பார்வையிலேயே விசுவாசமான வேலையாள் என்பது​போல தன்னைப் பற்றிய மனப் பதிவை உண்டாக்கிய அப்துல் கரீம், அதன் பிறகு விக்டோரியா மகாராணியின் எடுபிடி ஆளாக நாள் முழுவதும் கூடவே இருந்தார். பக்ஷியைவிட அப்துல் கரீமைத்தான் மகாராணிக்கு மிகவும் பிடித்து இருந்தது. ஆகவே, அவருக்கு ஆங்கிலத்தில் சிறப்புப் பயிற்சி அளிக்க மகாராணி உத்தரவு இட்டார். அதுபோல, அப்துல் கரீமிடம் இருந்து, தான் ஹிந்துஸ்தானி கற்றுக்கொள்ளப்போவதாக அறிவித்த மகாராணி, உடனே வகுப்பைத் தொடங்கினார். மகா​ராணியே தன்னிடம் பாடம் கற்றுக்கொள்கிறார் என்பதைப் புரிந்துகொண்ட அப்துல் கரீம், தனக்குச் சாதகமாகக் காய் நகர்த்தத் தொடங்கினார்.நாள் முழுவதும் வெறும் மேஜையாளாக எடுபிடி வேலைகள் செய்வது தனது தகுதிக்கு உரியதாக இல்லை. ஆகவே, தனக்கு ஏதாவது பொறுப்பான வேலை தர வேண்டும் என்று அவர் மகாராணியைக் கேட்டுக்கொண்டார். உடனே, மகாராணி அவருக்கு 'முன்ஷி’ என்ற பதவியை அளித்து அவரைத் தனது ஹிந்துஸ்தானி ஆசிரியர் என்று கௌரவித்தார். இது பக்ஷிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. வந்த சில மாதங்களிலேயே மகாராணியோடு கரீம் நெருக்கமாகிவிட்டதைக் கண்டு, அவர் மீது பொய்ப் புகார் சுமத்த ஆரம்பித்தார். பக்ஷிக்குத் துணை செய்வது போல அரண்மனை ஊழியர்கள் சிலர் அப்துல் கரீமுக்கு எதிராக வேலை செய்யத் தொடங்கினர்.மகாராணி, அப்துல் கரீமை தனது சொந்த உதவியாளர் போல கூடவே வைத்துக்கொள்ள ஆரம்பித்தார். அதன் காரணமாக, அப்துல் கரீமுக்கு முன் ராணியின் அந்தரங்க வேலையாளாக இருந்த ஜான் பிரௌனுக்கு ஒதுக்கப்பட்டு இருந்த அறை, அப்துல் கரீமுக்கு வழங்கப்பட்டது.ஜான் பிரௌன், மகாராணியின் நெருக்கமான வேலையாளாக இருந்தவர். ராணியின் ரகசியக் காதலன் என்றெல்லாம்கூட அரண்மனையில் வதந்தி உலாவியது. திடீரென, ஜான் பிரௌன் இறந்து​போனதை மகாராணியால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அந்த மனவெறுமையைப் போக்கும் விதமாக அப்துல் கரீம் செயல்படுவதாக அரண்மனை ஊழியர்கள் பேச ஆரம்பித்தனர்.

இரண்டு வருடங்களுக்குள், அரண்மனையின் முக்கிய ஊழியராக ஆகிவிட்டார் அப்துல் கரீம். பல மணி நேரம் மகாராணியோடு தனித்து உரையாடுவது, இசை கேட்பது, மகாராணி கலந்துகொள்ளும் நடன விருந்துகளுக்குப் போவது என்று, அவரும் அரச குடும்பத்து மனிதரைப் போலவே இருந்தார். அவருடைய செல்வாக்கு அதிகரித்தது. ஆக்ராவில் உள்ள ஜான் டெயிலருக்குப் பதவி உயர்வு அளிக்கப்பட வேண்டும், தனது தந்தைக்கு மானியமும் விருதும் தர வேண்டும் என்று, நேரம் அறிந்து மகாராணியிடம் சொன்னார் அப்துல் கரீம். மகாராணி உடனே உத்தரவுகளைப் பிறப்பித்தார். ஆனாலும், அந்த உத்தரவு பின்பற்றப்படவில்லை.1888-ல் நான்கு மாத விடுமுறையில் இந்தியாவுக்கு வந்த அப்துல் கரீம், இங்கே வசித்த தனது மனைவி மற்றும் உறவினர்களை அழைத்துக்கொண்டு லண்டன் கிளம்பினார். இந்தச் சந்தர்ப்பத்தில், ஜான் டெயிலர் பதவி உயர்வுக்கு யாரெல்லாம் தடையாக இருக்கிறார்கள் என்று அறிந்துகொண்டார். இங்கிலாந்து சென்றவுடன் அவர்களை எல்லாம் களை எடுக்க ஆரம்பித்தார்.

விகடன்