Monday, April 30, 2012

எனது இந்தியா! ( உண்ணாவிரத அரசியல் ! ) - எஸ். ராமகிருஷ்ணன்....


அரசியல் காரணங்களுக்காக உண்ணா​விரதம் இருப்பது வேறு எந்த நாட்டை​விடவும் இந்தியாவில்தான் அதிகம். வெள்ளைக்​காரர்களுக்கு எதிராக காந்தி தொடங்கிய உண்ணாவிரதம் முதல், ராணுவ ஒடுக்குமுறைகளுக்கு எதிராக 10 ஆண்டுகளுக்கும் மேலாக மணிப்பூரில் உண்ணாவிரதம் இருக்கும் ஐரோம் ஷர்மிளா வரை எத்தனையோ வலிமையான உண்ணா​விரதங்களை இந்தியா பார்த்து இருக்கிறது.உண்ணாவிரதத்தை கவனஈர்ப்புப் போராட்ட முறையாக மாற்றியதற்குப் பின்னால், சுவாரஸ்யமான வரலாறு இருக்கிறது. ஐரீஷ்காரர்கள்தான் உண்ணா​விரதத்தை வலிமையான எதிர்ப்பு அடையாளமாக மாற்றியவர்கள். அயர்லாந்தில் ஒரு மனிதனுக்கு ஏதாவது அநியாயம் நடந்துவிட்டது என்றால், அதற்குக் காரணமானவரின் வீட்டுக்கு முன் உண்ணா​விரதம் இருப்பது தொன்று தொட்டு நிலவும் பழக்கம். அப்படி உண்ணாவிரதம் இருந்​தால், கட்டாயம் நீதி கிடைத்துவிடும். காரணம், ஐரீஷ்காரர்கள் மனசாட்சிக்கு மிகுந்த மரியாதை கொடுப்பவர்கள். இது, அயர்லாந்தில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு போராட்ட முறை.பௌத்தம், சமணம், இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் என சகல மதங்களிலும் உண்ணா​நோன்பு என்பது, துறவிகளுக்கான நெறியாகவும், இல்லறத்தோர் குறிப்பிட்ட சில தினங்களில் குறிப்பிட்ட காரணம் கருதி பின்பற்ற வேண்டிய சடங்​காகவும் இருக்கிறது.இது தவிர, 'சல்லேகனம்’ இருந்து உயிர் துறக்க முயலும் சமணத் துறவிகள், திட உணவைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தவிர்த்து, திரவ உணவைக் குடித்து வாழ்ந்து, பிறகு அதையும் துறந்து காற்றைப் புசித்து உடல் மெலிந்து இறந்துபோவார்கள். இப்படி, அறிந்தே உணவை விலக்குவது உயர்ந்த நெறியாகவே இந்திய மரபில் இருந்து இருக்கிறது.

யுவான் சுவாங் இந்தியாவை நோக்கி நடந்து வந்தபோது, கோச்சாங் என்ற நகரை அடைந்தார். அங்கே ஆட்சி செய்த மன்னர் குவென்சி, யுவான் சுவாங்கை வரவேற்று தன்னோடு தங்கவைத்து ராஜ உபசாரம் செய்து இருக்கிறார். இருவரும் பல நாட்கள் கூடிப் பேசி, பல துறைகள் சார்ந்தும் விவாதித்து இருக்கிறார்கள். முடிவில் ஒரு நாள், யுவான் சுவாங் தனது பயணத்தைத் தொடர்வதற்காகக் கிளம்பியபோது, மன்னர் அனுமதிக்க மறுத்து தன்னோடு தங்கி இருந்தே ஆக வேண்டும் எனக் கட்டளை இட்டார். அதை யுவான் சுவாங் மறுக்கவே, அவரைக் கடுமையாகத் தண்டிக்கப்​போவதாக மன்னர் மிரட்டினார். மன்னருக்கு எதிராக யுவான் சுவாங் உண்ணாவிரதம் இருந்தார். நாலாவது நாளில் மயங்கி விழுந்தார். யுவான் சுவாங்கின் பிடிவாதத்தைக் கண்ட மன்னர், அவரது பயணத்துக்கு அனுமதி வழங்கினார். இது நடந்தது 629-ம் ஆண்டு. இதையே அதிகாரப்​பூர்வமாகப் பதிவு செய்யப்பட்ட முதல் உண்ணா​விரதம் என்று, சில வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.அதிகாரத்தை எதிர்த்து உண்ணாவிரதம் இருப்பதை முதன்முதலாக தொடங்கியது ரஷ்யாதான். சைபீரியாவில் உள்ள சிறைச்சாலையில் பெண் கைதிகள் மிகவும் கொடுமைப்படுத்தப்படுவதை எதிர்த்து 1888-ம் ஆண்டு கைதிகள் உண்ணாவிரதம் தொடங்கினர். அந்த உண்ணாவிரதத்தை அரசு கண்டுகொள்ளவே இல்லை. உண்ணாவிரதம் இருந்த ஆறு கைதிகள் இறந்துபோனதால் போராட்டம் வலிமை அடைந்தது. அதைத் தொடர்ந்து, கைதிகளுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி சிறை அதிகாரியை இடமாற்றம் செய்ததோடு, அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்தது. அமெரிக்​காவைப் பொறுத்த வரை, 'பெக்கி எடல்சோன்’ என்ற பெண்தான் அரசியல் காரணங்களுக்காக உண்ணாவிரதம் இருந்த முதல் போராளி. அவர், தனது கருத்து உரிமையை அரசு பறிப்பதாகச் சொல்லி அரசுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தார். இங்கிலாந்திலும் முதல் உண்ணாவிரதம் இருந்தவர் ஓர் பெண் கைதியே!

இந்தியாவில் உண்ணாவிரதத்தைப் போராட்ட முறையாக்கி வெற்றி பெற்றவர் பகத்சிங். தன்னுடைய சிறை வாழ்வில் 114 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து இருக்கிறார் பகத்சிங். சிறையில் தங்களை அரசியல் கைதிகளாக நடத்த வேண்டும் என உரிமை கோரியும், கைதிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்றும் அவர் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். அவருக்கு முன்னோடியாக, சிறைச்சாலைக் கொடுமையை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்தவர் பகத்சிங்கின் தோழர் ஜதீந்திரநாத் தாஸ். கல்கத்தாவைச் சேர்ந்த இவர், தனது கல்லூரிக் காலங்களில் ஆங்கிலேய அரசை எதிர்த்து சிறை சென்றார். சிறை அதிகாரி, கைதிகளை மோசமாக நடத்துவதைக் கண்டித்து 20 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். அதைத் தொடர்ந்து, சிறை அதிகாரி மன்னிப்பு கேட்டார். இதை அடுத்தே, உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொண்டார். பின்னர், லாகூர் சதி வழக்கில் ஜதீந்திரநாத் தாஸ் கைது செய்யப்பட்டு லாகூர் சிறைச்சாலைக்குக் கொண்டுவரப்பட்டு, பகத்சிங்கோடு அடைக்கப்பட்டார். அந்தச் சிறைச்சாலையின் நிர்வாகம் மிகவும் மோசமாக இருந்தது. கைதிகளுக்குத் தரப்பட்ட உணவில் கரப்பான்பூச்சிகள் செத்துக்கிடந்தன. குடிநீரில் புழுக்கள் நெளிந்தன. வாசிப்பதற்கு புத்தகங்களும் பத்திரிகைகளும் தர மறுத்தனர். ஆகவே, சிறை அதிகாரிகளின் கொடுமையைக் கண்டித்து 1929-ம் ஆண்டு ஜூலை 13-ம் தேதி உண்ணாவிரதம் இருந்தார் பகத்சிங். பாது​கேஸ்வர் தத் உட்பட அவரது தோழர்களும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர். அவர்களது கோரிக்கையை ஆங்கிலேய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. பகத்சிங்குக்கு ஆதரவாக நிறையக் கைதிகள் உண்ணாவிரதம் தொடங்கினர். அவர்களைச் சிறைக் காவலர்கள் அடித்துத் துன்புறுத்தினர். இதுகுறித்து, சிறை அதிகாரிகளுக்கும் கவர்னருக்கும் விரிவான கடிதம் எழுதினார் பகத்சிங். அப்படியும் நியாயம் கிடைக்கவே இல்லை. 60 நாட்கள் உண்ணாவிரதத்துக்குப் பிறகு, ஜதீந்திரநாத் தாஸ் உடல்நலிவுற்று சிறைச்சாலையிலேயே இறந்து​போனார். அவரது உடல் கல்கத்தாவுக்கு ரயிலில் கொண்டு செல்லப்பட்டது. ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு, அவருக்கு அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்த தனது உண்ணாவிரதத்தால் உடல்நலிவுற்ற பகத்சிங்கையும் அவரது தோழர்களையும் சாப்பிடவைக்க மோசமான வன்முறையைக் கையாண்டது ஆங்கிலேய அரசு. ஆனால், அவர்கள் பணிந்து போகவில்லை. அதன் பிறகு, பகத்சிங்கின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்​பட்டன. உண்ணாவிரதப் போராட்டத்தின் மூலம், உரிமைகளை அடைந்தார் பகத்சிங். இதுதான் உண்ணாவிரத எதிர்ப்பு அரசியலின் தொடக்கப் புள்ளி.பகத்சிங்கின் உண்ணாவிரதம் ஒருவிதம் என்றால், காந்தியின் உண்ணாவிரதம் முற்றிலும் மாறுபட்ட கார​ணங்களும் வழிமுறைகளும்கொண்டது. தொழிலாளர் பிரச்னை முதல், மதக் கலவரத்தைத் தடுப்பதற்காக முனைந்தது வரை பல்வேறு வகையான உண்ணாவிரதப் போராட்டங்களைக் காந்தி நடத்தி இருக்கிறார். காந்தி எழுந்து நடந்தபோது உருவான எழுச்சியைவிட, அவர் உண்ணாவிரதப் படுக்கையில் கிடந்தபோது மக்கள் அடைந்த எழுச்சி மகத்தானது. அவர் உண்ணாவிரதத்தை ஒரு மொழி ஆக்கினார். அதன் மூலம், எளிய மக்களோடு நேரடியாக உரையாடினார். மனசாட்சி உள்ள ஒவ்வோர் இந்தியரும் காந்தியின் உண்ணாவிரதத்துக்குத் தார்மீக ஆதரவு கொடுத்தனர். இந்தியர்களின் கோபத்​தை​விடவும், உண்ணாவிரதத்தைக் கண்டே வெள்ளை அரசு அதிகம் பயந்தது என்கிறார் வரலாற்று ஆசிரியர் எப்.ஏ.மாத்தூர்.பகத்சிங்கின் உண்ணாவிரதம் போல, காந்தியின் உண்ணாவிரதம் ஆங்கிலேய அரசுக்கு எதிரானது அல்ல. மதக் கலவரம், வன்முறை, ஒழுக்க மீறல் போன்ற மக்களின் கொந்தளிப்புக்கு எதிராகவே, காந்தி உண்ணாவிரதத்தை மேற்கொண்டு இருக்​கிறார். காந்தியைப் பொறுத்த வரை அது சத்யாக்கிரகத்தின் ஒரு வழி. தன்னுடைய வாழ்வில் மொத்தம் 17 முறை காந்தி உண்ணாவிரதம் இருந்து இருக்கிறார். தென் ஆப்பிரிக்காவில் இருந்தபோதே அவர், உண்ணாவிரதத்தைக் கடைப்பிடித்து இருக்கிறார்.

பின்னர் அது, செழுமைப்படுத்தப்பட்டு சாத்வீகமான எதிர்ப்பு வடிவம் ஆனது. காந்தியின் உண்ணாவிரதம் நிறையக் கட்டுப்பாடுகள்கொண்டது. ஒருவர் மீது வெறுப்பையோ, கசப்பு உணர்வையோ காட்டுவதற்காக உண்ணாவிரதம் இருக்கக் கூடாது, எதிரியின் மனசாட்சியைத் தொட்டு உலுக்கி உண்மையை உணரச்செய்வதே அதன் முக்கிய நோக்கம். ஆகவே, நியாயமான குறிக்கோள் இல்லாமல் உண்ணாவிரதம் இருக்கக் கூடாது,சுயநலத்துக்காகவோ, சொந்த லாபத்துக்காகவோ உண்ணாவிரதம் இருப்பது மோசமான செயல். அதே நேரம், சாத்தியமே இல்லாத ஒன்றை அடைவதற்காக ஒருபோதும் உண்ணாவிரதம் மேற்கொள்ளக் கூடாது. உண்ணாவிரதத்தை வெற்று அரசியல் நடவடிக்கையாக மாற்றிவிடக் கூடாது என்பதில், காந்தி மிகவும் கவனமாக இருந்தார்.காந்தியின் உண்ணாவிரதங்கள் குறித்து கடுமை​யான வாதப்பிரதிவாதங்கள் நடந்து இருக்கின்றன. அது ஒரு வகையான எமோஷனல் பிளாக்மெயில். மக்களை மிரட்டும் உத்தி என்று எதிர்ப்புக் குரல் எழுந்து இருக்கிறது. உண்ணாவிரதம் என்பது சரியான போராட்ட வழி அல்ல என்று, பெரியாரும் அம்பேத்கரும் நேரடியாகவே கூறியிருக்கிறார்கள்.ஆனால் காந்தி, மன வலிமை ஏற்படுத்தும் செயலாகவே உண்ணாவிரதத்தைக் கருதினார். மக்களைத் திரட்டி ஒருமித்தக் கவனம் கொள்ளவைக்க அதை ஒரு வழிமுறையாகக் கை​யாண்டார். ஆயுதத்தைக்கொண்டு மக்களிடம் மன மாற்றத்தை உருவாக்க முடியாது. அதற்கு எளிய வழி உண்ணாவிரதம் இருப்பதே என்பதை காந்தி நிரூபித்து இருக்கிறார். இந்து - முஸ்லீம் கலவரத்தின்போது, அவர் உண்ணாவிரதம் இருந்து மக்களை ஒன்றுபடுத்தியதுதான் அதற்கான மகத்தான சாட்சி.சுதந்திரத்துக்கு முன், அந்தமான் சிறையில் 16,106 கைதிகள் அடைக்கப்பட்டு இருந்தனர். அதில், 5,000-க்கும் மேற்பட்டோர் அரசியல் கைதிகள். அவர்களைத் தனிக்கொட்டடி அமைத்து பிரிக்கத் திட்டமிட்டனர். இதற்காக, பதிமூன்றரை அடி நீளமும் ஏழரை அடி அகலமும்கொண்ட கொட்​டடிகள் அமைக்கப்பட்டன. இந்தக் கொட்டடி, இரும்புக் கதவால் மூடப்பட்டு இருக்கும். அறையினுள் மூன்று அடி நீளமும், ஓர் அடி அகலமும்கொண்ட சிறிய ஜன்னல் அமைக்கப்பட்டு இருந்தது. கொட்டடியில் கைதிகள் விலங்குகளைப் போலத்தான் போல நடத்தப்பட்டனர். அசுத்தமான கழிவறைகள், குடிநீர்த் தட்டுப்பாடு என, கைதிகள் மிகவும் சிரமப்பட்டனர்.

விகடன்

Tuesday, April 24, 2012

கே.ஆர். ஸ்ரீதர் - இந்த சாதனை தமிழரின் கண்டுபிடிப்பு !!!


அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்.


கே.ஆர். ஸ்ரீதர் - இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர். இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது.

இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் என்ஜினீயரிங் படித்து விட்டு,
அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றார் ஸ்ரீதர்.

மிகப் பெரிய புத்திசாலியாக இருந்த இவரை நாசா அமைப்பு உடனடியாக வேலைக்கு எடுத்துக் கொண்டது. அரிசோனா பல்கலைக் கழகத்தில் உள்ள ஸ்பேஸ் டெக்னாலஜீஸ் லேபரட்டரியின் இயக்குநராக அவரை நியமித்தது.

செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா? அதற்குத் தேவையான சாத்தியக்கூறுகளைக் கண்டுபிடிப்பது எப்படி? என்பது பற்றி ஆராய்ச்சி செய்வதே ஸ்ரீதரின் வேலை.

முக்கியமாக செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் சுவாசிக்கத் தேவையான ஆக்ஸிஜனை தயார் செய்ய முடியுமா என்கிற ஆராய்ச்சியை மேற்கொண்டார். இந்த ஆராய்ச்சியில் மிகப் பெரிய வெற்றியும் பெற்றார்.

ஆனால் அமெரிக்க அரசாங்கமோ திடீரென அந்த ஆராய்ச்சியை ஓரங்கட்டிவிட்டது. என்றாலும் தான் கஷ்டப்பட்டு கண்டுபிடித்த விஷயத்தை ஸ்ரீதர் அப்படியே விட்டுவிடவில்லை.

அந்த ஆராய்ச்சியை அப்படியே ரிவர்ஸில் செய்து பார்த்தார் ஸ்ரீதர். அதாவது, ஏதோ ஒன்றிலிருந்து ஆக்ஸிஜனை உருவாக்கி வெளியே எடுப்பதற்குப் பதிலாக அதை ஒரு இயந்திரத்துக்குள் அனுப்பி, அதனோடு இயற்கையாகக் கிடைக்கும் எரிசக்தியை சேர்த்தால் என்ன நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தார்.

அட, என்ன ஆச்சரியம்! மின்சாரம் தயாராகி வெளியே வந்தது. இனி அவரவர்கள் அவரவருக்குத் தேவையான மின்சாரத்தை இந்த இயந்திரம் மூலம் தயார் செய்து கொள்ளலாம் என்கிற நிலையை ஸ்ரீதர் உருவாக்கி இருக்கிறார்.

தான் கண்டுபிடித்த இந்தத் தொழில் நுட்பத்தை அமெரிக்காவில் செய்து காட்டிய போது அத்தனை விஞ்ஞானிகளும் அதிசயித்துப் போனார்கள்.
ஆனால் இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வர்த்தக ரீதியில் மின்சாரம் தயாரிக்க வேண்டுமெனில் அதற்கான இயந்திரங்களை உருவாக்க வேண்டும்.

இதற்கு பெரிய அளவில் பணம் வேண்டும். இப்படிப்பட்ட தொழில்நுட்பத்தைப் உருவாக்கும் பிஸினஸ் பிளான்களுக்கு வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள்தான் பணத்தை முதலீடு செய்யும். ஸ்ரீதருக்கும் அப்படி ஒருவர் கிடைத்தார்.

அவர் பெயர், ஜான் டூயர். சிலிக்கன் பள்ளத்தாக்கில் பிரபலமாக இருக்கும் மிகப் பெரிய வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனமான கிளீனர் பெர்க்கின்ஸை சேர்ந்தவர் இந்த ஜான் டூயர்.

அமெரிக்காவில் மிகப் பெரும் வெற்றி கண்ட நெட்ஸ்கேப், அமேசான், கூகுள் போன்ற நிறுவனங்கள் இன்று பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கக் காரணம், ஜான் டூயர் ஆரம்பத்தில் போட்ட முதலீடுதான். கூகுள் நிறுவனத்தை ஆரம்பிக்க ஜான் டூயர் தொடக்கத்தில் போட்ட முதலீடு வெறும் 25 மில்லியன் டாலர்தான்.

ஆனால், ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை வர்த்தக ரீதியில் செயல்படுத்த ஜான் டூயர் போட்ட முதலீடு 100 மில்லியன் டாலர். இது மிகப் பெரும் தொகை. என்றாலும் துணிந்து முதலீடு செய்தார் ஜான்.

காரணம், ஸ்ரீதர் கண்டுபிடித்த தொழில்நுட்பம் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. பொதுவாக மின் உற்பத்தி செய்யும்போது சுற்றுச்சூழல் பிரச்னைகள் நிறையவே எழும். அது நீர் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி, அனல் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி. எனவே சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பங்கம் வராத மின் உற்பத்தித் தொழில்நுட்பத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் என்று நினைத்தார் அவர்.

தவிர, ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தைக் கொண்டு குறைவான செலவில் மின்சாரம் தயார் செய்ய முடியும். இந்த பாக்ஸிலிருந்து உருவாகும் மின்சாரம் குறைந்த தூரத்திலேயே பயன்படுவதால் மின் இழப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை. இது மாதிரி பல நல்ல விஷயங்கள் ஸ்ரீதரின் கண்டுபிடிப்பில் இருப்பதை உணர்ந்ததால் அவர் அவ்வளவுபெரிய தொகையை முதலீடு செய்தார்.

நல்லவேளையாக, ஜான் டூயரின் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை. கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் கஷ்டப்பட்டு பலரும் உழைத்ததன் விளைவு இன்று 'ப்ளூம் பாக்ஸ்' என்கிற மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸ் தயார் செய்துள்ளார்.

சுமார் 10 முதல் 12 அடி உயரமுள்ள இரும்புப் பெட்டிதான் ஸ்ரீதர் உருவாக்கியுள்ள இயந்திரம். இதற்கு உள்ளே ஆக்ஸிஜனையும் இயற்கை எரிவாயுவையும் செலுத்தினால் அடுத்த நிமிடம் உங்களுக்குத் தேவையான மின்சாரம் தயார்.

இயற்கை எரிவாயுவுக்குப் பதிலாக மாட்டுச்சாண வாயுவையும் செலுத்தலாம்.அல்லது சூரிய ஒளியைக் கூட பயன்படுத்தலாமாம். இந்த பாக்ஸ்களை கட்டடத்துக்குள்ளும் வைத்துக் கொள்ளலாம்.

வெட்ட வெளியிலும் வைத்துக் கொள்ளலாம் என்பது சிறப்பான விஷயம்உலகம் முழுக்க 2.5 பில்லியன் மக்கள் மின் இணைப்புப் பெறாமல் இருக்கிறார்கள்ஆப்பிரிக்காவில் ஏதோ ஒரு காட்டில் இருக்கும் கிராம மக்களுக்கு மின்சாரம் கொடுத்தால், அதனால் அரசாங்கத்துக்கு எந்த லாபமும் இல்லை என்பதால் அவர்கள் மின் இணைப்புக் கொடுப்பதில்லை.

கிராமத்தை விட்டு வந்தால் மட்டுமே பொருளாதார ரீதியில் முன்னேற முடியும் என்கிற நிலை அந்த கிராம மக்களுக்கு. ஆனால் இந்த 'ப்ளூம் பாக்ஸ்' மட்டும் இருந்தால் உலகத்தின் எந்த மூலையிலும் மின்சாரம் தயார் செய்யலாம்'' என்கிறார் ஸ்ரீதர்.

ஒரு 'ப்ளூம் பாக்ஸ்' உங்களிடம் இருந்தால் இரண்டு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். இதே பாக்ஸ் இந்தியாவில் இருந்தால் நான்கு முதல் ஆறு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். அமெரிக்க வீடுகளில் அதிக மின்சாரம் பயன்படுத்தப்படுவதே அங்கு வீடுகளின் எண்ணிக்கை குறையக் காரணம்.

இன்றைய தேதியில் அமெரிக்காவின் 20 பெரிய நிறுவனங்கள் ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன. கூகுள் நிறுவனம்தான் முதன் முதலாக இந்தத் தொழில்நுட்பத்தை வாங்குவதற்கான கான்ட்ராக்ட்டில் கையெழுத்திட்டது.

'ப்ளூ பாக்ஸ்' மூலம் கூகுள் உற்பத்தி செய்யும் 400 கிலோ வாட் மின்சாரமும் அதன் ஒரு பிரிவுக்கே சரியாகப் போகிறது. வால் மார்ட் நிறுவனமும் 400 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸை வாங்கி இருக்கிறது. இப்போது Fedex, E bay, கோக்கா கோலா, அடோப் சிஸ்டம், சான் பிரான்சிஸ்கோ ஏர்போர்ட் போன்ற பல நிறுவனங்களும் இந்த புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன.

100 கிலோ வாட் மின்சாரம் தயார் செய்யும் ஒரு பாக்ஸின் விலை 7 முதல் 8 லட்சம் டாலர்! அட, அவ்வளவு பணம் கொடுத்து வாங்க வேண்டுமா? என நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் E bay நிறுவனம் கடந்த ஆண்டு ஸ்ரீதரிடமிருந்து ஐந்து பாக்ஸ்களை வாங்கியது.

தனக்குத் தேவையான 500 கிலோ வாட் மின்சாரத்தை இந்த பாக்ஸின் மூலமே தயார் செய்துவிடுகிறது. இந்த பாக்ஸ்களை வாங்கிய ஒன்பதே மாதத்துக்குள் 1 லட்சம் டாலர் வரை மின் கட்டணத்தை சேமித்திருக்கிறதாம் E bay. இன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் அமெரிக்காவின் பல வீடுகளில் இந்த 'ப்ளூம் பாக்ஸ்' இருக்கும்

சாதாரண மனிதர்களும் இந்த பாக்ஸை வாங்கி பயன்படுத்துகிற அளவுக்கு அதன் விலை 3,000 டாலருக்குள் இருக்கும்'' என்கிறார் ஸ்ரீதர். அந்த அளவுக்கு விலை குறையுமா என்று கேட்டால், ஒரு காலத்தில் லட்சத்தில் விற்ற கம்ப்யூட்டர் இன்று ஆயிரங்களுக்குள் கிடைக்கிறதே என்கிறார்கள் ஸ்ரீதரின் ஆதரவாளர்கள்

ஸ்ரீதரின் இந்த தொழில்நுட்பம் எதிர்காலத்தில் நிஜமாகும் பட்சத்தில் உலகம் முழுக்க மக்கள் அந்தத் தமிழரின் பெயரை உச்சரிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

அவமானங்கள் நம்மை உயர்த்தும் ஏணிகள்.


எப்படா அடுத்தவனை அவமானப்படுத்த ஒரு வாய்ப்புக் கிடைக்கும் என அல்ப சந்தோசத்தோடு அலையும் மக்கள் எக்கச்சக்கம். ஏன் தான் மக்கள் இப்படியெல்லாம் நடந்துக்கிறாங்களோ ? என நாம் பல வேளைகளில் தலையைப் பிய்த்துக் கொள்வோம். விஷயம் புரிபடாது ! பெரும்பாலான அவமானங்கள் மூன்று வகை தான். ஒன்று நம்ம உருவம் சார்ந்தது. இரண்டாவது நமது செயல் சார்ந்தது. மூன்றாவது நமக்கு சம்பந்தமே இல்லாத நம்ம சூழல் சார்ந்த விஷயம்.
இதுல ஏதாவது நாலு குறை கண்டுபிடித்து நம்ம காதுல கொஞ்சம் ஈயம் ஊற்றிட்டு அவங்க பாட்டுக்கு போயிடுவாங்க. நாம அந்த வார்த்தைகளை திரும்பத் திரும்ப நினைச்சுப் பார்த்து நொந்து நூடுல்ஸ் ஆகிடுவோம். இல்லேன்னா, அந்த அவமானத்தை மறைக்க நம்ம பங்குக்கு நாமும் நாலுபேரை இன்சல்ட் பண்ணிட்டு திரிவோம்.  இது தான் வாழ்க்கையின் யதார்த்தம்.
“நீ வெற்றியாளனாய் பரிமளிக்க வேண்டுமானால் அடுத்தவர்கள் உன்னை நோக்கி எறியும் கற்களைக் கொண்டு வாழ்க்கையில் வலுவான அடித்தளம் கட்டிக் கொள்ளத் தெரிந்திருக்க வேண்டும் ” என்கிறார் டேவிட் பிரிங்க்லி. மண்வெட்டி பிடிக்கிற உழைப்பாளியோட கை ஆரம்பத்துல சிவந்து, அப்புறம் கிழிஞ்சு கடைசில பாறை மாதிரி உரமாயிடும். அதே போல அவமானங்களைச் சந்திக்கும் மனசும் உடைந்து விடாமல் அவமானங்களை திறமையாகச் சமாளித்தால் வலிமையாகி விடும். அப்படி ஒரு மனசு அமைந்து விட்டால் வாழ்க்கையின் எந்த சிகரத்திலும் கூடி கட்டிக் குடியிருக்கலாம்.
அவமானங்களை எய்பவர்கள் சாதாரண மனிதர்கள். அதில் வீழ்ந்து அழிபவர்கள் சராசரி மனிதர்கள். அந்த அவமானங்களிலிருந்து வாழ்க்கைக்கான உரத்தைப் பெற்றுக் கொள்பவர்கள் தான் வெற்றியாளர்கள்.
பள்ளி இறுதியாண்டு தேர்வு முடிவு வரும்போது முதல் பக்கத்தில் சாதனை புரிந்த மாணவர்களின் படங்கள் வரும். தொடர்ந்த நாளிதழ்களில் தோற்றுப் போய் விட்டதால் அவமானத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களும் இடம்பெறுவதுண்டு. ஒரு சாதாரண தேர்வில் தோற்றுப் போவதைக் கூட ஏற்றுக் கொள்ளாதவர்கள் வாழ்க்கையில் எப்படி சாதிக்க முடியும் ? அடைக்கப்பட்ட ஒரு கதவின் முன்னால் நின்று புலம்புவது திறந்திருக்கும் கோடானு கோடி கதவுகளை உதாசீனப்படுத்துவதற்குச் சமமல்லவா ?
பள்ளிக்கூடத்தில் தோற்றுப் போனால் வாழ்க்கையே போச்சு என நினைப்பவர்கள் வின்ஸ்டன் சர்ச்சிலை அவமானப்படுத்துகிறார்கள். அவர் ஆறாம் வகுப்பிலேயே தோற்றுப் போனவர். அந்தத் தோல்வியுடனேயே மனம் உடைந்து போயிருந்தால் பின்னாளில் அவர் அடைந்த உயரத்தை அடைந்திருக்க முடியுமா ? இங்கிலாந்து நாட்டில் இரண்டு முறை பிரதமராய் இருந்தவர் சர்ச்சில். பிரிட்டிஷ் பிரதமர்களிலேயே இலக்கியத்துக்கான நோபல் பரிசு வாங்கியவர் இவர் மட்டும் தான். ஆறாம் வகுப்பில் தோல்வி பெற்ற ஒருவருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைக்கிறது ! இது தான் தன்னம்பிக்கையின் வியப்பூட்டும் விளையாட்டு.
தோல்விகளும் அவமானங்களும் நம்மை புதைத்து விடக் கூடாது. நம்மை ஒருவர் அவமானப் படுத்துகிறார் என்றால், நம்மிடம் அபரிமிதமான சக்தி இருக்கிறது எனும் உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
“சார் எங்ககிட்டே ஒரு ஸ்கிரிப்ட் இருக்கு இதை புத்தகமா போடுவீங்களா ?” எனும் கோரிக்கையுடன் ஜேக் கேன்ஃபீல்ட் மற்றும் விக்டர் ஹேன்சன் இருவரும் ஒரு பதிப்பகத்தை அணுகினார்கள்.
“சாரி.. இதையெல்லாம் பப்ளிஷ் பண்ண முடியாது. ஓவர் அட்வைஸா இருக்கு” என பதிப்பகத்தார் அதை நிராகரித்தனர். எழுத்தாளர்கள் சோர்ந்து விடவில்லை. இரண்டாவது மூன்றாவது நான்காவது என வரிசையாய் எல்லா பதிப்பகங்களிலும் ஏறி இறங்கினார்கள். அந்த புத்தகம் எத்தனை இடங்களில் நிராகரிக்கப்பட்டது தெரியுமா ? சுமார் 140 இடங்களில். இருந்தாலும் அவர்கள் தங்கள் முயற்சியை விடவில்லை. கடைசியில் ஒருவழியாக அந்த நூல் அச்சானது. கடைகளுக்கு வந்த உடனேயே உலகம் முழுவதும் அதன் விற்பனை சட்டென பற்றிக் கொண்டது. இன்று உலகெங்கும் 65 மொழிகளில், ஏகப்பட்ட தலைப்புகளில், பத்து கோடிக்கு மேல் பிரதிகளில் என அந்த நூல் பிரமிப்பூட்டுகிறது. அந்த நூல் தான் “சிக்கன் சூப் ஃபார் த சோல்” !.  நிராகரித்தவர்களெல்லாம் வெட்கித் தலைகுனியும் படி அந்த நூலின் பிரபலம் இருப்பது நாம் அறிந்ததே.
140 அவமானங்களுக்குப் பின் இந்த வெற்றியை அவர்கள் அடைந்திருக்கிறார்கள் என்றால் தங்கள் மேல் வைத்த நம்பிக்கை தான் காரணம். ஒரு சிறுகதை நிராகரிக்கப்பட்டாலே கதை எழுதுவதை மூட்டை கட்டி வைக்கும் மக்கள் வாழும் ஊரில் தானே அவர்களும் வாழ்கிறார்கள் ! அவமானங்களோடு மூலையில் படுத்திருந்தால் இன்று அவர்கள் உலகின் பார்வையில் தெரியவே வந்திருக்க மாட்டார்கள்.
“ஏய் உன் மூஞ்சி சதுரமா இருக்கு. நீயெல்லாம் நடிகனாவியா ? உனக்கெதுக்கு இந்த வேண்டாத வேலை” என்று விரட்டப்பட்டவர் தான் ஹாலிவுட்டில் கொடிகட்டிப் பறக்கும் ஜான் டிரவோல்டா. இன்று அவருக்கு இந்தியாவிலேயே ஏகப்பட்ட ரசிகர்கள். “என் மூஞ்சி எப்படி வேணா இருக்கலாம். ஆனா நான் நடிகனாவேன், ஏன்னா எனக்குத் திறமை இருக்கு” என்பது தான் அவருடைய பதிலாய் இருந்தது. முயற்சி அவரை உச்சத்தில் கொண்டு போய் நிறுத்தியது.
உறுதியான மனம் இருந்தால் அவமானங்கள் வரும்போது மனதின் கதவை இறுக அடைத்துத் தாழ் போட்டுக் கொள்ளலாம். நாம் அனுமதிக்காவிடில் அவமானங்கள் நமக்குள் போய் அமர்வதேயில்லை.  பிறர் அவமானமான வார்த்தைகளைப் பேசும்போது அதை வரவேற்று உள்ளே உட்காரவைத்து அதையே நினைத்து உருகி, நமது வாழ்க்கையை இழந்து விடக் கூடாது.
புத்தர் ஒருமுறை கிராமங்கள் வழியாகப் போய்க் கொண்டிருந்தார். ஒரு கிராமத்தில் அவருக்கு ஏகப்பட்ட மரியாதை. அடுத்த கிராமத்தில் ஏகப்பட்ட திட்டு, வசைமொழி, அவமானப்படுத்தல்கள். புத்தரோ அமைதியாய் இருந்தார். அவமானப் படுத்தியவர்களுக்கே அவமானமாகி விட்டது.
“யோவ்.. இவ்ளோ திட்டறோமே.. சூடு சொரணை ஏதும் இல்லையா ?” என்று கடைசியில் கேட்டே விட்டார்கள். புத்தர் சிரித்தார்.
“இதுக்கு முன்னால் நான் போன கிராமத்தில் ஏகப்பட்ட பரிசுப் பொருட்கள் கொடுத்தார்கள். எனக்கு எதுவுமே தேவையில்லை என திருப்பிக் கொடுத்துவிட்டேன். இங்கே ஏகப்பட்ட வசை மொழிகள் தருகிறீர்கள். இதையும் நான் கொண்டு போகப் போவதில்லை. இங்கே தான் தந்து விட்டுப் போகப் போகிறேன். எனவே என்னை எதுவும் பாதிக்காது” என்றாராம்.
நம் மனது முடிவெடுக்காவிட்டால், யாரும் நம்மை காயப்படுத்த முடியாது எனும் உளவியல் உண்மையைத் தான் புத்தர் தனது வாழ்க்கையின் அனுபவம் வாயிலாக விளக்குகிறார்.
அடுத்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதன் வடிவமல்ல நாம். நாம் எப்படி என்பது நமக்கு மட்டுமே முழுமையாகத் தெரியும். மற்றவர்களுக்குத் தெரிந்தது நம்மில் ஒரு சிறு பகுதி மட்டுமே. விமர்சனங்கள், அவமானங்களெல்லாம் எழாமல் இருக்காது. ஆனால் அதை தூரத்தில் நின்று பார்த்துவிடும் ஒரு பயணியைப் போல நாம் கடந்து சென்று விட வேண்டும். அது தான் வெற்றிக்கான வழி.
வீழ்த்தும் கணைகளாய் பாயும் அவமானம்
வீழ்த்தி வெல்வதே வாழ்வின் வெகுமானம்

Monday, April 23, 2012

முகமூடி


http://www.getcinemas.com/images-news/jiivas-mugamoodi-is-launched-today.jpg


'''முகமூடி’ - என் சின்ன வயசுக் கனவு. 'அம்புலி மாமா’, 'பாலமித்ரா’, 'முத்து காமிக்ஸ்’ படிச்சுவளர்ந்தவன் நான். இரும்புக் கை மாயாவி இப்பவும் என் கனவில் வர்றான். 'முகமூடி’ ஸ்க்ரிப்ட்முடிச்சதும் நான் நினைச்சது வந்ததை உணர்ந்தேன்.ஆனந்த விகடன் பேட்டி இது
இப்போதைய தமிழ் சினிமா சூழலில் சூப்பர் ஹீரோ படம் எடுப்பது கஷ்டம். கண்ணு முன்னாடிஒரு கொடுமை நடந்துட்டு இருக்கு. அதை எதிர்கொள்ள நினைக்கிறவன் என்ன மாதிரிநடந்துக்குவான்னு யோசிச்சுப்பார்த்தேன்... ஒரு ஸ்பைடர்மேன், சூப்பர்மேன், இரும்புக் கைமாயாவி மாதிரி ஏதாச்சும் சாகசம் பண்ணாத்தான் உண்டு. அதுதான் இந்தப் படத்துக்கானவிதை. நான் செய்ததிலேயே எனக்கு ரொம்ப சந்தோஷத் தைக் கொடுக்கிற படம் 'முகமூடி’தான்!'' - குளிர் கண்ணாடி விலக்காமல் பேசுகிறார் இயக்குநர் மிஷ்கின்.

http://nowrunning.com/Content/Movie/2012/Mugamoodi/stills/Mugamoodi-10.jpg
1. ''பேட்மேன், ஸ்பைடர்மேன் பாணி படம்னா... ரசிகர்கள் நிறைய எதிர்பார்ப்பார்களே?''
''ப்ளாக்ல எழுதறவங்களுக்கும் ஜோல்னா பைக்காரர்களுக்கும் இப்பவே சொல்லிடுறேன்... இதுஅதுமாதிரியான படம் இல்லை. 'புலியைப் பார்த்து பூனை சூடுபோட்டுக்கலாமா?’, 'முகமூடிசோடா மூடி’னு இப்பவே தலைப்பு எல்லாம் எழுதிவெச்சுட்டு ரெடியா இருப்பீங்க.
ஆனா, நான் புலியும் இல்லை... பூனையும் இல்லை. எம்.ஜி.ஆர். மாஸ்க் போட்டுக்கிட்டுதெள்ளத்தெளிவா ஒரு படம் எடுத்திருக்கேன். இதை நம்ம சமகாலத் தமிழ்ச் சூழலில் வெச்சுப்பார்க்கணும். எளிமையான சகல மனிதர்களுக்கும் போய்ச் சேரும் முயற்சி இது!''

2. ''ஜீவா எப்படி இதற்குப் பொருந்தினார்?''

''பேச ஆரம்பிச்சதுமே 'ஆறு மாசம் குங்ஃபூ கத்துக்கணும் ஜீவா’னு சொன்னேன். 'ஏழெட்டுவருஷமா அந்தப் பயிற்சியில் இருக்கேன். இன்னும் அதை எங்கேயும் பயன்படுத்தலை’னுசொன்னார். இந்த புராஜெக்ட்டுக்குள் முழுசா இறங்கிட்டார். என் மேல் ரொம்ப நம்பிக்கைவெச்சிருக்கார்.


இனி, ஒவ்வொரு வருஷமும் ஒரு படம் அவர்கூட பண்ணலாம்கிற அளவுக்கு நட்புவளர்ந்திருக்கு. சூப்பர்மேன் டிரெஸ் தயாரிக்கச் துணி செலவே 45 லட்சத்தைத் தாண்டுச்சு.ஹாங்காங்ல இருந்து சண்டைப் பயிற்சிக்கு வந்திருந்தாங்க. அந்த டிரெஸ் போட்டுட்டு நிக்கிறதுரொம்பக் கஷ்டம். பத்து நிமிஷம் தொடர்ந்து நின்னா, கண் பொங்கும். உடம்பெல்லாம் வியர்த்துஒழுகும். அதை எல்லாம் பொறுத்துக்கிட்டு இருந்தார் ஜீவா.

இவ்வளவு சின்ன வயதில் ஒரு நடிகனுக்கு இவ்வளவு மெச்சூரிட்டி சாத்தியமானது சத்தியமாஆச்சர்யம் தான். ஜீவாவுக்கு இன்னும் மரியாதையையும் பெருமையையும் இந்தப் படம்சேர்க்கும்!''

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjvq_n3F0msR7Grfiswehu0MR9Sm4b2PnDi3kzVYjakwXz8NxhMmuR5zTM3i_2YcNdNPWtX9Abo4WPhiyujQ7wwDhw6VKR4WoVHhij6LG_NnU0td0PKVPxSuEm5ZFmPgTpUJybewdJUHzc/
3. ''என்ன... நரேனை வில்லனா ஆக்கிட்டீங்க?''
''படத்துக்கு வில்லன் ரொம்ப முக்கியம். அசிஸ்டென்ட்டுகள் வரிசையாப் பெயர்களைஅடுக்கிக்கிட்டேபோனாங்க. 'ஏன் நம்ம நரேனை நடிக்கவெச்சா என்ன?’னு கேட்டேன். அவங்கநம்பலை. அந்த நிமிஷமே நரேனுக்கு போன் போட்டேன். 'வில்லனாவா... புறப்பட்டு வர்றேன்’னுவந்து நின்னார். சில நிமிஷங்களில் வில்லனை ஃபிக்ஸ் பண்ணிட்டோம்!''
4. '' 'நந்தலாலா’வோட நடிப்பை நிறுத்திட்டீங்கபோல... ஏன்?''
''அந்தப் படத்தில் நடிச்சது காலத்தின் கட்டாயம். அதுக்கு விகடன் 'சிறந்த நடிகர்’ பட்டம்கொடுத்தது உச்சபட்ச அங்கீகாரம். இப்பவும் ரொம்ப ஆழமா, ஆத்மார்த்தமான ஸ்க்ரிப்ட்அமைஞ்சா நான் நடிக்கத் தயார்தான். அது என் ஸ்க்ரிப்ட்டாக இருந்தால் இன்னும் சந்தோஷம்.ஆனா, நடிப்பது என் முதல் விருப்பம் கிடையாது!''
5. ''எப்போதையும்விட தமிழ்ப் படங்கள் இப்ப நிறைய ரிலீஸ் ஆகுது. ஆனால், வெற்றி ரொம்பஅபூர்வமா இருக்கே... ஏன்?''
''பல சினிமாக்களில் ஆன்மா இல்லை. ஆனா, மக்க ளின் எதிர்பார்ப்பு பல படிகள்தாண்டிப்போயிருச்சு. ஹாலிவுட் படங்களின் டெக்னாலஜி கண்ணுக்கு முன்னாடி தெரியுது.புரட்டிப் போடுற மாதிரி வித்தியாசமா செய்தால் பிழைச்சிக்கலாம். எல்லாத்துக்கு நடுவிலும்ஒரு பையன் திடீர்னு ஒரு விபத்தை மையமாவெச்சு 'எங்கேயும் எப்போதும்’ எடுத்தாரே...முதல் படத்திலேயே தமிழ் சினிமாவையே 'யார் இந்தப் பையன்?’னு திரும்பிப்பார்க்கவைக்கலை?

தாங்க முடியாத சோகத்தோட படத்தை முடிக்கலை? பிரபு சாலமன் 'மைனா’வை எவ்வளவுகாவியமா எடுத்திருந்தார்? இப்படிப்பட்ட விஷயங்கள் இருந்தால், யார் நடிச்ச, யார் இயக்கியபடமா இருந்தாலும் ஜெயிக்கும். 25 வருஷத்துக்கு முன்னாடி வர வேண்டிய படத்தை எல்லாம்எடுத்துட்டு, 'ஓடலை’னு இப்போ யாரும் கவலைப்படக் கூடாது!''
http://www.tamilnow.com/movies/misc/mugamoodi-pooja/mugamoodi-pooja-5114.jpg

6. ''அப்போ புதுசா சினிமாவுக்கு வர்றவங்களுக்கு என்ன தேவைனு நினைக்கிறீங்க?''
''நிறையப் பேர் குழப்பத்தில் இருக்காங்க. 19 வயசில் பிழைக்க வந்து 32 வயசில்தான் முதல் படம்பண்ணினேன். இதுவரைக்கும் 72 தொழில் பண்ணியிருக்கேன். சினிமாவுல சாதிக்கணும்னுஎல்லாருக்கும் ஆசை, கனவு இருக்கலாம். ஆனா, அதுக்கான விதை பழுது இல்லாமஇருக்கணும். தன்னைத் தயார்படுத்திக்கணும். நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்னாடிஇரண்டு வருஷம்

லேண்ட்மார்க்கில் வேலை பார்த்துக்கிட்டே சினிமாவைப் பத்தி புத்தகங்கள் படிச்சேன். தினசரித்தயாரிப்பு இல்லாம இங்கே எதுவும் நடக்காது!''
7. ''சினிமாவைப் பத்தி இவ்வளவு பேசுறீங்க... ஆனா, உங்க படத்திலும் குறிப்பிட்ட சிலகாட்சிகள், பாட்டுகள் யோசிச்சுவெச்ச மாதிரியே வருதே?''
''குத்துப் பாட்டுதானே? சினிமாவில் எனக்குப் பிடிக்காததே இந்தப் பாட்டுங்கதான். பாட்டுஇல்லாமப் படம் எடுக்கிறதுதான் எனக்குப் பிடிக்கும். தமிழ் சினிமாவில் பாட்டுக்களும்,கிளைமாக்ஸில் மூச்சுவிடாம வசனம் பேசுறதும் நின்னால்தான், அதுக்கு வாழ்வு வரும். ஆனா,நான் குத்துப் பாட்டு வெச்சாலும் அதுல விரசமோ, ஆடைக் குறைப்போ இருக்காது.தொப்புளுக்கு க்ளோஸப் வைக்கிறது இல்லை.
ஒரு உண்மையை ஒப்புக்கத்தான் வேணும். என்னால் குத்துப் பாட்டு இல்லாம படம் எடுக்கமுடியலை. இதைச் சொல்ல நான் வெட்கப்படலை. ஆனா, அந்தப் பாட்டு என் விருப்பத்தோடசம்பந்தம் இல்லாததுனு சொல்றதுக்குத்தான் மஞ்சள் சேலை கட்டி ஆடவிடுறேன்!''
http://tamil.way2movies.com/wp-content/uploads/2012/03/Radhika-Apte_deal.jpg