மெழுகுவர்த்தியைப் பற்றி எழுதிய ஒரு கவிஞன் ‘இந்த உயிர் வாழ்ந்ததற்கு அல்ல... செத்ததற்கு மட்டுமே சுவடுகள் உண்டு’ என்று கூறியிருந்தான். அதுபோல் இங்கே வரும் நாயகனும் இறப்புக்குப் பிறகே பரபரப்பானவர். இவரின் மரணத்தில் ஏற்பட்ட மர்ம முடிச்சுகள் மாதக் கணக்கில் இன்னும் அவிழ்க்கப்படாமலேயே அப்படியே இ ருக்கிறது. இவரின் மறைவுடன் சில விவகாரங்களும் மறைந்து போகும் என சிலர் போட்ட கணக்குகள் பொய்யாகிவிட்டது. இவரிடம் நேரில் விசாரித்தபோது கிடைத்த தகவல்களைவிட இவரின் மரணம் பற்றி விசாரிக்கும்போது கிடைத்த விவரங்களே விஸ்வரூபமெடுத்தன. பூ வியாபாரம், சேலை வியாபாரம் என பெண்கள் தொடர்பாகவே இவர் வாழ்க்கையைத் தொடங்கினாலும் முந்தானை முடிச்சில் இவர் மாட்டிக் கொண்டதில்லை.
இறப்புக்குப் பின் ஒருவரை விமர்சிப்பது நாகரிகமில்லை என்றாலும் இவரின் இறப்பில் பல நாகரிகங்கள் நசுக்கப்பட்டிருக்கிறது. இவரோடு புதைக்கப்பட்டதாக கருதப்பட்ட உண்மைகள் முளைத்து வெளிவரத் தயாராகின்றன. எனவேதான் அவரின் மனசாட்சியுடன் பேச ஆயத்தமானோம். அவர் மரணித்துப் போயிருந்தாலும் அவரின் வாக்கு மூலம் மரணித்துப் போகாமலிருப்பது மனதுக்கு நிறைவு. அது உங்களுக்காக...
சிலர் தொண்ணூறு வயதைத் தொட்ட பிறகும் தொல்லைகள் கொடுத்தபடி உயிரோடிருக்க... முப்பத்தியேழு வயதிலேயே மரணம் என்னை மீட்டுக் கொண்டது. நான் உங்கள் பாவிகளின் உலகத்திலிருந்து புறப்பட்டுப் போய் ஆவிகளின் உலகத்தில் ஐக்கியமாகிவிட்டேன். ஆனாலும் விமர்சனங்கள் என்னை விட்டபாடில்லை. ஒரு பீரோவாக, பேங்க் லாக்கராக, வங்கியின் பாஸ் புக்காக மட்டுமே வாழ்ந்து கொண்டிருந்த எனக்கு மரணமே தண்டனையாய் தரப்பட்டதென்றால் மற்றவர்களுக்கு?
நான் சொத்துக்கள் பராமரிக்கும் பெட்டகமாகத்தான் பயன்படுத்தப்பட்டேன். என்னுள் இருந்த பொருட்களுக்கு நான் உரிமை கோரியதில்லை. அவை கொடுக்கப்பட்டதைப் போலே எடுக்கப்படும் என்பது எனக்குத் தெரியும். ஆனால் என் உயிரையும் சேர்த்தே எடுக்கப்படும் என்பதுதான் எனக்குத் தெரியாமல் போய்விட்டது.
வளர்ச்சியடைந்து வாழ வேண்டும் என்று சிறு வயது முதலே கனவு கண்டிருந்த என்னால் வளர்ச்சி மட்டுமே அடைய முடிந்தது. வாழ முடியவில்லை.
திருச்சியை அடுத்து சற்றுத் தொலைவிலிருந்த பள்ளமான பகுதியில் பிறந்தேன். என்னைப் பெற்றெடுத்த குடும்பமும் வறுமைப் பள்ளத்தில்தான் வீழ்ந்து கிடந்தது.
நான்கு சகோதரர்கள், நடுத்தர குடும்பம், பள்ளிப் படிப்பிலும் அதிக ஆர்வமில்லாததால் பதினேழு வயதிலேயே பக்கத்தில் வளர்ந்திருந்த கிராமமான பலூர் பகுதிக்கு வந்துவிட்டேன்.
வாழ வழி தேடி அலைந்தேன். கோரைப்பாயை தலையில் சுமந்து கூவிக் கூவி விற்றேன். பூ வியாபாரம் செய்து பார்த்தேன். சேலைகளை சைக்கிளில் வைத்துக் கட்டிக் கொண்டு தெருத் தெருவாகத் திரிந்து மாதத் தவணையில் விற்று வந்தேன். எல்லா வியாபாரமும் வயிற்றுக்கும் வாய்க்கும் மட்டுமே வருமானத்தைத் தந்தன. வளர்ச்சியடைய முடியவில்லை.
அதில் சைடு பிஸினஸாக நான் செய்த நில புரோக்கர் தொழில் லேசாக சூடு பிடித்தது. வாடகைக்கு வீடு பிடித்துத் தருவதில் துவங்கி நிலம் வாங்க விற்க என வளர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக ரியல் எஸ்டேட் தொழிலில் எண்ட்ரி ஆனேன். வருவாய் லேசாக உயர ஆரம்பிக்க, வேறு தொழில்களில் இறங்க எண்ணினேன். போர்வெல் போடும் எந்திரத்துடன் கூடிய லாரியை வாங்கி கடனில் சிக்கிக் கொண்டேன். கடனாளிகளிடமிருந்து தப்பிக்க வாய்தாவில் கிங்காக வளர்ந்து கொண்டிருந்த வக்கீலிடம் தஞ்சமடைந்தேன். அந்தத் தொடர்புதான் என்னை வளர்த்து என் வாழ்க்கையை முடித்துவிட்டது. கடனிலிருந்து என்னைக் காப்பாற்றிய அவரால் மரணத்திலிருந்து என் னைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது. ஆரம்பத்தில் வக்கீலுடன் சேர்ந்து, ஜாமீன் எடுப்பவர்களுக்கு ரேஷன் கார்டு செட்டப் செய்து கொடுப்பேன். அதில் எனது தொழல் நுணுக்கம் அவருக்குப் பிடித்துவிட்டது.
வக்கீலுடன் ஏற்பட்ட தொடர்பு படிப்படியாக வளர்ந்தது. அவரோ அரசியலில் அதிரடியாக வளர்ந்துவிட்டார்.
அந்த சுழல் விளக்கின் மகிமை என்னை சுழன்றடித்தது. அதன் பிறகு என் வாழ்க்கையில் எல்லா திசைகளிலும் வெளிச்சம்தான். கொஞ்சமாக செய்து வந்த ரியல் எஸ்டேட் வியாபாரத்தை மொத்தமாகத் தொடங்கினேன். திருவள்ளூர் மாவட்டத்தில் ஏக்கர் கணக்கில் நிலத்தை அடிமாட்டு விலைக்கு வாங்கி அடேங்கப்பா விலைக்கு விற்றேன். என்னிடம் நிலம் வாங்குபவர்களுக்கு இலவச கலர் டி.வி. என தேர்தல் அறிக்கை போல் விளம்பரம் செய்தேன். வியாபாரம் ஓஹோவென வளர்ந்தது. வக்கீல் தனது சுழல் விளக்கை வனத்தில் சுழல விட்டுக் கொண்டிருந்தபோது நான் அவருக்காக விமானத்தில் சுழன்று கொண்டிருந்தேன். ஆரம்பத்தில் மீசைக்கார முன்னாள் சுழல் விளக்கின் சகோதரருடன் பங்கு சேர்ந்தேன். அந்த நேரத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் காற்று வாங்கப் போகும் போதெல்லாம் ஏக்கர் கணக்கில் நிலம் வாங்கி வந்தேன். பின்னர் அவருடனிருந்து விலகி நேரடியாகவே களம் இறங்கினேன். ஏழெட்டு கார்கள், டிரைவர்கள் என வைத்துக் கொண்டேன். ஆனாலும் முக்கிய விஷயங்களுக்குப் போகும்போதெல்லாம் என் அண்ணன் தம்பிகளைத்தான் டிரைவர்களாக அழைத்துச் செல்வேன். யாரையும் அவ்வளவு சீக்கிரம் நான் நம்பி விடமாட்டேன்.
எனது வியாபாரம் சென்னை, ஐதராபாத், டில்லி, சிங்கப்பூர், மலேஷியா, துபாய், தாய்லாந்து என வளர்ந்தது. அதாவது ஆரம்பத்தில் இங்கிருந்து அங்கு சென்று செட் டிலானவர்களிடம் நான் இங்கு போட்ட லே-அவுட்டுகளைக் காட்டி இங்கே பண முதலீடு செய்ய வைத்தேன். பின்னர் அங்கேயே ரியல் எஸ்டேட் வியாபாரத்தை வலுப்ப டுத்தினேன்.
அதாவது நான் பிறந்த பள்ளப் பகுதியில் பெரும்பாலானவர்கள் எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்தான். ஆனால் அங்கிருந்து வீட்டிற்கு ஒருவர் வெளிநாட்டிற்குச் செ ன்று வேலை செய்து வந்தனர். அவர்களிடமிருந்து வரும் வெளிநாட்டுப் பொருட்கள் ஊர் முழுக்க விரிந்து கிடக்கும். குட்டி துபாய் என்றே எங்கள் ஊரை அழைப்பார்கள். ஆனால் அதற்குக் கூட வழியில்லாமல்தான் நான் லோக்கலில் பாய் வியாபாரம் தொடங்கினேன்.
பின்னாளில் நான் அவர்கள் வாழ்ந்த வெளிநாடுகளுக்குச் சென்று அவர்கள் எதிரிலேயே அவ்வளவு பெரிய வியாபாரியாக உருவெடுத்தது அனைவருக்குமே ஆச்சரியம் கொடுத்தது. எவ்வளவு பிஸியாக இருந்தாலும் தொழுகை போன்ற விஷயங்களில் நான் தவறியதே இல்லை.
எனக்கு தமிழ், ஆங்கிலம், உருது, ஹிந்தி என பல மொழிகள் தெரிந்ததால் எனது வெளிநாட்டுப் பயணங்களும், வியாபாரப் பேச்சுகளும் தோல்வியடைந்ததே இல்லை. அப்போதுதான் வக்கீலுடன் ஒரு ரியாலிட்டி ஷோவை நடத்தத் வந்தார் ஒரு ரியல் எஸ்டேட் தொழிலதிபர். அவரும் எங்கள் சமுதாயத்துக்காரர் என்பதால் அவருடனான அனைத்துத் தொடர்புகளையும் நானே டீல் செய்தேன்.
அப்போது சென்னையை அடுத்துள்ள கடற்கரைப் பகுதியில் ஒரு கடல் நகரம் அமைக்கத் திட்டமிட்டோம். அதற்கு அந்த ரியாலிட்டி நபர்தான் தனது நாட்டு ஆட்களை அனுப்பி ஆய்வு செய்தார். எல்லா ஏற்பாடுகளும் முடிந்த நிலையில் அரசின் அனுமதி கிடைக்காமல் அந்த திட்டம் நின்று போனது. அதே போல் எங்கள் ஊரைச் சேர்ந்த ஒருவர் விவேகானந்தரின் கொள்கையில் ஈடுபாடு கொண்டவர், மத்திய அரசுப் பணியில் இருந்தார். அவரை அழைத்து வந்து எனக்கு சீடராக வைத்துக் கொண்டேன். எனக்கு சீடராக இருக்கவும் அவருக்கு மத்திய அரசே சம்பளம் கொடுத்தது. எல்லாம் சுழல் விளக்கின் மகிமைதான். நான் இறந்த பின்னர் என்னை முதல் மருத்து வமனையில் சேர்த்ததும் அடுத்த மருத்துவமனையில் சேர்த்ததும் எல்லாவற்றிலும் கையெழுத்துப் போட்டதும் இந்த சீடர் தான். சாதாரண தொழிலாளியான இவருக்கும் இப்போது கோடிக் கணக்கில் சொத்து. நிற மாலை விவகாரத்தில் என்னிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள் இவரிடமும் விசாரணை செய்தனர்.
விசாரணைக்கு என்னை பலமுறை சந்தித்த அதிகாரிகள் பல்வேறு கோணங்களில் துருவித் துருவி விசாரித்தார்கள். அவர்கள் விசாரணையில் உண்மையைச் சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை. சொன்னால் இருக்கமுடியுமா என்பதும் தெரியவில்லை. ரியாலிட்டி நபருக்கும் சுழல் விளக்குக்கும் இடையே உண்டான தொடர்பு பற்றியே அதிகமான கேள்விகள் இருந்தன. நிறமாலை விவகாரத்தில் ஏற்கெனவே ரியாலிட்டி சிக்கிக் கொண்டதால் அதற்கான ஆதாரங்களையும் என்னிடம் கேட்டனர். நான் அநேகமாக எல்லா உண்மைகளையும் சொல்லிவிட்டேன். அவர்களுக்கிடையேலான டீலிங்குககளில் நானே பெரும்பாலும் மையப் புள்ளியாக இருந்தேன். எனவே நானும் அந்த விவகாரத்தில் கைதாகலாம் என்ற சூழ்நிலை உருவானது.
என்னை டில்லிக்கு விசாரணைக்காக வரச் சொல்லி நோட்டீஸ் அனுப்பியிருந்தார்கள். அதாவது அதிகாரிகளும் எமனும் எனக்கு ஒரே தேதியில் நாள் குறித்து விட் டார்கள். டில்லிக்குப் போனால் கைதாகலாம் என்ற நிலையில்தான் வீட்டிலேயே நான் சடலமாகிப் போனேன். வழக்கம்போல் அன்று காலை வாக்கிங் முடித்து வீட்டிற்கு வந்தேன். அன்று எனக்கு நடந்த சம்பவத்தைத்தான் தற்கொலை என்று கூறினார்கள். தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்த நான் வாக்கிங் போவேனா! ஆரோக்கியத் திற்காக வாக்கிங் போனவன் அடுத்த மணித்துளிகளில் தற்கொலை செய்து கொள்வேனா? அதிலும் ஐந்தடி உயரத்தில் தொங்கிய சங்கிலியில் நான் தூக்குப் போட்டுக் கொண்டேனாம். என் மரணத்தின் மர்மங்கள் விசாரணையில் இருப்பதால் உண்மையை அவர்களே சொல்லட்டும் என உறுதி காக்கிறேன்.
ஆனாலும் என் உறவினர்களின் உணர்வுகளை உங்களிடம் பதிவு செய்வதில் தவறில்லை. எனது மரணத்தில் அரசியல் காரணங்கள் இல்லை என்றும் அது மறைக்கப்படவே சிலர் காரணமானார்கள் என்றும் அவர்கள் கருதுகிறார்கள். ஆனால் அனைவரின் பார்வையும் ரியாலிட்டி நபரின் மீதே அழுத்தமாகப் பதிந்திருக்கிறது. எனக்கு சீடராக இருந்தவர் உட்பட பலரும் அந்த நபரிடம் விலை போயிருக்கலாம் என்பதே எங்களவரின் கணக்கு. ஆனாலும் என் மரணம் நடந்த சில மணித் து ணிகளில் என் மனைவியையும் அங்கிருந்து அப்புறப்படுத்தியிருப்பது அனைவரையும் குழப்பிவிட்டிருந்தது.
அது மட்டுமின்றி எனது பிரேதத்தைப் பரிசோதித்த மருத்துவரும் குழம்பிவிட்டதுதான் ஆச்சரியம். மருத்துவரான அவர் தற்கொலைப் பற்றிய ஆராய்ச்சி செய்து பேராசிரியைரானவர். இரண்டாயிரத்துக்கும் மேல் பிரேத பரிசோதனை செய்தவர். அவரே எனது விவகாரத்தில் குழம்பிப் போய்விட்டார். எனவேதான் அவர் எனது மறு பரிசோதனைக்கு நான்கு டாக்டர்களைத் தரும்படி எழுதிக் கேட்க ஒருமாதம் கழித்து அனுமதி மறுத்தார்கள். இன்றுவரை எனது பிரேதப் பரிசோதனை அறிக்கையைக் கூட வீட்டிலிருப்பவர்கள் வாங்காமல் இருக்கிறார்கள் என்றால், எப்படிப்பட்ட நிர்பந்தம் அவர்களை சூழ்ந்திருக்கிறது என்பது தெரிகிறது. ஆனாலும் அதிகாரிகள் என் மரணம் மீதான நடவடிக்கையை மேற்கொள்ளும் நாட்கள் அதிக தூரத்தில் இல்லை. அவர்களின் அறிவிப்புக்குப் பிறகு நிச்சயம் மீண்டும் உங்களிடம் பேசுவேன். |
No comments:
Post a Comment