சென்னையில் புதிய தலைமைச் செயலகம் தொடங்கி தாம்பரம் வரை காலை எட்டு மணிக்கே ஆரம்பித்து விடுகிறது போக்குவரத்து நெரிசல். குறிப்பாக, ஸ்பென்ஸர் சிக்னல், தேனாம்பேட்டை, நந்தனம், கிண்டி, வடபழனி நூறடி சாலை, பல்லாவரம் என்று எல்லா இடங்களிலும் இதே கதைதான்!
போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு இரண்டு வகையில் தீர்வு காணலாம். ஒன்று, மேக்ரோ மேனேஜ்மென்ட். (Macro Management)மற்றொன்று, மைக்ரோ மேனேஜ்மென்ட் (Micro Management). முதல் வகை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது. அந்த வகையில் தற்போது சென்னையில் 10 மேம்பாலப் பணிகள் நடக்கின்றன. தவிர, ஸ்டான்லி மருத்துவமனை அருகிலும் வில்லிவாக்கத்திலும் சுரங்கப் பாதைகள் அமைக்கும் பணிகளும் நடக்கின்றன.
அடுத்து மைக்ரோ மேனேஜ்மென்ட். போக்குவரத்து போலீஸார் மற்றும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள்மனது வைத்தாலே இந்த முறையில் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காணலாம்.
தற்போது நகரில் 'இ-சலான்’ முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கருவி கன்ட்ரோல் அறையில் இருக்கும் சர்வரில் ஜி.பி.ஆர்.எஸ் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.சாலை விதிமுறையை மீறிச் செல்வோரை நிறுத்தி, ஸ்பாட்டிலேயே அபராதம் விதித்து இந்தக் கருவி மூலம் சலான் கொடுக்கப்படுகிறது. இந்தக் கருவியில் சம்பந்தப்பட்ட வாகன எண்ணை டைப் செய்தவுடன் கன்ட்ரோல் அறையில் அதன் உரிமையாளர் மற்றும் பதிவு விபரங்கள் தெரிந்து விடும். இதன் மூலம் திருட்டு வாகனங்கள், குற்றச் செயலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனங்களையும் அடையாளம் காண முடியும். ஏற்கெனவே ஒருவர் அபராதம் செலுத்தி, மீண்டும் இரண்டாவது முறையாக விதிமுறை மீறலில் ஈடுபட்டால், அதுவும் தெரிந்துவிடும். இம்முறை கூடுதல் அபராதக் கட்டணம் விதிக்கப்படும்.
ஆனால், சமூக ஆர்வலர்களோ போலீஸார் மீது குற்றம் சாட்டுகிறார்கள். ''கடந்த ஆண்டு போக்குவரத்து நெரிசலைக் குறைக்க போக்குவரத்து போலீஸார் எஸ்.எம்.எஸ். முறையை அறிமுகப்படுத்தினார்கள். 'வாகன ஓட்டிகள் இந்தத் திட்டத்தின் கீழ் தங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்து கொண்டால், அவ்வப்போது இந்தந்தப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது; மாற்றுப் பாதையில் செல்லலாம்’ என்று எஸ்.எம்.எஸ் அனுப்பப்படும்’ என்றார்கள். இந்தத் திட்டமும் சரியாக செயல்படுத்தப்படவில்லை'' என்கிறார்கள்!
மொத்தத்தில் போலீஸார் மட்டுமல்ல... பொதுமக்களும் மனது வைத்தால் மட்டுமே போக்குவரத்து நெரிசலைத் தீர்க்க முடியும்!
உலகின் 80 சதவிகித வாகனங்கள், வளர்ந்த நாடுகளில் உள்ளன. ஆனால், 80 சதவிகித விபத்துகளும் வளரும் நாடுகளில்தான் ஏற்படுகின்றன. காரணம், வளர்ந்த நாடுகளில் பின்பற்றப்படும் சீரான விதிமுறைகள் மற்றும் போக்குவரத்துச் சட்டங்களை அமல்படுத்துவதில் உள்ள சிக்கல்! இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் மூன்று லட்சம் விபத்துகள் ஏற்படுகின்றன. ஒரு லட்சம் பேர் வரை உயிர் இழக்கிறார்கள் என்கிறது அரசின் புள்ளி விபரம். இதற்குக் காரணம், அலட்சியம் மற்றும் விதிமுறை மீறலே!
No comments:
Post a Comment