Wednesday, August 10, 2011

ஹாப்பி பர்த்டே நெப்டியூன் கிரகம்


பென்சில் முனையில் கண்டுபிடிக்கப்பட்ட கிரகம் நெப்டியூன். வில்லியம் ஹெர்ச்செல் என்ற விஞ்ஞானி, மார்ச் 13, 1781-ல் தற்செயலாக சனிக்கு அடுத்தபடியாக உள்ள யுரேனஸ் எனும் கோளினை தொலைநோக்கி மூலம் கண்டுபிடித்தார். யுரேனஸ் பற்றி மேலும் ஆராய்ந்ததில், அதனுடைய பாதையில் மேலும் கீழுமான அசைவு தெரிந்தது. ஒரு பொருள் மீது ஈர்ப்பு சக்தியைச் செலுத்தி, அதனை ஈர்த்தால் மட்டுமே இவ்வாறு தள்ளாட்டம் இருக்கமுடியும். அப்படியானால் யுரேனஸுக்கு அப்பால் ஒரு பெரிய கோள் இருப்பதாலே... அதன் ஈர்ப்பு சக்தியின் காரணமாக யுரேனஸில் தள்ளாட்டம் ஏற்படுகிறது என கணித்தனர் வானவியலாளர்கள்.

அதைக் கண்டுபிடிப்பது எப்படி என சிந்தனை செய்யத் தொடங்கினர்... பிரெஞ்சு நாட்டவரான லெவெரியா மற்றும் இங்கிலாந்து நாட்டை சார்ந்த ஆடம்ஸ். இந்த இரண்டு இளைஞர்களும் வானவியலில் புதுமைப் புரட்சி செய்தனர். இரவு வானை சல்லடை போட்டு தொலைநோக்கி கொண்டு தேடியபோது, தற்செயலாக நெப்டியூன் கோளும் கண்டுபிடிக்கப்பட்டது.அன்றைய காலகட்டத்தில் வளர்ச்சி பெற்றுக் கொண்டிருந்த கால்குலஸ் எனும் கணித முறையின் மூலம், இருவரும் தனித்தனியே யுரேனஸ் மீது தாக்கம் செலுத்தும் 8-வது கோளின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க முயன்றனர். யுரேனஸ் பாதையில் எத்தகைய தடுமாற்றம் ஏற்படுகிறது என்பதை வானவியல் ஆய்வுகள் காட்டின. மர்மக் கோள் எங்கு இருந்தால் இதே தடுமாற்றம் ஏற்படும் என்பதை கால்குலஸ் கொண்டு கணக்கிட முனைந்தனர்.

1846-ல், ஆடம்ஸ் தனது கணக்கீட்டைச் செய்து முடித்தார். அவரது நாட்டின் தலை சிறந்த வானவியலாளர் எய்ரி என்பவரிடம் தனது கணக்கை எடுத்துச் சென்றார். இளைஞரான ஆடம்ஸ் கூற்று சரியாக இருக்காது என நினைத்த எய்ரி, இதை சட்டை செய்யவில்லை. அந்த ஆய்வு முடிவுகளை லெவெரியா ஜெர்மனியில் உள்ள பெர்லின் தொலைநோக்கிக் கூடத்துக்கு அனுப்பினார்.அதன் இயக்குனரும் ஆர்வம் காட்டவில்லை. பிறகு, அங்கே பணியாற்றிய ஜான்கால், ஹைன்ரிடீ தஜேஸ்ட் எனும் ஆய்வாளர்களின் வேண்டுகோளுக்கு செவி மடுத்த இயக்குனர், நெப்டியூன் கோளினை லெவெரியா கணித்த இடத்தில் தேட, ஒரு சில நாட்களுக்கு மட்டும் சிறப்பு அனுமதி வழங்கினார். 1846-ஆம் ஆண்டு செப்டம்பர் 23-ஆம் நாள், சரியாக இரவு 12 மணிக்கு லெவெரியா கணக்கிட்டு சொன்ன இடத்தில் நெப்டியூன் தென்பட்டது. அடுத்த சில நாட்கள் அதன் இயக்கத்தைச் சரிபார்த்து, இது கோள்தான் என உறுதி செய்தனர். இவ்வாறு கணிதம் கொண்டு பென்சில் முனையில் கண்டுபிடிக்கப்பட்டது நெப்டியூன்.

இப்படி 1846-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட தினத்தில் இருந்து நெப்டியூன், இந்த ஆண்டு ஜூலை 12-ஆம் தேதிதான் சூரியனை ஒரு முறை வலம் வந்துள்ளது. தன்னைத்தானே 19.1 நாளில் சுற்றும் நெப்டியூன், சூரியனை ஒரு முறை சுற்றி வர 164.8 வருடங்கள் ஆகும். அதாவது, இப்போது ஒரு நெப்டியூன் ஆண்டு முடிந்துள்ளது. பூமி, சூரியனை ஒரு முறை சுற்றி வருவதே ஓர் ஆண்டு. அதுபோல நெப்டியூனுக்கு இது முதல் புத்தாண்டு. 'ஹாப்பி பர்த்டே நெப்டியூன்.’ என சொல்லி வாழ்த்துவோம்!

No comments:

Post a Comment