Wednesday, August 17, 2011

சொல்வதெல்லாம் உண்மை பாகம் 9

கடந்த இதழில் நம்மிடம் பேசியவரின் மனசாட்சியின் வாக்குமூலம்தான் இந்த இதழிலும் தொடர்கிறது. குறுகிய காலத்தில் நீண்ட வரலாறு படைத்துவிட்டவராதலால் வாக்குமூலமும் நீண்டிருக்கிறது. குடும்பப் பிரச்னையில் உருவாகி, கோஷ்டிப் பூசலாக உருவெடுத்து தேசத்தின் பொருளாதாரப் பிரச்னையாக மாறிவிட்ட நிறமாலை விவகாரத்தில் இவர்தான் நாயகன். ஒரு நகரச் செயலாளரின் நிழலில் வளர்ந்து நாட்டையே அழிவுப் பாதைக்கு அழைத்துச் சென்ற நல்லவர் இவர். இதோ அவரின் மனசாட்சியின் வாக்குமூலம் தொடர்கிறது.
06
‘எங்கள் கட்சியைப் பொறுத்தவரை மாவட்ட மந்திரியைவிட மாவட்டச் செயலாளருக்கே மவுசு அதிகம். ஆகவே, மா.செ. போட்டிக்குத்தான் அனைவரும் மல்லுக்கட்டி நிற்பார்கள். அந்தப் பதவி எனக்கு சாதாரணமாகக் கிடைத்தது. வட்டச் செயலாளர் பதவிக்கே வாழ்நாள் முழுவதும் காத்திருக்கும் பலரிருக்க, மாவட்டச் செயலாளர் பதவி என் மடியில் வந்துவிழுந்தது. விடுவேனா? துள்ளிக் குதித்தேன். மற்றவர்களை துவள அடித்தேன். எனவே, எனக்கு எதிரான புகார் மனுக்கள் புறப்படத் தொடங்கின. ஒரு மா.செ.க்கு எதிராக தலைமைக்கு புகார் மனுக்கள் வரலாம். ஆனால், என்னைப் பற்றி புகார் மூட்டைகள்தான் வந்து குவிந்தன. இதுகுறித்து, விசாரிக்க காலஞ்சென்ற ஒலிமுரசு, மூன்றுபேர் கொண்ட ஒரு குழுவை அனுப்பினார்.அந்தக் குழு என் யோக்கியதைகளைப் பட்டியலிட்டுக் கொண்டுவர என்னை மாவட்டத்திலிருந்து மட்டுமல்ல கட்சியிலிருந்தும் நீக்கலாம் என்று எழுதி தலைமைக்கு அனுப்பி வைத்தார். அதுதான் எனக்கும் அந்தக் குடும்பத்திற்கும் முதலில் பகைமை உண்டான பாதை. அன்று முதல் அது அதிகரித்துக் கொண்டே வந்தது. நிறமாலை விவகாரத்தில் அது விஸ்வரூபமெடுத்து இன்று கட்சியையே கவிழ்த்துப் போட்டிருக்கிறது.

இந்த நிலையில், எங்கள் ஊரைச் சேர்ந்த என் நண்பர் ரயில்வே துறையில் வேலைக்கு ஆட்கள் எடுக்கும் பகுதியில் பணிபுரிந்து வந்தார். ஆசீர்வாதமான அவரை அழைத்து வந்து எனது உதவியாளராக வைத்துக் கொண்டேன். சுமார் பத்து வருடங்கள் எனது ஆசீர்வாதத்தில் வாழ்ந்த அவர், கடைசியில் எனக்கு சாபம் கொடுத்துவிட்டுப் போய்விட்டார். இதற்கிடையில், வாரிசு என்னிடம் அறிமுகமானதும், அவருடன் எனக்கு ஏற்பட்ட நெருக்கமும் ஆசீர்வாதத்திற்குப் பிடிக்கவில்லை. வாரிசுக்கும் ஆசீர்வாதம் தேவைப்படவில்லை. எனவே, அவரை கழற்றிவிடச் சொன்னார். நான் அவரின் வார்த்தைகளை தட்டியதே இல்லை என்பதால், அதையும் செய்தேன்.

நிறமாலை விவகாரத்தில் கொடுக்கல், வாங்கல் என அனைத்தையும் கவனித்துவந்த அவருக்கு எதுவும் கொடுக்காமல் விரட்டிவிட்டேன். கோபத்துடன் வெளியேறிய அவரின் வாக்குமூலம்தான் இன்று என்னையும் வாரிசையும் வில்லங்கத்தில் மாட்டியிருக்கிறது.

சட்டப்படி ஒன்று, ஜாதகப்படி நான்கு என்பதாக என் இல்லற வாழ்க்கை இயங்கிக் கொண்டிருந்தது. ஏன் இயங்கிக் கொண்டிருந்தது என்று குறிப்பிடுகிறேனென்றால் என் அனுபவம் என்னை அப்படிச் சொல்ல வைக்கிறது. ஒன்றோடு நின்றால்தான் வாழமுடியும். இரண்டு, மூன்று, என்று போய்க்கொண்டிருந்தால் இயங்கிக் கொண்டிருக்கலாமே ஒழிய இனிமை இருக்காது.

இவை ஒருபுறமிருக்க, எங்கள் ஊரில் மத்திய அரசு உதவியில் சிறப்புப் பொருளாதாரத் திட்டம் கொண்டுவர ஒரு திட்டம் போடப்பட்டது. அதாவது, எனக்கு அறிமுகமாகியிருந்த ஐயாகண் என்பவருக்காக இந்தத் திட்டம் நகர்த்தப்பட்டது. அதில் முக்கியமாக இருந்தவர் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி. அவர் விருப்ப ஓய்வில் ஓடிப்போனதெல்லாம் ஒரு தனிக்கதை. அதைப்பற்றி தனியாகவே உங்களிடம் அவர் பேசுவார்.. அவரின் கைங்கரியத்தில் சுமார் இரண்டாயிரத்தைந்நூறு ஏக்கர் நிலம் ஐயாகண் கம்பெனியின் பெயரில் வாங்கிக் கொடுக்கப்பட்டது. இதுபோன்ற நலத்திட்டங்கள் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியே இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால், இந்தத் திட்டத்திற்கான நிலமோ எட்டு கி.மீ. உள்ளே வாங்கப்பட்டது. காரணம், எனது சகோதரரின் பெயரில் ஏற்கெனவே நாற்பது ஏக்கர் நிலத்தை அங்கே நான் வாங்கிப் போட்டிருக்கேன். எனவே, என் வார்த்தைக்கெல்லாம் சட்டம் வளைந்து கொடுத்த காலமது என்பதால் இதிலும் வளைந்தது. அதேபோல் ஐயாகண்ணுக்கு நான் இந்தத் திட்டத்திற்கான காண்ட்ராக்ட் எடுத்துக் கொடுத்ததற்கு அவரிடம் கட்டிங்காக, இரண்டாயிரத்தைந்நூறு ஏக்கர் நிலத்தில் தனித்துண்டாக இருந்த 194 ஏக்கர் நிலத்தை என் பெயருக்கு எழுதித்தரும்படி கேட்டேன். அவர் மறுக்கவே, சர்ச்சைகள் உருவானது. ஆனாலும் மும்பையில் வைத்து மேற்படி 194 ஏக்கர் நிலத்தை எனது கம்பெனியின் பெயரில் பதிவு செய்து கொண்டேன்.

இது தொடர்பாக பல்வேறு புகார்கள் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. மத்திய அரசின் அங்கீகாரத்திற்கு முன்பாகவே இப்படி நிலப் பரிவர்த்தனை எதுவும் நடக்கக்கூடாது என்பதால், அந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. ஆனால், திட்டத்திற்காக ஏற்கெனவே பணத்தை கோடிக்கணக்கில் அள்ளிக் கொடுத்திருந்த ஐயாகண்ணு அதை திருப்பித் தரும்படி கேட்டார். நம்ம ரூட்டுதான் ஒன்வே ஆச்சே. பணத்தை திருப்பித் தரமுடியாது என்று கூறிவிட்டு, அதை ஈடுகட்ட ஒரு நூற்றியெட்டை அவர் கையில் கொடுத்து, ஓடச் சொல்லிவிட்டேன். அவரின் கம்பெனியின் பெயரில்தான் அவை இயங்கிக் கொண்டிருக்கின்றன.



அடுத்து, தாய்லாந்தில் உள்ளதுபோல் துறைமுகத்துடன் கூடிய கடல் நகரம் ஒன்றை உருவாக்க கோவளம் அருகில் முந்நூறு ஏக்கர் நிலத்தை வாங்கினேன். இறந்துவிட்ட இஸ்லாமிய நண்பர்மூலம் அந்தத் திட்டத்தை அமல்படுத்த நினைத்தேன். அதற்கு மத்திய, மாநில அரசுகள் அனுமதி கொடுக்கவேண்டும். மாநிலத்திலும், மத்தியில் சுற்றுப்புறத்திலும் அனுமதி வாங்கியாகிவிட்டது. ஆனால் கப்பல் துறை மட்டும் அதற்கு மறுப்புத் தெரிவித்தது. காரணம், அந்தத் துறையை கவனித்து வந்தவருக்கும் எனக்கும் டி.ஆர்.பி ரேட்டிங்கில் ஒத்துவராது. எனவே, அதையும் கிடப்பில் போட்டாகிவிட்டது.

அதேபோல் அம்மாவிடமிருந்து ஐயாவிடம் வந்த முன்னாள் சுழல்விளக்கு, எங்கள் ஊரில் ஒரு கல்லூரி நடத்தி வருகிறார். இங்கேயும் அவருக்கு சுழல்விளக்கு வேண்டுமென்று அவர் ஒரு கோரிக்கை வைத்தார். அதற்கு காணிக்கையாக அவரின் கல்லூரி கோரப்பட்டது.அதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த நாள் குறித்தோம். அப்போது சுழல்விளக்கின் சார்பாக நானும் கல்லூரி கோரியவர்களின் சார்பாக வாரிசும் பேச்சுவார்த்தையில் உட்கார்ந்தோம். அதுதான் அந்த வாரிசை நான் தனிமையில் நேருக்குநேர் சந்தித்தது. கல்லூரி பேரம் முடிந்த பிறகும் சுழல்விளக்கு கிடைக்காமல் போனதெல்லாம் வேறு கதை. அந்த இடத்திலிருந்து சுமார் மூன்று கி.மீ. தூரத்தில் நான் பெரிய இடத்தை வாங்கிப்போட்டேன். அதில் வாரிசுடன் விளையாடி மகிழ மூன்று கோடியில் வசந்த மாளிகையொன்றைக் கட்டி வைத்தேன். ஆனால், அதில் பால் காய்ச்சும் முன்பே சி.பி.ஐ. எங்களை காய்ச்சி எடுத்துவிட்டது. தெற்கில் செட்டிலாக நினைத்த எங்களை வடக்கிற்கு இழுத்துச் சென்றுவிட்டார்கள்.

நிறமாலை விவகாரத்தில் ஒரு பக்கம் கோடி, கோடியாக பணம் கொட்டத்தொடங்க, இன்னொரு பக்கம் நான் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து வந்தேன். முதலில் லோக்கலில் ஆரம்பித்து, பின்னர் ஐதராபாத், டெல்லி என முன்னேறி கடைசியில் ஹாங்காங், பாங்காக், தாய்லாந்து, சிங்கப்பூர், மலேஷியா என என் வியாபாரம் விருத்தியடைந்தது. பசுமையான வீடுகள், சமமான வியாபாரம் என எத்தனையோ பெயர்களில் பிஸினஸ் செய்தேன். இறந்துபோன இஸ்லாமிய நண்பர் மற்றும் என் சகோதரர்கள் ஆகியோரை நிர்வாகிகளாக்கினேன். எனது ரியல் எஸ்டேட் வியாபாரம் உலகில் பல்வேறு நாடுகளுக்குப் பரவ, உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் வியாபாரிகளின் அறிமுகம் எனக்குக் கிடைத்தது. எனவே, அவர்களையும் நிறமாலை விவகாரத்தில் பங்கு கொள்ள வைத்தேன். அதாவது, அவர்களின் ரியல் எஸ்டேட் கம்பெனிகளின் பெயரில் நிறமாலைப் பங்குகளை வாங்கி வைத்துக் கொள்வது பின்னர் வேறு கம்பெனிகளுக்கு கொள்ளை லாபத்திற்கு விற்று, லாபத்தை பங்கு போட்டுக் கொள்வது இதுதான் எங்களின் ஓரம்சத் திட்டம். பின்னாளில் எல்லாமே வெளிச்சத்துக்கு வந்தாலும், நிறமாலை விவகாரத்தில் ரியல் எஸ்டேட் வியாபாரிகள் நுழைந்தது எப்படி என்று பலரும் மண்டையைப் பிய்த்துக் கொள்ளும் கேள்விக்கு விடை இதுதான்.
நான் டெல்லிக்குப்போன புதிதில் கையில் சில ஆயிரங்கள் மட்டுமே இருக்கும். அப்போது மருத்துவக் கல்லூரி அனுமதிக் கடிதத்தை டெல்லியில் இருந்து சென்னைக்கு எடுத்து வந்தேன். அந்த வேலைக்காக டெல்லி சுழல் விளக்கின் உலக ரட்சகன் எனக்கு ஒரு லட்ச ரூபாயை எடுத்துக் கொடுத்தார். நான் முதன்முதலில் ஒரு லட்சத்தை முழுசாகப் பார்த்தது அப்போதுதான். அதன்பிறகு, நான் கோடிகளையே லட்சக்கணக்கில் பார்த்த பிறகும்கூட இப்போதும் அந்த ரட்சகனுடன் உற்சாக பானம் அருந்தும்போதெல்லாம் ‘‘அண்ணே நீங்கதாண்ணே எனக்கு முதன் முதலில் பணத்தைக் கொடுத்து ஆசிர்வதிச்சீங்கன்னு’’ சொல்வதை இன்றும் பலர் சொல்லி கேலி செய்வார்கள். சென்னையில் வீடு வாங்க இனிஷியல் பேமெண்டுக்கு ஐந்து லட்ச ரூபாயை அவரிடம் கடனாகக் கேட்டபோது அவர் கொடுக்க மறுத்துவிட்டார் என்பதெல்லாம் பழைய கதை.

அதுமட்டுமின்றி மேடைகளில் பெரியாரிஸ்டாக காட்டிக் கொள்ளும் நான், எந்த மேடையிலேறினாலும் பெரியாரின் கொள்கைகளை மூச்சைப் பிடித்துக்கொண்டு முழங்குவேன். ஆனால், எங்கு வீடுகட்டினாலும் சரி வாஸ்து கரெக்டாக இருக்கும்படி பார்த்துக் கொள்வேன். என் வீட்டிற்குள்ளும் எல்லா சாமிகளின் படங்களும் இருக்கும். எப்போது வெளியில் புறப்பட்டாலும் ரகசியமாக சாமி கும்பிட்டுவிட்டுத்தான் வெளியிலேயே வருவேன். அதாவது, நான் எப்போதும் வெளியில் ஒரு மனிதனாகவும் உள்ளே ஒரு மனிதனாகவும் இருப்பேன் என்பதற்காக இதைக் கூறுகிறேன்.

அதேபோல் இப்போதும் வெளியில் வேறு மனிதனாக வாழ்ந்த என்னை உள்ளே வேறு மனிதனாக வைத்திருக்கிறார்கள்.

ஒரு பக்கம் என்னை எங்கள் சமுதாயப் பிரதிநிதியாகக் காட்ட தலைமை முயற்சித்துக் கொண்டிருக்க, மறுபக்கம் என்னை கட்சியிலிருந்து கழற்றிவிடவே காய்கள் நகர்த்தப்படுகின்றன. என்னால்தான் அவமானம், என்னால்தான் தோல்வி என்பதாக சித்திரிக்கப்படுகிறது. ஆனால், வசூலான பணத்தையெல்லாம் கட்சியின் கருவூலத்தில்தான் கட்டியிருக்கிறேன். போக்குவரத்து செலவுக்காக நான் எடுத்த தொகையே சில ஆயிரங் கோடிகளைத் தொடும், அவ்வளவுதான். இந்த நிலையில் நான் வெளியில் வந்தால் என்ன செய்வது என்பதைவிட வந்தால் வாழமுடியுமா? என்பதே என்முன் நிற்கும் கேள்வி. என் நண்பரைப்போல் சர்ச்சைக்குரிய மரணம் எனக்கும் வந்துவிட்டால் என்ன செய்வது என்ற அச்சம் அடிக்கடி எனக்கு வந்துபோகிறது. ஆனாலும் ஏதோ ஒரு நம்பிக்கையில் எதிர்காலத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறேன்.

தகவல் நேரத்தில் படு பிஸியாக இருந்தாலும் ‘ராஜா... ராஜாதி ராஜனிந்த ராஜா’ என்ற பாடலை சத்தமாகப் பாடிக்கொண்டிருப்பேன்.இப்போதோ ‘ராஜா என்பார், மந்திரி என்பார்’,

பாடலைத்தான் முணுமுணுத்துக்கொண்டிருக்கிறேன்.’

நன்றி குமுதம் ரிப்போர்ட்டர்

No comments:

Post a Comment