Thursday, August 25, 2011

மாஜி அமைச்சர் கே.என்., நேரு உள்பட 3 பேர் கைது

திருச்சி : தமிழகத்தில் நடந்துள்ள ஏகப்பட்ட நில மோசடி வழக்கில் முன்னாள் ஆட்சியாளர்கள் வரிசையாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். இன்று காலை 6 மணியளவில் திருச்சியில் மாஜி போக்குவரத்து துறை அமைச்சர் கே.என்., நேரு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவர் வைக்கப்பட்டுள்ள போலீஸ் ஆயுதபடை திருமண மண்டபத்தில் ஏராளமான ஆதரவாளர்கள் குவிந்து அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.இதனால் பரபரப்பு ஏற்பட்டது.


கடந்த ஆட்சி காலத்தில் ஆயிரக்கணக்கான நில மோசடி நடந்திருப்பதாக வந்த புகாரை அடுத்து புதிதாக பொறுப்பேற்ற அ.தி.மு.க, அரசு இது தொடர்பான வழக்கை விசாரிக்க தனிப்படை போலீசார் பணிக்கப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக மதுரை, சென்னை, ஈரோடு, சேலம், கோவை என பல்வேறு மாவட்டங்களில் தி.மு.க., நிர்வாகிகள், மாஜி அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் , மாஜி எம்.எல்.ஏ.,க்கள் என இது வரை 50 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


இந்நிலையில் மாஜி போக்குவரத்து துறை அமைச்சர் கே.என்., நேரு வீட்டில் இன்று காலையில் அதிரடியாக போலீசார் குவிக்கப்பட்டனர். இவரது வீட்டிற்குள் நுழைந்த போலீசார் நேருவை கைது செய்து திருச்சி ஆயுத படை திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். இவருடன் மாஜி எம்.எல்.ஏ., அன்பில் பெரியசாமி, ஜவுளிக்கடை உரிமையாளர் சுந்தரராஜூலு ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.


வழக்கின் சாராம்சம் என்ன ? : கடந்த 2009 ல் திருச்சியில் ஒரு தி.மு.க,வின் அறிவாலயம் திறந்து வைக்கப்பட்டது. கலைஞர் அறிவாலயம் என்று பெயர் சூட்டப்பட்ட இந்த அறிவாலயத்தை கட்சி தலைவரும், அப்போதைய முதல்வருமா ன கருணாநிதி திறந்து வைத்தார். ஏறக்குறைய சென்னை அறிவாலய மாடலில் இந்த கட்டடம் வடிவமைக்கப்பட்டிருந்தது. இதற்கென ஒரு ஏக்கர் நிலம் டாக்டர் சீனிவாசன் என்பவரிடம் இருந்து வாங்கப்பட்டது. திருச்சியில் சத்திரம் பஸ் ஸ்டாண்ட் கரூர் பைபாஸ் ரோட்டில் உள்ள இந்த நிலம் பல கோடி மதிப்பு பெறும். ஆனால் குறைந்த விலைக்கு வாங்கப்பட்டதாகவும், தன்னை மிரட்டி பத்திரத்தில் கையெழுத்து போட வைத்ததாகவும், சீனிவாசன் புகார் தெரிவித்திருந்தார். இது தொடர்பான விசாரணை நடத்திய போலீஸ் கே.என்., நேரு மாஜி எம்.எல்.ஏ., அன்பில் பெரியசாமி, லால்குடி எம்.எல்.ஏ., சௌந்திரராஜன், ராமாநுஜம் உள்பட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் போலீசார் கே.என்., நேரு, உள்பட 3 பேரை கைது செய்திருக்கின்றனர். இன்னும் தலைமறைவாக உள்ள தி.மு.க.,வினரை தேடி வருகின்றனர்.


பொய் வழக்கை சட்டப்படி சந்திப்போம் : கைது செய்யப்பட்டு அழைத்து சென்ற போது நிருபர்களிடம் பேசிய நேரு; நாங்கள் யாரையும் அடித்து, மிரட்டி வலுக்கட்டாயமாக நிலத்தை வாங்கவில்லை. எந்த தவறும் செய்யவில்லை. இது பொய் வழக்கு, சட்டப்படி சந்திப்போம் என்றார்.


கடலூர் சிறையில் அடைப்பு : வழக்கில் கைது செய்யப்பட்ட விவரத்தை பதிவு செய்யும்போது நேருவின் உடல் அங்க அடையாளம் குறிக்கப்பட்டது. இவர் திருச்சி மாஜிஸ்திரேட் கோர்ட் எண் 4 ல் ஆஜர்படுத்தப்பட்டார். மாஜிஸ்திரேட் புஷ்பராணி வரும் செப் 8 ம்தேதி வரை ரிமாண்‌ட் செய்து உத்தரவு பிறப்பித்தார். முதலில் திருச்சி சிறைக்கு‌ கொண்டு செல்லப்பட்டு பின்னர் கடலூர் சிறைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார்.


கோவை மாநகர் செயலர் கைது : கோவை மாநகர் மாவட்ட தி.மு.க., செயலர் வீரகோபாலும் ஒரு நில மோசடி வழக்கில் இன்று கைது செய்யப்பட்டார்.



வீரகோபால் என்ன குற்றம் செய்தார்? : கோவையை சேர்ந்தவர் பெரியசாமிகவுண்டர் மகன் ரத்தினம். இவருக்கு விலாங்குறிச்சி டைல்பார்க் அருகே இரண்டே முக்கால் ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தின் உரிமையாளர்கள் சிலருக்கு சேர வேண்டிய பங்கை ‌ஒழுங்காக கொடுக்க விடாமல் சதித்திட்டம் போட்டு வாங்கி விற்றுள்ளனர். மேலும் கொலை மிரட்டலும் விட்டிருக்கின்றனர். இது தொடர்பாக கோவில்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து வீரகோபால், சாந்தலிங்கம் ஆகிய இருவரை கைது செய்திருக்கின்றனர். இருவரும் ஜே.எம்.,2 கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ரிமாண்ட் செய்யப்பட்டனர். இவரை பார்க்க வந்த முன்னாள் எம்.பி., ராமநாதன், துணைமேயர் கார்த்திக் மற்றும் கவுன்சிலர்கள் ஆகியோருக்கு நாற்காலிகள் கொடுத்து போலீசார் ராஜ மரியாதை அளித்தனர்.

No comments:

Post a Comment