“மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் இன்று (30.8.2011) சட்டமன்றப் பேரவையில், திருவாளர்கள் சுதேந்திரராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன் மற்றும் பேரறிவாளன் என்கிற அறிவு ஆகியோரின் கருணை மனுக்களை மறுபரிசீலனை செய்து, மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றியமைக்குமாறு மேதகு இந்தியக் குடியரசுத் தலைவரை வலியுறுத்தும் தீர்மானத்தினை முன்மொழிந்து
ஆற்றிய உரை
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுக்கூறு 72-ல் தனக்குள்ள அதிகாரத்தினை பயன்படுத்தி, திருவாளர்கள் சுதேந்திரராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன் மற்றும் பேரறிவாளன் என்கிற அறிவு ஆகியோரின் கருணை மனுக்களை மேதகு குடியரசுத் தலைவர் நிராகரித்ததையடுத்து எழுந்த சூழ்நிலை குறித்தும், இந்தப் பிரச்சனையில், தமிழ்நாடு முதலமைச்சர் என்ற முறையில் சட்டப்படி எனக்குள்ள அதிகாரம் குறித்தும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் ஓர் அறிக்கையினை இந்த மாமன்றத்தில் நேற்று நான் அளித்தேன்.
அந்த அறிக்கையில், திருவாளர்கள் சுதேந்திரராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன் மற்றும் பேரறிவாளன் என்கிற அறிவு ஆகியோரின் கருணை மனுக்களை முதலமைச்சராகிய நானோ, தமிழ்நாடு அரசோ, மாநில ஆளுநரோ மீண்டும் பரிசீலனை செய்ய முடியாது என்பதை தெளிவுபட நான் கூறியிருந்தேன்.
மத்திய அரசு இந்திய அரசமைப்புச் சட்ட பிரிவுக்கூறு 257(1)-ன் படி, கருணை மனு இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவுக்கூறு 72-ன்படி, குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்ட பின், அதே பிரச்சனையை மாநில ஆளுநர் இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவுக்கூறு 161-ன் படி எடுத்துக் கொள்ள முடியாது என்றும், மீண்டும் குடியரசுத் தலைவர் தான் கருணை மனுவை மறுபரிசீலனை செய்ய இயலும் என்றும் உத்தரவிட்டதை சுட்டிக் காட்டினேன்.
இந்தச் சூழ்நிலையில், மேற்படி மூவருக்கும் தூக்கு தண்டனை விரைவில் நிறைவேற்றப்பட்டு விடும் என்று தமிழக மக்கள் வருத்தம் அடைந்துள்ளனர். பல்வேறு அரசியல் கட்சிகளும் மேற்படி மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்து வருகின்றன. எனக்கும் இது குறித்து கோரிக்கைகள் வந்துள்ளன.
எனவே, தமிழர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில், தமிழக அரசின் சார்பில் பின்வரும் தீர்மானத்தை நான் முன்மொழிகிறேன்.
தீர்மானம்
""தமிழக மக்களின் உணர்வுகளுக்கும், தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் கருத்துகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில், திருவாளர்கள் சுதேந்திரராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன் மற்றும் பேரறிவாளன் என்கிற அறிவு ஆகியோரின் கருணை மனுக்களை மறுபரிசீலனை செய்து அவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேதகு இந்தியக் குடியரசுத் தலைவரை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது."
முடிவுரை:
தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில், என்னால் முன்மொழியப்பட்ட தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டு அமைகிறேன்.“
No comments:
Post a Comment