ராமேஸ்வரத்தின் ஒரு குக்கிராமத்தில் பிறந்து உலகையே இந்தியாவின்மீது ஆச்சரியப் பார்வை பட வைத்தவர் அப்துல்கலாம் என்றால், வேறொரு குக்கிராமத்தில் பிறந்து உலகையே இந்தியாவின்மீது அதிர்ச்சிப் பார்வையை பட வைத்தவர் இவர். லஞ்சம், ஊழல், கொள்ளை என்ற தனித்தனி வார்த்தைகளுக்கு ஒருங்கிணைந்த பொருளாய் உருவெடுத்தவர். கட்சியின் கோடியிலிருந்து வளர்ந்து கட்சிக்கு கோடிகளை கொள்ளையடித்துக் கொடுத்தவர். ஆண்டி மடம் கட்டிய கதை நமக்குத் தெரிந்திருந்தாலும் இவர் ஆன்ட்டிகளுக்கு மடம் கட்டிய கதை பலருக்குத் தெரியாததுதான். இவரால் கட்சியிலிருந்து கழற்றிவிடப்பட்டவர்களின் பட்டியல் இன்னமும் வளர்ந்து கொண்டிருக்க... கட் சியே இவரை இப்போது கழற்றி விட்டுவிட்டது. ஒரே நேரத்தில் பல்வேறு வேலைகளில் பிஸியாக இருந்த இவர், இப்போது கம்பி எண்ணும் ஒரு வேலையில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். தனியாக ஒரு சிறிய அறை. எல்லாமும் அங்கேயேதான். உதவிக்கு ஒருவருமில்லை. இதுதான் இவரின் இன்றைய நிலை. ஓரத்தில் ஓய்வெடு த்து படுத்துக் கொண்டிருந்த அவரின் மனசாட்சியை தட்டி எழுப்பி பேசினோம். அதன் வாக்குமூலம் உங்களுக்கே.
‘தகவல் துறையில் படு பிஸியாக இருந்த நான்’ இப்போது எனது தகவல்களால் பத்திரிகைகளைப் படிப்பதில் பிஸியாக்கிக் கொண்டிருக்கிறேன். அப்போது நான் வெளியில் வந்தாலும் போலீஸார் என் பாதுகாப்புக்கு வருவார்கள். இப்போதும் நான் வெளியில் வந்தாலும் போலீஸார் பாதுகாப்புக்கு வருகிறார்கள். வித்தியாசம் என்னவெனில், அப்போதெல்லாம் என்னைச் சுற்றிலும் ஒரு கூட்டமும், வாழ்க கோஷத்தின் கூச்சலும் கேட்டுக் கொண்டே இருக்கும். இப்போது வெளியில் கூட்டமில்லை. உள்ளம்தான் கூச்சலிடுகிறது. என் பேச்சைக் கேட்கக்கூட ஒருவருமில்லை. அப்போது அரசுப் பணத்தில் ராஜ சாப்பாடு சாப்பிட்டேன். இப்போதும் அரசுப் பணத்தில்தான் அளவுச் சாப்பாடு சாப்பிடுகிறேன்.
நான்கு வருடம் மட்டுமே தகவலுக்கு வந்துபோன நான் போட்ட ஆட்டங்களை நினைத்துப் பார்க்கிறேன். எனக்கு இப்படி ஒரு நிலை வரும் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை. என் வளர்ச்சியும் வீழ்ச்சியுமே பல அரசியல்வாதிகளுக்குப் பாடமாக அமையலாம். அவ்வளவு நெளிவு சுளிவுகளைக் கொண்டது என் அரசியல் பயணம்.
தமிழகத்தின் மையப் புள்ளியான திருச்சியிலிருந்து சற்று தூரத்தில் உள்ள ஊரின் ஒரு குக்கிராமத்தில் பிறந்தவன் நான். வறுமையின் பிடியிலிருந்த விவசாயக் குடும்பம். இலங்கையிலிருந்து இடம் பெயர்ந்து இங்கே வந்தவர்களில் எங்களின் குடும்பமும் ஒன்று. அரசுப் பள்ளியில் உதவித்தொகையுடன் படிப்பை முடித்து, முசிறி அண்ணா கலைக்கல்லூரியில் பட்டம், மதுரையில் சட்டம் என கல்வியை முடித்து தொழிலுக்கு வந்தேன். வள்ளுவனை நம்பியிருந்தவரிடம் ஜூனியராக சேர்ந்து கொண்டேன். அப்போதெல்லாம் வழக்காடும் லாகவம் எனக்கு வசப்படவில்லை. எனவே, வாய்தா வாங்குவதற்கு மட்டுமே நான் அனுப்பி வைக்கப்பட, ‘வாய்தா வக்கீல்’ என்றே அழைக்கப்பட்டேன்.
பின்னர் தனியாக எனக்கு ஆபீஸை திறந்து கொண்டு ஓட்டையாய் வாங்கிய பழைய லேம்ப்ரட்டா ஸ்கூட்டரில் தினமும் நீதிமன்றம் சென்று வந்தேன். அப்போது எனது அலுவலகத்தில் தொலைபேசிக்கான ஒரு லேண்ட்லைன் இருந்தது. அதற்கான பில்பணத்தைக் கட்ட முடியாமல் அதன் இணைப்பைத் துண்டித்துவிட்டனர் தொலைபேசித் துறையினர். எதிர்காலத்தில் நான் தொலைபேசித் துறையையே சட்டைப்பைக்குள் போட்டுக் கொள்வேன் என்பது அவர்களுக்கும் தெரியாது எனக்கும் தெரியாது. ஆனாலும் அன்றைய என் பொருளாதார நிலை அதுதான்.
அந்தச் சூழ்நிலையில் கட்சியிலிருந்து புறப்பட்டது புரட்சிப் புயல். அப்போது ஐயா கட்சியின் நகரச் செயலாளராக இருந்தார் டாக்டர் ராஜதேவன். அவருக்கும் புயல் குரூப்புக்கும் ஏற்பட்ட பிரச்னையால் டாக்டர் கைதாக, அவருக்கு வாதாட எனது சீனியரிடம் வந்தார்கள். அவர் பிஸியாக இருந்ததால் ஜூனியரான என்னை அந்த வழக்கைப் பார்க்கும்படி சொன்னார். நான் ராஜதேவனுக்கு வாய்தா வாங்கப்போனேன். இதுதான் எனக்கும் கட்சிக்காரர்களுக்கும் ஏற்பட்ட முதல் பழக்கம். அது முதல் அந்த டாக்டர் அலுவலகத்தில் தினமும் மாலையில் உட்கார, என்மீது கட்சிவாடை வீசத் தொடங்கியது. கொஞ்சம் கொஞ்சமாக கட்சிக்காரர்களின் அறிமுகமும் கிடைத்தது.
இந்த நிலையில், என் சமுதாயத்தைச் சேர்ந்த குதிரை இளவரசர் கட்சியில் நல்ல பவரில் இருந்தார். என்னை அவரிடம் அறிமுகப்படுத்தி வைத்தார் ராஜதேவன். கொஞ்ச நாட்கள் அந்தக் குதிரையின் வால் பிடித்தபடி கட்சியின் கூட்டங்களுக்கு ஆள் பிடித்துச் செல்வேன். எனக்கு திருமணத்தை முன்நின்று செய்து வைத்தது அந்த குதிரைதான்.
அதன்பிறகு அம்மாவின் முதல்முறை ஆட்சி முடிந்து அரியணையில் ஏறினார் ஐயா. அப்போது டெல்லி செல்வதற்கான தேர்தல் வந்தது. சீட் கேட்பதில் கட்சிக்குள் பெ ரும் போட்டி. எனக்கும் சீட் கேட்க சிலர் தூண்டினார்கள். என்னை தலைமைக்குப் பரிந்துரை செய்யக்கூட பக்கத்தில் ஒருவரில்லை. கையில் பத்துப் பைசா காசுமில்லை.
எங்கள் ஏரியாவில் பவர்ஃபுல்லாக இருந்த மீசைக்கார சுழல்விளக்கின் மாமா, கட்சியில் ஒன்றியச் செயலாளராக இருந்தார். அவர் காலில் விழுந்து ஒரு கடிதம் கேட்டேன். அப்போது இலங்கையில் பிரச்னை நடந்து கொண்டிருந்தது. அதைக் கருத்தில் கொண்ட மீசைக்காரரின் மாமா, எனது சமுதாயத்திலிருந்து ஒருவருக்கு பிரதிநிதித்துவம் தரலாம் என்பதையும் அதிலும் நான் இலங்கை அகதிக் குடும்பம் என்பதையும் குறிப்பிட்டு எழுதிக் கொடுத்தார். அந்தக் கடிதத்தைக் கண்டதும் தலைமை என்னை அழைத்தது. நான் நேரில் சென்றேன். அதுதான் தலைமையை நேருக்கு நேர் நான் முதன் முதலில் சந்தித்தது. தலைமையின் எதிரிலிருந்த மேசையின் உயரத்திற்கு மடிந்து வணங்கி நின்றேன். என் பணிவையும் பவ்யத்தையும் உண்மை என நினைத்து, தலைமை என்னை தட்டிக் கொடுத்தது. சீட்டும் கிடைத்தது. வெற்றியும் கிடைத்தது. அதிலி ருந்து எனக்கு ஏறுமுகம். லோக்கல் கட்சியினருக்கெல்லாம் இறங்குமுகம். மூன்று வருடம் கூட கட்சியில் தீவிரமாக இல்லாதவனுக்கு டெல்லிக்கு சீட்டு, விமானத்தில் டிக்கெட்டு என்பதெல்லாம் எங்கள் கட்சியில் நடக்காது. ஆனால், எனக்கு நடந்தது. அதுவரை சாதாரண சிசர் சிகரெட்டைப் பிடித்துக் கொண்டிருந்த நான், அப்போதுதான் முதன்முதலாக பஞ்சுவைத்த சிகரெட்டைப் பற்ற வைத்தேன். புதிய பதவி கிடைத்ததும் கிருஷ்ணரின் அளவுக்கு மூர்த்தி பெற்றிருந்த ஒரு டாக்டரின் கிளினிக்கின் ஒரு பகுதியில் வாடகை அலுவலகத்தை அமைத்தேன்.
மாலை விஷயங்களிலும், சேலை விஷயங்களிலும் எனக்கு தனி மஜா உண்டு. என் பார்வையில் பதிய வேண்டுமென்றாலே குறைந்தபட்சம் அவருக்குத் திருமணமாகியி ருக்க வேண்டும். அதுதான் முதல் தகுதி. வில்லங்கத்தில் மாட்டிக் கொள்ளக்கூடாது என்ற எனது பாதுகாப்பு எண்ணமாகக்கூட அது இருக்கலாம். ஆனால் அதுவே எதிர் காலத்தில் வில்லங்கமாகும் என்று எதிர்பார்க்கவில்லை.
எனக்கு அலுவலகம் ஒதுக்கித் தந்த டாக்டரின் மனைவியை நான் ஒதுக்கிக் கொண்டேன். அவர் கிளினிக்கில் நோயாளிகளுக்கு சிகிச்சை செய்து கொண்டிருக்க, நான் அவரின் துணைக்கு வீட்டில் வைத்தியம் செய்தேன். விவரம் அறிந்து என்னை விரட்டி விட்டார் டாக்டர். பிற்காலத்தில் ஒரு பையனின் தேர்வு விவகாரத்தில் நீதிபதி ஒருவர் மிரட்டப்பட்டதாக பரபரப்பு கிளம்பியதல்லவா! அதில் என் பெயரும் பிரதானமாக அடிபட்டது. அந்தப் பையன் வேறு யாருமில்லை. இந்த மருத்துவத் துணையின் மைந்தன்தான். நான் ஆண்களுக்காக அல்ல, பெண்களுக்காக வில்லங்கத்தில் சிக்கிக்கொண்டதுதான் அதிகம் என்பதற்கு இதுவும் ஒரு சாட்சி.
இந்த நிலையில் முதன் முதலில் டெல்லிக்குச் சென்ற எனக்கு சுகாதாரம் கொடுக்கப்பட்டது. என் தலைமை செய்த தவறுகளில் முக்கியமானது இதுதான். சிந்தனையிலும் சரி, செயல்களிலும் சரி கொஞ்சமும் சுகாதாரமற்ற எனக்கு சுழல் விளக்கு அந்தஸ்து தரப்பட்டதற்கு தலைமையின் குடும்பத்தார் தனித்தனியே பட்டிமன்றம் போட்டுப் பேசினார்கள். அதைப் பற்றியெல்லாம் கொஞ்சமும் நான் கவலைப்பட்டதில்லை. அப்போது எனது ஊரைச் சேர்ந்த ஆசியாவின் பெயர் கொண்ட இஸ்லாமியப் பெண் ரஷ்யாவில் மருத்துவம் முடித்து சென்னை திரும்பியிருந்தார். ரஷ்யாவில் மருத்துவம் படித்தவர்கள் இங்கு ஒரு தேர்வு எழுத வேண்டும் என்பது சட்டம். அவர் மருத்து வர், நான் சுகாதாரம் என்ற நிலையில் என்னைச் சந்திக்க வந்த அவரை நான் அடிக்கடி சந்திக்கத் தொடங்கினேன். தேர்வுக்காக வந்தவரை நான் தேர்வு செய்து கொண்டேன். வெளியூரில் தனியாக இடம் வாங்கி அவருக்காக வீடு கட்டி அங்கேயே அவரை வைத்துவிட்டேன். என்னிடத்தில் வந்ததிலிருந்து அந்தப் பெண்ணைக் காணவில்லை என்று அக்கம்பக்கத்தில் பேசிக் கொள்கிறார்களாம். நன்றி குமுதம் ரிப்போர்ட்டர் |
No comments:
Post a Comment